ஒரு பாசிஸ்ட்டின் மரணம். -தமிழரசன் பேர்ளின்- பகுதி 3
பிரபாகரன் இதுநாள்வரை ஆமி, பொலிஸிடம் பிடிபடாமல் இருந்ததற்குக் காரணம் அவரின் திறமை அல்ல. மாறாகக் கோழைத்தனம், பயந்தாங்கொள்ளித்தனம். குட்டிமணிபோன்றவர்கள் பொலீஸ் தேடும்போது பயப்படாமல் நின்று இளைஞர்களோடு சாதாரணமாக வல்வெட்டித்துறையில் பொதுஇடத்தில் கைப்பந்து விளையாடும் அளவு துணிச்சல் இருந்தது. மக்களின் ஆதரவும் இருந்தது. ஆனால் பிரபாகரனோ அடிக்கடி இடம்மாறுவார். ஒரு இரவில் பல இடங்களில் மாறிப்படுப்பார். சொந்த நண்பர்களைக் கூட நம்பாதவர். வேறிடத்திற்குப்போகவேண்டாம் தனது கட்டுப்பாட்டில் இருந்த வன்னிக்குள் கூட துணிந்து மக்கள்முன் வராதவர். சொந்தப்பாதுகாப்பில் அதீத அக்கறையும் தன் நண்பர்கள் தோழர்கள் உயிர்களைப்பாதுகாப்பதில் எந்தக் கவனமும் இல்லாததோடு அவர்கள் இறந்தால் அவர்களை மாவீரர்களாக்கி அப்பெருமையைத் தனக்கே சூடிக் கொள்ளும் மனிதன்.
இத்தகைய ஒருவர் யாழ் நடுத்தரவர்க்க அரசியலின் வீர தீரச் செயல்களுக்குத் தோதானவராக இருந்தார். அடுத்தவனை மாட்டிவிட்டுத் தப்பிக்கும் குணமுடைய இவ்வர்க்கத்திற்கு பிரபாகரன் வந்துவாய்த்தார். இவர்கள் பிரபாகரனை உருவேற்றிவிட்டனர். உற்சாகம்தந்தனர். நீயே தலைவனுமாகுக! என்றனர்.
யாழ் நடுத்தர வர்க்கம் தன்னைச் கல்விச்சமூகமென்று சுயபாராட்டுதல் செய்தசமூகமாகும். மேற்கத்தய சார்புக் கல்விமுறையையும் ஆங்கில அறியையும் கொண்டாடிய குழுமமாகும். இத்தகைய சமூகம் எப்படி இவர்களது கல்விச்சமூகம் என்ற இலட்சணங்களுள் வராத பிரபாகரனைத் தலைவராக ஆக்கியது?. ஜி.சீ.ஈ படித்துப் பாஸ் பண்ணாதவர்களை ஏற்காதவர்கள், உவன் எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணாமல் திரிகிறான் என்று தரம் இறக்கிய சமூகம் களிசான்போட ஆங்கில அறிவு தேவை என்று நிபந்தனை போட்ட சமூகம் இதுவாகும்.
வன்னியில் 5, 10 ஏக்கர் நெற்காணி விதைப்பவர்கள், 5, 10 ஆயிரம் மிளகாய் கன்று வைப்பவர்களே மதிக்கப்பட்டனர். வன்னியில் யாழ்குடாநாட்டு மத்திய தரவர்க்கம் போல் உத்தியோகமோகம் ,கல்வி ,ஆங்கிலஅறிவு இவைகளில் மிதப்புக்காட்டுவது இல்லை. யாழ் நடுத்தர வர்க்கம் தனக்கேயுரிய தனக்கு மிகப்பொருத்தமான தமிழ் CowBoy யாகப் பிரபாகரனைத் தேடிப்பிடித்தது. இவர்கள் தமிழினவாதத்தின் மிக அடிநிலையான தீவிரமான கருத்தாக்கங்களால் நிரப்பப்பட்டிருந்தனர்.
