Tuesday, April 28, 2009

வன்னி மக்களுக்கு சோறு மட்டும் போதுமா ? - யஹியா வாஸித் -

இறைவன், கடவுள், அல்லாஹ், யேசு என ஆயிரம் கடவுள்களை பற்றி ஒவ்வொருவரும் பீத்திக் கொண்டாலும் எல்லாக்கடவுள்களும் ஒரு விடயத்தில் கொஞ்சம் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டுதான் இருப்பார்கள். நல்ல ஒரு பக்தன், இரவு பகலாக அவனை பூஜிக்கின்ற பக்தன் கிடைத்து விட்டால் போதும். அவனை சோதிக்கின்றோம் பேர்பழி என கூறிக்கொண்டு அவனை பரதேசியாக்கி இறுதியில். பக்தா உன் பக்தியை மெச்சினோம். இந்தா பிடி கேட்டவரம் என பார்வதி, பரமேஸ்வரன் சகிதமாக ஜெகஜோதியாக வந்து அருள் பாலித்து விட்டு கம்முன்னு போய்க் கொண்டே இருப்பார்கள். அதற்கிடையில் நமக்கு கடன் தந்தவன் எல்லாம் வந்து நம் உள்ளங்களை எல்லாம் நொருக்கிய கதை அவர்களுக்கெங்கே தெரியப் போகின்றது. இப்போது மொத்த கடவுள்களும் ( எமன்,இஸ்ராயில் அலைவஸ்ஸலாம்) வன்னியில் கேம்ப் போட்டு உட்கார்ந்து கொண்டு திருவிளையாடல் நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டில் தான் பெற்ற மகன் இறந்து கிடக்கின்றான். மகனை அடக்கம் செய்ய வழி தெரியாமல்
தாய் திணறிக் கொண்டிருக்கிறாள். திருநாவுக்கரசர் வந்து கதவை தட்டி தாயே பசிக்கிறது உணவு இருந்தால் தர முடியுமா என கேட்க. பிணத்தை மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு ஒரு தாய் உணவு படைக்கிறாள். அதே கடவுள் வைரவர் கோலத்தில் வந்து ஒரு தாயிடம் எனக்கு மனித தலைக் கறி வேண்டும் என்ற போதும் மகனை கொன்று தலைக்கறி செய்து இன்னும் ஒரு தாய் கொடுக்கின்றாள். இங்கே ஹிந்துக் கடவுள்கள்தான் இப்படி என்றால் இப்றாஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் உனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை காலையும் கையையும் கட்டி கழுத்தை அறு என உத்தரவிடுகின்றார். இப்படி ஒவ்வொரு கடவுள்களும் திருவிளையாடல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

எந்த ஒரு விடயத்தையும் ஒரு முறைக்கு பல முறை திட்டமிட வேண்டும் என்பதற்கு பாரிய உதாரணம் இப்போது வன்னியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கெரில்லாப் படங்களையும்,
ரோபோக்களையும் பார்த்துவிட்டு துப்பாக்கி சனியன்தான் இனி கடவுள் என கேடு கெட்டத்தனமாக முடிவெடுத்தெதால் வந்த விளைவு ஒரு சமூகத்தை, ஒரு கூட்டத்தை, ஒரு மனிதப் பட்டாளத்தை எவ்வாறு கஞ்சிக்கில்லாதவர்களாக்கி உள்ளது பார்த்தீர்களா. மனித நேயம்.., மனித நேயம்.., மனித நேயம்.. என்ற ஒரு கூப்பாடு எப்போது உன்னிடம் குடி கொள்கின்றதோ, உன் அடி மனதை ஆட்கொள்கின்றதோ அப்போதிருந்து நீர்தான் முதல் குடிமகன். நீர்தான் தலைவன். நீர்தான் தொண்டன். உனக்குத்தான் முதல் சொர்க்கவாசல் திறக்கப்படும் என அனைத்து வேதங்களும் பறைசாற்றுகின்றன. கடவுளை மற. மனிதனை நினை என்ற அனைத்து சோஷலிச, கலப்பு, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களும் இதையேதான் எழுதி, சொல்லி, நடாத்தி காட்டி விட்டு சென்றனர்.

