Saturday, January 23, 2010

தென்பகுதி மக்களின் ஒத்துழைப்பே பயங்கர வாதத்தை ஒழிக்க காரணமானது. ஜனாதிபதி

தென் பகுதி மக்களின் ஒத்துழைப்பும், சகிப்புத் தன்மையும் கிடைத்திராவிட்டால் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நிட்டம்புவவில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் நிட்டம்புவ பொது மைதானத்தில் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், அத்தனகல்ல, ஹொரகல்ல பண்டாரநாயக்காகளுக்கும், கிருவாபத்துவே ராஜபக்ஷகளுக்கும் இடையிலான நட்புறவு நேற்று இன்று ஆரம்பமானதல்ல. இவ்வுறவு ஏழு தசாப்த கால வரலாற்று முக்கியத்துவம் மிக்க நட்புறவாகும். அதனால் அத்தனகல்ல எமக்குப் புதிய இடமல்ல. நான் அத்தனகல்லைக்கு வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது பிறந்த ஊரான பெலியத்தவுக்குச் செல்லுவது போன்றே உணருகின்றேன். அந்தளவுக்கு அத்தனகல்ல மக்கள் எமக்கு நெருக்கமானவர்கள்.

அன்று 1952ம் ஆண்டில் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க் கட்சிக்கு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க சென்ற போது அவருடன் நிழலாக எனது தந்தையான டி. ஏ. ராஜபக்ஷ சென்றார். அன்று முதல் அத்தனகல்லவுக்கும், பெலியத்தவுக்குமிடையில் நட்புறவு ஆரம்பமானது.

1967ல் எனது தாயை முன்னாள் மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா சந்தித்த சமயம் பெலியத்த தொகுதிக்கு அமைப்பாளராக நியமிக்க எமது குடும்பத்திலிருந்து ஒருவரைக் கேட்டுக் கொண்டார். அதற்கேற்பவே நான் பெலியத்தை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஆரம்ப அரசியல் பாடத்தைக் கற்றுத் தந்த மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை எனது தாய்க்கு சமமாக மதிக்கின்றேன்.

நான் 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது நாடு பிளவுபட்டிருந்தது. இதற்கு ரணில் -பிரபா உடன்படிக்கை வழி சமைத்திருந்தது. புலிப் பயங்கரவாதிகள் தனியான பொலிஸ், இராணுவம், விமானப்படை, கடற்படை கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் தனியான வங்கியைக் கொண்டிருந்தனர். தென் பகுதித் தலைவர்கள் பிரபாகரனைப் பயங்கரவாதி எனக் கூறத் தயங்கினர். அவரை விடுதலை வீரராகக் கருதினர். நாடு இன, மத, குல ரீதியாகப் பிளவுபட்டிருந்தது. பாராளுமன்றத்தில் எமக்கு சபாநாயகரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத நிலமையே காணப்பட்டது.

இதேகாலப் பகுதியில் உலக உணவு நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்பன ஏற்பட்டன. இருந்தும் இவை அனைத்தையும் சிறந்த முறையில் முகாமை செய்து ஒரே முறையில் 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு வழங்கினோம். உர மானியம் வழங்குகின்றோம். அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 8 இலட்சத்திலிருந்து 12 இலட்சம் வரை அதிகரித்தோம்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அதனால் கிராம மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் அறிவேன். அதற்கு ஏற்ப செயற்படுகின்றேன். கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கிராமங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டில்லை. ஆனால் இலங்கை எப்போதும் ஒற்றையாட்சி நாடாகும். இதற்கு சவாலாக எதுவும் அமையவே முடியாது. அதற்கு நாம் இடமளியோம்.

திருட்டு உடன்படிக்கைக்காக எதிரணியினர் வாக்குக் கேட்கின்றனர். அந்த உடன்படிக்கைக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்து தென்பகுதியில் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவாக இவ்வளவு வீதத்தினர் உள்ளனர் என்று உலகில் எடுத்துச் செல்ல அவர்கள் முயற்சி செய்கின்றனர். இது பெரும் கவலைக்குரிய நிலைமையாகும். இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் விஷேட கவனம் செலுத்தி பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஐ. ம. சு. மு. ன் வெற்றிலை சின்னத்தின் அமோக வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பண்டு பண்டாரநாயக்கா, மேர்வின் சில்வா, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, எம்.பி அம்ஜானா உம்மா, உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com