Saturday, December 7, 2019

எங்கள் நாட்டை நாங்கள் ஆட்சிபுரிய அனுமதியுஙகள்! தமிழக அரசியல்வாதிகளின் மூகத்தில் குத்தினார் முரளி.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அவர் எங்கள் நாட்டை வழிநடத்த சரியான நபர்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் ரைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு

கே: வெற்றிடமாக உள்ள வடக்கு மாகாண ஆளுநர் பதவியை அதிபர் கோட்டாபய ராஜபக்ச உங்களுக்கு வழங்கியுள்ளார் என்றும் அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அது உறுதிப்படுத்தப்பட்ட செய்திதானா?

“இல்லை, இந்தச் செய்தி பேஸ்புக் மூலம் பரவிய ஒரு வதந்தி. எனக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன், கிரிக்கெட் வீரர், அரசியல்வாதி அல்ல. மக்களின் நன்மைக்கான எனது அறக்கட்டளை, ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் இலங்கை மக்களுக்கு உதவி செய்து வருகிறது.நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு எந்த வகையிலும் மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவுவேன்”

கே: நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. நீங்கள் ஒரு ‘இந்திய வம்சாவளி’யை சேர்ந்தவர். மேலும் இலங்கை தமிழர். ஆனால் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின்போது நீங்கள் அவருக்கு அளித்த ஆதரவு இலங்கையின் அந்தப் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெரும்பான்மையான தமிழர்கள் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நீங்கள் ஒரு சர்வதேச விளையாட்டு நட்சத்திரம். மேலும் நீங்கள் ஒரு ரோல் மொடல். நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“இலங்கை ஒரு சின்னஞ் சிறிய நாடு. இங்கு எங்களுடன் பல மதத்தினர் கலந்து உள்ளனர். எல்லோருக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. நானே ஒரு தமிழன். நான் கொழும்பில் வசிக்கிறேன். இந்த நாட்டில் உள்ள மற்ற குடிமக்களைப் போலவே நம் அனைவருக்கும் சமமான ஒரே உரிமைதான் உண்டு. நான் இலங்கை நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும்போது, ​​ஒவ்வொரு இலங்கையினரும் - சிங்கள பெரும்பான்மையினர் உட்பட அனைவரும் என்னை ஆதரிக்கின்றனர். இதேபோல், இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களையும் நான் ஆதரிப்பேன். எனக்கு 47 வயது ஆகிறது. எங்கள் வரலாற்றில் பல சிக்கலான காலகட்டங்கள் இருந்துள்ளன. எழுபதுகளில் கலவரம் ஏற்பட்டது, மீண்டும் எண்பதுகளில் நூற்றுக்கணக்கான சிங்கள மற்றும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு தமிழ் அல்லது சிங்களவர்களும் மோசமானவர்கள் என கூறமுடியாது. அல்லது எந்த ஒரு பெரும்பான்மை சமூகத்தினர் அனைவரும் மோசமானவர்கள்தான் என அர்த்தப்படுத்த முடியுமா?”

கே: தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிபர் கோட்டாபயராஜபக்சவுக்கு எதிராக உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு இந்தியா உங்களின் இரண்டாவது வீடாக உள்ளது. ராஜபக்சவுடனான உங்கள் விசுவாசத்தை அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு விளக்குகிறீர்கள்?

“நீங்கள் சொல்லுங்கள், உங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால், உங்கள் அண்டை நாட்டுக்காரர்கள் தலையிடுகிறார்களா? தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அவர் எங்கள் நாட்டை வழிநடத்த சரியான நபர். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல ஆண்டுகள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எதுவும் நகரவில்லை. அதிபர் ராஜபக்ச ஒரு நிர்வாகி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் ராணுவ வீரர். அவர் ஒரு புத்திசாலி. அவர் சீர்திருத்தங்களைச் செய்வார். வேறு பாதையில் செல்வார். வாழ்க்கையை மேம்படுத்துவார். மேலும் சரியானதைச் செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

Read more...

உங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர்! நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு!