அதனால்தான் மகாத்மா வாழ்கின்றார். மா ஓ செத்தும் சைனாவை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார். புத்தன் பாரிஜாதம் பண்ணிக் கொண்டிருக்கின்றார். முகம்மது நபி உலாவந்து கொண்டிருக்கின்றார்.

இந்த வருடத்தை மாவீரர் வருடமாக்காமல் கொஞ்சம் வன்னி மனிதப் புனிதர்களுக்கு கை கொடுக்கும் வருடமாக சிந்திப்போம். இப்போது அவர்களுக்கு உணவு தேவை, உடை தேவை, உறைவிடம் தேவை என அடுத்த கட்டத்தை நோக்கி அனைவரும் புறப்படத் தொடங்கி விட்டனர். இதை அரசும், ஏனைய அமைப்புக்களும் பார்த்துக் கொள்ளட்டும். பார்த்துக் கொள்வார்கள். இது அவர்களது கடமையும் கூட. இது எனது நாடு இந்நாட்டு மக்கள் அனைவரும் எனது பிரஜைகள் என மூச்சுக்கு முன்னூறு தடைவ சொல்லும் திரு.மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நிச்சயம் பார்த்துக் கொள்வார் என நம்புவோம். இல்லை செய்ய மாட்டார். ஒன்றுமே செய்ய மாட்டார் என ஏன் இப்போதே அடம் பிடிக்க வேண்டும். கொஞ்சம் விட்டுத்தான் பார்ப்போமே.

செய்வார். செய்து புழுத்துவார், செய்து கிழி கிழி என கிழிப்பார் என்று இலவுகாத்து கடைசியில் பங்கர் பங்கராக செய்து வைத்துள்ளதைத்தான் கடந்த சில மாதங்களாக பார்க்கின்றோமே. சேர்த்த பணத்தில் கொலகந்த கஞ்சி (சிங்கள கிராமங்களில் பொன்னாங்கண்ணி போன்ற ஒரு வகை கீரையால் கஞ்சி செய்து வீதிகளில் இலவசமாக வினியோகிப்பர்) தொட்டிகள் கூட செய்து வைக்கவில்லையே.

நாம் வியாபார நோக்க முள்ளவர்கள்தான். இன்று அரசியலும் ஒரு வியாபாரம்தானே. ஏன் நாம் சற்று வித்தியாசமாக அரசியல் வியாபாரம் பற்றி சிந்திப்போமே. அந்த மக்களின் கல்வி, விளையாட்டு, வளமுள்ள எதிர்காலம் பற்றி யோசித்தால் என்ன.

நிலா நிலா ஓடி வா.
நில்லாமல் ஓடி வா.
மலை மேல் ஏறி வா.
மல்லிகைப் பூ கொண்டு வா.

என்று போன வாரம் இந்த யுத்த சூழ் நிலையிலும் ரி.வீக்களில் மழலை பேசிய அந்த வன்னி சின்னஞ்சிறு குழந்தைகளின் எதிர்காலம் இனி ஒரு போதும் சூனியமாகிவிடக் கூடாது என ஒரு சொட்டு சிந்திப்போமே.

இன்று புலம் பெயர் நாடுகளில் உண்ணாவிரதம், கொடி பிடிப்பு, முடிந்த முடிவு தமிழீழம் என கனாக்காணும் அண்ணாக்கள், அக்காக்கள், இளையோர்களே உங்களது பேச்சுக்களையும் உணர்ச்சிகளையும் பார்க்கும் போது உங்களுக்கு எல்லாமே தெரியும் போல் தெரிகிறது. பிளீஸ் ஒரு தடைவ லண்டன் எக்ஸல் எக்ஸிபிஸன் சென்டரில் அடுத்த வாரம் ஒரு கொம்பியூட்டர் எக்ஸிபிஸன் நடக்க இருக்கிறது. அங்கு விதவிதமான லேட்டஸ்கொம்பியூட்டர்களும், யூஸ்ட்கொம்பியூட்டர்களும் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளீஸ் இரத்தத்தின் இரத்தங்களே.பிளீஸ். பணத்தை பணமென்று பார்காமல் கொஞ்சம் கொம்பியூட்டர் வாங்கி அந்த சிறுசுகளுக்கு அனுப்பிவையுங்கள்.

