Showing posts with label தோழர் மணியம் தொடர். Show all posts
Showing posts with label தோழர் மணியம் தொடர். Show all posts

Sunday, July 13, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் - 4

மனைவி பிள்ளையிடம் விடை பெற்றேன்!

புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கைதுசெய்து கொண்டு செல்வதற்கு முன்னர் எனது புத்தகக் கடையைப் பூட்டித் திறப்பை தம்முடன் எடுத்துக் கொண்டனர். அவர்களில் ஜெயந்தன் என்பவன் சின்னவனைப் பார்த்து 'இவருடைய சைக்கிளை என்ன செய்யிறது?' என வினவினான்.

அவர்களது பேச்சிலிருந்து என்னை அவர்கள், கடைசி முறையாகத்தன்னும் எனது மனைவி, பிள்ளையப் பார்க்கவிடாது நேரடியாக கூட்டிச்செல்லப்போகிறார்கள் என்பது புரிந்தது. நான் எப்படியும் எனது மனைவியையும் பிள்ளையையும் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் அவ்வாறு விரும்பியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, என்னைக் கைது செய்தவர்கள் புலிகள்தான் என்பதை மனைவியிடம் தெரியப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையலாம். மற்றது, நான் இறுதியாக வீட்டிற்கு செல்வதன் மூலம், என்னைக் காணவில்லையென அவர்கள் தேடி அலைவதை தவிர்க்கலாம்.

நான் கடைக்கு வரும்போது ஏற்கனவே வீட்டுத் தேவைக்கென வாங்கி வைத்திருந்த பாண் உட்பட சில பொருட்கள் ஒரு கூடைக்குள் எனது சைக்கிளில் இருந்தது. எனவே நான் அதைச்சாட்டாக வைத்து, அவற்றை வீட்டில் கொடுத்துவிட்டுப் போவோம் என அவர்களிடம் கூறினேன்.

முதலில் அவர்கள் அதை முற்றாக ஏற்கவில்லை. வீட்டுக்குப் போனால், என்னைக் கைதுசெய்த விவரம் அறிந்து மனைவி, பிள்ளை, உறவினர்கள் அழுவார்கள் என சின்னவன் கூறினான். 'நான் அப்படி எதுவும் நடக்காது. நீங்கள் தயங்காமல் என்னுடன் வாருங்கள், இந்தப் பொருட்களையும் சைக்கிளையும் எனது வீட்டில் வைத்துவிட்டுப் போவோம்' எனக் கூறினேன்.

எனது வலியுறுத்தலுக்குப் பின்னர், அவர்கள் ஒருவாறு ஒத்துக்கொண்டு, என்னுடன் எனது வீட்டுக்கு வரச் சம்மதித்தார்கள். ஆனால் எனது சைக்கிளை நான் ஓட்டிவர அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவன் தனது சைக்கிளில் என்னை ஏற்றிக்கொள்ள, இன்னொருவன் எனது சைக்கிளை ஓட்டி வந்தான்.

அந்த மூவருடனும் நான் வீடு சென்றதும், எனது மனைவியும், மாமனாரும் ஒன்றும் புரியாது சற்று வியப்புடனும் அச்சத்துடனும் அவர்களையும் என்னையும் நோக்கினர். நான் நேராக மனைவியிடம் சென்று, அவர்கள் என்னைக் கைதுசெய்து அழைத்துச்செல்ல வந்திருக்கும் விடயத்தைக் கூறினேன்.

நான் கூறியதைக் கேட்டதும், மனைவி கண்கலங்கி அழத்தொடங்கினார். எனக்கு அவர்களால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது என்று சொல்லி, மனைவியைத் தேற்ற முயன்றேன். உண்மையில் எனக்கு அவர்கள் மீது துளியும் நம்பிக்கை இல்லையென்ற போதிலும், மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அவ்வாறு கூறினேன்.

இதற்கிடையில், சின்னவன் எனது வீட்டைச் சோதனையிடப்போவதாகக் கூறினான். நான் தாராளமாகச் சோதனையிடலாம் எனக் கூறினேன். அவன் எமது வீட்டில் இருந்த இரண்டு அறைகளில், எமது படுக்கை அறைக்குள் மட்டும் நேரடியாகப் புகுந்து, அங்குமிங்கும் நோட்டமிட்டுவிட்டு, அங்கிருந்த மேசையைத் திறந்து அதற்குள் இருந்த எனது நாட்குறிப்பை (டயறி) மட்டும் எடுத்துக்கொண்டான். வேறு ஒன்றும் அவனுக்குத் தேவையான பொருட்கள் அங்கு இருக்கவில்லைப்போலும்!

அந்த நாட்குறிப்பை எடுத்துக்கொண்டதையிட்டு நான் கவலையேதும் படவில்லை. ஏனெனில் எனக்கு தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்றும் இருந்ததில்லை. பெரும்பாலும் சிலருடைய முகவரிகளையும், சில கொடுக்கல் வாங்கல் கணக்குகளையும் மட்டும்தான், நான் அவற்றில் எழுதி வைப்பது வழக்கம். சின்னவன் எடுத்த அந்த நாட்குறிப்புப் புத்தகத்தில் அதுகூட இருக்கவில்லை. கல்வியங்காட்டிலுள்ள ஒரு நண்பரின் திருமணத்துக்குப் போனது மட்டுமே, அதில் எழுதப்பட்டிருந்த ஒரேயொரு விடயம்!

புலிகள் என்னைக் கைதுசெய்த சம்பவம், எனது மனைவியை பெரிதும் பாதித்ததிற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. என்னைக் கைதுசெய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எமக்கு நன்கு பரிச்சயமான பலர் – தில்லை, செல்வி, அன்ரன், மேனாகரன் எனப் பலர் – புலிகளால் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் பற்றிய தகவல் ஏதும் தெரியாமல் இருந்தது. செல்வியைப் பற்றிய தகவல் அறிவதற்காக செல்வியின் திருமணமான தங்கை கைக்குழந்தையுடன் சேமமடுவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து, பல நாட்கள் தங்கியிருந்து, புலிகளின் முகாம்களுக்கும், செல்வி கல்வி கற்று வந்த யாழ்.பல்கைலக்கழகத்துக்கும் அலைந்து திரிந்தும் எவ்வித பயனும் இல்லாமல் வீடு திரும்பியிருந்தார். அவர் எமது வீட்டுக்கும் வந்திருந்தபடியால், எனது மனைவிக்கும் இந்த விடயங்கள் யாவும் நன்கு தெரிந்திருந்தது.

எனவே எனது நிலையும் அதுவாகவே போய்விடுமோ என எனது மனைவி அஞ்சியதில் நியாயமிருந்தது. மனைவி பயப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் புலிகளின் இவ்வாறான கைது நடவடிக்கைகளின் போது அடிக்கடி ஒரு விடயத்தை எனது மனைவிக்குக் கூறுவதுண்டு. அதாவது, 'புலிகள் பெரும்பாலும் என்னைப் பிடிக்கமாட்டாங்கள். அப்படியில்லாமல் அவங்கள் என்னைப் பிடித்தாங்கள் என்றால், பிறகு நான் ஒருக்காலும் திரும்பி வரமாட்டேன்' என நான் கூறுவதுண்டு. எனவே இப்பொழுது அவர்கள் என்னைப் பிடிக்க வந்தபடியால், எனது வாழ்வும் தனது வாழ்வும் அத்துடன் முடிந்துவிடப் போகிறது என மனைவி கவலையடந்தார்.

என்னைக் கைதுசெய்யமாட்டார்கள் என நான் தைரியத்துடன் கூறிவந்ததிற்கு ஒரு காரணம் இருந்தது. அதில் ஒன்று, நான் எனது 17வது வயதில் இருந்து எனது மக்களுக்காக, எனது சொந்த நலன்களை சுகங்கைளத் துறந்து உழைத்து வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் மாணவர் பிரச்சினைக்கான போராட்டங்களிலும், பின்னர் உயர்சாதி வெறியர்களுக்கெதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களிலும், பின்னர் வன்னிப் பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக நடைபெற்ற பேராட்டங்களிலும் நான் தீவிர பங்கெடுத்து வந்திருக்கின்றேன்.

பின்னர், 1970களில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, அரசியல்ரீதியான போராட்டங்கள் ஆரம்பமான போது, அதிலும் பங்குபற்றியுள்ளேன். தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன்னரே எமது கட்சியான இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி, 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்ற வெகுஜன அமைப்பை உருவாக்கிய போது, அதில் முன்னணி நபர்களில் ஒருவராகச் செயல்பட்டுள்ளேன். நான் பங்குபற்றிய இந்தப் போராட்டங்களின் போது, சில தடவைகள் பொலிசாரால் தாக்கப்பட்டதுடன், பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளேன்.

நான் பின்பற்றிய கொள்கைகள், நடைமுறைகள் காரணமாக, பழமைவாதப் பிடிப்புள்ள எனது உறவினர்கள் சிலரால் நீண்டகாலம் ஒதுக்கி வைக்கட்டும் வந்திருக்கிறேன். இவை தவிர, பெரும்பாலான தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பம் முதலே என்னுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்துள்ளன. அந்த நேரத்தில் இந்த இயக்கங்கள், தமது பிரச்சார ஏடுகளை அச்சிடுவதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு அச்சகமும் முன்வரவில்லை. அதற்குக் காரணம், இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்த்து தமது அரசியலை ஆரம்பித்ததால், அவர்களது எந்தெவாரு பிரசுரத்தையும் அச்சிட்டுக் கொடுக்கக்கூடாது என, கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அச்சகங்கள் (எம்மைத்தவிர) எல்லாவற்றையும் தடுத்திருந்தார்.

எனவே, அமிர்தலிங்கத்தின் வேண்டுகோளுக்கோ மிரட்டலுக்கு அடிபணியாத எமது 'நொதேர்ண் பிறின்ரேர்ஸ்' அச்சகத்தை நாடி, அநேகமான இயக்கங்கள் உதவி கேட்டு வந்தன. பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒன்றுபட்டு இருந்த காலத்தில் ஆரம்பித்த 'உணர்வு' பத்திரிகை, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க மாணவர் அமைப்பின் 'ஈழ மாணவர் குரல்', இப்பொழுது சிறையில் இருக்கும் தேவதாசின் 'பலிபடம்', 'உதயசூரியன்', 'சிம்மக்குரல்', எமது கட்சியின் 'போராளி' என பல பத்திணிகைகைள நான் அச்சிட்டேன். அத்துடன் இயக்கங்களின் பிரசாரப் பிரசுரங்கள், யாழ்.பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட புலிகளின் மறுமலர்ச்சிக்கழக வெளியீடுகள் எனப் பலவற்றையும் அச்சிட்டேன். இவற்றை அச்சிட்டதால், பல தடவைகள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகளுக்கும் உள்படுத்தப்பட்டேன்.

அந்த நேரத்தில் என்னுடன் நல்ல உறவுகளைப் பேணியதில் புலிகளின் இயக்கமும் ஒன்று. அந்த இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தவிர்ந்த ஏனைய முன்னணி உறுப்பினர்களான மாத்தையா, அன்ரன் பாலசிங்கம், திலீபன், கிட்டு, மூர்த்தி (அப்போதைய அரசியல் பொறுப்பாளர் – தமிழ்செல்வனின் அண்ணன்), யோகி, லோறன்ஸ் திலகர், சந்தோசம், புதுவை இரத்தினதுரை, பண்டிதர் என பலரும் என்னுடன் பழகி வந்தனர். இந்திய அமைதிப்படை காலத்தில், யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னால் அமைந்திருந்த எனது புத்தகக்கடைக்கு அருகாமையில் இருந்த புலிகளின் இரண்டு மாடித் தலைமைக் காரியாலயத்தில், ஒரு கட்டத்தில் மேல்மாடியில் இந்திய இராணுவ அதிகாரியின் காரியாலயமும், கீழ்த்தளத்தில் பலிகளின் காரியாலயமும் செயற்பட்டன. இரு பகுதியினரும் எனது கடையில்தான் கொழும்பு தினசரிகளை வாங்குவது வழமை. பத்திரிகைப் பிரியரான அன்ரன் பாலசிங்கம் (ஆரம்பத்தில் பாலசிங்கம் வீரேகசரி பத்திரிகையில் வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது), கொழும்பிலிருந்து பத்திரிகைகளைக் கொண்டுவரும் 'யாழ்தேவி' புகையிரதம் யாழ்ப்பாணம் வந்துசேரும் பிற்பகல் 2 மணி அளவில் எனது கடையில் வந்து காவல் இருந்து பத்திரிகைகளை தானே எடுத்துச் செல்வது வழக்கம். அந்த நேரத்தில் அவர் என்னுடன் பொதுவாக உரையாடுவார். அதன்காரணமாக அவருடன் எனக்கு நன்கு அறிமுகம் ஏற்பட்டிருந்தது.

எல்லோருடனும் நான் பழகினாலும், என்னுடைய கொள்கைகள் மிகவும் வெளிப்படையானவை. நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன். தமிழ் மக்களின் பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டமாக அது வெடித்த பின்பு, எமது கட்சியிலிருந்த பலர் – முன்னணித் தோழர்கள் உட்பட - பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். எமது கட்சியால் உருவாக்கப்பட்ட 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்ற அமைப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிலர், அதன் அடிப்படைக் கொள்கையான 'ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பகுதிகளுக்கு சுயாட்சி' என்பதைக் கைவிட்டு, பிற்போக்கானதும், அடைய முடியாததுமான 'தமிழ ஈழம்' என்ற கொள்கைக்கு மாறியதுடன், முன்னணியின் பெயரையும் 'தமிழீழ தேசிய விடுதலை முன்னணி' (Nடுகுவு) என மாற்றிக் கொண்டனர்

அதன்காரணமாக அந்த இயக்கத்துடனும் நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அனைத்து இயக்க உறுப்பினர்களுடனும் நட்புடன் உறவாடி வந்தோம். எமது கட்சியிலிருந்த மிகச்சிலரே இவ்வாறு நிலை தளும்பாது எமது கொள்கையில் உறுதியாக நின்றனர். இந்தப் போராட்டம் பிற்போக்கானது, ஒருபோதும் வெற்றி பெறாது என்ற அசையாத நிலைப்பாட்டில் நாம் நின்றோம். வரலாறு அதை இன்று தெளிவாக நிரூபித்துள்ளதையிட்டு, நாம் பெருமையும் மகிழ்ச்சியுமடையாமல் இருக்க முடியாது.

எனவே, புலிகள் எல்லா இயக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தடைசெய்து, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களை ஒன்றில் கொன்று குவித்தோ அல்லது கைது செய்தோ அராஜகம் விளைவித்த போது, அவர்கள் தமக்கு போட்டி எனக்கருதிய எந்தெவாரு இயக்கத்திலும் அங்கம் வகிக்காத என் மீது கை வைப்பார்கள் என நான் நினைத்திருக்கவில்லை. அந்தத் துணிச்சலில்தான், அவர்கள் என்னைத்தேடி ஒருபோதும் வரமாட்டார்கள் என எனது மனைவிக்கு நம்பிக்கை ஊட்டி வந்தேன்.

