கருணா என்கின்ற முரளிதரனுக்கும்.கிழக்கு மாகாண மக்களுக்கும். -யஹியா வாஸித் -
இன்றைய காவியங்களுக்கு பிள்ளையர் சுழி போட்டவர் என அனைவராலும் சொல்லப்படுகின்ற
கருணா என்ற முரளீதரன் என்ன செய்கின்றார், செய்யப் போகின்றார் என்பதுதான் இப்போது அனைவரினதும் எதிர்பார்ப்பு.முழுக்க முழுக்க இராணுவ பாசறையில் வளர்ந்த இவர்,அந்த பாணியிலேயேதான் கிழக்கையும் கொண்டு செல்லப் போகின்றாரோ என பலர் அவருக்கு கொம்புசீவ நினைத்துக் கொண்டிருந்த போது கிழக்கின் அபிவிருத்தி மிக மிக முக்கியம்
முதலீட்டாளர்களே வாருங்கள் ,கிழக்கில் முதலிடுங்கள் என அவர் காய்நகர்த்தி இருப்பது மிக ஆரோக்கியமாகவும் ,பாராட்டும் படியாகவும் இருக்கின்றது.
பல வருடங்கள்,பல வகையிலும் சீரழிந்து கிடக்கின்ற கிழக்கின் பொருளாதாரத்தை வெறுமனே
அரசை மட்டும் நம்பியிராமல் முதலீட்டாளர்களையும் அழைத்துள்ளது நல்லதொரு திருப்பம்தான். ஆனால் இந்த கொழும்பு முதலீட்டாளர்களால் மட்டும்தான் எமது பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா ? ஏன் போரதீவிலும் , வாழைச்சேனையிலும், திருகோணமலையிலும் உள்ள நம்மவர்களால் முடியாதா? கொழும்பு முதலாளிகள் வந்து முதலிடுவதால் எம்மவர் 2000 பேருக்கோ அல்லது 10ஆயிரம் பேருக்கோ வேலை கிடைக்கலாம்.
ஆனால் முற்று முழுதாக இதன் பயனை அடையப்போகின்றவர்கள் இந்த கொழும்பு முதலாளிகளே ! நாளை ஒரு சுனாமியோ அல்லது சூறாவழியோ வந்தால் மொத்த நஷ்ட ஈட்டையும்எடுத்துக் கொண்டுஅவர்கள் நகர்ந்து விடுவார்கள்.அல்லது இந்த முதலீட்டைக்காட்டி வங்கிகளில் பாரியளவு கடன்களைப் பெற்று தங்களுக்கு வேண்டிய பகுதிகளில் (வட கிழக்குக்கு வெளியே )முதலீடுகளைச் செய்வார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன் குஜாராத்தில் பாரிய பூகம்பம் ஏற்பட்டு ஒரு மாவட்டமே அழிந்தது.
அது ஒரு வரண்ட பிரதேசம். 3லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அழிந்தனர்.பல வருடங்கள் அப்பகுதிக்கு போவதற்கு வசிப்பதற்கு மக்களே பயந்தனர். அப்போதைய குஜாராத் அரசு
மொத்த இந்திய முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்தது.பாரிய முதலீட்டு சலுகைகள்
வழங்கியது.வங்கிக் கடன்,வரிச்சலுகை,ஏற்றுமதி வரிச்சலுகை என. 5 வருடத்தில் இந்தியாவில் உள்ள மொத்த கம்பனிகளும் அங்கு முகாமிட்டன.ஆனால் அந்த மக்கள் இன்னும் கஞ்சிக்கு வழியின்றியே இருக்கின்றனர்.
ஏன் நமது நாட்டில் கூட ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் ஆடை உற்பத்திக்கு முதலிடம் கொடுத்து ,பாரிய வரிச்சலுகைகள் அளித்து காளான் கணக்காக ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உதித்தன.என்ன நடந்தது ? 5 வீதமானவர்கள் தவிர ஏனைய அனைவரும் (முதலீட்டாளர்கள் எனச் சொல்லப்படுவோர்) அரசு கஜானாவை காலிசெய்து விட்டு இன்டர் கூலர்களில் பறந்து திரிந்தனர்.அந்த சிங்கள அப்பாவிச் சனங்கள் இன்னும் 'கஹட்ட தேனீர்'( சக்கரை கட்டியை கடித்து) குடித்துக் கொண்டுஇருக்கின்றனர்.