30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமது பைகளை சுருட்டிக்கொண்டு எதிர்வரும் 30 ம் திகதிக்கு முன்னர் நாடு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த அரசாங்கத்தில் அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கம் காரணமாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களையே இவ்வாறு திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த தூதுவர்கள் தமது கடமைகளை சரியாக செய்தனரா என்பதை கண்டறிய விசாரணைகளை நடத்தவும் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தூதுவர்கள் நீக்கப்படுவதால், ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ராஜதந்திர விவகாரங்கள் சம்பந்தமாகவும் சர்வதேச தொடர்புகள் குறித்து அனுபவமிக்க நபர்கள் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனினும் தற்போது அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், ஜனாதிபதி மற்றும் அரசாங்கங்கள் மாறும் போது தூதுவர்களும் மாற்றப்படுவது இயல்பானது

Read more...

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக 70000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக 70,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.

70,957 குடும்பங்களைச் சேர்ந்த 35,906 பேர் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

இதற்கிடையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரத்திலும் பலத்த மழை பெய்யும்.

தீவின் பல இடங்களில் பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சபராகமுவ, மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகள். 75-100 மி.மீற்றரிற்கும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Read more...

ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு அடுத்து வருபவர் யார்?

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் மரணம் காரணமாக, 8 ஆவது பாராளுமன்றத்தில் டிசம்பர் 04 ஆம் திகதியிலிருந்து வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக திசாநாயக்க தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் பிரிவு 64 (1) ன் படி இந்த அறிவிப்பு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியாவுக்கு பாராளுமன்ற பொதுச்செயலாளர் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையகம் அடுத்த வேட்பாளர் குறித்த தகவல்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலிலிருந்து அடுத்து உள்ளவர் பற்றிய தகவலைத் திரட்டியுள்ளது. அதன் பின்னர் தேர்தல் ஆணையகம் குறித்த நபரின் பெயரை வர்த்தமானி மூலம் வெளியிடும்.

எதுஎவ்வாறாயினும், விருப்பு வாக்குக்கேற்ப 7 ஆவது இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிவித்திகல தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் அருணா லியனகேயின் பெயரே உள்ளது. அதனால் பெரும்பாலும் அவர் பாராளும்றத்திற்குத் தெரிவாவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

Read more...

தலைமைத்துவம் சரிவர இயங்கினால் நாட்டு மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்!

நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் கிடைத்தால், நாட்டு மக்களும் சேர்ந்து சிறப்பாகச் செயலாற்றுவார்கள் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற புடைவைக் கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது, மிளகு போன்ற பொருட்களை இந்நாட்டுக்குக் கொண்டுவந்து மீண்டும் மீள்ஏற்றுமதி செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அதனால்தான் தேசிய மிளகு உற்பத்தியார்களின் மிளகின் விலை அடிமட்டத்திற்குச் சென்றுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நேற்று மிளகு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்தோம் எனக் கூறியது மட்டுந்தான் 40 ரூபாவிலிருந்த மிளகின் விலை 800 ரூபாவாக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தலைமைத்துவம் சரிவரக் கிடைத்தால், இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களும் உசார் நிலையில் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது எனவும் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

Read more...

Friday, December 6, 2019

மைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற அப்பட்டமான குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.

அவரது ஆட்சியில் 19 திருத்தச் சட்டத்தினூடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களை இயங்கு நிலைக்கு கொண்டுவந்து அரச இயந்திரம் சுயாதீனமாக இயங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறான சில நற்காரியங்கள் இடம்பெற்றபோதும் மைத்திரிபால தனது குடும்ப அங்கத்தவர்களை முக்கியமான அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமித்து பெரும் ஊதியத்தை வழங்கிவந்தார் என்பதும் மறைக்கமுடியாத உண்மையாகும்.