ஆனால் அவர்கள் என்னையே தேடி வந்து கைதுசெய்த போது, ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜிகள் எவ்வாறு முதலில் கம்யூனிஸ்ட்டுகளில் ஆரம்பித்து, பின்னர் ஜனநாயகவாதிகள், யூதர்கள் விரிந்து சென்று, கடைசியில் தனது சொந்த ஜேர்மன் மக்கள் மீதே கை வைத்தார்களோ, அதேபோல புலிகள் மாற்று தமிழ் இயக்கங்கள் என்று ஆரம்பித்து, ஆயுதம் ஏந்தாத, அதுவும் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த என் போன்றவர்கள் மீதும் கையை வைத்தனர்.

அவர்களது கைது எனக்கு ஒன்றைத் தெளிவாக உணர்த்தியது. அதாவது பாசிசவாதிகள் தங்கள் நோக்கங்களை அடைவதற்கு மக்களை இலேசாக ஈர்க்கும் வெவ்வேறு இன, மொழி, மத உணர்வுகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் குணாம்சத்தைப் பொறுத்தவரையில் எல்லா நாட்டுப் பாசிஸ்ட்டுகளும் ஒரே இனம்தான் என்பதே அது.

மனைவி அழுது குழற அவர்களுடன் புறப்பட்டேன். புறப்படும்போது, உடுத்திருந்த உடுப்புடன், எனக்கு தொய்வு கடுமையாகும் போது நான் வழக்கமாக அணியும் கம்பளி சுவெற்றரையும், சில மருந்துக் குளிசைகளையும் எடுத்துக் கொண்டேன்.

தொடரும்..



Read more...

Saturday, July 5, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் – 3

3. புலிகளின் ஒற்றர்களால் கைதுசெய்யப்பட்டேன்!

நான் எமது புத்தகக்கடையை அண்மித்தேபாது, கடைக்கு முன்னால் சைக்கிளில் காலுன்றி நின்றவரின் உருவத்தை நன்கு அவதானிக்க முடிந்தது. 'சந்தேகத்துக்கு இடமின்றி இந்தப்பொடியன் அவங்கடை ஆள்தான்' என்பதை அனுமானித்துக் கொண்டேன். நான் எனது சைக்கிளைவிட்டு இறங்கியதும் அந்தப்பையன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, எனது கடையில் இருந்த தோழர் தவராசாவின் முகத்தையும் பார்த்தான். அதாவது 'இவர்தான் நாங்கள் தேடிவந்த மணியம் என்பவரா?' என்ற கேள்வி அந்தப்பார்வையில் இருந்தது.

பதிலுக்கு தவராசாவும் 'உன்னைத்தேடி வில்லங்கமான ஆட்கள் வந்திருக்கிறாங்கள்' என்ற தகவலைத் தன் கண்களால் எனக்கு உணர்த்தினார். வந்திருப்பவன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதை ஊகித்தறிய எனக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. சாதாரணமாகவே, தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களுக்கு, சில அசாத்திய மோப்பக்குணங்கள் உண்டு. தனது இனத்திலுள்ள யாராவது ஒருவரை சந்திக்க நேர்ந்தால், சிறிதுநேர உரையாடலின் பின், அவர் எந்த ஊரவர், என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பைத ஓரளவு சரியாகச் சொல்லி விடுவர். இந்தப் புலனாய்வுத் திறமை, அவர்களைப் பொறுத்தவரை தமிழ் இயக்கங்கள் பற்றிய அவர்களது கணிப்பீடுகளுக்கும் பொருந்தும். இயக்கப் 'பொடியளைக் கண்டால், அவர்கள் எந்த இயக்கம் என்பதை சரியாக மதிப்பிட்டு விடுவர்.

என்னைப் பொறுத்தவரை, நான் தமிழன், அதிலும் யாழ்ப்பாணத் தமிழன் என்பதற்கும் அப்பால், ஓரளவு மானிடப் பண்புகள் பற்றிப் புரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என்பனவற்றின் கொள்கைகளை மட்டுமின்றி, அதன் உறுப்பினர்களின் வளர்ப்புமுறைகள், பழக்க வழக்கங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததினாலும், வந்திருப்பவனைப் பற்றி தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அன்றைய காலகட்டத்தில், ஆயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டத்தில், ஐந்து புலிகளை புகுத்திவிட்டால், அவர்களை சுலபமாக இனம்கண்டுவிட முடியும். காரணம், சாதாரண மக்களுக்கும் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள தோற்ற மற்றும் பழக்க வழக்க வித்தியாசங்களாகும். நீண்ட கொடிய யுத்தத்தின் காரணமாக உயிர்களையும் உடைமைகளையும் இழந்து, ஜே.ஆர்.ஜெயவர்த்தன – பிரேமதாச அரசுகளின் நீடித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வாடி வதங்கிப் போயிருந்த, சாதாரண தமிழ்ப் பொதுமக்களையும், பிரபாகரனால் 'வேள்விக்கு வளர்த்த ஆட்டுக்கடாய்கள்' போலிருந்த புலி உறுப்பினர்களையும், ஒருவர் சுலபமாக பாகுபடுத்திப் பார்த்துவிட முடியும்.

ஒரு கிராமப்புறச் சிறுவன், புலிகளினால் தமது இயக்கப் பயிற்சிக்காக பிடித்துச் செல்லப்படும்போது நோஞ்சானாகத்தான் இருப்பான். பின்னர் சில மாதங்களோ வருடங்களோ கழித்து அவனை அவனது பெற்றோர்களோ, உறவினர்களோ, ஊரவர்களோ, நண்பர்களோ காணும்போது, அடையாளம் தெரியாத அளவுக்கு அவனது உடலும் உள்ளமும் மாறிவிட்டிருக்கும். அவனுக்கு முகாமில் வழங்கப்படும் பயிற்சிகள், உணவு என்பன காரணமாக அவன் உருண்டு திரண்ட வாட்ட சாட்டமான ஆளாக மாறிவிட்டிருப்பதுடன், அவனது தோற்றத்தில் ஒரு அதிகார ஆணவ மிடுக்கும் உருவேறி இருக்கும். அவனது பெற்றோரே, அவனுடன் கதைக்கும்போது, மிகுந்த அவதானத்துடனும், பயபக்தியுடனும் கதைப்பதைக் காணக்கூடியதாகவிருக்கும். முன்பு அவனை 'தம்பி' என்றழைத்த ஊரவர்கள், 'நீங்கள்' என்றழைப்பதையும், முன்பின் பழக்கமில்லாத ஒரு வயோதிபர் கூட, அந்த 16 -17 வயது சிறுவனை, 'அண்ணை' என விழிக்கும் அவலத்தையும் காணமுடியும்.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், மற்றைய இயக்கங்களை விட, புலிகள் இயக்கம் சற்று வித்தியாசமாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. மற்றைய இயக்கத்தவர்கள் போல புலிகள் மக்களுடன் கண்டபடி ஊடாடமாட்டார்கள். அவர்கள் மற்றைய இயக்கத்தவர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் சந்தேகக்கண்கொண்டே நோக்குவர். அந்த நோக்கில் பார்ப்பவர்களை மிரளப்பண்ணும் ஒரு பயங்கரப்பார்வை உள்ளுறைந்து இருக்கும்.

அப்பொழுதெல்லாம் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர், வழமையானைதவிட நீண்ட சேர்ட்டுகளை அணிந்திருப்பவர். சிலரது பின்பக்கத்தில் சேர்ட்டுக்குள்ளே பிஸ்ரல் துருத்திக் கொண்டிருப்பது தெரியும். அவர்களைப் பார்த்துவிட்டு, சில சாதாரண இளைஞர்களும், நீண்ட சேர்ட்டுகளை அணிந்துகொண்டு, சேர்ட்டுக்குள்ளே ஒரு தடியைச் செருகிக்கொண்டு, தம்மையும் 'ஐ'ன்னாவாக (ஐவெநடடபைநnஉந) உருவகித்து மக்கைளத் திகில்பண்ணச் செய்ததும் உண்டு! அப்பொழுது இந்த நீண்ட 'பக்கி' சேர்ட் அவர்களது 'சிம்போலிக்காக'ப் பார்க்கப்பட்டது.

கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில், 'கொக்கோகோலா' பானம் அவர்களது இன்னொரு 'சிம்போலிக்'காகச் சில காலம் இருந்தது. ஏதாவது ஒரு கடையில் வாட்டசாட்டமான இளைஞர்கள் வந்து கொக்கோகோலா பானம் கேட்டால், கடைக்காரர் அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களது தேவையை முதலில் பூர்த்தி செய்து அனுப்பி வைப்பது வழக்கம். பின்னர், அந்த நேரத்தில் புலிகளின் வன்னிப் பொறுப்பாளர் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இருந்த முரண்பாடு, முறுகலாக முற்றிய பின்னர், பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் பதின்மூன்றாம் கட்டையில் தேராவில் குளத்துக்கு அண்மையில் முகாமிட்டிருந்த மாத்தையா, கிட்டுவின் புலிகளுக்கு சென்ற ஒரு லொறி கொக்கோகோலா போத்தல்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கைளக் 'காயப்போட்டதும்' நடந்தது.

இந்த இடத்தில், புலிகளின் உறுப்பினர்களுக்கும், மாபெரும் சீன – வியட்நாமிய புரட்சிகளின் போது, தமது தாய்நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் போராளிகளுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை தெரிந்துகொள்வது பயனுள்ளதாகவிருக்கும்.

அந்த நாடுகளில் நடைபெற்றது, முழுக்க முழுக்க பொது எதிரியான அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான புரட்சிகர மக்கள் யுத்தமாகையால், மக்கள் யார், போராளிகள் யார் என்பதை எதிரிகளால் சுலபத்தில் அறிந்துகொள்ள இயலாது. இதற்கு உதாரணமாக, இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை வியட்நாமில் ஒரு கிராமத்தைச் சுற்றிவளைத்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகள், விடுதலைப் போராளிகளான 'வியட்கொங்' கெரில்லாக்கள் 10 பேரை சந்தேகத்தில் கைதுசெய்தனர். அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து, அவர்களது குழுவுக்கு தலைவன் யார் எனக் கேட்டனர். எவ்வளவோ மிரட்டிக் கேட்டும், (கழுத்தில் iசைனட் குப்பி அணியாத) அந்தப் போராளிகள் தமது தலைவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. ':நீங்கள் தலைவன் யாரெனச் சொல்லாவிட்டால், எல்லோரையும் ஒவ்வொருவராகச் சுட்டுவிடுவோம்' என எச்சரித்துவிட்டு, வரிசையில் முதலில் நின்றவைனச் சுட்டுக் கொன்றனர்.

அதன் பின்னர் அந்தப் போராளிகளை நோக்கி, 'இப்பவாவது சொல்லுங்கள். உங்கள் தலைவன் யார்?' என வினவினர்.

அங்கு நிலைகுலையாது எஞ்சி நின்ற 9 பேரின் விரல்களும், அமெரிக்கப்படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தமது சக தோழனை நோக்கி நீண்டன. உண்மை அதுவல்ல என்ற போதிலும், தாம் சரியான ஆளை இனம்கண்டு ஒழித்துக்கட்டியதாக நம்பிய அமெரிக்கப்படையினர், அத்துடன் சுடுவதை நிறுத்திவிட்டனர்.

இதுதான் மக்களைச் சார்ந்து நின்று போராடும் பாட்டாளிவர்க்கப் போராளிகளுக்கும், புலிகள் போன்ற பாசிசப் பாணியிலான படைகளுக்குமுள்ள அடிப்பைட வித்தியாசம்.

எனவே என்னைத்தேடி வந்திருந்த அந்த இளைஞனை யார் என்று அடையாளம் காண்பதில் எனக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை. எனது தலைக்கு மேலே 'பாசக்கயிறு' வீசப்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.

தோழர் தவராசா என்னைப் பார்த்து, 'உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிற்கிறான்' என மெதுவாகச் சொன்னார்.

அதற்கிடையில், அவனும் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, கடை வாசற்படிக்கருகில் வந்து நின்றான்.

நான் அவைனப் பார்த்து, 'தம்பி என்னிட்டையோ வந்திருக்கிறர்கள்?' என வினவினேன்.

'உங்களை வந்தால் ஒரு இடமும் போகாமல் நிக்கச் சொல்லி சின்னவன் அண்ணை சொன்னவர்' என அவன் என்னிடம் கூறினான்.

„சின்னவன் அண்ணை ஆர்?' என நான் அவனிடம் வினவினேன்.

'அவர்தான் எங்கைட ரவுண் (யாழ்.நகர) இன்ரெலியென்ற் (புலனாய்வு) பொறுப்பாளர்' என அவன் மீண்டும் கூறினான்:

'என்ன விடயமாக என்னை சந்திக்க வந்துள்ளார்' இது நான்.

„எனக்குத் தெரியாது வந்தவுடன் பேசுங்கள்.' இது அவன்.

'சரி அவர் வரும்வரைக்கும் நீங்கள் உள்ளே வந்து இருங்கோ' என ஒரு ஆசனத்தை சுட்டிக்காட்டி அவைன அழைத்தேன். ஆனால் அவன் வரவில்லை. நான் எங்கும் தப்பியோடிவிடாதபடி என்னைக் காவல் காப்பது போல கடையின் முன்னால் நின்று கொண்டான்.

சிறிதுநேரம் கழித்து சின்னவன் என அழைக்கப்பட்டவர் கடைக்கு வந்துசேர்ந்தார். அவருடன் இன்னுமொருவரும் வந்தார். அவர் தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுச் சங்ககமொன்றில் வேலை செய்பவர் எனப் பின்னர் அறிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் யாழ் வீதியிலிருந்த புலிகளின் நகரக் காரியாலயம் சென்று, அங்குள்ள பொறுப்பாளரிடம் என்னைக் கைதுசெய்யப்போவைத அறிவித்துவிட்டு வரவே சென்றனர் என்பதையும், பின்னர்தான் அறிந்து கொண்டேன். எனக்காக முதலில் காத்துநின்ற இளைஞனின் பெயர் ஜெயந்தன் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

நேராக என்னிடம் வந்த சின்னவன் தனது அடையாள அட்டையை என்னிடம் காண்பித்து, 'நான் சின்னவன், புலனாய்வுத்துறை யாழ் நகரப் பொறுப்பாளர், உங்களை ஒரு விசாரணைக்காக கூட்டிச்செல்ல வந்திருக்கிறேன்' என்றான்.

'என்ன விசாரணை என்று அறியலாமோ?' என நான் அவனிடமும் வினவினேன்.

'அதை விசாரணை நடாத்துபவர்கள் உங்களிடம் சொல்வார்கள்' எனப் பதிலளிக்கப்பட்டது.

அதன்பின்னர் கடையிலிருந்த மேசையின் லாச்சிகளை அவன் திறந்து ஆராய்ந்தான். பின்னர் அதற்குள்ளிருந்த இலங்கையின் வீதி வரைபடம் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டான்.

பின்னர் தோழர் தவராசாவை உற்றுநோக்கிய புலிகளின் ஒற்றன், 'இவர் யார்?' என வினவிவிட்டு, தன்னுடன் வந்தவர்களை நோக்கி 'இவரை என்ன செய்வது? கொண்டுபோகவா?' எனக் கேட்டான். இந்த இடத்தில் நான் குறுக்கிட்டு, 'அவர் மருந்து வாங்குவதற்கு பணம் கேட்டு என்னிடம் வந்தவர். அவரை எதற்காகக் கொண்டு போகுறீர்கள்?' என்று கேட்டேன்.

