Tuesday, July 1, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (2)

அதேநேரத்தில், இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கைதத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்ட நிலையிலும்கூட, உயிராபத்துகள், பல இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் நிலை தழும்பாது நின்று, புலிகளின் பாசிசச் செயற்பாடுகளை இறுதிவரை நம்பிக்கையுடன் எதிர்த்துப் போராடிய இன்றும் போராடுகின்ற உண்மையான முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கும் சிரம் தாழ்த்துகின்றேன்

2. எதிர்பாராத அழைப்பு

இங்கு நான் எழுதப்போகும் வரலாறு 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் திகதி ஆரம்பிக்கின்றது. அதாவது கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள். 18 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சரியான தகவல்களுடன் தரமுடியுமா எனச் சிலர் கருதக்கூடும்.

உண்மைதான். உலகம் போகிற வேகத்தையும், நடக்கும் சம்பவ வரிசைகளின் அணிவகுப்பையும் பார்த்தால், நேற்று நடந்ததையே நாம் இன்று மறந்துவிடுகிற காலமிது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் துயரமான இந்த வரலாற்றுச் சம்பவங்கள் என்றுமே மறக்கக் கூடியைவ அல்ல. அதுமாத்திரமின்றி தமிழ் சமூகத்தில் எனக்கு மட்டுமின்றி மேலும் பலருக்கு நிகழ்ந்த இந்த அவலங்கள் என்றோ ஒருநாள் வரலாற்றின் பக்கங்களில் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக, முடியுமானவரை அவற்றின் குறிப்புகளை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தேன். எனேவ சில வேளைகளில் ஒருசில சம்பவங்கள் மறந்துவிட்டிருந்தாலும், அவற்றக்குப் பதிலாக இட்டுக்கட்டப்பட்ட விடயங்கைள ஒருபோதும் புகுத்தமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

அது ஒரு வியாழக்கிழைம. நேரம் பிற்பகல் 3 மணியிருக்கும். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு சமீபமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எதிராக, நான் நிர்வகிக்கும் யாழ் புத்தக நிலையத்திலிருந்து, மிக அருகாமையில் அத்தியடி புது வீதியில் அமைந்திருந்த எனது வீட்டுக்கு மதிய உணவிற்காகச் சென்றேன். இந்த இடத்தில் இந்த யாழ் புத்தக நிலையம் பற்றியும் சிறிது சுருக்கமாகச் சொல்லிவிடுவது அவசியமானது. இந்தப் புத்தகக்கடை 1963ல் உருவானது. இது வெறும் வியாபார நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்றல்ல. 1963ல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏறபட்ட போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் அந்தப்பிளவு தோன்றியது. சோவியத் சார்பு – சீன சார்பு என ஏற்பட்ட அந்தப்பிளவில், சீன சார்பான கட்சி அணியினரின் பிரச்சார வெளியீடுகளை விநியோகிக்கவும், 'கோஸி சூடியன்' என அழைக்கப்படும், சீன சர்வதேச புத்தக வர்த்தக நிறுவனம் அனுப்பும் நூல்களை விநியோகிக்கவுமே இந்தப் புத்தக நிலையம் அமைக்கப்பட்டது.

எமது சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு, 1972ல் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் கட்சி வேலைகளளச் செய்வதற்காக வரும்படி கட்சி என்னை அழைத்தது. எனவே 1966ம் ஆண்டுமுதல் வன்னிப்பிரேதசத்தில் விவசாயிகள் மத்தியில் நான் மேற்கொண்டிருந்த கட்சி – வெகுஜன வேலைகளை ஏனைய தோழர்களிடம் ஒப்டைத்துவிட்டு, யாழ்ப்பாணம் வந்து வேலைகளைப் பொறுப்பெடுத்தேன். அந்த வேலைகளில் ஒன்று இந்த யாழ் புத்தக நிலையத்தை நிர்வகிப்பதாகும்.

பின்னர் நாம் உருவாக்கிய 'நொதேர்ண் பிறின்ரேர்ஸ்' அச்சகத்தையும் நானே நிர்வகித்தேன். இதுதவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1975ல் நிறுவப்பட்ட பின்னர், பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் முற்போக்கான அரசியல் - கலாச்சார வேலைகளை முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த, அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், அதன் அருகில் ஒரு புத்தகக் கடையை அமைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற நான் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் சேர்.பொன்.இராமநாதன் வீதியில், குமாரசாமி வீதி தொடங்கும் இடத்துக்கு அண்மையில், 196ம் இலக்கக் கட்டிடத்தில் 'யூனிவேர்சல் றேட்ஸ்' என்ற பெயரில் ஒரு கைடைய ஆரம்பித்தேன். அந்த இடத்தை எனக்கு பெற்று உதவியவர், அப்பொழுது யாழ்.பல்கைலக்கழகத்தில் கணிதபீட விரிவுரையாளராக இருந்த நண்பர் (இவர் பேராதைனப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் இங்கிலாந்தில் தனது கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்) ஒருவராவார்.

இந்த இரு புத்தக நிலையங்களைப் பற்றியும் எமது அச்சகத்தைப் பற்றியும் இங்கு பிரஸ்தாபிப்பதின் காரணம், இவை யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் வரலாற்றில் வேறு எந்த நிறுவனங்கைளயும் விட அதிக பங்களிப்பு செய்ததுடன், நான் எழுதுகின்ற இந்த வரலாற்றுத் தொடருடன் அவை சம்பந்தங்களையும் கொண்டிருப்பதும் ஆகும். அதுபற்றி பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்பாணத்தில் டிசம்பர் மாதம் என்பது பருவ மழைக்காலத்துள் உள்ளடங்கிய ஒன்று. சில வேளைகளில் வீசும் காற்றில் சில்லென்ற குளிர் உள்ளுற உறைந்து நிற்கும். ஆனால் இந்த டிசம்பர் பின்மாலைப்பொழுது சற்று உஸ்ணமாக இருந்தது. அது சில வேளைகளில் அன்றைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் வீசிய அரசியல் அனல்காற்றின் வெப்பத்தை உள்வாங்கி இருந்தேதா என்னேவா? நான் மதிய உணவு அருந்தச்சென்ற அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக முன்னொருபோதும் என்வீட்டுக்கு வந்திராத இருவர் என்னைக்காண வந்திருந்தனர். ஒருவர் எனது நண்பரான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆங்கில ஆசிரியராவார். அவர் தமிழ் தேசியவாதத்தின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்றேபாதிலும், குருட்டுத்தனமாக அதை ஆதரிப்பவர் அல்ல.

இன்னொருவர் எனது சொந்த ஊரான இயக்கச்சி பகுதியிலுள்ள முகாவில் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ரெலோ இயக்கத்தில் ஒரு முக்கிய போராளியாக இருந்தவர். புலிகள் 1986ல் TELO இயக்கத்தை தடைசெய்தபோது, பல இடங்களில் அந்த இயக்கத்தின் போராளிகள் பலரை குற்றுயிரும் குறையுயிருமாக பகிரங்க இடங்களில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறான கொடும்செயலுக்கு உள்ளாக்கப்படுவதற்காக எமது ஊரைச்சேர்ந்த அந்த இளைஞனும் மல்லாகத்தில் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதை அறிந்த அவரது தகப்பனார் எனது உதவி கோர என்னிடம் வந்து கண்ணீர் வடித்தார். நான் புலிகள் இயக்கத்தில் அப்பொழுது அவர்களது 'நிதர்சனம்' தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற ஒருவைர அணுகி அந்த இளைஞனை உயிர்தப்ப வைத்திருந்தேன்.

அந்த இருவருடனும் பல்வேறு விடயங்கள் குறித்து அளவளாவினோம். குறிப்பாக இந்திய அமைதிப்படை 1990ல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், புலிகள் தமிழ் பகுதிகளில் நடாத்தி வந்த நரபலி வேட்டை குறித்து விசனத்துடன் உரையாடினோம். அதன்பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்ற பின்னர் மீண்டும் யாழ் புத்தக நிலையம் செல்வதற்குத் தயாரானேன். பிறந்து 16 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த எனது மகள், எம்முடன் தங்கியிருந்த எனது மனைவியின் தகப்பனாரின் மடியில் இருந்துகொண்டு எனக்கு கைகளை அசைத்து விடை தந்தாள்.

நான் மதிய உணவிற்கு செல்லும்போது, கடையில் பொறுப்பாக தவராசா என்ற முதிய தோழர் ஒருவரை விட்டுச் சென்றிருந்தேன். இந்தத் தோழர் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் நடத்துனராக (கொண்டக்ரர்) இருந்து ஓய்வுபெற்றவர். இவரது குடும்ப வரலாறு மிகவும் சோகம் நிறைந்தது. உடுப்பிட்டியைச் சேர்ந்த இவர் உரும்பிராயில் திருமணம் செய்திருந்தார். மனைவி வாய்பேச முடியாதவர். அவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் ஆக மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் மூவருமே வாய்பேச முடியாதவாகள்.

மகன்களில் ஒருவர் யாழ்.சின்னக்கடைப் பகுதியில் கடச்சல் பட்டறை ஒன்றில் வேலைசெய்து வந்தார். ஒருநாள் அவர் வேலைக்கு செல்லும் வழியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் திடீர் மோதல் ஒன்று நிகழ்ந்தது. அதில் அகப்பட்டுக்கொண்ட அவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி அந்த இடத்திலேயே மரணித்தார். இன்னொரு மகன் புலிகளுக்கு எதிரான இயக்கமொன்றுடன் தொடர்புள்ளவர் எனக்கூறி, புலிகள் அவரைத் தேடிவந்தனர். ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளையில், அதை எப்படியோ அறிந்துகொண்ட புலிகள் வீடு தேடி வந்துவிட்டனர். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அவரை சாப்பாட்டுக் கோப்பையுடன் வீட்டு முற்றத்துக்கு இழுத்துவந்து, பெற்றோர் சகோதரிக்கு முன்னால் சுட்டுப் படுகொலை செய்தனர். மகன்கள் இருவரும் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியில் தோழர் தவராசாவின் மனைவியும் சிறிது நாட்களில் மரணித்துவிட்டார்.

அதன்பின்னர் தவராசாவும் அவரது வாய்பேசமுடியாத மகளும் உரும்பிராயில் மிகவும் கஸ்டமான ஒரு சூழலில் வாழ்ந்துவந்தனர். கடுமையான ஆஸ்த்மா நோய் காரணமாகவும், முதுமை காரணமாகவும் அவரால் எந்தெவாரு தொழிலையும் செய்ய முடியாத நிலையில், அவரது மகள் தான் கற்றிருந்த மணப்பெண் அலங்காரத் தொழிலில் இடையிiடேய கிடைக்கும் வருவாயிலேயே அவர்களது வாழ்க்கை ஒருவாறு ஓடியது. அவர் தனது மன வேதனைகளை ஆற்றுவதற்காகவும், அரசியல் விவகாரங்கைளக் கலந்துரையாடுவதற்காகவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எமது புத்தகக்கடைக்கு வந்துவிடுவார். இந்த நிலமையில், அன்றும் அவரை புத்தகக்கடையில் விட்டுவிட்டே வீடு சென்றிருந்தேன்.

திரும்பவும் நான் புத்தகக்கடைக்கு சென்றெபாழுது, எமது கடைக்கு முன்னால் இளைஞன் ஒருவன் சைக்கிளுடன் நிற்பது தெரிந்தது. தூரத்திலிருந்து நான் இதை அவதானித்தாலும், அவன் நின்ற நிலை, எதையோ அவன் எதிர்பார்த்து நின்றது போன்ற ஒரு தோற்றப்பாட்டை, எனது மனதில் உருவாக்கியது.

தொடரும்..



Read more...

Saturday, June 28, 2025

ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்..

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முதற்கட்ட தீர்வாக இந்திய அரசின் முழு செல்வாக்குடன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களது உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது, அவர்களது இருப்புக்கான நிரந்தர தீர்வ எவ்வாறு அமைந்திருந்தது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தாலும் புலிகளின் வன்செயல்களுக்கு அச்சமுற்றதனால் ஆதரவாக பேச மறுத்தபோதும், இலங்கை அரசு அதன் உள்ளடக்கத்தையும் அவ்வொப்பந்தம் எவ்வாறு இலங்கை நாட்டை கூறுபோடுகின்றது என்பதையும் உணர்ந்ததனால், ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன் என அவரது கட்சியின் இரண்டாம் தலைமையாக இருந்த ஆர் பிறேமதாச சூழுரைத்து ஆட்சிபீடம் ஏறினார்.

ஆட்சிப்பீடமேறிய பிறேமதாஸ குறித்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை நிறைவேற்ற இந்திய அமைதி காக்கும் படையாக வந்திருந்த இந்திய இராணுவத்தை இலங்கையை விட்டு வெளியேறுமாறு பணித்தார். அதன்போது நாங்கள் தமிழ் மக்கள் சார்பாக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என இந்திப்படை கூற தமிழ் மக்கள் குறித்த ஒப்பந்தத்திலுள்ள தீர்வை ஏற்றுக்கொள்ளவில்லை நீங்கள் வெளியேறலாம் என்றார் பிறேமதாஸ.

தமிழ் மக்கள் குறித்த ஓப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தமிழ் மக்களே கூறவேண்டும். நீர் கூறுவதை செவிமடுத்து நாங்கள் வெளியேறமுடியாது என்றபோது, பிரபாகரனை பணமும் ஆயுதங்களும் கொடுத்து விலைக்கு வாங்கிய பிறேமதாஸ, அவனைக் கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் பெயரால் எதிர்த்தார். புpரபாகரனை கொண்டு இந்திய இராணுவத்தின் மீது போர் தொடுத்தார். அதற்காக பிரபாகரனுக்கு போதிய பணமும் , ஆயுதங்களும் , கொழும்பு நட்சத்திர ஹோட்டல்களில் உல்லாச வாழ்வும் வழங்கப்பட்டது.

வுடகிழக்கை விட்டோடிய புலிகள் வடகிழக்குக்கு வெளியேயுள்ள பெருநகரங்களிலும், வடகிழக்கின் எல்லை புறங்களிலும் சிங்கள இராணுவத்தின் அனுசரிப்பில் இருந்து இந்திய இராணுவத்தின் மீதும் அவ்விராணுத்தினருடன் சேர்ந்தியங்கிய இதர தமிழ் இயக்கங்கள் மீது தாக்குதல்களை தொடுத்து அவர்களை கொலை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இந்திய இராணுத்தினர் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்து 1989 ம் ஆண்டு இறுதிப்பகுதியில் வெளியேறியபோது, பிறேதாஸவுடன் தேனிலவு கொண்டாடிக்கொண்டிருந்த புலிகள் எனப்பெயர் கொண்டிருந்த கூலிப்படை இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து மீண்டும் வடகிழக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.



இலங்கை இராணுவத்துடன் இணைந்து வந்த புலிகள் வடகிழக்கெங்குமிருந்த மாற்று இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் சித்திரவதை செய்யவும் கொலைசெய்யவும் ஆரம்பித்தனர். இவ்வாறு வடமாகாணத்தில் கைது செய்யப்பட்ட பலர் துணுக்காயிலுள்ள நெல்களஞ்சியசாலையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டும் சிலர் விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். இதனால் துணுக்காய் வதை முகாம் சித்திரவதைகளுக்கு மிகவும் பெயர் போனதாக அக்காலத்தில் இருந்தது. துணுக்காய் என்கின்றபோது சலீம், காந்தி, சின்னவன் என்ற கொலைஞர்களின் பெயர்கள் அலைமோதுவதுண்டு.

இந்நிலையில் துணுக்காய் வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற, தங்கத்துரை என்பவரின் மகளான தயானி என்பவர் தனது தந்தையார் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பும் அந்த இடத்தை காணச் சென்றமை இன்று சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், பாசிச வெறியர்கள் அவ்வாறானதோர் முகாம் அங்கு இருக்கவே இல்லை என முழுப்பூசணிக்காயை ஒரு உள்ளங்கை சோற்றினுள் புதைக்க முற்படுகின்றனர்.

ஆனால் குறித்த துணுக்காய் முகாமில் சித்திரவதைகளுக்குள்ளாகி புலிகளுக்கு ஓலை கொடுத்து வெளியேறிய அல்பேட் ஜூலியின் என்பவர் தனது துணுக்காய் முகாம் சித்திரவதை கொடுமைகள் தொடர்பாக 1995 புத்தகமாக எழுதியுள்ளதுடன், குறித்த புத்தகத்தின் ஆங்கிலப்பிரதிகள் அந்த ஆண்டே இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் செயற்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு மனித உரிமை காக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பதை இன்று கண்மூடி பால்குடிக்கும் பூனைக்குட்டிகள் அறிந்திருக்க வாய்பில்லை.

எனவே வரலாறு எமக்கிட்டுள்ள கட்டளையாக இந்த அமிழ்ந்து போகும் உண்மையை மிதக்க வைக்கும் நோக்கில் புத்தகத்தினை, இலங்கைநெட் பகுதிகளாக தரவேற்றுகின்றது.

ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்.. பகுதி 1

இந்தப் புத்தகத்தை வாசித்து மூடுகையில் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிடாத ஒரு சராசரி மனிதனின் மனதில் எங்கள் சமுதாயத்தில் மனிதாபிமானம் எவ்வளவு இழிநிலை எய்திவிட்டது என்பதை எண்ணிய வேதனைதான் எஞ்சியிருக்கும். ஏனெனில் உலகின் வரலாற்றில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத குரூரமான சித்திரவதைக்ளை நாம் நமது சுதந்திரப்போராட்டம் என்று மகுடம் சூட்டிப் பூஜித்த "புனிதமான கோயிலின்” மூலஸ்தானத்திலேயே தரிசிக்கும் துர்ப்பாக்கியம் பெற்றவர்களாகிவிட்டோம். "நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல,” என்று விடுதலைப் புலிகள் தங்கள் கோஷத்தில் பொறித்துக் கொண்டாலும், பயங்கர நோய்களின் விளைவுகளை அறிந்து கொள்ள விஞ்ஞான கூடங்களில் பரிசோதனைக்காக வளர்க்கும் விலங்குகளைப் போலப் பாவித்து மனிதனின் தேகத்தில் தங்கள் கற்பனையில் உதிக்கும் வினோதமான சித்திரவதைகளையெல்லாம் நடத்தி எது மனிதனுக்கு அதிக வேதனையைத் தரக்கூடிய சித்திர வதையெனக் கண்டு பிடிக்கத் துடிக்கும் அவர்களின் வெறியும் ஒவ்வொரு அணுவும் துடிதுடிக்கும் உச்ச வேதனையின் ஈனக்குர லையும், இரத்தத்தையும், கன்றிய கதைகளில் கிளம்பும் துர்நாற்ற த்தையும் ரசிக்கின்ற குரூர ரசனையும் இவர்களைப் பீடித்துள்ளமனநோய் எத்தனை உச்சத்தை எய்தியுள்ளது என்பதையே வெளிச் சமிட்டுக் காட்டுகிறது. இது எமக்கும் நரமாமிசம் புசிப்போரின் சந்ததித் தொடர்பு எங்கேனும் இருந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

டாக்டர் சிவகுமாரனைப் போன்ற பெரிய மருத்துவர்கள் குடாநாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்தவர்களைப் பரிசோதித்து அவர்களின் உடல்நிலை குடாநாட்டினுள் சிகிச்சை பெற்று மாற்ற முடியாததுதானாவென புலிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் வளங்கித் தம் சேவையை நல்கும் போது இங்கு வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் எப்படிப் பராமரிக்கப்பட்டடார்கள் என்பதை மருத்துவ உலகம் அறிந்து கொள்ளக் கூடியதாயுளளது.

சிவத்தம்பி போன்ற பேராசிரியர்கள் புலிகளின் முத்தமிழ் விழாக்களுக்குத் தலைமை தாங்கும்போது இந்த வதை முகாம்களில் தமிழ் எப்படி வாழ்கிறது என்பதை தமிழுலகம் புரிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது.

இருப்பினும் இப்போது கூட இந்த வதைகளுக்கு வக்காலத்து வாங்க சில புலி ஆதரவாளர்கள் தயங்காமல் முன்வருவார்கள். அவர்கள் படித்தவர்கள் பெரியவர்கள் என்ற பட்டங்களைத் தாங்கியவர்களாயும் இருப்பார்கள். இவர்கள் முதலில் இப் புத்தகத்தை முடி மறைத்து இருட்டடிப்புச் செய்ய முற்படுவார்கள். ஆனால் அதையும் மீறி இது வெளிப்படுமானால் "இவை அனை த்தும் சுத்தப் பொய்” என்று தமது வளமையான பாணியில் மறுப் பார்கள். ஆனால் அது அவர்களின் அடிவருடிகளான சிலரைத் தவிர சிந்திக்கக் கூடிய அனைவரையும் திருப்திப்படுத்தாது என்பது சில புத்திசாலிகளுக்குப் புரியும். அதனால் அவர்கள் சில வேறு வழிகளைக் கையாளுவார்கள். இப்படி வதைபட்ட அத்தனை பேரும் காட்டிக் கொடுத்த துரோகிகள்தானென்று அடித்துச் சொல்லுவார்கள். இத்தனைக்கும் அவர்கள் தாம் குற்றம் சாட்டும் ஒருவரது பெயரைக்கூட அறிந்திருக்க மாட்டார்கள். எனினும் தாம் கண்ணால் கண்டது போல அடித்துச் சொல்லு வார்கள். ஏனெனில் கேள்வி கேட்கக் கூடிய அளவுக்கு இவர்களின் வக்காலத்தை செவிமடுப்பவர்களும் இவ்வதைகளுக்குள்ளாகியவர்கள் பற்றி முகமறியாதவர்களாகவே இருப்பார்களென்பது அவர்களின் எண்ணமாக இருக்கும்.

இருந்தும் எல்லா இடமும் இதே பதிலைச் சொல்லிச் சமாளிக்க இயலாதேபாது இவர்கள் சில நுட்பங்களைக் கையாழுவார்கள். அதிலொன்று பிழையை ஒத்துக் கொள்வது. ஆனால் பிழையை அதற்குரிய பரிமாணத்தில் பார்க்காமல் மிகவும் சிறிய ஒரு *விடயமாக்கி "அவர்களும் சின்னப் பிழைகள் விட்டிருக்கிறார்கள் தான்” என்னும் தட்டிக் கழிக்கும் பாணியில் ஒத்துக்கொள்வது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் "இதுகளையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது" என்னும் கருத்தைத் தொனிக்கும். மற்றொரு வழி உடனே இந்தக் கதையை ஒதுக்கிவிட்டு மற்றவர்களும் இப்படிச் செய்திருக்கிறார்கள்தானே என்று குற்றம்சாட்டப் புறப்படுவது. கணிதத்தில் ஒரு கணியத்தை இல்லாதாக்க வேண்டுமானால் அக் கணியத்தை இன்னொன்றுக்குச் சமன் என சமன்படுத்திவிடுவது, பின் இரண்டையும் ஒரு புறத்திற்கு எடுத்து ஒன்றிலிருந்து மற்ற தைக் கழித்தால் விடை பூச்சியமாகிப் போய்விடும். அப்படி ஒரு பிழையை இல்லாது ஒழிப்பதற்கு இனங்னொரு பிழையைக் காட்டி அதனுடன் இதை சமன்செய்து கொண்டால் பிழையே பிழையில்லாததாகிவிடும் மாயஜாலம் இது.

எப்படியிருந்தாலும் இப்புத்தகத்தின் தாக்கத்தையிட்டு இவர்கள் இப்படிப் பயப்படும் அச்சமொன்றே இதில் உள்ள உண்மையின் கனம் எத்தகையது என்பதைத் தெரிவிக்கப் போதுமானது, இன்னும் புலிகள் வதை முகாம்களில் கூறுவது போலவே உலகின் நான்காவது படையை தோற்கடித்த லேசுப்பட்டவர்களல்லாதவர்களாக இருக்கலாம். இப் புத்தகத்தை தனது தார்மீகக் கடமையாகக் கருதி எழுதியவர் ஒரு தனிமனிதனாக இருக்கலாம். இவர்கள் எம்மை ஒரு புழுப்போல் நடத்தலாம்.

ஆங்கிலத்தில் Even a worm will turn என்றதொரு வாக்கியமுண்டு. (முதுகெலும்பில்லாத புழுக்கூட இறுதியில் திரும்பும்) இம்சையின் தாங்கமுடியாத கட்டத்தில் மெளனமாக சாவதைவிட தனது இறுதி எதிர்ப்பைக் காட்டவே செய்யும். தனிமனிதனாக இருந்தாலும், ஒரு அற்பனாக இருந்தாலும் தனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கெதிராக ஏதாவது ஒரு எதிர்ப்பைக் காட்டத்தான் செய்வான். அந்தவகையில் இந்தப் புத்தகம் அபாயத்தின் மத்தியிலும் துணிந்து வெளிவரும் எதிர்ப்பின் சின்னமாக விளங்குகிறது.

இப்புத்தகம் புலிகளின் வதைகளைப்பற்றி தான் அனுபவித்த அனுபவத்தைக் கூறும் ஒருவரின் எந்த மிகைப்படுத்தலுமற்ற உண்மைகளின் பதிவு. ஆனால் இதன் அர்த்தம் புலிகள் இவ்வாறான கொடுமைகளைச் செய்கிறார்கள் என்று அம்பலப்படுத்துவதென்பது அரசையோ மற்றய அமைப்புக்களையோ நியாயப்படுத்தும் அல்லது வக்காலத்து வளங்கும் நோக்கிலானது அல்ல. அதே வேளை தமிழ் மக்கள் பூரண உரிமைகளும் பெற்ற சமுதாயமுமல்ல. உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சமுதாயம். இங்கு இப் போராட்டத்தை தவறான வழியில் இட்டுச் சென்று சிதைப்பதில் புலிகளின் தவறுகள் காரணமாயிருந்தாலும் இப் போராட்டத்திற்கே மூலகாரணமான உரிமைகள் மறக்கப்பட்டுள்ள, நசுக்கப்படுகின்ற நிலமைக்கு காரணமான ஆட்சியாளர்களது தவறுகள் மறுக்கப்பட முடியாதவை. இந்தப்பக்கத்தில் இழைக்கப் பட்ட மனித உரிமை மீறல்களும் எந்தவகையிலும் குறைத்து மதிப் பிடக் கூடியவையுமல்ல. மக்களின் நலத்தின் மீது அக்கறை கொள்ளாது தம் சொந்த நலன்களுக்காகச் செயற்படும் போக்கு எது வரை தொடருமோ அதுவரை இம் மனித உரிமை மீறல்கள் தொடரத்தான் செய்யும்.

கொலைகாரப் புலிகளினால் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, துணுக்காய் காட்டில் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, புலிகளின் இக் கொடுமைகளை உலகத்திற்கு குறிப்பாக அவர்களை உத்தமர்களாக, விடுதலை வீரர்களாகக் கருதும் அப்பாவித் தமிழர்களுக்கு அறியத்தர வேண்டும் என பல தடவைகள் எண்ணினேன். இதை என் கடமையாகவும் கருதினேன். புலிகளின் கொடுஞ் சிறையிலிருந்து தப்பி வந்தபின் யாழ்நகரில் தலைமறைவாக இருந்தேன். புலிகளின் கண்ணுக்குள் மண்ணைத்தூவி விட்டு தமிழீழத்திலிருந்து தப்பி கொழும்பு வந்து சேர்ந்தேன். என் உடலில் ஏற்பட்ட காயவடுக்கள் மறைந்து போனாலும் போகலாம். ஆனால் இக் கொடிய புலிகளினால் என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் என்றுமே ஆறாது. ஆனால் காயம் பட்ட என் நெஞ்சுக்கு ஆறுதலாகவும், மனித நேயம் பேணப்பட நான் செய்யும் சிறு பணியாகவும் கண்ணிருடன் இதை எழுதுகிறேன்.

1990 இன் ஆரம்பம், இலங்கையின் வடக்கு கிழகக்கில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படப்போகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கிய காலம். மனித நேயம் மீண்டும் மழுங்கடிக்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் தமக்கு விழப்போகும் அடிமை விலங்கைப்பற்றி உணரமுடியாத வட-கிழக்கு மக்களும் யாழ்ப்பாண பத்திரிகைகளும் புலிகளின் வரவை ஒரு வகையில் வரவேற்றனர். இந்நிலையில்தான் மாகாண அரசை ஆதரித்த தமிழ் மக்கள் மீது புலிகளின் பழிவாங்கல் நட வடிக்கைகள் தொடங்கின. மாற்று இயக்கத்தினருக்கு தலைவரால் பொது மன்னிப்பு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிடம் சரணடையும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் தெருத் தெருவாக அறிவிக்கப்பட்டது. எங்கும் பரவலாகப் பலர் கைது செய்யப்படுவதாக அறியக்கூடியதாக இருந்தது. கைது செய்யப்படுபவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதோ அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதோ யாருக்குமே தெரியாது. கைது செய்யப் படுபவர்களை பெற்றோரோ அல்லது உறவினர்களோ பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை தமிழீழமெங்கும் கொலைகாரப் புலிகளின் கொடிய ஆட்சி ஆரம்பமாகியது. 1990 ஏப்ரல் மாதத் தில் ஒரு நாள் புலிகள் வந்து தேடிக்கொண்டு போவதாக வீட்டில் சொன்னார்கள். மனம் துணுக்குற்றது. என்னவாக இருக்கும் என சந்தேகித்தபடியே அருகில் அமைந்திருந்த புலிகளின் குகை (முகாம்) நோக்கி சென்றேன்.

முன் காப்பரணில் சீருடையில் இருந்த சிறுவன் ஒருவன் என்னை யாரென விசாரித்தான். நான் மிகமிகப் பணிவாக வந்த காரணத்தை சொன்னேன். உடனே என்னை ஒரு திருடனைப் போல் பார்த்து என் உடல் எல்லாம் தடவிப்பார்த்து சோதித்து திருப்திப்பட்டவராக உள்ளே செல்ல அனுமதித்தார். அது ஒரு வழிப்பாதை என்பதும், இந்த வழியால் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்பதையும் முன்னர் நான் அறிந்திருந்ததால் மரணபயத்துடனேயே உள்ளே சென்றேன்.

அங்கே முகாம் பொறுப்பாளர் முன் போய் பவ்யமாக நின்றேன். அவர் எனது பெயர் முகவரி ஆகியவற்றை விசாரித்து விட்டு “உன்னை அழைக்கும்படி மேலிடத்திலிருந்து எமக்கு உத்தரவு வந்துள்ளது. அவர்கள் வந்துதான் உன்னை விசாரிப்பார்கள். அதுவரை இங்கு இரு" எனக் கூறி ஒரு அறையினுள் விட்டுப் பூட்டினர். நேரம் இரவு பத்து மணி, அறை ஒரே இருட்டாக இருந்தது. சுமார் இரண்டு மணிநேரம் அப்படியே நின்றேன். பின்னர் சுவர் ஒரமாக உட்கார்ந்தேன். யோசித்துக்கொண்டேயிருந்து அப்படியே தூங்கி விட்டேன். மறுநாள் காலை எட்டு மணிபோல் அறை திறக்கப்பட்டது. காலைக் கடன் செய்வதற்கு அனுமதிக்கப் பட்டேன். பின் மீண்டும் அறைக்குள் அடைக்கப்பட்டேன். நண்பகல் மதியச் சாப்பாடு தந்தார்கள். சாப்பிடவில்லை. சாப்பிடச் சொல்லி ஏசினார்கள். சிறிது சாப்பிட்டேன். இரவு ஒன்பது மணிபோல் பானும், வாழைப்பழமும் தந்தார்கள். சாப்பிட்டேன். சாப்பாடு கொண்டு வந்த சீருடைச் சிறுவனிடம் "அண்ணே என்னை எப்போ விடுவார்கள்” எனக் கேட்டேன். தெரியாது எனச் சொல்லி விட்டு கதவைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார். இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். பொழுது புலர்ந்தது. கதவு திறந்தது. காலைக் கடனை முடிப்பதற்கு அனுமதித்தார்கள். அந்த நேரத்தில் முகாம் பொறுப்பாளரைக் கண்டேன் என்னை எப்போ விடுவீர்கள்? என அழுது கொண்டே கேட்டேன், “தலைமைக் காரியாலயத்திலிருந்து இன்று இரவு ஆட்கள் வந்து உன்னை விசாரித்து பிரச்சனை இல்லை என்றால் உடன் விடுதலை செய்வார்கள்." என்றார். மனதுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. அன்றும் வழமைபோல் மதிய உணவும், இரவு உணவும் தரப்பட்டது. இரவு விசாரணைக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தூக்கம் வராமல் விழித்திருந்தேன்.

நடுநிசி பன்னிரண்டு மணி இருக்கும் கதவு திறக்கப்பட்டு அறைக்கு வெளியே அழைக்கப்பட்டேன். கறுத்த தடித்த புலி ஒருவர் நின்றார். எனது பெயர் ஊர் எல்லாம் விசாரித்தார். EPRLF. உடன் என்ன தொடர்பு எனக் கேட்டார். தொடர்பு ஏதுவுமே இல்லை என மறுத்தேன். மீண்டும், மீண்டும் அதையே கேட்டார். நான் இல்லை, இல்லை என மறுத்தேன். "டேய் சுத்துறியா?" (என்னை மடையனாக்குகின்றாயா?) எனக்கேட்டு அடிக்க வந்தார்.

"அண்ணே அடிக்காதீர்கள். எனக்கு இயக்கங்களுடன் தொடர்புகள் இல்லை. எனக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்,” எனச் சொல்லி அழுதேன். "டேய். (கெட்டவார்த்தை) எல்லோரும் இப்படித்தானடா சுத்துகிறீர்கள். நீ EPRLF க்கு றெக்கி (உளவுசொன்னது) கொடுத்து வந்தது எமக்கு தெரியும். பொய் சொல்லாதே," எனக் கூறினார். பின்னர் அங்கு நின்ற வேறு புலியைக் கூப்பிட்டு “இவனின் சேட்டைக் கழற்றி கண்ணைக் கட்டு" என்றார். அவ்விதமே செய்யப்பட்டேன். கைக்கு விலங்கிடப்பட்டேன். சிறிது நேரம் புலிகள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். என்னை இழுத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் எங்கு செல்கிறது என்பது தெரியாமல் வாகனத்தின் அடியில் குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நான் ஏதேதோ பயங்கர கற்பனையில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். இடைவழியில் வாகனம் நிறுத்தப்பட்டது. என்னை அழைத்துச் சென்றவர் வேறு யாருடனோ கதைப்பது கேட்டது. "யார் வானுக்குள் நல்ல கிடாய்" எனப் புதிய குரல் கேட்க "இதை சுடலையில் தட்டப்போகிறேன்" என என்னை அழைத்துச் சென்றவர் சொல்வது கேட்டது. எனக்கு மரண பயம் பிடித்துக் கொண்டது. தட்டப் போகிறேன் என்றால் அவர்கள் பாஷையில் சுடப்போகிறேன் என்று அர்த்தம். எனக்கு உடலெல்லாம் வியர்த்தது. சிறிது நேரத்தில் ஒன்றுமே தெரியாத நிலைக்கு நான் வந்துவிட்டேன். வாகனம் எவ்வளவு நேரம் ஓடியது என்பதோ, எங்கு போகிறதென்பதோ எனக்கு எதுவும் தெரியவில்லை. வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கப்படும் போதுதான் சுய உணர்வு வந்தது.

தொடரும்....



Read more...

Friday, June 27, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள். தோழர் மணியம் தேனிக்காக எழுதிய அனுபவத்தொடர். பாகம் 1

துணுக்காய் வதை முகாமில் நான்காயிரம் மனித உயிர்கள் புலிகளால் வதைக்கப்பட்டு அவர்களில் பலர் கொலைசெய்யப்பட்டு உடல்கள் வவுனிக்குளக்கரையில் எரிக்கப்பட்டு அக்குளத்திலேயே கரைக்கப்பட்ட வரலாறு புதைக்கப்பட்டுள்ளது. அதே வதை முகாமில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற திரு தங்கத்துரை என்பவரது மகள் தனது தந்தையார் புதைக்கப்பட்ட இடம்தேடி துணுக்காய் சென்றபோது பாசிசத்தின் அடிவருடிகள் அவரது நீதிகோரும் உரிமையை மறுக்க முற்படுவதுடன் வரலாற்றையும் புதைக்கப்பட்ட மனிதர்களுடன் புதைக்கவே முற்படுகின்றனர்.

ஆனால் துணுக்காய் வதை முகாம் தொடர்பில் இன்று தயானி பேச முற்படும்போது அதனை தடுக்க முற்படும் தற்குறிகளுக்கு குறித்த வரலாறு இற்றைக்கு ஒன்றரை இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டவேண்டியுள்ளது.

ஆகையால் இலங்கைநெட், தோழர் மணியம் தேனிக்காக தனது வதை முகாம் அனுபவங்கள் தொடர்பாக எழுதிய தொடரை இத்துடன் மீள்பதிவு செய்கின்றது என்பதுடன் அருள்பேட் ஜூலியன் என்பவரால் தான் அனுபவித்த துயரங்கள் தொடர்பாக எழுதப்பட்ட நூலையும் தொடராக பதிவிட எண்ணியுள்ளது. அத்துடன் இத்தகவல்களுக்கு மேலதிகமாக துணுக்காய் வதைமுகாம் தொடர்பில் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் துணுக்காய் வதை முகாம் அனுபவங்கள் தொடர்பாக கிறேசியன் என்பவர் எழுதிய தொடர் ஒன்றும் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவிடப்பட்டுள்ளதை வாசித்து அறிந்து கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

அன்பான 'தேனி' வாசகர்களுக்கு,

நான் ஏன் இந்தத் தொடரை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு சொல்லி விடுவது அவசியமானது. அதற்கு முன்னதாக எனது புலி வதை முகாம் பற்றிய அனுபவங்களை எழுதுவதற்கு 'தேனி' இணையத்தளத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பைத விளக்கி விடுவதும் முக்கியமானது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக நான் தேனி இணையத்தளத்தின் ஓரு வாசகனாக இருந்து வருகின்றேன். அத்துடன் அவ்வப்போது முக்கியமான சில விடயங்களில் எனது கருத்தை அதன் ஊடாக வெளிப்படுத்தியும் வந்திருக்கிறேன். நான் தேனியைத் தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம், அது எந்தவொரு கட்சியையோ, இயக்கத்தையோ அல்லது குழுவையோ சாராத சுதந்திரமான ஒர் ஊடகம் என்பதனாலாகும்.

அத்துடன் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பின்பற்றும் தமிழ் தேசியவாத சேற்றுக்குள் அமிழ்ந்துவிடாமல், தேனி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய திசைமார்க்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியுடன் ஊன்றி நின்றதுமாகும்.

குறிப்பாக பாசிசப் புலிகைள அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தில் தேனி ஆரம்பம் முதல் இறுதிவைர எவ்வித ஊசலாட்டமுமின்றி நிலை தழும்பாது நின்று வந்துள்ளதுமாகும். இதுதவிர இன்று தமிழில் செயற்படுகின்ற இணையத்தளங்களில் தேனி மட்டுமே மிக அதிக எண்ணிக்கையான வாசகர்களால் பார்வையிடப்படுவது என்பதும், இலங்கையில் வெளிவருகின்ற பிரதான தமிழ் தினசரிகளின் வாசகர்களுக்கு இணையான வாசகர்கள் தினசரி தேனியைப் பார்வையிடுகிறார்கள் என்பதும் இன்னொரு காரணமாகும்.

அத்துடன் தேனி எனது இந்தத்தொடரை எவ்வித நிபந்தனைகளுமின்றி வெளியிட வந்ததிற்காக, அதன் நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, இனி விடயத்துக்கு வருவோம்.

2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போருடன் புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாசகாரம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் தமிழ் பிற்போக்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பு மட்டுமே, புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம் 'யாழ்ப்பாணியம்' என்பேத. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகைள விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனேவா, அவ்வாறான அர்த்தத்தில் 'யாழ்ப்பாணியம்' என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது. அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும்.

இதில் இன்னொரு விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய சதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும். எனேவ இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகைள முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன், அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்றையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை தமது 'மீட்பர்கள்' என்றும், ;விடுதைல வீரர்கள்' என்றும், ஏன் 'கடவுளர்கள்' என்றும் கருதிய ஒரு காலம் இருந்தது. இன்றும்கூட அவ்வாறான ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க சில சக்திகள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களது நிஜமுகம் என்ன என்பதை எனது இந்த அனுபவத்தொடர் ஓரளவு தன்னும் மக்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன். நான் அவர்களது கைதியாக இருந்த காலத்தில் நான் அனுபவித்த உடல் - உள வேதனைகளை மட்டுமின்றி, அவர்களால் அந்தக் காலகட்டத்தில் என்னுடன் வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அனுபவித்த வேதனைகைளயும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகின்றேன். இதில் அவர்களது இயக்க உறுப்பினர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட 'சீவன்களின்' துன்பங்கைளயும் உள்ளடக்குவது அவசியமானது.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மட்டுமின்றி, அவர்களது சிந்தைனகள், செயற்பாடுகள், பழக்க வழக்கங்கள் என்பன பற்றியும், அவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கட்டமைத்து வந்த பாசிச நிர்வாக இயந்திரத்தின் தன்மை பற்றியும் நான் அவதானித்தவை, அவர்கள் சிலருடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் பெறப்பட்டவை என்பனவற்றையும் நான் இங்கு தெரிவிப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.

புலிகளால் நான் 1991 டிசம்பர் மாதம் 26ம் திகதி கைதுசெய்யப்பட்டு, 1993 ஜூன் 06ம் திகதி வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களது வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டேன். அவர்கள் 'மனமிரங்கி' என்னை விடுதலை செய்திராவிட்டால், இன்று நான் உங்களுடன் எனது கருத்துகைளப் பகிர்வதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அவர்கள் என்னை விடுதலை செய்ததை எனது இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

புலிகள் பற்றிய எனது அனுபவங்கள் அவர்களின் கொடூரமான உருவத்தின் ஒரு வெட்டுமுகம் மட்டுமே. அதாவது 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல. அவர்களுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்த இது போதுமானதல்ல. அதனை முழுமையாகக் கொண்டுவருவதாக இருந்தால், அவர்களால் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு, ஏதோ சில காரணங்களால் தப்பிப் பிழைத்து வெளியே வந்து, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னமும் பயத்துடன் முகம் காட்டாது வாழும் நூற்றுக்கணக்கான முன்னாள் கைதிகள் முன்வர வேண்டும். அது அவர்கள் தமிழ் சமூகத்துக்கும், மனித குலத்திற்கும் செய்யும் வரலாற்றுக் கடைமயாகும்.

எனது புலி வதை முகாம் அனுபவங்கள், அது ஏற்பட்டு 18 வருடங்கள் தாமதமாக வெளிவருவதற்கு காரணங்கள் உண்டு. நான் விடுதலையாகி வெளியே வந்ததும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வந்த எனது ஆத்ம தோழர்களும், நண்பர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வேறு பல சமூக ஆர்வலர்களும், நான் புலிகளின் இரும்புப் பிடியின் கீழ் இருந்தபோது பட்ட அவலங்களின் துன்பங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து, உலகின் முன் வெளிச்சத்தில் வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் 1995ல் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் வரை, நான் அவர்களது தீவிர கண்காணிப்புக்குள் இருந்ததினால், அந்தச் சூழ்நிலையில் எனது சுண்டு விரலைக்கூட அவர்களுக்குத் தெரியாமல் அசைக்க முடியவில்லை.

1999ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு சென்ற பின்னரும்கூட, அவர்களது வேவுக்கண்கள் என்னைப் பின்தொடர்ந்த வண்ணமே இருந்தன. மீண்டும் நான் அவர்களது தீவிர கண்காணிப்பு வட்டத்துக்குள் படிப்படியாகக் கொண்டுவரப்படுகிறேன் என்று உணர்ந்த நிலையில், தவிர்க்க முடியாமலும், மனம் விரும்பாத நிலையிலும், எனதும் எனது குடும்பத்தினதும் பாதுகாப்புக் கருதி நான் நாட்டை விட்டு 2004 டிசம்பர் 04ம் திகதி வெளியேறினேன். நான் புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டிலும்கூட புலிகளின் மரண நிழல் என் போன்றவர்கள் மீது படிந்து கொண்டே இருந்தது. அதனால் வெளிநாட்டுக்குத் தப்பி வந்தும்கூட, கடந்த 6 வருடங்களாக ஓரளவு ஒதுங்கி மறைந்து வாழ வேண்டியே இருந்தது. இப்பொழுது புலிகள் தாயகத்தில் பெரும்பாலும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, இன்றும்கூட அவர்கள் வைத்திருக்கும் பலமான சர்வதேச வைலப்பின்னல் காரணமாக, அந்தப் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு உலகின் எந்த மூலையிலாவது பூரண பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது.

இருப்பினும் எமக்குள்ள வரலாற்றுக் கடமையை ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது நாம் நநிறைவேற்றியே தீர வேண்டும். இது வரலாறு எமக்கு இடும் கட்டளையாகும். தவறுவோமாக இருந்தால், அது எமது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். அதற்காக சில துன்பங்கள் ஏற்படினினும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அந்த உணர்வின் காரணமாகவே நான் இத்தொடரை எழுத எண்ணினேன். நான் இதை எழுதும் போது உண்மையுடனும் சத்தியத்துடனும் அணிவகுத்துச் செல்லவே எப்பொழுதும் விரும்புகின்றேன். புலிகள் என்னைக் கைது செய்ததால்தான் நான் அவர்கள் மீது கோபம் கொண்டு இதை எழுதுகிறேன் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் மறுபக்கமாகப் பார்த்தால் நான் ஏதோவொரு வகையில் அவர்களது தீய செயற்பாடுகைள எதிர்த்ததாலேயே, அவர்கள் என்னைக் கைதுசெய்து சித்திரவைதக்குட்படுத்தினர் என்பதே உண்மையாகும். அந்த வகையில் பார்த்தால் மனிதகுல விரோதிகளான புலிகள் எனக்கு மாபெரும் கௌரவத்தை வழங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றனர் வாழ்கின்றனர். இனப்பெருக்கம் செய்கின்றனர். தமது சந்ததிகளுக்காக சொத்துக்கைளத் தேடி வைத்துவிட்டு மரணிக்கின்றனர். சொத்துத் தேடுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் மிருகங்ளும் கூடச் செய்கின்றன. எவன் ஒருவன் தான் வாழும் காலத்தில் தனது சக மனிதனுக்கு எதிராகவும், தன்னுடைய இன்றியமையாத சுற்றுச்சூழல் நண்பர்களான விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றுக்கு எதிராகவும் உருவாகும் அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறானோ, அவன்தான் உண்மையான மனிதன் ஆவான். இது நமது முன்னோடிகளால் எமக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டு வரும் பேருண்மையாகும்.

இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் நேரத்தில், என்னுடன் புலிகளின் வதை முகாம்களில் சக கைதிகளாக இருந்து, எம்மில் சிலருக்கு கிடைத்த மீண்டும் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல், 'புலிகளின் கொலைக்களங்களில் பலியிடப்பட்டவர்களுக்கும், எமக்குத் தெரியாமல் அவர்களால் மரணிக்க வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும், எனது கண்ணீராலும், இதயத்தில் கசியும் செந்நீராலும் அஞ்சலி செய்கின்றேன். '

அவர்களது துன்பப்படும் ஆத்மாக்கள் சாந்தி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

தொடரும்.....

Read more...

Friday, September 13, 2024

பழையபாதையா ? புதியபாதையா? யாழ்பாணத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியை பலமாக தட்டிய அனுர

மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக் கடுமையாக உழைக்கும் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அனுமதியைக் கோருகின்றேன்… இன்று இந்த யாழ் மாவட்டத்திற்கான தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் வலுவானதொரு இளைஞர் அணி தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளதுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேபோல, எங்களுக்குச் செவிமடுக்கவும், எங்களுடன் உரையாடவும் இந்த இடத்தில் கூடியிருக்கிற உங்களனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனுமதியையும் கோருகின்றேன்…

இந்தச் செப்டெம்பர் 21 ஆம் திகதி தேர்தலொன்று நடைபெறவுள்ளதென்பதை நாமனைவரும் அறிவோம்… பிரசார நடவடிக்கைகளுக்காக எஞ்சியிருப்பது இரு வாரங்கள் எனப்படும் குறுகிய காலம் மட்டுமே… இந்தப் பிரதேசங்களின் தேர்தல் களம் தென்பகுதி அளவிற்கு சூடுபிடித்துக் காணப்படவில்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்…

எனினும், இந்த 21 ஆம் திகதி தேர்தலில் தெரிந்தெடுக்கப்படவிருப்பது முழு நாட்டுக்கும் தேவைப்படும் ஒரு தலைமைத்துவம்… உங்களுடைய வாழ்க்கைக்கும், உங்களுடைய எதிர்காலத்துக்கும் இந்த செப்டெம்பர் 21 இல் நீங்கள் எடுக்கப் போகும் தீர்மானமானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்… நீங்கள் கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவைத் தோற்கடிக்க வாக்களித்திருந்தீர்கள்… எனினும், அவர் தோல்வியடையவில்லை… 2015 இல் நீங்கள் பெருவாரியாக மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்திருந்தது தெரிகிறது… எனினும், அவரது ஐந்து வருட கால ஆட்சியில் நாடு பாரிய சரிவுநிலைக்குத் தள்ளப்பட்டது… 2015 - 19 கால ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவிருந்தார்… அந்தக் காலகட்டத்தில் சஜித் பிரேமதாச அமைச்சரவை அமைச்சராகவிருந்தார்… அந்தத் தலைவர்கள் வடக்குக்கு மட்டுமல்ல தெற்கிற்கு அளித்த வாக்குறுதிகளையும் அலட்சியம் செய்து, மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.

மக்களை ஏமாற்றும் இந்த அரசியலை நிறுத்தவே நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்… எங்கள் நாட்டுக்கு பாரியதொரு சமூக மாற்றமொன்று அவசியம்… அரசியல் மாற்றமொன்று அவசியம்… பொருளாதார ரீதியிலான மாற்றமொன்று அவசியம்… இன்று இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்த மாற்றத்தை வேண்டி நிற்கிறார்கள்… யாழ்ப்பாண மக்கள் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்… மாற்றமொன்றிட்காக முன்னிற்கும் தேசிய மக்கள் சக்தியை தெரிந்தெடுப்பதா…. அல்லது பழைய பாதையிலேயே பயணத்தைத் தொடர நினைக்கும் சஜித் அல்லது ரணிலை தெரிந்தெடுப்பதா… நீங்கள் எதனைத் தெரிந்தெடுக்கப் போகின்றீர்கள்… பழைய பாதையையா? அல்லது புதிய பாதையையா? புதிய பாதையை!...

