Sunday, June 28, 2009

நோர்வே இலக்கியச் சந்திப்பு : புலிகளும் கலந்து கொண்டனர்.

ஐரோப்பாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் இலங்கியச் சந்திப்பு இம்முறை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள குருறூட் சந்திப்பு மண்டபத்தில் 26ம் திகதியில் இருந்து இடம்பெற்று வருகின்றது. நாளை 30ம் திகதி நண்பகல் வரை தொடரவுள்ள இச் சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

37வது சந்திப்பாக இடம்பெறும் இந்நிகழ்வில் புலிகளுக்கு எதிரான வாதங்கள் பலமாக முன்வைக்கப்பட்டு வந்ததிருந்ததுடன் இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் தேசத்துரோகிகள் என புலிகளால் பரப்புரைசெய்யப்பட்டும் வந்தது.
புலிகளின் அஸ்த்தமனத்தின் பின்னர் பல பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கும் புலிகள் தாம் துரோகிகள் என பிரகடனப்படுத்தியிருந்தோருடன் பகிரங்கமாக கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்வு இதுவாகும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட புலிகள் தம்மால் துரோகி என பட்டமளிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட அமரர் திரு. சபாலிங்கம் அவர்கட்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக அஞ்சலியும் செலுத்தினர்.

இங்கு புலிகள் சார்பாக அவ்வியக்கத்தின் முத்த உறுப்பினர்களில் ஒருவாரான சிரான் பணிப்பாளர், புலிகளின் மூத்த உறுப்பினரும் புலிகளின் நோர்வே பொறுப்பாளரின் மாமனாருமான சித்திவிநாயகநாதன், அன்னை பூபதி தமிழ்ப் பாடசாலை நிர்வாக உறுப்பினர் மனோ உட்பட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எண்மர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சந்திப்பில் புலிகள் கலந்துகொண்டதன் நோக்கம் பல முனைகளிலும் நோக்கப்படுகின்றது. புலிகளினால் தடைவிதிக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் புலிகளின் ஒரு தரப்பினர் கலந்து கொண்டுள்ளமையானது அவ்வியக்கத்தினுள் ஏற்பட்டுள்ள பிளவினை மேலும் தெளிவு படுத்துகின்றது.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட புலிகள் ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளனர் ஒன்று தம்முடன் முரண்பட்டு நிற்கும் தமது மறுதரப்பினருக்கு தாம் தீவிர புலி எதிர்பாளர்கள் என்ற செய்தியையும் தமது பின்புலத்தில் அரசாங்கம் இருக்கின்றது என்ற செய்தியையும் சொல்வது. மறுபுறத்தில் புலிகளை முடித்துக்கட்டுவதில் அரசுக்கு துணையாக நின்ற மாற்றுக்கருக்தாளர்களுடன் கலப்பதன் மூலம் அவர்களுக்கும் புலிச்சாயம் உட்பட்ட அபகீர்த்தியை உண்டு பண்ணுவது.

எது எவ்வாறாயினும் கடந்த பல ஆண்டுகளாக நிலைநின்ற ஜனாநாயக கருத்துக்களுள் பாசிசம் நுழைந்துவிட்டதென்ற செய்தியறிந்த மக்கள் புலியெதிர்பாளர்கள் என்போர் தமது அரசியல் வங்கிறோத்து காரணமாக புலிகளை உள்வாங்கியுள்ளனர் என விசனம் கொண்டுள்ளனர்.


1 comments :

Unknown June 29, 2009 at 3:20 PM  

நோர்வேயில் நடந்த 37 வது இலக்கிய சந்திப்பு தொடர்பாக:

இந்த அமைப்பு எந்த இயக்கத்தையோ அல்லது அரசியல் கட்சியையோ சாராத அணி என்பதை குறிப்பிடவேண்டும். அதன் முன்னைய சந்திப்புகள் கூட அதன் சுதந்திரமான கொள்கையுடன் நடத்தப்பட்டிருந்தன. இந்த அணியின் நோக்கமே இலக்கியம் மட்டுமல்ல, பெண்ணியம், தலித் விவகாரங்கள், சமூக சீர்கேடுகள் என்பவற்றை ஆழமாக ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் இருந்து பார்த்து அதை ஒரு பட்டிமன்றமாக எல்லாருமே ஆர்வத்துடன் நடத்துவது வழக்கம். அதில் அவரவரின் அரசியலும் நிச்சயமாய் கலந்திருக்கும். இது தவிர்க்க முடியாதது. (புலி எதிர்ப்பாளர்களே ஆளுக்காள் சித்தாந்த ரீதியில் முட்டி மோதிக்கொள்வார்கள். பிறகு வெளியில் வந்து மச்சான் என்று கட்டிப்பிடித்துக் கொள்வார்கள் . நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.)

இந்தத் தடவை இன்னோர் ஆச்சரியம். நோர்வே அன்னை பூபதி பள்ளியின் நிர்வாகி (?) உமைபாலன் கலந்துகொண்டார். அவர் விடுதலைப்புலி ஆதரவாளராய் இருக்கலாம். ஆனால் அவர் இன்றைய அவர்களின் அரசியல் நிலை பற்றி உணர்ச்சியுடன் அதேநேரம் விட்டுக்கொடுக்காமலும் (அவர் குரலில் தோற்றுப்போன ஏமாற்றமும் ஆதங்கமும் வெளிப்பட்டது.) சொன்னது ஒரு குறிப்பிடக்கூடிய அம்சம். ஆனால் அவருடன் எல்லாருமே சகஜமாகவே பழகினார்கள். (ஏனென்றால் இலக்கிய அணியின் கொள்கையே ஜனநாயமாச்சே! ) அவர் நோர்வேயில் தமிழர்களின் வாழ்வு, பங்களிப்பு பற்றி ஒரு தொகுப்பை உருவாக்கிக் கொண்டிருப்பதாய் குறிப்பிட்டார். நல்ல பணி. வரவேற்கப்படவேண்டிய விஷயம்.(சித்தி விநாயகம் இப்போ ஆளே மாறிப்போனார்!)

புலி ஆதரவாளர்கள் எல்லாருமே கெட்டவர்கள், நாம் மட்டும் தான் நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தால் அது நம் மூளையின் கோளாறு என்று அர்த்தம். சந்தர்ப்ப சூழ்நிலையால் புலிகளை ஆதரித்தவர்களில் பலபேர் (மேலே குறிப்பிடப்பட்டவர் அல்ல) இன்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களும் மனிதர்கள் தானே. இதை நல்ல அறிகுறியாய் எடுக்காமல் வெட்டு குத்து என்று ஆரம்பித்தால் பிறகு அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். எல்லாரும் சுதந்திரமாக தம் சிந்தனைகளை வெளிப்படுத்துவது எத்தனை ஆரோக்கியமான விஷயம்!

அடுத்த இலக்கிய சந்திப்பு இனி எந்த நாட்டில், எப்போது நடக்கும் என்று இன்னமும் முடிவாகவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் அறிவிப்பார்கள். நீங்களும் வந்து பாருங்களேன்!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com