பின்னர் அவர்கள் கடையைப் பூட்டித் திறப்பைத் தம்முடன் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகினர். இந்தச் சந்தர்ப்பத்தில் தவராசா தனது பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டார். அவரை அவர்கள் விட்டுவிட்டது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ஏனெனில் அவர்கள் அவரையும் கைதுசெய்து கொண்டு போயிருந்தால், வாய்பேச முடியாத அவரது குமர்ப்பிள்ளை உதவியின்றி தத்தளித்திருப்பார். அத்துடன் நோயாளியான தவராசாவும் புலிகளின் வதை முகாமில் சில நாட்களிலேயே மரணித்திருப்பார்.

நான் உயிருடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை கிஞ்சித்தும் அற்ற ஒரு நிலையில், தவராசாவின் கண்களும் எனது கண்களும் இறுதியாக ஒருமுறை சந்தித்துக் கொண்டன. அவரது கண்களில் தெரிந்த வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சோகமும், நிராசையும் இன்றும் எனது மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு சோகமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். நான் புலிகளின் பிடியிலிருந்து ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலையாகி வந்தேபாது, முதல் வேலையாக தோழர் தவராசாவைச் சென்று பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும்கூட, புலிகளின் உளவாளிகள் தொடர்ந்தும் என்னைக் கண்காணித்து வந்ததால், எனது கட்சித் தோழர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். நான் அவசரப்பட்டு சந்தித்தால், என்னைவிட அவர்களுக்குத்தான் தொல்லைகள் உருவாகும் என்பதால் அவ்வாறு தவிர்த்தேன்.

அந்தச் சூழ்நிலையில் ஒருநாள் தவராசாவின் உரும்பிராய் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த எனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியை எதேச்சையாகச் சந்தித்த போது, 'தவராசா அண்ணர் எப்படி இருக்கிறார்?' என ஆவலுடன் வினவினேன்.

'அவரா, அவர் மோசம் (மரணித்து) போய் ஒரு மாசமாச்சு. நேற்றுத்தான் அந்தியேட்டி நடந்தது' என அவர் சொன்னார். இந்தத் தகவல் எனக்கு பேரதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது. குறிப்பாக அவர் இல்லாத சூழலில், அவரது மகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என நான் மிகவும் கவலைப்பட்டேன். பின்னர் ஒருமுறை தற்செயலாக நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் அவரது மகளைக் கண்டு சுகம் விசாரிக்க முடிந்தது. அதன்பின்னர் 1995 ஒக்ரோபர் 30 மாபெரும் இடப்பெயர்வு, பின்னர் கொழும்புக்கு இடம் பெயர்ந்தமை என்பன காரணமாக தவராசாவின் மகள் பற்றி எதுவும் அறிய முடியவில்லை.

ஆனால் நான் வெளிநாட்டுக்கு வந்தபின்னர், தோழர் தவராசாவின் சொந்த ஊரான உடுப்பிட்டியைச் சேர்ந்தவரும், அவருடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை டிப்போவில் ஒன்றாக வேலை செய்தவருமான இன்னொரு தோழர் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது, தவராசாவின் அந்த வாய்பேச முடியாத மகளையும் புலிகள் கொன்றுவிட்டார்கள் என அந்த தோழர் கவலையுடன் தெரிவித்தார்.

ஆக மொத்தமாக தோழர் தவராசாவின் முழுக்குடும்பத்தையும், ஈழப்போராட்டமும் அதன் மூலம் வளர்ந்த பாசிச மாபியாக் கும்பலும் அழித்துவிட்டது. இப்படி எத்தனை குடும்பங்களோ? தோழர் தவராசா புத்தகக்கடையை விட்டு அகன்றபின்னர் புலிகளின் ஒற்றர்களுடன் நான் போகத் தயாரானேன்.

தொடரும்



Read more...

Tuesday, July 1, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (2)

அதேநேரத்தில், இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கைதத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்ட நிலையிலும்கூட, உயிராபத்துகள், பல இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் நிலை தழும்பாது நின்று, புலிகளின் பாசிசச் செயற்பாடுகளை இறுதிவரை நம்பிக்கையுடன் எதிர்த்துப் போராடிய இன்றும் போராடுகின்ற உண்மையான முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கும் சிரம் தாழ்த்துகின்றேன்

2. எதிர்பாராத அழைப்பு

இங்கு நான் எழுதப்போகும் வரலாறு 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் திகதி ஆரம்பிக்கின்றது. அதாவது கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள். 18 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சரியான தகவல்களுடன் தரமுடியுமா எனச் சிலர் கருதக்கூடும்.

உண்மைதான். உலகம் போகிற வேகத்தையும், நடக்கும் சம்பவ வரிசைகளின் அணிவகுப்பையும் பார்த்தால், நேற்று நடந்ததையே நாம் இன்று மறந்துவிடுகிற காலமிது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் துயரமான இந்த வரலாற்றுச் சம்பவங்கள் என்றுமே மறக்கக் கூடியைவ அல்ல. அதுமாத்திரமின்றி தமிழ் சமூகத்தில் எனக்கு மட்டுமின்றி மேலும் பலருக்கு நிகழ்ந்த இந்த அவலங்கள் என்றோ ஒருநாள் வரலாற்றின் பக்கங்களில் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக, முடியுமானவரை அவற்றின் குறிப்புகளை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தேன். எனேவ சில வேளைகளில் ஒருசில சம்பவங்கள் மறந்துவிட்டிருந்தாலும், அவற்றக்குப் பதிலாக இட்டுக்கட்டப்பட்ட விடயங்கைள ஒருபோதும் புகுத்தமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

அது ஒரு வியாழக்கிழைம. நேரம் பிற்பகல் 3 மணியிருக்கும். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு சமீபமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எதிராக, நான் நிர்வகிக்கும் யாழ் புத்தக நிலையத்திலிருந்து, மிக அருகாமையில் அத்தியடி புது வீதியில் அமைந்திருந்த எனது வீட்டுக்கு மதிய உணவிற்காகச் சென்றேன். இந்த இடத்தில் இந்த யாழ் புத்தக நிலையம் பற்றியும் சிறிது சுருக்கமாகச் சொல்லிவிடுவது அவசியமானது. இந்தப் புத்தகக்கடை 1963ல் உருவானது. இது வெறும் வியாபார நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்றல்ல. 1963ல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏறபட்ட போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் அந்தப்பிளவு தோன்றியது. சோவியத் சார்பு – சீன சார்பு என ஏற்பட்ட அந்தப்பிளவில், சீன சார்பான கட்சி அணியினரின் பிரச்சார வெளியீடுகளை விநியோகிக்கவும், 'கோஸி சூடியன்' என அழைக்கப்படும், சீன சர்வதேச புத்தக வர்த்தக நிறுவனம் அனுப்பும் நூல்களை விநியோகிக்கவுமே இந்தப் புத்தக நிலையம் அமைக்கப்பட்டது.

எமது சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு, 1972ல் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் கட்சி வேலைகளளச் செய்வதற்காக வரும்படி கட்சி என்னை அழைத்தது. எனவே 1966ம் ஆண்டுமுதல் வன்னிப்பிரேதசத்தில் விவசாயிகள் மத்தியில் நான் மேற்கொண்டிருந்த கட்சி – வெகுஜன வேலைகளை ஏனைய தோழர்களிடம் ஒப்டைத்துவிட்டு, யாழ்ப்பாணம் வந்து வேலைகளைப் பொறுப்பெடுத்தேன். அந்த வேலைகளில் ஒன்று இந்த யாழ் புத்தக நிலையத்தை நிர்வகிப்பதாகும்.

