Monday, March 29, 2010

இலங்கைத் தமிழர்களின் அபிலாசை -தலைமைப் பண்பு – அரசியல் தீர்வு – எதிர்காலம்.- தேவன் (கனடா)

'வாழ்க்கை என்பது பல சோதனைகளின் வரிசை. அதிக சோதனைகள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கின்றன' – அறிஞர் எமர்சன்.
மனித வாழ்வு என்பது மேம்பாட்டையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள் தமிழர் வாழ்வில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்த தவறிவிட்டனர். அறுபது வருடத்துக்கு மேலான வரலாற்றில் தமிழ் மக்களுக்கு தலைமை வகித்த அரசியல் சக்திகளான காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, கூட்டணி, கூட்டமைப்பு தமக்கு கிடைத்த பாராளுமன்ற பிரதிநித்துவத்தை தமது சுயநலன்களை பேணுவதற்காககவும், அரசியல் ரீதியில் சிங்கள தேசியவாதத்தை கிளர்ச்சி கொள்ள செய்வதிலும், தமிழ் தரப்பிற்கு குலப் பெருமையை, இனவாதத்தை கக்கிவிடுவதிலும் இணக்காப்பாட்டு தீர்வு விடயத்தில் வந்த சந்தாப்பங்களை சரிவர பயன்படுத்தாததின் தொடர் நிகழ்வுகளே இன்றுவரை நடந்துள்ளன.

ஆகமொத்தத்தில் அரைநூற்றாண்டு தோல்விகள் பின்னடைவுகள், சோதனைகள், துயரங்கள், சரிவுகள் போன்றனவற்றிற்கு வழி சமைத்தவர்கள் தேசியப் பிரச்சினையில் Ugly Chapteria உருவாக்கினவர்கள் தம்மை மீள் கட்டி அமைக்காது வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்காது தவறுகள் சோதனைய் மூலம் வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தாது மக்களை மீண்டும் மீண்டும் தவாறக வழிநடத்தவே முற்படுகிறார்கள்.

கடந்த காலங்களில் புலிகளினதும் அவர்களது ஆதரவு சக்திகளான பிற்போக்கு அரசியல் சக்திகளின் தீவிரவாத அணுகுமுறையை விரும்பாத இந்தியா இதற்கு மாற்றீடாக ஒரு ஐக்கிய முன்னணியை இணக்கப் போக்குள்ள பிராந்தியத்திற்கு ஆபத்தில்லாத அரசியல் சக்திகளை உருவாக்குவதற்கு பல வழிகளிலும் முயன்று தோற்றுப்போனது. இந்தியாவின் அரசியல் ரீதியான ராஜதந்நதிர முயற்சிகள் இன்றுவரை நிறைவேறாதத்திற்கு காரணம் வட – கிழக்கு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநித்துவம் செய்யும் அரசியல் சக்திகளின் மலினமான சிந்தனைப் போக்கே காரணம் என்று கூறலாம்.

தற்போதுள்ள வட – கிழக்கு அரசியல் சூழ்நிலைமைகளை ஆராயுமிடத்து புலிகளின் அழிவுக்கு முன் புலிகளின் அழிவுக்குப் பின் என்றே பார்க்கப்படல் வேண்டும். ஏனெனில் கடந்த முப்பது வருடத்துக்கு மேலாக வட – கிழக்கு பிரதேசங்கில் சோசலிச தமிழ் ஈழத்தை அடைவதற்காக புலிகள் மேற்கொண்ட அரக்கத்தனமான போராட்ட அணுகுமுறையால் புலிகளும் அவர்களை ஆதரித்த பிற்போக்கு சக்திகளும் அடிவருடிகளுமே கோலோச்சி வந்துள்ளார்கள்.

இந்நிலையில் தமிழ் பிரதேசங்களில் இந்தியாவுக்கு ஆதரவான அரசியல் நிலைகளையோ, புலிகளுக்கு மாற்றீடான இணக்கப்பாடான அரசியல் சிந்தனைகளை உருவாக்கவதற்கு இந்திய எதிர்ப்புவாதம் ஏகபோக உணர்வு தடையாக இருந்தது. அத்துடன் புதிய அரசியல் கலாச்சார சாத்தியம் இல்லாமல் இருந்தது. அதேசமயம் ஈழப்போராட்டத்தில் இருந்து தேசிய ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பிய சக்திகள் தமது பாதுகாப்பு நிமிர்த்தம் இலங்கை அரசின் ஆதரவுடனும், இராணுவத்தின் அதரவுடனும் செயற்பட்டதால் தமிழர் பிரதேசங்களிலும் இந்தியாமீதும் பெரிய அளவில் பரந்த செல்வாக்கு செலுத்த முடியவில்லை.

