மீண்டும் குட்டைகுழப்பும் தமிழகத் தலைவர்கள்
புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் பிரசாரங்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயப்பனவாக இருக்க வில்லை. தமிழ் மக்களின் அவலம் தொடர்வதற்கே அவை வழிவகுத்தன.
அந்த நேரத்தில் புலிகள் தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்தனர். நெடுமாறன், வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள் இம் மக்களுக்காகப் பேசுவது போன்ற தோரணையில் புலிகளுக்காகவே பேசினார்கள். மக்களின் நலனில் இவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமேயானால், மக்களை ஆயுதங்களுக்கு மத்தியில் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருக்க வேண்டாம் என்ற கோரிக்கையைப் புலிகளிடம் முன்வைத்திருப்பார்கள். யுத்தநிறுத்தம் வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கை புலிகளைக் காப்பாற்றுவதற்கானதேயொழிய மக்களைக் காப்பாற்றுவதற்கானதல்ல.
இத்தலைவர்கள் மீண்டும் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிப் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் முழுமையாக ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து மீண்டும் தலைதூக்குவதற்காக இலங்கைப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிக்கின்றார்களா அல்லது யாரையாவது திருப்திப்படுத்துவதற்காகப் பேசுகின்றார்களா என்பது விளங்கவில்லை.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அண்மையில் இவர்கள் மகாநாடொன்றை நடத்தி ‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம்’ என்ற பெயரில் பிரகடனமொன்றையும் நிறை வேற்றியிருக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளியதும் நடைமுறைச் சாத்தியமற்றது என ஏறக்குறைய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தனிநாட்டுக் கோரிக்கைக்குப் புத்துயிரளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே இந்தப் பிரகடனம்.
புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலைத் தூக்கிப் பிடிக்கும் தமிழகத் தலைவர்களுக்கு இலங்கையின் இனப்பிரச்சினை பற்றியோ புலிகள் பற்றியோ தெளிவான புரிகை இல்லை. சமகால யதார்த்தம் பற்றிய விளக்கமும் இல்லை.
இலங்கைத் தமிழர்கள் இடம்பெயர நேர்ந்ததும் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் உடைமைகள் சேதமுற்றதும் தனிநாட்டுக் கோரிக்கையின் விளைவான நிகழ்வுகள் என்பதும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுப் போராட்டம் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுவரை வந்திருந்த நிலையில் புலி கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதைச் சீர்குலைத்ததால் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான முயற்சி மூன்று தசாப்தங்களுக்கு முந்திய காலம் வரை பின்தள்ளப்பட்டுள்ளதென்பதும் தமிழகத்தின் இத் தலைவர்களுக்குத் தெரியாமலிருப்பது வேடிக்கையானது.
இவர்கள் இலங்கையின் இனப் பிரச்சினையில் குட்டை குழப்பித் தமிழ் மக்களின் அவலத்துக்கு வழிவகுக் காமல் பிரச்சினையைச் சரியாக புரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதே நல்லது.
அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழகத்தின் இத் தலைவர்களுடன் அணிசேர்ந்திருந்தார்கள் என்பது இரகசியமல்ல. இந்தப் பாதை அழிவுகரமானது என்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போதாவது புரிந்துகொண்டு, கற்பனைத் தீர்வுடன் காலங்கழிக்காமல் நடைமுறைச் சாத்திய மான வழியில் சிந்திப்பார்களென நம்பு கின்றோம்.
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment