Thursday, March 26, 2009

கருணாவுடனான விசேட நேர்காணல்


அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் இன்றைய வன்னிக்கள நிலமைகள் மற்றும் வர்ஷா கொலை தொடர்பாக இலங்கைநெற் விசேட தொடர்பாளர் விருகோதரன் அவர்களுக்கு வழங்கிய பேட்டி.

கேள்வி : திருமலைச் சிறுமி வர்ஷா கொலை தொடர்பான உண்மைகளை விளக்க முடியுமா?

பதில் : ஆம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிள்ளையானின் சகாக்காளான சுறங்க, ஜனா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படுபாதகச் செயல்.
திருமலைப் பிரதேசத்தில் சுறங்கவின் மேற்பார்வையிலிருந்த பிள்ளையானது பிரத்தியேக முகாம் ஒன்றில் வர்ஷா தடுத்து வைக்கப்பட்டிருந்து கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து வர்ஷாவின் பாடசாலைச் சீருடைக்கான ரை மற்றும் சீருடையின் ஒரு பகுதி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவ் அலுவலகம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் இனம்காணப்பட்டுள்ளனர். ஜனா கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்தபோது இதுபோன்று தாம் மேற்கொண்டிருந்த பல கொலை கொள்ளைகள் பற்றிப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார். இக்கொலைகள் வெளிவரும் போது பிள்ளையான் உட்பட பலரும் தண்டனைக்குட்படுவர் எனும் பயத்தில் பிள்ளையான் ஜனாவை அச்சுறுத்தி அவரை தற்கொலை செய்து கொள்ளவைத்துள்ளார். தற்போது சுறங்க பிள்ளையானது பாதுகாப்பில் உள்ளார்.

கேள்வி : நீங்கள் எவ்வளவுதான் பிள்ளையான் மீது குற்றஞ் சுமத்தினாலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் உங்கள் பாசறையில் வளர்ந்தவர்கள் மட்டுமல்ல நீங்கள் புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்தபோது உங்கள் அழைப்பை எற்றுக்கொண்டு உங்களுடனேயே வந்தவர்களாவர். புலிகளின் அராஜகங்களை வெறுத்து வெளியேறியவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் தொடர்ந்தும் மனித குலத்திற்கெதிரான செயல்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளாததற்கான காரணம் என்ன?

பதில் : இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் வேதனையளித்துக்கொண்டிருக்கின்ற விடயம். இவ்விடயத்தில் பலதடவைகள் பிள்ளையானிடம் பேசியிருக்கின்றேன், கொலை கொள்ளைகளை நிறுத்தாதவிடத்து மக்கள் மனங்களை வெல்லமுடியாது என்ற உண்மையை பல தடவைகள் அறிவுறுத்தியிருக்கின்றேன். ஆனால் அவர் அவற்றை ஏற்கவில்லை அதன் பிரதிபலன் இன்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. பச்சிளம் பாலகி வர்ஷா கூட இவர்களின் வெறிக்கு பலியாகியுள்ளாள் என்பது வேதனை. எவ்வாறனதொரு சூழலில் இவருக்கு இந்த கொலைவெறி மனநிலை உருவானது என்பது என்னால் சரியாக கூறமுடியாதுள்ளது. பிள்ளையான் புலிகளியக்கத்தில் இருக்கும்போது தனிப்பட்ட குரோதம் காரணமாக தனது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை அடித்து கொலை செய்திருந்ததுடன் அதற்காக புலிகளியக்கத்தின் புலனாய்வுத் துறையினரால் இவருக்கு ஒன்றரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இதை எதற்காக கூறினேன் என்றால் இவர்கள் எனது பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதற்காக இவர்களது தான்தோன்றித்தனமான தவறுகளுக்கு என்மீது குற்றஞ்சுமத்துவது பொருத்தமானது என கருதவில்லை. ஓட்டு மொத்தத்தில் தமது சுயதேவைகளை பூர்த்தி செய்ய விடுதலை இயக்கங்களில் நுழைந்தவர்களுள் இவர்களும் அடங்குவர்.