வட கிழக்கு இணைந்த தமிழீழத்தின் சூத்திரமே வடக்கின் மூளை வளம்,கிழக்கின் மனித வளத்துடன் கூடிய பொருளாதார வளம்.அவ்வளவு வளத்தையும் உள்ளங்கை நெல்லிக்காயாக
வைத்துக் கொண்டு ஏன் நாம் நெய்க்கு அலைய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிழக்குமாகாணத்துக்கும் இப்போதிருக்கும் கிழக்குமாகாணத்துக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. முன்னர் நமக்குத் தெரிந்தெதெல்லாம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி மட்டும்தான்.
இப்போது களுதாவளை பிள்ளையாரடியில் போய் அவ்வழியால் போகின்ற 8 வயது சிறுவனை அழைத்து 'தம்பி உன்னுடைய அண்ணா எங்கே'எனக் கேட்டால்,
ஹொலன்டில் எங்கிருக்கிறார் ?என்ன செய்கிறார் ? காலையில் என்ன சாப்பிட்டார் ? இரவுக்கு என்ன சாப்பிடுவார் ? ஹொலன்டின் நீள அகலம் என்ன என புள்ளி விபரங்களுடன் சொல்வார்.அந்த அளவுக்கு நம்மவர் விபரத்துடன்,விபரமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் நாம் ஏன் தொடர்ந்தும் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டும் ?சிறிது வித்தியாசமாக சிந்தித்தால் என்ன ?இன்று உலகில் உள்ள மொத்த வியாபாரிகளையும்
அவ்வவ் நாடுகளில் உள்ள 'சேம்பர் ஒப் கொமர்ஸ்'தான் கட்டிப் போடுகின்றது.அதாவது
ஒரு கிராமத்திலோ அல்லது ஒரு நகரத்திலோ உள்ள பத்தோ .பதினைந்தோ விபாரிகள்
சேர்ந்து ஒரு வர்த்தக கூட்டமைப்பை உருவாக்குவது. அதாவது செங்கலடியில் உள்ள 15
வியாபாரிகள்(புடைவை வியாபாரி,கோழி வியாபாரி,பல சரக்குகடை,மீன்,நெல் அரைக்கும்
இயந்திரம் வைத்திருப்பவர்,ரியுட்டரி நடத்துபவர் என யாராயினும்) சேர்ந்து 'செங்கலடி சேம்பர் ஒப் கொமர்ஸ்' என உருவாக்கலாம்.அதே செங்கலடியில் இன்னும் பலர் சேர்ந்து 'செங்கலடி வடக்கு சேம்பர் ஒப் கொமர்ஸ்'என உருவாக்கலாம்.இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் ,நகரத்திலும் உருவாக்கலாம்.உலக,வெளிநாட்டு வர்த்தகர்களை தனி ஒரு வியாபாரியாக தொடர்பு கொள்வதைவிட ,இந்த சேம்பர்கள் ஊடாக தொடர்பு கொள்வதற்கு வலு அதிகமாக இருக்கும்.
இதை அரசு கட்டுப்படுத்தாது.பூரண சுதந்திரத்துடன் இயங்கலாம்.உலகில் உள்ள ஒவ்வொரு
நாட்டிலுமுள்ள சேம்பர்களுக்கு நமது உற்பத்திகள்,நம்மிடம் உள்ள மூலப்பொருள்கள் பற்றி
தொடர்பு கொள்ளலாம். கட்டார் சேம்பர் ஒப் கொமர்ஸ்,பெல்ஜியம் சேம்பர் ஒப் கொமர்ஸ்,பிரான்ஸ்சேம்பர் ஒப் கொமர்ஸ் என நம்மிடமுள்ள ஒவ்வொரு பொருள்பற்றியும் ஈமெயில் பண்ணலாம்.
