Friday, June 12, 2009

சகல கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பது அவசியம்


‘225 எம்.பிக்களும் ஒத்துழைக்க வேண்டும்’ சபையில் அமைச்சர் டிலான்
ஒருவருக்கொருவர் சேறுபூசும் அரசியல் கலாசாரத்தைக் கைவிட்டு தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வை சகல கட்சிகளும் இணைந்து பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டியது முக்கியமெனவும் அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அமரர் சிவனேசனின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். அதற்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனப்பட்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.

குறுகிய அரசியலைக் கைவிட்டு நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சர்வகட்சிக் குழுவின் பக்கம் விரல் நீட்டாமல் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை எதிர்த்த ஜே.வி.பி. மலையகத் தோட்டத்துறை மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியது. இத் தருணத்தில் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அக்கட்சி செயற்படுதல் அவசியம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் படுகொலை செய்யப்படமாட்டார்கள். இப்போது பயங்கரவாதம் உருவாக மூலகாரணமான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டியது முக்கியம்.

இத்தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது குறுகிய அரசியல் சிந்தனையிலிருந்து வெளியே வரவேண்டும்.

ரவிராஜ், கதிர்காமர், ஜெயராஜ் உட்பட பல அரசியல்வாதிகள் படுகொலைகளுக்கு இச்சபையில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெற்றன.

புலிகள் இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டதையடுத்து இத்தகைய படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மறைந்த சிவனேசன் எம்.பிக்கான அனுதாபப் பிரேரணை இடம்பெறுகிறது.

தமிழ் மக்கள் பயங்கரவாதிகளால் பல்வேறு துயரங்களை கடந்த 30 வருடங்களாக அனுப வித்துள்ளனர். இன்று அந்த மக்கள் நலன்புரி முகாம்களில் வாழும் நிலையில் அவர்களைத் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதே சிவனேசன் எம்.பிக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com