Tuesday, February 9, 2010

நீரில் செல்லும் விமானம் வரும் 20ம் தேதி பயணிக்கும்.

கடலுக்கு அடியில் பாய்ந்து செல்லும், "நெக்கர் நிம்ப்' என்ற நீர் விமானம், வரும் 20ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. கடலில் செல்லும் கப்பல், படகு, நீர்மூழ்கி கப்பலை அறிந்தும், பலர் பயணித்தும் இருக்கும் பட்சத்தில், சாதாரண ஜெட் விமானம் போல் தோற்றமளிக்கும், நீர் விமானம் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மொபைல்போன், விமான சேவை உட்பட, பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும், "வெர்ஜின்' குழுமத்தின் தலைவர் பிரான்சன், நீரில் செல்லும் விமானத்தை தயாரித்துள்ளார். இவ்விமானத்தில் ஒரு பைலட், மூன்று பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். தோற்றத்தில் ஜெட் விமானம் போல் காட்சியளித்தாலும், பிற விமானங்களைப் போல், ரன்வேயில் பயணிப்பது போல், நீர் விமானம், கடலின் ஆழத்தில் பயணிக்கக் கூடியது. இவ்விமானம் மூலம், கடலில் பல வகை உயிரினங்கள், ஆழ்கடல் ஆகியவற்றையும், சிதைந்த கப்பலின் சேதங்கள் என பலவற்றையும் காணலாம்.

இவ்விமானம் மணிக்கு, ஐந்து கடல் மைல் வேகத்தில், 100 அடி ஆழம் வரை, இரண்டு மணிநேரம் நீரில் இயங்கும். விமானத்தில் பயணிக்க விரும்புவோர், ஓட்டுனருக்குரிய விசேஷ ஆடைகள், முகமூடி போன்றவற்றை அணிந்து, பாதுகாப்பாக தான் பயணிக்க முடியும்; விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சியும் பெற வேண்டும். விமான வாடகையாக, ஒரு வாரத்திற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்படும். ஆனால், விமானம் வேண்டுவோர், பிரான்சனின் விருந்தினராக வேண்டும்; அதற்கு தனியாக 44 லட்ச ரூபாய் கட்டவேண்டும். இவ்விமானம், வரும் 20ம் தேதி, வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, "நெக்கர் நிம்ப்' விமானத்தை விட, கடலில் 35 ஆயிரம் அடி வரை பயணிக்கத்தக்க விமானம் தான், பிரான்சனின் கனவு திட்டமாக உள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com