அந்தவகையில் தனது சகோதரன் குமாரசிங்க சிறிசேனவை ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். குமாரசிங்கவிற்கு மாதமொன்றுக்கு 20 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தொலைத்தொடர்புடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடனான உறவு மற்றும் ஒப்பந்தங்கள் ஊடாக அவர் மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபாய்களை உழைத்துவருதாக தகவல்கள் உண்டு.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கான சம்பளத்தை இரண்டரை லட்சம் வரை குறைக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது. அதேநேரம் மைத்திரிபாலவிற்கு அவரது சகோதரனை அப்பதவியிலிருந்து தூக்கமாட்டோம் என மஹிந்த ராஜபக்ச உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் அதன் காரணமாக அவரை அப்பதவியிலிருந்து தூக்குவது தொடர்பில் நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்க கோத்தபாயவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குழுவிற்கு சங்கடமேற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

பிரிகேடியர் பிரயங்க பெர்ணாண்டோ குற்றவாளி என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது பிரித்தானிய நீதிமன்று..

புலம்பெயர் தமிழர்களை கழுத்து அறுப்பதாக சைகை மூலம் எச்சரிக்கை விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ பொதுச் சட்டத்தை மீறிய குற்றவாளியாக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் இனங்காணப்பட்டுள்ளார்.

பொதுச் சட்டத்தை மீறிய குற்றத்தில் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட நிலையில், அவருக்கு பிரிட்டன் உச்சநீதிமன்றம் 2400 பவுண்கள் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.

இலங்கையின் ராஜதந்திரியும் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பான அதிமான பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் விசேட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இலங்கையின் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் புலம்பெயர் தமிழர்கள் கணடனப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை பார்த்து உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பதவி நிலை அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ கழுத்தை அறுப்பது போல் சைகையை காண்பித்திருந்தார்.

இந்த செயல் காணொளியாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களிலும், சமூகவலைத் தளங்களிலும் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரிகேடியரின் இந்த செய்கையால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்த போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவோ அவரது சார்பில் சட்டத்தரணிகளோ முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இந்த பிடியாணை இலங்கை அரசின் கடும் அழுத்தங்கள் மற்றும் இராஜதந்திர முயற்சியினால் பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையீட்டின் பின்னர் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் இந்த செயல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர பணிக்கு உட்பட்டது அல்ல என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதற்கமைய, குறித்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம்; தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொதுச் சட்டத்தை மீறிய குற்றத்தில் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட நிலையில், அவருக்கு பிரிட்டன் உச்சநீதிமன்றம் 2400 பவுண்கள் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது..

Read more...

புதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா

கடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் ஜனாதிபதியாக தெரிவானதை அடுத்து பல வரவேற்கத்தக்க மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தினார். இதனை யாராலும் மறுக்கு முடியாது.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்று சில தினங்கள் கடந்த நிலையில் நவம்பர் 26ஆம் திகதி இலங்கையின் செய்தி இணையத்தளமான நியூஸ்ஹப் இணையத்தளத்தில் பொலிஸார் தீடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது பொலிஸார் நியூஸ்ஹப் ஊடக நிறுவனத்தில் உள்ள சகல சேர்வர்கள், மடிக்கணனிகள், கணனிகள் என அனைத்தையும் சோதனையிட்டனர்.

எவ்வாறாயினும் குறித்த சோதனைக்கு வந்த பொலிஸார் நியூஸ்ஹப் ஊடக நிறுவனத்தினால் புதிய ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்தே இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

எனினும் சோதனைக்கு வந்த பொலிஸார் குறித்த நிறுவனத்தில் அவ்வாறான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை என்பதனை உறுதி செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

மேலும் நியூஸ்ஹப் அலுவலகத்தை சோதனையிடுவதற்கான தாங்கள் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்து பொலிஸார் காண்பித்த ஆவணத்தில் 12 டிசம்பர் 2018 என்ற திகதி காணப்பட்டது, அந்த ஆவணம் ஒரு வருடத்திற்கு முன்னர் காலாவதியாகிவிட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பிலும் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் சர்வதேச ஊடகமான அல்ஜசீரா இன்று (06) செய்தி வெளியிட்டிருந்தது.

அல்ஜசீராவின் Charles Stratford இது தொடர்பில் கொழும்பில் இருந்து அறிக்கையிட்டிருந்தார்.