இந்த வகையான தடைகளை புலிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருமே ஏற்படுத்தியிருந்தார்கள். அதாவது மாற்று அரசியலை முன்னெடுப்போர், மாற்று சிந்தனையை முன்வைப்போர் எட்டப்பர்கள், துரோகிகள், ஒட்டுக்குழுக்கள் என வர்ணிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட நிலமைகள் புலிகளின் அழிவுக்கு பின்பு இருந்தவை. கடந்த வருடம் வைகாசி 18க்கு முன் வட – கிழக்கில் பாசிஸ்டுக்களும் அவர்களது துதிபாடிகளும் தமிழ் தேசிய அரசியலில் ஆதிக்கம் செய்தபடியால் மாற்றுச் சிந்தனை மாற்றுக் கலாசாரம் முன்னெடுப்பதற்கு தடையாக இருந்தார்கள் என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் இலங்கையில் புலிகளின் பயங்கரவாதப் பற்கள் பிடுங்கி எறியப்பட்டு ஒரு வருடம் ஆகிற நிலமையிலும் மாற்றம் வேண்டி சிந்திப்போர் மத்தியில் எந்தவித ஆரோக்கியமான முன்னெடுப்புகளும் காணப்படவில்லை. அதற்கான காரணம் யாதெனில் கால்நூற்றாண்டுக்கு மேலாக பயங்கரவாதப் பூதம் எப்படி தமிழ் சமூகத்தை சீரழித்ததோ அதற்கு நிகரான கட்சி அரசியல் எனும் புற்றுநோய் தற்போது தலை தூக்க ஆரம்பித்துள்ளதையே அவதானிக்க முடிகிறது. இன்னும் கூறப்போனால் ஈழப்போராட்டம் ஆரம்பிக்கும்போது எப்படி பல்வேறு எண்ணுக்கணக்கற்ற அமைப்புக்கள் உருவாகியதோ அதேபோலவே ஈழப்போரின் முடிவிலும் காணப்படுகிறது. சுருங்கக் கூறின் தமிழரின் அபிலாசைகள் எது என்று? வரையறுப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் கடந்த 30 வருடத்துக்கு மேலாக புலிகளை ஆதரித்தவர்கள் எதிர்த்தோர் மத்தியில் என்றும் இல்லாதவாறு பிளவுகளும் கருத்து மோதல்களும் காணப்படுகின்றன. இதன் விளைவாக ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு தலைவன், கொடி, பத்திரிகை, இணையத்தளம், கொள்கை அபிலாசை என தமிழ் சமூகம் சிதறுண்டு போயுள்ளது. உண்மையாக கூறப்போனால் தமிழனுக்கு எதிரி தமிழன்தான். தமிழனுக்கு பிரச்சினை தமிழனால்தான் என்பதை தமிழர்கள் ஒப்புக்கொள்வதுடன் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய அரசியல் முறைமையும் அதைத்தான் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை அனைவரும் தாழ்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழருடைய வாழ்வியல் உரிமைப்போராட்டம் பண்பாட்டு அடையாளங்கள், இருப்புகள் இன்னபிற நலன்கள் யாரால் முன்னெடுக்கப்பட்டது, எப்படி முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு கவனத்துக்குரிய ஒன்று. தமிழ் சமூகத்தில் உள்ள மேட்டுக்குடியினரான கறுப்பு அங்கி அணிந்த அப்புக்காத்துப் பரம்பரை ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என அனைவருமே 'குழம்பிய குட்டையில்' மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும் என்பதற்கு அமைய இவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மானுட சமத்துவம், வாழ்வியல் மேம்பாடு ஆண், பெண் சமத்துவம், ஏற்றத்தாழ்வுகள் போன்ற காரணிகளை முன்னிறுத்தாது தமிழ் தேசியம், மொழி, ஆண்ட பரம்பரை, புனிதம் போன்ற காரணிகளை வலியுறுத்தியதாலும், மானுட தர்மம், சமதர்மம், இன ஐக்கியம் இன்னோரன்ன காரணிகளை முன்னிலைப்படுத்தி போராடிய இடதுசாரி சக்திகளை தேசிய அரசியல் அரங்கி;ல் இருந்து புறக்கணித்தாலும் முள்ளிவாய்க்கால் வரை அழிவு ஏற்பட்டதுடன் தமிழ் சமூகத்தை சகோதர இனங்களில் இருந்து அந்நியப்படுத்தியதுடன் சூன்யமான சூழ்நிலைக்குள் வாழவும் நிர்ப்பந்தித்திருக்கிறது.

