Thursday, June 18, 2009

யுத்தம் மற்றும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் நிலை தொடர்பில் சுவிஸ்லாந்தில் கலந்துரையாடல்..

ஸ்ரீலங்கா டயஸ்போராவின் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டிலும் ஜெர்மனுக்கான இலங்கைத் தூதுவரும் சுவிஸ_க்கான விசேட தூதுவருமான திரு.மடுவகெதரவின் அழைப்பின் பேரிலும், இலங்கையில் நடைபெற்ற யுத்தவெற்றி மற்றும் மோதல்களால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் வன்னிமக்களின் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (13.06.09) சுவிஸ்லாந்தின் பிரிபேர்க் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி ஆகிய அமைப்புக்களின் சுவிஸ் கிளையினரும், தமிழ், சிங்கள பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த முக்கியஸ்தர்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து யுத்தத்தினால் மரணித்த அனைத்து அப்பாவித் தமிழ் மக்கள், படைவீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒருநிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டவுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதனைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய கீதம் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

பின்னர் ஸ்ரீலங்கா டயஸ்போராவின் சுவிஸ் கிளை தலைவியான திருமதி உடுகம்பொல வரவேற்புரையை நிகழ்த்தினார். இதன்போது கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் மாத்திரமன்றி அப்பாவிப் பொதுமக்கள் பலரும் பலியாகியமை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசித்துவரும் அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகள், காயமடைந்துள்ள, படுகாயமடைந்துள்ள பொதுமக்கள், படைவீரர்களின் எதிர்காலம் பற்றியும் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட உள்ளதென்பதையும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்க வந்த அனைவரையும் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜெர்மனுக்கான இலங்கைத் தூதுவரும் சுவிஸ_க்கான விசேட தூதுவருமான திரு.மடுவகெதர அவர்கள் உரையாற்றும் போது, வன்னி மோதல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களின் எதிர்காலத்திற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், அநாதைகளைப் பராமரித்தல், வயோதிபர்களை உறவினர்களிடம் ஒப்படைத்தல், சுகாதார வசதிகள், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு வருவதுடன் மீள்குடியேற்றமும் விரைவில் இடம்பெறவுள்ளன என்பதையும் குறிப்பிட்டார். அத்துடன் இந்த யுத்தத்தினால் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளமைக்குக் காரணம் புலிகளேயென்றும், புலிகள் அப்பாவி பொதுமக்களை விடுவிக்காது மனிதக் கேடயங்களாக தம்முடன் தடுத்து வைத்திருந்ததனால் இந்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த புளொட் சுவிஸ்ரஞ்சன் உரையாற்றுகையில், புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புக்களின் ரீதியாக மட்டுமல்லாது முக்கியமாக நாம் தமிழ் பொதுமக்களின் சார்பாகவே இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளோமென்று தெரிவித்தார். புலிகளுடனான யுத்தத்தினால் ஏற்பட்ட வெற்றியானது தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை முன்வைக்கும் போதே முழுமையான வெற்றியாக கருதப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் மோதல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களை உடனடியாக மீள்குடியேற்றுவதன் மூலமே நாம் இதனைச் சாதிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழ்மக்கள் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்களை ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் போன்ற பதங்களைப் பயன்படுத்தி வருவதே வழமையாக உள்ள போதிலும் இவற்றுக்கெல்லாம் நாம் அஞ்சாது தொடர்ந்தும் பணியாற்றுவதற்குக் காரணம் மக்களின் நலன் கருதியேயாகும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த நலன்கருதியே வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடன் மீள்குடியேற்ற வேண்டுமென்பதை முக்கிய வேண்டுகோளாக முன்வைப்பதாகவும் ரஞ்சன் குறிப்பிட்டார்.

