Monday, March 15, 2010

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

1987 ஆகஸ்ட் மாதத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான குமரப்பாவும், புலேந்திரனும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்குச் சென்று வரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர் அமைதிப்படையிடம். தரைமார்க்கமாகச் செல்வதற்கு பாதுகாப்புகள் அப்போது இல்லை. எனவே உலங்கு ஊர்தியில் இவர்களை அழைத்துச் சென்றுவர ஐ.பி.கே.எப். ஏற்பாடு செய்தது.

அதன்படி இந்த இருவரும் உலங்கு வானூர்தியில் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கே ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் ஊர்தியில் ஏறும்போது ஒரு பெண்ணை அழைத்து வந்து ஏற்றினர். இராணுவக் கெலிகாப்ரரில் பெண்களை ஏற்றக் கூடாது என்று சட்டம் உள்ளது. பைலட் ஏற்றுவதற்கு மறுத்தார். குமரப்பா முடியாது ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். பைலட் ரேடியோவில் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டார். அவர்களும் பலருடன் ஆலோசித்துவிட்டு ஏற்றிக்கொண்டு வரும்படி பைலட்டுக்கு அனுமதி வழங்கினர்.

பின்னர் அதே கெலிகாப்ரர் திருமலைக்கு வந்தது. அங்கும் ஒரு பெண்ணை ஏற்றினார் புலேந்திரன். ஊர்தி யாழ்ப்பாணம் வந்தது. இரு நாட்கள் கழித்து அப்படி அழைத்துவரப்பட்ட பெண்களுக்கும் குமரப்பா, புலேந்திரனுக்கும் பிரபாகரன் தலைமையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஐ.பி.கே.எப். இவர்களுக்கு பெண் அழைக்கும் வேலையைக் கூட வெட்கப்படாமல் அவர்கள் சட்டத்தையும் மீறி செய்தனர்.

திருமணம் நடந்த ஒருமாதத்தில் அந்தப் போராளிகளை இறந்து போகும்படி அவர்களது தலைவர் விசம் கொடுத்து உத்தரவிடுகிறார்! எதற்காக? கொழும்புக்குக் கொண்டு சென்றால் அவர்களைச் சித்திரவதை செய்து விடுவார்கள். அவற்றை அந்தப் போராளிகள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களை அதிலிருந்து காப்பாற்ற தலைவர் கண்ட வழி மரணம். ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். எந்த மடையன் இப்படி ஓர் உத்தரவினைச் செயற்படுத்துவான்? தனது குழந்தைகள் இவ்விதம் அகப்பட்டால் எந்தப் பெற்றோரால் இந்த வழிதான் சிறந்த வழி என்று தங்கள் குழந்தைகளை இறந்து போகும்படி கூறுவாரா? சக தோழனை ஓர் தலைவன் காப்பாற்றுவானா? அல்லது இறந்து போ என்று கூறுவானா? யாரையும் எந்த நேரத்திலும் கைவிட்டுதான் லாபத்தைப் பார்ப்பார் இந்தத் தலைவர்.

இந்தப் 12 பேரும் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டதனால் புலிகளுக்குக் கிடைத்த லாபம் என்ன? தமிழர்களுக்குக் கிடைத்த லாபம் என்ன? விளலுக்கு இறைத்த உயிர்களானதா இல்லையா? இளம் வயதில் அவர்களது மனைவியர் விதவைகள் ஆக்கப்பட்டனரா இல்லையா? ஒரு தலைவர் தன் சகாக்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுவானா அல்லது எதிரி செய்ய வேண்டிய வேலையை இவரே செய்வாரா? தனது சகாக்களைக் காப்பற்ற முடியாதவரா தன் மக்களைக் காப்பாற்றப் போகிறார். அந்த இளைஞர்களை செத்துப் போகும்படி உத்தரவிட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இவை கொலை குற்றமாகும்.

