Friday, October 4, 2019

இன்று நள்ளிரவுடன் "கேஸ்" விலை சரிகிறது....

சமையல் எரிவாயு கொல்கலன் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு (04) டன் குறைப்பது கைத்தொழில் மற்று வணிக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கேற்ப, 12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலையை ரூபா 240 இனால் குறைக்கவுள்ளதுடன், 5 கிலோ கிராம் எரிவாயுவின் விலையை ரூபா 95 இனாலும், 2.3 எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை ரூபா 30 இனாலும் குறைப்பதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

விலைத் திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1493.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ரூபா 598 ஆவதுடன், 2.3 சிலிண்டரின் புதிய விலை 289 ரூபாவாகும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த விலை மாற்றம் தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் எரிவாயுவின் விலையைக் கூட்டி விற்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இதற்குப் பொறுப்பான அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் நுகர்வோர் தொடர்பான அதிகார சபைக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

கோட்டாவின் வெற்றியில் களிப்புக் கொள்ளும் அண்ணன் மகிந்த!

கோத்தபாய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பிலான கோதபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பான மனுவின் முடிவு அறிவிக்கப்பட்டதும், எதிர்க்கட்சி அலுவலகத்திலிருந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதற்கிடையில், மனுவின் முடிவு அறிவிக்கப்பட்டதும் நாடு முழுவதும் மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.

மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவின் குடியுரிமையை இடைநிறுத்தக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றம் தாக்கல் செய்த மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை நிறுத்திவைக்கப்பட வேண்டும் எனக் கோரிய மனு உடனே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்த முடிவினைத் தெரிவித்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமைக்கான ஆவணங்கள் சட்டரீதியானவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க இலங்கையின் நீதிமன்று கோத்தபாய ராஜபக்சவை மாத்திரமல்ல நாட்டு மக்கள் அனைவரையும் விடுவித்துள்ளது என்று தெரிவித்தார். அத்துடன் இந்நாட்டில் சுயாதீனமானதோர் நீதித்துறை இயங்குகின்றது எனத் தெரிவித்த அவர் நீதிமன்றில் நீதிக்காக திறமையாக வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்கள் குழாத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார்.

Read more...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் நாளை!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படவுள்ள முறைமை பற்றிய இறுதித் தீர்மானம் நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவிருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் - பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read more...

ஏழாம் திகதி 17 ஆயிரம் பொலீஸார் பாதுகாப்பு கடமையில்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 7 ஆம் திகதி அன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலக பகுதியில் பாதுகாப்பிற்காக சுமார் 1,700 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமாக ருவான் குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அன்றைய தினம் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்..

வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தில் ஊர்வலம் முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்காக தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஆதரவாளர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு இதற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸாரை கொண்ட குழுவொன்று தேர்தல் அலுவலகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இதன் பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் பீரீஸ், பொலிஸ் அத்தியகட்சகர் ஒஷான் ஏவவித்தாரண ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினத்தன்று அதாவது எதிர்வரும் திங்கட் கிழமை விஷேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

தேர்தலில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது குறித்த தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நோக்குடன், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் அந்த கூட்டமைப்பின் செயலாளர் சுமித் விஜேசிங்க, சமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், நாடாளுமன்ற சபாநாயகராக கடமையாற்றிய அவர், தற்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவராக விளங்குகின்ற அவர், தற்போது நாட்டில் காணப்படுகின்ற பரபரப்பு சூழ்நிலைக்கு மத்தியிலேயே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Read more...

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூபா 450 கோடி ரூபா தேவை - மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூபா 450 கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட வேண்டியுள்ளதாக இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்று (04) இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதோடு, அதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை, ஒக்டோபர் 07 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடைகிறது.

இன்றைய தினம் (04) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இம்முறை ஜனாதிபதி தேர்தல் 2018ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுக்கேற்ப நடத்தப்படவுள்ளதோடு, ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் (15,992,096) இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.​

ஜனாதிபதித் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் என இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

13 ஆயிரத்திற்குக் குறையாத வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூபா 450 கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவானோர் கட்டுப்பணம் செலுத்திய சந்தர்ப்பம் இதுவென, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Read more...

கோட்டாபயவுக்கு எதிரான குடியுரிமை மனு தள்ளுபடி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று காலை 9.30 மணியளவில் மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குடியுரிமை சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு இரட்டை குடியுரிமை வழக்கும் அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கே காணப்படுவதாக தெரிவித்தார்.

