நித்யானந்தர் மீது பெண்கள் பாலியல் புகார் கொடுக்கவில்லை: ராஜேந்திரன்
நித்யானந்தர் மீது பெண்கள் யாரும் பாலியல் பலாத்கார புகார் கொடுக்கவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறினார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கான மருத்துவ முகாம் எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, நித்யானந்தர் மீது பெண்கள் யாராவது பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, இல்லை என்று பதில் அளித்தார் ஆணையர் ராஜேந்திரன்.
நித்யானந்தரின் சீடர் லெனின் தர்மானந்தா காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளாரா என்ற மற்றொரு கேள்விக்கும், இல்லை என்று ஆணையர் பதில் அளித்தார்.
லெனின் தர்மானந்தா மீது காந்தப்படுக்கை மோசடி வழக்கு ஏதும் உள்ளதா என்று கேள்விக்கு பதில் அளித்த ஆணையர் ராஜேந்திரன், தெரியவில்லை. விசாரிக்கிறேன் என்றார்.
வெளி மாநிலங்களில் நித்யானந்தர் தஞ்சம் அடைந்துள்ளாரா? அவரை தேடி தனி படை வெளி மாநிலம் சென்றுள்ளதா என்ற கேள்விக்கு, வெளி மாநிலங்களுக்கு தனிப்படை போகவில்லை. விசாரணை இங்குதான் நடந்து வருகிறது என்று ஆணையர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.
நித்யானந்தர் மீது முதற்கட்ட விசாரணை ஆரம்பமாகி விட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆணையர், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டு விட்டது என்றும் நித்யானந்தர் எங்கெல்லாம் சென்றார், அவரது பண பரிமாற்றம் எப்படி நடைபெற்றது என்பது பற்றி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
நித்யானந்தர் மீதான கொலை மிரட்டல் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு, இந்த கொலை மிரட்டல் வழக்கு குறித்து சேலம் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணைக்கு சென்னை காவல்துறையும் உதவும். நித்யானந்தர் பிடிபடும்போது சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கு தொடர்பாகவும் விசாரிப்போம் என்று ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.
நித்யானந்தர் மீதுள்ள வழக்குகளை கர்நாடகத்திற்கு மாற்றிவிட்டீர்களா என்ற மற்றொரு கேள்விக்கு, கர்நாடக காவல்துறை அதிகாரிக்கு இந்த வழக்குகளை மாற்ற கடிதம் எழுதி உள்ளேன். எனவே வழக்கு இன்று கர்நாடகத்துக்கு மாற்றப்படும். கர்நாடக காவல்துறை எந்த உதவி கேட்டாலும் உதவுவோம் என்று ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.
0 comments :
Post a Comment