Wednesday, March 10, 2010

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் - 02 :

போனஸ் ஆசன முறை சிறுபான்மையினருக்கான விமோசனம் அல்ல – புன்னியாமீன்
விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்படுவதினால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தினைவிட, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமாக சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்தகவு அதிகமானது என்பதைக் கடந்த வாரம் நோக்கினோம்.

பெரும்பான்மை தேர்தல் முறையினையும், விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய ஏனைய தலைப்புக்களை இன்று நோக்குவோம்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்முறை


முதலாம் குடியரசு அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின்படி தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும், நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் மூலமாகவோ, சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்ய முடியும்.

இந்த முறையின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை இருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல் கட்சியொன்றினூடாக சிறுபான்மை வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக் குறியே.

ஏனெனில், தேர்தல் தொகுதியொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் ஒரு வேட்பாளரை மாத்திரமே அபேட்சகராக நிறுத்தமுடியும். எனவே, சிறுபான்மை இனத்தவர்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் - குறிப்பாக பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் தொகுதிகளில் பிரதான கட்சிகள் இச்சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டாது. (பல அங்கத்துவ, இரட்டை அங்கத்துவ தொகுதிகள் நீங்கலாக) இதனால் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானதை அடுத்து இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளால் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எந்தவொரு பிரதிநிதியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.

யதார்த்த பூர்வமாக நோக்குமிடத்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுற்றியே வாக்காளர்களின் விருப்புக்கள் அமைவதினால் சுயேட்சையாகவோ, அன்றேல் ஒரு சிறுபான்மைக் கட்சியின் மூலமாகவோ போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமான காரியமே.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல்

1978 யாப்பின் கீழ் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 ம் குடியரசு அரசியலமைப்பைப் போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.

யாப்பின்படி பட்டியலைத் தாக்கல் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும்போது தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவாகவுள்ள அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்ட வேண்டும். உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேட்சைக் குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கமைய பட்டியலைத் தயாரித்தல் வேண்டும். 12+03 = 15 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது பிரதான கட்சிகள் அத்தேர்தல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மைச் சமூகங்களினது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள விழைவதினால் பட்டியலில் சிறுபான்மை சமூக வேட்பாளர்களுக்கும் இடம் வழங்குதல். எனவே, பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறையில் கிடைக்காத வாய்ப்பு இங்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தினால் கிடைக்கிறது.

வாக்களிக்கும் முறை

1972ம் ஆண்டு குடியரசு யாப்பின் கீழ் வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதி ரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடியாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். எனவே, பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

2ம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும்.

1. தான் விரும்பும் கட்சிக்கு சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு.
2. விருப்புத் தெரிவு வாக்கு

விகிதாசார முறையின் கீழ் வாக்களிக்கும் விளக்கங்கள் 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் சிங்கள அகரவரிசைக்கமைய வரிசைப்படுத்தப்பட்டு, அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது 3 அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.

விருப்புத் தெரிவு வாக்குமுறை வேட்பாளர் மத்தியில் போட்டி நிலையையும், குரோதங்களையும் ஏற்படுத்துவதால், விருப்புத் தெரிவு முறை பற்றி பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட சிறுபான்மையினத்தவர்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கும் நிலை சாத்தியப்படுவதை நிராகரித்து விடமுடியாது.

உதாரணமாக 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 முஸ்லிம் பிரதிநிதிகளும், தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மொத்தம் 3 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் விகிதாசார தேர்தல் முறையில் விருப்புத் தெரிவு வாக்குமுறையும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. மாறாக பெரும்பான்மைத் தேர்தல்முறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாக முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும்முறை

பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதி ரீதியாக நடைபெறும் தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் நேரடியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக x எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட A, B, C ஆகிய வேட்பாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்.

A – 18.332
B – 16.218
C – 573

இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் A ஆவார். இதன்படி X எனும் தேர்தல் தொகுதிக்கு A என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.

1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் ஆசனங்களைப் பகிர்ந்தளிக்க பின்வரும் 6 படிமுறைகள் கையாளப்படும்.

1ம் படிமுறை : போனஸ் ஆசனத்தினை வழங்குதல்
2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள்
குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்
3ம் படிமுறை : தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல்
4ம் படிமுறை : முடிவான எண்ணைக் கணித்தல்
5ம் படிமுறை : முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்
6ம் படிமுறை : மிகுதிப் பெரும்பான்மை முறைக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

மேற்குறித்த 6 படிமுறைகளுக்கமையவே தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகளைத் தீர்மானிப்பர். இப்படிமுறைகளினால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்புக்களும் உள்ளன. நன்மைகளும் உள்ளன. இதனைப் பின்வரும் உதாரணத்துக்கமைய ஆராய முடியும்.