பின்னர் நாம் உருவாக்கிய 'நொதேர்ண் பிறின்ரேர்ஸ்' அச்சகத்தையும் நானே நிர்வகித்தேன். இதுதவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1975ல் நிறுவப்பட்ட பின்னர், பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் முற்போக்கான அரசியல் - கலாச்சார வேலைகளை முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த, அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், அதன் அருகில் ஒரு புத்தகக் கடையை அமைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற நான் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் சேர்.பொன்.இராமநாதன் வீதியில், குமாரசாமி வீதி தொடங்கும் இடத்துக்கு அண்மையில், 196ம் இலக்கக் கட்டிடத்தில் 'யூனிவேர்சல் றேட்ஸ்' என்ற பெயரில் ஒரு கைடைய ஆரம்பித்தேன். அந்த இடத்தை எனக்கு பெற்று உதவியவர், அப்பொழுது யாழ்.பல்கைலக்கழகத்தில் கணிதபீட விரிவுரையாளராக இருந்த நண்பர் (இவர் பேராதைனப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் இங்கிலாந்தில் தனது கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்) ஒருவராவார்.

இந்த இரு புத்தக நிலையங்களைப் பற்றியும் எமது அச்சகத்தைப் பற்றியும் இங்கு பிரஸ்தாபிப்பதின் காரணம், இவை யாழ்ப்பாணத்தின் சமகால அரசியல் வரலாற்றில் வேறு எந்த நிறுவனங்கைளயும் விட அதிக பங்களிப்பு செய்ததுடன், நான் எழுதுகின்ற இந்த வரலாற்றுத் தொடருடன் அவை சம்பந்தங்களையும் கொண்டிருப்பதும் ஆகும். அதுபற்றி பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்பாணத்தில் டிசம்பர் மாதம் என்பது பருவ மழைக்காலத்துள் உள்ளடங்கிய ஒன்று. சில வேளைகளில் வீசும் காற்றில் சில்லென்ற குளிர் உள்ளுற உறைந்து நிற்கும். ஆனால் இந்த டிசம்பர் பின்மாலைப்பொழுது சற்று உஸ்ணமாக இருந்தது. அது சில வேளைகளில் அன்றைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் வீசிய அரசியல் அனல்காற்றின் வெப்பத்தை உள்வாங்கி இருந்தேதா என்னேவா? நான் மதிய உணவு அருந்தச்சென்ற அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக முன்னொருபோதும் என்வீட்டுக்கு வந்திராத இருவர் என்னைக்காண வந்திருந்தனர். ஒருவர் எனது நண்பரான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆங்கில ஆசிரியராவார். அவர் தமிழ் தேசியவாதத்தின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்றேபாதிலும், குருட்டுத்தனமாக அதை ஆதரிப்பவர் அல்ல.

இன்னொருவர் எனது சொந்த ஊரான இயக்கச்சி பகுதியிலுள்ள முகாவில் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ரெலோ இயக்கத்தில் ஒரு முக்கிய போராளியாக இருந்தவர். புலிகள் 1986ல் TELO இயக்கத்தை தடைசெய்தபோது, பல இடங்களில் அந்த இயக்கத்தின் போராளிகள் பலரை குற்றுயிரும் குறையுயிருமாக பகிரங்க இடங்களில் டயர் போட்டு எரித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறான கொடும்செயலுக்கு உள்ளாக்கப்படுவதற்காக எமது ஊரைச்சேர்ந்த அந்த இளைஞனும் மல்லாகத்தில் ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதை அறிந்த அவரது தகப்பனார் எனது உதவி கோர என்னிடம் வந்து கண்ணீர் வடித்தார். நான் புலிகள் இயக்கத்தில் அப்பொழுது அவர்களது 'நிதர்சனம்' தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற ஒருவைர அணுகி அந்த இளைஞனை உயிர்தப்ப வைத்திருந்தேன்.

அந்த இருவருடனும் பல்வேறு விடயங்கள் குறித்து அளவளாவினோம். குறிப்பாக இந்திய அமைதிப்படை 1990ல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், புலிகள் தமிழ் பகுதிகளில் நடாத்தி வந்த நரபலி வேட்டை குறித்து விசனத்துடன் உரையாடினோம். அதன்பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்றுச் சென்ற பின்னர் மீண்டும் யாழ் புத்தக நிலையம் செல்வதற்குத் தயாரானேன். பிறந்து 16 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த எனது மகள், எம்முடன் தங்கியிருந்த எனது மனைவியின் தகப்பனாரின் மடியில் இருந்துகொண்டு எனக்கு கைகளை அசைத்து விடை தந்தாள்.

நான் மதிய உணவிற்கு செல்லும்போது, கடையில் பொறுப்பாக தவராசா என்ற முதிய தோழர் ஒருவரை விட்டுச் சென்றிருந்தேன். இந்தத் தோழர் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் நடத்துனராக (கொண்டக்ரர்) இருந்து ஓய்வுபெற்றவர். இவரது குடும்ப வரலாறு மிகவும் சோகம் நிறைந்தது. உடுப்பிட்டியைச் சேர்ந்த இவர் உரும்பிராயில் திருமணம் செய்திருந்தார். மனைவி வாய்பேச முடியாதவர். அவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் ஆக மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் மூவருமே வாய்பேச முடியாதவாகள்.

மகன்களில் ஒருவர் யாழ்.சின்னக்கடைப் பகுதியில் கடச்சல் பட்டறை ஒன்றில் வேலைசெய்து வந்தார். ஒருநாள் அவர் வேலைக்கு செல்லும் வழியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் திடீர் மோதல் ஒன்று நிகழ்ந்தது. அதில் அகப்பட்டுக்கொண்ட அவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி அந்த இடத்திலேயே மரணித்தார். இன்னொரு மகன் புலிகளுக்கு எதிரான இயக்கமொன்றுடன் தொடர்புள்ளவர் எனக்கூறி, புலிகள் அவரைத் தேடிவந்தனர். ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளையில், அதை எப்படியோ அறிந்துகொண்ட புலிகள் வீடு தேடி வந்துவிட்டனர். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அவரை சாப்பாட்டுக் கோப்பையுடன் வீட்டு முற்றத்துக்கு இழுத்துவந்து, பெற்றோர் சகோதரிக்கு முன்னால் சுட்டுப் படுகொலை செய்தனர். மகன்கள் இருவரும் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியில் தோழர் தவராசாவின் மனைவியும் சிறிது நாட்களில் மரணித்துவிட்டார்.

அதன்பின்னர் தவராசாவும் அவரது வாய்பேசமுடியாத மகளும் உரும்பிராயில் மிகவும் கஸ்டமான ஒரு சூழலில் வாழ்ந்துவந்தனர். கடுமையான ஆஸ்த்மா நோய் காரணமாகவும், முதுமை காரணமாகவும் அவரால் எந்தெவாரு தொழிலையும் செய்ய முடியாத நிலையில், அவரது மகள் தான் கற்றிருந்த மணப்பெண் அலங்காரத் தொழிலில் இடையிiடேய கிடைக்கும் வருவாயிலேயே அவர்களது வாழ்க்கை ஒருவாறு ஓடியது. அவர் தனது மன வேதனைகளை ஆற்றுவதற்காகவும், அரசியல் விவகாரங்கைளக் கலந்துரையாடுவதற்காகவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எமது புத்தகக்கடைக்கு வந்துவிடுவார். இந்த நிலமையில், அன்றும் அவரை புத்தகக்கடையில் விட்டுவிட்டே வீடு சென்றிருந்தேன்.