சரி… நான் உங்களுக்கு பழைய பாதை மற்றும் புதிய பாதைக்கிடையிலான வேறுபாடுகள் சிலவற்றைக் கூறுகிறேன்… பழைய பாதை தான் இனவாதத்தை தூண்டிவிடும் பாதை… உங்களுக்குத் தெரியும் ராஜபக்சவின் ஆட்சி இனவாதத்தின் ஆழத்திற்கே சென்றிருந்தது… அந்த ராஜபக்ச முகாம் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியது.. அதுதான் இலங்கையின் இனவாத முகாம்… அந்த மொட்டுக் கட்சியில் இருந்தோர் இன்று எங்குள்ளனர்? மொட்டுக் கட்சியின் பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்கவுடன்… மொட்டுக் கட்சியின் இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவுடன்… மொட்டுக் கட்சியின் சிறியளவிலானோர் நாமல் ராஜபக்சவுடன்… அப்படித் தானே… அந்த நாமல் ராஜபக்சவின் இனவாத முகாம் இன்று மூன்றாகப் பிரிந்துள்ளது.. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பத்து வருடங்கள் அமைச்சராகவிருந்த…. கோட்டாபயவின் அரசாங்கத்தில் இரண்டரை வருடங்கள் அமைச்சராகவிருந்த… மஹிந்தவின் கட்சியின் தவிசாளராகவிருந்த ஜீ எல் பீரிஸ் தற்போது சஜித்துடன் இருக்கிறார்…. அங்கு புதிதாக என்ன இருக்கிறது? மொட்டுக் கட்சியின் ஏனைய இனவாதக் குழுக்கள் ரணில் விக்ரமசிங்கவுடன்… மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த… கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சராகவிருந்த…. டலஸ் அழகப்பெரும இப்போது சஜித்துடன் இருக்கிறார்…. கோட்டாபயவுடன் இணைந்து வியத்மக வை உருவாக்கிய…. ஜெனீவாவுக்குச் சென்று தமிழ் மக்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நாளக்க கொடஹேவா இன்று சஜித் பிரேமதாசவுடன்… அப்படித் தானே…

ஆகவே, எமது நாட்டில் இனவாத முகாமில் இருந்தவர்கள் மூன்று நான்கு குழுக்களாகப் பிரிந்து இன்று ஒன்றாக இருக்கிறார்கள்… ஆனால், எந்த காலகட்டத்திலும் இனவாதத்துக்கு எதிராக ஒரு கட்சி இருந்து வருகிறது… அது தேசிய மக்கள் சக்தி தான்… அவ்வாறெனில், இனவாத முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையா அல்லது இனவாத முகாமுக்கு எதிரானவர்களையா நீங்கள் தெரிவுசெய்ய வேண்டும்? பழைய பாதை இனவாதத்துக்கான பாதை… புதிய பாதை தேசிய ஒற்றுமைக்கான பாதை.. அதனையே நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்… அப்படியானால், அந்தக் கேள்விக்கான பதிலாக நாங்கள் யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? தேசிய மக்கள் சக்தியை…

எங்கள் நாட்டின் பொருளாதாரமும், பொது மக்களின் வாழ்க்கையும் சீர்குலையக் காரணமாக அமைந்தவை பாரியளவிலான ஊழல் மோசடிகள் மற்றும் வீண் விரயங்களே என்பது உங்களுக்குத் தெரியும்… நாட்டின் இன்றைய பின்னடைவுக்கு இயற்கை காரணம் ஏதுமுண்டா? எமது நாட்டின் பின்னடைவுக்குக் காரணம் இயற்கை வளங்கள் இல்லாமையா? இல்லை… எமது நாட்டின் சரிவுக்குப் பிரதான காரணம், ஊழல் மோசடிகளும், வீண் விரயங்களுமே… அப்படியாயின், ரணில் விக்ரமசிங்ஹ, சஜித் பிரேமதாச என்போர் பிரதிநிதித்துவப்படுத்துவது எந்த முகாமை? ஊழல் மோசடிகள், வீண் விரயங்கள் நிறைந்த பழைய பாதையை… ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கிறார்கள் நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க போன்றோர்… அதே போல ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான மஹிந்தானந்த, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் மத்திய வங்கியைக் கொள்ளையிட்ட ரணில் விக்ரமசிங்க போன்றோர் ஒரு குழுவாக…

சஜித் பிரேமதாசவுடன் இருப்போர் யார்? பெருந்தெருக்கள் அமைச்சைப் பொறுப்பெடுத்து பொது மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிரிஎல்ல… நான் பார்த்தேன் நேற்று பாராளுமன்றத்தில் நாளக்க கொடஹேவாவின் மோசடிகள் குறித்து சுசில் பிரேமஜயந்த கதைக்கிறார்… நாளக்க கொடஹேவா இருக்கிறார் சஜித் பிரேமதாசவுடன்… கலாசார அமைச்சில் பல பில்லியன்களை வீணடித்த சஜித் பிரேமதாசவுடன்… அவர்கள் இருவரும் செல்வது ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களைக் கொண்ட பழைய பாதையில்… எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஊழல், மோசடிகள் மற்றும் வீண் விரயமற்ற பாதையொன்று அவசியமென்றால்…. அந்த பாதை தான் தேசிய மக்கள் சக்தியின் புதிய பாதை… நீங்கள் தெரிவு செய்யப் போவது பழைய பாதையையா? அல்லது புதிய பாதையையா? என்ன சொல்கிறீர்கள்?

எந்த காலகட்டத்திலும் இந்த நாட்டு மக்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, அது திருடர்கள் தண்டிக்கப்படவும், திருடப்பட்டவற்றை மீளக் கையகப்படுத்திக் கொள்ளவும்… 2015 - 19 காலப் பகுதி ஆட்சியில் ரணில் சஜித் இருவரும் மோசடிகாரர்களைப் பாதுகாத்தனர்… ஆகவே, புதிதாக எமக்குத் தேவை இந்த மோசடிகாரர்களையும், திருடர்களையும் தண்டிக்கக் கூடிய ஓர் அரசாங்கம்… திருடப்பட்ட சொத்துக்களை மீளக் கையகப்படுத்திக்கொள்ளக் கூடியதோர் அரசாங்கம்… யார் அந்த அரசாங்கம்? திருடர்களைப் பாதுகாக்கும், திருட்டில் ஈடுபடும் பாதை…. ரணில் சஜித் பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய பாதை… திருட்டினை ஒழிக்கும்…. திருடியவர்களைத் தண்டிக்கும்… திருடப்பட்ட சொத்துக்களை மீளக் கையகப்படுத்திக் கொள்ளும் புதிய பாதை… தேசிய மக்கள் சக்தியின் பாதை… இவற்றில் எதனை நீங்கள் தெரிவு செய்வீர்கள்? எதனை? பழைய பாதையையா அல்லது புதிய பாதையையா?

அது போல தான் பழைய பாதை எமது நாட்டின் வளங்களை விற்பனை செய்து… எமது நாட்டின் உற்பத்திகளை வீழ்ச்சியடையச் செய்து… எமது நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய பாதை… ஆனால், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதை தான் நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு… நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் பாதை… நீங்கள் தெரிவுசெய்ய வேண்டிய பாதை எது? வளங்களை விற்பனை செய்த… இடங்களை விற்பனை செய்த… மன்னாரின் இடங்களை இந்தியாவுக்குத் தாரை வார்த்த… அவ்வாறான பழைய பாதையையா? நாட்டை புதிய திசை நோக்கிப் பயணிக்கச் செய்யும்… தேசிய மக்கள் சக்தியின் பாதையையா? என்ன சொல்கிறீர்கள்? எது மாற்றமடைய வேண்டும்?

உங்களுக்குத் தெரியும் இப்போது இந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பிரதேசங்கள் அனைத்திலுமே போதைப் பொருளானது படிப்படியாக பரவிக் கொண்டு வருகிறது… இந்த யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவதில்லை… இந்த இலங்கையில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவதில்லை… அவை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன… வான் வழியாகவோ… அல்லது கடல் வழியாகவோ… இன்று என்ன நடந்திருக்கிறது? எமது நாடு போதைப் பொருட்களின் மாபெரும் சொர்க்கபுரியாக மாறியுள்ளது… இவை எல்லாவற்றிட்கும் அரசியல்வாதிகளே பாதுகாப்பளிக்கின்றனர்…

நீங்கள் பார்த்திருப்பீர்கள் சமீபத்தில் சக்தி தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது… ஒரே கூட்டணியில் இருந்த வேலு குமாரும், திகாம்பரமும் அதில் பங்குபற்றியிருந்தனர்… 2020 தேர்தலில் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டிருந்தனர்… வேலு குமார் ஐமச சார்பில் கண்டியில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தார்… திகாம்பரம் நுவரெலியாவில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தார்… இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவளிக்கிறார்… வேலு குமார் ரணிலுக்கு ஆதரவளிக்கிறார்… இருவருக்குமிடையில் விவாதம் நடைபெற்றது… திகாம்பரம் வேலு குமாரைப் பார்த்து, ‘பார் குமார்‘ என்கிறார்… வேலு குமார், திகாம்பரத்தைப் பார்த்து ‘குடு திகா‘ என்கிறார்… அவ்வாறாயின், இந்த போதைப் பொருள் வியாபாரத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அரசியல்வாதிகள்… அந்தக் கட்சிகளுக்கு பணத்தை வாரியிறைப்பவர்கள் இந்தப் போதைப் பொருள் வியாபாரிகளே… நீர்கொழும்பில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதி ஒருவர் தான் ரணிலுக்கு ஆதரவளித்து வருகின்றார்… அவர்கள் யார்? போதைப் பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்கும், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு உதவி செய்யும்… அவர்கள் தான் பழைய பாதையில் இருப்பவர்கள்… நாங்கள் யார்? போதைவஸ்து வியாபாரிகளுடன் தொடர்புபடாத, போதைப் பொருள் வியாபாரத்துக்கு பங்களிப்புச் செய்யாத… போதைவஸ்து வியாபாரத்தை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்கக் கூடிய சக்தி தான் தேசிய மக்கள் சக்தி… ஆகவே, தெரிவு செய்யப்பட வேண்டியது எது? போதைவஸ்துவைக் கொண்டு வரும் பழைய பாதையையா? போதைவஸ்துவை இல்லாதொழிக்கும் புதிய பாதையையா? எது வேண்டும்?

புதிய பாதை… எமது நாட்டில் சட்டம் இருக்கின்றது… எமது நாட்டு அரசியல்வாதிகள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லர்… ரணில் விக்ரமசிங்க, சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டார்… நாட்டின் அடிப்படை அரசியமைப்பை மீறுகிறார் நாட்டின் ஜனாதிபதி… பதில் பொலிஸ் மா அதிபரொருவரை நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்குக் கட்டளையிட்டது… ஜனாதிபதி அதனை நிறைவேற்றவில்லை… நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்காத ஜனாதிபதி தான் ரணில்…. அவர்கள் சட்டத்தை அமுல்படுத்தப் போவதில்லை…

அதுமட்டுமல்ல… நீங்கள் பார்த்திருப்பீர்கள்... சஜித் பிரேமதாசவின் தங்கை 20 இலட்ச ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வங்கியொன்றில் வைத்து பிடிபட்டார்… கடந்த நாட்களில் மஹிந்த ராஜபக்ச கூறினார், அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் சஜித்தின் தங்கை பிடிபட்டார் என்று.. மஹிந்த ராஜபக்ச என்ன கூறினார்… பிரேமதாசவின் மகள் என்பதால் காப்பாற்றியதாகக் கூறினார்… அவர்களுக்கு மோசடிகளிலும், சட்ட விரோத காரியங்களிலும் ஈடுபட்டு விட்டு சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது…

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக… கலாசார நிதிய மோசடிக்கு எதிராக… சிஐடி யில் விசாரணையொன்று நடந்து வந்தது… அந்த விசாரணை இடை நிறுத்தப்பட்டது…. காரணம் என்ன? அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை… அவர்கள் சட்டத்தை விட மேலான நிலையில் இருப்பவர்கள்… எனவே, பழைய பாதையென்பது எப்படிப்பட்டது? நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஜனாதிபதிகள்… நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்க்கப்பட்ட ஜனாதிபதிகள்… சட்டத்தை அசட்டை செய்யும் அரசியல்வாதிகள்… அது தான் பழைய பாதை… நாங்கள் அமைக்கப் போகும் புதிய பாதை எது? அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்… அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்லர்…. அரசியல்வாதிகள் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள்… சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்… இன்று எமது நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களா? அதிகாரத்திலிருப்போருக்கு ஒரு சட்டம்… ஏழை எளியோருக்கு இன்னொரு சட்டம்… அது தான் சஜித், ரணில் பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய பாதை…

நாங்கள் பரிந்துரைக்கும் புதிய பாதை எது?

இனம், மதம்…. ஏழை, பணக்காரன்… அதிகாரத்திலிருப்பவர், இல்லாதவர்… எந்த பேதங்களுமின்றி.. சகலருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் ஒரு நாடு… எது அவசியம்? பழைய பாதையா? புதிய பாதையா? புதிய பாதை… அப்படியென்றால், செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி… இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொள்ளும் போது நீங்கள் புரிந்து கொள்வதென்ன? இந்த நாட்டில் மாற்றமொன்று அவசியமென்றால்… இனவாதத்திற்குப் பதிலாக இன நல்லிணக்கம் அவசியமென்றால்… களவு, ஊழல், மோசடி மற்றும் வீண் விரயம் என்பவற்றை நிறுத்த வேண்டுமென்றால்… திருடர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால்… எமது நாட்டு சட்டத்திற்கு முன் அனைவரையும் சமமானவர்களாக நடத்த வேண்டுமென்றால்… யாரைத் தெரிவு செய்ய வேண்டும்? தேசிய மக்கள் சக்தியை…

இன்று முழு நாட்டிற்குமான புதியதொரு கோரிக்கை உள்ளது… எமது நாட்டிற்கு மாற்றமொன்று அவசியமென்று… எமது நாடு தொடர்ந்தும் இதே விதமாகச் செல்ல இடமளிக்க வேண்டாமென்று… இன்று தென்னிலங்கை மக்கள்…. இலட்சக்கணக்கான மக்கள்... இந்த மாற்றத்திற்காக முன்னிற்கிறார்கள்… நேற்று மற்றும் இன்று அஞ்சல் வாக்குப் பதிவு நடாத்தப்பட்டது… நீங்கள் அறிந்த ஒரு நண்பரிடம் கேட்டுப் பாருங்கள்… பொலிஸார் எப்படி… ஆசிரியர் எப்படி… கச்சேரியில் எப்படி என்று… 75, 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள்… அந்த மாற்றத்திற்காக… தேசிய மக்கள் சக்திக்காக… தென்பகுதி மக்கள் ஓரணியாக திரண்டிருக்கிறார்கள்… இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என… தென்பகுதி மக்கள் பெருமிதத்துடன் எழுந்து நிற்கிறார்கள்… நான் வடக்கு வாழ் மக்களிடம் கேட்கிறேன்… நீங்கள் அந்த மாற்றத்தை எதிர்ப்பீர்களா அல்லது அதற்கு ஆதரவு தருவீர்களா? என்ன நினைக்கிறீர்கள்?

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிக்கை எனது நினைவுக்கு வருகிறது… அது முழு நாடும் எதிர்பார்த்திருக்கும் அந்த மாற்றத்தை எதிர்ப்பதாகக் காணப்படுகிறது… ஏனைய நாட்களில் நடப்பதைப் போன்றதொரு தேர்தலல்ல இது… ஏனைய நாட்களில் வடக்கு வாழ் மக்கள் யோசித்ததெல்லாம், ராஜபக்ச அணியினருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றியே… 2010 இல் அவர்கள் ராஜபக்சவினருக்கு எதிராக பொன்சேகாவுக்கு வாக்களித்தனர்… 2015 இல் ராஜபக்ச படையணிக்கு எதிராக மைத்ரிபாலவுக்கு வாக்களித்தனர்… 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர்… நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் வடக்கு மக்களிடமிருந்து… நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் சுமந்திரன் ஐயாவிடமிருந்து… யாருக்கு எதிராக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறீர்கள்? யாருக்கு எதிராக? ராஜபக்சவின் ஒரு பகுதி அவரிடமா இருக்கிறது? அப்படியென்றால், யாருக்கு எதிராக இந்த தமிழ் மக்களை அழைக்கிறீர்கள்? இந்த தமிழ் மக்களை வேறொன்றுக்கும் எதிராக அல்ல…. தெற்கில் இலட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆதரிக்கும் அந்த மாற்றத்திற்கு எதிராக…. சமூகம் வேண்டி நிற்கும் புதிய மாற்றத்திற்கு எதிராக… முழு நாட்டிற்கும் தேவை புதியதொரு மாற்றம்… அந்த மாற்றத்திற்காக நாமனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம்… தெற்கில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களின்றி… மக்கள் ஒன்றுதிரண்டுள்ளார்கள்… இந்த நாட்டிற்கு புதியதொரு மாற்றம் தேவை… பழைய பாதையில் செல்ல வேண்டுமா? பழைய பாதையில் முன்னேறிச் செல்ல வடக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமா? நாங்கள் வடக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்… புதிய பாதைக்காக பழைய பாதையைக் கைவிட்டு விட்டு ஒன்று திரளுங்கள்…

ஆகவே, இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த அந்த தீர்மானம்… இந்த புதிய மாற்றத்திற்கு எதிரானதொரு தீர்மானம்… 2010, 15, 19 காலப்பகுதியில் ராஜபக்சக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம்… ஆனால், 2024 இல் எடுத்திருக்கும் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரானதொரு தீர்மானம்… இந்த நாட்டில்… இந்தப் பகுதியில் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் :
தொழில்வல்லுனர்களாகிய நீங்கள் அந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கின்றீர்களா?
புத்திஜீவிகள் மற்றும் பேராசிரியர்கள் போன்றோர் இங்கு சமூகமளித்துள்ளீர்கள்… நீங்கள் மாற்றத்திற்கெதிரான இந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்கின்றீர்களா?
வடக்கு வாழ் மக்களிடம் நான் தயை கூர்ந்து கேட்டுக் கொள்வதெல்லாம்… இந்த மாற்றத்திற்கான பங்குதாரர்களாக நீங்கள் மாறுங்கள்…

இந்த மாற்றத்திற்கு எதிரானவர்களல்லாதிருங்கள்…
இந்த மாற்றத்தை அரவணைக்கிறவர்களாயிருங்கள்…
இந்த மாற்றத்திற்காக பெருமிதத்துடன் உழைக்கிறவர்களாக இருங்கள்…

