Thursday, January 28, 2010

இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தமிழ் தேசியவாத முன்னோக்கின் திவால்தன்மையும்.

(By Athiyan Silva) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த வசந்த காலத்தில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபின் பல பிளவுகளாக பிரிந்துள்ளது. அவர்களுக்கிடையிலான வேறுபாடுகள் எப்படி இருந்தபோதிலும், எல்லா பிளவுகளும் அடிப்படையில் அதே திவால்தன்மையான தேசியவாத போக்கை பின்பற்றி, தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஒரு தனி முதலாளித்துவ நாட்டை அமைப்பதற்கு பெரும் சக்திகளை நாடுவதுடன், இலங்கையின் சிங்கள முதலாளித்துவ உயரடுக்குடனும் தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளன.

அவர்கள் அனைவருமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை இலங்கையின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை அணிதிரட்டி பாதுகாக்க போராடுவதையும் ஸ்ரீலங்கா ஈழ ஐக்கிய சோசலிச குடியரனை நிறுவப் போராடுவதையும் மூர்க்கமாக எதிர்க்கின்றனர்.

இது, உள்நாட்டுப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பற்ற வகையில் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் சிங்கள தொழிலாள வர்க்கத்தின் மீது வன்முறை மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக அடக்குமுறை ஆகியவற்றைக் காட்டியதில் தெளிவாக வெளிப்பட்டது. ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் இனவாதப்போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடி, இலங்கை பாதுகாப்புப் படைகள் வடக்கில் இருந்தும், கிழக்கில் இருந்தும் உடனடியாக நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெற வேண்டும் என்றும் அழைப்புவிட்டது.

தற்போது முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இருக்கும் இயக்கத்தின் பெரும் பிரிவுகளும், 26 ஆண்டு காலம் நீடித்த உள்ளநாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாக செயல்பட்ட ஒரு முதலாளித்துவ தேர்தல் அணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான தளபதி சரத் பொன்சேகா தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதியான மகிந்த இராஜபக்ஷவை விட "குறைந்த தீமை" என்ற அடித்தளத்தில் ஆதரவைக் கொடுத்தன.

பொன்சேகாவும் இராஜபக்ஷவும் உண்மையில் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழ்பேசும் மக்களின் பெரும்பான்மைப் பகுதிகளை நாசத்திற்கு உட்படுத்தியதற்கும், ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளை கொன்ற குற்றத்திற்கும் பொறுப்பு உடையவர்கள். நவம்பர் 2005ல் அதிகாரத்திற்கு வந்த இராஜபக்ஷ மற்றும் டிசம்பர் 2005ல் இருந்து 2009 ஜூலை நடுப்பகுதி வரை இலங்கை இராணுவத்திற்கு தளபதியாக இருந்த பொன்சேகாவும் கூட்டாக சிங்கள முதலாளித்துவத்தின் இராணுவ உந்துதலை வழிநடத்தி தீவின்மீது கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்தனர். 2006 நடுப்பகுதியில் அவர்கள் மீண்டும் போரைத் தொடங்கி, பலமுறை குருதி கொட்டிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டனர். அவை இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளை இராணுவம் கைப்பற்றுவதில் உச்சக் கட்டத்தை அடைந்தது. அதேநேரத்தில் கணக்கிலடங்கா பொதுமக்களின் உயிர்கள் இழப்புடன் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றிலும் அழிக்கப்பட்டது, 280,000 தமிழ் மக்கள் மோசமான தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டனர்.

டிசம்பர் தொடங்கி, இனவாதப் போர் முடிவுற்ற ஏழே மாதங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு வலைத் தளங்களான Tamilwin, Infotamil, Puthinappalakai போன்றவை தமிழ் மக்களை இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தத் தொடங்கின. இதன்பின் ஜனவரி மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு முக்கிய பிரிவு பொன்சேகாவுடன் உடன்பாட்டிற்கு வந்து தளபதியை ஜனாதியாக்கும் முயற்சிக்கு ஆதரவு கொடுத்தது.

"ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை பொன்சேகாவிற்கு அளிக்கமாறு வேண்டுகிறோம்" என்று Tamilwin வலைத் தளத்தில் ஜனவரி 13 வந்த கட்டுரை அறிவித்தது.

அது தொடர்ந்து, "அறநெறியற்ற அரசியல்வாதியாக ஜனாதிபதி மகிந்த இருப்பதை நாம் நேரில்கண்டுபட்டறிந்த உண்மையாகும். மொழிவெறி, இனவெறி, மதவெறி, ஆட்சிவெறி, கொலைவெறியின் மொத்த வடிவமாக இருக்கும் அந்த மகிந்தவிற்கு மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு வசதிகளை வழங்கிவிட்டு, அத்தகைய ஒருவரை எதிரியாக வைத்துக்கொண்டு, அவருடனே உங்களது விடுதலைப் போராட்டத்தை நடத்த எண்ணுவீர்களானால், பகுத்தறிவற்ற விலங்குகளில் கூட உங்களைப் போன்ற விலங்குகளை காணமுடியாது. பொன்சேகா, களத்திலே மகிந்த ஏவிய அம்பு என்பது உங்களுக்கு விளங்காமல் போகாது. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? எதிரியின் ஆயுதத்தைப் பறித்து அதைக் கொண்டே தாக்கு" என எழுதியது'.

பொன்சேகா ஒரு "அம்பு" அல்லது ராஜபக்ஷவின் கருவிதான் என்னும் கூற்று வெளிப்படையான அபத்தமாகும். அவர் ஒரு தீவிர இனவாவாதி. ஒரு கனேடிய செய்தித்தாளிடம் 2008ல் இலங்கை "சிங்களர்களுக்கு உரியது என கூறியிருந்தார். தமிழ் எதிர்ப்பு போரை இரக்கமற்ற முறையில் நடத்திய இராணுவத்தின் தலைமைப் பதவிக்கு உயர்ந்தவர். வடக்கிலும் கிழக்கிலும் ஆக்கிரமிப்பின் போது அவர் நடந்து கொண்ட முறைக்கு பொன்சேகாவிற்கு எட்டு "சிறப்பு விருதுகள்" இலங்கையின் அரசாங்கம், இராணுவம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்தது.

மேலும் பொன்சேகாவின் ஜனாதிபதி வேட்புத்தன்மை பெருவணிக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைக் கொண்டது. இக்கட்சிதான் 1983ல் போரைத் தொடக்கியது. இவருக்கு கொழும்பின் வணிகக் குழுவின் சக்திவாய்ந்த பிரிவுகளும் ஆதரவைக் கொடுக்கின்றன. ஏனெனில் அவர்கள் "ஒரு வலுவான நபரை" விரும்புகின்றதுடன், அரசியல் பிளவுகளுக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும், அடுத்து எந்த அராசங்கம் வந்தாலும், எவர் அதற்குத் தலைமை தாங்கினாலும், அது சர்வதே நாணய நிதியம் ஆணையிடும் கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்ப்பந்திக்கப்படும்.

இராஜபக்ஷவே வரவிருக்கும் "ஒரு பொருளாதாரப் போர்" பற்றி பேசியுள்ளார். இது தொழிலாள வர்க்கத்தின் மீது முழுமையாக நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் பாரிய சமூக நலச்செலவுக் குறைப்புக்களுக்கு மாற்றுப் பெயர் ஆகும்.

பொன்சேகாவின் ஜனாதிபதியாகும் முயற்சிக்கு தீவிர தேசியவெறி ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) யின் ஆதரவும் உண்டு. இக்கட்சி நீண்டகாலமாக இலங்கையின் முதலாளித்துவத்திற்கு உதவும் வகையில் தொழிலாள வர்க்கத்தை இனவாத வகையில் பிரித்துள்ளது. இனவாதப்போரை மீண்டும் தொடக்கி, நடத்தியபோது அது இராஜபக்ஷவுடன் சேர்ந்திருந்தது. கொழும்பை தளமாகக் கொண்ட சிங்கள உயரடுக்கின் அதிகாரப் பகிர்வுடனான தீர்வு எதையும் ஆக்கிரோஷமாக எதிர்க்கும் பிரிவுகளில் ஒன்றாகும்.

