Saturday, January 16, 2010

தாய்லாந்து ஐ.டீ.சி சிறைச்சாலையிலுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்..

தாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் (ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள) எதிர்வரும் 18ம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

பல வருடங்களாக ஐ.சீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர்.

மேற்படி கைதிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வௌவ்வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்களின் நிலைமைகள் மற்றும் விடுதலை தொடர்பிலும், இவர்கள் முன்னெடுக்கவிருக்கும் உண்ணாவிரதம் பற்றியும் மனித உரிமை நிறுவனம், தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம், ஜெனீவா யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம். சிறுவர் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் அவர்களைச் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாத நிலையில், இன்றையதினம் (15.01.2010) மாலை 5.00மணியளவில் தாய்லாந்திலுள்ள மனித உரிமைகள் நிறுவன அதிகாரிகள் சிறையிலுள்ள ஆண், பெண், சிறுவர்கள் என அகதிகள் அனைவரையும் சென்று பார்வையிட்டு அவர்கள் முன்னெடுக்கவுள்ள உண்ணாவிரதம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர்.

அவ்வாறு உரையாடியுள்ள போதிலும், உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றியோ அல்லது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டாமென்றோ தெரிவிக்காத இவர்கள் உண்ணாவிரதத்திற்கான காரணங்களை நிவிர்த்திப்பது தொடர்பிலும் எந்தவித அறிவித்தலையோ கருத்துக்களையோ தெரிவிக்காது திரும்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான நிலைமையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 18.01.2010 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமென தாய்லாந்து சிறையிலுள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com