Thursday, March 11, 2010

அரசு ஊடகவியலாளர்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை.

ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பழிவாங்குவதை நிறுத்துமாறும், அவர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்க அரசை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பும், மனித உரிமை கண்காணிப்பகமும் கேட்டுக்கொண்டுள்ளன.

ஜனவரியில் நடந்த முடிந்த அதிபர் தேர்தலிற்குப் பின்னர், ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்னெஸ்டியும், மனித உரிமை கண்காணிப்பககும், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் 30 பேர் சிறிலங்க அரசின் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விரு அமைப்புகளும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், “அரசை விமர்சிக்கும் ஊடகங்களை பழிவாங்கும் மிக துல்லியமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையை சிறிலங்க அரசு மேற்கொண்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களும், மனித உரிமையாளர்களும் அச்சுறுத்தப்படும், கொல்லப்படும் இந்நாட்டில் இது மிகவும் அபாயகரமான, பொறுப்பற்ற செயல்பாடுகளாகும்” என்று மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

மாற்றுக் கொள்கைக்கான மையம் (Centre for Policy Alternatives - CPA), சிறிலங்கா பன்னாட்டு வெளிப்படை அமைப்பு (Transparency International Sri Lanka - TISL) ஆகிய மதிப்பு வாய்ந்த இரண்டு அமைப்புகளின் இயக்குனர்கள், அரசின் கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள் ஆகியோர் குறித்து கவலை தெரிவித்து அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இவ்விரு பன்னாட்டு அமைப்புகளும், அரசை விமர்ச்சித்து, குறிப்பாக தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எழுதிய பத்திரிக்கையாளர்களைக் குறிப்பிட்டு, அவர்களை ‘ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள்’என்று சித்தரித்து அரசு அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன.

2008 செப்டம்பரில் டிசல் அமைப்பின் இயக்குனர் வீட்டின் மீது இரண்டு கையெறி குண்டுகள் வீசப்பட்டதையும், 2009 ஆகஸ்டில் சிபிஏ அமைப்பின் இயக்குனருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, “போர் முடிந்துவிட்டப் பின்னரும் தனது அடக்குமுறை நடத்தையை சிறிலங்க அரசு கைவிடாததையே காட்டுகிறது” என்று அம்னஸ்டியின் ஆசிய பசிபிக் கிளையின் இயக்குமனர் சாம் ஜாரிஃபி கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com