Friday, March 12, 2010

ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக சச்சின நியமனம்

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட (யு.என்.இ.பி.) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் சச்சின். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து புதிய சாதனையும் படைத்தார். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினை தனது திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக யுஎன்இபி நியமித்துள்ளது.

உலகளாவிய அளவில் அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்களைப் பிரபலப்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கவும் யுஎன்இபி திட்டமிட்டுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சச்சின் கூறுகையில், இதுவரை உலகம் முழுவதும் நான் விளையாடியுள்ளேன். எனது கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளில் அனுபவித்து வந்தேன். இப்போது இந்த உலகுக்காக எனது பங்கை செலவிடும் நேரம் வந்துள்ளது.

உலகைக் காக்கும் முயற்சிகளில் அனைவருக்கும் பங்குண்டு. இது நமது வீடு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. ஆனால் அந்த சவாலை ஏற்க நான் தயாராகி விட்டேன். யுஎன்இபியுடனும், உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்தால் பல அற்புதங்களைப் படைக்க முடியும் என்றார்.

ஐ.நாவுடன் சச்சின் இணைவது இது முதல் முறையல்ல. முன்பு ஐ.நா. குழந்தைகள் நிதியத்துடன் இணைந்து குழந்தைகள் சுகாதாரத் திட்ட பிரசாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டவர் சச்சின்.

யுஎன்இபியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் இன்றே தனது பணியைத் தொடங்குகிறார். இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவின்போது அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதை ரசிகர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com