Monday, February 23, 2009

புதுக்குடியிருப்பு நகரை அண்மித்த பகுதி படையினரால் சுற்றிவளைப்பு 400 மீற்றர் தொலைவில் படையினர்

புதுக்குடியிருப்பு நகருக்கு அண்மித்த பிரதேசங்கள் முழுவதையும் சுற்றிவளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு நகருக்கு சுமார் 400 மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

புலிகளின் கடைசிக் கோட்டையான புதுக்குடியிருப்பு முழுவதையும் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு முழுவதையும் விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகளும், இராணுவத்தின் ஒரு செயலணியும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் சகல நடவடிக்கைகளையும் சுமார் 73 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் இறுதி இலக்குகள் மீது பாரிய தாக்குதல்களினால் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் படையினரின் இந்தத் தாக்குதல்களுக்கு புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகர்களையும், பிரதேசங்களையும் நாளுக்கு நாள் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் தற்பொழுது கனரக ஆயுதங்கள், ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட நவீனரக உபகரணங்கள், பெருமளவிலான குண்டுகளையும் கைப்பற்றிவருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

புதுக்குடியிருப்பு நகரை அண்மித்துள்ள பாதுகாப்புப் படையினர் வெகு விரைவில் புதுக்குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்து விடுவர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com