Tuesday, February 23, 2010

புளொட்-தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையேயான பேச்சு இதயசுத்தியுடனானதா?

இலங்கையில் தேர்தல்கள் என அறிவிக்கப்பட்டால் கூட்டுக்கள் என்ற விடயம் சூடுபிடிக்கும். தேர்தல் முடிவடைந்தவுடன் அவ்வாறு ஒரு கூட்டு இருந்ததா என்பதற்கு அடையாளம்கூட தெரியாது போய்விடும். புலிகளின் ஆயுதஅச்சுறுத்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டை சில வருடங்கள் பேணுவதற்கு வழிவகுத்திருந்தது. புலிகளின் வன்செயல் கலாச்சாரத்தை நியாயப்படுத்துவதும் , புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக உலகிற்கு சொல்வதுமே அக்கூட்டமைப்பின் கடமையாக இருந்தகாரணத்தால் அங்கு முரண்பாடுகள் உருவாவதற்கும் பிளவுகள் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை.

மக்கள் நலன்சார்ந்து நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமற்ற கட்சிகளின் தலைமைகட்கு புலிகளின் மேற்படி கூட்டு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. தமிழ் மக்களுக்கான விடுதலைக்கான போர் எனும் பெயரால் ஆயுதப்போராட்டம் எனும் புளுடா காட்டிவந்த புலிகள், அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் கிடைத்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக மேற்படி கூட்டை அமைத்ததுடன் , அக்கூட்டிற்கு மேற்படி இரு விடயங்களுமே தங்களுக்கான கடமை என கட்டளையிட்டிருந்தது. அக்கடளையினுள் அடங்கியிருந்த கருப்பொருளை நன்கு உணர்ந்து கொண்ட கூட்டில் அங்கம் வகித்த கட்சிகள் தாம் இலங்கையில் புலிகள் உள்ள வரை தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகளாக வலம்வரமுடியும் என புலிகளின் தாளத்திற்கு ஆடிவந்தனர். புலிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளை நிராகரித்தபோது அவற்றுக்கு தாளம்போட்டு வந்ததுடன், புலிகளின் அநீதிகளை நியாயப்படுத்தியும் வந்திருந்தனர்.

ஆனால் அதிஸ்டவசமாக கடந்த மே மாதம் 17 ம் திகதியுடன் கற்பனைகள் யாவும் முடிவுக்கு வந்தது. கூட்டுச் சிதறியது. தாம் துரோகிகள் , ஒட்டுக்குழுக்கள் என வர்ணித்தவர்களுடனும் பேசவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது. பேச்சுக்கள் இடம்பெற்றது. ஆனால் இதயசுத்தியுடன் பேசினார்களா என்றால் இல்லை. கூட்டமைப்புக் கூத்தாடிகள் இதய சுத்தியுடன் பேசமாட்டார்கள் இவர்களுடன் பேசுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், இவர்கள் கபடநோக்குடனேயே வருகின்றார்கள் என விசேடமாக புளொட் தலைவர் சித்தார்த்தனுக்கு பல தரப்பும் கூறியிருந்தபோதும் அவர் எற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவில்ல.

இவ்விடயத்தில் சித்தார்த்தன் மீது மாத்திரம் குறைகூறிவிடமுடியாது. புலம்பெயர்ந்து வாழுகின்ற தன்னம்பிக்கையில்லா முன்னாள் புளொட் உறுப்பினர்களின் நப்பாசையும் காரணமாக அமைந்திருக்கின்றது. தமது தரப்பு நியாத்தையும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால துரோகங்களையும் மக்களுக்கு எடுத்துக்கூறி, மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கச்செய்ய திராணியற்ற மேற்படி கும்பல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கதிரைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என கருதினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தமிழ் கட்சிகளை பேச்சுக்கு அழைப்பதும் , பேசுவதுபோல் பாசாங்கு செய்வதும் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காகவே என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். இவ்வாறு போலிப்பேச்சுக்கு அழைக்கும் கூட்டமைப்பு எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் தாயாரில்லாத நிலையில் இதயசுத்தியுடன் பேசாமல், ஏனைய கட்சிகள் மீது நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை விதிக்கின்றது. மறுபுறத்தில் தாம் சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறுகின்றது. கூட்டமைப்பின் இச்செயற்பாட்டின் நோக்கம் தாம் சகல தமிழ் கட்சிகளையும் இணைந்துக்கொள்ள முயல்வதாகவும். ஆனால் அக்கட்சிகள் ஒருமைப்பாட்டிற்கு இணங்கவில்லை என்ற தவறான கருத்தினை மக்களுக்கு சொல்வதுமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இக்கபட நோக்கங்கள் தமிழ் மக்களுக்கு தோலுரித்துக் காட்டப்பட்டு எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும். ஏது எவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வண்டவாளங்கள் அவர்களில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியுடன் இணைந்து கொண்ட முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிகாந்தா , சிவஜிலிங்கம் ஆகியோரால் வெளிவரும் என நம்பப்படுகின்றது.

அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு பல்முனைப்போட்டி ஒன்று உருவாகிவருகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் அரசியல் கட்சிகளின் கடந்தகாலச் செயற்பாடுகளுமே தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கப்போகின்றது. புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கடந்த காலங்களில் தெரிவித்திருந்த கருத்துக்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளமையை உணர முடிகின்றது. தமிழ் இயக்கங்கள் யாவுமே கடந்தகாலங்களில் தவறுகளை விட்டிருக்கின்றது எனவும் தமது கரங்களிலும் இரத்தக்கறைகள் படிந்துள்ளது எனவும் அவற்றை எதிர்காலத்தில் திருத்திக்கொள்வோம் எனவும் கூறுமளவிற்கு அவரது பக்குவம் வழர்ச்சியடைந்துள்ளது.

ஆனால் இவ்விடயத்தினை வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரா இருக்கின்றார்களா என்ற கேள்வியும், அத்துடன் இங்குள்ள புளொட் இயக்க உறுப்பினர்களால் மக்களுக்கு விளங்கப்படுத்தக்கூடிய சக்கி உண்டா என்பதும் கேள்விக்குறியே. எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் இலங்கை வந்து இக்கடமையினை செய்ய தயாராகவுள்ளனரா?

இம்முறைத் தேர்தல் பிரச்சாரங்கள் என்பது இலங்கையில் கடந்த 50 வருடகால வரலாற்றில் கண்டிராத ஒன்றாகவே அமையப்போகின்றது. அத்துடன் இத்தேர்தல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாட்டில் வன்முறைகள் அற்றதோர் தேர்தலாகவே அமையப்போகின்றது. அரசியல் கட்சிகளினதும் , கூட்டுக்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் தருணத்தில் , இத்தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது பெற்றிராத கட்சி ஒன்றுக்கு எதிர்காலமில்லை என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும். சுமார் 30 வருடகால அனுபவம் கொண்டதாக கூறப்படும் புளொட் அமைப்பினால் ஒரு ஆசனத்தை தன்னும் கைப்பற்ற முடியாமல் போனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் சென்று நாம் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தங்களை அறிமுகம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com