ஒரு வகையில் பார்த்தால் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் பேராசை பிடித்தவர்கள். அதீத சுயநலமுள்ளவர்கள். ஏனென்றால் நமது சமூகத்தவர்கள் தமது வாழ்வில் கல்வி, உத்தியோகம், பொருளாதார மேம்பாடு போன்ற விடையங்களிலும் வீடுகள் நிர்மானிக்கும்போது அல்லது வாங்கும் போது வீட்டிற்கு எந்தப் பக்கம் வாசல் நல்லது வடக்கா, தெற்கா என பார்த்து, பார்த்து ஒவ்வொரு விடையத்திலும் மிக நுணுக்கமாக முடிவு எடுக்கும் சமூகம் கடந்த 60 வருட அரசியல் வரலாற்றில் ஒரு சிறந்த சமூகத் தலைவரையும் உருவாக்காதது சோகத்திலும் பெரிய சோகம்.தவிரவும் இலங்கைத் தேசிய இனச்சிக்கலில் 30 வீதத்தை கொண்ட நமது தமிழ் சிறுபான்மை சமூகம் இனங்கக்கிடையேயான முரண்பாட்டிற்கு தனி ஈழம்தான் தீர்வு என்ற பிரகடனமும் அதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டமும் அதற்கு பின்னணியாக அமைந்த அரசியல் செயற்பாட்டு முறையும் இலங்கைத் தீவில் உள்ள பெரும்பான்மை இனத்தையும் சக சகோதர சிறுபான்மை மக்களையும் இந்திய உபகண்டத்தையும் அதற்கு மேலாக முழு உலகத்தையும் அச்சுறுத்தும் வகையிலேயே தமிழ்த் தலைமைகள் நடந்துகொண்டன. நமது இளந்தலைமுறைக்கு அரசியல் தலைவர்கள் இனவாதத்தையும், வெறுப்பையும், துவேஷிப்பதையுமே விதைத்தார்கள். வாழ்வின் நேசிப்பு, வாழ்வின் மகத்துவம், சேர்ந்து வாழ்தல், நல்லிணக்கம், ஐக்கியம் இன்னோரன்ன வாழ்வின் உன்னதங்கள் கற்றுக்கொடுக்கப்படவில்லை.

கடந்த முப்பது வருடத்துக்கு மேலாக கொலை செய்பவர்களையும் சக மனிதனுக்கு துன்பம், சேதங்களை விளைவிப்பவர்களையும் புனிதர்களாக மாவீரர்களாக கொண்டாடினோம். வீரத்தின் அர்த்தம் கொலை செய்வதா? மாவீரரின் அர்த்தம் என்ன? கொலைகளையும் மீள முடியாத சேதங்களையும் - சிதைவுகளையும் ஏற்படுத்துவதா? இவர்களுக்காக கவலைப்படலாமா? அல்லது புனிதர்களாக கொண்டாடலாமா? கொலைகள் அச்சுறுத்தல்கள் சேதங்கள் புரிந்தவர்கள்தான் மாவீரர் எனின் மாட்டீன் லூதர் கிங், காந்தி போன்றவர்களை எவ்வாறு அழைப்பது? ஏன் இந்த முரண்பாடு? அர்த்தமற்ற உயிர் கொலையால் உயிர் அர்ப்பணிப்பால் எதைச் சாதித்தோம்? இதற்கான பதிலை வரலாற்றிடமே விட்டுவிடுவோம். உண்மையாக கூறப்போனால் நம் இனத்துக்கு அடிமைத்தனத்துக்கும், சுதந்திரத்துக்கும் அர்த்தம் தெரியாதவர்கள். உலகப் பரப்பில் உலக வரலாற்றில் அடிமைத்தனம், சுதந்திரம் பற்றி ஆழமாக அறிய வேண்டுமாயின் கறுப்பின மக்களினதும், யூத மக்களினதம் சரித்திரங்கள் கூர்ந்து கவனிக்கப்படல் வேண்டும். கறுப்பின எழுத்தாளர் ரோனி மொரிசன் அடிமைத்தனம் பற்றி குறிப்பிடுகையில், அடிமைத்தனம் என்பது எப்போதுமே இல்லாமற் போகப்போவதில்லை. ஏனெனில் உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் எவ்வளவுதான் பேசினாலும் எழுதினாலும் அனைவரையும் போல இருந்துகொண்டு ஒரு அடிமையாக எப்போதுமே உணர்கிறோம்.

