Wednesday, March 17, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -12)

ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார். கே.டி.யின் சொந்த இடம் வட்டக்கச்சி, இவர் பலதரப்பட்ட ஒழுங்கீனங்களைச் செய்ததாகவும், புலி விலங்குகளின் கட்டுப்பாட்டையும் மீறி தன்னச்சையாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, புலி இயக்கத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.

நான் இந்த மில் சிறைக்கு வந்த போது இருந்த கைதிகளில் பாதியளவு குறைந்து அந்தக் குறைந்த அளவைப் புதியவர்களைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தனர். நான் வருவதற்கு முன்னர் ஏறக்குறைய 1500 பேர்வரையில் புலி விலங்குகள் கொலை செய்துவிட்டதாக அறிந்தேன். நான் வந்த பின்னரும் இதே அளவு சகோதரர்களை புலி விலங்குகள் கொன்றிருப்பார்கள். விடுதலை செய்யப்படுபவர்கள் பகல் நேரங்களில்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்படி நான் வந்த இவ்வளவு காலங்களிலும் பகல் நேரத்தில் அழைத்துச் சென்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இரண்டுபேர் மட்டுமே.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்ன. எங்களுக்கு வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. செய்தித் தாள்கள் கிடையாது. வானொலி, ரி.வி எதுவும் கிடையாது. அவர்களது சித்திரவதை அவர்கள் கொடுக்கும் இரண்டு வேளை உணவு, அருகில் இருப்பவர்கள் சொல்லும் அவர்களது அனுபவங்கள், கால் விலங்கு இவைகள்தான் எங்களுடன் பிணைந்திருந்தன. நாங்கள் தினமும் பரிதாபப்படும் விடயம் அந்தக் குழிகளுக்குள் வாழும் சகோதரர்கள் பற்றியதுதான். தரையில் வைத்திருக்கும் எங்களுக்கே இவர்கள் இவ்வளவு கொடுமைகள் செய்திருக்கையில் அந்த குழிகளுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியான கொடுமைகளைச் செய்திருப்பார்கள் என்பது கற்பனைகூட செய்துபார்க்க முடியாது.
விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்களை புலிவிலங்குகள் எதிரியாகக் கற்பனை செய்து பழிதீர்த்தார்கள். ஆனால் பொதுமக்களை இழுத்துவந்து எதற்காக பிற இயக்கங்களுக்கு உதவி செய்தாய் என்று கொடுமைப்படுத்தி கொலை செய்தது மனிதத் தன்மைக்கும் நியாயத்துக்கும் பொருத்தமில்லாதது.

என்னுடன் செட்டி என்றொரு சகோதரர் எனது பகுதியில் கால்விலங்குடன் பலதுயரங்களைச் சந்தித்து வந்தார். இவர் யாழ்ப்பாணம் கெனடி வீதியைச் சேர்ந்தவர். சிறந்த கடல் ஓட்டி, இவர் அனைத்து இயக்கங்களுக்கும் உதவிகள் பல செய்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் இலங்கை இந்திய நேவிகளின் கண்களில் படாமல் படகு ஓட்டக்கூடியவர். ஆயிரக்கணக்கானவர்களை இந்தியாவுக்கு படகுகளில் ஏற்றி கரைசேர்த்துள்ளார். இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களையும் இந்தியாவில் இறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பெட்டிசன் வர இவரை அழைத்து வந்து கொடுமைகள் பல செய்தனர். இவர்க்கு நான்கு குழந்தைகள்.

இவருக்கு இழைத்துவிட்ட கொடுமைகளை அவர் என்னிடம் விபரித்தார். ஒவ்வொரு சம்பவங்களையும் விபரிக்கும் போதும் அவரால் அழுகையை அடக்கமுடியவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பல தடவை கண்ணீர் வடித்தார். உண்மையில் அவர் தியாக உணர்வு கொண்ட பாமரனாக இருந்தார்.

