Friday, July 17, 2009

உண்மைகள் சுயமாக வெளிவரும் தன்னை கொண்டவை.

புலிகளியக்கத்தின் தலைமை அழித்தொழிக்கப்பட்ட பின்பு அவ்வியக்கத்தினுள் இருந்த மக்களை நேசித்த ஒரு சிலர் உண்மைகளை வெளிக்கொண்டு வர துடிப்பதும், அவர்ளின் குரல்வளைகளை நசுக்க புலித்தலைமையை கைப்பற்ற துடிப்போர் துடிப்பதும் இன்றைய களநிலவரங்களில் முக்கியமானவை. அந்த வகையில் தொடர்ந்தும் தமிழ் மக்களை எமாற்றத் துடிக்கும் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக முன்னைநாள் புலி ஆதரவாளர் என நம்பப்படும் ஒருவர் வெளியிட்டுள்ள சில கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. அவர் இக்கட்டுரையை பதிவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றை மையப்பட்டுத்தி எழுதியுள்ளதை உணர முடிகின்றது.

அவ்வாக்கத்தின் முழுவடிவம்


நண்பர்,இதயச்சந்திரன் முன்னர் சாள்ஸ் அன்ரனி என்ற மாவீரனின் பெயரை பயன்படுத்தி கல் எறிந்தீர்கள்.இப்போது உங்கள் குட்டுக்கள் வெளிப்பட்டதால் பிரம்மஞானியாக பாலசிங்கத்தை போல் உங்களை உருவகப்படுத்தி பிரம்மசீடனாக்கி எழுதியது உங்கள் எழுத்துக்களில் காட்டிக்கொடுத்துவிட்டது. உங்கள் வழமையான துருப்பிடித்த கத்தியால் யாரையும் ஒன்றும் செய்துவிடமுடியாது. முதலில் உங்களின் ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்றபடி நீங்கள் எழுதிய பந்திகளை பார்க்க.

எமக்குத் தோள்கொடுத்து உறுதுணை நிற்பதற்கான தமது தார்மீக ஆதரவை எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்... கடந்த மேமாதம் 18ம் திகதிக்கு பின்னர் தமிழகத்தில் என்ன எழுச்சி ஏற்பட்டுள்ளது? உங்கள் தா.பாண்டியனும், மகேந்திரனும் என்ன ஆனார்கள்? இப்போது தமிழீழத்தில் பிரபாகரனிசம் முடிவுக்கு வந்ததும் தமிழகத்தில் நெடுமாறனிசம் கொலுவேறி தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் பெருந்தலைவனாக தன்னை கொலுவேற்றிக்கொண்டிருக்கிறார் ஒரு சாதிவெறியனான நெடுமாறன் என்று சொன்னால் யாரும் நம்புவீர்களா? தலீத்தான திருமாவளவனை தனது வீட்டுக்கே எடுக்காத திமிர் பிடித்த வெறியன்.இதனால் திருமா ஈழத்தமிழர் விடயத்தில் சுத்தமானவரென்று ஒருபோதும் சொல்லமாட்டேன். அது தனியான கதை உள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டால் பல்லாயிரம் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் எனச்சொன்ன வை.கோல் எங்கே? அல்லது பிரபாகரனின் சாவை கூட சொல்லவிடாமல் தமது தலைமைக்கு ஆபத்துவந்துவிடுமென நன்குணர்ந்து முத்துகுமாரன்களை எழுச்சிபெறவிடாது தடுத்ததில் இதயமில்லாசந்திரன் உங்களின் பணி மேலானது. வெகுவிரைவாகவே உங்களின் பொய்மை வெளிச்சத்துக்கு வரும்.அப்போது நீங்கள் மூக்காடு போட்டுக்கொண்டு நடமாடவேண்டிவரும். ஆனால் உங்களுக்கு பிரச்சனயில்லை தானே நீங்கள் தானே வெளிச்சத்துக்குவராமல் முகமூடிபோட்டுக்கொண்டு முகம்காட்டாமல் புனைபெயரில் அவதூறு எழுதும் நவநீத லீலை மன்னன்.என கட்டியம்கூறி நிற்கின்றன எனக்கூறின் அது மிகையில்லை.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளை சிங்களம் தோற்கடிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய தாராண்மைத்துவக் கூட்டு வகுத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய, இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும் வழங்கிய படைவழி உதவிகளுடன், தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது என்பதே உண்மை. ..பிரம்மசீடன், எல்லோரும் எமது எதிரிகள். அப்படியானால் உங்களால் எமது எதிர்கால நண்பர்கள் யார்? யாரை தமிழினம் நட்பு சக்தியாக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒருவரி கூட சொல்லவில்லையே மதிஉரைஞரே? கியூபாவா? கொலம்பியாவா? நிக்கரகுவாவா? செஸ்னியாவா? கொசோவாவா? இந்த அமைப்புகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்ககூடும். ஏனெனில் முன்னர் உங்களுக்கு சர்வதேசபுரட்சிகளில் பங்குபற்றிய அனுபவம் உண்டல்லவா? அல்லது சர்வதேசிய புரட்சிகர சக்திகளுடன் நட்பு சக்தியாக இருந்த புரட்சிகர அமைப்பின் வழித்தோன்றல் அல்லவா? தேவைப்பட்டால் சோமாலிய கடற்கொள்ளையர்களை உங்க‌ள் ந‌ட்பு ச‌க்தியாக‌ கூட‌ வைத்துக்கொண்டால் தான் அக்கினி ப‌ற‌வைக‌ளாக உயிர்த்துஎழு , போராடு, வீர‌ச்சாவ‌டை, என‌ தேம்ஸ் ந‌தியோர‌த்திலிருன்து உங்க‌ள் கட்டுரைக‌ளை எழுதி பாம‌ர‌ன்க‌ளையும் உசுப்பேற்றி கொல்ல‌க்கொடுத்து முக‌மூடி போட்டுக்கொண்டு எழுதி வ‌யிறு வ‌ள‌ர்க்க‌லாம். த‌மிழின‌த்துக்கு கிடைத்த‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ பின்பு ந‌ட‌ப்ப‌வ‌ற்றை முன்கூட்டியே கூறும் பிர‌ம்ம‌ஞானிய‌ல்ல‌வா நீங்க‌ள்.