ஆக நமது தேசிய விடுதலைப் போராட்டம் அடியெடுத்ததில் இருந்து விடுபடுவதற்கும் ஒன்றுபட்ட தேசியத்தை உருவாக்குவதற்கும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அந்தப் பாதையில் இருந்து விலகியதுடன் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் எந்தளவு பிளவுகள் காணப்பட்டதோ அதேயளவு பிளவுகள் போராட்ட முடிவிலும் காணப்படுகிறது. அத்துடன் broken nation ஆகவும் ஈழப்போர் தந்த பாசிசம் இருக்கிறது. இந்நிலைக்கு நமது சமூகத்தை இட்டுச்சென்றவர்கள் வெறுயாருமல்ல தமிழ் அரசியல் தலைமைகளே என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தந்தை செல்வா கூறினார் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்றும், தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழர்களுக்கு தனிநாடுதான் தீர்வு என்றும் கூறியதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? தந்தை செல்வா கூறிய கூற்றுக்கும் அண்மையில் போர் குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட Radovan Karadzic Bosnian Serb Leader கூறுகிறார். ‘The Serbs Wanted to live with Muslims, but not under Muslims’ இந்த நிலைப்பாடுக்காக 1992 – 1995 வரை நடைபெற்ற சேர்பிய பொஸ்னிய யுத்த்தில் ஒரு இலட்சம் முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இவ்விரு தலைவர்களின் தேசியவாத முன்னிலைப்படுத்தப்பட்ட கூற்றுக்களையும் அதிலுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளையும் ஈழப்போரின் பின்புல வரலாறுகளையும் தற்போதுள்ள சூழ்நிலைமைகளையும் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்கப்படல் வேண்டும். What price a life? சேர்ந்து வாழமுடியாவிடின் கொலைகளை நிகழ்த்துவதா? கடந்த முப்பது வருட போரில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர் இழுப்பு, கந்தன் கருணை படுகொலை, காத்தான்குடி பாடுகொலை, முஸ்லீம் சமூகம் வெளியேற்றம், சகோதரப் படுகொலை, சிந்தனையாளர்கள் கொலை, ஒரு இலட்சம் விதவைகள், எண்ணற்ற அனாதைகள், அங்கவீனர்கள் இவற்றையெல்லாம் ஏன் நிகழ்த்தினோம்? உருவாக்கினோம்? இதற்கான காரணிகள்தான் என்ன? தற்போதுள்ள அரசியல் தலைமைகள் கடந்துவந்த வரலாற்றில் இருந்து பாடங்கள் கற்கின்றனவா? கற்பதற்கு முயற்சிக்கிறார்களா? இல்லையே.