இல்லை இலவசமாக அனுப்ப முடியாது என்றால் கூட. குறைந்த விலைகளில் அவைகளை வாங்கி இரண்டு அல்லது மூன்று வருட இன்ஸோல்ட்மென்ட்(மாதக்கட்டண) அடிப்படையிலாவது அனுப்பி வையுங்கள்.

அந்த வன்னி மக்கள் ரொம்ப நல்லவர்கள். இப்போது அவர்களை கடவுள்கள் சோதித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாளைக்கு அவர்கள் பீனிக்ஸாக வந்து வட்டியுடன் உங்கள் கடனை அடைக்கும் திறன் அவர்களுக்கு நிறையவே உண்டு.

அதுவும் உங்களால் முடியாவிட்டால் இப்போதே எக்ஸல் ஹோள் போய் கொஞ்சம் கொம்பியூட்டரை குறைந்த விலையில் வாங்கி வையுங்கள். இன்னும் கொஞ்ச நாளில் விடயமெல்லாம் உள்ளங்கை நெல்லி கனியாக உங்களுக்கு வெளிக்கும். அப்போது கிளிநொச்சி போய் குட்டி குட்டி ரியூட்டரிகள் திறந்து செய்த பாவங்களுக்காவது பிராயச்சித்தம் தேடுங்கள். உங்களை போல் அவர்கள் டோல் பணத்திலும், கவுன்ஸில் வீட்டிலும் வளர்ந்தவர்கள் அல்ல. அதுகளுக்கு தெரிந்த தெல்லாம் நாத்து நட்டு பயிர் வளர்த்தால் வாழலாம் என்பதே. பிளீஸ் கொஞ்சம் புண்ணியம் தேடுங்கள்.

கனடாவில் அடுத்த வாரம் பாரிய கைத்தொழில் பொருட்காட்சி( மே 1, ஆகஸ்ட் 12, அக்டோபர் 19) நடக்க இருக்கிறது. உங்கள் பிள்ளைகளும், இந்த இளையோரும் இங்கே ஐக்கிய நாடுகள் சபையையே அதிரச் செய்ய அங்கே தண்ணீர் குடித்து பல நாட்கள் என பேட்டிகள் தொடருகிறது. நீங்கள் சீபீபீசி யும், பாபா பிளக் சீப்பும் படித்து வளர்ந்தவர்கள். பாவம் அதுகள் படுக்க பாயின்றி அலைகின்றன. பிளீஸ் ஒருக்கா கனடா கைத்தொழில் பொருட்காட்சிக்குப் போய் சிறிய தொகையில் தொழில் ஆரம்பிப்பது எப்படி, நவீன முறையில் குட்டி குட்டி இயந்திரங்களை உருவாக்குவது எப்படி, தொழில் நுட்பம், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட புத்தகங்களையும், குட்டிகுட்டி இயந்திரங்களையும் வாங்கி அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அபலைகளின் சாபம் பொல்லாதது உடன் பிறப்புகளே. இவ்வளவு காலமும் அவர்களின் வாழ்வில் நாம் அசைலம் எடுத்து வாழ்ந்து விட்டோம். இனியும் அவர்களின் சாவில் நாம் வாழாமல் அவர்களின் விடிவில் பங்கு கொள்வோம். சோறும், தண்ணியும், உடையும் அரசும் என்ஜிஓக்களும் கொடுக்கட்டும். அவர்களது அடுத்த பத்து வருட வளர்ச்சி பற்றி எல்லாம் தெரிந்த நாம் கொஞ்சம் புத்தியை கிளறுவோம்.