இதேபோன்று TheLeader.lk என்ற செய்தி இணையத்தளத்தின் youtube இற்கு பொறுப்பாகவுள்ள சஞ்சய் தனுஷ்க என்பவர் 26 ம் திகதி சி.ஐ.டியினரால் விசாரணை செய்யப்பட்டதுடன், Voicetube.lk என்ற செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் துசார விதாரன 28 ம் திகதி சி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவரிடம் 2 மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வாரங்கள் மாத்திரம் கடந்த நிலையில் தேடுதல்கள், விசாரணைகள், அச்சுறுத்தல்களை தாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்ற இலங்கை பத்திரிகையாளர்களின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு (Reporters Without Borders) தெரிவித்திருந்தது.

Read more...

பரீட்சை மண்டபத்திற்கு படகில் சென்ற மாணவர்கள்

தற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாக கிளிநொச்சியின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை தோற்றிவரும் மாணவர்கள் சில பகுதிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலையினை சுற்றி வெள்ளம் காணப்படுவதனாலும் இராணுவனத்தினரால் படகு மூலம் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டுள்ளனர்



Read more...

கிளிநொச்சியில் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியது. 7762 பேர் பாதிப்பு,மீப்பு பணியில் இராணுவத்தினர்

கிளிநொச்சியில் நேற்றிரவு( வியாழன்) முதல் இன்று (வெள்ளி) காலை வரை பெய்த கனமழைக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்க்கியுள்ளன.

வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது மக்களை நேற்றிரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர். அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சில பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான இடங்களிலும் படையினர் படகுகள் மூலம் மாணவர்களை பரீட்வை மண்டபங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் 320 குடும்பங்கள் 16 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


இதில் கரைச்சி பிரதேசத்தில் 120 குடும்பங்களும், பளையில் ஒரு குமும்பமும், கண்டாவளையில் 189 குடும்பங்களும், பூநகரியில் 10 என நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

அத்தோடு கரைச்சி பிரதேசத்தில் 567 குடும்பங்களும், பளையில் 169 குமும்பங்களும், கண்டாவளையில் 1635 குடும்பங்களும், பூநகரியில் 33 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதனை தவிர பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின்பிரதான குளமான இரணைமடு குளத்திற்கு நீர்வரவு அதிகமாக காணப்பட்டமையினால் 31 அடியாக நீர் மட்டம் காணப்பட்ட போது குளத்தின்இரண்டு வான் கதவுகள் ஆறு இஞ்சி அளவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சிறிய குளங்களும் நிரம்பி வான் பாய்கின்றன.

Read more...

ஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களைப்பை சேர்ந்த ஹக்கீம் மொஹமட் றிப்கான் என்ற சந்தேக நபருடன் சேர்த்து 03 பேர் கட்டுநாயக்க சீதுவ பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஹக்கீம் தவிர மற்றவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதோடு ஹக்கீம் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 02 வருடங்களுக்கு முன் சவூதி அரேபியாவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் சீதுவையில் தங்கியிருந்த காலத்தில் மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட நிதி உதவியில் வசித்து வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பிரபல அரசியல் கட்சியிலுள்ள அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடனும் தொடர்பு வைத்திருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

Thursday, December 5, 2019

இன்று க.பொ.த (சா.த) பரீட்சை எழுதினார் ரஞ்சன்... அரசியலிலிருந்து ஒதுங்கப்போகிறாரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணப் பரீட்சை எழுதினார்.

இன்று அவர் ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றியதாகக் குறிப்பிட்ட அவர், சட்டக்கல்லூரிக்காக சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தி அவசியம் என்பதால் தான் இன்று பரீட்சை எழுதியதாகக் குறிப்பிட்டார்.

சென்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உ.த பரீட்சைக்கும் அவர் தோற்றியிருந்தார்.

தனது ஒரே இலக்கு சட்டக்கல்லூரியில் சேர்ந்து, சட்ட வல்லுநராக மாறுவதே எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றுவதற்கு தேசிய கல்வியியற் கல்லூரிகள் அனைத்தையும் பல்கலைக்கழகங்களாக உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்மொழிந்த பிரேரணைக்கு ஏற்பவே அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செயற்படுத்துவதற்குத் தேவையான கல்வியியல் மற்றும் சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காகவும் கல்வி மற்றும் உயர் கல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி ஆசிரியர்களின் தொழில்சார் தகைமையை முன்னேற்றும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைய அமைச்சரவைத் தீர்மானம் பற்றி அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

பா.உ. விஜித் விஜயமுனியை கட்சியிலிருந்து நீக்கியது ஸ்ரீசுக!

பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சாவைக் கட்சியிலிருந்து நீக்கியதாகக் கூறி தேர்தல்கள் ஆணையகத்திற்கு மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்று (05) கடிதம் அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்டது.

இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸியைக் கட்சியிலிருந்து நீக்கியதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல்கள் ஆணையகத்திற்குஅறிவித்திருந்தது. ஏனைய கட்சிகளுடன் தொடர்புவைத்திருந்ததாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திசாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமைகளை அடுத்தவாரம் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அடுத்த வாரம் கூட்டமொன்றைக் கூடவுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். அக்கூட்டத்தில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 35 பேருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிடுகின்றார்.

Read more...

ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி தன்னை விசாரிக்குமாறு றிசாட் கோரிக்கை

வில்பத்து சரணாலயம் மற்றும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரான தன்னை இலக்கு வைத்து, பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் செயற்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து சரணாலயத்தை அழித்தமை, முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தியமை, பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்தமை என்பன தம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை என ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்புள்ளது என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடத்தியதோடு, பொலிஸ் விசாரணையின் போது தான் நிரபராதி என அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலைமையில், மீண்டும் இந்த விடயம் தொடர்பில் பேசி, நாட்டில் பேதங்களை உருவாக்குவதன் மூலம் நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த அவர்கள் முயற்சிப்பதாக ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Read more...

சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி அறிவித்தல்

தஞ்சாவூரிலுள்ள சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.இந்த அறிவித்தலை சசிகலாவின் வீட்டு சுவரில் ஒட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

10,500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு அமைந்துள்ளது.மிகவும் பழுதடைந்த , எந்நேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் காணப்படும் இந்த வீட்டை இடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் இந்த அறிவித்தலை அமுல்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை சுவிஸ் தூதரகம் சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளது

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம் தனது சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளதாக இலங்கையில் உள்ள தனது நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளது.

தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் எழுந்த நெருக்கடி காரணமாக சுவிஸ் தூதரகம் மேற்படி நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும், சேவைகளை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து நேரத்தை பெற்றுக்கொள்ளுமாறும் சுவிஸ் தூதரகம் கோரியுள்ளது..

இதேவேளை கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்காது நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என இலங்கை அரசும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Read more...

மாலைதீவு வெளிவிவகார அமைச்சரும், பிரதமரும் சந்திப்பு

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று (05) சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் ரசாக், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் மற்றும் ஆலோசகரான அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்துகொண்டனர்..

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் நேற்று (04) இரவு இலங்கையை வந்தடைந்தார்.

Read more...

அமெரிக்க தூதுவருக்கும் சம்மந்தனுக்கும் இடையே சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்

அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார் எனத் தெரிவித்த சம்மந்தன் அவர்கள் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் உரையாடியதாகவும் தெரிவித்தார்

மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் என தான் தெரிவித்ததாகவும். மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் தூதுவரிடம் எடுத்துக் கூறியதாகவும் சம்மந்தன் அவர்கள் தெரிவித்தார்

Read more...

அநுராதபுரம் சிறையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டகளப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தண்டனை பெற்றவர்கள் என்பதோடு, தண்டனைக் காலம் நிறைவுறும் முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்ட்டவர்கள் அனைவரும் தங்களின் மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில் தினமும் கையெழுத்து இடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி ஏழு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு இதுவரை இவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலையும் விடுவிக்க என்பதோடு, ஆரவாரமின்றி விடுதலை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலின்போதே ஜனாதிபதிஇவ்வாறு தெரிவித்தார்.