கேள்வி : வர்ஷா கொலை வழக்கில் தேடப்படுகின்ற சுறங்க என்பவர் நீங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட உங்களுடன் இருந்தவர் எனக் கூறப்படுகின்றது. எவ்வாறு பிள்ளையானுடன் இணைந்து கொண்டார்?

பதில் : இல்லை. இவர் இந்தியாவில் என்னுடன் இருக்கவில்லை, பெங்களுரில் ஈஎன்டிஎல்எப் என்கின்ற குழுவுடன்தான் இருந்தார். அவர் இந்தியவில் இருந்து இலங்கை வந்து பிள்ளையானுடன் இணைந்து கொண்டார். பிள்ளையானது நிதிவிவகாரங்களுக்கு பொறுப்பாக இவரே செயற்பட்டார். பிள்ளையானால் கொழும்பில் உள்ள வர்த்தகர்களை கடத்தி பணம்பெறப்பட்ட பணம் இவராலேயே நிர்வகிக்கப்பட்டது.

கேள்வி : வர்ஷா கொலை விசாரணையில் அரச தலையீடு அதிகரித்து வருவதாகவும், இக்கொலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தொடர்பை அரசு மூடி மறைக்க முற்படுவதாகவும் பேசப்படுகின்றது. இதில் எவ்வளவு உண்மைகள் உண்டு?

பதில் : இது முற்றிலும் பொய்யானதோர் திட்டமிட்ட பிரச்சாரம். சுயாதீனமானதோர் விசாரணையை மேற்கொள்ளுமாறு திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அரசு கட்டளையிட்டுள்ளது. இவ்விடயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தொடர்புபட்டுள்ளதை பொலிஸார்தான் மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். இவ்விசாரணையில் பொலிஸாருக்குள்ள அக்கறையை திருமலை மக்கள் நன்கு அறிவார்கள்.

கேள்வி : வர்ஷா சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது. அவருக்கும் ரிஎம்விபி யினருக்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன?

பதில் : இவர் பிள்ளையானால் உருவாக்கப்பட்ட இன நல்லுறவுப் பணியகத்தில் கடமையாற்றி வந்தவர்.

கேள்வி : இன நல்லுறவு பணியகம் என்கின்ற இந்நிறுவனம் எவ்வாறான பணிகளை முன்னெடுத்து வருகின்றது?

பதில் : அவர்கள் முன்னெடுப்பதற்கென ஒன்றும் இல்லை. இனங்களுக்கிடையில் நல்லதோர் புரிந்துணர்வு உருவாகி வருகின்றது. ஆனால் பிள்ளையானால் உருவாக்கபட்ட இப்பணியகத்தில் பணியாற்றுபவர்கள் அனைவருமே நடத்தை தவறியவர்கள். பல கொலை கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள். அதற்கு வர்ஷாவின் விடயம் நல்லதோர் சான்று.

கேள்வி : பொலிஸ் காவலில் இருந்து தற்கொலை செய்து கொண்ட ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் எனவும் கடந்த தேர்தல் காலங்களில் கட்சியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதில் ஈடுபட்டதன் மூலமே தனக்கு அறிமுகமானார் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். ஜனா உங்களுக்கு எவ்வாறு பரிட்சயமானவர்?

பதில் : இவர் ரிஎம்விபி யின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் பிள்ளையானது தீவிர விசுவாசி. இவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இல்லை என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை ஒத்ததாகும். ஜனா வர்ஷாவின் கொலையுடன் கைதாகி சயனைட் அருந்தி மரணமாவதற்கு முதல் மாதம் (மாசிமாதம்) உறுப்பினர்களுக்கான சம்பளம் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வேண்டுமானால் உங்களிடம் சமர்ப்பிப்பேன். மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

கேள்வி : ரிஎம்விபி உறுப்பினர்கள் இவ்வாறு தவறான வழியில் சென்றுள்ளமைக்கான பிரதான காரணம் உங்களுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவு எனக் கொள்ளலாமா?

பதில் : இல்லை இல்லை, இது உங்கள் தவறான பார்வை. இவர்களை நாம் ஓரங்கட்டியதற்கான பிரதான காரணமே இவர்களது இவ்வாறான செயற்பாடுகள்தான். எமது இயக்கத்தில் இருந்த ஒழுக்கமான போராளிகள் மற்றும் தளபதிகள் இன்றும் என்னுடனேயே இருக்கின்றனர்.