எனினும், 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படாத நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு கீழ் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இரட்டை குடியுரிமை வழங்கும் போது குடியுரிமை சட்டத்திற்கு அமைய குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு எவ்வித பணிகளும் வழங்கப்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

பிரதிவாதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் போலியானவை என மனுதாரர்கள் நீதிமன்றில் தெரிவித்திருந்தாலும், அவை முழுவதுமாக உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நிதிமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்த நீதிபதிகள் குழாம் மனு தொடர்பாக சகல தரப்பினரும் தங்களது ஆவணங்களை இன்று (04) பிற்பகல் 3.15 க்கு முன்னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவித்திருந்ததது.

மேலும், குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று (04) மாலை 6 மணிக்கு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு குறித்த மனுவை ஏகமனதாக நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டிருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடியுரிமை தொடர்பான முறையான சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் காரணமாக குறித்த பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த பத்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வௌியிடுமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Read more...

Thursday, October 3, 2019

சிறிதரனுக்காக சுற்றுநிரூபத்தை மீறும் பூநகரி பிரதேச செயலர். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட செயலர்?

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜெயபுரம் கிராம அலுவலர் தேவன்குள பகுதியில் உள்ள வயல்காணியானது 1983ம் ஆண்டு ஜூலை க்கலவரத்தில் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து ஜெயபுரத்தில் குடியேறிய தலா ஒரு ஏக்கர் வீதம் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

வனவள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த குறித்த காணியில் பயனாளிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாதநிலை தோன்றியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைய குறித்த காணியை விடுவிப்பதற்கான களப்பரிசோதனை நாளை வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் தலைமையில இடம் பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனால் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கைநெட் அறிகின்றது.

தேர்தல்கள் ஆணையாளரின் 2017.12.04 ம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூன்றாம் பந்தி கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகின்றது.

3. வைபவங்கள், நடமாடும் சேவைகள் மற்றும் வர்த்தகக் கண்காட்சிகள் :

(i) வைபவங்கள் :


தேர்தல் காலப்பகுதிக்குள் அரச நிதியைப் பயன்படுத்தி நடாத்தப்படுகின்ற பல்வேறு விதத்திலான அடிக்கல் நாட்டுதல்கள், திறந்து வைப்புக்கள், மக்கள் உரிமைக் கையளிப்புக்கள் போன்ற வைபவங்களை அரசியல்வாதிகளின் பங்களிப்போடு மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் தேர்தலோடு தொடர்புடைய பல்வேறு கருததுக்கள் அவர்களினால் வெளிப்படுத்தப்படுவதனாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் விழாக் கோலத்தோடு, ;அவை நடாத்தப்படுவதூடாகவும் ஏதேனும் ஒரு கட்சி/ குழு அல்லது வேட்பாளர் ஊக்குவிப்போ அல்லது கட்சிக்கு/ குழுவுக்குஃ வேட்பாளருக்கோ பாதிப்பு நிகழக்கூடுமாதலால், இத்தேர்தல் காலப்பகுதிக்குள் அத்தகைய வைபவஙகள் மற்றும் பணிகளை ஒழுங்கமைப்பதையும் நடாத்துவதையும் தவிர்த்துகொள்ளல் வேண்டும் . தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட முன்னர் நாள் குறிக்கப்பட்ட அத்தகைய வைபவங்களை இரத்துச் செய்யவோ ஒத்திவைக்கவோ முடியாதவிடத்து, அத்தகைய வைபவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிக்கையிட்டு அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். தேர்தல் ஏதேனுமொரு விதத்தில் அரசநிதியைச செலவிட்டு இத்தகைய வைபவங்கள் நடாத்தப்படின் அத்தகைய சந்தர்ப்பமொன்றில் கட்சிகள் / குழுக்கள் / வேட்பாளர்கள் ஊக்குவிப்பு அல்லது பாதிப்பை ஏற்படுத்துமாயின், அது தொடர்பாக வைபவத்தை ஒழுஙகமைத்த அலுவலர்கள் வகைகூறுதல் வேண்டும் . அத்தோடு, தேர்தல் காலப்பகுதிக்குள் நடாத்தப்படுகின்ற இத்தகைய வைபவங்கள் தொடர்பாக அவதானித்து அறிக்கைகளைப் பேணுவதற்காக உரிய மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களை முன்கூட்டியே அறிவ{ட்ட இப்பணிகளை ஒழுங்கமைக்கின்ற அலுவலர்கள் நடவடிககையெடுத்தல் வேண்டும் . இத்தகைய வைபவமொன்றில் கட்சிஃ குழுஃ வேட்பாளர் ஊக் குவிப்புக் காகவோ, ;பாதிபபுற செய்வதற் காகவோ எவ்விதத்திலான கூற்றுக்களையும் வெளியிடல் , செயற்பாடுகளை மேற்கொள்ளல் ,;கொடிகள்/ பதாகைகள்/ சுவரொட்டிகள்ஃ பிரசுரங்கள்/ அறிவித்தல்களைக் காட்சிப்படுத்தல் அல்லதுபகிர்ந்தளித்தல் முற்றிலும் தடையென்பதோடு, அத்தகைய பணிகளை தவிர்ப்பது உரிய வைபவங்களை ஒழுங்கமைக்கின்ற அல்லது நிதியளிப்பு மேற்கொள்கின்ற அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரின் கடமையாகும்.

