சிறைக்கூண்டினுள் சக பொலிஸாரை மிரட்டும் பொலிஸ் பொறுப்பதிகாரி.
அங்குலானைப் பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி தும்பேஹெதர வின்னி நீயுட்டன் மற்றும் நான்கு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மூவர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 20 ம் திகதி அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள 2 பொலிஸாரையும் 1 ஊர்காவல் படையினரையும் நீதிமன்றில் ஆஜர் செய்த குற்றத்தடுப்பு பிரிவினர், சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட இடம் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட இடங்களை சந்தேக நபர்கள் அடையாளம் காட்டவிரும்புவதாகவும் அவ்விடங்களுக்கு அவர்களை கூட்டிச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி தருமாறும் நீதிமன்றை கோரினர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுதலுக்கு அனுமதியளித்த நீதிவான் கொலைக்கு பயன்பட்ட துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களையும் ஏனைய பாகங்களையும் கண்டெடுக்குமாறு உத்தரவிட்டதுடன், தடுப்புக்காவல் காலம் முடிவடையும்போது சந்தேக நபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதன்போது மன்றில் பிரசன்னமாகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகர, மகசின் சிறைச்சாலையில் ஒரே சிறைக்கூண்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி தும்பேஹெதர வின்னி நீயுட்டன் மற்றும் நான்கு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் காண்ஸ்டபிள்கள் சம்பவம் தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகவும், அவர்களை பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்துவதாகவும் தெரிவித்து பொலிஸ் பொறுப்பதிகாரியை பிறிதொரு கூண்டில் அடைக்க மன்று உத்தரவிடவேண்டும் என வேண்டினார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காண்ஸ்டபிள்களை பொலிஸ் பொறுப்பதிகாரியில் இருந்து வேறுபடுத்தி வைக்குமாறு மகசின் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதே நேரம் கொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோரை ஜனாதிபதி இன்று சந்தித்ததுடன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் நஸ்ட ஈடாக 5 லட்சம் ரூபா காசோலைகளை வழங்கியிதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment