Saturday, December 20, 2008

கூட்டமைப்பு புலிகளுக்காகவே பேசுகின்றது: தமிழ் மக்களுக்காக பேசவில்லைசமாதானம் என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. வடக்கில் யுத்த முனைப்புகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அம் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய உங்கள் கருத்தென்ன?
நாங்கள் எப்போதும் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதானமாகவும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழவே விரும்புகிறோம். யுத்தம் என்பது தவிர்க்க முடியாத விடயமாகத் தான் இருந்திருக்கிறது. இவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்கியதில் துரதிஷ்டவசமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் பங்குண்டு. இன்று நேற்றல்ல.

வரலாறு முழுவதும் தமிழ் மக்களுக்கு அமைதியாக, சுதந்திரமாக வாழக் கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே அவர்கள் தங்களின் யுத்த மனோநிலையில் இருந்து சீர்குலைத்திருக்கிறார்கள். இன்று வன்னியைச் சேர்ந்த ஏறத்தாழ 75 வீதமான மக்கள் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே யுத்தத்தினுள் சிக்குண்டு இருக்கிறார்கள்.

புலிகளை பொறுத்தவரையில் இவர்களைத் தங்களுடைய யுத்தத்திற்கு ஆயுதமாக பயன்படுத்த எண்ணுகிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் அழிகிறார்களோ அது தங்களுக்கு சாதகமான ஒரு பிரசாரமாக அமையும் என்று யோசிக்கும் அவல நிலை. மக்கள் அங்கிருந்து மீட்கப்படுவது முக்கியமானதொரு விடயம். இலங்கையில் அது பற்றிய அக்கறைகள் இருக்கின்றன.

பிரச்சினை என்னவென்றால் அந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்ற சிக்கல். புலிகள் அந்த மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பான இடத்தை சென்றடைவதற்கான சுதந்திரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எந்த இனத்துக்காக போராடுகிறோம் என்கிறார்களோ அந்த இனத்தையே பணயக் கைதியாக யுத்தத்தில் வைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?
மக்களை பணயக் கைதியாக மட்டுமல்ல. யுத்த தந்திரங்களுக்கான கருவிகளாகவும் மாற்றியிருக்கிறார்கள். இது உலகளாவிய மனித உரிமை, ஜனநாயக உரிமை கோட்பாடுகளை மீறும் செயலாகும். அந்த மக்களை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை உலக சமூகம் கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விடயம். மக்களை பாதுகாப்பான அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து அவர்கள் தங்களின் சொந்த இடங்களில் சென்று வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
யுத்தம் நடந்துகொண்டிருக்கிற நிலையில், பரந்து வாழ்ந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் வாழும் ஒரு நிலையில் உயிராபத்து, வேறு வேறு ஜீவாதார நெருக்கடிகள் வருவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக இருக்கின்றன.

யுத்த சூழ்நிலைகள் பற்றி தமிழ் நாட்டில் களம் அமைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவது அரசியல் ரீதியாக இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படும் போது அதனுடைய பிரதிபலிப்புக்கள் தமிழ் நாட்டில் உருவாவது இயல்பான நிகழ்வாகும். அது 1983 இல் இருந்து பல தடவை ஏற்பட்டிருக்கிறது. மொழியால், பண்பாட்டால், கலாசாரத்தால் ஒரே விதமான இயல்பை கொண்டிருக்கின்றனர். பிரச்சினை என்னவென்றால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் பலருக்கு இலங்கைப் பிரச்சினையின் நீள அகலம் நன்றாகத் தெரியும்.

இதில் அவர்களுடைய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டுமென சொல்ல வேண்டும். பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறும் போது சிங்கள மக்கள், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள், மலையக மக்கள், முஸ்லிம் மக்கள், பறங்கியர், மலே இன மக்கள், இன்னோரன்ன சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள்.

இந்நாட்டில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனும்போது எல்லா சமூகங்களுடைய விடயங்களையும் எடுத்தாக வேண்டும். இதில் பொறுப்புணர்ச்சியுடனான நடைமுறையை கையாள வேண்டும்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் புலிகளின் முகவர்களாக தமிழ் அடிப்படைவாதத்தை கிளப்பி ஒரு குறுகிய பொறுப்புணர்ச்சியற்ற அரசியலை மேற்கொள்வதையே இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து யுத்தநிறுத்தம் கோரி குரல் எழுப்புகிறது.

நாங்கள் யுத்தநிறுத்தத்தை எதிர்க்கவில்லை. யுத்தநிறுத்தம் என்று சொல்லும்போது கடந்த காலத்தில் பல தடவைகள் யுத்தநிறுத்தங்கள் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. யுத்த நிறுத்த காலங்களில் புலிகள் என்ன செய்வார்கள்?

ஆயுதங்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கும், சகோதர இயக்கங்கள் மேல் அச்சுறுத்தலை விடுவதற்கும், படுகொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கும், சகோதர சமூகங்களான முஸ்லிம்கள், சிங்களவர்கள் மீது கண்மூடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமே கடந்த கால யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தினார்கள்.


இவ்விடயத்தில் எவ்வாறான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்?
நேபாள கிளர்ச்சியை நடத்திய பிரசன்டாவின் இயக்கம் சில பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சில வருடங்களுக்கு முன் ஐ. நா வின் அனுசரணையோடு யுத்தநிறுத்தத்துக்கு போய் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களிடம் இருந்த ஆயுதங்களை ஐ. நா விடம் ஒப்படைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு போனார்கள். அதுபோல நமது நாட்டிலும் மேற்கொள்ளலாம். யுத்தநிறுத்தம் என வரும்போது இந்தியாவை நாங்கள் நம்புகிறோம். இந்தியா எங்கள் நண்பன் என்று பிரபாகரனும் சொல்கிறார். இப் பிராந்தியத்தில் பெரிய ஜனநாயக நாடு. எங்கள் பிரச்சினையில் நன்கு பரிச்சயமான நாடு.

நீங்கள் இந்தியாவின் பொறுப்பில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு இந்தியாவின் அனுசரணையுடன் அவர்களின் உத்தரவாதத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்லலாம். அப்போது இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேச்சுவார்த்தை, யுத்தநிறுத்தம் என்று வரும் போது யுத்தநிறுத்தத்திற்கு பின்னான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள், மலையக மக்கள், மாற்று தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபற்ற வேண்டுமென்ற யதார்த்தத்தையும் புலிகள் ஒப்புக்கொண்டாக வேண்டும். யதார்த்தத்துக்கு வர வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் போர் நிறுத்தம் என்பது சாத்தியப்படும் என நினைக்கின்றீர்களா?
வெறுமனே போர் நிறுத்தம் என்று சொல்வது யதார்த்தத்துக்கு முரணானது. யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்பதில் புலிகள் தான் தங்களின் நேர்மையை காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். ஒரு விடயம் நடக்க வேண்டும் என்றால் யுத்தம் முடியும் வரை என காத்திருக்காமல் தமிழ் மக்களுக்கு எங்களால் எவ்வாறான அதிகாரங்களை வழங்க முடியும் என்பதை அரசும், தென்னிலங்கை சக்திகளும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.


தென்னிலங்கை அரசியல் போர் முனைப்பில் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ் கட்சி என்ற அடிப்படையில் இது பற்றி உங்களின் நிலைப்பாடு?
யுத்தத்தைத் தவிர வேறு எந்த நிலையும் இல்லாத இக்கட்டான நிலையில் இரு தரப்பும் இருக்கிறார்கள். சாதாரண மக்களை இலக்குவைத்த புலிகளின் வன்முறைகள் சிங்கள மக்களை விரக்தியடைய வைத்தன. யுத்தமில்லாத மாற்று மார்க்கத்திற்கான நம்பகரமான நிலைமையை புலிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்ற நிலை வரலாறு முழுவதும் காணப்பட்டது. தம்மை நம்பகரமானவர்கள் என்று புலிகள் தான் நிரூபிக்க வேண்டும்.

த. தே. கூ. புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக தென்னிலங்கையில் பேசப்படுகிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
இதுதான் முற்றுமுழுதான உண்மை. தமிழ் மக்களின் நலன்களில் இருந்து அல்லாமல் புலிகளின் நலன்களில் இருந்துதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசுகிறார்கள். நாங்கள் மக்களின் நலன்களில் இருந்துதான் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்று பேசுகிறோம்.அந்த யுத்தம் எவ்வாறு முடிவுக்கு வரவேண்டும் என்பது நான் ஏற்கனவே அளித்த பதிலில் தெரிவித்துள்ளேன். இவ்வாறான வழியிலேதான் சாத்தியமே தவிர வேறு எந்த வழியிலும் அது நிற்பதற்குரிய சாத்தியங்கள் இல்லை. இதை புலிகள் உணருவார்களாக இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். அவர்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

கிழக்கு விடுவிக்கப்பட்டு அங்கு நிலைமைகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. அதுபோல வடக்கிலும் ஏற்பட வேண்டுமென எண்ணுகியர்களா?
கிழக்கில் நிலைமை மாறியிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை அமைந்திருக்கிறது. 13வது திருத்தச் சட்டத்திற்கு கீழ் அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிற ஒரு விடயம் இருக்கிறது. ஏதோவொரு வகையில் அரசியல் அதிகாரப் பகிர்வு அலகின் மேடை அங்கு இருக்கிறது. குரல்கொடுக்க ஒரு தளம் இருக்கிறது. செழுமைப்படுத்தி இன்னும் முன் கொண்டு செல்லப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் காலங்காலமாக கேட்டு வருகிற பிரச்சினை தொடர்பாக ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு, மலையக மக்களின் முஸ்லிம் மக்களின் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவாறான பன்முகத் தீர்வு உருவாகுவதற்கான சூழல் ஏற்பட வேண்டும்.

வடக்கில் யுத்தம் நடப்பதால் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பைக் கொண்டுவருவதில் சிரமங்கள் இருக்கின்றன. அதிகாரப் பகிர்வு, நிரந்தரத் தீர்வு தொடர்பான கனதியான யோசனை அரசு தரப்பிலிருந்து, தென்னிலங்கை தரப்பிலிருந்து முன்வைக்கப்பட வேண்டும்.

அரசியல் தீர்வு பற்றிய விடயம் புலிகள் தரப்பில் இல்லை. அவர்கள் யுத்த நிறுத்தத்தை பற்றி மாத்திரம்தான் பேசுகிறார்கள். தமிழர்களுடைய தீர்வு தொடர்பாக வேறு எதையும் அவர்கள் சொல்லவில்லை.


தீர்வு குறித்த செயற்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன?
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் அரசு ஒரு தீர்வை வைக்க வேண்டும். தீர்வை வைப்பதற்கு ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற அமைப்புக்களின் பங்களிப்பை பெற வேண்டும். ஏற்கனவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனூடாக உருப்படியான தீர்வு பிரசவமாக வேண்டும் .இந்தியா உட்பட சர்வதேச சமூகமும் அதனையே எதிர்பார்க்கிறது. சமூகத்தினுள் ஜனநாயகமில்லாததால் பெருமளவிற்கு கலந்துரையாடல்கள் நடைபெறவில்லை.

தமிழ்க் கூட்டமைப்பினர் என்று சொன்னால் அந்த கூட்டமைப்பில் பல்வேறு தமிழ்க் கட்சிகளில் இருந்தும், புலிகளால் பாதிக்கப்பட்ட கட்சிகளில் இருந்தும் பிரிந்து சென்றவர்கள் இருக்கிறார்கள். தமிழ் கூட்டமைப்புக்கு சொந்த அரசியல் கருத்து எதுவும் கிடையாது. புலிகளுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறுதான் அவர்கள் இயங்குகிறார்கள்.

அவர்கள் சுதந்திரமாக கருத்து சொல்ல வர வேண்டும். அவர்கள் புலிகள் என்ன கருதுகிறார்கள் என்பதை விஞ்சி இந்த நாட்டின் யதார்த்த நிலைக்கு ஏற்ப ஒரு தீர்வு பற்றிய கருத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலவரம் அவர்களிடம் இல்லை. வெளிப்படுத்தவும் மாட்டார்கள்.

உள்ளக சுயநிர்ணய உரிமையை பரிசீலிக்கத் தயார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் சொல்லியிருக்கிறாரே?

இது வரவேற்க வேண்டிய விடயம். எந்தளவுக்கு சாத்தியம், சாத்தியமில்லை என்ற வகையில் ஒரு கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் இதை விட்டேந்தியாக சொல்ல முடியாது. ஒரு பத்திரிகைக்கு மாத்திரம் அத்தருணத்திற்கேற்ப சொல்வதில் எதுவித பிரயோசனமும் இல்லை. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் நாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் ஒரு முயற்சி நடக்கிறது. அங்கு அவர் அதை கொடுக்கட்டும்.

உலகமும் இந்த அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழு குறித்து கரிசனை கொண்டுள்ளது. அது புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரல் போல் இருந்தால் அது தென்னிலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி எதிர்நிலை விளைவுகளை கொண்டுவரலாம்.

தமிழ் மக்களின் சுயமரியாதை கௌரவத்தைப் பாதுகாக்கின்ற வகையில் தங்களுடைய பிரதேசங்களில் தங்களுடைய அலுவல்களை தாங்களாக பார்க்கக் கூடிய வகையில் அதே நேரத்தில் இந்நாட்டின் சகல இன சமூகங்களும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் எல்லாவற்றுக்கும் மேலாக பக்கத்து நாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் தான் தீர்வை முன் வைக்க வேண்டும். பத்திரிகையில் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் வரவேற்கிறேன்.

சர்வ கட்சிக் குழுவில் உங்களது கூட்டமைப்பின் பங்களிப்பு என்ன?
சர்வகட்சி குழுவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினராகிய நாம் கருத்துக்களை தீர்வு யோசனைகளை தெளிவாக அனைத்துக் கட்சி குழுவிற்கு முன் வைத்துள்ளோம். அது மாத்திரமல்ல 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கான இடைக்கால அறிக்கையை பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த வைபவத்தில் எங்களுடைய கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி திட்டவட்டமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார்.

சமஷ்டி முறையிலான தீர்வுதான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு, இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு, நிரந்தர தீர்வாக பரிகாரமாக இருக்க முடியுமென்று.


த. தே. கூ. அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றதே?
ஒரு விடயத்தை பலமாக்குவதும் பலவீனமாக்குவதும் எம்மைப் பொறுத்தது. பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற கரிசனை இருந்தால் ஓரளவாவது பலமாக்க முடியும். அதற்கொரு தளம் இருக்குமாக இருந்தால் அந்த தளத்தை நாங்கள்தான் பலப்படுத்த வேண்டும்.

ஆக்கபூர்வமாக யோசிக்க வேண்டும். தமிழ் அரசியலில் எதிர்நிலை அவநம்பிக்கை வாதம் ஒரு பிரச்சினை. முஸ்லிம் மக்களினதும், மலையக மக்களினதும் கட்சிகள் தங்களது பங்களிப்பை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு வழங்கியிருக்கிறார்கள். அப்படித்தானே எமது பங்களிப்பைச் செய்யவேண்டும். இது எங்களுடைய தனிப்பிரச்சினை இல்லையே? அதுவும் பிழை, இதுவும் பிழை என்று குறை கூறுவதில் அர்த்தம் இல்லை.

