Monday, February 1, 2010

லங்கா பத்திரிகை நிறுவனம் மீதான தடை நீங்கம் : வக்கீல்கள் சூடான வாதாட்டம்.

'சீல்' வைக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'லங்கா' நிறுவனத்தைத் திறக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் சீல் வைக்கப்பட்டுள்ள நிறுவனம் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளின் நீண்ட வாதத்தின் பின்னர் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

லங்கா பத்திரிகையின் நுகேகொடைக் காரியாலயம் கடந்த சனிக்கிழமை குற்றத் தடுப்புப் பிரிவினரால் 'சீல்' வைக்கப்பட்டது. இதற்கு நீதிமன்ற உத்தரவினை பாதுகாப்புத் தரப்பினர் பெற்றிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் நீதவான் அனுர குமார ஹேரத் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளுக்காக நிறுவனம் தொடர்ந்தும் 'சீல்' வைக்கப்பட வேண்டும் எனவும் குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இக்கோரிக்கையை இடமளிக்க முடியாது என வாதாடிய பத்திரிகை நிறுவனம் சார்பாக ஆஜராகியிருந்த வக்கீல்கள், நீதி மன்றினால் பத்திரிகை மீது விதிக்கப்படடுள்ள தடை உத்தரவானது இலங்கை அரசியல் யாப்பில் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை மீறுவதாக தெரிவித்ததுடன் குறிப்பிட்ட தடையானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் யாப்பின் சிறப்பம்சத்தையும் மீறுவதாக வாதிட்டனர்.

எனினும் கட்டுரை தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மட்டுமே அவ்வாறான உத்தரவை நீதிமன்றில் கோர முடியும் எனத் தெரிவித்த நீதவான், 'சீல்' வைக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தடையை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com