அதுவல்லவா இங்கு நடந்தேற வேண்டும்… நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்… நாட்டின் பெரும்பாலான மக்கள் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் போது யாழ் மக்களாகிய நீங்கள் மட்டும் அதற்கு முரணாக எவ்வாறு செயற்பட முடியும்?
இலங்கை தமிழரசுக் கட்சியின் இந்தத் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்?
நாங்கள் இந்த யாழ்ப்பாணத்தின் புத்திஜீவி சமூகத்திடம் கேட்டுக் கொள்வது…. இந்த புத்திஜீவிகள் யாழ் மக்களின் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பாரியளவிலான பணிகளை மேற்கொள்ள முடியும்…
இவ்வாறான மாற்றத்திற்கெதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் அனுமதிக்காதீர்கள்… அந்தத் தீர்மானம் தவறானது என இந்த மக்களுக்கு நீங்கள் எடுத்துக் கூறுங்கள்…

நாங்கள் வெற்றி பெறுவோம்… தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளால் நாங்கள் வெற்றி பெறுவோம்… இந்த வெற்றியின் பங்குதாரர்களாக யாழ் மக்களும் மாறுங்கள்… அந்த மாபெரும் மாற்றத்திற்கு எதிரானவர்கள் என நீங்கள் முத்திரைக் குத்தப்பட வேண்டாம்... நீங்களும் அந்த மாற்றத்தின் பங்குதாரர்களாகுங்கள்…
புதிய பாயொன்றை முனைவது போல நாங்கள் இந்த நாட்டை புதிதாகப் பின்னுவோம்…
அனைத்தையும் நாங்கள் புதிதாக ஆரம்பிப்போம்… சில வருடங்கள் கடந்த பின்பு உலகின் ஒரு செல்வந்த நாடாக இந்த நாட்டை நாம் மாற்றிக் காட்டுவோம்…
மலர்ந்த முகத்துடனான மக்களைக் கொண்ட ஒரு நாடாக இதை நாம் மாற்றுவோம்…
யுத்த பிணக்குகளற்ற… ஏனைய மக்கள் கூட்டத்துடன் சந்தேகம், பகையுணர்வு, கோபங்கள் போன்றவையற்ற ஒற்றுமையான ஒரு நாடாக இதனை மாற்றுவோம்…
கல்வியை மேம்படுத்தக் கூடிய… விவசாயிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடாத்திச் செல்லக் கூடிய.. வியாபாரிகள் நியாயமாக வியாபாரம் செய்யக் கூடிய.. இந்த யாழ்ப்பாணத்திலிருக்கும் மீனவர்களுக்கு அச்சமின்றி, சந்தேகமின்றி நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்…

நீங்கள் உங்கள் வடக்குப் பகுதி கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றீர்கள்…. ஆனால் இந்தியாவின் ரோலர் படகுகளினால் உங்களது வலைகள் போன்றவை நாசம் செய்யப்படுகின்றன… நாம் நமது வடக்கின் மீனவ சமுதாயத்திற்கு தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்வோம்… நாங்கள் யாருக்கும் அடிபணியும் ஓர் அரசாங்கமல்ல…. நாங்கள் வலுவான இராஜதந்திர உறவுகளை விரும்பும் ஓர் அரசாங்கமாகும்… எனினும், எமது பங்கிற்கான முழு உரிமை எமக்கிருக்க வேண்டும்… அந்த தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசாங்கத்தையே நாங்கள் அமைக்கப் போகிறோம்… அதற்கான ஒத்துழைப்பு வழங்குவது தான் இன்று யாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகவுள்ளது… இந்த அரசியலை வெற்றி கொள்வது தான் யாழ் மக்களின் பொறுப்பாக இருந்து வருகிறது என நாங்கள் நினைக்கிறோம்… நீங்கள் இந்த வெற்றிக்கு எதிரானவர்களாக மாற வேண்டாம்… நீங்கள் இந்த வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிப்பவராக, இந்த வெற்றியின் பங்குதாரர்களாக மாறுங்கள்… நீங்கள் அதற்கு ஆயத்தமாக இல்லையா? நீங்கள் இந்த வெற்றிக்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? இந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? நீங்கள் தேசிய ஒற்றுமைக்கு எதிரானவர்களாக மாறுவீர்களா? நீங்கள் ஊழல், மோசடிகார்களின் பாதுகாவலர்களாக மாறுவீர்களா? நீங்கள் சட்டத்தைப் புறந்தள்ளி அதிகாரத்திலிருப்பவர்களுக்கு பாதுகாவலராக மாறுவீர்களா? அப்படியாயின் நீங்கள் 21 ஆம் திகதி ரணிலுக்கு அல்லது சஜித்துக்கு வாக்களிக்கலாம்….

ஆனால் நீங்கள் மாற்றத்திற்கான பங்குதாரர்களாக மாறினால், நீங்கள் மாற்றத்திற்கான பங்காளிகளாக மாறினால்… நீங்கள் வாக்களிக்க வேண்டியது தேசிய மக்கள் சக்திக்கே… நான் உங்கள் முன் ஒரு வியாபாரியாக வரவில்லை.. நான் உங்கள் முன் ஒரு தரகராக வரவில்லை… நான் இதைத் தருகிறேன் எனக்கு அதைத் தாருங்கள் எனக் கூறி வாக்குக் கேட்பதற்கு நான் வரவில்லை… எமக்கிருப்பது யாழ்ப்பாண தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தெற்கு அரசியலுடன் செய்து கொள்ளும் ஒரு கொடுக்கல் வாங்கல் முறையல்ல… தெற்கின் அநேகமான அரசியல்வாதிகள் வடக்குடன் மேற்கொள்வது ஒரு கொடுக்கல் வாங்கலைத் தான்…. நீங்கள் வாக்களியுங்கள்… 13 ஐத் தருகிறோம்… நீங்கள் வாக்களியுங்கள்… 13 ப்ளஸ் தருகிறோம்.. நீங்கள் வாக்களியுங்கள்… காணி அதிகாரத்தைத் தருகிறோம்… எவ்வளவு காலமாக இதையே சொல்லி வருகிறார்கள்…. நான் வந்தது அதற்காகவல்ல… நான் உங்களுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள வரவில்லை… நான் உங்களுடன் பேரம் பேச வரவில்லை… நான் உங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்காக வந்தால் நீங்கள் கூறுவீர்கள் 13 போதாது ப்ளஸ் கொடுங்கள் என்று…. நான் அவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்காக வரவில்லை… எனது முதலாவது நோக்கம் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்பதே…

எமது நாட்டில் அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டது இன்னுமொருவருக்கு எதிராக.. தெற்கில் அரசாங்கம் அமைக்கப்படுகிறது வடக்கிற்கு எதிராக…. சிங்கள அரசாங்கம் அமைக்கப்படுகிறது தமிழ் மக்களுக்கு எதிராக… எனது முதலாவது முயற்சி, மற்றொருவருக்கு எதிரான அரசியல் என்பதை மாற்றியமைப்பது.. மற்றொருவருக்கெதிராக அரசாங்கம் அமைத்தல் என்பதை மாற்றியமைப்பது.. இலங்கையில் முதன் முறையாக வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்து வருகிறது. சிங்கள் தமிழ் முஸ்லிம் பறங்கியர் மலே என அனைத்து மக்களினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் அரசாங்கத்தை உருவாக்குவது… அவ்வாறானதொன்றை உருவாக்குவோம்… அதன் பின்னரான கொடுக்கல் வாங்கலாக அந்த அனைவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமொரு பொறுப்பு காணப்படுகிறது…. கொடுக்கல் வாங்கலின் போது அவ்வாறானதொரு பொறுப்பு காணப்படாது…. முதலில் வாக்கினைப் பெற்றுக் கொண்டு பின்னர் வழங்குவதாகத் தான் உடன்பாடு காணப்படும்.. வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பின்பு கொடுக்கவும் முடியும் கொடுக்காமலிருக்கவும் முடியும்.. கொடுக்கல் வாங்கல் என்பது அவ்வாறானதே…. கடன்களைத் திருப்பிச் செலுத்தாத எத்தனையோ பேர் உள்ளனர்… கொடுக்கல் வாங்கல் என்பது அவ்வாறானதே… தேர்தல் காலங்களில் வருவார்கள்… 13 ஐத் தருவோம் என்பார்கள்… 13 ப்ளஸ் தருவோம் என்பார்கள்… உங்களுக்கு அதனை நீட்டுவார்கள்… வெற்றுக் காசோலையொன்றைத் தருவார்கள்.. உங்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள்… சில நாட்கள் கடந்த பின்னர் காசோலை காலாவதியாகி விடும்… பெறுமதியிழந்து விடும்… அதில் பிரயோசனம் இருக்கிறதா? நான் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்காக இங்கு வரவில்லை என்பதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்…

நாங்கள் ஒன்றிணைந்து ஓர் அரசாங்கத்தை உருவாக்குவோம்… நாம் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து தீர்வுகளைத் தேடுவோம்… அவை தான் வெற்றிகரமான தீர்வுகளாக அமையும்… இந்த கொடுக்கல் வாங்கல்கள் ஒருபோதும் வெற்றிகரமானவையாக அமையாது… அவை எம்மை ஏமாற்றத்திற்குட்படுத்துபவையாகவே காணப்படும்.. நீங்கள் எத்தனை முறை ஏமாற்றத்திற்குட்பட்டுள்ளீர்கள்… இல்லை… நாம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவோம்… வடக்கு, தெற்கு, கிழக்கு அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாடுவோம்… அது அனைவரின் ஒத்துழைப்புடனும் உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்கம் என்றதன் அடிப்படையில்…. அங்கு அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதொரு பொறுப்பு காணப்படுகிறது.. அதற்கான ஒரு வழிகாட்டலுக்காக…. நாம் எமது கொள்கைப் பிரகடனத்தில் அது தொடர்பான சில விடயங்களை உள்ளடக்கியுள்ளோம்… நான் அதிலுள்ள சில விடயங்களை இப்போது உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.. எமது நாட்டில் நீண்ட காலமாக ஒரு புதிய அரசியமைப்புக்கான தேவை இருந்து வருகின்றது… 2000 ஆம் ஆண்டு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.. ரணில் விக்ரமசிங்க அதனை பாராளுமன்றத்தில் தீயிட்டுக் கொளுத்தி முடிவுக்குக் கொண்டு வந்தார்… மீண்டும் 2015 - 19 காலப் பகுதியில் அரசியலமைப்புக் குறித்து ஒரு உரையாடல் இருந்து வந்தது… எனினும் அது ஒரு முடிவுக்கு வரவில்லை.. நாங்களனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கவிருக்கும் அரசாங்கத்தில் 2015 - 2019 காலகட்டத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காகக் கடைபிடிக்கப்பட்ட செயற்பாட்டினை துரிதமாக நிறைவேற்றி சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக் கூடியவாறு ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்துக்கும், மாவட்டத்துக்கும் மற்றும் மாகாணத்துக்கும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கின்ற அரச ஆளுகைக்கான அனைத்து இனத்தவர்களையும் அரசியலில் பங்காற்றுவதனை உறுதி செய்கின்ற புதிய அரசியலமைப்பொன்றை நாங்கள் தயாரித்து நிறைவேற்றுவோம்….

அதாவது நாங்கள் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை பரிந்துரைத்துள்ளோம்.. அந்த முன்மொழிவுகளின் வரைபுகளை சமர்ப்பித்துள்ளோம்… இந்த அரசியலமைப்பை மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புடன் இலங்கையின் முதன்மையானதொரு சட்டமாக நிறைவேற்றுவோம்.. மாகாண சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளாக நடாத்தப்படவில்லை… உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இரண்டு வருடங்களாக நடாத்தப்படவில்லை.. ஆகவே… தற்போது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஒரு வருடத்திற்குள் நடாத்தி ஆட்சியில் பங்குபற்றுவதற்கான மக்களின் உரிமையை உறுதிப்படுத்துவோம்…

எமது நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலே எனும் இனக் குழுமங்கள் காணப்படுகின்றன… பௌத்தம் இந்து கத்தோலிக்கம் இஸ்லாம் என பல்வேறு மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்… சிங்கள மற்றும் தமிழ் ஆகிய மொழிகளைப் பேசுபவர்கள் காணப்படுகின்றனர்… இவ்வாறான பல்வகைத்தன்மையுடைய மக்கள் எமது நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்… ஆகையால் நாங்கள் இனவாதம் முற்று முழுதாக இல்லாமல் ஆக்கப்படும் வரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் ஏதேனும் நிச்சயமற்றத் தன்மை மற்றும் ஓரங்கட்டப்படுதல் போன்றவற்றுக்கு ஆளாகக் கூடிய அபாயமுள்ளது… ஆகவே நாங்கள் ஒரு ஆணைக்குழுவை நிறுவ உள்ளோம்… பாரபட்சத்துக்கெதிரான சட்ட ரீதியான அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்றை நாம் அமைக்கவுள்ளோம்.. அதன்படி எவரேனும் தான் கடைபிடிக்கும் மதத்தின் அடிப்படையில்... தான் பேசும் மொழியின் அடிப்படையில்… தான் பின்பற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினால் அது குறித்து இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம்…. இனவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல் போகச் செய்வித்தல் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றி புலன்விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவோம்…

இனக்கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல்… அரசியலமைப்பின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய மொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்துதல்.. இவ்வாறு சகல மக்களினதும் உரிமைகளை உறுதிசெய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.. ஆகவே நாங்கள் நினைக்கின்றோம்…. இலங்கையில் மக்களிடையேயான நம்பிக்கையில் ஏதும் பழுது ஏற்பட்டிருந்தால்.. அவ்வாறு பழுதுபட்ட நம்பிக்கையை சரிசெய்து மீளக் கட்டியெழுப்பக் கூடிய இயலுமை தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது… இப்போது உங்கள் முன் இருப்பது ஒரே ஒரு கேள்வி தான்.. இந்த மாற்றங்களுடன் கூடிய புதிய அரசாங்கமொன்றை செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அமைக்கப் போகிறோமா…. அல்லது இந்த இனவாத, ஏமாற்று அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கப் போகின்றோமா… அது தான் செப்டெம்பர் 21 ஆம் திகதி உங்கள் மேசை மீதிருக்கும் கேள்வி….

கடந்த காலங்களில் வட பகுதி மக்களுக்கு தென் பகுதி மக்களைக் குறித்த ஒரு சந்தேகம் நிலவி வந்தது பற்றி நான் அறிவேன்… தென் பகுதி மக்களுக்கு வடக்கு மக்களைக் குறித்த ஒரு சந்தேகம் நிலவி வந்தது.. எனினும், அது இப்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது… எனினும் தெற்கு மக்கள் மாற்றத்திற்காக ஒன்றிணைந்திருக்கும் பொழுது அந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக நீங்கள் மாறினால் தெற்கு மக்களிடையே என்ன மாதிரியானதொரு மனோநிலை ஏற்படும் என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்… அந்த மாற்றத்திற்கு முரண்பட்டவர்களாக.. அந்த மாற்றத்திற்கு எதிரானவர்களாக… யாழ்ப்பாணம் அடையாளப்படுத்தப்படுவதனை நீங்கள் விரும்புகிறீர்களா? வடக்கு அடையாளப்படுத்தப்படுவதனை நீங்கள் விரும்புகிறீர்களா? நான் மீண்டும் உங்களுக்கு உறுதிப்படுத்துகின்றேன்….. நாங்கள் வெற்றி பெறுவோம்… எனினும், அந்த வெற்றியின் பங்காளர்களாக நீங்கள் மாற வேண்டும்… அதற்கு எதிரானவர்களாக நீங்கள் மாற வேண்டாம்….

சுமந்திரன், சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிய ஆதரவினை நாம் ஒருபோது இனவாதமாகப் பார்க்கவில்லை.. எனினும், உங்களுக்கு நினைவிருக்கிறதா 2015 இல் ரீஎன்ஏ மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த பொழுது…. இன்று சஜித்தின் தேசிய அமைப்பாளராக இருக்கும் திஸ்ஸ அத்தநாயக்க அன்று மஹிந்தவுடன் இருந்தார்.. மஹிந்தவுடன் இருந்து சம்பந்தன் மற்றும் மைத்ரிபாலவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி ஒரு உடன்படிக்கையைத் தயாரித்தார்.. போலி உடன்படிக்கையொன்றை தயாரித்தார்.. அன்று ரீஎன்ஏ மைத்ரிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய பொழுது அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள்… போலி ஆவணங்களைத் தயாரித்தார்கள்… திருட்டு ஒப்பந்தங்களை தயாரித்தார்கள்…. மைத்ரிபால நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காக ரீஎன்ஏ வுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறி போலி ஆவணங்களைத் தயாரித்தார்கள்.. அந்த திஸ்ஸ அத்தநாயக்க… இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்…. ஆனால் நாங்கள்.. சுமந்திரன் மற்றும் சஜித்துக்கிடையில் ரகசிய ஒப்பந்தமொன்றிருக்கிறது என நாங்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அவ்வாறான இனவாத அணுகுமுறைக்குள் நாங்கள் செல்ல மாட்டோம்… எனினும், இதற்கு முன்னரான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ரீஎன்ஏ ஏதாவதொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போது தென்பகுதியில் அதற்கெதிராக மாபெரும் கோஷங்களை உருவாக்கினர்.. நாங்கள் அவ்வாறான இழிவான அரசியலுக்குள் செல்ல மாட்டோம்.. ரீஎன்ஏ ஏதேனுமொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போதெல்லாம் தெற்கில் அச்சத்தை உண்டு பண்ணினர்.. நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியினது சஜித்துக்கு ஆதரவளிக்கும் இந்தத் தீர்மானத்தை, தெற்கில் இனவாதத்தை தூண்டுவதற்காக மிகச் சிறிய அளவிலேனும் பயன்படுத்தப் போவதில்லை….