புலிகளின் தமிழ்மக்கள் மீதான கொலைபாதகங்களைப் பேசாதவர்கள் தமிழினக் கொலை நடப்பதாகத் தொடர்ந்து முறையீடு செய்தார்கள். பிரபாகரனின் சாவுக்காக இலங்கைத் தமிழ்மக்கள் துக்கம் கொண்டாடமாட்டார்கள். அவர்கள் மூன்று பத்தாண்டு கால யுத்தத்தில் இருந்து மீள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புலி ஆட்சியில் வாழ்ந்து நொந்து, கெட்டு, இறந்துபழுத்த அனுபவத்தோடு உள்ளவர்கள். அவர்களுக்கு எந்தக் கருத்துரிமையோ ஊடக உரிமையோ இல்லாமல் வாழவிடப்பட்டவர்கள்.
புகலிடத்து தமிழர்கள் இந்தக் கட்டத்தில் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியலைக் கையாளும் உரிமையைத் தம்மிடம் எடுத்துக்கொண்டார்கள். தமது வெளிநாட்டு அகதி வாழ்வுக்கும் அரசியலுக்கும் ஏற்ப அதை திரித்து விளக்கினார்கள். இவர்களிற் பெரும்பகுதி 1980, 1990 களில் குடிபெயர்ந்தவர்கள். எனவே அக்காலத்தே தம்முள் தேக்கி வைத்துக்கொண்ட பழைய பாசிபிடித்த தமிழினவாதமே அவர்களின் அரசியலாய் இருந்தது.
வாழும் நாடுகளின் அரசியலிலோ மாக்ஸ்சிசம் மற்றும் தொழிலாளரியக்கங்கள் பற்றியோ எந்த அறிவும் தொடர்பும் இருக்கவில்லை. உலகமயமாதலின் பிரமாண்டமான அரசியல் மற்றும் தொழிற்துறைமாற்றங்களை அவர்கள் கிரகிக்கவில்லை. புலிகள் தீவிரமாய் வளர்த்த தமிழ்ஈழக் கனவும் சிங்களவர்களும் இலங்கைஅரசாங்கமும் எதிரிகள் என்ற நொய்த்தன்மை கொண்ட தமிழின வெறியே அரசியலாக இருந்தது.
இவர்கள் மேற்குலக நாடுகளை நம்புபவர்களாக இந்த நாடுகளைத் தமிழர்களுக்கு நீதி வழங்கத் தக்க சர்வதேச சமூகமாக வரித்துக்கொண்டவர்கள். ஒரு போரின் கொடுமையைக் கண்டறியாத இவர்கள் தொலைதூரத்திலிருந்து தழிழீப் போரின் வீரசாகசங்களைப் பற்றிய மாவீரர் கதைகளை வீடியோ காட்சிகளில் கண்டுகளித்தவர்கள். இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ்மக்களும் புலிகளின் முதுகுக்குப்பின்னால் போராடிச் சாகத் தயாராகி உள்ளதான நிலைக்கு நிற்பதான கற்பனைச்சுமையேறித் திரிந்தார்கள்.
இவர்கள் இலங்கைப் போரினால், மக்களின் மரணங்களினால் நேரடியாக லாபம் பெற்றவர்கள். தமது அகதி வாழ்வுக்கும் செல்வத்திற்கும் இவைகளை அடிப்படையாக்கிக் கொண்டவர்கள். உள்ள பொய்யெல்லாம் சொல்லி அரசியற் தஞ்சம் எடுத்தார்கள். வேலைகள் முடிந்து மாலைப்பொழுதிலும் வார இறுதி நாட்களிலும் மாவீரர் தினங்கள் மற்றும் புலி நிகழ்வுகளில் கலப்பதை வீரக் கடமையாகவும் பொழுதுபோக்காகவும் கருதினர். அன்னிய நாட்டில் அடையாளமற்ற கூட்டமாக வாழ்ந்த இவர்கள் தம்மைப் புகலிடப் புலிகளாக எண்ணிச் சிலிர்த்துக்கொண்டார்கள். சூரியக்கடவுளும் தேசியத் தலைவருமான பிரபாகரனின் விசுவாசமிக்க பிரைஜைகளாகத் தம்மைக் கருதிக்கொண்டனர்.