கேள்வி : வர்ஷாவின் விடயத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் உங்களுடன் இணைந்து வருவதாக தெரியவருகின்றது. அவர்கள் மேற்கண்ட கொலை கொள்ளைகளில் அதிருப்தி கொண்டு வருகின்றார்களா? அன்றில் வேறு ஏதாவது நோக்கங்கள் இருக்குமா?

பதில் : பிள்ளையானிடம் மொத்தமாக 60-70 பேர் வரை இருகின்றார்கள். அவர்களில் பலர் தவறான கருத்துக்கள் உட்புகுத்தப்பட்டு அங்குள்ளனர். ஆனால் இன்று அவர்கள் அதை உணர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் வர்ஷாவின் கொலையைத் தொடர்ந்து 25 பேர் எம்மிடம் வந்துள்ளார்கள். காலப்போக்கில் பிள்ளையானும் அவரது நெருங்கிய சகாக்கள் ஒருசிலருமே எஞ்சுவர்.

கேள்வி : ரிஎம்விபி யினர் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களிடம் வந்து சரணடைந்த அவ்வியக்க உறுப்பினர்கள் ஆயுதங்களையும் கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. அவ் ஆயுதங்களை நீங்கள் என்ன செய்தீர்கள்?

பதில் : ஆம் அவர்கள் வரும்போது ஆறு ரி 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு வந்தார்கள். நாம் அவற்றை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். இங்கு நான் குறிப்பிட விரும்பும் விடயம் யாதெனில் ரிஎம்விபி யினர் 20 க்கு மேற்பட்ட கைத்துப்பாக்கிகளை வைத்துள்ளார்கள். இக்கைத் துப்பாக்கிகளே இவர்களது கொலை வெறி நாடகங்களுக்கு பயன்படுகின்றது. கடந்த வாரம் கூட சீலன் , சூட்டி போன்றோர் களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத்தலைவர்pன் தலையில் தமது கைத்துப்பாக்கிகளை வைத்து மிரட்டியுள்ளனர். இவ்விடயம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இவர்களை தேடி வருகின்றனர்.

கேள்வி : புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி வந்தபோது கிழக்கு தமிழ் மக்களுக்கு தனியானதோர் அரசியல் தளம் வேண்டும் எனவும் அதற்காக தனிக்கட்சி ஒன்று அவசியம் ஆகையால் கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்று படவேண்டும் எனவும் கூறி வந்துள்ள நீங்கள் இன்று இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளீர்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்?

பதில் : இதை திடீர் மாற்றம் எனக் கூறி விடமுடியாது. நாம் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி வந்தபோது தனித்து நின்று எமது நிலைமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருந்தது. அதில் வெற்றி கண்டுள்ளோம். புலிகள் இயக்கம் எவ்வாறானதோர் கொடிய இயக்கம் என்பதை மக்களுக்குப் புரிய வைத்துள்ளோம். அவ்வாறு நாம் செய்யாமல் ஏதாவது ஓர் பிரதான கட்சியில் நாம் இணைந்திருப்போமேயானால் மக்கள் எம்மை துரோகிகளாகப் பார்த்திருப்பார்கள்.

அடுத்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஓர் தனிச் சிங்களக்கட்சியாக பார்க்கமுடியாது. அந்தக் கட்சியின் வளர்ச்சியில் ஓர் காத்திரமான பங்கைத் தமிழர்கள் ஆற்றியிருக்கின்றார்கள். யாழ் மாவட்டத்திலே அக்கட்சி வெற்றிகளை குவித்த வரலாறு உண்டு. ஏன் சந்திரிகா அம்மையார் ஆட்சியை கைப்பற்றுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதி கூடிய வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இம்முடிவை நான் தனித்து எடுத்திருக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த எனக்கு அழைப்பு விடுத்தபோது நான் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கும் சென்று எமது மக்களிடம் இவ்விடயம் தொடர்பாக அவர்களின் விருப்பு வெறுப்புகளை கேட்டேன். அங்குள்ள புத்தி ஜீவிகள் அனைவரையும் அழைத்து கலந்துரையாடினேன். மக்கள் தமது பூரண சம்மதத்தை தெரிவித்திருந்தார்கள்.