எனினும் நாங்கள் மிகவும் நேர்மையாக தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.. எவருக்கும் ஆதரவளிப்பதற்கான ஜனநாயக உரிமை அவர்களுக்கு இருக்கிறது… அது அவர்களுடைய உரிமை…. அவர்கள் தனியொரு கட்சியாக செயற்படுவது இவ்வாறான தீர்மானங்களை எடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு இருப்பதனால் தான்… ஆகையால், தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அவர்களது ஜனநாயக உரிமைக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம்… எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறோம்…. அது ஜனநாயகம்…

ஆகவே நான் வடக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்… நீங்கள் அந்த பழைய அரசியல் பாதையை விட்டு விலகி புதிய அரசியல் மாற்றத்திற்காக ஒன்று சேருங்கள்…. எனக்குத் தெரியும் வடக்கு தெற்கு கிழக்கு என்ற பேதங்களின்றி புதிய தலைமுறை எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்… இன்று இந்த மேடையில் ஏறி அதிகளவானோர்… இளைஞர் யுவதிகள் அதிகளவானோர்.. எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்… நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்…. நீங்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்… ஆகவே இளம் தலைமுறையினரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்… புத்திஜீவிகள் கல்விமான்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.. இந்த மாற்றத்தை மேற்கொள்வதா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்…. தூர கிராமங்களில் வசிக்கும் தாய்மார் தந்தைமாரிடம் நான் கேட்கிறேன்… இனிமேலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வசதியில்லாத.. வைத்தியசாலைகளில் மருந்துபொருட்கள் இல்லாத…. விவசாயத்தை மேற்கொள்ள முடியாத…. உங்கள் துன்பகரமான வாழ்க்கை முறையை விட்டு விட்டு முன்னேற வேண்டாமா இல்லையா என உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்… அதனால் நான் இங்கு குறிப்பிடும் விடயங்கள் அனைத்தையும் நீங்கள் கவனத்திலெடுத்துக் கொண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்தை நீங்கள் மேற்கொள்வதற்கான அறிவு உங்களுக்குக் கிடைக்கட்டும்… ஞானம் பிறக்கட்டும்…. என வேண்டிக் கொண்டு நான் நிறைவு செய்கிறேன்… நன்றி….



Read more...

Thursday, August 29, 2024

'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' நந்தன வீரரத்ன

இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

1981ம் ஆண்டு யாழ் நூலகம் மற்றும் நகரம் ஏரியூட்டப்பட்டமை, ஜே: ஆர் ஜெயவர்த்தவினால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது ? திட்டத்தை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் யார்? அந்நபர்களின் பங்களிப்பு, செயற்பாடுகள் எவ்வாறமைந்திருந்தது? அதன் விளைவுகள் எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தின என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் ஆதாரங்களை கொண்டு விடயங்கள் குறித்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன.

சம்பவம் இடம்பெற்று 40 வருடங்களின் பின்னர் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இப்புத்தகமானது, மூத்த ஊடகவியலாளர் செல்லையா மனோரஞ்சன் அவர்களால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

புத்தகத்தினை வாசிக்க இங்கே அழுத்தவும்..


Read more...

Monday, March 25, 2024

சிறுபாண்மையினனுக்கு இந்நாட்டின் பிரதமராக , ஜனாதிபதியாக வரமுடியாது என்ற உணர்வு வருகின்றதென்றால் பிரச்சினை இருக்கிறதாம். கனடாவில் அனுர

நேற்று முன்தினம் 23.02.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்த அச்சந்திப்பில் பேசிய அவர் இலங்கையில் சிறுபாண்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை அனுபவ ரீதியான உதாரணங்களுடன் உணர்த்தினார். அவர் அங்கு பேசுகையில்,

திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில் சிலகலமாக அமர்ந்திருந்த காலத்தில் எனது இருகரங்களையும் பற்றிப்பிடித்து இப்படி சொன்னார்: 'அனுர, நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன்.'

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார்: 'அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான்' என்று சொன்னார்.

அவருடைய இனத்துவ அடையாளத்தின் காரணமாக தன்னுடைய வாழ்க்கையில் அடையக்கூடிய ஆகக்கூடிய உயரம் இவ்வளவுதான், என்று அவர் நினைக்கின்றார் என்றால் அந்த உணர்வின் பின்னால் தேடவேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்றும் அவை எந்த விதத்திலும் நியாயமற்றவை என்றும் கூறினார் அனுர குமார திஸாநாயக்க.

சந்திப்பின்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் சிரேஸ்ட ஊடவியலாளரான திரு. மனோரஞ்சன் தெரிவித்த கீழ்காணும் கருத்துக்கு ஒரு நீண்ட நெடிய பதிலளிக்குபோதே மேற்கண்ட விடயத்தினை அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

மனோரஞ்சனின் கருத்து,

கனடாவுக்கு வருகை தந்த தோழர் அநுர குமாரவை மாற்றுத் தமிழ் அரசியல் சமூகத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.

முதலாவது நானும் நாங்களும் இலங்கையில் எம்மைத் தமிழர்களாக உணர்ந்ததும், உணர்வதும் ஒரு தவறுமல்ல/குற்றமுமல்ல . அதேபோல்தான் இஸ்லாமியர்களும் தம்மை இஸ்லாமியர்களாக உணர்வதும் தவறுமல்ல/குற்றமுமல்ல. சிங்கள பவுத்தவர்களுக்கும் அப்படித்தான். அவர்கள் தம்மை சிங்கள பவுத்தர்களாக நினைப்பதும், உணர்வதும் தவறுமல்ல/ குற்றமுமல்ல. இதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என நினைக்கிறோம்.

ஆனால் இலங்கையில் நாம் தமிழர்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்கள் என்றும் பிரிந்து நின்று எம்மை நினைக்கவும் உணரவும் தூண்டிய தவறைச் செய்ததது யார்? யார் அந்த ஆட்சியாளர்கள்? ஏன் அப்படி செய்தார்கள்? என்பதெல்லாம் உங்களுக்கும் எங்களுக்கும் இப்போது நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் செய்த அந்த மாபெரும் அநியாயத்திற்கு நாம் எவ்வளவு இழப்பீடு கொடுத்திருக்கிறோம் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். நம்மில் இரண்டு தலைமுறையினருக்கு இன்னும் அந்த இரத்த வாடையை உணர முடிகிறது. கடந்த காலத்தின் தாக்கம் எமது மூன்றாம் தலைமுறையினரின் இதயங்களிலும் உணரப்படுகிறது. ஆனால் இன்று, அதை உங்களால் மாற்ற முடியும் என்று நாமும் நினைக்கிறோம். 1948 இல் செய்ய வேண்டியதை இன்று 2024 இல் செய்ய வேண்டும் என்று நாங்களும் நம்புகிறோம், ஆம் ஒரு முறை முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக, இலங்கையின் முழு அரசியல் கலாசாரத்தையும் முற்றாகச் சீரழித்த இந்த மேல்தட்டு வர்க்கப் பிரபுத்துவ ஆட்சி ஒரு முறையாவது உடைக்கப்பட்டு, சாதாரண மனிதர்களின் இதயத்துடிப்பை உணருகின்ற, மானுட ஈரம்கொண்ட அரசியல் இலங்கைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அது உங்களாலும் முடியும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

மூன்றாவதாக, இலங்கை மக்கள் இன்று உண்மையான ஒரு மாற்றத்தைக் கோருகின்றனர். 2022ல் வீதிக்கு வந்த மக்களின் அரகலய போராட்டம் அந்த உண்மையை எமக்கு உணர்த்தியதாக நாங்கள் நம்புகின்றோம். அதனால்தான், சுதந்திரம் அடைந்து 75 வருடங்களின் பின்னர், உங்கள் ஐம்பது வருடகால அரசியல் பயணத்தில் முதன் முறையாக இலங்கையின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் மாற்ற மக்கள் இன்று உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால்தான் முன்பை விட இன்று மக்கள் உங்களை நோக்கி வருவதை நாங்கள் காண்கிறோம். உங்களின் பொதுக்கூட்டங்களுக்கு சுனாமியைப் போல திரண்டு வரும் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்களின் அமைதியான கண்களில், அமைதியான முகங்களில் மற்றும் அமைதியான இதயங்களிலிருந்து ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞயை நீங்கள் பெறுகிறீர்கள். அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். மக்களின் மவுனமாகிப்போன அந்த இதயங்களில் புதைந்து கிடைக்கும் வலியிலிருந்து வரும் செய்தியையும் அதன் உணர்வையும், துடிப்பையும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் அது உங்களுக்கும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.- நன்றி.

பதிலளித்து பேசிய அனுரகுமார திஸாநாயக்க,

எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியல். எங்கள் நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மக்களிடையே மோதல்கள் இருக்கவில்லை. நான் தம்புத்தேகமயைச் சேர்ந்தவன். எங்களுடைய புகையிரத நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தமிழர். நான் போன வைத்தியசாலையில் வைத்தியர் ஒரு தமிழர். எங்களுடைய தபால் கந்தோரில் தபால் அதிபராக இருந்தவர் தமிழர். என்னுடைய அப்பா ஒரு பொறியியல் துறை தொழிலாளி. அங்கிருந்த பொறியாளரும் தமிழர் திரு. கனகரட்ணம். நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாக வாழ்ந்தோம். எங்களிடையே அப்படி ஒரு மோதல் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் திரு. கனகரட்ணம் அவர்களை ஒரு வெளி மனிதராக உணர முடியவில்லை. தமிழ் வைத்தியரிடம் செல்லுகின்ற பொழுது ஒரு தமிழ் வைத்தியரிடம் நான் மருந்து வாங்க வந்திருக்கிறேன் என்ற உணர்வு ஒரு காலமும் வந்ததில்லை. எங்களுடைய சமூகத்தில் இனவாதம் இருக்கவில்லை. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதிகமான திருமணங்கள் சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் அவர்களுடைய தைப் பொங்கல் விழாக்களுக்கு சென்றிருந்தோம். அவர்கள் எங்களின் வெசாக் பண்டிகைக்கு வந்தார்கள். அவ்வாறாக எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலாச்சார தொடர்புகளும் கூட இருந்தது. ஆனால் எங்களுடைய நாட்டின் அரசியல்வாதிகள் எல்லாவிதத்திலும் தோல்வி கண்டவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிலும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் எப்போதும் தமது வெற்றிக்கு, தமக்கான வாக்குகளை பெறுவத்ற்கு குறுக்கு வழியை நாடுவார்கள் என நான் முன்னரே சொல்லியிருந்தேன்.

நாங்கள் பிறந்த சமூக பின்னணியின் அடிப்படையில் எங்களுக்குள் ஒரு கலாச்சாரம் பண்பாடு என்பது எங்களுக்குள் இருக்கின்றது. நான் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறக்கின்ற பொழுது எனக்கு நல்லது கெட்டது என்பதைச் சொல்லித் தருவது அந்த ஆகமத்தில் உள்ள கதைகளும் விளக்கங்களுமே. இந்த ஆகமக் கதைகளில் இவ்வாறாக இருக்கின்றன மகனே என்று எனக்கு சிறுவயதில் அது சொல்லித் தரப்படுகிறது. எங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் வருகின்ற பொழுது அதில் தலை தலையிட்டு தீர்த்து வைப்பவர் எங்களுடைய பண்சலையில் இருக்கும் பௌத்த பிக்குவாக இருப்பார். எங்களுடைய கிராமத்தில் பெரும் பண்டிகையாக இருந்தது எங்கள் கிராமத்து பண்சலையில் நடக்கும் நிகழ்வுகள்தான். எங்களுடைய பாடசாலைகளில் பௌத்த தர்மத்தை எங்களுக்கு போதித்தவர் எங்களது கிராம பண்சலையின் பௌத்த பிக்கு ஆவார். அப்போது என்ன நடக்கிறது? எனக்குள் சிங்கள பௌத்த பண்பாடு ஒன்று என் ஆன்மாவோடு சேர்த்து வளர்கின்றது.

ஒரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது அல் குர்ஆனில் இருந்து போதிக்கப்படுகிறது. அவர் பிறந்ததிலிருந்து, வாழ்ந்து, அவர் மறைந்து, அவரின் இறுதிச் சடங்கு வரை அவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய அல் குரானில் இருக்கும் நபிகள் நாயகத்தினுடைய திருமறைக்கூடக போதிக்கப்படுகிறது. குறிப்பாக அதிலிருக்கும் ஆயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு உபதேசங்கள் ஊடாக... அப்படித்தானே? அதே நேரம் அவர்களுடைய பண்டிகையாக இருப்பது ராமசான் பண்டிகை. அவருடைய கலாச்சாரமும் அதை ஒட்டியே வளர்க்கப்படுகிறது. அதாவது ஒரு இசுலாமியராக. ஒரு முஸ்லீமாக வளர்க்கப்படுகிறார்.

ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவரை பாருங்கள். அவருக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டது போதிக்கப்படுவது ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாக போதிக்கப்படுகிறது. அவர்கள் சிறு வயது முதல் ஆலயத்தில் பாடல்கள் பாட அழைக்கப்படுகிறார்கள். அவருடைய ஊரில் பெரும் திருவிழாவாக இருப்பது அவருடைய ஆலயத்தோடு சேர்ந்த பண்டிகைகள். அவர்களுக்குள் அத்தகைய ஒரு பண்பாடு வளர்க்கப்படுகிறது.

நாங்கள் தொழில் ரீதியாக பொறியாளராக, தொழிலாளர்களாக, வைத்தியர்களாக இருப்போம். பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுகிறோம். அது எங்களுடைய தொழில். ஆனால் எங்களுடைய ஆன்மாவோடு ஒட்டிய பண்பாடு நாங்கள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தோடு சேர்ந்தே வளர்க்கப்படுகின்றது. அது எமக்குள் அப்படியே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? தங்களுடைய எல்லாப் பணிகளும் தோல்வி கண்டதன் பின்பு இந்த எங்கள் ஆன்ம பண்பாட்டை கிண்டி எடுத்து தூண்டி விடுவார்கள். 'வாருங்கள் பெரும் ஆபத்து நிகழப் போகின்றது... எங்களுடைய தேரவாத பௌத்ததிற்கு என்ன நடக்கப் போகுது என்று பாருங்கள்.... எங்களுடைய நாட்டுக்கு என்ன நடக்க போகுது என்று பாருங்கள். 2050 ஆண்டில் முஸ்லிம் மக்கள் எல்லாம் பெரும்பான்மை இனமாக மாறப் போகிறார்கள்’. இப்படியாக அந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த ஆன்ம பண்பாட்டு உணர்ச்சியை தூண்டிவிடுவார்கள். ஏன்?

அவர்களால் எமது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி பேசமுடியாது, நமது நாட்டின் கல்வி வளர்ச்சியை பற்றி பேச முடியாது, நமது நாட்டின் அபிவிருத்தியை பற்றி, நமது நாட்டில் ஜனநாயகத்தை பற்றி பேச முடியாது. நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு முறை பற்றி அவர்களால் பேசவும் முடியாது. நாட்டில் நடக்கின்ற குற்றச்செயல்களை குறைப்பது குறித்து அவர்களால் பேச முடியாது. நாட்டில் ஒரு அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டியது என்ன? செய்திருப்பது என்ன? என்பதைப் பற்றி அவர்கள் பேச முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் அது எல்லாவற்றிலும் அவர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அந்த தோல்விகளை எல்லாம் அப்படியே இருக்க அவர்கள் என்னத்தைப் பற்றி பேசுகிறார்கள்? ‘இனத்தைப் பாதுகாக்க வேண்டும்...’ ‘எமது இனம் ஆபத்துக்குள் சிக்கியிருக்கிறது’. இப்படியான சுலோகங்களை 2015 ந்தாம் ஆண்டுக்கு பின்னரும் நாம் கேட்டோம். சில சுலோகங்களை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ‘தேசியம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது’ என்ற சுலோகம் வந்தது. இரண்டாவது, ‘மீண்டும் புலிகள் புத்துயிர் பெற விரும்புகிறார்கள்’ என்ற சுலோகம் வந்தது. அடுத்தது, 2050தாம் ஆண்டு ஆகின்றதபோது முஸ்லிம் மக்கள் இலங்கையின் பெரும்பான்மையாக இருப்பார்கள் எண்டு சுலோகம் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் என்ன செய்கிறார்கள். எமக்குள் அடங்கி கிடக்கின்ற அந்த ஆன்ம ரீதியான பண்பாட்டை அவர்கள் கிண்டி தூண்டிவிடுகிறார்கள். அதை தூண்டி விட்டதன் பின்பு நாங்கள் எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, எங்களுக்கு கல்வி தேவையில்லை, சாப்பிட உணவு இருக்கிறதா, எங்கள் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை இருக்கிறதா என்பது பற்றியும் அவசியம் இல்லை, எங்களுக்கு தொழில் இருக்கிறதா என்பது அவசியமில்லை, எங்களுடைய பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறதா என்பதும் பிரச்சினை இல்லை, எங்கள் இனத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் தூண்டிவிடப்படுகின்றன. அந்த அடிப்படையில் எங்களுக்குள்ளேயே அதற்கு தேவையான மேலும் அதிக சுலோகங்கள் உருவாக்கப்படும்.

