இந்திய உயர்ஸ்தானிகர் குழு கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்.
இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அடங்கலான தூதுக்குழுவினர் நேற்று கிழக்கு மாகாணத்துக்கு, அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் விஜயம் ஒன்றை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு முதல்வர் மற்றும் மட்டு. மேயர் ஆகியோரினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்; கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்குமென்று தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர்; கிழக்கு மாகாணம் ஜனநாயக ரீதியில் இன்று செயற்படுவதையிட்டு இந்தியா தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றது.
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென கடந்த காலங்களில் இந்தியா சிறிய உதவிகளை செய்தது. மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பஸ் வண்டிகளை வழங்கியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்புக்கும் திருமலைக்குமிடையில் அதி நவீன புகையிரத வண்டியொன்றை வழங்கி சேவையில் ஈடுபடச் செய்ய உள்ளதாகவும், அதேபோன்று இருபது தொழில் கல்வி நிலையங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்தியா உதவுமெனவும் மேலுமவர் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்களான எம். எஸ். ஏ. எம். ஹிஸ்புல்லா, துரையப்பா நவரத்தினராஜா, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அம்பாறைக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர்; அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கரவை அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடினார். அம்பாறை நகர அபிவிருத்திக்கு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அரச அதிபர் இங்கு விளக்கமளித்துள்ளார்.
0 comments :
Post a Comment