Monday, September 30, 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே! வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதித் தேர்தலில் மூவருக்குமேல் போட்டியிடும்போது ஒருவர் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்கட்கு 1,2, 3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது தெரிவுக்கு புள்ளடியும் ஏனையவற்றிற்கு இலக்கங்களும் இடலாம். ( x,2,3).

1,2,3 என இலக்கமிடவேண்டுமென ஒரு வழிகாட்டி மட்டும்தான் Third Shedule (ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம்) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்றுதான் வாக்களிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை.

அதேநேரம் பிரிவு 51(2) இன்படி ஒரு வாக்காளர் தாம் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்; என்ற எண்ணத்தை அவரது வாக்குச்சீட்டில் கீறப்பட்ட அடையாளம் பிரதிபலிக்கின்றது; என்று திருப்திகண்டால் அதனை ஏற்கவேண்டும். (ஆனாலும் 1,2,3 என எழுதுவது சிறந்தது.)

அதேபோல், விரும்பினால் ஒருவருக்கு மட்டும் வாக்களித்து விட்டு ஏனைய இலக்கங்களை விட்டுவிடலாம். அல்லது இருவருக்கும் வாக்களிக்கலாம். மூவருக்கும் வாக்களிக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. ( இவற்றைக் குறிப்பிடக் காரணம் பலர் பின்னூட்டம் மற்றும் inbox இல் இவ்வாறான கேள்விகளை நிறையவே கேட்கின்றார்கள்.)

ஒருவர் முதலாம் இலக்கத்தை எழுதாமல் அல்லது புள்ளடி இடாமல் 2 என்றோ அல்லது 3 என்றோ அல்லது 2,3 என்றோ எழுதினால் வாக்கு நிராகரிக்கப்படும். [பிரிவு 51(1)(e)(111)]

இதன்மூலம் புரிந்துகொள்வது முதலாவது வாக்கு மாத்திரமே வாக்காகும். ஏனையவை விருப்பத்தெரிவு வாக்குகளா? என்ற கேள்வியை எழுப்பினால் பதில் “ இல்லை” என்பதாகும். ஏனெனில் அவை நேரடியாக எண்ணப்படுவதில்லை. பதிலீடாகத்தான் எண்ணப்படுகின்றன.

அதாவது, பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற மூன்று விருப்பத் தெரிவு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இங்கு அவ்வாறு இல்லை. ஆனால் சிலநேரம் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக எண்ணப்படலாம்; விருப்பத் தெரிவு வாக்காக அல்ல.

சுருங்கக்கூறின் ஒவ்வருக்கும் முதலாவது தெரிவு மட்டுமே வாக்கு.

சிலநேரம் அவருடைய முதலாவது வாக்குக்குப் பதிலாக இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக மாறலாம். சுருங்கக்கூறின் ஒருவருக்கு முதலாவது தெரிவு, வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு இரண்டாவது தெரிவு, வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு மூன்றாவது தெரிவு, வாக்காக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் மூன்று தெரிவும் அல்லது இரண்டு தெரிவுகள் வாக்காக அமைய முடியாது. ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே

இது எவ்வாறு எனப்பார்ப்போம்.

வாக்கெண்ணும் முறை


முதலாவது சுற்றில் முதலாவது வாக்கு எண்ணப்படும். ஒருவர் 50% ஐத் தாண்டினால் அவர் ஜனாதிபதி. யாரும் 50% ஐத் தாண்டாதபோது இரண்டாம் சுற்று எண்ணிக்கை.

மூன்றாம் சுற்று எண்ணிக்கை என்ற ஒன்று இல்லை. சிலர் நினைக்கின்றார்கள்; இரண்டாம் சுற்றில் இரண்டாம் வாக்கு எண்ணப்பட்டு அதிலும் யாரும் 50% பெறாவிட்டால் மூன்றாவது சுற்றில் மூன்றாம் வாக்கு எண்ணப்படுமென்று. இது பிழையாகும்.