மதங்களை வைத்து மக்களை பந்தாடும் தலைமைகள்.

கிழக்கில் முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்வார்கள்? நாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாத சுலோகங்கள் மேலே வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டுமென்றால் திரு. ஹக்கீமின் கட்சிக்காரர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அங்கும் இது போசிக்கப்படுகிறது. இதேபோல் வடக்கிலும் இவ்வாறானவை போசிக்கப்படுகின்றன. அப்போது இறுதியில் நடப்பது என்ன? ஒரு அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்தார்களா என்ற அடிப்படையில் மக்கள் வாக்களிக்க போவதில்லை. மாறக தங்களுடைய இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு போய் வாக்குகளை கொடுக்கின்றார்கள். இப்படியும் சொல்வார்கள். ‘சாப்பிட இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை எங்களுக்கு ஒரு நாடு இருந்தால் போதும். நமது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டும்..’. இவ்வாறாக எங்களுடைய உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இந்த எங்களுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதை இந்த தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உணர்வுகள் அதிகம் திட்டமிட்டு பரப்பப்பட்டு பின் அது இனவாதமாக உருவெடுக்கிறது. ஆகவே எங்களுடைய நாட்டில் இந்த இன வாதம் என்பது வரும் சாதாரண மக்களுக்கு இருக்கின்ற விடயம் அல்ல. அது ஒரு அரசியலாகும். எங்களுடைய நாட்டின் இனவாதம் என்பது ஒரு அரசியல் இனவாதம்.

சாதாரண பொதுமக்கள் இந்த இனவாதம் இருக்கிறது என்று சொன்னால், எமது நாட்டில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் சிங்கள கிராமங்கள் இடையே பரவி வாழ்கிறார்கள். வடக்கில் மிகப் பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதும் கூட கொழும்பு பகுதியில் பெரும்தொகையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். எனக்கு தெரியும்... அங்கே பாதுகாப்பு கெடுபிடிகள் பரிசோதனைகள் போன்ற பல பிரச்சினைகள் எல்லாம் அவர்களுக்கு இருந்தது. அப்படி அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அங்கு முழுமையான அமைதியான வாழ்வை அவர்கள் வாழ்ந்தார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொதுமக்களிடையே இருந்த இன்வாத்தத்தால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. 1958 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடந்தன. 1983ல் கலவர சம்பவங்கள் நடந்தது உண்மை. ஆனால் நாளாந்த வாழ்க்கையில் பொதுமக்களிடம் அந்த இனவாதம் இருக்கவில்லை. நமது நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியலே. ஆகவே நாங்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இந்த இனவாத அரசியலை தோல்விகாணச் செய்ய வேண்டும். இனவாதம் ஒரு அரசியலாக இருக்கிறது என்றால் அதற்கு எதிர்மாறாக இன ஐக்கிய அரசியலை கட்டியெழுப்புவதைத்ததான் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அடுத்து தமிழ், முஸ்லிம் மக்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக நாட்டிலே வாழ்கின்ற எல்லா மக்களும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு அவர்களும் கொடுக்கிறார்கள். அதே வேளை நாங்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கே உரித்தான தனித்துவமான பிரச்சனைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமது நாட்டின் பிரதான இரண்டு அரச மொழிகள் தான் சிங்களமும் தமிழும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும். ஒரு கடைக்கு போய் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தமிழிலே பேசுகிறோமா சிங்களத்தில் பேசுகிறோமா என்பது அந்த வியாபாரியோடு இருக்கின்ற கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் ஒரு அரசோடு கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தங்களுடைய தாய் மொழியிலேயே அவர்கள் அந்த கொடுக்கல் வாங்கலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தங்கள் தாய்மொழியிலேயே கொடுக்கல் வாங்கல் செய்யும் அவருடைய உரிமை அங்கு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு தமிழ் குடிமகனுக்கு போலீஸ் நிலையத்திற்கு போய் தன்னுடைய தமிழ் மொழியிலே ஒரு முறைப்பாடு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், மொழிக்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

அவ்வாறுதான் எங்களுக்கு இன்று நன்றாக தெரியும் ஒரு முஸ்லிம் நபர் போய் ஒரு முறைப்பாடு செய்கின்ற பொழுது அந்த முறைப்பாடு செய்த பின்பு கீழே வாசித்து அறிந்து புரிந்துக் கையெழுத்திடுகிறேன் என்று எழுதப்பட்டிருக்கும். அனால் உண்மையில் அவர் வாசிக்கவும் இல்லை, அறிந்திருக்கவும் இல்லை, அது அவருக்கு புரியவுமில்லை. ஆனால் சிங்களத்தில் எழுதப்பட்டட்ட அந்த முறைப்பாட்டை வாசித்துப் பார்த்து புரிந்து கொண்டேன் என்று முஸ்தபா கையெழுத்து இடவேண்டும். இது சரியா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கத்தோடு செயற்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களை அவருடைய சுய தாய்மொழியிலேயே அவர்கள் செய்வதற்கான அந்த உறுதியை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு இருக்கின்ற தடைகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

சகலருடைய மத, மொழி, கலாச்சார விழுமியங்கள் மதிக்கப்படல்வேண்டும்.

அடுத்தது, அவர்களுடைய கலாச்சாரத்தில் தனித்துவமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன. சிலருக்கு தங்களுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்துவது அச்சம் தருவதாக இருக்குமானால் அது பிரச்சினை. என்னுடைய கலாச்சார அடிப்படையில் உடைகளை உடுத்திக்கொண்டு மினுவாங்கொட நகரத்துக்கு போவது ஆபத்தாக அல்லது அச்சம் தருவதாக இருக்கும் என்று அவர் உணர்கிறார்களா இருந்தால் அது ஒரு பிரச்சனை. எனக்கு தெரியும் இவ்வாறான நிலைமைகள் இருக்கின்றன. நான் இப்படி உடுத்திக்கொண்டு போனால் ஆபத்து இருக்கிறது, ஆகவே நான் இப்படி உடுத்திக்கொண்டு போக கூடாது, என்னுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை ஒளித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற உணர்வு ஒருவருக்கு வருவது சரியா? அப்படியானால் என்ன செய்யப்பட வேண்டும்? அவர்களுடைய கலாச்சார பண்பாட்டுக் கலை கலாச்சாரங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் மூலம், கல்வியின் மூலம், சமூக கருத்துக்களின் மூலம் அவை பாதுகாக்கப்பட வேண்டும், உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

ஆனால் இந்த கலாச்சார பண்பாடுகள் அல்லது கலாச்சார தனித்துவங்களை நாங்கள் ஏற்றுக் கொள்வது அவை நாங்கள் பிரிந்து இருப்பதற்கான ஒரு காரணி என்ற அடிப்படையிலிருந்து அல்ல. ஒரு தமிழ் சகோதரி நெற்றியிலே வைக்கின்ற பொட்டு தன்னை சிங்களவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதற்கான ஒரு காரணியாக இருக்க வேண்டுமா? சிங்கள சகோதரி உடுத்துகின்ற மேல் நாட்டுப் பண்பாட்டு சேலை கட்டும் முறை தமிழர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு கலாச்சார அடையாளமாக இருக்க வேண்டுமா? ஒரு முஸ்லிம் பெண்மணி அணிகின்ற பர்தா சிங்களவர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு காரணியாக காட்ட முனைவது தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் எங்களுடைய கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களுடைய அடையாளங்களை விட உயர்ந்தது என்று காண்பிக்க முயற்சிக்கின்றோம். அது தவறானது.

நான் சிங்களவன், நான் தமிழன், என்று காட்டிக்கொண்டு போக வேண்டுமா? நாங்கள் எங்களுடைய கலாச்சார விழுமியங்களை, பண்பாடுகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் அவை காப்பாற்றப்பட வேண்டியது ஏனையவர்களுக்கு அது எதிரானதாக காட்டுவதற்காக அல்ல. 'நான் இப்படி உடுத்திக் கொண்டு ஒரு நிகழ்வுக்கு பொகிறேன், அப்படிப் போய் மற்றவர்கள் மனங்களை நோகப் பண்ணப்போகிறேன்' என்று சொன்னால் அது சரியா? அப்படியல்ல. அந்த கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களோடு மோதுவதற்காக கடைப்பிடிக்கப்படுவதல்ல.

மூன்றாவது நாங்கள் விரும்பிய மதங்களை பின்பற்றுவதற்கான உரிமை. எந்த ஒரு மனிதனுக்கும் தான் விரும்புகின்ற மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்திற்காக அது தனக்கு ஒரு ஆபத்து என்ற உணர்வு வராமல் இருக்க வேண்டும். மதங்கள் என்பது அவரவருடைய நம்பிக்கை. நான் புத்த பகவான் போதித்த தர்மத்தை ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன். நபிகள் நாயகத்தினால் போதிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் பின்பற்றலாம். அதேபோல் கிறிஸ்தவர்களை எடுத்தால் இயேசு கிறிஸ்வினுடைய வாழ்க்கையை அல்லது பைபிளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் என்னுடைய மதம் உன்னுடைய மதத்தைவிட உயர்ந்தது என்று எங்களால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லமுடியாது. அது அவரவர்களுடைய நம்பிக்கை. என்னால் சொல்ல முடியுமா அவருடைய நம்பிக்கை என்னுடைய நம்பிக்கையை விட தரம் குறைந்தது? முடியாது. அது அவருடைய நம்பிக்கை. அது மட்டுமல்ல ஒரு மதத்தை பின்பற்றுவது, அல்லது ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகள் தடுக்கப்படுமானால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கலாச்சார உரிமைகள், அவருடைய மத வழிபாட்டுக்கான உரிமைகள், அவருடைய மொழிக்கான உரிமைகள் இவற்றை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல்தான் உங்களுக்கு ஒரு உதாரணத்தை நான் சொல்லுகிறேன் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில்தான் சிலகலமாக அமர்ந்திருந்தார். அவருடைய சில சில அரசியல் கருத்துக்களோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நாள் என்னுடைய இரண்டு கரங்களைப் பிடித்துக் கொண்டு இப்படி சொன்னார். ‘அனுர,நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன். இந்தக் கருத்து நியாயமானது இல்லையா.

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார், அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான் என்று சொன்னார். அவருடைய இனத்துவ அடையாளத்தின் அடிப்படையில் அவருக்கு தோன்றுகிறதா தன்னுடைய வாழ்க்கையில் அடைய கூடிய ஆகக் கூடிய உயரம் இவ்வளவுதான், இவ்வளவுதான் என்னால் அடைய முடியும் என்று. அது நீதியானது அல்ல. அவரால் பிரதம மந்திரியாக வரமுடியுமா ஒரு ஜனாதிபதியாக வரமுடியுமா என்பது வேறு கதை. ஆனால் அவருக்கு அப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால், தான் வழிபடுகின்ற மதம் அல்லது தான் பேசுகின்ற மொழி அல்லது தான் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தின் அடிப்படையில் என்னால் இந்த நாட்டில் ஒரு பிரதம மந்திரியாக வர முடியாது, எனக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக வர முடியாது என்று ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால் அது அவ்வளவு நீதியானது அல்ல.

நாங்கள் அவரிடம் போய் 'உனக்கு இப்ப என்னதான் பிரச்சினை' என்று கேட்கலாம். ஆனால், ஒருவருக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது என்றால், தாம் இந்த நாட்டில் என்னதான் இருந்தாலும் ஒரு இரண்டாம் தர பிரஜைகள் என்ற உணர்வு ஏற்படுகிறது என்றாலே அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அல்லவா? அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு அரசியலுக்குள், ஆட்சி அதிகாரத்துக்குள், சமூக செயற்பாட்டுக்குள் நியாயமான முறையில் பங்கேற்க அவர்கள் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும். உள்வாங்கப் படுவதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். (கை தட்டல்)

அவர்களுடைய மத உரிமை, மொழி உரிமை, கலாச்சார உரிமை மட்டுமல்ல, அவருடைய அரசியல் உரிமைகளும் கூட உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.

மாகாண சபைகள் அவர்களது உரிமையாக கருதப்படுகின்றபோது நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.

அடுத்தது, இப்பொழுது பேசப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டம், 13 ப்ளஸ், மாகாண சபை போன்றவை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் பொதுவாக நம்புகின்ற விதத்தில் மாகாண சபைகள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு அல்ல, என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இன்று அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்களின் உரிமையாகி இருக்கிறது. இன்று அந்த மாகாண சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது அவர்களின் உரிமையாக இருக்கிறது. அது அவர்களினால் வென்றெடுக்கப்பட்ட உரிமையாக கருதப்படுகிறது. அதை இப்போது இல்லாமல் செய்ய முடியாது. அப்படியானால் இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மாகாண சபை என்பது தங்களுடைய உரிமை என்று ஏற்றுக் கொள்கிறார்களாக இருந்தால், அதில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்து அதை அவர்களுடைய உரிமையாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். அது தீர்வா இல்லையா என்பதைப் பற்றி எதிர்காலம் முடிவெடுக்கட்டும். அது அவர்களின் பிரைச்சினைகளைத் தீர்த்ததா இல்லையா என்பதை அவர்களுடன் பேசுவோம். ஆனால் தற்போது அவர்கள் அந்த அமைப்புக்குள் தங்களுடைய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று நம்புகிறார்களாக இருந்தால் அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஆகவே, அவர்களுக்கு அரசியலுக்குள் அரசியல் முறைமைக்குள் நியாயமான முறையில் கலப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது, ஏனைய பொதுவான விடயங்கள். அவற்றில் சில விஷயங்கள் அரசியல் விஷயங்கள். நான் உங்களுக்கு முன்பும் சொல்லியிருக்கிறேன். உண்மையான விஷயங்கள் என்ன? நான் முதல் விடயமாக சொல்ல விரும்புவது, இனிமேல் வடக்கில் எக்காலத்திலும் ஒரு யுத்தம் ஏற்பட போவதில்லை. ஆனால், வடக்கிலே இருக்கின்ற பெற்றொர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதே யுத்தம் செய்வதற்காகத்தான் என்று தெற்கில் ஒரு படத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள். 'மீண்டும் புலிகள் உருவாகுகிறார்கள், புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறார்கள்'...அதெல்லாம் நடக்க போவதில்லை. அது ஏன்? யுத்தத்தால் தென்னிலங்கையில் நடந்த வற்றையெல்லாம் நாம் வெறும் சம்பவங்களாக பட்டியலிடலாம். மத்திய மத்திய வங்கியின் மீதான தாக்குதல், எண்ணைக் கூட்டுத்தாபனத்தின் மீதான தாக்குதல், கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டது, பஸ்களில் குண்டுகள் வெடித்தன என்று சம்பவங்களை ஒரு அப்பியாச புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களில் எழுதலாம். ஆனால் வடக்கிற்கு 30 வருடங்களாக யுத்தம் தான் இருந்தது. வடக்கிலே இயக்கங்களுக்கு இடையிலான மோதலும் இருந்தது. இந்திய ராணுவம் வந்தபொழுது யுத்தம் இருந்தது. நாங்கள் வடக்கிற்கு சென்ற பொழுது அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். ‘இதோ இது இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பாதிப்பு, இது இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட அடையாளம்.’ ஒரே வீட்டில் காட்டினார்கள். ஏன் என்றால் அங்கே 30 வருடங்களாக யுத்தம்தான் இருந்தது. தென் இலங்கையில் யுத்தத்தோடு தொடர்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதுவும் பெரும் பாதிப்புக்களை கொடுத்துத்தான் இருக்கின்றன. ஆனால் வடக்கில் இருந்தது முழு யுத்தம். வடக்கின் தாய் தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெற்று வளர்ப்பது யுத்தத்துக்கு அனுப்புவதற்காக அல்ல. தென்னிலங்கை தாய்மார்கள் தந்தைமார்கள் போலவே அவர்களுக்கு நல்ல கல்வி, நல்ல தொழில் தேடி கொடுத்து, நல்லதொரு திருமண வாழ்க்கையை அமைத்து கொடுத்து, வீடு வாசலைக் கட்டிக்கொடுத்தல் போன்ற எதிர்பார்ப்புத்தான் அவர்களுக்கும் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கான கதவுகளை நாங்கள் அவர்களுக்கு மூடிவைத்திருக்கிறோம். எனவே உண்மையிலேயே அடி மட்டத்தில் வாழும் அந்த தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த கடந்த 30 வருட கால யுத்தத்தின் காரணமாக வடக்கிற்கு அவ்வாறான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அவருடைய வாழ்க்கைக்கான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன ஆகவே அந்த வடக்கை குறிப்பாக மையப்படுத்தி அந்த மக்களுடைய நாளாந்த வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவகையில் மிக வேகமான அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் அந்த மக்களுக்கு 30 வருட வாழ்க்கை இல்லாமல் போயிருக்கிறது. எனவே நாங்கள் இந்த பிரச்சினையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். மேற்தளத்தில் அரசியல் பிரச்சினை, அடித்தளத்தில் மக்களின் நாளாந்த பிரச்சினை. இந்த இரண்டுக்கும் தீர்வை பெற்றுக் கொடுப்பது தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது. இதையேதான் நாங்கள் வடக்கிலும் சென்று சொல்லுகிறோம் தெற்கிலும் சொல்லுகிறோம். நாங்கள் பல்வேறு வடகிழக்கு அரசியல்வாதிகளோடு கலந்துரையாடி கொண்டிருக்கின்றோம். அவர்களோடு பேசுகிறோம். ‘நாங்கள் 30 வருடமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டோம். இறுதியாக கிடைத்த பலன் என்ன? இன்னும் 30 வருடம் மோதிகொள்வதா? இன்னும் 30 வருடம் சண்டை பிடிப்பதா? அல்லது நாங்கள் சேர்ந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணப்போகின்றோஂமா?’ ஆவே நாங்கள் இவை தொடர்பாக அந்தந்த அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

வறுமையில் வாடும் ஒரு குழந்தை இழப்பது ஒரு நேர உணவு மாத்திரமல்ல அதன் சுய கௌரவத்தையும் சேர்த்துத்தான். இதை நான் அனுபவித்தவன்.

