Saturday, February 20, 2010

தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ்

வேட்பாளர்களைத் தெரிவதில் இன்னமும் இழுபறி : தங்கேஸ்வரி அரசு பக்கம்: ஏனைய சிலர் திண்டாட்டம்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக் களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஓரிரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் அரசியல் கட்சிகள் இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளன.

பெரும்பாலும் எதிர்க்கட்சிகளே இந்தக் குழப்பகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவதிலும், முன்னாள் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதிலேயே நாட்களைக் கடத்தி வருவதாக அந்தக் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுவதாலும், வேட்பாளர்களைத் தெரிவதிலுள்ள வெளிப்படைத் தன்மையற்ற போக்கினாலும், அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந் துள்ளனர்.

வேட்புமனுக்களைத் தயாரிப்பதில் குறித்த தொகையிலும் பார்க்க கூடுதலானோரின் பெயர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால், யாரை உள்வாங்குவது யாரை நீக்குவது என்பதைப் பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் திண்டாட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

தாம் வேட்பாளர் பட்டியலில் உள்ளட க்கப்பட்டுள்ளோமா? நீக்கப்பட்டுள்ளோமா? என்பது தெரியாமல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலர் குழம்பிப் போயுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

வேட்புமனுக்களின் விபரங்களை இறுதி நேரத்திலேயே வெளியிடவுள்ளதா கவும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விடுபடுவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்து வருகிறது. இதனால், நீக்கப்படுவோர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒவ்வோர் முன்னாள் உறுப்பினரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இறுதி நேரத்தில் தமது பெயர் நீக்கப்பட்டமை தெரியவந்தால், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கலையும் நெருக்கடியையும் தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சி என அவர்கள் தெரிவித்தனர். சிலர் தாம் நிச்சயமாக நீக்கப்படலாம் எனத் தீர்மானித்து வேறு கட்சிகளை நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தீர்மானித்தே தாம் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்ததாக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எமக்குத் தெரிவித்தார்.

இதேநேரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முரண்பட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கஜன் பொன்னம்பலம் முன்வைத்த யோசனைகளை கூட்டமைப்பு ஏற்க மறுத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முறுகல், முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் கூட்டமைப்பு இறுதி நேரம் வரை பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கத் தீர்மானித்துள்ளதுடன், மேற்கொள்ளும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் தந்திரோபாய செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசிய கட்சி ஜே. வி. பியையும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் நட்டாற்றில் விட்டுவிட்டுத் தனித்து யானைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துவிட்டதையடுத்து சரத் பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் நாடு முழுவதும் களமிறங்க ஜே. வி. பி. தீர்மானித்துவிட்டது. இரண்டு கட்சிகளும் பரம விரோதிகளைப் போன்று பரஸ்பரம் விமர்சனங்களை முன்வைத்து பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில், வெற்றிக் கிண்ணத்துக்கு வேட்பாளர்களைத் தேடும் பணியை ஜே. வி. பி. தீவிரப்படுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகம் என சகல மாவட்டங்களிலும் புத்திஜீவிகள் உட்பட சகல தரப்பினரையும் உள்வாங்குவதற்காகத் துரித கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக ஜே. வி. பி.யின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் ‘வாரமஞ்சரி’க்குத் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகக் கூறிய சந்திரசேகரன், மலையகத்தில் முக்கிய தொழிற்சங்க அரசியல் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் தமது கூட்டணியில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டார். மேலும் ஐக்கிய தேசிய கட்சி செங்கொடிச் சங்கம் முதலானவற்றின் சிரேஷ்ட தலைவர்களும் தம்முடன் இணைவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க, ரிரான் அலஸ் ஆகியோரும் வெற்றிக் கிண்ணத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும், ராமலிங்கம் சந்திரசேகரன் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் எட்டவில்லை. இரவோடிரவாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் அநேகமாக யானைச் சின்னத்தில் போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சகல மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகிறது. எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.

டொக்டர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள், உட்பட புத்திஜீவிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் இளைஞர்களும் வேட்பாளர்களாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளது.

இதேவேளை, கிழக்கில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இன்னும் இரண்டு தினங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளது. பெண்களின் பங்களிப்பு இளைஞர்களின் பங்களிப்பும் தமது வேட்பாளர் பட்டியலில் உள் வாங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மட்டுமல்ல வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கும் தமது கட்சி ஆலோசித்து வருகிறது என்றும் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித்தார்.

வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக ஐ. தே. கவுடன் தொடர்பு கொண்டபோது வேட்பாளர் நியமனத்தி ற்கான குழு நேற்று கூடியதாகவும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கூடி ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தனர். எனினும், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com