உதாரண எடுகோள்
X எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.
கட்சி A = 5,400 வாக்குகள்
கட்சி B = 3,600 வாக்குகள்
கட்சி C = 1,410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
மொத்தமாக செல்லுபடியான வாக்குகள் 11700

1 ம்படிமுறை – போனஸ் ஆசனத்தினை வழங்குதல்

விகிதாசார தேர்தல் முறையில் ஆசனங்களைப் பதிவு செய்யும்போது பேணப்படும் 1வது படிமுறை போனஸ் ஆசனத்தை வழங்குவதாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுள் எந்தக் கட்சி அல்லது குழு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அந்தக் கட்சி அல்லது குழுவிற்கு வழங்கப்படும் அன்பளிப்பு ஆசனத்தையே போனஸ் பிரதிநிதித்துவ ஆசனம் என அழைக்கின்றோம்.

எனவே, எமது உதாரண எடுகோளின்படி அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கட்சி A ஆகும். எனவே A கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படும்.

போனஸ் ஆசன முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு எனப்பொருள் கொள்ள முடியாது. பெரும்பாலும் இதன் மூலம் பிரதானக் கட்சிகளுக்கே வாய்ப்பு அதிகம். இலங்கையில் இதுகால வரை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போனஸ் ஆசனங்கள் பெற்ற கட்சிகளைப் பின்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம்.; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் நன்மை பெற்றுள்ளன.

1989/ 1994 /2000/ 2001/ 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற அதிகமான வாக்குகளைக் கொண்டு போனஸ் ஆசனம் பகிரப்பட்ட முறை. மேற்குறிப்பிட்ட ஆண்டு ஒழுங்கில் மாவட்டத்தில் வெற்றியடைந்த கட்சிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம்
1989/1994/ 2000/ 2001 / 2004
1. கொழும்பு : ஐ.தே.க / பொ.ஜ.மு /ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
2. கம்பஹா: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
3. களுத்துறை: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
4. கண்டி: ஐ.தே.க /ஐ.தே.க /பொ.ஜ.மு / ஐ.தே.க/ ஐ.தே.க.
5. மாத்தளை : ஐ.தே.க/பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
6. நுவரெலியா : ஐ.தே.க/ ஐ.தே.க / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
7. காலி : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
8. மாத்தறை : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
9. ஹம்பாந்தோட்டை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஜ.மு.
10. யாழ்ப்பாணம்: சுயேட்சை/ சுயேட்சை/ ஈ.பி.டி.பி/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
11. வன்னி : த.வி.கூ/ புளொட் / டெலோ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
12. மட்டக்களப்பு:த.வி.கூ/ த.வி.கூ / த.வி.கூ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
13. திகாமடுல்லை: ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஐ.மு/ ஸ்ரீ.ல.மு.க /பொ.ஜ.மு.
14. திருகோணமலை: ஸ்ரீ.சு.க/ ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / இ.த.அ.க
15. குருநாகலை : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
16. புத்தளம்: ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
17. அநுராதபுரம்: ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு
18. பொலன்னறுவை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஜ.தே.க / ஐ.தே.க / பொ.ஜ.மு.
19. பதுளை: ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
20. மொனராகலை: ஐ.தே.க / பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / பொ.ஐ.மு / பொ.ஜ.மு.
21. இரத்தினபுரி : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
22. கேகாலை: ஐ.தே.க / ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போனஸ் ஆசன முறையால் ஆளும்கட்சிக்குத் தன் பலத்தை ஓரளவேனும் அதிகரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இம்முறை காணப்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் இதுவரை நடைபெற்ற 5 பாராளுமன்ற தேர்தல்களின் போதும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.க.கட்சியும், பொ.ஐ. முன்னணியுமே முன்னணியில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1/20 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல். வெட்டுப்புள்ளி வாக்குக் கணிப்பு, சிறுபான்மைக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , சிறிய கட்சிகளின் வளர்ச்சிக்கும், பெரிதும் தடையாகும். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்த வெட்டுப்புள்ளி 1/8 பங்கு (அதாவது 12.5 % ஆகக் காணப்பட்டது. 1988ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பிரகாரமே 1/20 பங்காக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உதாரண எடுகோளை எடுத்து நோக்கும்போது வெட்டுப்புள்ளிக் கணிப்பு பின்வருமாறு அமையும். வெட்டுப்புள்ளி வாக்கு = செல்லுபடியான வாக்கு X 1/20 எமது உதாரணத்தின்படி = 11700X1/20 = 585

எனவே 585 வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத கட்சிகள், குழுக்கள் நீக்குதல் வேண்டும். இதன்படி 540 வாக்குகளைப் பெற்ற சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும், 5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும், 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த கால அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து இம்முறை போட்டியிடக்கூடிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறாமல் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய முறைப்பற்றியும, சிறுபான்மைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைப் பற்றியும் தொடர்ந்தும் இடம்பெறும். (தொடரும்…….)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com