சிறிலங்காவில் இப்படி பலசேம்பாகள் இருக்கின்றன.கொழும்பு சேம்பர்,நேஷனல் சேம்பர்,
பெடரேஷன் சேம்பர்,சென்றல் புறவின்ஸ் சேம்பர்,கண்டி சேம்பர்,லேடீஸ் சேம்பர், கேகல்ல சேம்பர்,யாழ் சேம்பர்,சாவகச்சேரி சேம்பர்,ஹம்மாந்தோட்டை சேம்பர்,மொனறாகலை சேம்பர்,புத்தள சேம்பர்என பல நுறு சேம்பர்கள் இருக்கின்றன இவைகள் ஊடாகத்தான் மொத்த வியாபாரமும் நடக்கின்றது.
ஏன் நாம் எல்லாவற்றுக்கும் கொழும்பை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக காலி 'அல்பிட்டிய' என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்.இவர் ஒரு கறுவாப்பட்டை வியாபாரி. பத்தாயிரம் ரூபா பணத்தை வைத்துக் கொண்டு அல்பிட்டிய பகுதியில் உற்பத்தியாகும் கறுவாப்பட்டையை வாங்கி தினமும் கொழும்புக்கு கொண்டு போய் விற்றுக் கொண்டிருப்பவர். இப்படியாக பல வருடம் அல்லாடிக்கொண்டிருந்தார்.காலியில் ஒரு சேம்பர் உருவானது.யாரோ ஒரு நண்பர் இவருக்கு ஆலோசனை சொல்லளூ100ரூபா செலுத்தி அங்கத்தவரானார். அடுத்த நாள்முதல் காலிசேம்பரில் இருந்துபல ஈமெயில்கள் உலகம் முழுதும் சென்றது.ஆம் கனடாவில் உள்ள ஏதோ ஒரு சேம்பரில் இருந்து மூன்று மாதத்தில் ளூ எமது அங்கத்தவர் ஒருவருக்கு கறுவா தேவை.ஐந்து வருடத்துக்கு மாதம் 1000 கிலோ தேவை என ஓடர் வந்தது.இவர் கொழும்பில் கிலோவுக்கு 10ரூபா இலாபத்தில்தான் விற்றார்.இப்போது கிலோவுக்கு 180 ரூபா இலாபம்.இது நடந்தது 18 வருடத்துக்கு முன். இப்போது இவர் பெரியதொரு ஏற்றுமதியாளர்.பில்லியனர்.
கதிர்காமம்,திஸ்ஸமகராம,திஸ்ஸ போன்ற இடங்களில் இவரது ஹோட்டல்களும்,தங்கும் விடுதிகளும் அமைந்துள்ளது.இப்படி பல லட்சம் பாமரர்கள் பணக்காறர்களாயுள்ளனர்.
இதற்குரியஆலோசனைகளை ஈ.டி.பி(எக்ஸ்போட் டெவலப்மென்ட் போர்ட்),நெஷனல் சேம்பர் ஒப் கொமர்ஸ் கொழும்பு,பெடரேஷன் சேம்பர் ஒப் கொமர்ஷ் கொழும்பு போன்ற இடங்களில் பெறலாம். இதற்கு எந்த தகுதியும் தேவையில்லை.உழைக்கும் ஆர்வமும்,எம்மால் முடியும் என்ற வெறியும் இருந்தால் போதும். யாரும் போய் இவற்றின் கதவுகளை தட்டலாம்.பாணமை குடும்பி மலை தொடக்கம் திருகோணமலை தங்கவேலாயுத புரம்வரை நமது வளம் கண்மூடி உறங்கிக் கொண்டிருக்கின்றது.