இதற்கு உடனடியாகவே பதிலளித்த சுவிஸ் விசேடதூதுவர் மடுவகெதர, இந்தக் கோரிக்கைகள் முக்கியமானதாக இருக்கின்ற போதிலும் அந்த மக்களுக்கான ஒரு தீர்வுக்காக 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அது தற்போதைக்கு சாத்தியப்படாத பட்சத்திலும் 13வது திருத்தச் சட்டத்தை பிரதேச சபைகளின் ஊடாகவோ, உள்ளுராட்சி சபைகளின் ஊடாகவோ ஆரம்பக் கட்டத்தில் முதலில் செயற்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாகவே அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வன்னி மக்களை உடனடியாக மீள்குடியேற்ற வேண்டுமென்ற கோரிக்கையானது முக்கிய கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை மிகவிரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் ஆரம்பமாக தாம் தற்போது 180நாள் திட்டத்தினை அரசாங்கம் கொண்டுள்ளது. இதன்படி மன்னார் பகுதிகளில் மேற்படி குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தொடர்ச்சியாக கிழக்கிலும் இவ்வாறான மீள்குடியேற்றங்கள் இடம்பெற்று வருகிறன. மக்களை உடனடியாக அங்கு குடியமர்த்தாததன் காரணம் பாதுகாப்பு காரணங்களேயாகும். முக்கியமாக உட்கட்டமைப்பு வசதிகள், அத்தியாவசிய தேவைகள், போக்குவரத்து, மருத்துவம், தொழில் வாய்ப்புகள் தவிர மிதிவெடிகள், கண்ணிவெடிகள் என்பன புலிகளால் அதிகமாக புதைக்கப்பட்டுள்ளமை என்பன இந்நடவடிக்கைகள் தாமதமடையக் காரணமாக உள்ளன. எனினும் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலிகளின் செயற்பாடுகள் புலிகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் முடக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளில் தற்போதும் புலிகள் உள்ளனர். அவர்களின் செயற்பாடுகளும் தொடரவே செய்கின்றன. வெளிநாடுகளிலும் அவர்களின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கான பூரண ஒத்துழைப்பினை அனைவரும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதன்போது கருத்துரைத்த புளொட் சுவிஸ் ரஞ்சன், சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எந்தவொரு ஏனைய தமிழ் அமைப்புக்களையும் ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் போன்ற பதங்களைப் பயன்படுத்தி வருகின்ற நிலையிலும், தமது ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாகவும், தற்போதும் புலிகளை முடக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டதுடன், ஆயினும் தமிழ் மக்களின் தீர்வே முக்கியமானதாக உள்ளதினால் அதனை விரைவில் அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்பதையும் சுட்டிக் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஈ.பி.டி.பியின் சார்பில் மகேந்திரன் அவர்கள் உரையாற்றுகையில், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஆரம்பித்த அகிம்சைவழி போராட்டங்கள் தோல்வியுற்ற நிலையில் ஆயுதப் போராட்டமாக உருப்பெற்ற விடயம் மற்றும் மிதவாதத் தலைவர்களால் ஆயுதப் போராட்டம் தவறான வழிக்கு இட்டுச் சென்றமை என்பவற்றை சுட்டிக்காட்டியதுடன், இதனாலேயே தமிழ் கட்சிகளின் தற்போதைய நிலைமைக்கு காரணமென்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சாதகமான நிலையில் ஒரு நல்ல முடிவை எடுத்து இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் எமது போராட்டம் தனிநபர் போராட்டமல்ல என குறிப்பிட்டு வழிநடத்தியவர்கள். ஆயினும் மேலாதிக்க சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக இவ்வமைப்புகள் தமது ஆயுதங்களை மௌனித்து அரசியல் நீரோட்டத்தில் இணைய முன்வந்தன. இதுவே சர்வதேச அங்கீகாரம் புலிகளுக்கு கிடைக்க வழிவகுத்தது. புலிகளாலும், மிதவாதத் தலைவர்களாலும் தமிழ்மக்களுக்கு தீர்வு கிடைக்காதென்பதை உணர்ந்து ஏனைய அமைப்புக்கள் அரசாங்கத்தை அனுசரித்து செயற்படுகின்றன.

வன்னி மக்களின் அழிவுகள் குறித்து புலிகள் வெளிநாடுகளில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் தற்போது புலிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு மக்களின் அழிவானது புலிகள் குறிப்பிட்டதுபோல் ஏற்படவில்லையென்பது தெரியவந்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவும் சர்வதேச அமைப்புக்களும் பிரச்சினைகளை தீர்க்கவிடாது செய்து வந்தன.

நாம் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் வெற்றி கொண்டுள்ளோம். இதனால் நாம் சந்தோசமடைகின்றோம். இதனால் தீர்வை முன்வைக்கும் உரிமை அரசுக்கு உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம். ரணில் பிரபா ஒப்பந்தத்தின் மூலம் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெற்றிக்கு தமிழ் மக்கள் எப்படி உதவினார்களோ அவர்களுக்கான தீர்வினை முன்வைக்கும் உரிமை உங்களுக்கு உண்டென்பதால் அதனை முன்வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து சுதாகரன் என்பவர் உரையாற்றுகையில், வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருந்தபோது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்களை முழுமையான உணர்ந்துள்ளதாகவும் தமது உறவுகள் யாவும் வன்னியிலிருந்து தற்போது முகாம்களில் உள்ளதால், அவர்களை மீள்குடியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கின்றோமென்றும் தெரிவித்தார். சுவிஸில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புளொட் கிளையுடன் இணைந்து நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு உடுபுடவைகள் சேர்த்து அனுப்புவதற்கோ அன்றில் உணவுப் பொருட்களை சேகரித்து அனுப்புவதற்கோ தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் கலாச்சார மன்றத்தின் சார்பில் உரையாற்றிய திரு.குமார் அவர்கள், இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் வன்னி மக்களை மீள்குடியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இதுவே தற்போதைய முக்கிய தேவையெனவும் குறிப்பிட்டார். இலங்கை அரசுடன் ஆராய்ந்து எந்தெந்த பொருட்களை சேகரித்து இலங்கைக்கு அனுப்ப முடியுமென்பதை கண்டறிந்து அதன் விபரங்களை வழங்குவதாகவும் திரு.மடுவகெதர இதன்போது குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் பலரும் வன்னி மக்களுக்கு உணவுப்பொருட்கள், உடைகளை சேகரித்து அனுப்ப வேண்டுமென்பதை வலியுறுத்தி உரையாற்றினர். இறுதியாக யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்குமான மௌனஅஞ்சலியுடன் கூட்டம் நிறைவுற்றது.

நன்றி சுவிஸ் ரஞ்சன்





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com