தமிழீழத்தில் இன்று தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரேயொரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் திகழ்வதாக சிலர் கூறுவது அபத்தமானது...த.தே.கூட்டமைப்பையோ அல்லது பிரித்தானிய தமிழ் பேரவையையோ அல்லது கனடிய தமிழ்காங்கிரசையோ சுயாதீனமாக இயங்க அனுமதித்ததுண்டா? எல்லாவற்றையும் புலிகள் தங்கள் தும்புத்தடியாக பாவித்தார்களே தவிர வேறு என்ன செய்தார்கள். சுயாதீனமாக செயற்பட விட்டால் தானே அவர்கள் மக்களுக்குள் வேலை செய்திருக்கமுடியும்.அவர்கள் மீதான சந்தேகங்களால் அவர்கள் தங்களை மீறிவிடுவார்கள்.அல்லது தங்கள் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதால் புலிகளால் நியமிக்கப்பட்ட குதிரை கஜேந்திரனும், பத்மினியும்,கனகரத்தினம் ஆகியோர் மட்டும் மக்கள் மத்தியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். புலிகளின் முகாம்களுக்குள் கூட உள்வாங்கப்பட்டனர். வெளிநாடுகளில் பணியங்களும் அதையே கைக்கொண்டன. த.தே.கூ அதிகார வரம்பு எதுவரை என்பது தெரியாமல் கையாளப்பட்டதால் இன்று த.தே.கூ மக்களால் ஓரங்கட்டப்பட அல்லது சிறிலங்காவில் செயல்படமுடியாத நிலையை புலிகளே கொண்டுவந்தனர். குதிரை கஜேந்திரன் 40ஆயிரம் சவப்பெட்டிகளை ஒடர் பண்ணியதால் நோர்வேக்குள் முக்காடு போட்டுக்கொண்டு யாழ் பல்கலை கழகத்தின் பெயரில் ஒன்றியம் மறுமலர்ச்சி கழகம் என்று அறிக்கைவிடுவதுடன் பா.ம.உறுப்பினருக்குரிய பணி முடிந்துவிட்டது அல்லது தானும் வேலை செய்வதாக இடையிடை காட்டிக்கொண்டார். பத்மினியும் சிதம்பரநாதனும் ரூட் ரவியின் முந்தானைகுள் தேம்ஸ் நதியோரமாக ஒதுங்கிகொண்டனர். கனகரத்தினம் வன்னியில் எம்.ஆர்.எஸ் சேவையில் (போக்குவரத்து கழகம்) மெக்கானிக்காக செயற்பட்டார். இதுதான் புலிகள் தங்கள் அபிமானிகளை வைத்தே செய்த மக்கள் பணி. இந்த தவறுகளை சுட்டிக்காட்ட வக்கில்லை ஒரேயடியாக த.தே.கூட்டமைப்பை கூத்தமைப்பாக மாற்ற முற்படும் பிரம்மசீடா முதலில் பிரம்மஞானி த.தே.கூ தாங்கள் சொல்வதை செய்பவர்களாக மட்டும் இருக்க வேண்டுமென சொன்னதால் எழுந்த மனவடுவால் ஆனந்தசங்கரி போன்றோர் கடுபாகியதையும் மறந்துவிடவேண்டாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை கொச்சைப்படுத்தும் புழுதிகளும் சில பொய்வழுதிகளால் கிளப்பிவிடப்படுகின்றன. இவற்றை அடியோடு நிராகரித்து, தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ மண்ணில் மீண்டும் தனியரசை நிறுவுவதற்கு உலகத் தமிழர்கள் உறுதிபூண வேண்டும்.. ..புலிகளின் தலைமை தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத உங்களின் புரட்சிகர அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பாலகுமாரனிடம் அவர் திரும்பி விடுதலையாகி வரும்போது கேட்டுப்பாருங்கள் பிரபாகரன் தொடர்பாக இறுதிக்கால செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்கள் எப்படி என்பதை. ஒரு கட்டத்தில் பாலகுமாரன் தாங்கமுடியாது புலிகளின் மக்கள் விரோத வெறியாட்டங்களை விமர்சித்தபோது அவரையும் போட்டுத்தள்ள முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. அவர் வெளியே வரும்போது உங்கள் இந்த நாள் தேசியதலைவரின் உண்மைமுகம் தெரியவரத்தான் போகிறது. சரி பிரம்மசீடன் வழுது எழுதிய புழுதி உண்மையானால் நீங்கள் உங்கள் எல்லா எழுத்துக்கும் மன்னிப்புக்க்கேட்டு இந்த போராட்டத்தில் வெளிப்படையாக ஆயுதம் தூக்கி உங்களால் தலைமை தாங்கவோ அல்லது ஒரு சாமானியனாக நீங்கள் சொல்லும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடத்தான் முடியுமா? சும்மா பதறுதல்ல..கேட்டானே ஒரு கேள்வி போட்டானே ஒரு போடு.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று முன்னெடுத்துச் செல்லும் முழுப்பொறுப்பும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடன் கையளிக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மாறாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் உந்துசக்தியாக நின்று, தமிழீழ மண்ணில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெறுவதற்கு துணைநிற்கும் கடப்பாடே இன்றும்கூட எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைத்துவம் என்றென்றும் தமிழீழ மண்ணில் இருந்தே வழங்கப்படும்..