இன்றைய அவசரத் தேவை என்னவெனில் கண்ணீர் துளிபோன்ற தேசத்தில் கடும்போக்கு வாத்தாலும் இனவாதத்தாலும் பொருளாதார சமத்துமின்னையாலம் இனங்களுக்கிடையே மானுட சமத்துவத்தை பேணத் தவறியதாலும் ஆயுதக் கிளர்ச்சியாலும் அடிமைத் தனத்தை பேணும் அரசியல் முறைமையாலும் இன்றுவரை கண்ணீரில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்ப்பட்ட சிறுபான்மை, சமூகத்துக்கு ஒரு மீட்பர் தேவைப்படுகிறார். அந்த மீட்பரை நம்புங்கள், தமிழ் ஈழம் நாளை பிறக்கும் என்று 30 வருடமாக ஏமாற்றப்பட்டவர்களையும் புலிகளின் அழிவின் பின்பும் ஈழக் கனவில் சிக்கி இருப்பவர்களையும் சுயநிர்ணயம், தாயகம், தேசியம் என்று கூறி தவறாக வழிநடத்தப்படும் மக்களையும் ஒருங்கிணைத்து சமூகம் சார்ந்த அரசியலிலும் தேசிய அரசியலிலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதுடன் சர்வதேச ஆதிக்க சுரண்டல் அரசியலை ஆழுமையுடன் சவாலுடன் முறியடிப்பதற்கான புதிய அரசியல் சந்ததிகளே இன்று தேவையாக இருக்கிறன. அத்துடன் தமிழீழம் என்பது ஜனநாயக மறுப்பு செயற்பாட்டின் ஊடாகவோ போராட்டத்தின் ஊடாகவோ சர்வதேச - இந்திய ஆதரவு ஊடாகவோ எட்டப்பட முடியாத ஒன்று என்பது தமிழ் தேசியவாதிகளிடம் இடித்து உரைக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழருடைய அரசியல் வரலாற்றில் Optimistic ஆக செயற்படும் தலைவர்கள் இல்லை என்றே கூறலாம். கடந்த 60 வருட வரலாற்றில் நமது சமூகத்துக்கு கிடைத்த அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் எப்படி இருந்தன? 'ஊர் இரண்டுபாட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பதுபோலவும் 'நமக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும்' என்பதுபோலவே அரசியல் செய்து வந்துள்ளனர். புலிகளின் அழிவின் பின்பும் சரி முன்பும் சரி அழிவின் விழிம்பிலும் சரி நோர்வேயையும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் நம்பி அழிந்தோமே தவிர உண்மையான நேசசக்திகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் பிரச்சினைகளை பேசவோ, தீர்க்கவோ, கைகோர்க்கவோ இணக்கப்படாட்டுடன் நடந்துகொள்ளவோ அவர்களால் முடியவில்லை. இது ஒரு வகையில் அடிமைத்தனம் என்றே கூறவேண்டும். ஏனெனில் தமிழ் தேசிய அரசியல் பாரம்பரியம் அதனைத்தான் அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. இத் தொடர் நிகழ்வு தமிழ் அரசியல் கட்சியில் இருந்து புலம்பெயர் அரசுவரை நீடிதத்தே செல்கிறது. முப்பதுவருட அழிவுகரமான பாதையில் இருந்து எதனைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? எதனையும் கற்றக்கொள்ளவில்லையே. இனிமேலும் கற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்பதே யதார்த்தம்.

புலிகள் இல்லாத சூழ்நிலையில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலின் 225 உறுப்பினர் கொண்ட சபைக்கு நடாளாவிய ரீதியில் 7500 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளார்கள். இதில் வடக்கு கிழக்கில் 34 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 700 க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். இந்நிலையை ஒரு சிலர் ஜனநாயக மிளர்வு, வளாச்சி என்று வர்ணிக்கிறார்கள். இது ஒரு அபத்தமான வர்ணிப்பு. ஏனெனில் பல கட்சிகள் பங்களிப்பு ஜனநாயம் என்பது ஆரோக்கியமான தளத்திலே நடைபெறல் வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்பவும் தேசவளத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவும் தேர்தலையும், ஜனநாயகத்தையும் கையாண்டால்தான், யுத்தத்தின் பின்பான தேசத்தை சரியான திசையில் நடாத்தவும் ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணவும் முடியும். அதை விடுத்து அமைதியான சூழலை பயன்படுத்தி எண்ணற்ற கட்சிகளையும், எண்ணற்ற சுயாதீன வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்தையும், மக்கள் பிரதிநிதித்துவத்தையும் சிதைப்பதற்கே வழி வகுக்கும்.

