Monday, September 21, 2009

நாடுகடந்த தமிழீழம் தாயக உறவுகளின் துயரினை போக்குமா? கனடாவில் புளொட் துண்டுபிரசுரம்!

நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் என்று புலிகள் கோரியபோது அங்கே வந்திருந்த புளொட் உறுப்பினர்களும் நாங்களும் ஜனநாயக முறையில் எமது கருத்துக்களை மக்களுக்கு தெளிவுட்டவே வந்துள்ளோம் என்று தெரிவித்து தாங்கள் கொண்டு வந்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகம் செய்தனர்.

அத் துண்டு பிரசுரங்களை வாங்கி கொண்ட மக்கள் இப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் கனடாவில் பிறந்துள்ளது என்றும், இதில் கூறப்பட்ட விடயங்களில் எந்தவொரு தவறினையும் காணவில்லை. நடந்த சம்பவங்களையும், தமிழீழம் என்ற பெயரில் மக்களிடம் சேகரித்த பணங்கள் தனிநபர் கைகளில் சிக்கியுள்ளதையும், தமிழீழத்திற்காக தம்முயிரை அற்பணித்த மாவீரர்கள் அவர்தம் குடும்பங்கள் வறுமையிலும், துன்பத்திலும் வாடும்போது இந்த பணம் அந்த மக்களை சென்றடையாமல் இங்கே வாழும் சில சுயநலவாதிகளின் கைகளிற்கு சென்றுவிடக்கூடாது. இதனைத்தானே புளொட் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர் இதில் தவறு எதுவும் இல்லையே என்று அங்கு கூடியிருந்த மக்கள் பலர் பேசிக்கொண்டதையும் காணமுடிந்தது.

முதன் முறையாக புலிகளின் ஆதரவாளர்களால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது இதுவே கனடாவில் இடம்பெற்ற முதல் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கனேடிய தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான மாற்றமாகும். முக்கள் தங்கள் கருத்துக்களை தாங்களே கூறுவதற்கும், மற்றைய செய்திகள், கருத்துக்கள், விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு விடுக்கப்பட்ட திறவுகோலகவும் அமைந்துள்ளது.

இத்துடன் புளொட் இயக்கத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரால் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் முழுமையான பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.


நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா?

அன்பார்ந்த தமிழ்மக்களே விழிப்பாக செயற்படுங்கள். யார் இந்த நாடுகடந்த தமிழீழத்தை பிரகடனப்படுத்தபவர்கள் என்பதை அறிந்து கொண்டு செயற்படுங்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழம் என்று கூறி நமது இனத்தை, சொத்துக்களை, சொந்தங்களை அழித்துவிட்டு இறுதியில் இங்கிருந்து கொண்டு பிழையாக வழிநடாத்தி விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழித்த இந்த கூட்டத்தினர் இறுதியில் இன்று 'நாடு கடந்த தமிழீழம்' என்ற போலி நாடகத்தை புலம்பெயர் தேசத்தில் அரங்கேற்றி மக்களின் பணத்தை அபகரிப்பதற்காக மேற்கொள்ளும் நாடகமே இந்த புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்ளும் புதிய நாடகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புலம்பெயர் நாடுகளில் தாம் தமது குடும்பம் என்று பாதுகாப்பாக இருந்துகொண்டு எமது மக்களையும், மக்களின் சுயகௌரவத்துடன் வாழ்தலுக்கான போராட்டத்தையும் சிதைவடைய செய்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அந்த மக்களை துன்பபடுத்த மேற்கொள்ளும் அரங்கேற்றங்களே இவ்வாறான அர்த்தமற்ற அறிக்கை போராட்டங்கள். தமிழீழம் என்ற போர்வையில் எமது மக்களை கடந்த இரு தசாப்த காலங்களிற்கு மேலாக உண்மையை பேசவோ, பிழையை தட்டிக்கேட்கவோ, விமர்சனங்களை வெளிப்படுத்தவோ முடியாத ஒர் இனமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒர் இனமாகவே நடாத்திவந்த இந்த கொள்ளை கூட்டம் மீண்டும் மீண்டும் நமது இனத்தை கூறி பிழைப்பு நடாத்துவதற்காகவும், தேடிய சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காக மேற்கொள்ளும் தந்திரங்களேயாகும்.

நமது இனம் சுதந்திரமாக, சுயகௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட எமது மக்களின் விடுதலைப் போராட்டம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் இவ் பிழையான கூட்டங்களின் வழிகாட்டுதலினால் திசைமாற்றப்பட்டு திசை தெரியாமல் இறுதியில் வன்னி மண்ணில் அஸ்தமித்துள்ளது. பணத்தையே கொள்கையாக கொண்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்த கூட்டத்தினர் வடக்கு கிழக்கு எமது தாயக தேசத்தில் என்ன நடக்கின்றது என்பதை சுதந்திரமாக அறிந்து கொள்ளமுடியாத நிலையை உருவாக்கி ஊடக சுதந்திரத்தையே மறுதலித்து சுதந்திரமான செய்திகளை வெளியிட்டுவந்த ஊடகங்களை பயமுறுத்தி ஒர் அச்சநிலையில் வைத்துக்கொண்டே தமது வசூலிப்புக்களை கனேடிய மண்ணில் மேற்கொண்டனர் என்பதை யாவரும் அறிவர்.

