பொதுமக்களை பாதுகாப்பாக குடியமர்த்த மேலும் 100 ஏக்கர் காணி.
வன்னியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி படையினரிடம் புகலிடம் தேடி வரும் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் குடியமர்த்துவதற்கென வவுனியா செட்டிக்குளத்தில் மேலும் நூறு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இக்காணியில் புதிதாக தற்காலிக கொட்டில்கள், மலசலகூடங்கள் மற்றும் பாடசாலை என்பனவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக; மோதல்கள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் அகதிகளின் நலன்களை கண்டறியும் விசேட மாநாடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நேற்று வவுனியாவில் நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் வட மாகாண ஆளுநர் டிக்ஷன்தால, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகள்ஈ படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தங்களுக்குத் தேவையான உணவை தாமே சமைத்துக் கொள்வதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட இடம் பெயர்ந்த மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் 100 குடும்பங்கள் ஒரு வலயம் என்ற ரீதியில் பிரித்து விடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இவர்களுக்கென வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு இவர்கள் தாமே உணவு தயாரிக்கவுள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் தங்கியிருக்கும் வன்னியைச் சேர்ந்த அகதிகளுக்கு தேவையான அனைத்து கருமங்களும் உடனுக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அகதிகளின் சுகாதாரம், குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன குறித்து இம் மாநாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
0 comments :
Post a Comment