Friday, July 31, 2009

புலிகளின் புதுத் தலைவர் கே.பி.-யா - நெடியலனா?

பிரபாகரன் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாக இருந்த கே.பி. இப்போது அவர் இடத்தைப் பிடித்திருப்பதாக வரும் தகவல்கள், உலகத் தமிழர்களிடையே விவாத அலைகளைக் கிளப்பியுள்ளன. இதே நேரம், 'எம்முடைய ஒரே தலைவர் பிரபாகரன்தான். வேறு யாருமல்ல...' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழ ஆரம்பித்திருப்பதால், உலகத் தமிழ் அரங்கு மீண்டும் சலசலப்பாகியுள்ளது.

நியூயார்க் வாழ் வழக்கறிஞர் விசுவநாதன் ருத்ரகுமாரன் உதவியுடன் புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப் பட்டிருக்கிறார் கே.பி. ஆனால்... நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ, நார்வேயில் இருக்கும் கே.பி. ரேகி முன்னாள் புலிகளின் பொருளாதார ஆலோசகரான ரூட் ரவி உட்பட பலர் கே.பி-யை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.

இது குறித்து பல்வேறுபட்ட உலகத் தமிழ் அமைப்புகளிடமும், தனிப்பட்ட தமிழ் உணர்வாளர்களிடமும் விலாவாரியாக விசாரித்தோம்.

''தலைமையிடம் காலியாகவே இருந்தால், அதை தட்டிப்பறிக்க பலர் முயலுவார்கள். எனவே, கே.பி-யை தலைவர் என்று அறிவித்துவிட்டால், கட்டுப்பாடு தானாகவே வரும் என்று கருதினார் ருத்ரகுமாரன். அதனால், அவரே உலகம் முழுவதும் உள்ள, ஈழ தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களை பேசி சம்மதிக்க வைத்தார்.

ஆனால், கேஸ்ட்ரோ தரப்பு இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. புலிகளின் தலைவர் பதவிக்கு அவர்களின் சாய்ஸ் பேரின்பநாயகம் சிலாபரன் என்கிற நெடியலன். 33 வயது நெடியலன் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் பிரதான சீடர். 18 வயதில் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு ராணுவப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டவர். தாய்லாந்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தமிழ்ச்செல்வனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். நெடியலன் மட்டுமல்ல, அவருடைய குடும்பமே புலிக் குடும்பம்தான். அவருடைய மனைவி சிவகௌரியின் தாய் மாமன் ஞானேந்திர மோகன் எனும் ரன்ஜன் லாலாதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் ஆயுள் உறுப்பினர். இவர், யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தினரால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் மீது பிரபாகரனுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதைத் தங்களுக்கு சாதகமாக்கி, நெடியலனை தலைமை ஏற்க முயல்கிறது கேஸ்ட்ரோ தரப்பு. கே.பி-யை அயல்நாடுகள் வாழ் ஈழத் தமிழர்களின் பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்தபோதே, அதை எதிர்த்தவர்கள் இப்போது எப்படி ஆதரிப்பார்கள்?'' என்றவர்கள் தொடர்ந்தனர்.

''பாலியல் குற்றச்சாட்டு, பண மோசடி, ஊழல் வழக்குகளில் சிக்கிய கே.பி-யை 2002-ம் ஆண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வன் இயக்கத்தை விட்டு விலக்கிவைத்தார். இதையடுத்து, கே.பி., தாய்லாந்து சென்று அந்த ஊர் பெண்ணை மணந்து செட்டிலாகிவிட்டார். ஆனால், பிரபாகரனிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தார். இது தமிழ்ச் செல்வனுக்கே தெரியாது.

கே.பி.முழுமையான புலியே அல்ல. அவர் இலங்கை அரசின் ஒற்றர். தமிழ்ச்செல்வனை பழிவாங்கப் போட்டுக் கொடுத்ததே கே.பி-தான். பிரபாகரன் மரணத்தைப் பற்றி அமைப்பு அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில்...

முந்திக் கொண்டு மே 18-ம் தேதி அவர் வீரமரணம் அடையவில்லை என்று கே.பி. அறிவித்தார். அதே கே.பி-தான், தமிழக அரசியல்வாதிகள் போல பின், 'பிரபாகரன் வீரமரணம், ஒரு வாரம் துக்கம்' என்று அடுத்தடுத்து பல்டி அடித்தார். 'இதைக் கூற நீயென்ன எங்கள் தலைவனா?' என்று தமிழ் புனரமைப்புக் குழு என்ற அமைப்பு கடுமையாக எதிர்த்தது.