சரி தலைவருக்குத்தான் அறிவு இல்லை. அரசியல் ஆலோசகர், அரசியல் ஞானி, கலாநிதி, தத்துவ வித்தகர். விஸ்கி மாஸ்ரர் என்று பல பதவிகளை தன்னகத்தே வைத்திருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குக் கூட சுய அறிவு இருக்கவில்லை. 12 பேரைக் கொலை செய்யத் தூதுவனாக தானே சென்று, குப்பிகளைக் கொடுத்து மரண தண்டனை வழங்கிவிட்டு வந்து பின்னாளில் அதனைப் பெருமையாக வேறு சொல்லிக்கொண்டார். மகா மோசமான இந்தச் சம்பவத்தை உலகப் பிரசித்திப் பெற்ற சாதனையாக விபரித்தனர் இந்தக் கொலையாளிகள்.

அற்ப பிரச்சினைக்காக தங்கள் சக வீரர்களைப் பலி கொடுக்கும் இவர்கள் மக்களை எப்படி மதிப்பார்கள்? குமரப்பா, புலேந்திரன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு உள் இயக்க முரண்பாடே அல்லாமல், வேறெந்தக் காரணமும் இல்லை! தங்கள் நலனுக்காக எத்தனை ஆயிரம் பொதுமக்களையும் பலிகொடுக்கத் தயங்கமாட்டார்கள். அதுதான் நடந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில்.

இந்திய அமைதிப்படை கொலை செய்யவில்லை, கற்பழிக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, புலி விலங்கு அங்கத்தினரும் கற்பழித்தவர்கள்தான். அவர்களுக்கு புலித் தலைவர்கள் தண்டனை வழங்கியுள்ளனர். செல்வாக்கு மிக்கவர்கள் தண்டிக்கப்படாமல் கண்டுகொள்ளாமல் விடபட்டனர். ஐ.பி.கே.எப். கற்பழித்துவிட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. தங்கள் அங்கத்தவர்களின் கற்பழிப்புகளை பிரசாரம் இல்லாமல் மறைக்கப்பட்டது. எனவே மேற்கண்ட பாடல் புலிகளுக்குத்தான் பெருத்தமானதே தவிர ஏனைய இயக்கத்தினருக்கு அல்ல! தேனிசை செல்லப்பா பாடிய பாடல் புலி நடந்துவந்த பாதையினைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

துணுக்காய் வதைமுகாமில் குழிகளுக்குள் வைக்கப்படும் ஏனைய இயக்க அங்கத்தினருக்கென்று தனியாக மூன்று விலங்குகள் பொறுப்பாக இருந்தனர். றோஸ், பூட்டோ, பாபு ஆகிய இந்த மூன்று பேரும்தான் குழி தோண்டி மனித வதைசெய்யும் நிபுணர்கள். அங்கிருக்கும் அனைத்துக் குழிகளையும் வெட்டியவர்கள் பிடித்துவரப்பட்ட கைதிகள்தான். இந்தக் குழிகளுக்குள் மொத்தம் எத்தனை பேர் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியாது. எனது கணக்கின்படி ஏறக்குறைய முன்னூறு பேர் வரை இவ்விதம் குழிகளுக்குள் இருந்திருப்பார்கள்.

இந்த வதை முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள்தான் அதிகமாக இருந்தனர். ஈ.என்.டி.எல்.எப். தோழர்கள் மொத்தம் நூறுபேர் வரை இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் குமார் (கொட்டடி), குகன் (யாழ்ப்பாணம்), விக்கி (கிளிநொச்சி), நியூற்றன் (பாசையூர்) பாப்பா (பாசையூர்), வேதநாயகம் (பாசையூர்) நிக்கான் (யாழ்ப்பாணம்) போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் விக்கியைத் தனிக் குழி ஒன்றில் வைத்திருந்தனர். புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முசல்குத்தியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழிகளில்தான் இருந்தனர்.