நாளை இடம்பெறவுள்ள நிகழ்வில் சிறிதரன் கலந்து கொள்வது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி சுற்று நிருபத்தை மீறும் செயற்பாடாகும். எனவே நாளை குறித்த நிகழ்வில் சிறிதரன் கலந்து கொண்டால் சுற்று நிரூபத்தை மீறியமைக்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புவதுடன் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தேர்தல்கள் ஆணையகத்திற்கு முறையிட மக்கள் தயாராகி வருகின்றார்கள் எனபதையும் தெரியப்படுத்துகின்றது.

அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக செயற்படும் அரச ஊழியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும்வரை இந்நாட்டில் ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியாது என்பது யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும்.

Read more...

காமினிகளே யாழ் நூலகத்தை எரித்தார்கள். போட்டுடைக்கின்றார் அனுரகுமார

யாழ் நூலகத்தை காமினிகளே எரித்தார்கள் என்றும் அதற்காக அவர்கள் தெற்கிலிருந்து ஒரு ரயில் நிறைய காடையர்களை இந்த பூமிக்கு அழைத்துவந்தார்கள் என்றும் ஜேவிபியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவ்வாறு செயற்பட்ட காமினிகள் யார் என்றும் குறிப்பிட்டார். காமினி திஸாநாயக்க , காமினி ஜயவிக்கரம பெரேரா ஆகியோரே அந்த விடயத்திற்கு தலைமை தாங்கியதாகவும் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், இன்றும் இங்குள்ள மக்கள் நூல் நிலையங்களுள் நுழையும்போது பாதணிகளை கழட்டி விட்டு உள்ளே நுழைவதை அவதானிக்கின்றேன். இவ்வாறு வாசித்தலுக்கு கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த சமூகத்திற்கு அரசியல்வாதிகள் என்ன செய்துள்ளார்கள்?

1981 இல் அபிவிருத்தி சபை தேர்தலில்போது அவர்களது பலத்தை வெளிக்காட்டாத ஒரு துளிநிலம் கூட இந்த மண்ணில் இருக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் நினைத்தனர். யாழ் தேவி ரயில் தெற்கிலிருந்து காடையர்களை நிரப்பி கொண்டுவந்தனர். இதை செய்தவர்கள் காமினி ஜெயவிக்கிரம பெரேராவும் காமினி திஸாநாயக்கவும். யாழ்பாணத்தின் சில வாக்கு பெட்டிகள் பன்னலை பொலிஸ் நிலையத்தில் நிரப்பப்பட்டது.

எனவே யாழ் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்பப்போவது கல்வியின் ஊடாகவே. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கல்வி விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவோம்.

இனவாதத்தை பரப்பும் எந்த அரசியல்வாதியின் பிள்ளைகளும் யுத்தத்தில் உயிரிழக்கவில்லை
முதலாவது தேவை இனவாதத்தை புறக்கணிப்பதாகும். எந்தவொரு இவாதத்திற்கும் நாம் இடமளிக்க கூடாது. இனவாதம் ஒரு அரசியலாகி விட்டது. அது ஒரு யுத்தத்தை உருவாக்கியது.

இந்த முப்பது வருட யுத்தத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, பிரதிநிதித்துவப்படுத்துவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா?

வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டியது யார்? அரசியல்வாதிகள். ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது யார், வடக்கிலும் தெற்கிலுமுள்ள சாதாரண மக்கள்தான். அதனால் மீண்டும் இனவாதத்திற்கோ, அடிப்படை வாதத்திற்கோ நாம் சந்தர்ப்பத்தை வழங்க மாட்டோம் என்றார்.

Read more...

பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தனது ஆட்களை வைத்து அடிக்கப்போவதாக மிரட்டுகின்றான் சிறிதரன்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை தனது ஆட்களை கொண்டு அடிக்கப் போவதாக பூநகரி பிரதேச செயலாளரிடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் தனது முகநூலில் ஊடகங்களில் வரும் செய்திகளை பதிவேற்றி வருகின்றார். குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது அவர் அதிக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார். அதிலும் பாராளுமன்ற உறுப்பினனர் சி. சிறிதரன் அவர்களின் முறைகேடான நடவடிக்கைகளை ஆதாரத்துடன் தனது முகநூலில் எழுதி வருகின்றார்கள். இதனால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தான் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்றும், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்போவதாகவும், அத்தோடு தனது பொடியல் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அவர்களை இவரை அடிப்பார்கள் என்றும் நேற்று(02) பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இவ் எச்சரிக்கை தொடர்பில் பூநகரி பிரதேச செயகலத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர்கள் மேலதிகாரிகளிடமும் கோரியுள்ளனர்.

சிறிதரனின் மேற்படி மிரட்டலுக்கு பதிலளித்த பிரதேச செயலாளர், அரச ஊழியர்களுக்கு கடமை நேரம் தவிர்ந்த நேரங்களில் அரசியலில் ஈடுபடுவதற்கான பூரண உரிமை உண்டு என்றும் அவர்களது அவ்வுரிமையை எவரும் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளதுடன், அவர் கடமையில் இருக்கும்போது அவரது பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறுவேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் அவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிதரனை எச்சரித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ளது

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனை அச்சிடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டார்.

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

திங்களன்று கொழும்பு பாடசாலைகளுக்கு விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பிரிவுகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், ஶ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (07) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு அன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை, கொழும்பு கல்வி வலயத்திலுள்ள கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு பிரிவுகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திலுள்ள ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி, ஹேவாவிதாரண மகா வித்தியாலயம், ஹேவாவிதாரண மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

வௌிநாடு செல்ல கோட்டாபயவிற்கு அனுமதி

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வௌிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவர் வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

கடந்த வழக்கு தினத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது கட்சிக்காரர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட திர்மானித்துள்ளதால் அதனுடன் தொடர்புடைய வேட்புமனு தாக்கலின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக தற்போது நீதிமன்ற பொறுப்பில் உள்ள அவரின் வௌிநாட்டு கடவுச் சீட்டை விடுவிக்குமாறு கோரியிருந்தார்.

அதேபோல், தனது கட்சிக்காரர் அண்மையில் சிங்கப்பூரில் இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி அதனுடன் தொடர்புடைய வைத்திய பரிசோதனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை வௌிநாடு செல்ல வேண்டியுள்ளதாக கடந்த வழக்கு தினத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்காக தற்போது நீதிமன்ற பொறுப்பில் உள்ள அவரின் வௌிநாட்டு கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயண தடையை குறித்த காலப்பகுதிகளில் நீக்குமாறும் உத்தரவிடுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலிப பீரிஸ், கோட்டாபயவின் குறித்த கோரிக்கைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பிரதிவாதிக்கு குறித்த காலப்பகுதியினுள் வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படுவதாக உத்தரவிட்ட மூவரடங்கிய நிதிபதிகள் குழாம், இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டது.

அதேபோல், நீதிமன்ற பொறுப்பில் உள்ள அவரது வௌிநாட்டு கடவுச்சீட்டை விடுவிக்குமாறும், அவர் வௌிநாடு சென்று நாடு திரும்பியதும் நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குழாம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Read more...

பலாலி விமான நிலையம் யாழ். சர்வதேச விமான நிலையமாக மாற்றம்

பலாலி விமான நிலையமானது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமன சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விமான நிலையமாக இருந்து வந்த பலாலி விமான நிலையமானது, பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தலைமையின்கீழ் இதற்கான அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டது.

இவ்விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 10ஆம் திகதியளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ். சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராக உத்தியோகபூர்வமாக திறப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின்சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீடு (ICAO CODE) VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீடு (IATA) JAF ஆகும். இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், அதன் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீடு VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீடு BTC என்பதாகும்.

கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீடு VCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீடு RML ஆகும்.

இவ்வாறு பெயரிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே அவையாகும்

Read more...