இப்படித்தான் சுனாமியின் போது சோறு சோறு என சோறு சேர்த்தார்கள். கடைசியில் எக்கச் சக்கமான அரிசியும், பருப்பும், உடு புடைவைகளும் வீதிகளில் பொது மக்கள் ஏலம் போட்டு விற்கும் நிலைக்கு வந்தது. ஒரு வேளை சோற்றுக்கு வழி செய்ய ஆயிரம் பேர் புறப்பட்டு விட்டார்கள். நீங்கள் புத்திசாலிகள், புத்திஜீவிகள், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்போகின்றவர்கள் என புலம் பெயர் நாடுகளில் கொத்தணிக்குண்டுக்கு விளக்கம் சொல்பவர்களே. அங்கு கொத்துக் கொத்தாக ஓலமிடும் அந்த ஜீவன்களுக்கு மூச்சுவிட வழி அமைத்து கொடுங்களேன்.

ஜெனிவா அடலேறுகளே இந்த ஆட்டத்தை எங்களுடைய பதினெட்டு வயதில் நாங்களும் ஆடினோம் புண்ணியவான்களே. இந்த ஆடு புலி ஆட்டம் சரி வராது என உங்கள் பரமாத்மா எங்களை எல்லாம் சுட்டுச் சாக்காட்டி, ஓட ஓட விரட்டி விட்டு. இப்போது அகிம்சை போராட்டம் என 20 வருடத்துக்கு பிறகு திருவாய் மலர்ந்தருளியுள்ளாரே. அகிம்சை போராட்டம் செய்ய உங்களுக் கென்ன கொழுப்பெடுத்தது. நீங்கள் தான் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரக் கூடிய ஐ.ரி.உலகில் வாழ்பவர்களாயிற்றே. .உங்களுக்கும் ஒன்றுமே புரியலையா அல்லது தலைவரிஷம் தலைக்கேறி விட்டதா.

தம்பிகளா.. நாளை மறுதினம் ஜெனிவாவில் அங்கவினர்களுக்கான உபகரண கண்காட்சி ( மே 5. மே12. ஜூன் 12, நவம்பர் 17) தொடங்க உள்ளது. பிளீஸ் ஒருவாட்டி விசிட் பண்ணுங்கோ தம்பிகளா. புண்ணியம் தேடுங்கோ தம்பிகளா. காசிக்குப் போனாலும் இவ்வளவு புண்ணியம் கிடைக்காது. அகதிக்கு தெய்வம் நேரடியாக வந்து உதவுவதில்லை. அது மனித உருவில்தான் உதவும். போங்கள் தெய்வங்களா. போய் செய்த மொத்த பாவங்களுக்கும் புண்ணியம் தேடுங்கோ. காது கேளாதவர்களுக்கு, கண் தெரியாதவர்களுக்கு, கை கால் ஊனமானவர்களுக்கு, வாய் பேச முடியாதவர்களுக்கு, எழும்பி நடக்கவே முடியாதவர்களுக்கென நவீன உபகரணம் தயாரிக்கும் 487 கம்பனிகள் உலகம் முழுதும் இருந்து ஜெனிவா வர உள்ளன.

நீங்கள் நாட்டுக்கு நாடு புட்போல் கிளப் வைத்து வல்வை ரீம், மகஜன ரீம் என கொழுப்பெடுத்து அடிபிடி பட ஒன்றுமே தெரியாத ஒரு கூட்டம் சோத்துக்கு லாட்டரி அடிப்பதை மனக்கண்ணில் கொஞ்சம் துள்ளி விளையாட விடுங்கள். ஐயகோ அந்த தமிழச்சியின் பிள்ளை காதில்லாவிட்டாலும் நாளை அவள் செவிட்டு மெசினுடன் உலக அரங்குக்கு வர பிளீஸ் ஒருக்கா ஜெனிவா மெடிக்கல் அன்ட் ஓர்ப்பன்ஏஜ் எக்ஸிபிஸனுக்கு போங்கோ.

