பார்வைக்கு அது விடுதலை இயக்கம்
புலிகள் இயக்கம் ஒருசினிமாக்கம்பனி என்று நண்பர்களோடு பலதடவை கருத்துப்பரிமாறியிருக்கிறேன். வெளிப்பார்வைக்கு அது விடுதலை இயக்கம் ,போராடும் இயக்கம் என மயக்கமிருந்தாலும் அதனை சினிமாவோடு ஒப்பிடுவோர்க்கு அல்லது தீவிரமான நமது சினிமா ரசிகர்களுக்கு அது சினிமா கம்பனியேதான் என முடிவிற்கு வருவதற்கு சிரமமிராது.
அந்தோ!! அயல் சினிமா ரசிகர்கள் ஆனையிறவுத்தாக்குதலையும் சினிமாவைப்போலவே கண்டுகளித்தனர். சினிமா ரசிகர்களை அயலில் திருப்தி செய்வதற்காகவே அவர்கள் தாக்குதலில் ஈடுபடவும் கொப்பி தயாரித்து அனுப்பவும் வேண்டியிருந்தது.
மகேந்திரன்,சீமான் ,பாரதிராஜா,விஜயகாந்த் போன்றோர் புலிகளின் அல்லது பிரபாகரனின் ரசிகர்களாக இருப்பது ஒரு சுவாரசியமான அவதானம்!
தீவிர சினிமா ரசிகரான ஜமுனா ராஜேந்திரன் புலிகளின் ஈழமுரசு பத்திரிகையில் கமல்ஹாஸன் சினிமா,பாரதிராஜா சினிமா ,மணிரத்தினம் சினிமா,சமாந்தர சினிமா என மேலும் அவர்களுக்குப் பரிந்துரை செய்திருந்தார்.
அ.ரவியும். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்கூட தமிழ்ச்சினிமா குறித்து அவர்களுக்கு எழுதவேண்டியிருந்தது.
கடைசியில் இந்த இயக்குனர்திலகங்கள் தங்களைக் காப்பாற்றும் என ஐந்துலட்சம் சனத்தையும் அவர்கள் அடைத்துவைத்தார்கள்.
தந்தை பெரியார் இதை அப்போதே முன்னுணர்ந்து கூறினார்,
நம்மைப்பிடித்த ஐந்து நோய்கள் என பார்ப்பானுக்கு அடுத்ததாக அவர் சினிமாவை நிறுத்துகிறார்.சினிமா கிளைமாக்ஸில் அதியுச்ச பரவசம் அடையும் பார்வை மனோபாவத்திற்கு அவர்கள் மே- 18 வரை காத்திருக்கவேண்டியதாயிற்று.
உலகத்தில் வேறெந்த நிகழ்வுகளுமே அல்லது சினிமாவுமே தமிழ்ப்பார்வையாளர் மனோபாவத்திற்கு இவ்வளவு உச்சபட்ச கிளர்ச்சி அனுபவத்தைத் தந்திராது.
மக்களைப் பார்வையாளர் மனோபாவத்திலேயே இருபத்தைந்து வருடங்களாக வலுக்கட்டாயமாக வைத்திருக்கும் நிலைக்கு அவர்கள் இருபத்தைந்து வருடமாக சினிமா ஓட்டவேண்டிய நிலை இருந்தது.
"கிளிநொச்சி" என்றே ஒரு படம் தயாரிக்க தலைப்பிட்டிருந்தார்கள்.
'டைட்டில் சாங்' வேறு யார் வைரமுத்துதான்;
ஏறத்தாள 2000 வரையான சினிமா சிடி கள் பிரபாகரனிடம் இருந்ததாகவும்
அதில் சிலதை தனக்குத் தந்ததாகவும் மகேந்திரன் தனது பேட்டியொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
2000 சினிமா சிடி களைப்பார்ப்பது ஒருவகையில் சாதனை என்றே சொல்லவேண்டும். ஆகவே 2000 சினிமா சிடிக்களைப் பார்த்த ஒருவர் என்ற சாதனை பிரபாகரனுக்கு எப்போதும் உண்டு.