இலங்கை முதலாளித்துவத்தின் முக்கிய பிரிவுகள் பொன்சேகாவிற்கு கொடுத்துள்ள ஆதரவிலுள்ள முக்கியமான காரணி, மரபார்ந்த நட்பு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் இருந்து விலகி இராஜபக்ஷ சீனாவிற்கு மிக நெருக்கமாகச் சென்றுள்ளார் என்ற அவர்களின் கவலையாகும்.

2008 கடைசியில் அது பெற்ற பேரழிவு தரக்கூடிய தோல்விகளை எதிர்கொள்ளும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கிய மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெறும் நீண்டகால முயற்சிகளை தீவிரப்படுத்தியது என்பது குறிப்பிடப்பட வேண்டும். அது, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் மூலம் நிறைய ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, தங்கள் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோரின் புகைப்படங்களையும் சுமந்தனர். இந்த ஏகாதிபத்திய சக்திகள் தமிழ் மக்களின் உதவிக்கு வருவதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று கருதினர்.

இது ஒரு பிற்போக்குத்தன பொறியாயிற்று. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை இலங்கையில் சீனாவின் பெருகிய மூலோபாய அக்கறைகள் பற்றி கவலை கொண்ட மேற்கத்தைய சக்திகளின் உதவியுடன் பரந்துபட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் இழப்பில், சிங்கள முதலாளித்துவத்துடன் ஒருவிதத்தில் இணக்கம் காணமுடியும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருந்தது.

சிதைந்துகொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு அமைப்பின் எந்தப் பிரிவும் பொன்சேகாவிற்கு (Tamilwin) மற்றும் பிற தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு வலைத் தளங்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகமானோர் கொடுக்கும் ஆதரவைக் குறைகூறவில்லை. இது தமிழ் மக்களை தங்கள் நம்பிக்கையை பொன்சேகா மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்து ஊக்குவிக்கும் இலங்கை முதலாளித்துவத்திடம் நம்பிக்கை வைக்க ஊக்கம் கொடுப்பதில் அவற்றுள் எதற்கும் அடைப்படை வேறுபாடு கிடையாது என்பதைத் தெளிவாக நிரூபிக்கிறது.

வாஷிங்டன் ஆளும்தட்டுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் வி. ருத்திரகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவிற்கு தலைமை தாங்குகிறார். அவருடைய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ருத்திரகுமாரன் தேர்தல்கள் பற்றி ஏதும் கூறவில்லை. ஆனால் தான் அமெரிக்க ஆதரவை நாடி நிற்க முயல்வதாகவும், அவர் வளர்க்கும் தமிழீழ இடைக்கால அரசாங்கம் "தெற்கு ஆசியாவில் மாறிவரும் புவி-அரசியல் மூலோபாயச் சூழ்நிலையை கருத்திற் கொண்டிருப்பதாகவும்" கூறினார்.

நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, பிரிட்டன் என்ற நாடுகளில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய பிரிவுகள் தமிழ் குடிபெயர்ந்தோர் விருப்பத்தை அறிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், இது 1976 "வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தின்" வழிகாட்டுநெறிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளன. இத்தீர்மானம் முதலில் இலங்கையை இனவழியில் பிரிக்க வேண்டும் என்று கூறியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இப்பிரிவுகள் ஜனாதிபதி தேர்தல் பற்றி மௌனம் சாதிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தனும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரில் பலரும் பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு எதிர்த்தரப்பு தலைமையில் வரக்கூடிய அரசாங்கத்திடம் நலன்கள் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஆனால் 2001ல் முதலாளித்துவக் கட்சிகள் நிறுவிய கூட்டணியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உண்மையில் ஜனாதிபதி தேர்தலில் நான்கு விதங்களில் பிளவுற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஸ்ரீகாந்தாவின் தலைமையில் உள்ள குழு தன் ஆதரவை இராஜபக்ஷவிற்கு கொடுத்துள்ளது. ஸ்ரீகாந்தா விரைவில் பாராளுமன்றத்தில் அரசாங்கப் பிரிவுகளுன் சேர்ந்துவிடுவார் என்று வதந்திகள் உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் தேர்தலில் நடுநிலை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பிரிவிற்குத் தலைமை தாங்குகிறார். மற்றொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளராக நிற்பதுடன், நவ சமஜமாஜ கட்சியுடன் (NSSP) விருப்பு வாக்கு கூட்டைக் கொண்டிருக்கிறார். இடது எனக் கூறிக்கொள்ளும் நவ சமஜமாஜ கட்சி நீண்டகால சந்தரப்பவாத தந்திரோபாயங்களுக்கு பெயர் பெற்றது. ஒரு காலத்தில் இது ஒரே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஆதரவைக் கொடுத்தது.

சிவாஜிலிங்கம் ஒரு அப்பட்டமான இனவாத அரசியல்வாதியாவார். இந்தியாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி, ஹிந்து மேலாதிக்கவாதக் கட்சி, மற்றும் வெட்கமற்ற வகையில் பெருவணிக சார்பு பாரதீய ஜனதாக் கட்சியுடன் (BJP) நெருக்கமான தொடர்புகளை கொண்டவர். கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின் போது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரச்சார மேலாளராக இவர் இருந்தார் என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சி கூறக்கூடிய அளவிற்கு அத்தொடர்புகள் நெருக்கமாக இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியவாத, முதலாளித்துவ சார்பு முன்னோக்கு தமிழ் மக்களை அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான உண்மையான போராட்டத்தின் நண்பர்களான இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் இருந்து பிரித்து ஒரு மோசமான முட்டுச்சந்தினுள் இட்டுச்சென்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்கள் தமிழர்கள் ஒரு தீவிர புதிய முன்னோக்கை கைக்கொள்ளவேண்டிய அவசரமான தேவையை நிரூபணம் செய்துள்ளன.

இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸ் முன்னெடுத்த பிரச்சாரத்தின் முக்கியத்துவம் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் இறுதித் தேர்தல் அழைப்பு பின்வருமாறு விளக்கியது: "எல்லாவற்றிகும் மேலாக, புலிகளின் இராணுவத் தோல்வியானது தனியான முதலாளித்துவ தமிழ் அரசுக்கான அதன் முன்நோக்கின் அரசியல் வங்குரோத்தின் விளைவேயாகும். அதன் இனவாத அரசியல், ஜனநாயகவிரோத வழிமுறைகள் மற்றும் பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த மட்டுமே உதவியதோடு புலிகளை சிங்கள மக்களிடம் இருந்து மட்டுமன்றி தமிழ் வெகுஜனங்களில் இருந்தும் துண்டித்து விட்டது. தமிழ் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தனியான தீர்வு கிடையாது. முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் பகுதியாக மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும்.....

"26 ஆண்டுகாலமாக நடைபெற்ற போரை இடைவிடாமல் எதிர்த்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி தான் வடக்கில் இருந்தும் கிழக்கில் இருந்தும் துருப்புக்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிய ஒரே கட்சியும் இதுதான்.

"இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவுகட்டுமாறும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் சகல ஒடுக்குமுறை சட்டங்கைளயும் அகற்றுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கும். எமது முன்நோக்கு பாராளுமன்ற சூழ்ச்சித் திட்டங்களை அடிப்படையாக கொண்டதல்ல. மாறாக, சோசலிச முறையில் சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்ப தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற வெகுஜனங்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடிப்படையாக கொண்டது. தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான எமது அழைப்பின் அர்த்தம் அதுவே."


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com