பிரம்மசீடன் இறுதியில் உங்களை காப்பாற்றிக்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் லண்டனில் முகமூடிபோட்டுக்கொண்டு தாயகத்தில் இருக்கும் என நம்பப்படும் தளபதிகளையும் சாமானிய போராளிகளையும் சாகச்சொல்லும் நுட்பமோ சூப்பர் மதியுரை. உங்கள் குடும்பங்களுக்கு ஆபத்துவரக்கூடாது. வேறு யாருக்கும் வருவது பிரச்சனையில்லை. கால்மாக்ஸ்சின் தத்துவமோ? ஆரம்பத்தில் சன்சூவின் தத்துவத்துக்கு உயிர்கொடுத்தீர்கள், பின்னர் அகழிவெட்டி மண் அணைகட்டி ஸ்ராளின் கிராட்டுக்கு மறுபிரவேசம் கொடுத்தீர்கள், பின்னர் மாரிகாலம் தொடங்கட்டும் பிரபாகரனிசத்தின் உள்ளேவிட்டு அடிக்கும் நம்பிக்கைக்கு உரமூட்டினீர்கள். இப்போது ஜாக்கி சானின் பாய்ச்சலுக்கு ஆருட்ம் கூறி முடித்து பிரபாகரனின் உயிர்த்த ஞாயிறுக்காக தமிழ் மக்களை படியளக்க வைத்துள்ளீர்கள். இன்னும் 4மாதங்களில் பிரம்மசீடனின் பொய்மைகள் காலாவதியாகிவிடும். உங்கள் எல்லோரதும் பதிலளிக்கமுடியாத வறுமையை முன்னரே பார்த்துவிட்டேன். தேவைப்படும் போது தொடர்வேன். கிரியா பக்கிரிசாமியின் நீயா? படம் மாதிரி வருவேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com