நிதி மோசடியில் ஈடுப்பட்ட சிறிதரனின் சகா கைது செய்யப்பட்டு பொலீஸ் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசு கட்சியின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான பசுபதிபிள்ளையின் பெறாமகனும் சிறிதரனின் சகாவுமான கிளிநொச்சி சந்தை காப்பாளர் நந்தன் என்பவர் இரண்டு இலட்சத்து 28 ரூபா சந்தை வியாபாரிகளைின் பணத்தை மோசடி செய்த குற்றச் சாட்டியில் கிளிநொச்சி பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த ஊழியர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் குறித்த மோசடியை மூடி மறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுப்பட்டுள்ளார் என பிரதேச சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த மோசடியில் ஈடுப்பட்ட பணியாளருக்கு எதிராக கரைச்சி பிரதேச சபையின் செயலாளரினால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அப் பணியாளர் கைது செய்யப்பட்டு பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுப்பட்ட பணியாளர் அரசியவாதி ஒருவரின் நெருங்கிய உறவினராவார். எனவும் கரைச்சி பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் குறித்த பணியாளர் சந்தை வியாபாரிகளிடம் பெற்ற நில வாடகை, விற்பனை வரி, உள்ளிட்ட நிதியினையே மோசடி செய்துள்ளார். இரண்டு இலட்சத்து 28 ஆயிரம் ரூபா நிதியை மோசடி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிதி மோசடி தொடர்பாக கரைச்சி பிரதேச சபை நிர்வாக ரீதியான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு, பொலீஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

கோத்தாவுக்கு எதிராக மனு அளித்தவரின் துகிலுரியப்படுகிறது!

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படும் அரசியல் பகடைக்காயாக மாறியுள்ளார் என அவரின் சகோதரரான இந்திரநாத் தேநுவர இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

"பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர தற்போது செய்துள்ள காரியத்தை இதற்குச் சில நாட்களுக்கு முன்னர்
செய்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் அவர் நான் துதிபாடும் வீரராக இருந்திருப்பார். இறுதியாக அவர் செய்துள்ள செயல் தார்மீகமான செயல் அன்று.

ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு போட்டியாகும். எதிர் தரப்பின் கால்களை உடைப்பதற்கு இடமளிக்க இயலாது.

போட்டியிட்டுத்தான் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றிபெறுவோரே உண்மையான வீரர்கள்."

Read more...

ஜனாதிபதி தேர்தல் அரசியல் யாப்புக்கு முரணானதாம். தடைசெய்யக்கோரி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருட பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 5 வருடங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான வேட்புமனுத்தாக்கல் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்காக 7 ஆம் திகதி நடைபெறவுள்ள வேட்புமனு தாக்கலை இடைநிறுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

குருகந்த தேரரின் இறுதிக் கிரியைகளை நடாத்தியோரைக் கைதுசெய்யக் கோருகிறார் சம்பந்தன்!

முல்லைத்தீவு குருகந்த விகாரையின் விகாராதிபதி இறுதிக் கிரியைகளை நடாத்தியோரைக் கைதுசெய்யுமாறு தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் கடமையிலிருந்தும் சரிவரத் தங்கள் கடமையை நிறைவேற்றவில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத விடுதலைப் புலிகளின் தலைவர்களை பிரசித்தமான முறையில் நினைவுகூர்ந்து, சட்டத்தைத் தகர்த்தெறிந்துள்ளதாக வடக்கிலிருந்து கிடைக்கப்பெற்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் குறிப்பிடுகின்றன. அண்மையில் வடக்கில் தீலிபன் எனும் புலி இராணுவ வீரரின் நினைவுகூர்தல் நிகழ்வும் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக பொலிஸாரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.

Read more...

ஜனாதிபதி வேட்பாளர்கள் வராமல் கதவை இழுத்து மூடுகிறார் மெல்கம் ரஞ்சித்

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தன்னைச் சந்தித்து உரையாட வருவதற்கு விருப்புத் தெரிவித்துள்ளமையை, கார்டினல் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் எந்தவித ஆய்வுகளும் ஒழுங்காக நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டு, அதற்காகத் தான் எந்தவாெரு வேட்பாளருடனும் கதைக்கத் தயாராக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் .ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களினால் வந்த அழைப்புக்களை கார்டினல் நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா கத்தோலிக்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ஜூட் கிரிஷாந்த கார்டினலிடம் தேர்தல் தொடர்பில் கருத்தினைக் கேட்டபோதே, அவர் அவ்வாறு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் காலப்பிரிவில் நாடளாவிய ரீதியில் கிறித்தவப் பள்ளிகளுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கார்டினல் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். அதற்கேற்ப, ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரிடம் கார்டினலின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு ஆவன செய்யுமாறு கோரியுள்ளார்.

Read more...

Wednesday, October 2, 2019

மகள் கற்பிக்கும் பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து பாலில் துஷ்பிரயோகம் செய்த 58 வயது வாப்பா!

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை(2) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைதானார்.

இதன் போது குறித்த வழக்கு தொடர்பில் நீதிவான் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் தவணையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபரது வயது அவரது உடல்நலன் தொடர்பாக எடுத்து கூறி பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவிகளின் வீடு திரும்பிய வேளை சந்தேக நபரான கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன் இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.இந்நிலையில் சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதன் போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றிருந்தார்.