இங்கு விசாரணை ஆணைக்குழுவின் பொறுப்புக்கள் யாதென தெளிவுறுத்திய ஆணைக்குழுவின் தலைவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஜானக த சில்வா, இதுவரை நடாத்தப்பட்ட விசாரணைகளின் சாரம்சத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கையளித்தார். தாக்குதல் நடாத்துவதற்கு முன்னர் அதுபற்றிய தகவல்களைத் தெரிந்திருந்தும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் போலியான ஆவணங்களைத் தயாரித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

தாக்குதலின் அடிப்படை எதுவென்பதைத் தெரிந்துகொண்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும். பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களின் தேவைப்பாடும் அதுவே. பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது பாதுகாப்புச் சபை தொடர்ந்தேர்ச்சியாகக் கூடியது. புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் பாதுகாப்புத் தொடர்பில் தொடர்ந்தேர்ச்சியாகக் கலந்தாலோசித்தோம். பாதுகாப்புக்குக் குந்தகமாக இருக்கின்ற செய்தி ஒன்று கிடைத்தவுடனேயே தேவையான முன்னெடுப்புக்களை எடுத்தோம். வெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைப்பதற்காக வருகைதந்த 160 பேச்சாளர்களையும் திருப்பியனுப்பினோம்.

சென்ற அரசாங்கக் காலத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருந்தார்கள்.. அதனால் புலனாய்வுத்துறை சரிவர இயங்க முடியவில்லை. அதன் பிரதிபலிப்பாய் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கியது. அதனை நிறுத்துவதற்கு இயலாமற் போனது. தாக்குதல் தொடர்பில் அனைத்துத் தகவல்களையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறாதிருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும். புலனாய்வுப் பிரிவு சரிவர இயங்காமைக்குக் காரணகர்த்தாக்கள் யார் என்பது பற்றியும் ஆராய வேண்டும். இதற்காக ஆணைக்குழுவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வேன்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் நீதியமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளிவ். எம்.எம். அதிகாரி ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

Read more...

எதிர்கட்சித் தலைவராக சஜித்!

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிறேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்ட சஜித் பிறேமதாஸ தொடர்பாக கட்சியினுள் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியிருந்த நிலையில் இன்று கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஒன்று கூடலின்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சஜித் பிறேமதாஸவை எதிர்கட்சி தலைவராக நியமிப்பதற்கு கட்சியினுள் பலத்த எதிர்ப்பு இருந்துவந்தபோதும் அவர் அப்பதவி கிடைக்காவிடின் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக மிரட்டிவந்ததன் விளைவாக இத்தீர்மானத்திற்கு அனைவரும் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இலங்கையில் பலமானதோர் அரசு அமைந்துள்ள நிலையில் அதற்கு முகம்கொடுக்ககூடிய எதிர்கட்சி ஒன்று அவசியமானதாகும். ஆனால் அதற்கான தலைமைத்துவத்தை சஜித் பிறேமதாஸவால் வழங்கமுடியுமா என்பது கேள்விக்குரியதாகும்..

Read more...

Wednesday, December 4, 2019

மைத்திரியின் பாராளுமன்றக் கனவு பொய்யாகின்றது! பா.தேர்தலில் போட்டியிடுவாராம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிற்பார் எனக் கூறப்படுவது பொய் என்றும் அவர் அவ்வாறு பாராளுமன்றிற்கு வர மாட்டார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிட்டார்.,BR/>
ஆயினும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பது கட்சிக்குப் பலம் சேர்ப்பது எனவும், ஊழல் அற்ற தலைவர் ஒருவர் கடமையாற்றுவார் எனவும் செயலளார் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றிலிருந்து கேட்டு விலகவேண்டும் என்று கூட்டணியைச் சேர்ந்த பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், யாரும் அவ்வாறு விலகுவதற்கு விரும்பாததும் குறிப்பிடத்தக்கது.

Read more...

ஏப்ரல் இறுதியில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் ?

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் கட்சித் செயலாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. அந்தவகையில் மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 25 தொடக்கம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

எனவே இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் தற்போது அரசியல் கட்சிகள் ஈடுப்படத் தொடங்கியுள்ளன. அவ்வாறு அடுத்த வருடம் மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கோட்டாபாயவை கொலை செய்ய சதி? ஐந்து சந்தேக நபர்கள் கைது

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதன்கான அனுமதியை இன்று மாலை வழங்கினார். அதன்படி வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந்து தடுப்பில் வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

கடந்த திங்களன்று கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொருப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர் இந்திக தலைமையிலான குழுவினர், சீதுவை - ஜயவர்தனபுர , அமந்தொழுவை பகுதியில் வாடகையில் பெற்ற வீட்டடில் தங்கியிருந்த ஐவரைக் கைது செய்தனர்.