காது கேளாதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உபயோகிப்பதற்கான மொபைல் போன் அளவிலான சிறிய கருவி, இரு கையும் இல்லாதவர்கள் இயக்கக் கூடிய கொம்பியுட்டர்,
கால் இல்லாதவர்கள் காலில் மாட்டிக் கொண்டு இயக்கக் கூடிய பொய்க்கால்கள்,
இசைக்கருவிகள், சிந்தனையை தூண்டக் கூடிய விளையாட்டு உபகரணங்கள், வீட்டில் உட்கார்ந்து கொண்டே குறும் படம் தயாரிப்பது எப்படி என ஆயிரம் உபகரணங்களும் விளக்க நூல்களும் அங்கு விற்பனைக்கு வரப் போகின்றது.

கத்திகளையும், துப்பாக்கிகளையும் தீட்டியது போதும். கொஞ்சம் புத்தியையும் தீட்டுங்கோ. ரொம்ப புண்ணியமா போகும். நீங்கள் உண்ணாவிரதம் இருந்து, கொடி பிடித்து உலகை பேச்சு வார்த்தை மேடைக்கு கொண்டுவரும் போது வன்னித்தமிழன் செத்து விடுவான். அவனுக்கு இனிஒரு ஜென்மம் எடுக்க முடியாது. எடுத்த ஜென்மங்கள் எல்லாம் போதும். நீங்கள் ஸ்கூள் லீவுக்கு வந்து கொடிபிடித்து விட்டு ஓடி விடுவீர்கள். அவளுக்கு அங்கு பாடசாலையே கிடையாது. நவீன பாட சாலை உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் என வாங்கி இலவசமாக அனுப்புங்கள் அல்லது குறைந்த விலைக்கு கொடுத்துதவுங்கள்.

317 விளையாட்டு கழகங்களை உலகம் முழுவதும் வைத்துள்ளீர்கள். இதுவரை கூடி கூத்தாடி இறுதியில் வெட்டுக் கொத்து பட்டுக் கொண்டு போவதைத்தான் கண்டுள்ளோம். தயவு செய்து நீங்கள் எல்லாம் சேர்ந்து நவீன விளையாட்டு உபகரணங்களை வாங்கி அனுப்பி அடுத்த ஒலிம்பிக்குக்கு இல்லாவிட்டாலும் 2016 ஒலிம்பிக்குக்காவது வன்னியில் உள்ள ஒரு சிறுசை கொண்டு வந்து நிறுத்தி மொத்த பாவத்துக்கும் பிராயச்சித்தம் தேடுங்கள். கேகல்ல காட்டில் பிறந்த ஒரு சுசந்திகா ஒலிம்பிக்கிக்கு வர முடியுமென்றால் எல்லாம் தெரிந்த உங்களால் ஏன் இரண்டு பேரை உருவாக்க முடியாது.

கடந்த 25 வருடங்களாக நாங்கள் செய்த இத்தனூண்டு பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கின்றோம். அதுவே இன்னும் முடிவதாக இல்லை. கடவுள் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் மகா,மகா,மகா பாவங்கள் செய்துள்ளீர்கள், செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

பெல்ஜியத்திலும், பிரான்ஸ் லார்ச்சப்பிளிலும் முரண்டு பிடிக்கும் எதிர்கால விடி வெள்ளிகளே மே, ஜூன் மாதங்களில் இவ்விரண்டு நாட்டிலும் உணவு பொருட்காட்சி நடக்க இருக்கின்றது. இதில் கோழி முட்டையை உடைத்து காயவைத்து எவ்வாறு பவுடராக்குவது (எக் பவுடர் மேக்கிங் மெசின்) என்பது தொடக்கம் இறைச்சி வகைகளை உலர வைத்து பதப்படுத்தி சிறிய பொலித்தீன் பாக்கட்டுகளில் எவ்வாறு அடைப்பது என்பது வரை சிறிய ரக இயந்திரங்கள் வர இருக்கிறது. பிளீஸ் அண்ணாக்களே இவைகளை வாங்கி அனுப்பி உங்கள் கறைகளை போக்கிக்
கொள்ளுங்கள் முள்ளில்லா ரோஜாக்களே. உங்கள் கல்வியறிவு பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் குழந்தைகளே. வெழுத்த தெல்லாம் பாலென்று நினைத்து விடாதீர்கள் பிஞ்சுகளே. ரொம்ப காலத்துக்கப்புறம் இந்த வன்னி மைந்தர்கள் பசுத்தோலுடன் உலாவருகின்றனர்.