திரும்பவும் நான் புத்தகக்கடைக்கு சென்றெபாழுது, எமது கடைக்கு முன்னால் இளைஞன் ஒருவன் சைக்கிளுடன் நிற்பது தெரிந்தது. தூரத்திலிருந்து நான் இதை அவதானித்தாலும், அவன் நின்ற நிலை, எதையோ அவன் எதிர்பார்த்து நின்றது போன்ற ஒரு தோற்றப்பாட்டை, எனது மனதில் உருவாக்கியது.

தொடரும்..



Read more...

Friday, June 27, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள். தோழர் மணியம் தேனிக்காக எழுதிய அனுபவத்தொடர். பாகம் 1

துணுக்காய் வதை முகாமில் நான்காயிரம் மனித உயிர்கள் புலிகளால் வதைக்கப்பட்டு அவர்களில் பலர் கொலைசெய்யப்பட்டு உடல்கள் வவுனிக்குளக்கரையில் எரிக்கப்பட்டு அக்குளத்திலேயே கரைக்கப்பட்ட வரலாறு புதைக்கப்பட்டுள்ளது. அதே வதை முகாமில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற திரு தங்கத்துரை என்பவரது மகள் தனது தந்தையார் புதைக்கப்பட்ட இடம்தேடி துணுக்காய் சென்றபோது பாசிசத்தின் அடிவருடிகள் அவரது நீதிகோரும் உரிமையை மறுக்க முற்படுவதுடன் வரலாற்றையும் புதைக்கப்பட்ட மனிதர்களுடன் புதைக்கவே முற்படுகின்றனர்.

ஆனால் துணுக்காய் வதை முகாம் தொடர்பில் இன்று தயானி பேச முற்படும்போது அதனை தடுக்க முற்படும் தற்குறிகளுக்கு குறித்த வரலாறு இற்றைக்கு ஒன்றரை இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டவேண்டியுள்ளது.

ஆகையால் இலங்கைநெட், தோழர் மணியம் தேனிக்காக தனது வதை முகாம் அனுபவங்கள் தொடர்பாக எழுதிய தொடரை இத்துடன் மீள்பதிவு செய்கின்றது என்பதுடன் அருள்பேட் ஜூலியன் என்பவரால் தான் அனுபவித்த துயரங்கள் தொடர்பாக எழுதப்பட்ட நூலையும் தொடராக பதிவிட எண்ணியுள்ளது. அத்துடன் இத்தகவல்களுக்கு மேலதிகமாக துணுக்காய் வதைமுகாம் தொடர்பில் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் துணுக்காய் வதை முகாம் அனுபவங்கள் தொடர்பாக கிறேசியன் என்பவர் எழுதிய தொடர் ஒன்றும் தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவிடப்பட்டுள்ளதை வாசித்து அறிந்து கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

அன்பான 'தேனி' வாசகர்களுக்கு,

நான் ஏன் இந்தத் தொடரை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு சொல்லி விடுவது அவசியமானது. அதற்கு முன்னதாக எனது புலி வதை முகாம் பற்றிய அனுபவங்களை எழுதுவதற்கு 'தேனி' இணையத்தளத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பைத விளக்கி விடுவதும் முக்கியமானது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக நான் தேனி இணையத்தளத்தின் ஓரு வாசகனாக இருந்து வருகின்றேன். அத்துடன் அவ்வப்போது முக்கியமான சில விடயங்களில் எனது கருத்தை அதன் ஊடாக வெளிப்படுத்தியும் வந்திருக்கிறேன். நான் தேனியைத் தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம், அது எந்தவொரு கட்சியையோ, இயக்கத்தையோ அல்லது குழுவையோ சாராத சுதந்திரமான ஒர் ஊடகம் என்பதனாலாகும்.

அத்துடன் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பின்பற்றும் தமிழ் தேசியவாத சேற்றுக்குள் அமிழ்ந்துவிடாமல், தேனி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய திசைமார்க்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியுடன் ஊன்றி நின்றதுமாகும்.

குறிப்பாக பாசிசப் புலிகைள அழித்தொழிப்பதற்கான பொதுப் போராட்டத்தில் தேனி ஆரம்பம் முதல் இறுதிவைர எவ்வித ஊசலாட்டமுமின்றி நிலை தழும்பாது நின்று வந்துள்ளதுமாகும். இதுதவிர இன்று தமிழில் செயற்படுகின்ற இணையத்தளங்களில் தேனி மட்டுமே மிக அதிக எண்ணிக்கையான வாசகர்களால் பார்வையிடப்படுவது என்பதும், இலங்கையில் வெளிவருகின்ற பிரதான தமிழ் தினசரிகளின் வாசகர்களுக்கு இணையான வாசகர்கள் தினசரி தேனியைப் பார்வையிடுகிறார்கள் என்பதும் இன்னொரு காரணமாகும்.

அத்துடன் தேனி எனது இந்தத்தொடரை எவ்வித நிபந்தனைகளுமின்றி வெளியிட வந்ததிற்காக, அதன் நிர்வாகிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, இனி விடயத்துக்கு வருவோம்.

2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போருடன் புலிகளுடனான அரசாங்கத்தின் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த முடிவுடன் புலிகளால் இலங்கையில் - குறிப்பாக தமிழ் சமூகத்தில் உருவாக்கி வைத்திருந்த மனித நேயம், நாசகாரம் என்பனவற்றுக்கு அப்பால் உருவாக்கி வைத்திருந்த கொடூரமான பாசிச கட்டமைப்பு முற்றுமுழுதாக நொருங்கி விழுந்து மக்களுக்கு ஓரளவு நிம்மதியும் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் அதை அறுதியும் இறுதியுமான வெற்றியாக மக்கள் கருதிவிடக்கூடாது. தமிழ் தேசியவாதத்தின் பெயரால் தமிழ் பிற்போக்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பு மட்டுமே, புலிகளின் அழிவுடன் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். அந்த கட்டமைப்பை உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியவாதம் (அதற்குரிய சரியான பதம் 'யாழ்ப்பாணியம்' என்பேத. நாசிசம், பாசிசம், சியோனிசம், பார்ப்பனியம் என்ற சொற்கள் மனித விரோத செயற்பாடுகைள விளிக்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனேவா, அவ்வாறான அர்த்தத்தில் 'யாழ்ப்பாணியம்' என்ற சொல்லையும் நாம் பயன்படுத்த முடியும்) மீண்டும் மீண்டும் தமிழ் சமூகத்தில் பாசிச சக்திகளை உருவாக்க முயன்று வருகிறது. அது தனது இறுதி மூச்சுவரை அதைச் செய்து கொண்டே இருக்கும்.