இடைக்காலத்தில் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருக்கும்போது சினிமாவில் நடிக்கவைக்க பல இயக்குனர்கள் அவரை அணுகியதாக பத்திரிகை ஒன்றில் படித்தது நினைவுக்கு வருகிறது.
ஒத்துக்கொண்டிருந்தால் வன்னிக்கு வந்தது வந்தது ஒருசில படங்களோடு போயிருக்கும்.
மூன்றரை லச்சம் சனம் அகதிமுகாமில் இருந்திருக்கவேண்டிய நிலை வந்திராது.
ஒரு லச்சம் சனம் சாகவேண்டி வந்திராது.
தொல்.திருமாவளவன் பிரபாகரனின் ரசிகராயிருந்து சினிமாவில் நடிக்கவில்லையா!
தனது சினிமாவைப் பார்க்கமுடியாத மக்களுக்கு துப்பாக்கியை மார்போடணைத்து
இரண்டு தோள்களையும் சுற்றிவர துவக்கு ரவைகளை சங்கிலிமாதிரி சுற்றி தமிழ்நாடெங்கும் திருமா போஸ்டர் ஒட்டவில்லையா!
"திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதாக இருந்தால் ஆணுறை பாவியுங்கள்" என்று பகுத்தறிவோடு நடிகை குஸ்பு சொன்னபோது இந்த சினிமாக்கும்பல் அவரை என்னபாடு படுத்தியது.
சினிமா பாடலாசிரியர் அறிவுமதி புகலிடத்தில் புலிகளின் மேடைகளை பங்குபோட்டார்,தங்கர் பச்சான் போராட்டத்தைப்பற்றிப் படம் தயாரிக்கமுயன்றார்,
ஆனால் புலிகளின் விசுவாசியான வ.ஐ.ச.ஜெயபாலன் நேரடியாகவே சினிமாவுக்குள் இறங்கிவிட்டார். அப்படியாகத்தானே தமிழ்நாடு, ஐரோப்பிய நாடெங்கும் பிரபாகரன் படமும் திருமாவளவன் படமும் ,விஜயகாந்த் படமும் சுவர்களையெல்லாம் மே- 18 வரை மறைத்துக்கொண்டிருந்தன.
'கப்டன் பிரபாகரன்' என்ற படமே புலிகள் இயக்கம் சினிமா தரும் பார்வைநிலை பொழுதுபோக்கிற்கப்பால் வேறெதையும் மேலதிகமாக தரப்போவதில்லை என்ற அறிவிப்பைத்தானே செய்தன!
சினிமாவிலேயே அவர்கள் நிறைய முதலீடுகளை செய்துள்ள செய்திகள் வந்தன.
ஐரோப்பிய அமெரிக்க மற்றும் புகலிட நாடுகளின் சினிமா சிடி ,பாட்டு சிடி மற்றும் அவர்களது 'லுன் இன்ரனசனல்' போன்ற சினிமா வர்த்தக கடைகள் எல்லாம் அவர்கள் அப்பழுக்கல்லாத சினிமாக்கொம்பனி என்ற மதிப்பீட்டைத்தானே தந்தன.
யாழ்ப்பாணத்தின் சினிமா கலாச்சாரமும் புலிகளின் சினிமாக்கலாச்சாரமும் வேறுவேறல்ல.
பாதி சினிமாவில் எழுந்துபோகும் பார்வையாளர்களைப்போல் யாழ்ப்பாணத்தார்
பாதியிலேயே வெளியே வந்துவிட்டார்கள்.
சினிமாப்பாத்திரங்கள் வரமுடியுமா?
வரமுடியாதே!!!
சீமானின் ஆனந்தவிகடன் பேட்டி அதைத்தான் சொல்கிறது.
பிரபாகரனின் யாழ் மையவாதம்
****************************
சீமானின் பேட்டியிலிருந்து:
"விஜய் பற்றிப் பேசிட்டு இருந்தப்ப, ‘யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்’ என்று நினைவுபடுத்திக்கொண்டார். ‘பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே’ என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.. அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ மாதிரி ஈழப்போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது".
0 comments :
Post a Comment