இப்படிக் குழிகளில் இருந்த பெரும்பாண்மையானவர்களை புலிவிலங்குகள் கொன்று விட்டனர். இவர்கள் அனைவரும் பலவிதமான கொடுமைகளை அனுபவித்தனர். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு இந்தச் சித்திரவதைகள் இருந்தன. கல்வி, அறிவு, பழக்கவழக்கம், மனிதப்பண்பு, மனித உரிமை, நாகரீகம் போன்ற அனைத்தையும் அறியாத இந்தப் புலிவிலங்குகள் சிறைச்சாலை நடத்துகின்றனர். அகப்பட்ட அனைவருமே இவர்கள் பார்வைக்கு விலங்குகளாகத் தென்பட்டனர் என்றால் தவறில்லை.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, வாரம் முப்பது முதல் நாற்பது பேர்வரை புதியவர்களைப் பிடித்துவருவார்கள். இடநெருக்கடி ஏற்படும் போது, அதே அளவு சகோதரர்களை இரவு வேளை வெளியே அழைத்துச் செல்வார்கள். அவர்களை முளங்காவில் பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்று எரித்துவிடுவார்கள் என்று கூட இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஒருநாள் இரவு 10மணியளவில் ஒருவரோடு ஒருவர் கதைத்துக் கொண்டிருந்தனர். புலி விலங்குகள் எல்லாரும் வெளியில் உலா வந்து கொண்டிருந்தனர். எனது பகுதியில் இருந்தவர்கள் கதைக்கும் சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. திடீரென சிமெந்த் நிலத்தில் நன்கு காய்ந்த தடி ஒன்றினை ஓங்கி வீசி எறிந்தால் எழும் ஒலி ஒன்று கேட்டது. உடனே அனைவரினதும் கதைக்கும் சத்தம் நின்றது.

உள்ளே புலி சீருடை அணிந்த சராசரி உயரமான ஒருவர் வேகமாக வந்தார். அந்த வேளையில் நான் எழுந்து நின்று எனது சாரத்தை சரிசெய்து உடுத்தி அமர்வதற்குத் தயாரானேன். அனைவரும் அமர்ந்திருக்கையில் நான் மட்டும் எழுந்து நின்றது அவரை அவமதிப்பது போன்று தோன்றியதோ என்னவோ, அதே தடியை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தார். நான் அதற்குள் எனது இடத்தில் அமர்ந்து விட்டேன். வந்த வேகத்தில் அந்தத் தடியினால் என்னைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தார். அந்தத் தடி நான்கு அடி நீளமானதாக இருந்தது. அடி தாங்கமுடியாமல் நிலத்தில் உருண்டேன். அருகில் இருந்தவர்கள் விலகினர். நான் உருளுவதைத் தடுப்பதற்காக மறுமுனைக்குத் தாவி மீண்டும் வயிறு முதுகு என்று கண்ணில் பட்ட இடமெல்லாம் அடித்தார். ஐந்து ஆறு நிமிடங்கள் வரை என்னை அடித்துவிட்டு இறுதியில் அந்தத் தடியின் முனையால் என் முதுகில் ஓங்கி ஓர் குத்து குத்திவிட்டு, 'இங்க இருக்கும் எந்த நாயும் கதைக்கக் கூடாது' என்று மூச்சுவாங்கக் கத்திவிட்டு வெளியில் சென்றார். இவ்விதம் என்னைத் தாக்கியவர் வேறு யாருமல்ல, புன்னகை மன்னனும், அரசியல் செயலருமான சூனா. பானா. தமிழ்ச்செல்வன்தான். இவர் முதலில் கொலைகாரக் குழுவில்தான் இருந்தார். கால் பழுதுபட்ட பின்னர்தான் அரசியல் பிரிவுக்கு வந்து பல்லிளிக்க ஆரம்பித்தார்.

தொடரும்...

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com