கடந்த 60 வருட தமிழருடைய அரசியல் வரலாற்றில் வட-கிழக்கு தமிழர்கள் தேசிய அரசியலிலும் தலைமைத் தேர்விலும் தோற்றுப் போயுள்ளார்கள். இங்கு விடயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் ஒரு அரசியல் வாதிக்கான மூலதனம் என்பது மக்களின் அறியாமையும், இன, மத, மொழி தேசிய அடிப்படையிடையிலான உணர்ச்சியூட்டல் வாழ்வு முறையுமே. இந்த மலிந்த வெறியூட்டல் அரசியலையே அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்த் தலைமையால் செய்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சிதான் தற்போதும் வட-கிழக்கு அரசியல் அரங்கில் டைபெற்றுவருகின்றது. ஒரு அமைச்சரின் ஆண்டு வருமானம் இலங்கை நாணயப்படி, 38 இலட்சம் என தரவுகள் தெரிவிக்கின்றன. எல்லாமே வயிற்றுப் பிழைப்புத்தான் “It’s all about money” இதில் தமிழ்த் தேசியம் நல்ல விழைபொருள், நல்ல மடக்கல்.

கடந்து வந்த வரலாறு அதைத்தான் நிரூபித்திருக்கின்றது.தமிழர் தேசிய அரசியலில் 60 வருடத்திற்கு முன்பும், இன்றும், என்றும் தொடர் நிகழ்ச்சி நிரலாக சிங்களக் குடியேற்றம் பற்றி பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கோஷம் தேர்தல் கலங்களில்தான் அதி உச்சத்தை எட்டுகிறது. இது ஒரு அரசியல் கோஷமே தவிர இதில் எந்த நியாயமும், இருப்பதாக தெரியவில்லை. நடைமுறையில் பார்த்தால் வட-கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது உண்மையே, அதே நேரம் வட-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியேயும் உலகப் பரப்பின் பல பகுதிகளிலும் இனப்பிரச்சினை காரணமாகவும், பொருளாதார மேம்பாட்டு நல்வாழ்வுக்காகவும் தமிழர் பிரதேசங்களில் வாழும் மக்கள் தொகையை விட பன்மடங்கு தொகை மக்கள் global nation உடன் கலந்து வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் திருமண உறவுகள், கலாசார பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டு சகோதர இன மக்களுடன் தமது வாழ்வை மேம்படுத்தி முன்னேற்றம் கண்டுள்ளார்கள். யதார்த்தங்கள் இவ்வாறு இருக்க 60 வருடத்துக்கு பின்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை இனவாதத் தளத்தில் தொடர்ந்தும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? எல்லாமே அதீத சுயநலத்தைத் தவிர வேறு ஏதும் இல்லை.

தமிழர் பிரச்சினையில் மேற்குலகின் அணுகுமுறையும், நிகழ்ச்சி நிரல்களும் எவ்வாறு இருந்து வருகிறது என்று அவதானிக்கையில் 'தொட்டிலையம் கிள்ளி பிள்ளையையும் ஆட்டுவது' போன்றதே. ஏனென்றால் புலிகள் இருந்த காலத்திலும், அழிந்த காலத்திலும் அவர்களது இலங்கை மீதான ஆதிக்கம், ஆக்கிரமிப்பு, economic interests க்கு அப்பால் நீதி, தர்மத்துடன், பேணப்பட்டதல்ல. புலிகள் அழிவின் பிற்பாடு மேற்குலகம் இலங்கை தொடர்பில் உருவாக்கும் நிகழ்ச்சி நிரல்கள் மனித உரிமை, யுத்த விசாரணை போன்ற விடயங்கள் தமிழர், சிங்களவர் நலன் சார்ந்ததல்ல. ஆசிய அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிகங்களுடன் “white supremacy” போன்ற குரூர எண்ணங்களும் பின்னிப் பிணைந்துள்ளது.