மீன்,மீன் கழிவுகள்,மீன் செட்டை,சிப்பி,நன்னாரி வேர், மூலிகைகள், மரத்தளபாடம், தென்னைமர உபகரணம், நாட்டுக்கோழி,நாட்டுக்கோழிமுட்டை முதல் பெரியகல்லாறு முதல் கிண்ணியா வரை படர்ந்துள்ள நிலப்பரப்பில் விளையக்கூடிய அனைத்துப் பொருட்கள்,சேவைகள் அனைத்தையும் நம்மவரே நேரடியாக விற்கலாம். இந்த சேம்பர்கள் மாதத்துக்கு ஒரு முறை தமது வர்த்தகர்களை குழுக்களாக வெளிநாடுகளில் உள்ள சேம்பர்களுக்கு அனுப்பலாம்.
அதே போல் வெளிநாட்டு சேம்பர்களை கல்முனைக்கும்,மட்டக்களப்புக்கும் அழைக்கலாம். அவர்களுடன் நம்மவர்கள் கதைக்கலாம்.பெரிய கம்பனிக்காறர்களுக்கு நமது மூலப் பொருட்கள் தேவைப்படலாம். இப்படியான நிகழ்வுகளுக்கும்,சேம்பர் ஆரம்பிப்பதற்கான செலவுகளுக்குமான பணம் ஏற்கனவே உலக வங்கியாலும்,இன்டர் நெஷனல் மணி பண்ட்( ஐ.எம்.எப்),ஆசியன் டெவலப்மென்ட் போர்ட் (ஏ.டி.பி.) போன்றவற்றாலும் வழங்கப்பட்டு அரசு கஜானாவில் கொட்டாவி விட்டுக் கொண்ருக்கின்றது.எந்த கெடுபிடியும் இல்லாமல் இதைப்பெற்று பல சேம்பர்களை நாளையே திறந்து விடலாம்.
சிக்கல்கள் தோன்றுமாயின் மட்டக்களப்பிலும்,திருகோணமலையிலும் உள்ள ஏ.டி.பி.புறஜக்ட் டிரக்டர்களை (ஐ.ஆர்.டி.பி.புறஜக்ட் டிரக்டர் எனஇவர்களை கூறுவர்-அதாவது இன்ரர்கிறேட் ருரல் டெவலப்மென்ட் போர்ட் புரஜக்ட் டிரக்டர்) அணுகலாம். உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் இலவச பயிற்சி எல்லாம் உண்டு.இன்று உலகம் முழுதும் நமது இளைஞர்கள் உலாவருகின்றனர். உதாரணமாக காரைதீவு முதல் சாய்ந்தமருது, கல்முனைகுடி,கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, பெரிய கல்லாறு, கோட்டைக் கல்லாறு ஓந்தாச்சிமடம், கழுவாஞ்சிகுடி.களுதாவளை தொடங்கி செங்கலடி,வந்தாறுமூலை என எடுத்துக் கொண்டால் சுமார் 3000 பேர் உலகம் முழுதும் பரந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்புடன் அவர்களின் உறவினர்களை வைத்தே பல சேம்பர்களை தொடங்கலாம்.
ஒரு காலத்தில் களுதாவளை முறிவு வைத்தியம், ஏறாவூர்,நட்பிட்டிமுனை,அக்கரைப்பற்று கோளாவில் பாம்புக்கடி வைத்தியம், உல்லை. பாணமை, சங்கமான்கண்டி, ஓந்தாச்சிமடம், கிண்ணியா,வெருகல் நாட்டு வைத்தியம் என கிழக்கு மாகாணத்திற்கு பாமரன் முதல் படித்தவன் வரை வந்து போய்க் கொண்டிருந்தனர். அது இன்னும் அழியவில்லை.அந்த மூலிகைகளையும்,அந்த வைத்தியர்களின் வாரிசுகளையும் தேடிப்பிடித்து உலக சந்தையில் எமது தரத்தை நிரூபிக்க வேண்டும். இன்று உலகில் உள்ள முக்காலே மூணுவீசம் நபர்களுக்கு வாய்வும்,வாதமும் வந்து வகிர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.அதற்குரிய முக்கிய நிவாரணி வெள்ளைப் பூண்டு. இந்த வெள்ளைப்பூண்டு பஞ்சாப் லுதியானாவில்தான் அதிகம் கிடைக்கும். லுதியானாவில் தெருவுக்குத்தெரு சேம்பர் ஒப் கொமர்சும், வெள்ளைப்பூண்டு வியாபாரிகளும் இருக்கின்றார்கள்.