இவர்கள் புகலிட நாடுகளில் வதிவிட உரிமைபெற்று இலங்கையில் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் கற்பனையாக இருந்த தொலைக்காட்சி, கார், தங்க நகைகள், காஞ்சிபுரப்பட்டுப்புடவைகள், விமானப்பறப்புகள், விடுமுறைப் பயணங்கள் சொந்த வீடுகள் வரை வாங்கி வாழ்வின் கனவுகளெல்லாம் நிறைவேறியும் ஏதோ இன்னமும் நிறைவேறாத ஆசைகள் மனம் நிறைவுறாத புரிந்துகொள்ள முடியாத உள்மனத்துயரங்களில் நிறைந்தவர்கள்.
இவர்கள் தம் சீவியத்தில் இலங்கைக்கோ தமது தமிழீழத் தனிநாட்டிற்கோ திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எந்தக்கனவும் இல்லாதவர்கள். விடுமுறைக்கால விடுப்பில் இலங்கை போன சமயம் தமது பிள்ளைகள் இலங்கைச் சுவாத்தியமும், சாப்பாடும், இனசனமும், ஓயாத இரவிரவாக நடந்த பேச்சுக்கச்சேரிகளும் பிடியாமல் பட்டபாட்டடை பெருமையாய்ச் சொல்பவர்கள். இனி இலங்கைக்கு வரமாட்டோம் என்று பிள்ளைகள் முடிவெடுத்துவிட்டதாக எல்லா இடமும் கதைகதையாகப் பேசுபவர்களாகவும் இருந்தனர். தாம் ஒரு போதும் போய் வாழ விரும்பாத தமிழீத்திற்கு ஆசைப் பட்ட இவர்களே இன்று இலங்கையில் நடந்த தமிழ்மக்களின் அத்தனை பேரழிவுகளுக்கும் மூலகாரணமானவர்கள்.
மூதூர் தொடக்கம் வன்னிவரை செத்த பலஆயிரம் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் இறப்புக்கும் பலபத்தாயிரம் காயப்பட்டவர்களுக்கும் பொறுப்பாளிகள்.
இந்த மூன்று வருடத்தில் சிங்களக்கிராமங்களிலிருந்து வந்து இராணுவத்திற் சேர்ந்து புலியுடன் போராடிச் செத்த 6200 வரையிலான இளைஞர்களின் மரணத்திற்கும் இவர்களே முழுப்பழியையும் எடுக்க வேண்டும். உண்மையான கொலையாளிகளாக இவர்களே இருந்தனர். இவர்களது பிள்ளைகள் புகலிட நாடுகளில் மென்மையும் அழகும் ஆரோக்கியமும் கல்வியறிவும் கொண்டவர்களாக நாகரீகமாக வளர்ந்தார்கள். பல இன மத மக்களோடு ஒன்றுகூடி பல்லினக்கலாச்சாரத்துக்குள் ஆளப்பட்டனர். ஆனால் இந்த முதற் தலைமுறைத் தமிழர்களர்களின் பெரும்பகுதி தீவிர தமிழ் வெறியர்களாக இருந்தார்கள்.
இலங்கையில் புலிகள் நடாத்தும் போராட்டத்திற்கு தம் பிள்ளைச் செல்வங்களை அனுப்ப வேண்டுமென்று ஒரு போதும் எண்ணிப் பார்க்காதவர்கள்.
மிளகாய் கன்றுக்குச்சாறக் கூலிக்கு ஆள் பிடிப்பது போல் வெண்காயத்தோட்டத்திற்குப் புல் பிடுங்க பெண்விவசாயத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது போல் இவர்கள் வெளி நாடுகளில் இருந்து கொண்டு பணத்தைக் கொடுத்துப் புலிகளின்மூலம் ஏழைத் தமிழ்மக்களின் ஆண் பெண் பிள்ளைகளைப் பலவந்தமாய்ப் பிடித்துக் கூலிக்குப் போராடச்செய்ய முயன்றனர்.
புலிகட்கு எதிரான எந்த விமர்சனமும் அரசியல் அபிப்பிராயங்களையும் இவர்கள் பொய், துரோகிகளின் பிரச்சாரம், அரசாங்கத்தின் ஆட்களென்று விமர்சிப்பது பொதுக்குணமாய் இ;ருந்தது. சுதந்திரமாய் அரசியற் கருத்துக்களை வளர்த்தெடுக்க முடியாத மட்டத்திற்கு புலிப்பயங்கரவாதத்திடம் இவர்கள் அடிமைப்பட்டுக்கிடந்தனர். புகலிடத் தமிழ்ச்சனத்திற்கு இது விதியாகியது.