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். இதனை அடுத்த தேடிய பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்திருந்தனர்.

இதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியைய பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு அமைப்போ பெண்களுக்கான உரிமை காப்பகமோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பாறுக் ஷிஹான்













Read more...

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யமாட்டோம் - மைதிரி

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயராகவில்லை, ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரங்களை செய்ய மாட்டோம் என சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதி நிலைப்பாட்டின் பின்னர் சஜித்தின் வேண்டுகோளுக்கு பதில் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்த நிலையில் தேசிய அரசாங்கம் குறித்த பல விடயங்களை கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அலகியவன்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கடந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மூலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தின் பிரகாரம் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது

Read more...

லெப்டினனட் கொமாண்டராக யோஷித ராஜபக்ஷ,

கடற்படையின் லெப்டினனட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்தாக கடற்படை தெரிவித்துள்ளது.

அவருடன் பணிபுரிந்தவர்கள் லெப்டினனட் கொமாண்டர்களாக நிரந்தரமாக பதவியுயர்த்தப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்..

எதிர்காலத்தில் குறித்த பதவிக்கு தேவையான அடிப்படை தகுதிகளை நிறைவுசெய்த பின்னர், நிலையான லெப்டினனட் கொமாண்டராக பதவியுயர்த்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஜனாதிபதியானால் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவாராம்! - சஜித் பிரேமதாச

தான் ஜனாதிபதியானால் தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை நாட்டின் வறுமையை நீக்க வழங்குவேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

கொழும்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று (02) நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

"இந்நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர், ஜனாதிபதியாக தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளையும் இந்நாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக நன்கொடையாக வழங்கி ஒரு வலிமையான பொது வாழ்வை அனைத்து மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தார்.

பொதுமக்களின் துன்பங்களை நன்கு அறிந்த அவர்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்வினை ஆட்சியாளர்கள் வாழ்வதாக தெரிவித்த அவர், அனைத்து தரப்பினருக்கும் ஒரு முன்னுதாரணமான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான அதாவுத செனவிரத்ன, முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

Read more...

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 1.30 மணி வரையில் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குடிவரவு மற்றும் குடியகழ்வு பணிப்பாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அரசாங்க பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள குடியுரிமை சான்றிதல் சட்டத்தின் முன் செல்லுபடியற்ற ஆவணம் என தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தின் 19 ஆவது சரத்தின் அடிப்படையில் குடியுரிமை சான்றிதலை வழங்கும் அதிகாரம் விடயப்பொறுப்பான அமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை சான்னிறதல் விடயப் பொறுப்பு அமைச்சரினால் வழங்கப்படாது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது சட்டவிஶோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த வழக்கு நாளை மதியம் 1.30 மணியளவில் ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது.

Read more...

பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்படும் ஊழியர்கள் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக கணிக்கப்படும் - ரயில்வே பொது முகாமையாளர்

சுகயீன விடுமுறையென அறிவித்து சேவைக்கு சமூகமளிக்காத ரயில் சாரதிகள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக கணிக்கப்படும் என, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 07 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றன.

பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையிலேயே ரயில்வே திணைக்களத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சவேந்திர சில்வாவை தளபதியாக நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கு விசேட பாராட்டு தெரிவிக்கும் சங்க நாயக்கர்கள்.

இலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமைக்காக வடமத்திய மாகாணத்தின் சங்க நாயக்க மற்றும் அனுராதபுர லங்காரமயத்தின் விஹாராதிபதி மதிப்புக்குரிய ரிலபனவே தம்மஜோதி நாயக்க தேரர் தனது விசேட நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 70 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டபோது தனது நன்றியை வெளிப்படுத்திய அவர் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய இராணுவ தளபதியாக பதவியேற்றதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மிகவும் புத்திசாலித்தனமான அதிகாரியும் மற்றும் ஒரு துணிச்சலான இராணுவ வீரர் என்ற வகையில், நீங்கள் நியூயார்க்கில் வெளிநாட்டில் தங்கியிருந்த போதும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குரல் எழுப்பினீர்கள், நியூயார்க் அமர்வுகள் மற்றும் சர்வதேச மன்றங்களில் கலந்துகொண்ட போது இராணுவத்தை பாதுகாத்தீர்கள். இராணுவத் தளபதியாக இந்த புதிய நியமனத்திற்கு நீங்கள் தகுதியானவர், அது தேசத்தின் எதிர்பார்ப்பாகும். இராணுவத்தின் இந்த உயர்ந்த பதவிக்கு அச்சமின்றி உங்களை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாங்கள் நன்றிகளை தெரிவிக்கின்றோம். நாட்டின் விருப்பம் வௌ;வேறு அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது என்று மதிப்புக்குரிய ' தம்மஜோதி தேரர் அவர்கள் உரையாற்றும்போது சுட்டிக் காட்டினார். .

