Sunday, March 14, 2010

எதிரணியில் இருந்து விதண்டாவதம் பேசுவதால் எவ்விதபயனுமில்லை என்கின்றார் கனகரட்ணம்.

கேள்வி:- நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியின் சார்பில் போட்டியிடக் காரணம் என்ன?

பதில்:- மூன்று தசாப்தகால போர்ச்சூழல் ஓய்ந்து, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் இவ்வேளையில் கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வன்னியில் நிவாரணக் கிராமங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உதவிகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்தது. போரில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். மக்கள் பிரதிநிதியாக மக்களோடு மக்களாக இருந்த வேளையில் அவர்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்டவன். எதிரணி அரசியலில் இருந்து கொண்டு வெறுமனே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருப்பதில் எதுவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை. நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல் தேவை. அந்தத் தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பூர்த்தி செய்து வருகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டியிருக்கிறது. மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டு வெறுமனே பார்வையாளனாக, எதிரணி அரசியலில் இருந்து வாய்ச்சடால் பேசுவதில் மக்களுக்கு எதுவித பலனும் ஏற்படப் போவதில்லை. எனவே அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் என்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். தற்போது மேற்க¦¡ள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மேலும் தொடர்வதற்கு அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு பொதுத் தேர்தல் எனக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.


கேள்வி:- யுத்தத்தையும் அதன் மனித அவலங்களையும் நேரில் பார்த்தும் அனுபவித்தும் இருக்கிaர்கள். தற்போதைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா?

பதில்:- அரசியல் கோட்பாட்டுக்காக அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு முதற்கண் நிம்மதியையும், இழந்துவிட்ட இயல்பு வாழ்க்கையையும் பெற்றுக் கொடுப்பதே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும்.

ஒரு பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்ட போது அரசாங்கமே தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது. அப்போது நீலிக்கண்ணீர் வடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்காக எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. அரசாங்கம் முகாம்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்ற நொண்டிக் குற்றச்சாட்டுகளையே கூறிக் கொண்டிருந்ததே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு எவ்வழியிலேனும் உதவவில்லை. நிர்க்கதி நிலையில் தவித்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. உதவுவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தன. 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் ஒருமாத சம்பளத்தையேனும் கொடுத்து உதவி தமிழ்த் தேசியத்தின் பெருமையை காட்டியிருக்கலாம். இப்போது அரசாங்கம் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என வெற்றுக்கோஷமிடுகிறார்கள். போருக்குப் பின்னரும் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளிலும் அதன் நடவடிக்கைகளிலும் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் ஒரு அரசுக்கு பொறுத்தவரையில் சுமார் மூன்று இலட்ச மக்களை பராமரிப்பது என்பது இலகுவான காரியமல்ல. மக்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பினும் அதனை பொருட்படுத்தவில்லை. எந்தப் பயமும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதற்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அதுபோதும் என்றிருந்தனர்.

தற்போது மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். குறுகிய காலப் பகுதிக்குள் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இன்னொரு சாதனையாகும்.

சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். முன்னர் போல குண்டுச் சத்தங்கள் இல்லை. மரண அச்சுறுத்தல்கள் இல்லை. மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் காணப்படுகிறது.

கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிராமப்புற பாடசாலைக் கட்டிடங்களின் புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றம் நடைபெறும் மல்லாவி, பாண்டியன் குளம், துணுக்காய் ஆகிய உதவி அரச அதிபர் பிரிவுகளுக்கு கடந்தவாரம் சென்று வந்தேன். துணுக்காயில் 20 கிராம சேவகர் பிரிவுகளும் பாண்டியன் குளத்தில் 15 கிராம சேவகர் பிரிவுகளும் இருக்கின்றன. சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 5 பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் றிசாத் ஆசிரியர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்குமுகமாக 43 துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக் கொடுத்தார். மேலும் பாடசாலைகளுக்குத் தேவையான கணனி இயந்திரங்கள், போட்டோ பிரதி இயந்திரங்கள் மற்றும் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. 35 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் கருவிகளை வழங்கியுள்ளது. விவசாயத்துறையில் ஏற்படும் அபிவிருத்தியான அம்மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும்.

வீடு, வாசல்கள் இழந்த நிலையில் இருப்பதால் தற்காலிக கூடாரங்கள் அமைத்து மிகவும் சந்தோஷமாக வாழ்கிறா ர்கள். கிணறுகள் சுத்திகரிக்கப்படுகின்றன. கற்சிலை மடுவில் அடுத்த வாரமளவில் திறக்கப்படவுள்ளது. முகாம்களில் தங்கியி ருக்கும் எஞ்சியோரும் விரைவில் தங்களை குடியமர்த்த வேண்டும் எனக் கோரினர். சொந்த வீட்டில் ஒருகோப்பை கஞ்சை குடித்தாலும் போதும் என்ற அவர்களின் எதிர்ப்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.


கேள்வி:- இறுதிக்கட்டப் போருக்கு முன் ஒரு கட்டமைப்புக்குள் இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக் காரணம் என்ன?

பதில்:- போர் முற்றுபெறுவதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருந்தது. கிளிநொச்சி புலிகளின் தலைமையகத்தில் இருந்து வரும் உத்தரவுகளுக்கமையவே நடந்து கொண்டார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் இருந்தன. புலிகள் இருக்கும் வரையிலும் ஒற்றுமையாக இருப்பதுபோலவே தெரிந்தது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குள் முரண்பாடுகள் வெளியேதெரிய ஆரம்பித்தன.

ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் இன்னொரு பிரிவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் சிலர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாககவும் எடுத்த முடிவுகளே மூன்றாக பிளவுபடுவதற்கு காரணமாய் அமைந்தன. சுயநல நோக்குடன் செயற்படும் சிலர் தாம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்காக எதிரணி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். எதிரணி அரசியலால் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் எதையும் சாதித்துவிட முடியாது என்பதே உண்மையாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களை வழிநடத்த சரியானதொரு தலைமைக்கான வெற்றிடம் காணப்படுகிறது. தமிழ்த் தேசியம், தமிழினம், சுயநிர்ணயம் என்பது பற்றியே பேசிப் பயனில்லை. இப்போதைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் உதவியுடன் செய்துகொடுக்க வேண்டும்.

நன்றி தினகரன் வாரமஞ்சரி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com