Wednesday, December 30, 2009

தேர்தல் ஆணையாளரின் பிரதிநிதிகள் நேற்று கிளிநொச்சி விஜயம்

இடம்பெயர்ந்தோருக்கு வாக்குச்சாவடி அமைப்பது பற்றி ஆராய்வு
இடம்பெயர்ந்தோர் மற்றும் மீளக்குடியமர் த்தப்பட்டவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் விதத்தில் வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து ஆராயவென தேர்தல் ஆணையாளரின் பிரதிநிதிகள் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ். சென்றுள்ள மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ. எம். சிறிவர்தன, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன், இடம்பெயர்ந்தோருக்கென தேர்தல் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசேட பிரதிநிதி திரு. சண்முகம் ஆகியோர் நேற்று முன்தினம் யாழ். கச்சேரியில் விசேட கூட்டமொன்றையும் நடத்தினர்.

அத்துடன், யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன், மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ. எம். சிறிவர்தனா, தேர்தல் ஆணையாளரின் விசேட பிரதிநிதி திரு. சண்முகம் ஆகியோர் நேற்று கிளிநொச்சிக்குச் சென்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத் தீவு மாவட்டத்திலும் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ள மக்களுக்கு வாக்களிப்பு நிலையங்களை கொத்தணி முறையில் அமைப்பதா? அல்லது தனித்தனியாக அமைப்பதா? என்பது பற்றியும் ஆராயவுள்ளனர். அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள எனினும் தேசிய அடையாள அட்டைகள் இல்லாத வாக்காளர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்காக கிராமசேவகர்கள் தமது அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இருக்க வேண்டும் என்ற பணிபுரையைத் தேர்தல் ஆணையாளர் வழங்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் விசேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்க கிராம சேவகர்கள் அலுவலகங்களில் இருக்கவேண்டும். இதற்கான பணிப்புரையை தேர்தல் ஆணையாளரே கிராம சேவகர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையாளருக்கு பெப்ரல் அமைப்பு கடிதமொன்றையும் எழுதியுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com