தேசத்துக்கான உங்கள் தியாகங்களை முழு நாடும் அறிந்திருக்கிறது, மக்களுக்கு உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் அதிகபட்சமாக செய்வீர்கள் என்று நம்புகிறார்கள். 'இலங்கைக்கு எதிரான புலம்பெயர்ந்தோரால் நீங்கள் எவ்வாறு சூழப்பட்டீர்கள் மற்றும் அச்சுறுத்தப்பட்டீர்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. நீங்கள் நாட்டிற்கு ஆதரவாக நின்றீர்கள், வேறு யார் அவ்வாறு செய்தார்கள்? உங்கள் நியமனம் அந்த முக்கியமான காலகட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு பரிசு. கடவுள் அனுப்பிய தூதர்களாகிய நீங்கள் அனைவரும் எங்கள் தேசத்தை காப்பாற்றினீர்கள். எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் கீழ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவிக்கு உங்களைத் தேர்ந்தெடுத்தார், இதற்காக நாங்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம். என்று நாயக்க தேரர் கருத்து தெரிவித்தார்.

'ஒரு போர்க்களத்தில் அனுபவமுள்ள ஒரு இராணுவ வீரராக நீங்கள் பதுங்கு குழிகளுக்குள் அவதிப்பட்டு, இந்த நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்காக காடுகளில் தூக்கமில்லாத இரவுகளை கழித்தீர்கள். கொடிய பயங்கரவாத யுத்தத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தீர்கள் என்று தேரர் நினைவு கூர்ந்தார்.

'1985 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் இங்கு புகுந்து நூற்றுக்கணக்கான தியானிக்கும் அப்பாவி ஆண்களையும் பெண்களையும் தங்கள் தவறுக்காகக் கொன்ற போது இந்த புனித வளாகம் ஒரு இரத்தக் கொதிப்பாக மாறியது. துட்டுகைமுனு மன்னனின் மரபு வாழ்கிறது, நீங்கள் அனைவரும் அந்த பத்து மகத்தான இராட்சதர்களான 'தசமஹா யோதயோ' வம்சாவழியினர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அனைவரும் இந்த கொடிய யுத்தத்தை வென்றது இதுதான், ' மேலும் தேரர் அவர்கள் கூறினார்.

ஜெயஸ்ரீ மகா போதி வளாகத்தில் இராணுவ ஆண்டு விழாவை நினைவுகூரும் சமய சடங்கு நிகழ்வில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்க ளின் ஆத்மா சாந்தியடையும் முகமாக விஷேட பூஜைகளும் இந்த தேரர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.


Read more...

பெசில் - மைத்திரி சந்திப்பு தீர்மானமின்றி முடிவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்று பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் மாற்றுக் கருத்துக்களுக்குக் காரணமாக உள்ள மொட்டு இலச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவுக்குமிடையே விசேட சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியையும், பெசில் ராஜபக்ஷவையும் தவிர வேறு எந்தவொரு நபரும் அச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது.

தாமரை மொட்டுத் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும், கடைசியில் எந்தவொரு தீர்மானமும் இன்றி இருவரும் சென்றதாகவும் மேலும் தெரியவருகின்றது.

Read more...

Tuesday, October 1, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்வதற்காக அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வோம்! - ஸ்ரீபொஜபெ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குறிப்பிடுகின்றது. இரு சாராருக்குமிடையே இலச்சினை தொடர்பில் மேலெழுந்துள்ள பிணக்குத் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையகத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர்கள் அவரிடம் இலச்சினையில் மாற்றம் ஏற்படுமான எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளிக்கும்போது, "அது பேச்சு வார்த்தையில் நிகழ வேண்டியதொரு விடயம்". நாட்டைப் பாதுகாப்பதற்காகச் செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களுக்கும் நாங்கள் கைகொடுக்கத் தயாராகவுள்ளோம்" என பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

தொடர்ந்து குறுக்கிட்டு ஊடகவியலர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன கூட்டுச் சேர்ந்தால் இலச்சினையில் மாற்றம் ஏற்படும்தானே எனக் கேட்டார்.

அதற்குப் பதலளிக்கும்போது,

"இல்லை... இனி முடியா காரியங்களும் இல்லையே. எங்களால் இயலுமான காரியங்கைள நாங்கள் செய்வோம்" எனக் குறிப்பிட்டார்.

