Thursday, March 4, 2010

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சவுதி எண்ணைக் கப்பல் கடத்தல். 13 இலங்கையர்கள்.

சவூதிக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை, 14 சிப்பந்திகளுடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். நிசா-அல்-சவுதி எனப்படும் இக்கப்பல் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஆப்ரிக்க கடல் நடவடிக்கை தொடர்பான நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.

சோமாலியா கடற்பரப்புக்கு அண்மையிலுள்ள ஏதன் வளை குடாப்பகுதியில் வைத்து இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 14 சிப்பந்திகள் இருந்ததாகவும், இதில் 13 பேர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கிரேக்கர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளை ஏற்றிச்செல்லும் இக்கப்பல் ஜப்பானிலிருந்து சவூதியின் ஜெட்டா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.

இக்கப்பல் தற்பொழுது சோமாலியாவின் கடற்பரப்பில் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கென்ய கடற்படை தெரிவித்துள்ளது.

அதேவேளை இக்கப்பலை விடுதலை செய்வதற்கு கொள்ளையர்களால் பிணைத் தொகை கோரப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் கென்ய கடற்படை கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com