முதலாவது சுற்றில் முதலாம் வாக்கின் அடிப்படையில் ஒவ்வொருவரும் பெற்றவாக்குகள் கூட்டப்படுவதோடு அவர்களது வாக்குச் சீட்டுக்கள் வெவ்வேறாக கட்டப்படும்.

இப்பொழுது முதல் இரு வேட்பாளர்களைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

உதாரணமாக

A,B,C,D,E என்ற ஐந்து வேட்பாளர்களில் C,D,E போட்டியில் இருந்து நீக்கப்பட்டபின் மீண்டும் அவர்களது கட்டப்பட்ட வாக்குள் அவிழ்க்கப்பட்டு அவற்றில் A அல்லது B இற்கு இரண்டாவது வாக்குகளை யாரும் வழங்கியிருந்தால் அவை A அல்லது B யின் வாக்குகளோடு கூட்டப்படுவதுடன் அந்த வாக்குச் சீட்டுக்களும் A அல்லது B யின் வாக்குச் சீட்டுகளுடன் கட்டப்படும்.

அதன்பின் C,D,E யின் எஞ்சிய வாக்குகளில் A அல்லது B யிற்கு யாராவது தமது மூன்றாவது வாக்கை அளித்திருந்திருந்தால் மேற்கூறியதுபோன்று அவையும் கூட்டப்பட்டு உரியவரின் வாக்குகளுடன் கட்டப்படும். ( அதாவது இவர்கள் தமது இரண்டாவது வாக்கை C,D,E ஆகியோருக்குள் தாம் முதலாவது வாக்கை வழங்காத ஒருவருக்கு கொடுத்திருப்பார்கள். அது பிரயோசனமற்ற வாக்கு).

இப்பொழுது யார் அதிகூடிய வாக்குப் பெற்றிருக்கின்றாரோ அவரே வெற்றியாளர்.

எனவே, 50% என்ற ஒன்று அவசியமில்லை. முதலாவது சுற்றில் 50% இற்கு மேல் பெற்றிருந்தால் அதன்பின் இரண்டாம் மூன்றாம் வாக்குகளை எண்ணவேண்டுமென்ற அவசியமில்லை. காரணம் ஏனைய அனைவருமே அடுத்தவருக்கு தமது இரண்டாம் அல்லது மூன்றாம் வாக்கை அளித்திருந்தாலும் அவை 50% ஐத் தாண்டமுடியாது.

இதன் யதார்த்தத்தைப் பாருங்கள்.

நாம் அளிக்கின்ற முதலாவது வாக்கைப் பொறுத்தவரை பிரதான இரு வேட்பாளரை விடுத்து ஏனைய வேட்பாளர்கட்கு அளிக்கின்ற வாக்கிற்கு எந்தப் பெறுமதியுமில்லை. பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு அளித்தால் ஒன்றில் ஒருவர் தெரிவுசெய்யப்படுவது தடுக்கப்படலாம். அடுத்தவர் தெரிவுசெய்யப்பட அது உதவலாம்.

இப்பொழுது இரண்டாம் வாக்கிற்கு வருவோம்.

Aயும் Bயும் பிரதான வேட்பாளர்களெனில் அவர்களிலொருவருக்கு முதலாம் வாக்கை இடுபவர் அவரது ஏனைய இரு வாக்குகளையும் யாருக்கு அளித்தாலும் அதற்கு எதுவித பெறுமதியும் இல்லை. அவை எண்ணப்படப் போவதுமல்லை. இவரைப் பொறுத்தவரை இவரது முதலாவது தெரிவு மட்டுமே வாக்காகும். ஏனெனில் அவரது வாக்குச்சீட்டு அவர் வாக்களித்த பிரதான வேட்பாளருக்குரிய வாக்குச்சீட்டாக கட்டிவைக்கப்படும். இரண்டாம் சுற்றில் அது அவிழ்க்கப்படவே மாட்டாது.

இப்பொழுது இவர் 1,2,3 என மூவருக்கு இலக்கமிட்டிருந்தாலும் இவரது வாக்கு ஒன்றே. சிலர் நமக்கு மூன்று வாக்குகள் இருப்பதால் இம்முறை யாரும் 50% பெறாத சூழ்நிலையில் ஏனைய வாக்குகளையும் பாவிக்கவேண்டுமென்று முகநூல்களில் கூறுகின்றார்களே! அது சரியா? என சிந்தியுங்கள்.