Read more...

இரண்டாவது விருப்பு வாக்கினை அநுரவுக்கு வழங்குமாறு கோருகிறார் ஜயம்பதி!

பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன, தான் தேசிய அமைப்பாளராகப் பணிபுரியும் ஐக்கிய இடதுசாரி முன்னணியிலிருந்து விலகி, அநுரகுமார திசாநாயக்காவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

ஐக்கிய இடதுசாரி முன்னணி என்றழைக்கப்படும் மாற்றுக் குழுவின் மத்திய செயற்குழு ஒன்றுகூடி, அந்த முடிவினை எடுத்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கேற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடுகின்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவரின் வெற்றிக்காக முழு மூச்சுடன் செயற்படுவது பற்றி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது விருப்பு வாக்கினை அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்குமாறு பொதுமக்களைத் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது விருப்பு வாக்கினை கோத்தபாயவுக்கு வழங்காமல் பலம்பொருந்தி வேட்பாளரான அநுரவுக்கு வழங்குவதற்கு ஆவன செய்யுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Read more...

அவுஸ்திரேலிய பிரதமரிடம் உதவி கோரிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் (Scott Morrison) டொபர்ட் முல்லர் தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவி கோரியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டொபர்ட் முல்லரின் விசாரணைகளை மதிப்பிழக்கச் செய்யும் ஆதாரங்களை கண்டறிய உதவுமாறு ட்ரம்ப், ஸ்கொட் மொரிசனிடம் கோரியுள்ளதாக அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உதவுவதற்கு ஸ்கொட் மொரிசன் இணக்கம் தெரிவித்ததாகவும் அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.

மற்றுமொரு வௌிநாட்டுத் தலைவருடனான தொலைபேசி அழைப்பு குறித்து ட்ரம்புக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இந்தத் தகவலும் வௌியாகியுள்ளது.

Read more...

கோட்டாவிற்கு எதிரான மற்றுமொரு வழக்கு 14 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையை இடைநீக்கி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (01) எல்.டீ.பீ.தெஹிதெனிய, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மனு விசாரணையை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்தனர்.

அதன்படி, கொழும்பு விசேட நீதாய நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையை இடைநீக்கி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரையில் நீடிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கை விசாரணை செய்வதற்கு நிரந்தர நீதாய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு அந்த நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு நிராகரிக்கப்பட்டமை சட்ட விரோதமானது என தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனுவை தங்களுக்கு விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரித்திருந்தது.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோட்டாபய ராஜபக்ஷவினால் விஷேட மேன்முறையீட்டு மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா முன்வைத்தவற்றை கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழு குறித்த மனுவை விசாரணை செய்ய அனுமதி வழங்கியிருந்தனர்.

Read more...

கடந்த காலங்களில் விட்ட தவறை இம் முறையும் விடமுடியாது - பா.டெனிஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் விட்ட தவறை இம் முறையும் விட முடியாது எனவும் முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றோம் என்று கூறிய போது எமது தமிழ் மக்களும் அவர்களுக்கே வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினோம். இம் முறையும் நாம் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளிக்காவிட்டால் எமக்கு தேவையற்ற ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிடுவார்.

கடந்த காலங்களில் நாங்கள் பல தவறுகள் இழைத்திருக்கின்றோம். ஏன் என்றால் கடந்த காலத்தில் நாங்கள் வாக்களித்தவர்கள் வந்தால் எங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டும் எமது பல வருட தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அர்த்தம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் மக்கள் அனைவரும் வாக்களித்தோம். ஆனால் அவை நடந்தனவா என்றால் அவை கேள்வி குறியாகவே உள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம், விடுவிக்கப்பட்டாத தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி தொடர்பான விடயங்கள், அரசியல் சீர்திருத்தம் இது தவிர அடிப்படை உரிமை எமது எதிர்கால சந்ததி கெளரவமாக வாழக்கூடிய சட்டங்களை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு ரீதியான உறுதி இவ்வாறான விடயங்களை வலியுறுத்தி கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் அவை அனைத்தும் தொடர்பாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்போ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடமோ எழுத்து மூலமான எதாவது உடன்படிக்கையை செய்திருக்கின்றார்களோ என்றால் அதுவும் கேள்வி குறியாகவே உள்ளது.

இம் முறை அதே தவறை விட முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் என நம்புகின்றேன் என்றார்.

Read more...

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி இயக்குபவரை திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CID இற்கு வந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் 200,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CID இற்கு வந்தபோது, கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவான் குணசேகர தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com