அதனால்த்தான் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரிக்காத மேற்குலகம் அந்த அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் மானிட விரோத காரியங்களுக்கும் துணை போனவர்களுடன் உறவைப் பேணுவதுடன் அவர்களது அடிமை பிற்போக்கு அரசியலை முன்னெடுப்பதற்கு அலுவலகங்களை திறப்பதற்கு அனுமதிப்பதுடன் உலகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். இதற்கு பேர்தான் “Freedom of speech” இதே அனுகுமுறையை அல்கைதா, பாத் கட்சி, கமாஸ் போன்றவர்களுடன் ஏற்படுத்துவார்களா? ஏன் இந்த முரண்நகை? எல்லாமே பிரித்தாழும் வல்லாதிக்கம்தான் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது. இனச்சிக்கலின் வரலாறுகள் எப்படி இருப்பினும், தமிழ்ச் சமூகமும், தமிழ் மக்களை வழிநடத்தும் அரசியல் தலைவர்களும் சிங்கள சமூகத்திடமும், சிங்களத் தலைவர்களிடமும் பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பலதவறுகள், மோசடிகள் செய்திருந்தாலும் இன்னும் உயிருடன் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இதற்கு ஒப்பான சம்பவம் புலிகள் பலமோடு உயிரோடு இருந்த காலத்தில் நடைபெற்றது. அதாவது (மாத்தையாவின் விவகாரம்) இதே போல பலருக்கு நடந்தது. கருணா ஒருவரே அந்த மரணப் பொறியில் இருந்து தப்பியிருந்தார். இறுதியாக அரசியல் பிராந்தியத்தில் இலங்கை கேந்திரத்துவம் வாய்ந்த முக்கியமான தேசமாக இருப்பதால் புலிப்பாசிசத்தையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிப்பதற்கு மேற்க்குலகம் உதவினாலும் பல்லின சமூகங்களிடையே நிரந்தர, அமைதி உருவாக அனுமதிக்கப் போவதில்லை. ஏகாதிபத்தியத்திற்கு மக்கள் நலனை விட வர்த்தக நலனும், சுரண்டல் நலனும் மக்களை பிரித்தாழும் சூழ்ச்சிக்குமே எப்போதும் பிரதான விடையங்களாக இருந்து வருவதை நீண்ட நெடிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழ்ச்சி அரசியலில் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள பேராசை பிடித்த மனிதர்களும் கடும்போக்குவாதிகளும், சோரம் போகும் அரசியல்வாதிகளும் மக்களின் நலன்களுக்கும், அமைதிக்கும் எப்போதும் குந்தகம் விளைவிப்பவர்களாக இருப்பார்கள், இருந்துகொண்டிருக்கிறார்கள்.

மூன்று சகாப்தத்திற்கு மேலாக உயிர் அழிவுகளையும், பொருட் சேதங்களையும் திரும்பிப் பார்க்கும் போது, வலியும், துயரும் மனதைக் கவ்விக்கொள்கிறது. இவ் அர்த்தமற்ற இழப்புகள் எல்லாம் யாரால் ஏற்பட்டது நம் மூகத்தை தவறாக வழிநடத்திய அரசியல்வாதிகளாலேயே ஏற்பட்டது. ஆகவே இன்றுள்ள பலமான கேள்வி என்னவெற்றால் மீண்டும், மீண்டும் மக்களை தவறாக வழிநடத்துபவர்களுக்கு வாக்களித்து தொடர்ச்சியான அழிவுப்பாதையில் சமூகத்தை இட்டுச் செல்வதா? அல்லது நேர்மையாகவும், ஆக்கபூர்வமாகவும் சிந்திப்பவர்களுக்கு வாக்களித்து சமூகத்தை முன்னேற்றும் பாதையில் இட்டுச் செல்வதா? இன்றைய தேவை என்னவெனில் நேர்மையாகவும், ஆக்கபூர்வமாகவும் மொழி, மதத்திற்கு அப்பால் சிந்திக்கும் திறன் உள்ள மனிதர்களே தேசத்திற்கு தேவைப்படுகிறார்கள். இத்தன்மைகளை அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகையால் நல்ல vision மிக்க தொலை நோக்குடன் செயற்படக்கூடிய சமூகத் தலைவர்களையும், பெரியோர்களையும் தேர்வு செய்வதன் மூலம் சமூகங்களிடையே புதிய அரசியல், கலாசார மத புரிந்துணர்வை, இணக்கப்பாட்டை செய்வதன் மூலம் ஆசியாவின் இனச் சச்சரவு அற்ற பலமான முத்து எனவும் பலமான தேசம் எனவும் உலகுக்கு முன்னுதாராமானவர்கள் என வாழ்ந்து காட்டுவோம்.
'நம்பிக்கையற்ற பண்பைக் காட்டிலும் கேடுகெட்டது வேறு எதுவுமே இல்லை.
அவநம்பிக்கை மனிதனை தனிமைப்படுத்துகிறது.
நட்பையும் உறவின் இணக்கத்தையும் சிதைக்கும் நஞ்சு அது.
எரிச்சலையும் வேதனையையும் கொடுக்கும் முள் அது.
உயிரைப் பறிக்கும் வாள் அது!'
- புத்தர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com