Sunday, April 26, 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும். ( பாகம் 10 ) - யஹியா வாஸித் -


உங்கள் மனம் கடினமான வயல் கடின உழைப்பிற்கு ஏற்ற விழைச்சல் நிச்சயம் கிடைக்கும்.


மேற்கே கொழும்பை அண்டிய பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வர்த்தகர்களும், பிரமுகர்களும், உல்லாசப் பிரயாணிகளும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள், கிழக்கில் ஒருபக்கம் அடை மழை அதோடு போட்டி போட்டுக் கொண்டு வெள்ளம் அதே நேரம் அமோக நெல்விழைச்சல், தெற்கே கடல் வாழ் மீன்களும், மாணிக்க கற்களும், மத்தியில் தேயிலை, இறப்பர், கைவினைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், வடக்கில் யுத்தம் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு வெங்காயம், புகையிலை செய்கை என சகல காலநிலைகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு நாடு இருந்ததென்றால் அது சிறலங்கா என்ற நாட்டை தவிர வேறு எந்த நாடுமே கிடையாது. ஆனால் நாம் எல்லாவற்றையும் ரொம்ப அழகாக தொலைத்து விட்டு வாலைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எல்லா வளமும் நிரம்பிய நாம் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்கின்றோம். பல்கலைக்
கழகத்தைவிட்டு வெளியேறிய அடுத்த நாளே வேலைதா என அரசை நெருக்க ஆரம்பித்து விடுகின்றோம். பல்கலைக்கழக கல்வி என்பது உன்னையே நீ உணர்ந்து நீயாகவே ஒரு தொழிலை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவே வழங்கப்படுகிறது.

வாழை மரத்தை எப்படி நடுவது, எத்தனை மாதங்களில் காய்க்கும், அதை எவ்வாறு பழுக்க வைப்பது, பழத்தை எவ்வாறு உரித்து தின்பது என வழிகாட்டவே அரசே தவிர மரத்தை நட்டு
பழத்தை கொண்டு வந்து உரித்து உன் வாய்க்குள் வைப்பதற்கல்ல. எனவே கொஞ்ச காலத்துக்கு அரசை மறந்துவிடுவோம். அவர்களுக்கு அடுத்துவரும் வருடங்களில் நிறைய வேலை இருக்கின்றது. அதை அவர்கள் கச்சிதமாக முடிக்கட்டும். நாம் நமது வீட்டுப்பற்றுடையவர்களாக மாறுவோம். ஓவ்வொருவரும் அவ்வாறு மாறும் போது தானாகவே நாடு உருப்படும்.

நாடு பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் போகப்போகின்றது. நிறைய வியாபாரங்கள் களைகட்டப் போகின்றது. உலகம் முழுதும் சகல துறைகளிலும் உள்ள நம்மவர்கள் மூட்டைகளில் கட்டிவைத்துள்ள பணங்களுடன் வந்து குவியப்போகின்றார்கள். காணி விலை,
வீட்டு விலை, பழைய இரும்பு விலைகளிலிருந்து உழுத்துப் போன கொட்டப் பாக்குவரை சந்தையை ஆக்கிரமிக்கப் போகின்றது. இப்போதே அடுத்த வருடத்தை டார்கட் பண்ணி வியாபாரத்தில் இறங்குங்கள்.

வட மாகாணம் முழுக்க கட்டுமாணப் பணிகள் தொடங்கப் போகின்றது. இரும்பு பாரிய அளவில் தேவைப்படும். இரண்டு கோடி ரூபா முதல் ஆறு கோடி ரூபாவில் இரும்புகளைத் தயாரிக்க கூடிய இரும்பு ஆலைகள் இந்தியாவில் பஞ்சாப் லூதியானா இண்டஸ்ரியல் சூனில் இருக்கின்றது. இவைகளை வாங்கிவந்து வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நிறுவினால் 75 வீதம் நெட் புறபிட் நிச்சயம். அடுத்த ஓரிரு மாதங்களில் உறவினர்களை பார்க்க வவுனியாவிற்கு புலம்பெயர் நாடுகளிலுள்ளவர்கள் வரப்போகின்றார்கள். அவர்கள் தங்குவதற்கு வாடகை வீடு, உணவு என்பன தேவைப்படப் போகின்றது. அத்துடன் தொலைபேசிவசதி,வாகன வசதி என்பவற்றுக்கெல்லாம் பாரிய தேவை ஏற்படும். இப்போதே அதற்குரிய திட்டங்களை வகுக்கலாம். இணையத்தளங்களுக்கு மெயில் எழுதிய வவுனியா, கிளிநொச்சி சகோதரர்களே இதை கொஞ்சம் சீரியசாக யோசியுங்கள். உங்கள் பொருட்களை உலகத்தரத்தில் சந்தைப்படுத்தி நீங்களும் நிமிர்ந்து நில்லுங்கள். மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்கு மணமில்லை எங்கள் வீட்டு வாழைப் பூவும் மணக்கும் என தெரியப்படுத்துங்கள்.