வாழச்சேனை , கிளிநொச்சி- அக்காரயன்குளம் , விஷ்வமடு - தர்மபுரம் விஷ்வமடு - கல்லாரு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களில் மேலதிக விசாரணையின் பின்னர் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பழைய முறையில் மாகாண சபை தேர்தல் கட்சிகள் இணக்கம்

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடாத்துவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள். தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியளவில் நடாத்த கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின், குறித்த தினத்தில் பாராளுமன்ற தேர்தலை நடாத்த கூடிய வாய்ப்பு காணப்படுவதாக இந்த கலந்துரையாடலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாக மனோ கணேசன் தெரிவித்தார்.

Read more...

இன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...! சஜித்

தோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார் எனத் தெரியவருகின்றது.

அவர் பெரும்பாலும் பதுளை மாவட்டத்தைத் தேர்ந்தெடுப்பார் என அவருடன் தொடர்புடைய நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பதுளை மாவட்டத்தின்ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஹரின் பிரனாந்து பொதுத்தேர்தலில் அம்மாவட்டத்தைக் கைவிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. அவர் கம்பஹா மாவட்டத்திலிருந்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத் தலைவராகவுள்ள ஜோன் அமரதுங்க அரசியலிலிருந்து ஒதுங்கவுள்ளதனால், ஹரீன் பிரனாந்து கம்பஹா மாவட்டத்திலிருந்து போட்டியிடத் தயாராகவுள்ளார்.

Read more...

இனி பொதுஜன முன்னணி கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடும்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கட்சிகளும் இனி கதிரைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

கோட்டையில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் பொதுத்தேர்தலில் விரிவான ஒரு கூட்டணியாக நின்று போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பிலான நிபந்தனை அதில் உள்ளடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எனக்கூறுபவர்கள் இந்த ஒப்பந்தம் பற்றிச் சரியாகத் தெரியாதவர்களே... வேறு தனிப்பட்ட ஆசைகளுடன் இருப்பவர்களே எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பல்வேறு தகவல்களை வெளியிடுவதை நிறுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையினால் ஒப்பந்தத்தின் உடன்பாடு பற்றி தகவல் வெளியிடப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

Read more...

கிழக்கிற்கும் வடமத்திய மாகாணத்திற்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்!

புதிதாக இரு ஆளநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுராதா யஹம்பத் என்பவரும், வட மத்திய மாகாணத்தின் ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் ஆளுநர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

Read more...

கட்சித் தலைமையை தராவிட்டால் புதிய கட்சி என மிரட்டும் சஜித், நாளை முதல் சகல விகாரைகளுக்கும் செல்ல முடிவு.

சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அடுத்த பொது தேர்தலில் UNP யை வழிநடத்த பூரண அதிகாரங்கள் கிடைக்கப்பெறாவிடின் UNP யில் இருந்து நீங்கி வேறு கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு சஜித் தரப்பின் தலைவர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இந்த நாட்களில் புதிய கட்சியில் பொது தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் தயார்படுத்தல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு பிரதான காரணம் UNP தலைவர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக மக்களிடம் உள்ள அதிருப்தியே என சஜித் தரப்பு தெரிவித்துள்ளது.

இறுதியில் அதற்காக இழப்பீடு வழங்க வேண்டியிருப்பது சஜித் பிரேமதாசவுக்கு என அவர்கள் வாதிடுகின்றனர். இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க, சஜித் பிரேமதாசவுக்கு UNPயின் முழு தலைமை வழங்கப்பட வேண்டும், அல்லது சஜித் UNPயை விட்டு வெளியேறி புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்ந்தும் UNPயுடன் தங்கியிருப்பதனால் அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு பாதகமான நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு சஜித் தரப்பின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இதன் பிரகாரம் சஜித் பிரேமதாஸ, நாளை வியாழக்கிழமை முதல் தனது புதுவித அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளுக்கும் நாளை மறுதினம் முதல் விஜயம் செய்யவும் சஜித் பிரேமதாஸ தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து சஜித் பிரேமதாஸ அரசியலைத் தொடர்வதற்காக ஓய்வெடுத்திருந்தார் என்றும், பொதுத் தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில் தேர்தலுக்காக பலவித முடிவுகளை எடுத்திருப்பதால் மீண்டும் புதுவிதப் பயணமொன்றை ஆரம்பிக்கின்றார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சஜித் அணி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

