Wednesday, January 20, 2010

தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன்

ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழ் மக்கள் அதிகூடிய வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவது உறுதி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்றுவரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதானமாக வாழும் சூழல் காணப்படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

வடக்கு, கிழக்கு என்று பிரிக்காமல் முழு நாட்டுக்கும் தேவையான சகல விடயங்களையும் ஜனாதிபதி தனது மஹிந்த சிந்தனையிலும், அதன் தொலை நோக்கத்திலும் தெளிவாக கூறியுள்ளார்.

சகல தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் நிச்சயமாக உரிய தீர்வு தமிழ்மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும். இதற்குத் தேவையான திட்டத்தை ஜனாதிபதி வகுத்துள்ளார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தத்தை வெற்றிகொள்ள முடியாது என்றனர். நாங்கள் அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

சம்பந்தன் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மேடைகளில் கூற தயாராக இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் சுசில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com