இவர்களை விட வேறு விதம் விதமாக ஜனனாயகம் பேசும் திருக்கூட்டங்கள் புகலிட நாடுகளில் இருந்தன. இவர்கள் தத்தமக்குப் பொருத்தமான ஜனனாயகம் பேசுபவர்கள். இதில் தமிழ் என்.ஜி .ஓக்களின் ஜனனாயகம், புலிகளல்லாத தமிழ் இயக்கவாதிகளின் ஜனனாயகம், ரீபீசீ ஜனனாயகம் என்று பல வர்ணங்களில் ஜனனாயகத்தின் காவற்தெய்வங்கள் திக்குக்கு ஒன்றாய் நின்றனர்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக்கும் சிங்கள, பவுத்த இனவாதத்திற்குமெதிரான புனித போராளிகளாக தம்மை நியமித்துக் கொண்டனர். இதன் ஒரு பகுதியினர் மேற்குலக நாடுகளின் நிதிகள் மற்றும் அரசியல் நோக்குகளுக்காகச் செயற்படுபவர்களாகவும் புலியல்லாத தமிழ் இயக்கங்கள் மற்றும் ரீபிசீ போன்றவை இந்தியாவுக்கு அப்புக்காத்து வேலையுடன் பத்து இருபது மேற்குநாடுகளை சர்வதேச சமூகம்மாக்கி அவர்களை இலங்கைப் பிரச்சனையில் தலையிடக் கேட்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் சர்வதேச சமூகத்தை தமிழ்மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வா வா என்று வருந்தி அழைத்தனர். மேற்குலக நாடுகளின் சுரண்டல் ஆக்கிரமிக்கும் அரசியலையோ இராணுவக்குணாம்சங்களையோ இவர்கள் மதிப்பிட முயன்றதில்லை. இவர்கள் அனைவரும் கூடிக் குறைந்த அளவில் மாக்ஸ்சிய விரோதிகளாக முதலாளிய அரசியலைத் தொடர்பவர்களாக இருந்தனர்.
தமிழினவாதிகளால் உச்சியில் வைத்துக்கொண்டாடப்பட்ட இலங்கை மக்களின் பொது எதிரியான பிரபாகரனின் மரணம் நிகழ்ந்துவிட்டது. புலி சார்பு மட்டுமல்ல தமிழ்நாடு ஊடக சமுத்திரமும் மேற்குலக ஊடகங்களும் புலிகளைப்பற்றி உருவாக்கிய கருத்துருவாக்கத்திலிருந்து தப்பி பிரபாகரன் பற்றிய மெய்யானவடிவத்தை அவரது வர்க்கச் சார்புநிலையை கண்டறிந்து செயலையும் கண்டறிய வேண்டும். பிரபாகரன் யாரின் விருப்புக்களைக் காவி நின்றார். பிரபாகரனின் கொடூரமான பாசிசப் பயங்கரவாதத்தின் பின்புலம் மற்றும் யாழ் குடாநாட்டு தமிழினவாத அரசியல் இவைகளை ஒன்று சேரக்கூட்டிக் கழித்துப் பரிசீலிக்க வேண்டும். பிரபாகரன் ஒர் அரசசேவையாளரின் மகனாகப் பிறந்த போதும் வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தற்சூழலில் சட்டவிரோத வாழ்வில் வளர்ந்து ஆளானவர்.
வல்வெட்டித்துறைச் சிதம்பராக் கல்லூரியில் அக்காலத்தய 'ஜே.எஸ்.சீ' படிப்புவரை படித்தவர். அக்காலத்து ஜே.எஸ்.சி யில் பாசோ பெயிலோ அடுத்த வகுப்பேற்றம் செய்வது வழக்கமாக இருந்தது. எனவே பிரபாகரன் ஜே.எஸ்.சி சித்தியெய்திய தகுதியைப் பெற்றார். அவர் மேலேபடிக்கவில்லை. பள்ளியைக் குளப்பிவிட்டார். அவர் ஜே.எஸ்.சி படித்த காலத்தில் வகுப்பில் 31 பிள்ளைகள் இருந்தனர். அதில் 30 ம் பிள்ளையாக வரும் கெட்டித்தனத்தை எமது எதிர்காலப் புலித்தலைவர் பெற்றிருந்தார். அதாவது அக்காலப் பள்ளிக் கூடப் பாஷையில் 'கடைசிக்கு முதல்' பிள்ளையாக வருபவர்.