இன ரீதியாக கட்சிகளை அமைத்து வைத்துக்கொண்டு குரோதங்களை தொடர்ந்தும் வளர்ப்பதை விடுத்து பலம் மிக்க கட்சியொன்றுடன் இணைந்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதே எமது மக்களின் விருப்பமாக இருக்கின்றது.

கேள்வி : புலிகள் இயக்கம் பலவீனப்படுத்தப்பட்ட பின்னர் நீங்கள் இணைந்திருக்கும் கட்சி தமிழ் மக்களுக்கு எவ்வாறானதொரு தீர்வை முன்வைக்கப்போகின்றது?

பதில் : எமது மக்களின் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மிகவும் திடகாத்திரமான கொள்கையை கொண்டுள்ளார். இன்று நிலைமைகள் மிகவும் மாறி வருகின்றது. 1983ம் ஆண்டு 13 இராணுவத்தினரை கொன்று அவர்களது உடலங்கள் கொழும்பை வந்தடைந்தபோது ஒட்டு மொத்த கொழும்பும் எரிய ஆரம்பித்தது. 3500 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று நிலமைகள் அவ்வாறில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்குரஸ்ச பிரதேசத்தில் 5 அமைச்சர்களை குறிவைத்து புலிகளால் தற்கொலைத் தாக்குதல் நாடாத்தப்பட்டது. அதில் பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களை இவ்விடயத்தில் குறை கூறவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகள் வேறு புலிகளின் பிரச்சினைகள் வேறு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

உங்களுடைய கேள்விக்கான பதிலுக்கு வருகின்றேன். மாகாண சபை ஒன்றினூடாக எமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இணைந்த வட-கிழக்கு என தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை புலிகளின் தலைவர் பிரபாகரன் சிதைத்துவிட்டார். இன்று வட கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தனித் தனி மாகாணங்கள் ஊடாக தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.

கேள்வி : வன்னியின் யுத்த களநிலைகள் எவ்வாறு காணப்படுகின்றது?

யுத்தம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. 28 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பே புலிகளிடம் உள்ளது. அரசினால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் உள்ளனர். அங்கு புலிகளும் உள்ளனர். மக்களின் நன்மை கருதி படையினர் மிகவும் அவதானமாக சிறிய ரக துப்பாக்கிகள் கொண்டு புலிகளுடன் போரிட்டு வருகின்றனர். கனரக மற்றும் ஆட்லறி , மோட்டார் தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர். இன்று இருதரப்பினருக்கும் இழப்புகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் இது இறுதி கட்டம் புலிகளுக்கு வாழ்வா சாவா என்ற கட்டம். இதில் மக்களும் பாதிப்படையத்தான் செய்கின்றார்கள். அதை தவிர்த்து கொள்வது முற்று முழுதாக புலிகளின் கைகளிலேயே உள்ளது. இது தொடர்பாக எம்மால் செய்யக் கூடியவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் அரச தலைவருடனும் பேசி வருகின்றோம்.

கேள்வி : புலிகள் இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என கூறுவீர்களா?

பதில்: சகல பிரதேசங்களையும் படையினர் கைப்பற்றிய பின்னர் சில காலங்கள் தேவைப்படும். புலிகளால் இனிவரும் காலங்களில் படையணிகளைத் திரட்டி தாக்குதல்களை நடாத்ததுவதற்கோ அன்றில் தமக்கென ஒர் கட்டுப்பாட்டு பிரதேசங்களை வைத்துக்கொள்வதற்கோ முடியாது. அடுத்தது கெரில்லாப் போர்தான். ஆனால் அது நீண்ட காலங்களுக்கு நிலைக்காது. காரணம் மக்கள் ஆதரவில்லாமல் அப்போர் சாத்தியமில்லை. இன்று மக்கள் யுத்தத்தை வெறுக்கின்றனர் எனவே புலம்பெயர் தேசத்தில் இருந்து இவ்யுத்தத்தை தூண்டுகின்ற எமது மக்கள் இங்குள்ள மக்களின் மனநிலையை உணர்ந்து கொள்ளவேண்டும். XIII



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com