வன்னி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று யாழ். ஆண்டகை தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்திருக்கிறாரே?
தோமஸ் சௌந்தரநாயகம் அவர்கள் சொன்ன கருத்தை நாம் பரிபூரணமாக வரவேற்கிறோம். சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுபவர். இப்படி வேறு பலரும் கருத்துக்களைச் சொல்வதற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. எமது சமூகத்தில் இப்படியான கருத்துக்கள் முன் வைப்பது மிகவும் அரிது.

உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார். மக்களுடைய கரிசனைகளை பல தடவை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் அவரின் கருத்து ஆழமாக நோக்கப்பட வேண்டியதுடன், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமுமாகும்.

ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள அரசியல் கட்சி என்ற வகையில் ஆயுத கலாசாரம் பற்றி உங்கள் கருத்து?
ஆயுதக் கலாசாரம் எங்கள் சமூக விழுமியங்கள் எல்லாவற்றையும் அழித்திருக்கிறது. அது எமது சமூகத்துக்கு செய்த சேதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக புலிகள் எல்லாவற்றையும் துப்பாக்கிகளூடாக பார்க்க வெளிக்கிட்டதன் விளைவு இந்தச் சமூகத்தில் உள்ள கல்விமான்கள், அரசியல் தலைவர்கள், மாற்றுக் கருத்துக்கொண்ட பொது மக்கள் சகோதர சமூகங்களை சேர்ந்தவர்கள், பாரத தேசத்தின் தலைவர் உட்பட பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அது எமது சமூகத்தில் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

ஆயுதக் கலாசாரம் இனி போதும். இதற்கு முற்றுப்புள்ளியிட வேண்டும். இந்தக் கலாசாரம் தொடர்வதற்கு இனி அனுமதிக்க முடியாது. ஏனென்றால் ஜனநாயகத்தின் ஆணி வேர் மனிதனின் சுதந்திரமான வாழ்வு. ஒரு மனிதனின் வாழ்க்கையை நீதிமன்றம், காவல் துறை, சட்டத் துறை இப்படியாக நிறுவனங்கள் எல்லாம் இருக்கக் கூடிய நிலையில் ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் ஒருவர் ஒரு நொடியில் போக்கக்கூடியதான அந்த கலாசாரம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும்.

இது எமது நாட்டைப் பொறுத்தவரையில் சவாலான பெரும் பணியாகும். குறிப்பாக வடக்கு – கிழக்கிலும், பரவலாக நாடளாவிய அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது. இது இலங்கையின் ஜனநாயகத்தை பழுதுபடுத்தியிருக்கிறது. வன்முறை எமது சமூகத்தில் அழிவுகளையும் துயரமான அனுபவங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் வன்முறை கலாசாரம் அடியோடு ஒழிக்கப்படுவதிலேதான் இதற்கு முடிவு கட்டுவதிலேதான் மனித வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

இறுதியாக நான் சொல்கிறேன். இந்த நாட்டில் வன்முறை இல்லாத சூழல், ஜனநாயகம் நிலவுகிற சூழல், துப்பாக்கி வெடியோசை இல்லாத சூழல் அனைத்து சமூகங்களும் தங்களது இன சமூக உரிமைகளுடன் ஐக்கியமாக, சுதந்திரமாக கௌரவமாக, சுயமரியாதையாக வாழ்வதற்குரிய நிலவரங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அப்படி ஏற்படுத்துவதினூடாக நாடு பாரியளவில் வளர்ச்சியடைந்து உலக மானிடத்தோடு கரம் கோர்த்து வேகமாக முன்னேறி போவதற்குரிய நிலவரங்கள் உண்டாக்கப்பட வேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் பொதுச் செயலாளர்
திருநாவுக்கரசு சிறிதரன்


தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணல்.
நேர்கண்டவர்:
பி. வீரசிங்கம

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com