உலகத்திற்கே துப்பாக்கி சனியனை விற்று பல லட்சம் மக்கள் முடமாக காரணமாக இருந்த
ஒரு வெள்ளையன். புத்தி தெளிந்து சிறிலங்கா வந்து ஜாஎல வத்தளையிலும், கண்டியிலிருந்து 32 மைல் தொலைவில் காட்டுக்குள் மலை உச்சியிலும் 532 அனாதைகளை வைத்து தாயாக, தந்தையாக, குழந்தையாக, மகாத்மாவாக இருந்து குடும்பத்துடன் ஓ என்று கண்ணீர் விட்டழுது கொண்டிருக்கின்றான் உறவுகளே. நீ பெற்றுள்ள பட்டம், பதக்கம், டிப்ளோமா எதையும் கடவுள் கண்ணெடுத்துப் பார்க்கப் போவதில்லை. அவர் உன்னிடம் எதிர் பார்ப்பதெல்லாம் நீ செய்துள்ள தியாகத்தின் தழும்புகளைத்தான் இளசுகளே.

கடந்த நான்கு வருடத்துக்கு முன் ஐரோப்பாவுக்கு விசிட்டிங் விசாவில் தனதுமகளைப் பார்க்க வந்து ஆறு மாதம் தங்கிவிட்டு போன புதுக்குடியிருப்பு தாயொருத்தி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வர முயன்ற போது போன வாரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஐரோப்பாவில் இருந்த போது எனது மனைவி எட்டுமாத கர்ப்பிணியாக இருந்தார். எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் வரையும் கிட்டத்தட்ட ஒரு மாதம் எங்கள் வீட்டுக்கு இரவு பகலாக வந்து பத்தியச் சாப்பாடு எனக்கூறிக்கொண்டு எதை எதையோ எல்லாம் அரைத்தும் சமைத்தும் கொடுத்தார். என் மனைவி திட்டிக் கொண்டிருந்தார். இந்த கிழவிக்கு வேலையில்லை. கண்டது கடியது எல்லாம் தின்னச் சொல்லுகின்றார் என. அவளது கைப்பக்குவம், கைராசி, முகராசி என என் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்தது. எனது குழந்தையின் பிறந்த தினத்துக்கு முதல் டெலிபோன் கோள் அந்த கிழவிதான் வன்னியில் இருந்து பண்ணுவாள். அடுத்த வாரம் என் மகளுக்கு ஐந்தாவது பிறந்த தினம். ஆனால் இம் முறை புதுக்குடியிருப்பில் இருந்து டெலிபோன் கோள் வரவே வராது என்ற சங்கதியை நாங்கள் இன்னும் எங்கள் மற்ற பிள்ளைகளுக்கு சொல்லவில்லை. இனியும் சொல்லப்போவதுமில்லை. இப்படி ஆயிரம் சங்கதிகள் மதங்களை கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. இயற்கை மரணம் என்ற செய்திகளை மட்டும்தான் இனி நாம் வன்னியில் இருந்து அறிய வேண்டும். கேட்க வேண்டும். அகால மரணம் இனி எங்களுக்கு வேண்டாம். ஆத்மார்த்தமான இயற்கை மரணம் எங்களுக்கு வர ஆவன செய்யுங்கள் உறவுகளே. VIII


28-04-2009

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com