பிரபாகரன் காலப் பள்ளிப்படிப்பு என்பது பெரும் சித்திரவதையாகும். வகுப்பில் கடுமையாக அடி கிடைக்கும். வாத்திமார் கன்னத்தைப் பொத்தி அறைவார்கள். வாத்திமார் அதற்கென விதம் விதமான தடிகளை சீவி பதப்படுத்திகொண்டு வருவார்கள். சிலர் விஷேடமாக எப்படி அடித்தாலும் வளையாத உடையாத உறுதியான பிரப்பந்தடிகளைக் கொண்டு வருவார்கள். வீட்டுப்பாடம் ஒவ்வொரு மாணவ மாணவியும் செய்ய வேண்டும். வாய்க்கு வந்தபடி வாத்திமார் வகுப்பில் பேசுவார்கள். மொக்கு, கழிவு, சக்கட்டை, மண்டூகம், சோத்துமாடு என்று பட்டங்கள் தரப்படும். 'கொப்பர் உனக்குக் கோவணம் அவிட்ட நேரம் ஒரு தென்னம்பிள்ளை வைத்து இருந்தால் இப்ப அது நல்லாய்க் காய்க்கும்' என்று கூடத் திட்டுப்படுவார்கள். திறமையற்றவர்களாகக் கல்வியில் கணிக்கப்படுபவர்கள் சுயம் இழந்து தன்னம்பிக்கை வாய்த்திராதவர்களாக ஒதுங்கி வாழ்பவர்களாக மாறுவர். பிரபாகரனின் இளம் பிராயம் இத்தகைய வழியிலேயே தொடங்கியது. பள்ளிப் படிப்பு ஏறாதவனாக தாய் தகப்பன் சொற்கேளாதவனாக ஊர்சுற்றத்தொடங்கினார்.. தன் மகன் உருப்படாமற் போய்விட்டதாக தகப்பன் வேலுப்பிள்ளை பலரிடமும் முறையிடத் தொடங்கினார்.
திசையின்றி அலைந்த பிரபாகரன், கள்ளக்கடத்தலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் உழைத்த சின்னச்சோதியுடனும் அவருக்குத் துணையாக இருந்த குட்டிமணி தங்கத்துரையுடனும் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார். கள்ளக் கடத்தற் பொருட்களை ஏற்ற இறக்க பின்பு இந்தியாவுக்கு பொருட்களைக் கடத்திவரச் செல்லுமளவுக்கு இது வளர்ந்தது. இதே சமயம் பிரபாகரனுக்கு யாழ்கள்ளியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த சிறுவயதிலேயே மக்கோனா சிறுவர் நன்நடத்தைப்பள்ளியில் இருந்தவரான செட்டி என்று அழைக்கப்படும் தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார்.
இந்தச் செட்டி அப்பகுதியில் கொலைகள் கொள்ளைகள் என்பவற்றுடன் வங்கிக் கொள்ளையிலும் ஈடுபடத் தொடங்கியிருந்தார். பிரபாகரன் அவரைத் தலைவராக வரித்துக்கொண்டிருந்த சமயம் அது. ஒருமுறை தங்கத்துரையுடன் வாக்குவாதப்பட்ட பிரபாகரன் "செட்டிதான் என்தலைவன்" அவன் எத்தனை வங்கி அடித்தான். நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்? எனக் கேட்டார். இந்தச் செட்டியுடனான உறவே பிரபாகரனின் மாபியாத் தன்மையை உருவாக்கி புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கு மாதிரியாக அமைந்தது.
இது மேலே தொடர் கட்டுரைகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பாகங்கள் தொடரும் .. .. T111
0 comments :
Post a Comment