வட பகுதியில் உள்ள காய்கறி, குறிப்பாக பழவகைகளை உலர வைக்கக் கூடிய சிறிய இயந்
திரங்கள் உலகம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றது. புறுட் ட்ரையர் டொட் கொம் என்று இன்டர் நெட்டில் தடவினால் அனைத்தும் விரியும். 100 டொலரில் இருந்து 5000 டொலர் வரை நமது வசதிக்கேற்ப வாங்கலாம்.இனி பழவகைகளை தூக்கி வீச வேண்டிய அவசியமேயில்லை. இவ்வியந்திரத்தில் உலர வைத்து சேகரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம்.

உலகமே சனத்தொகைப் பெருக்கத்தால் திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஒத்த வகையில் விஞ்ஞானமும் வளர்வதால் சுற்றுச் சூழல் மாசடைந்து மக்கள் மத்தியில் புதுப் புது வருத்தங்களும், அசௌகரியங்களும் ஏற்பட்டுக் கொண்டே போகின்றது. இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என பல வகையான மருந்துகள், நுண்உயிர் கொல்லிகள், கிருமிநாசினிகள் என தினம் தினம் வந்து கொண்டே இருக்கின்றது. இவைகளை பணம் கொடுத்து வாங்கி நாமும் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இயற்கை தந்த அவ்வளவு வளமும் நம் கண் முன்னே நமது காலடியிலேயே கொட்டிக் கிடக்க நாம் நெய் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம். இப்போது புதிதாக ஒரு புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள் ஓசோன் படலத்தில் ஓட்டையாம். இனி அதை சொல்லிக் கொண்டு கொஞ்சம் மருந்து வியாபாரிகள் நமது வேப்பம் பட்டையை அரைத்து, அழகாக வடிவமைத்து மேல் பாகத்தில் இனிப்புத்தடவி நமக்கே விற்கப் போகின்றார்கள்.

ஏன் அதை நாமே தயாரித்தால் என்ன. சிறிலங்காவிலேயே வேப்பமரம் அதிகமுள்ள பகுதி யாழ்ப்பாணம். இதை நாம் ரொம்ப கசப்பானது என்று சொல்லித்திரிகின்றோம். ஆனால் வைத்திய ஏடுகளில் இனிக்கும் வேம்பு என்றுதான் எழுதி ஜமாய்த்திருக்கின்றார்கள். சுற்றாடலுக்கு குளிர்ச்சியையும், சுவாசிப்பதற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த வேப்ப மரத்தடியில் தலையிடி, தலைச்சுற்றல், உடம்பு உளைச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்திருந்தால் அனைத்தும் பறந்தோடி ஒரு உட்சாகமும், புத்துயிர்ப்பும் வந்து விடும்.

ஆயிரக்கணக்கான டொலர் செலவு செய்து கேரளா போய் இந்த வெள்ளையர்கள் எல்லாம் எடுக்கும் ஹேர்பள் பாத் இன் ரகசியமும் இந்த வேப்பமரம்தான். நம்மட கொஞ்சம் புதுப் பணக்காறர்களும் பேங்கொக் போய் ஹேர்பள் பாத் எடுப்பதாக கேள்வி. வேப்பம் குருத்தை அரைத்து காலையில் உண்டு பெரும் பாடகர்கள் தமது குரல் வளத்தை பேணிவருவதுடன், வேப்பம் பூவை காயவைத்து வடகம் போட்டு உணவுடன் சேர்த்தும் உண்டு தங்களுக்கு மட்டும் தான் கணீர்குரல் என பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள.

