Saturday, January 23, 2010

அரசு நல்ல முடிவு எடுக்கும்: நளினி நம்பிக்கை

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை அவரது வக்கீல்கள் துரைசாமி, ராஜ்குமார், இளங்கோ ஆகியோர் நேற்று சந்தித்த பொழுது அரசு நல்ல முடுவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் வக்கீல் துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட அறிவுரைக்குழு 20ம் தேதி நளினியிடம் விசாரணை நடத்தியது. சுமார் 150 கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்த அறிக்கையை மறுநாளே அரசுக்கு அனுப்பி வைப்பதாக நளினியிடம் கூறியுள்ளனர். கமிட்டியிடம் 12 பக்க மனு ஒன்றையும் நளினி அளித்துள்ளார். அறிவுரைக் குழு பரிந்துரையின் அடிப்படையில் 2 அல்லது 3 வாரத்துக்குள் விடுதலை குறித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என நளினி எதிர்பார்க்கிறார்.

நளினியை விடுதலை செய்வது குறித்து அறிவுரைக்குழுவின் பரிந்துரையை அரசு அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நளினி விடுதலை செய்யப்பட்டால் வெளியில் அவருக்கு போதிய பாதுகாப்பு உள்ளது. நளினியின் தாயார், தம்பி உள்ளனர். விடுதலை செய்தால் தமிழகத்திலேயே இருப்பதா? அல்லது இலங்கைக்கு செல்வதா? என்பதை நளினி இன்னும் முடிவு செய்யவில்லை.

நளினி விடுதலை குறித்து கருத்து சொல்ல தங்கபாலு மறுப்பு
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி நளினியை விடுவிப்பது தொடர்பாக கருத்து சொல்ல முடியாது என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் கட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். கட்சித் தேர்தலில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து வெளிப்படையாக நடத்தப்படும்.

உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை பரிசீலிக்க மாவட்ட அளவில் தேர்தல் சீராய்வு குழு அமைக்கப்படும். பின்னர், உறுப்பினர் பட்டியல் வெளியிடப்பட்டு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். டிசம்பர் 31ம்தேதி வரை விண்ணப்பித்தவர் மட்டுமே இந்த தேர்தலில் கலந்து கொள்ள முடியும்.

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி நளினியை விடுவிப்பது தொடர்பாக, அறிவுரைக்கழக அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட உள்ளது. இதில் அரசு முடிவெடுத்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை அதுபற்றி கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு தங்கபாலு கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com