ஓவ்வொரு குடிமகனும் அங்கு உலக பார்மசூட்டிகல் கம்பனிகளுடன் பேரம் பேசுகின்றார்கள்.
அந்த வெள்ளைப்பூண்டைத்தான் 'புறுபன்' 'கேஸ்றிக் டேப்ளட்' 'வாதக் குளிகை' என்ற பெயரில் உலகமே தின்று கொண்டிருக்கின்றது. இந்த சேம்பர்கள் திறப்பது பற்றி சிறிலங்கா அரசு நிச்சயமாக எதிர்த்து நிற்கப் போவதில்லை. இந்த சேம்பரின் பெருமை மகிந்த அரசுக்கு நன்கு தெரியும்.சிறிலங்காவிலேயே பெரிய கட்டிடத் தொகுதிகளையும்,சகல தொழில் நுட்பவசதிகளையும் கொண்ட சேம்பர் ஹம்மாந்தோட்டையில் உள்ளது. அதனுடாகத்தான் அங்கு ஒரு ஹாபர்கட்டுவதற்கான அத்திவாரமே போடப்பட்டது.
இந்த எமது மண்ணின் வளத்தை பற்றி கண்டி பல்கலைக்கழகத்தில் மூத்த புரொபசர் ஆக இருந்த அதி கவுரவத்துக்குரிய பேராசிரியர் திரு.தேனபடு (மண்ணியல் ஆய்வாளர்)ஆய்வு செய்திருந்தார்.அது குடும்பி மலை முதல் சங்கமன்கண்டி வரை உள்ள நமது மண்ணின் பெருமை சொல்கிறது.இன்றைய உலக பொருளாதாரம் ஆசியாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
அண்மையில் பாராக் ஒபாமா மேற்கொண்ட கணிப்பொன்று சைனா,இந்தியா போன்ற நாடுகளைத்தான் கைகாட்டியுள்ளது.இந்தியா எனும் போது அது நம்மையும் சேர்த்துத்தான்.
இன்னும் 10 ஆண்டுகளில் மேற்கில் உள்ளவர்கள் வேலைதேடி நம்மை நோக்கி வருவார்கள் என ஆருடங்கள் சொல்லுகின்றன.
வாழ்க்கை வாழ வேண்டும் என்பது முக்கியமல்ல
அந்த வாழ்க்கைக்குப் பின்னால்-உனது பெயர்
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்
அதுதான் முக்கியம்.
கிழக்கில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பட்ட அனைத்து வேதனையும் போதும். இனி ஆவது
கொஞ்சம் மூச்சு விடட்டும். பொருளாதார அபிவிருத்தி,மக்கள் நலன் என இறங்கி புதியதொரு
உலகு படைப்போம். 1984 களில் கும்பகோணம் சாக்கோட்டையில் ராணுவத்தளபதியாக மிடுக்குடன் நடந்துவந்தவரும், 1991 களில் நாரஹேன்பிட்டி,21,பார்க் ரோட்டில் இரும்புக்
கோட்டைக்குள் இருந்தவருமான அமைச்சர் .டக்ளஸ் தேவானந்தா இன்று வின்சர் தியேட்டர் வீதிகளில் மக்கள் சேவையில் வீறு நடை போடுவது அந்த மனிதமனங்களை வெல்வதற்குத்தான் என்றால் மிகையாகாது.
(அடுத்த வாரம் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் விசா வழங்க மட்டும்தான் இருக்கின்றனவா? இல்லை.அங்கு கொமர்ஷியல் டிவிஷன் என்ற பகுதி இருக்கிறது ? ஏன்? இதன் ஊடாக என்ன செய்யலாம் ? எனப் பார்ப்போம்.) VIII
Asian Development bank (A.D.B)
Export Development Board (EDB)
National Chamber of Commerce(www.nccsl.lk)
Federation Chamber of Commerce (www.fccisl.lk)
T111
0 comments :
Post a Comment