அப்பேர்ப்பட்ட கே.பி-யை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் மட்டுமல்ல, நெடுமாறன், வைகோ போன்ற தமிழகத் தலைவர்கள் கே.பி-யை ஆதரிக்கவில்லை. பலமுறை அவர்களுடன் பேசி தங்கள் நியாயத்தை புரியவைக்க கே.பி. முயன்றும் இயலவில்லை!'' என்கிறார்கள்.

இந்த நிலையில் கே.பி. ஆதரவாளர்களோ...

''வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ இப் போது உயிருடன் இல்லை. பிரபாகரனின் சாவுக்கு முன்பே முள்ளிவாய்க்கால் போரில் சயனைடு கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயரால் வரும் மின்னஞ்சல்கள் போலியானவை. 2006-ம் ஆண்டு புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாக பலமிழந்தபோது, பிரபாகரன் அழைத்த முதல் நபர் கே.பி-தான். ஏராளமான வெளிநாட்டு போர் தளவாடங்களை புலிகளுக்கு மீண்டும் வாங்கிக் கொடுத்து உதவினார் கே.பி. அவற்றை சாதுர்யமாக வன்னிப்பகுதிக்கு பத்திரமாக சேர்ப்பித்தும் உதவினார். இது நெடியலன், கேஸ்ட்ரோ போன்றவர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. அவர் அனுப்பிய மூன்று ஆயுதக் கப்பல்களில் இரண்டு பத்திரமாக வன்னிக்கு சென்றது. ஒன்றை மட்டும் இலங்கைக் கப்பல் படை அழித்துவிட்டது. கண்கலங்கிய பிரபாகரன் கே.பி-யை மீண்டும் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற அழைத்தார்.

ஜனவரி 2009-ல் பிரபாகரன் கே.பி-யை சர்வதேசத் தலைவராக நியமித்தார்!'' என்கின்றனர்.

இதற்கிடையே, லண்டனில் உள்ள 'சின்ன ரன்ஜித்' என்பவரும் கே.பி-க்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் இருக்கிறார். மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் செயலாளராக இருந்தவர்தான் இந்த சின்ன ரன்ஜித். இவர், பாலசிங்கத்தின் மனைவி அடேலின் பாசத்தையும் பெற்றவர். புலிகள் வானொலியின் பொறுப்பாளரும் கூட. தான் மட்டுமல்ல, அடேல் பாலசிங்கமும் கே.பி-யை எதிர்ப்பதாக இவர் பிரசாரம் செய்தும் வருகிறார்.

ஆக மொத்தத்தில், ''கே.பி. அடிக்கடி, 'பிரபாகரனே என்றும் தலைவர். நான், தலைமைச் செயலாளர்தான். தலைவர் இருந்த இடத்தில் யாரையும் நினைத்துப் பார்க்கவே மனம் கூசும்' என்றும் கூறிவந்தார். அப்படிப்பட்டவர் தன்னைத்தானே தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்டது தமிழ் ஈழ தேசியத் தலைவருக்கு செய்திருக்கும் பச்சை துரோகம்!'' என்கின்றனர் கே.பி-யின் எதிர்ப்பாளர்கள்.

இதுபற்றியெல்லாம் கே.பி-யிடமே நாம் பேசினோம்.

''பிரபாகரன் இறப்பதற்கு முன்பு என்னிடம், 'ராணுவ ரீதியாக இனி புலிகள் செயல்பட முடியாமல் போகலாம். தீவிரவாதி என்கிற இமேஜ் என்னுடன் போகட்டும். இனி உலக நாடுகளை அரவணைத்து தமிழ் ஈழம் காணுங்கள். இயக்கத்தை வழி நடத்தி பிணைக் கைதிகளாக இருக்கும் தமிழர்களை மீட்டு, சிறையில் வாடும் தம்பிகளை வெளியே கொண்டு வாருங்கள்!' என்று கூறினார். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்...'' என்று நம்மிடம் கூறினார் கே.பி.

ஆரம்பத்தில் கே.பி-யை எதிர்த்த புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவரான அறிவழகன், இரண்டு தரப்பினரையும் அழைத்து லண்டனில் ஜூலை 20-ம் தேதி பேசினார். ஆனாலும்... கே.பி-தான் ஒருமனதான தலைவர் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை.

தலைமைப் பதவிக்கு போட்டி என்பது புலிகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு! அறிவழகன் நடத்திய பேச்சுவார்த்தை முறிந்ததா? அதையடுத்து... கே.பி-யே தன்னிச்சையாகத் தலைவராகத் தம்மை அறிவித்துக் கொண்டாரா? இப்படி, பல கேள்விகள் குடைய.... என்ன நடக்கிறது என தெரியாமல் தவிக்கிறார்கள் உலகத் தமிழர்கள்!

நன்றி:ஜூனியர் விகடன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com