Tuesday, January 26, 2010

குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு

டில்லியில் 61வது குடியரசு தின விழா கோலாகலாம் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை காண பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக வந்திருந்தனர். வழக்கமாக கொடியேற்றம் நடந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் மீது பூ தூவப்படும். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த ஆண்டு மலர் தூவும் முறை கடைபிடிக்கப்படவில்லை.

அமர்ஜவானில் அஞ்சலி : டில்லி இந்திய கேட் பகுதியில் இருக்கும் அமர் ஜவான் நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங், முப்படை தளதிகள் உள்ளிட்டோர் நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பிரதமர் அமர்ஜவான் இரங்கல் குறிப்பில் கையெழுத்திட்டார்.

சிறப்பு விருந்தினர் : இன்றைய குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தென் கொரிய அதிபர் லி முய்ங் பாக் இந்தியா வந்திருந்தார். விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுடன் வந்த தென் கொரிய அதிபர் லீ முய்ங் பக்கை பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்கி வரவேற்றார்.

கொடியேற்றம் : குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரும், ஜனாதிபதியும் மேடைக்கு வந்ததும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 21 குண்டுகள் முழுங்க மிரயாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீரதீர செயல்க‌ள் புரிந்த வீரர்களுக்கு அசோக சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

ராணுவ தளவாடங்கள் அணிவகுப்பு : வீரர்களுக்கு விருது வழங்கப்பட்ட பிறகு ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு நடந்தது. ராணுவ அணிவகுப்பை லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் ஓபராய் தொடங்கி வைத்தார்.விஜய் சவுக் பகுதியில் தொடங்கி 8 கி.மீ., தூரத்துக்கு முப்படையினரும் பிரமாண்டமாக அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மறியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் படை பராக்கிரமாங்கள் அணிவகுப்புக்குப் பிறகு பல்வேறு படை பிரிவு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

ஐ.என்.ஷிவாலிக் கம்பீர அணிவகுப்பு : இந்திய கடற்படை அணிவகுப்பில், ஐ.என்.ஷிவாலிக் போர் கப்பல் கம்பீரமாக அணிவகுத்து டப்தது. ஐ.என்.எஸ்., ஷிவாலிக் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.

கலாச்சார பாரம்பரிய நடனங்கள் : இந்தியாவின் ‌கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்திய மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. முதலில் வடகிழக்கு மாநிலங்களில் அலங்கார ஊர்திகள் வந்தன. அவற்றை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில அலங்கார ஊர்தி வந்த போது, விழாவை காண வந்திருந்த அம்மாநில முன்னாள் மதல்வர் பரூக் அப்துல்லா அலங்கார ஊர்தியை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். 21 மாநிலங்களின் கலாரச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இது தவிர பள்ளி குழுந்தைகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.

டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரையிலான பாதை நெடுகிலும் 18,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அணிவகுப்பைக் காண கடும் குளிர், பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

பர்னாலா கொடியேற்றினார்:


சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து மலர் தூவியது.

கடற்கரை சாலையில் நடந்த இந்த விழாவில் முப்படை வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வந்தன.

தொடர்ந்து வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. வேன் விபத்தில் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த நாகப்பட்டினம் ஆசிரியைக்கான விருதை அவரது தந்தை மாரியப்பன் பெற்றுக்கொண்டார்.

ஆற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப உதவியாளரான மதுரையைச் சேர்ந்த கண்ணனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பேகம்பூர் மொய்தீனுக்கு வழங்கப்பட்டது.

மதுவிலக்கை சிறப்பாக அமல்படுத்தியதற்கான உத்தமர் காந்தி அடிகள் காவலர் பதக்கம் திருச்சி மாவட்ட அமலாக்க பிரிவு கூடுதல் சூப்பிரண்டு நாகராஜன், தர்மபுரி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு விவேகானந்தன், டி.எஸ்.பி.சீனிவாசன், விழுப்புரம் இன்ஸ்பெக்டர் தெய்வசி காமணி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைக் காண பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.

மாவட்டத் தலைநகரங்களில்...

இதேபோல மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
அழுக்கு படிந்த தேசியக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்!
அழுக்கு படிந்த தேசியக் கொடியை டிராக்டர் டிராலியை மேடையாக வைத்து, கொடியேற்று விழா நடத்திய அமைப்பினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பாடாலா நகரில் பஞ்சாப் ஸ்டேட் மார்கெட்டிங் ஃபெடரேஷன் சார்பில் குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

கொடியேற்று விழாவின் போது, மூவர்ண தேசியக் கொடி மிகவும் அழுக்கடைந்து காணப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு டிராக்டர் டிராலியை வைத்து அதையே மேடையாக்கி கொடியேற்று விழாவை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

மூவர்ண கொடியை அழுக்காக வைத்திருந்தது மற்றும் மற்றும் கொடி மேடை சட்ட வரைமுறைக்கும் குறைவாக மிகச்சிறிய அளவில் இருந்தது போன்ற விதிமீறல்கள் நடந்துள்ளதாக விழா அமைப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாடாலா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ராகுல் சாபா இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com