இதில் இன்னொரு விசேட அம்சம் என்னவெனில், தற்போது தமிழ் பாசிசம் சர்வதேசிய சதியாக நன்கு வேரூன்றியுள்ளதுடன், அது முன்னெப்போதையும்விட நெருக்கமான ஏகாதிபத்தியத் தொடர்புகளையும் கொண்டுமுள்ளது என்பதாகும். எனேவ இன்று இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மேட்டுக்குடி சக்திகளால் உருவாக்கி பாதுகாக்கப்படுகின்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத பாசிச சக்திகைள முறியடிக்கும் போராட்டம் இன்னமும் முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன், அதை இல்லாதொழிக்காமல் தமிழ் மக்களின் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, விடுதலையையோ நாம் அடைய முடியாது என்பதையும், அச்சமூகத்தின் எதிர்காலத்தில் அக்றையுள்ளவர்கள் புரிந்து கொள்வது அவசியமானது. அதுவே நான் இத்தொடரை எழுதுவதற்கு தீர்மானித்ததின் அடிப்படைக் காரணமாகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை தமது 'மீட்பர்கள்' என்றும், ;விடுதைல வீரர்கள்' என்றும், ஏன் 'கடவுளர்கள்' என்றும் கருதிய ஒரு காலம் இருந்தது. இன்றும்கூட அவ்வாறான ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க சில சக்திகள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களது நிஜமுகம் என்ன என்பதை எனது இந்த அனுபவத்தொடர் ஓரளவு தன்னும் மக்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன். நான் அவர்களது கைதியாக இருந்த காலத்தில் நான் அனுபவித்த உடல் - உள வேதனைகளை மட்டுமின்றி, அவர்களால் அந்தக் காலகட்டத்தில் என்னுடன் வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அனுபவித்த வேதனைகைளயும் இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகின்றேன். இதில் அவர்களது இயக்க உறுப்பினர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட 'சீவன்களின்' துன்பங்கைளயும் உள்ளடக்குவது அவசியமானது.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மட்டுமின்றி, அவர்களது சிந்தைனகள், செயற்பாடுகள், பழக்க வழக்கங்கள் என்பன பற்றியும், அவர்கள் தமிழ் சமூகத்தின் மீது கட்டமைத்து வந்த பாசிச நிர்வாக இயந்திரத்தின் தன்மை பற்றியும் நான் அவதானித்தவை, அவர்கள் சிலருடன் மேற்கொண்ட உரையாடல்கள் மூலம் பெறப்பட்டவை என்பனவற்றையும் நான் இங்கு தெரிவிப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.

புலிகளால் நான் 1991 டிசம்பர் மாதம் 26ம் திகதி கைதுசெய்யப்பட்டு, 1993 ஜூன் 06ம் திகதி வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களது வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டேன். அவர்கள் 'மனமிரங்கி' என்னை விடுதலை செய்திராவிட்டால், இன்று நான் உங்களுடன் எனது கருத்துகைளப் பகிர்வதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அவர்கள் என்னை விடுதலை செய்ததை எனது இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

புலிகள் பற்றிய எனது அனுபவங்கள் அவர்களின் கொடூரமான உருவத்தின் ஒரு வெட்டுமுகம் மட்டுமே. அதாவது 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல. அவர்களுடைய உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்த இது போதுமானதல்ல. அதனை முழுமையாகக் கொண்டுவருவதாக இருந்தால், அவர்களால் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு, ஏதோ சில காரணங்களால் தப்பிப் பிழைத்து வெளியே வந்து, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னமும் பயத்துடன் முகம் காட்டாது வாழும் நூற்றுக்கணக்கான முன்னாள் கைதிகள் முன்வர வேண்டும். அது அவர்கள் தமிழ் சமூகத்துக்கும், மனித குலத்திற்கும் செய்யும் வரலாற்றுக் கடைமயாகும்.

எனது புலி வதை முகாம் அனுபவங்கள், அது ஏற்பட்டு 18 வருடங்கள் தாமதமாக வெளிவருவதற்கு காரணங்கள் உண்டு. நான் விடுதலையாகி வெளியே வந்ததும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வந்த எனது ஆத்ம தோழர்களும், நண்பர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வேறு பல சமூக ஆர்வலர்களும், நான் புலிகளின் இரும்புப் பிடியின் கீழ் இருந்தபோது பட்ட அவலங்களின் துன்பங்களின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்து, உலகின் முன் வெளிச்சத்தில் வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ஆனால் 1995ல் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் வரை, நான் அவர்களது தீவிர கண்காணிப்புக்குள் இருந்ததினால், அந்தச் சூழ்நிலையில் எனது சுண்டு விரலைக்கூட அவர்களுக்குத் தெரியாமல் அசைக்க முடியவில்லை.

1999ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு சென்ற பின்னரும்கூட, அவர்களது வேவுக்கண்கள் என்னைப் பின்தொடர்ந்த வண்ணமே இருந்தன. மீண்டும் நான் அவர்களது தீவிர கண்காணிப்பு வட்டத்துக்குள் படிப்படியாகக் கொண்டுவரப்படுகிறேன் என்று உணர்ந்த நிலையில், தவிர்க்க முடியாமலும், மனம் விரும்பாத நிலையிலும், எனதும் எனது குடும்பத்தினதும் பாதுகாப்புக் கருதி நான் நாட்டை விட்டு 2004 டிசம்பர் 04ம் திகதி வெளியேறினேன். நான் புலம்பெயர்ந்து குடியேறிய நாட்டிலும்கூட புலிகளின் மரண நிழல் என் போன்றவர்கள் மீது படிந்து கொண்டே இருந்தது. அதனால் வெளிநாட்டுக்குத் தப்பி வந்தும்கூட, கடந்த 6 வருடங்களாக ஓரளவு ஒதுங்கி மறைந்து வாழ வேண்டியே இருந்தது. இப்பொழுது புலிகள் தாயகத்தில் பெரும்பாலும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, இன்றும்கூட அவர்கள் வைத்திருக்கும் பலமான சர்வதேச வைலப்பின்னல் காரணமாக, அந்தப் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு உலகின் எந்த மூலையிலாவது பூரண பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது.

இருப்பினும் எமக்குள்ள வரலாற்றுக் கடமையை ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது நாம் நநிறைவேற்றியே தீர வேண்டும். இது வரலாறு எமக்கு இடும் கட்டளையாகும். தவறுவோமாக இருந்தால், அது எமது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். அதற்காக சில துன்பங்கள் ஏற்படினினும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அந்த உணர்வின் காரணமாகவே நான் இத்தொடரை எழுத எண்ணினேன். நான் இதை எழுதும் போது உண்மையுடனும் சத்தியத்துடனும் அணிவகுத்துச் செல்லவே எப்பொழுதும் விரும்புகின்றேன். புலிகள் என்னைக் கைது செய்ததால்தான் நான் அவர்கள் மீது கோபம் கொண்டு இதை எழுதுகிறேன் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் மறுபக்கமாகப் பார்த்தால் நான் ஏதோவொரு வகையில் அவர்களது தீய செயற்பாடுகைள எதிர்த்ததாலேயே, அவர்கள் என்னைக் கைதுசெய்து சித்திரவைதக்குட்படுத்தினர் என்பதே உண்மையாகும். அந்த வகையில் பார்த்தால் மனிதகுல விரோதிகளான புலிகள் எனக்கு மாபெரும் கௌரவத்தை வழங்கியுள்ளனர் என்றே கூற வேண்டும். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றனர் வாழ்கின்றனர். இனப்பெருக்கம் செய்கின்றனர். தமது சந்ததிகளுக்காக சொத்துக்கைளத் தேடி வைத்துவிட்டு மரணிக்கின்றனர். சொத்துத் தேடுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் மிருகங்ளும் கூடச் செய்கின்றன. எவன் ஒருவன் தான் வாழும் காலத்தில் தனது சக மனிதனுக்கு எதிராகவும், தன்னுடைய இன்றியமையாத சுற்றுச்சூழல் நண்பர்களான விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றுக்கு எதிராகவும் உருவாகும் அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறானோ, அவன்தான் உண்மையான மனிதன் ஆவான். இது நமது முன்னோடிகளால் எமக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டு வரும் பேருண்மையாகும்.

இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் நேரத்தில், என்னுடன் புலிகளின் வதை முகாம்களில் சக கைதிகளாக இருந்து, எம்மில் சிலருக்கு கிடைத்த மீண்டும் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல், 'புலிகளின் கொலைக்களங்களில் பலியிடப்பட்டவர்களுக்கும், எமக்குத் தெரியாமல் அவர்களால் மரணிக்க வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும், எனது கண்ணீராலும், இதயத்தில் கசியும் செந்நீராலும் அஞ்சலி செய்கின்றேன். '

அவர்களது துன்பப்படும் ஆத்மாக்கள் சாந்தி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

தொடரும்.....

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com