அவர் என்னிடத்தில் கேட்டார்! எதற்காக புலிகள் இப்படி எல்லாரையும் கொல்லினம்? எல்லாரும் தனிநாடு கேட்டுப் போராடினவர்கள்தானே! நான் எலலாருக்கும் உதவியிருக்கிறேன். எனக்கு இந்த இயக்கங்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்னவென்றே தெரியாது! யாழ்ப்பாணத்தில் எல்லாரும் எல்லாருக்கும் உதவி செய்தினம், நானும் அப்படித்தான் உதவிசெய்தென். கடல் ஓடுவது. எங்களுக்கு நாடு கிடைக்க என்னாலான உதவியைச் செய்தேன். எனக்குப் பெரிய படிப்பறிவு கிடையாது. உடல் உழைப்பை எங்கள் இனத்துக்காக வழங்கினேன். இதில் என்ன குறையைக் கண்டனர் இந்தப் புலிகள். நான் முன்பு நினைத்தேன் புலிகள் இயக்கத்தினர் படித்தவர்கள், பண்புள்ளவாகள் என்று என்னைப் பிடித்துவந்த பின்னர்தான் தெரிந்தது, படிப்பறிவு மட்டுமல்ல, நாகரீகமே தெரியாதவர்கள் என்று. அவ்வளவுக்கு இவர்கள் அரக்கர்களாக இருக்கின்றனர்.

இப்போதே இவர்கள் இப்படி என்றால் நாடுகிடைத்தால்! எனது குடும்பத்தையே அழித்துவிடுவார்கள். நான் இல்லாமல் எனதுக் குடும்பத்தினர் உணவுக்கே கஸ்ரப்படுவார்கள். அவர்களுக்கு யார் உணவு கொடுப்பது? என்னைப் பார்ப்பதற்கு கண்டிப்பாக வந்திருப்பார்கள். இந்த மிருகங்கள் அவர்களைக் காட்டவே இல்லை. எனது மூத்த மகள் என்னைக் கொண்டு வந்த அன்றே புலிகளின் ஒப்பிசுக்கு முன்னால் நின்று சண்டை போட்டவள். தாயை விட என்னுடன்தான் பாசமாக இருப்பாள். நான் இல்லாமல் பள்ளிக்கூடம் கூட போயிருக்கமாட்டாள். எப்படியாவது அவளைப் பள்ளிக்கூடம் போகச் சொல்ல வேண்டும், இந்த விலங்குகளிடம் கேட்டேன், “ஒரு கடுதாசி போடவேனும் என்டு” ‘உண்ட சறத்தைக் கழட்டி கடுதாசி எழுது” என்று ஏசிவிட்டுச் சென்றார்கள். பிள்ளைப்பாசம், குடும்பப்பாசம் பற்றி இந்த மனித விலங்குகளுக்கு எப்படித் தெரியப்போகுது” என்று அழுதான் செட்டி!

இவர் தினம் தினம் தன் உடல் எடையை இழந்துவந்தார். அதிஸ்ரவசமாக இவர் ஒரு நாள் விடுவிக்கப்பட்டார். செட்டி வீடு சென்ற நான்கு மாதங்களில் இறந்துவிட்டார். புலிவிலங்குகளில் சித்திரவதை அவரது நுரையீரலைப் பாதித்திருந்தது. பல மருத்துவர்களைச் சந்தித்தும் முடியாமல் போய் இறந்தார். இவரது இறப்பைப் கண்ட இவரது மனைவி ரூத் மற்றும் குழந்தைகள் புலிகளை வாழ்த்தியிருப்பார்கள்!!

செட்டி எனக்குச் சொன்ன விடயங்கள் அப்பாவித்தனமாக இருந்தாலும் அதில் மறைந்திருக்கும் நியாயம் தமிழர்களைச் சிந்திக்கவைப்பவை! இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. அவர்களுக்குள் என்ன போட்டி என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் இயக்கங்களுக்கு உதவிய பொதுமக்களைச் சித்திரவதை செய்வதைத் தடுத்து நிறுத்துவது யார்? தமிழர்களை வழிநடத்த தமிழருக்கென்று நியாயமான தலைமை என்று இல்லாமல் போனதுதான் தமிழினத்தின் இன்றைய நிலைக்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்…......

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com