Thursday, January 28, 2010

தமிழர்களுக்கு மேலும் அதிகாரம் : வெற்றிக்களிப்பில் ராஜபக்ஷே பேட்டி

"தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். தமிழர்களுக்கு மேலும் அதிகாரம் வழங்கப்படும்' என, அதிபர் ராஜபக்ஷே வாக்குறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே, அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, பார்லிமென்ட் தேர்தலையும் விரைவில் நடத்த, ராஜபக்ஷே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷே, செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி: அதிபர் தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடந்து முடிந்துள்ளது. அவசர நிலை தொடர்பான விதிமுறைகள் படிப்படியாக நீக்கப்படும்.

இருந்தாலும், இந்த விஷயத்தில் அவசரம் காட்ட மாட்டோம். பார்லிமென்ட் தேர்தலும் விரைவில் நடத்தப்படும். இதற்கு பின், தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டம் குறித்து, தமிழர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனைக்கு பின், தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான புதிய அரசியல் திட்டம் அறிவிக்கப்படும். தமிழர் பகுதிகளில் எனக்கு ஓட்டு குறைவாக விழுந்துள்ளது குறித்து கேட்கப்படுகிறது. எனக்கு ஓட்டு விழுந்துள்ளதோ, இல்லையோ, அவர்கள் ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளித்ததே பெரிய விஷயம் அல்லவா? பல ஆண்டுகளாக ஓட்டளிக்க விடாமல் அவர்கள் தடுக்கப்பட்டு இருந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட அதிகார பகிர்வு அளிக்கப்படும்.

இலங்கைக்கு எப்போதுமே இந்திய அரசு உதவி செய்து வந்துள்ளது. தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பான, புதிய அரசியல் திட்டத்துக்கும், இந்தியா ஆதரவு அளிக்கும் என, நம்புகிறேன். இது, இலங்கையின் உள்நாட்டு விஷயம் என்பதை இந்தியா நன்றாக உணர்ந்துள்ளது என்று எனக்கு தெரியும். இருந்தாலும், இந்தியாவை சார்ந்து தான், நாங்கள் உள்ளோம். தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் எந்த விஷயமாக இருந்தாலும், அது, பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை பெற்றதாக இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த திட்டம் செயல்படாது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியபோது, இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சிலர் என்னை கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர்களின் விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில், தற்போது மக்கள் எனக்கு பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். பயங்கரவாதத்தில் இருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும், இலங்கை மக்களுக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது. இதற்காகவே, எனக்கு ஓட்டளித்துள்ளனர்.

என்னை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் பயப்படுவதற்கான எந்த அவசியமும் இல்லை. தேவையில்லாமல், அவர் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. இலங்கை மக்கள் அனைவரும், கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அமைதிக்கான புதிய தொடக்கமாக, இந்த தேர்தல் வெற்றியை கருதுகிறேன். இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

பார்லிமென்ட் தேர்தல்: இலங்கை அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் லூசியன் ராஜகருணாநாயகே கூறுகையில், "அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, விரைவில் பார்லிமென்ட் தேர்தலை நடத்தவும் அதிபர் ராஜபக்ஷே திட்டமிட்டுள்ளார். இதற்கு வசதியாக, விரைவில் பார்லிமென்ட் கலைக்கப்படும்' என்றார். இருந்தாலும், தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. தற்போதைய பார்லிமென்டின் பதவிக் காலம், வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிகிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, இலங்கை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் பொது விவகாரங்களுக்கான துணை அமைச்சர் கிரவுலி, "பெரும்பாலான மக்கள், தேர்தலில் பங்கேற்று ஓட்டளித்துள்ளது, பாராட்டத்தக்கது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஒரு சில வன்முறை சம்பவங்கள் தவிர, மற்றபடி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது' என்றார்.

நன்றி தினமலர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com