Wednesday, September 2, 2009

அம்பாறைத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தில் விசப்பரீட்சை நாடாத்த முனையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள். விருகோதரன்

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் புதிய கிளை.

எமது காரியாலயத்திற்கு தமிழர்கள் வரவேண்டும் என நான் எதிர்பார்க்க வில்லை. இக்காரியாலயம் அமைக்கப்பட்டதன் நோக்கம் முஸ்லிம் மக்களுக்கு சேவை புரியவே என்கின்றாராம் முதலமைச்சர் பிள்ளையான்.


அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது காரியாலயம் ஒன்றை கடந்தவாரம் நிறுவியுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துடன் இணைந்தவாறு இக்காரியாலயம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பிரவேசம் அங்குள்ள மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை கிளப்பியுள்ளது என்பதை நடந்து முடிந்துள்ள நிகழ்வுகள் நிறுவியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்டத்தினுள் புதிதாக பிரவேசிப்பதை எதிர்த்து அங்குள்ள தமிழ் மக்கள் தமது பூரண எதிர்பை காட்டுமுகமாக ஆர்ப்பாட்டங்களை நாடாத்தி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளனர். குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் த.ம.வி புலிகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு 2000 மேற்பட்டோர் கையொப்பம் இட்ட மகஜர் ஒன்று நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த புத்திஜீவிகள், குழுக்கள் குழுக்களாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் சென்று அம்பாறைத் தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்களை எடுத்துக்கூறுவதுடன், தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பிரவேசமானது அங்குள்ள தமிழ் மக்களை எவ்வாறு அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தி அவர்களை அனாதைகளாக்கும் என்பதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரவேசம் நிச்சயமாக அங்கு கிடைக்கக்கூடிய தமிழ் பாரளுமன்ற பிரவேசத்தை பூச்சியமாக்கும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும், அதன் நிமிர்த்தம் தமது கட்சி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பங்குகொள்ளப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக முதல்வரைச் சந்தித்த புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் தான் தமது கட்சியின் கிளை ஒன்றை அக்கரைப்பற்று முஸ்லிம் கிராம எல்லையில் நிறுவியுள்ளதன் பிரதான நோக்கம் அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு உதவி புரிவதற்காக எனவும், தமிழ் மக்கள் தமது அலுவலகத்திற்கு வரவேண்டும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தாகவும் முதல்வரைச் சந்தித்தி புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்றில் திறக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கிளையில் கணிசமான அளவு முஸ்லிம்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது. தமிழர் தாயகப் பிரதேசம் என குறிப்பிடப்படும் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களில், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியலில் முஸ்லிம்களால் பலவகைப்பட்ட குறிக்கீடுகளும் வஞ்சகங்களும் இடம்பெற்றிருக்கின்றதென்பது வரலாறு.

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது முதலமைச்சர் பதவி என்பது தமிழர் ஒருவர் கைக்குச் செல்லக்கூடாது என பகிரங்கமாக இனவாதத்தை கிளப்பி முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். முஸ்லிம்களின் பிரச்சாரங்களில் காணப்பட்ட தமிழர் விரோத கொள்கைளை தோற்கடிக்கும் பொருட்டே அம்பாறைத் தமிழ் மக்கள் தமிழர் சார்பாக தேர்தலில் குதித்திருந்த தமிழர் மூவரையும் வெற்றியடையச் செய்திருந்தனர். அவ்வெற்றிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அக்கட்சியின் அன்றைய அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்டிருந்த இனியபாரதியின் பங்களிப்பு மிகவும் அமைந்திருந்து.

அம்பாறை தமிழ் மக்கள் உணர்வுடன் செயற்பட்டதனாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியடைய முடிந்திருந்தது. அவ்வாறு தமிழ் மக்கள் மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியீட்ட செய்திருந்த போதும் முஸ்லிம்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லா விற்கே வழங்கப்படவேண்டும் என முரண்பட்டு நின்றிருந்தனர். ஆனால் ஜனாதிபதி கொள்கை ரீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கருதியிருந்ததாலும், அம்பாறை தமிழ் மக்கள் மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்து அவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணிக்கு காட்டியிருந்த ஆதரவிற்கு பிரதியுபகாரமாகவுமே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியிருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால் அரசியலில் தமிழ் மக்களுக்கு உள்ள படுகுழிகளை உணராத பிள்ளையான் தொடர்ந்தும் முஸ்லிம்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக செயற்படுவது துரதிஸ்டமாகவே உள்ளது. இறுதியாக இடம்பெற்று முடிந்துள்ள யாழ், வவுனியா தேர்தல் முடிவுகளை நோக்குகையில் தமிழ் மக்களின் மனநிலையையும் எதிர்வரும் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமோக செல்வாக்கு அம்பாறை மாவட்டத்தில் இல்லை என்று கூறினாலும், ஒரு குறிப்பிடத்தக்களவு விழுக்காடு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. 70000 தமிழ் வாக்காளர்கள் உள்ள அம்பாறை மாவட்டத்தில் ஆகக்குறைந்தது 20 தொடக்கம் 30 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தல்களில் பங்குகொள்ளமாட்டார்கள் என்பது திண்ணம். எனவே 50000 தொடக்கம் 55000 வாக்காளர்கள் வாக்களிப்பர். அதில் ஆகக்குறைந்தது 35 விழுக்காடு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் செல்ல பிறகட்சிகள் அனைத்திற்கும் 5000 வாக்குகள் செல்லும். எஞ்சும் சுமார் 25000 - 30000 வாக்குகள் நிச்சயமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் செல்லும். ஆனால் மேற்படி 30000 தமிழ் விருப்பு வாக்குகளும் சிதறடிக்கப்படும் போது தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் செல்லப்போவது யார் என்பதையும், அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

குறிப்பாக எதிர்வரும் தேர்தலில் பிள்ளையான் அம்பாறையில் அதாவுல்லா குழுவினருக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே தமிழ் மக்களின் நலனிற்காக அரசியலில் ஈடுபடுகின்றோம் என்போர் தமது கட்சி நலனில் நின்று சிந்திக்காமல் தமிழ் மக்கள் நலனில் நின்று சிந்திக்கவேண்டும். எனவே அம்பாறை மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சேவை எமக்கு வேண்டாம் எனக் கூறுவார்களாயின் அவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்கின்றபோது அது குறிப்பிட்ட கட்சியின் வழர்ச்சிக்கு உந்து சக்கியாக அமையும் என எதிர்வு கூறலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com