Monday, July 13, 2009

வவுனியாவில் வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடம்தோறும் நாடாத்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பாரபட்சத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவ மோகத்தால் பயங்கரவாதமாக வடிவம் பெற்று இறுதியில் அவை முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளதுடன், புலிகள் தமது பெயரை நிலை நிறுத்த நிறுவிய தடயங்களை யாவும் இல்லாது அழிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக போராடப் புறப்பட்ட நியாயமான சிந்தனை கொண்ட பலர் புலிகளின் உண்மையான முகம் தெரியாமல் புலிகளுடன் இணைந்து மடிந்துள்ளனர். புலிகளின் பாஸிசக் கொள்கை அவ்வாறான தூய சிந்தனையாளர்களின் தடயங்களைக் கூட இல்லாது ஒழித்துள்ளது எனலாம்.

அத்துடன் மறுக்கப்பட்ட நியாயமான உரிமைகளுக்காக போராடப் புறப்பட்ட பல போராளிகள் பல இயக்கங்களிலும் இருந்து தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டுள்ள போதிலும், அவர்களின் நினைவுகளை, தடயங்களை எம்தேசத்தில் நிலைநிறுத்த புலிகள் இடம் கொடுத்திருக்கவில்லை. அதன் எதிர் விளைவுகளே இன்று புலிகளால் நிறுவப்பட்ட பல மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவு மண்டபங்கள், தூபிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வவுனியா பிரதேசத்தில் வீரமக்கள் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு எமது போராட்டமும் அப்போராட்டத்தின் பெயரால் தமது உயிர்களை தியாகம் செய்தவர்களும் நினைவு கூரப்படுகின்றனர். இதனூடாக எமது தேசத்தில் ஓர் உரிமைப் போராட்டம் இருந்தது என்ற விடயம் புளொட் அமைப்பினரால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனலாம்.

வருடம் தோறும் வீரமக்கள் தினம் என நினைவு கூரப்படும் நிகழ்வுகள் இன்று வுவுனியா வீரமக்கள் நினைவாலயத்திலும் புளொட் அமைப்பின் அனைத்து காரியாலயங்களிலும் ஆரம்பமாகியுள்ளது.

ஆரம்ப நிகழ்வாக மறைந்த தலைவர்கள், போரளிகள் மற்றும் மக்களது திருவுருவப் படங்கள் மக்களின் மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்களும் இடம்பெறும் இந்நிகழ்வுகளில் கழக உறுப்பினர்கள் இரத்ததானம் செய்வர் என கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி தினமான 16ம் திகதி போராளிகளின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிக்கப்படுவதுடன் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெறும். நிகழ்வுகளின் தலைவர் சித்தார்த்தன் கலந்து கொள்வார் என அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com