எனவே, பிரதான வேட்பாளர் இருவரில் ஒருவருக்கு வாக்களிப்பவர்களைப் பொறுத்தவரை முதலாவது வாக்கு மட்டும்தான் வாக்காகும். ஏனைய வாக்குகளைப் பாவிப்பதால் பாதிப்புமில்லை; நன்மையுமில்லை.

பிரதான வேட்பாளர்களல்லாதவர்க்கு ( C,D,E) வாக்களிக்கும்போது:

இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற முதலாவது வாக்கினால் எதுவித பிரயோசனமுமில்லை இத்தேர்தலைப் பொறுத்தவரை. ஆனால் இவர்கள் ( உதாரணமாக முஸ்லிம்கள்) எமது கட்சிக்கு இவ்வளவுதூரம் வாக்களித்தார்கள் என்ற நன்றிக்கடன் சிலவேளை இருக்கலாம். அதேநேரம் அதிகரித்த அந்த வாக்கைக் காட்டி பொதுத்தேர்தலில் தனது வாக்கு வங்கியை மேலும் அதிகரிக்க அவர்கள் முற்படலாம்.

மறுபுறம் நாம் யாரின் தெரிவை தவிர்க்க நினைக்கின்றோமோ அவருக்கெதிராக அடுத்த பிரதான வேட்பாளரின் வாக்கை அதிகரிக்க அவ்வாக்குப் பாவிக்கப்படாமல் போகிறது. அதன்மூலம் நாம் விரும்பாத வேட்பாளரின் வெற்றிக்கு உதவுகின்றோம்.

இந்தப்பாதிப்பை இந்த இரண்டாவது வாக்கு ஈடு செய்யும்.

அதாவது உதிரி வேட்பாளர்கட்கு நாம் அளித்த முதலாவது வாக்கு பிரயோசனமற்றுப்போக இப்பொழுது இரண்டாவது வாக்கை நமது வாக்காகப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது வாக்கு

நாம் A தோற்கடிக்கபடவேண்டுமென விரும்புகிறோமெனில் முதலாவது வாக்கை உதிரி வேட்பாளர்களுக்கு அளித்தருந்தால் எமது 2வது வாக்கை கட்டாயம் Bயிற்கு அளித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டால் முதலாவது வாக்கை உதிரிகளுக்கு அளித்ததன்மூலம் Bயின் வாக்குகள் கூடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமை Aயின் வெற்றிக்கு உதவுவதாக அமையும்.

B யிற்கு அளிக்கப்படும் இரண்டாவது வாக்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாத நிலையிலேயே உதவும்; என்பதையும் கவனத்திற்கொள்வோம்.

இப்பொழுது முதலாவது சுற்றிலேயே நாம் தோற்கடிக்க விரும்பும் A, 50% பெற்றுவிட்டார்; எனக்கொள்வோம். நாம் B யிற்கு முதலாவது வாக்கை அளித்திருந்தாலும் A யின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. நமது வாக்குகள் இல்லாமலேயே அவர் 50% பெற்றுவிட்டார்.

இங்கு எழும் பிரச்சினை இரண்டு: ஒன்று அவருடைய எந்த இனவாதத்திற்காக நாம் அவரைத் தோற்கடிக்க நினைத்தோமோ அந்த இனவாதத்தில் அவர் இன்னும் மூர்க்கத் தனமாக இருப்பார். ஏனெனில் அவருக்கு வாக்களித்தவர்கள் அவரது இனவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். எனவே, அவர்களைத் திருப்திப்படுத்த நம்மீது இனவாதக் கணைகள் வீசப்படும். மறுபுறம் அவருக்கு வாக்களிக்கவில்லை; என்கின்ற அவரது வெஞ்சினம் நம்மீது தீயாகக்கொட்டும்.