பௌத்த மக்கள் மத்தியில் வீழ்ந்துள்ள செல்வாக்கினை தூக்கி நிறுத்துவதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

அர்ஜூன மகேந்திரணை கைது செய்யுமாறு கோரி சிங்கப்பூர் சட்ட மா திணைக்களத்திற்கு ஆவணங்கள் அனுபியுள்ளார்களாம்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்காக அவரை ஒப்படைப்பதற்கான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தெரிவித்துள்ளது.

குறித்த ஆவணங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணை மற்றும் முறிகள் விற்பனையில் 10.058 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இலங்கை அரசியலிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுச்சொத்து சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதுதவிர, பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன மகேந்திரன், அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பலிசேன உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக இந்த வழக்கு இன்றைய தினம் முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிய மேலதிக சொலிசிடர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க, சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கும், அவரை நாட்டிற்கு அழைத்துவருவதற்கும் ஏதுவான ஆவணங்கள் சிங்கப்பூர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதோடு அந்த ஆவணங்களை ஆராயும் பணிகளை அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரியப்படுத்தினார்.

இதேவேளை இந்த வழக்கில் 10ஆவது சந்தேக நபரான அஜஹான் கார்திய புஞ்சிஹேவா சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அவரை அழைப்பதற்கான நோட்டிசை விடுக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கு அமைய நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோன்று வழக்கில் 06ஆவது சந்தேக நபரான ஜெப்ரி அலோசியஸ் 25 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கும் ஒருமாதகாலத்திற்கு சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் இன்றைய தினம் அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆண்டு செப்டம்பரில் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைப்பதற்கான 21,000 பக்க ஆவணத்தில் கையெழுத்திட்டார், இது சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஊடாக சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைக்க அனுப்பப்பட்டது.

எனினும் அவ்வாறான எந்த ஆவணமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறியிருந்தது.

இருப்பினும் இந்த ஆவணங்கள் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கப்பட்டதை அடுத்து, இலங்கையின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அத்திணைக்களம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

Tuesday, December 3, 2019

ஈஸ்டர் தாக்குதல்: 10 பொலிஸ் அதிகாரிகள் மீது பாய்கிறது விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 10 பொலிஸ் அதிகாரிகள் மீது விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி ஸ்ரீலங்காவிலுள்ள பிரதான தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளினால் ஏற்கனவே இந்த தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தகுந்த தடுப்புநடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இன்றுவரை விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

ஏற்கனவே பிணைகோரி மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போதிலும், அதற்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மனுத்தாக்கல் செய்ததினால் பிணை கோரிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.

குற்றவியல் சட்டக்கோவையின் 296ஆவது பிரிவின் கீழ் இவர்கள் குற்றமிழைத்திருப்பதாக மேல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் முற்பகல் குறித்த இருவரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணையின்போது மேலும் 10 சந்தேக நபர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை செய்யவேண்டியுள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் தொடர்ந்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் கோரியது.

அதற்கமைய அவர்களை டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more...

புதிய கட்சியில் போட்டியிடத் தயாராகின்றாராம் சஜித்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக, சஜித் பிரேமதாச நட்பு வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தலைவர் பதவி கிடைக்காது விட்டால், வேறொரு கட்சியிலிருந்து போட்டியிடுவதற்குரிய ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டி இழுபறியாக இருந்தால், தங்கள் கட்சிக்கு தோல்வி என்பது அவர்களது கருதுகோளாக உள்ளது.

இந்த இழுபறி காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியைத் தழுவ நேரிட்டது, தொடர்ந்தும் அவ்வாறு தோல்வியைச் சந்திக்காமலிருப்பதே அவர்களது கருத்தாக உள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com