அடுத்ததாக மனோரஞ்சன் அவர்கள் கூறிய அடுத்த விடயம். அதாவது மக்களுடைய மனங்களில் இருக்கின்ற அந்த எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக எங்களுக்கு உணர்வு பூர்வமாக புரிதல் இருக்கிறதா என்பதே? எங்களுக்கு மக்களுடைய வேதனைகள் தூக்கம் என்பது ஒரு ஃபேஷன் அல்ல. நாங்கள் வாழ்க்கையின் வேதனைகளை நன்றாக உணர்ந்த மனிதர்கள். ஒரு பிள்ளை வறுமையில் இருக்கும் பொழுது அந்த பிள்ளைக்கு இல்லாமல் போவது வெறும் ஒரு நேர உணவு மட்டுமல்ல. நாங்கள் நினைக்கலாம் ஒரு குடிமகன் ஏழையாக இருப்பதால் ஒரு வேளை உணவு மட்டும்தான் கிடப்பதில்லை என்று…. அப்படி இல்லை. இந்த சமூகத்தில் பல்வேறு விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன. ஒரு மனிதன் என்கின்ற கௌரவமும் இல்லாமல் போகின்றது. ஒரு பாடசாலையில் ஆசிரியர் மிகவும் விரும்புவது நல்ல வெள்ளை நிறம் கொண்ட கொழு கொழுன்னு இருக்கும் பிள்ளையைத்தான். வறுமையால் காய்ந்து சுருங்கிப் போன குழந்தையை அல்ல. அவர்கள் கல்வியிலும் ஒதுக்கப்படுகிறார்கள். போலீசுக்கு போய் ஒரு முறைப்பாடு செய்யப் போனாலும் அங்கே போலீசார் நீண்ட நேரம் தாமதிப்பது ஒரு வறுமைப்பட்டவரின் முறைப்பாட்டை பதிவு செய்வதற்குத்தான். ஒரு வங்கியில் போனால் வரிசையில் இறுதியாக நிக்க வைக்கப்படும் ஒருவர் வறுமையானவராகத்தான் இருப்பார்.

எனவே வறுமை என்பது வெறும் பொருளாதார பிரச்சனை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சனை. இது நாங்கள் அனுபவப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் அனுபவப்பட்டது. இந்த வறுமை என்பது சாதாரண சமூக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. எனவே சாதாரண குடிமக்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு அவற்றை அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதைப் போலவே எங்களாலும் அவற்றை உணர முடிகின்றது. மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இந்த நாட்டில் தலைவர்களை உருவாக்கினார்கள், அரசாங்கங்களை உருவாக்கினார்கள். நாட்டில் இரண்டு முறை மக்கள் அந்த சந்தர்ப்பத்தை எமது நாட்டில் தலைவர்களுக்கு கொடுத்தார்கள். அதாவது எமக்குத் தெரிந்த காலத்தில். ஒருமுறை சந்திரிக்காவுக்கு கொடுத்தார்கள். 17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை தோற்கடித்து சந்திரிக்கா அதிகாரத்துக்கு வருகின்ற பொழுது மக்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பும் புத்தெழுச்சியும் காணப்பட்டது. ஆனால் சந்திரிகா மிகக் குறுகிய காலத்திலேயே அந்த மக்களின் எதிர்கால எதிர்பார்ப்பையும் புத்தெழுச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். இரண்டாவது கோத்தபாய அவர்களுக்கு 2019ல் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையில் அவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபடாத சாதாரண மனிதர்கள் கோத்தபாயவின் மேடையில் ஏறினார்கள். அவ்வளவு காலமும் இலங்கை அரசியலில் அவ்வளவு ஆர்வம் காட்டாத வெளிநாட்டில் வாழ்ந்த இலங்கையர்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்தி இலங்கைக்கு வந்தார்கள். மிக பெரிய துறைசார் நிபுணர்கள் கோத்தாவிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். ஆனால் கோத்தாபய ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை எல்லாம் சிதறடித்தார்.

அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் நாட்டின் மக்கள் பாவம். அவர்கள் பாவம்... நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? எவ்வளவு எதிர்பார்ப்புக்களுக்குப் பின்னால் போய் அந்த எதிர்பார்ப்புகள் சீரழிக்கப்பட்டுள்ளன? எனவே எங்களுக்கு அந்த மக்களுடைய உணர்வுகள், எதிர்பார்ப்புகள், அவர்களுடைய இதயத்தில் உள்ள இதயத் துடிப்பு நன்றாக விளங்குகின்றது. அந்த இதயங்களின் வலி அதனுடைய பிரச்சனைகள் எல்லாம் எங்கள் அரசியல் மேடைகளை அலங்கரிப்பதற்கான விடயங்கள் அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசுவது வெறும் பென்ஷனுக்காக அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசும்போது எங்களுடைய வாழ்க்கையிலே உண்மையாக நாங்கள் முகம் கொடுத்து அனுபவித்த அந்த உணர்வோடுதான் பேசுகிறொம்.

ஆகவே மனோரஞ்சன் சொன்ன விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் சொல்கிறோம் எங்களுக்கு எந்தவிதமான நியாயமான உரிமையும் கிடையாது அந்த மக்களுடைய அந்த உணர்வுகளை எதிர்பார்ப்புகளை சிதறடிப்பதற்கு. அந்த மக்களை ஒரு சிறிய அளவில்கூட ஏமாற்றுவதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. (கைதட்டல்) அது போதும்.. அது போதும்...அந்த மக்கள் பாவம். இல்லையா...? அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள், அரசாங்கத்தை கவிழ்க்கிறார்கள்...எதிர்பார்ப்புகளுடன் பட்டாசு கொளுத்துகிறார்கள், பாற்சோறு உண்கிறார்கள் அவர்கள் என்னதான் செய்யவில்லை..? ஆனால் ஓரிரு வருடங்கள் தான் அவருடைய எதிர்பார்ப்புக்கள் … அவை மீண்டும் சிதறடிக்கப்படுகின்றன. எனவே நாங்கள் நினைக்கிறோம் அந்த மக்களுடைய அடி மனதுகளின் வேதனைகளில் இருந்து வருகின்றன உணர்வுகளோடு எதிர்பார்ப்புகளோடு அரசியலை நாங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். எனவே நாளைக்கும் உங்கள் முன்னால் வந்து எங்களால இப்படி பேசக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகவேதான் முதலிலேயே உங்களுக்குச் சொன்னேன் நாங்கள் அந்த நம்பிக்கையை பாதுகாப்போம். ஆகவே நாளையும் உங்கள் முன்னால் வந்து இப்படியே பேசக்கூடிய ஒரு அரசை நாங்கள் உருவாக்குவோம்.

ஆகவே இனப் பிரச்சனை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய கருத்து இதுதான் நன்றி


Read more...

Saturday, March 9, 2024

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.
புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தமது பலமிக்க கோட்டையாக இருந்த வடமராட்சியில் இருந்து, படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டு, இறுதியாக குறிகட்டுவான் கடலடி மட்டும் வந்து இந்தியாவுக்குப் படகேற காத்திருந்தார்கள். விட்டால் யாழ் குடாநாடு முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலை. புலிகளின் கதை முடியும் நேரம்.

அதே நேரம் குடாநாடெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. இந்தியா படகுகள் மூலம் உணவு எடுத்துவர முயற்சி செய்தது. இந்தியப் படகுகள் உணவுப் பொருட்களுடன் இலங்கையின் கடல் எல்லைக்கு வந்து காத்துக்கிடக்கின்றன. உள்ளே வர இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை. இலங்கை அரசு இந்தியாவின் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. இந்தியா விமானம் மூலம் உணவு போட முடிவு செய்தது. இந்திய போர் விமானங்கள் அத்துமீறி இலங்கையின் வான் பரப்புக்குள் நுழைந்தன.

இந்தியா "ஒப்பிரேசன் பூமாலை" என்ற பெயரில் குடாநாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொட்டலங்களைப் போட்டு இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஜே.ஆர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் பிரவேசித்தது.

இந்திய இராணுவ வாகனங்களில் தமது கொடிகளைக் கட்டி, புலிகள் தாமும் அவற்றின் மீது ஏறி வீதிகளில் வலம்வந்தார்கள். பூரண கும்ப மரியாதை செய்து இந்திய இராணுவத்தினரை புலிகள் வரவேற்றார்கள். எல்லாம் சிலகாலம் தான். புலிகள், ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தேடித்தேடி கொலை செய்தார்கள்.

உத்தேச மாகாணசபை அமைப்பதில் பல சிக்கல்களை உருவாக்கினார்கள். இந்திய அமைதிப்படையை சினமூட்டும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்தார்கள். இந்திய அனுசரணையுடன் , தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற மேற்குலகின் அபிலாசைக்கு அமைய புலிகள் இந்தியாவுடன் முரண்படத் தொடங்கினார்கள்.

1987 ஐப்பசி மாதம் இந்திய அமைதிப்படை மீது புலிகள் தாக்குதல் தொடுத்தார்கள். அன்றிலிருந்து அமைதிப்படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களால் மக்கள் இந்தியா மீது வெறுப்புக் காட்டத் தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையைப் புலிகள் தமக்கு சாதகமாக்க, மக்கள் செறிவாக இருக்கும் இடங்களில், அமைதிப்படை மீது பல தாக்குதல்களை நடத்தினார்கள். அந்த சமயங்களில் அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு யாழ் பொது வைத்தியசாலை சம்பவத்தைக் குறிப்பிடலாம். வைத்தியசாலைக்குள் மக்கள் தாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே, உள்ளிருந்து புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள்.இப்படியாகத்தான் இந்திய எதிர்ப்பு மனநிலை படிப்படியாக மக்களுக்கு ஊட்டப்பட்டது.

இவ்வளவு வருடங்கள் ஓடி முடிந்த பின்னும், மக்கள் மனங்களில் இருந்து இந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் நச்சுச் சூழலுக்குள் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டாலும், சில புலி சார் அமைப்புக்களும், புலம் பெயர்ந்து வாழும் புலிப் பினாமிகளும், அரசியல்வாதிகள் சிலரும், தமிழ் பத்திரிகைகளும் மக்களை மாறவே விடமாட்டார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே புலிகளுடன் சேர்ந்து, சயனற் என்னும் நஞ்சை காவித் திரிந்த, அப்பாவி மாணவன், பல கொடூரக் கொலைகளின் பங்குதாரி சாந்தனின் இறுதி நிகழ்வுகளில் மக்களை உணர்ச்சியூட்டி, அதில் குளிர்காய பலரும் முயற்சி செய்தார்கள். பல இடங்களுக்கு சாந்தனின் உடலத்தைக் காவித் திரிந்து அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்கள். உச்சக்கட்டமாக வல்வெட்டித்துறை பிரபாகரன் வாழ்ந்த இடத்திலும் சாந்தனின் உடலை வைத்து படம் காட்டினார்கள். இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம், சாந்தன் சாமானியனல்ல. அவன் புலிகளின் முக்கிய உறுப்பினன் என்பதை உலகத்துக்கு குறிப்பாக இந்தியாவுக்கு முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது.

இவ்வளவு காலமும் சாந்தன் ஒரு அப்பாவி. படிப்பதற்காக இந்தியா சென்ற சாதாரண மாணவன் என்ற புலித் தேசியங்களின் சுத்துக்கள் எல்லாம் போலி என்று நிரூபணமாகிவிட்டது. சாந்தனின் இளைய சகோதரன், அண்ணனின் புலிச் செயற்பாடுகள் பற்றி தனது முகநூலில் பதிவுகள் போட்டுள்ளார். அவர்கள் குடும்பமே அதிதீவிர புலிகளாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், இவர்களின் எச்சரிக்கையால் இந்தியா வெலவெலத்துப் போய் நிற்கிறது. எவை இந்த புற்றீசல் சிவில் அமைப்புக்கள். இந்த அமைப்புக்களின் பெயர் விபரங்களை யாழ்ப்பாண உதயன் பத்திரிகையிடம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சிறிதரன், சாந்தனின் உடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த தேர்தல் ஒன்றில் தனக்குத்தானே 75க்கு மேற்பட்ட கள்ள வாக்குகள் போட்டதாகப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட சாதனைத் தலைவர், சாந்தனைப் பெரிய தியாகியாக்கி அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை இலங்கை அழைத்து வர பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கிறார் தமிழரசுத் தலைவர். பொன்னம்பலம் கட்சி கஜேந்திரன் உட்பட சிலரும் ஓர் ஓரமாக நின்று அஞ்சலியை செலுத்தி ஒரு சில ஓட்டுக்களுக்கு.....

ஜே.வி.பி கட்சியினரும், கூடவே இலங்கையின் புலனாய்வுப் பிரிவுடன் கூடி இயங்கும் முன்னாள் புலிகளும் இந்தப் பயங்கரவாதியின் உடலுக்கு அஞ்சலி செய்கிறார்கள். ஒன்றுமே புரியலே, இங்கே என்னமோ நடக்குது. ராஜீவ்காந்தியை துவக்கால் அடித்து கொல்ல முயன்ற கட்சியினர், அவரைக் கொன்றவனுக்கு அஞ்சலி செய்வது ஒன்றும் ஆச்சரியமல்ல.

இவ்வளவுக்கும் இந்த சாந்தன் ஈவிரக்கமற்ற பயங்கரக் கொலையாளி. பத்மநாபா உட்பட 12 பேரை கொலை செய்து விட்டு, இலங்கைக்கு தப்பிச் சென்றான். அங்கு தனது தாய் கையால் சாப்பிட்டு உடலைத் தேற்றிக்கொண்டு அடுத்த கொலைக்கான திட்டத்துடன் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறான். அங்கு புலிகளின் கொலைக்குழுவுடன் ஒன்றிணைந்து ராஜீவ்காந்தி மற்றும் 12 பேரை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்கின்றான். இந்தியாவின் ஒப்பற்ற இளம் தலைவனைக் கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு இலங்கைத் தமிழர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்தியாவைத் தூற்றுகிறார்கள். இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள்.

புலிகளின் அழிவுக்குப் பின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு இந்தியத் தயவை வேண்டி நின்ற தமிழர் தரப்பு, ஒரு நொடி தோன்றிய உணர்ச்சி வேகத்தில், இந்திய கனிவை தலைகீழாக மாற்றி வைத்துக்கொண்டுள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்காக இந்தியாவுக்கு கடிதம் எழுதுவது, இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு புதுடில்லி போவது, அடிக்கடி இந்திய தூதுவர் அலுவலுகத்துக்கு காவடி எடுப்பது, இந்தியாவுக்குப் போவது மகஜர் கொடுப்பது, இந்தியத் தூதுவரிடம் கொடுப்பது என்றிருந்த தமிழ் கட்சித் தலைவர்கள், சாந்தன் என்ற கொலைகாரனுக்காக இந்திய எதிர்பாளர்களாக மாறிக் கொண்டுள்ளார்கள்.

இந்த தமிழ்க் கட்சித் தலைவர்களின் இந்திய விரோத மனப்போக்கு ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனியும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிடம் போய் நிற்கப் போகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்தும் ஆள் மாறி ஆள் மாறி கருத்துத் தெரிவித்துக்கொண்டு, இந்தியா உதவி செய்யவில்லை என எவ்விதம் நீங்கள் ஒப்பாரி வைக்கலாம். இதற்குள் இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை வேறு. இது எப்படி இருக்கிறதென்றால், இந்திய அமைதிப்படை தானாக இலங்கையை விட்டு வெளியேறிய பின், உலகின் நான்காவது பெரிய இராணுவத்தையே அடித்துக் கலைத்து விட்டோம் என்று புலிகள் பீத்திக்கொண்டது போலத்தான்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த இந்திய எதிர்ப்பு மனநிலை நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவே நான் அனுமானிக்கிறேன். போராட்ட ஆரம்ப காலங்களிலேயே (1970 – 1980) இடதுசாரி எண்ணம் கொண்ட பலரும் தமது இந்திய எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வந்து இருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு தமிழீழத்துக்குப் பாதகம் என வகுப்பெடுத்தவர்கள் பலர். காலப்போக்கில் எல்லோருமே இந்தியாவே கதி என அங்கேயே அடைக்கலமானார்கள்.

1983 இனக் கலவரத்துடன் தமிழ் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோருமே இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் தான். இந்தியா வழங்கிய சகல சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான். இந்திய எதிர்ப்பை பலமாக எடுத்துவந்த புலிகள் முதல் அனைவரும், இந்தியாவிடம் பணம் உட்பட பலவிதமான உதவிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் தான். பிராந்திய அரசியல் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாத, அறிவுகெட்ட ஜடங்களின் சமூகவலைத்தள பதிவுகள், கருத்தாடல்கள், எமது இனத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கடந்து, எமது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

யூலியன். 08 03 24.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com