இப்பொழுது சிந்தியுங்கள், நாம் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது; எனத் தீர்மானிக்கின்ற நேரம் வந்துவிட்டதா? இன்னும் வேட்புமனு கையளிக்கப்படவில்லை. மக்களின் சரியான உணர்வை அறிய இன்னும் நேரமிருக்கிறது. இந்நிலையில் விடியமுன்னே தீர்மானம் எடுத்து முகநூல்களில் பட்டிமன்றம் நடாத்தும் சகோதரர்களே சிந்தியுங்கள்.

இரண்டு, சிறுபான்மை இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம்; என்ற எண்ணப்பாடு பொதுவாக பெரும்பான்மை சமூகத்திடம் உறுதிபெறும். விளைவு எதிர்காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் இனவாதத்தைக் கையிலெடுக்கத் தொடங்குவார்கள்.

அதன்பின், ஒரு ஜனநாயக நாட்டில் அரசு என்பது “ மக்களால் மக்களுக்காக செய்யப்படும் மக்களாட்சி “ என்பது மாறி “ பெரும்பான்மை சமூகத்தால் பெரும்பான்மை சமூகத்திற்காக செய்யப்படும் பெரும்பான்மை சமூக ஆட்சி” என்ற பதம் நிலைபெறும்; என்பதையும் அதன் விளைவுகளையும் கவனத்திற்கொள்க. நாம் எந்த நாட்டிற்கு சென்று வாழ்வது என்பதையும் சிந்திக்குக.

மூன்றாவது வாக்கு:


நீங்கள் முதலாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் ஏனைய இரு வாக்குகளை யாருக்கு இலக்கமிட்டாலும் பெறுமதியில்லை. உங்கள் வாக்கு ஒன்றே!

முதலாவது வாக்கை உதிரிகளுக்கு இட்டால் இரண்டாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் அதுதான் உங்கள் வாக்கு. ஏனையவை வெறும் இலக்கங்களே! எனவே, மூன்றாவது வாக்கை யாருக்கு அளித்தாலும் பிரயோசனம் இல்லை.

முதல் இரு வாக்குகளையும் உதிரிகளுக்கு அளித்தவர்கள் மூன்றாவது வாக்கை ஒரு பிரதான வேட்பாளருக்கு அளித்தால் அதற்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாதபோது பெறுமானமிருக்கும். அதுதான் உங்களது வாக்காகும்.

எனவே, ஒருவருக்கு வாக்கு ஒன்றே. மாறாக மூன்று என்றால் வாக்காளர்கள் ஒரு கோடி அறுபது லட்சமென்றால் வாக்குகள் நான்கு கோடி எண்பது லட்சமாக வேண்டும். அவ்வாறு இல்லை.

பாராளுமன்றத் தேர்தலிலும் கட்சிக்கு அளிப்பது மாத்திரமே வாக்கு. ஆனாலும் விருப்பத் தெரிவு வாக்குகள் மூன்று. அந்த மூன்றையும் அங்கு மூவரைத் தெரிவுசெய்யப் பாவிக்கலாம்.

இங்கு வாக்கும் ஒன்று. தெரிவுசெய்வதும் ஒருவரையே!

இதனை ஒரு கிராமிய, பாமரப்பாணியில் கூறுவதாக இருந்தால், நாம் முதலாவது வாக்கை ஒருவருக்கு அளித்துவிட்டுக் கூறுகின்றோம்; இவர் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் எனது முதலாவது வாக்குத் ‘துப்பல்’; எனது இரண்டாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.

அடுத்ததாக கூறுகின்றோம்; அவரும் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் அதுவும் ‘ துப்பல்’ மூன்றாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.

எனவே, சிந்தித்து யார் குறைந்த பாதிப்பானவர், யாரை நாம் எவ்வளவு ஒன்று பட்டாலும் தோற்கடிக்கவே முடியாது; ( அவ்வாறான ஒரு சூழ்நிலை இருந்தால்) என்பவற்றைக் கவனத்திற்கொண்டு உங்கள் வாக்குகளின் பெறுமதி உணர்ந்து செயற்படுங்கள்.