கடந்த ஆண்டு ஒரு வருடங்களுக்கு மேலாக வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான உண்மை செய்திகளை மழுங்கடித்து இராணுவத்தின் முன்னேற்றத்தை முறியடித்து போராளிகள் போரிடுகின்றனர் என்றும், அர்த்தமற்ற அரசியல் ஆலோசனைகளை கூறியும் எமது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திய இந்த கூட்டத்தினர் இறுதியில் வன்னியில் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் அழிக்கப்படும்வரை ஊடகம் என்ற பெயரில் உலாவரும் கொள்ளை குழுவினரின் ஊடகங்கள் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். விடுதலை என்ற பெயரில் சிங்கள அரசுகளுடன் புலிகள் கொண்ட இரகசிய பேச்சுக்கள், பேச்சுவார்த்தை நாடகங்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, நினைவுமீட்டி பாருங்கள்.

* 1980ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு காலப்பகுதிவரை சரியானபாதையில் சென்ற எமது மக்களின் விடுதலை போராட்டத்தையும், புலிகளின் விடுதலை பாதையையும் பிழையான பாதைக்கு இட்டுச்சென்றவர்கள்தான் இந்த கூட்டத்தினர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

* 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது மக்களிற்கு கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண அரசையும், 13வது திருத்த சட்டமூலத்தையும் பிரேமதாசா அரசுடன் கூட்டமைத்து குழப்பியவர்கள்தான் இந்த கூட்டத்தினர்.

* 1987ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சகல அரசியல் தீர்வுகளையும், பிரபாகரனையும் விடுதலைப்புலி அமைப்பையும் தூண்டிவிட்டு குழப்பியவர்கள்தான் இவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரபாகரன் தனது பிழைகளை திருத்தி கொள்வதற்கு விடாது தேசியத் தலைவர் என்ற மாஜையான பதவியை கொடுத்து தொடர்ந்து அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பாரிய பிழைகளை இழைக்க தூண்டி பிரபாகரனின் அழிவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவிற்கும் எமது மக்களின் அழிவிற்கும் வழிகோலியவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* தமிழ் மக்களின் ஒப்பற்ற அரசியல் தலைவர், புத்திஜீவிகள், சகல போராளிகள், சக போராளி அமைப்புக்களின் தலைவர்கள், நாட்டு பற்றுக்கொண்ட தமிழ்மக்கள் என எல்லோரையும் புலிகளைக்கொண்டு துரோகி என்ற பட்டம் கொடுத்து அழிப்பதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் மிரட்டியும், ஏமாற்றியும் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை தமது பெயர்களில் வைத்துக்கொண்டுள்ள இவர்கள், அவ் சொத்துக்களை தாமே அபகரிக்க ஆடும் நாடகமே இந்த நாடுகடந்த தமிழீழம் என்பதை மறந்துவிடாதீர்கள். இனியும் இலங்கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் வரவிடாமல் தடுப்பதற்கும், முகாம்களில் அல்லல்படும் எமது தமிழ்மக்களை மேலும் மேலும் துன்பப்பட வைத்து அதில் தமது அரசியல் இலாபம் தேட முயலும் கூட்டமே இவர்கள்.

* இவர்களின் இந்த நடவடிக்கை மூலம் சிங்கள கடும்போக்காளர்களை கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தைக்கொடுத்து எந்தவொரு அரசியல் தீர்வும் இலங்கையில் வராது தடுப்பதன் மூலம் தமிழ்மக்களுக்கு சொந்தமான புலிகளின் சொத்துக்களை தாம் தமது பெயர்களில் தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்கு ஆடும் நாடகமே இது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

* புலிகளிடம் இருந்த சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு புலிகளின் பிழையான போராட்டத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும், புலிகளினால் வலுக்கட்டயாமாக போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பத்திற்கும் அங்கவீனமாக்கப்பட்ட போராளிகளின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டும் என இந்த கூட்டத்திற்கு அந்த பணத்தினை உண்மையான போராட்டத்திற்கு என நம்பி இவர்களிடம் பறிகொடுத்த மக்களாகிய நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்றும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தாமல், அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும், வைத்தியசாலைகளிலும் அல்லும் பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கி, அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்துவோம். கடந்த பல ஆண்டுகளாக ஆயுததாங்கிய போராட்டம் ஊடாக எமது உரிமையை வென்றெடுக்கலாம் என்று நம்பி ஏமாற்றப்பட்டதுபோல் இனிமேலும் ஏமாராது சரியான பாதையில் சரியான இலக்கை நோக்கி செயற்படுவோம்.

சகல சௌபாக்கியங்களுடன் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு எமது மக்களை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்காமல் அவர்கள் பட்டவேதனைகள், துன்பங்களில் இருந்து விடுபட்டு ஒர் மனித இனமாக வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்போம்.


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com