கூகை கட்டு வந்தால் கறிமஞ்சளுடன் அரைத்து வீக்கத்துக்கு இதை பூசுவார்கள் என்ற சங்கதிதான் எமக்கு தெரியும் ஆனால் மகப்பேற்றின் போது தாய்மாரை குளிப்பாட்ட வேப்ப இலைகளை நீரில் போட்டு அவித்த தண்ணீரையே முழு ஆபிரிக்காவும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றது.

வேப்பம் விதைகளை நன்கு சுத்திகரித்து அதிலிருந்து வேப்பெண்ணை பெறுவார்கள். சிறு குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பு,தொண்டை கட்டி வந்தால் இந்த எண்ணையை தடவுவார்கள; பூச்சி கொல்லி, பூச்சி நாசினியாகவும் இவ்வெண்ணை பயன்படுகிறது. சட்டியில் நெருப்புத் தணல்களை போட்டு எரித்து வேப்ப இலையை அல்லது விதையை அதில் தூவி நுளம்பை விரட்ட நமது தாய்மார் உபயோகித்த போது நாம் மூக்கை சுளித்தது ஞாபகத்துக்கு வரலாம். ஆனால் அப்போது நாம் அந்த புகையை சுவாசித்திருந்தால் இப்போது நமக்கு வந்திருக்கும் அரைவாசி நோய் பறந்திருக்கும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி மட்டுமல்ல இதிலிருந்து எண்ணை எடுத்த பின் மீந்து போகும் சக்கை இலுப்பை பிண்ணாக்கு என்ற பெயரில் உரமாகவும், ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் வேப்பம் குழையையும் கலந்து ஆட்டுக்கு கொடுத்தால் ஆட்டு தீவன செலவு குறைவதுடன் ஆடுகளை ஒரு நோய் நொடியும் அண்டவே அண்டாதும் செய்யலாம். வீட்டுத் தளபாடங்களாகவும் இன்று வேப்ப மரம் உலக வலம் வந்து கெண்டிருக்கின்றது.

அது சரி இதனால் என்ன வியாபார இலாபம் அடையலாம் என யோசிக்கின்றீர்களா.அங்குதான் நீங்கள் உங்கள் புத்தியை கொஞ்சம் தீட்ட வேண்டும். கொழும்பு கண்டி வீதியில் கொழும்பிலி
ருந்து 40 மைல் தொலைவில் சித்தாலேப மருந்து கம்பனி இருக்கின்றது. இரண்டாயிரத்துக்கு அதிகமானவர்கள் வேலை செய்கின்றார்கள். உலகம் முழுதும் இந்த சித்தாலேப ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவர் ஒரு லேகிய வியாபாரி. திடீரென இவருக்கு ஒரு குட்டி ஐடியா வந்து இண்டஸ்ரியல் டெவலப்மென்ட் போர்ட் கதவுகளை போய் தட்டியுள்ளார். நமது நாட்டிலுள்ள மூலிகைகளை நவீனப் படுத்தி ஏற்றுமதி செய்ய முடியாதா என கேள்வி மேல் கேள்வியாக கேட்டு அதிகாரிகளை துளைத்துள்ளார். பிறகென்ன அபுல்கா காசம் அண்டா காகாசம் திறந்துடு கதவே என்ற கதையாக அனைத்துக் கதவுகளையும் திறந்து அவருக்கு ஆலோசனை செய்துள்ளனர். முதலில் நிட்டம்புவயில் ஆரம்பித்த வியாபாரம் மௌ;ள மெதுவாக சூடு பிடித்து இப்போது புலம் பெயர்நாடுகளில் உள்ள கடைகளில் ஜொலிக்கிறது.

அமெரிக்கன் எம்பசிக்கும், பிரிட்டிஷ் எம்பஸிக்கும் முன்னால் தவம் இருப்பவர்கள் இவைகளுக்கு நேர் முன்னால் இருக்கும் இண்டஸ்ரியல் டெவலப்மென்ட் போட்டுக்கும் நாலு வேப்பிலையை எடுத்துக் கொண்டு போய் பாருங்கள். விஸா றிஜக்ட் ஆனாலும் கூட வேப்பிலை மகாத்மியம் பாஸாகலாம். உலகம் முழுக்க நம்மவரின் கடைகள் வேரூன்றி இருக்கின்றது. எவ்வளவுதான் இருமலுக்கு புலம்பெயர் நாடுகளிலுள்ள கோப் சிரப்புகளைக் குடித்தாலும் பனங்கல்கண்டு சிறிதளவை எடுத்து வாய்க்குள் போட்டு உமிழ்ந்தால்தான் இருமலே பறக்கிறது. அது போல் இனி வேப்பிலையையும் ஏதோ ஒரு வடிவில் கொண்டுவருவோம்.

மாம்பழத்தை ஜாலியாக தின்றுவிட்டு அதன் கொட்டையை தூக்கி தூர வீசி விடுவோம். நாம் எப்போதும் அப்படித்தானே இருக்கின்றோம். ஒருவரிடமிருந்து உருப்படியான விடயங்களை எல்லாம் கறந்து விட்டு பிறகு மண்டையில் போட்டு எட்டப்பன் என்று போஸ்டர் ஒட்டி சங்கி
லியன் பஞ்சாயத்து வந்து உரிமையும் கோரிவிடும். ஆனால் மாங்கொட்டையிடம் அந்த பாச்சா பலிக்காது. தூர வீசினாலும் நான் இரும்பையும் கரைப்பேனாக்கும் என முரண்டு பிடித்துக் கொண்டு வந்து நிற்கும்.

ஒரு கிலோ அளவு மாங்கொட்டையை எடுத்து உள்ளே இருக்கும் பருப்பை மிககவனமாக ஜ(ச)
வ்வுகளை எல்லாம் அகற்றி எடுத்து. சிறிது தண்ணீர் விட்டு மைபோல அரைத்து ஒரு குட்டி பாத்திரத்தில் ஊற்றி. லேத் பட்டறைகளிலிருந்து எடுத்துவரப்பட்ட இரும்புத்தூள் 50 கிராமை இதனுடன் நன்கு கலக்கி. வெயிலில் வைத்து விட்டு இரண்டு மணிநேரத்தின் பின்பார்த்தால் பாத்திரத்தில் கரு நீலநிற திரவம் தெரியும்.ஆம் இப்போது எடுத்துப் பாருங்கள். இரும்பு கரைந்து விட்டது தெரியவரும். கரைந்த பின் நன்கு வடிகட்டி வரும் மீதியை மீண்டும் காய வைத்தால் கூழ் போன்ற ஒரு திரவம் வரும். அது தான் துணிகளுக்கு போடப்படும் நம்பர் ஒன் சாயமாகும். அதுமட்டுமல்ல நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் பேனா ரீபிளுக்குள் இருக்கும் மையும் இதுவே. மாங்கொட்டையிலிருந்து பெறப்படும் கொழுப்பினால் வாசனை சோப் தயாரிக்கலாம். உலகின் மிக தரமான சோப்புகள் மாங்கொட்டையினாலேயே தயாரிக்கப்படுகின்றன. மாம் பூவை காய்வதற்கு முன் சேகரித்து ஸ்டீம் டிஸ்ரிலேஷன் என்ற முறையில் பூவில் கலந்துள்ள பொருள்களை பிரித்து அதி உயர்ந்த வாசனைத்திரவியம் தயாரிக்கப்படுகின்றது.

இவ்வாறு பூவிலிருந்து எண்ணையை எடுத்த பின் மீதியாக உள்ள பொருளை மிக நன்றாக காய வைத்து அரைத்து தயாரிக்கப்படுவதுதான் வயிற்றுப் பேதியை நிறுத்துவதற்காக நாம் உபயோகிக்கும் மாத்திரைகள். பெண்களின் தலையில் இருக்கும் ஈரையும், பேனையும் ஒழிக்கும் சக்தி மாம்பூவிலிருந்து தயாரிக்கும் எண்ணைக்குத்தான் உண்டு.இன்னும் பல மகாத்மியம் இங்த மாவிலைக்கு உண்டு.

முட்டாள்கள் விமர்சிப்பார்கள்.குறை கூறுவார்கள்,மறுப்பார்கள் நீங்கள்
தொடர்ந்து செல்லுங்கள்.அவர்களுக்கு நின்று காது கொடுக்காதீர்கள்.
அவர்களுக்கு வேலையே இல்லை.உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.


( தொடருவேன்....) T111


25-04-2009


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com