உங்கள் புரியாமை, அறியாமை, மேலெழுந்த வாரியான சிந்தனை இந்த சமூகத்திற்கு தீங்காக மாறிவிடவேண்டாம். இறைவன் நமக்கு சரியான வழியைக் காட்டட்டும்.

Read more...

பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எச்சரிக்கை

சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்காவிட்டால் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவாக தீர்வொன்றை காணவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த வாரம் அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரன்ஜித் மத்தும பண்டார, வஜிர அபேவர்த்தன, ராஜித்த சேனாரத்ன மற்றும் ராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த சம்பள முரண்பாட்டுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது.

அதனால் எமது சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை பெற்றுக்ககொடுக்க தவறினால் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருக்கின்றோம்.நோயாளர்களின் நலனை கருத்தில்கொண்டே இதுவரை காலமும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்து வருகின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவல்களை பொது மக்கள் வழங்க முடியும்

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்களை கொழும்பு -7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்-5, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கமுடியும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவல்களை அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பிக்கும் அடிப்படை நடவடிக்கையாக பொது மக்களிடம் தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளது. கிடைக்கப்பெறும் தகவல்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட விருப்தாகவும் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட விருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 21 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சனத் டி சில்வா இதன் தலைவராக செயற்படுகிறார்.

Read more...

மகிந்த ராஜபக்ஸவின் வாக்குறுதியையடுத்து விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

சம்பள பிரச்சினை உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து விஷேட தேவையுடைய மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் கடந்த 20 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கிடைத்த வாக்குறுதிக்கு அமைய குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியவர்கள் இன்று போராட்டம் நடக்கும் இடத்திற்கு வருகை தந்ததாக இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அணியின் தலைவர் யூ.டீ.வசந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகளை நாளை (01) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு வழக்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணங்களை தீர்க்கும் விதமான முடிவுடன் திரும்பி வருவதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் அவ்விடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இராணுத்தினரின் அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதனால் நம்பிக்கையுடன் இவ்விடத்தில் இருந்து செல்லுமாறு தெரிவித்த அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த விஷேட தேவையுடைய இராணுவ வீரருக்கு இளநீர் வழங்கி இருந்தார்.

எதிர்க்கட்சி தலைவரின் வாக்குறுதியை அடுத்து விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்

Read more...

அமைதிகாக்கும் படையில் இனி இலங்கைக்கு அனுமதியில்லை ஐநா?

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் இனிமேல் இடம்பெறமாட்டார்கள் என்று ஐ. நா. அமைப்பு இதுவரை அதிகாரபூர்வமான அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 70 ஆண்டு நிறைவு கடந்த சனிக்கிழமை கண்டியில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றியபோதே இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.

வெளிநாட்டு ஊடக முகவர் நிலையமொன்று வெளியிட்ட செய்தியொன்றில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இருந்து இலங்கை இராணுவத்தினரை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டதையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலேயே இராணுவத் தளபதி மேற்கூறியவாறு கண்டியில் வைத்து கடந்த சனிக்கிழமை கூறியுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் வேலை நிறுத்தங்களின்போது அவசர சேவைகளை மேற்கொள்வதில் உதவுவதற்கு இராணுவம் தயாராக உள்ளதாகவும் இராணுவ தளபதி அங்கு கூறினார். எனினும் எவ்வாறான உத்தரவுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Read more...

பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக சஜித் அறிவிக்க வேண்டுமாம்.

சஜித் பிறேமதாஸ தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நியமிப்பேன் என தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல்பிரச்சாரங்களின்போது நாட்டின் பாதுபாப்புக்கு முக்கிய இடம்வழங்குவது தொடர்பாக பேசப்படும் என்றும் பாதுகாப்பு தொடர்பாக சஜித் பிறேமதாஸவிற்கு அறிவு அனுபவம் கிடையாது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்றும் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பு விடயங்களில் பூரண அறிவைக்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என மக்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களின்போது உறுதிமொழி அளிக்கப்படவேண்டும் என சஜித்திடம் கோரப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழு சந்தித்தபோதே இந்த முன்மொழிவு வைக்கப்பட்டபோதும், கட்சியினுள் சிலர் அதற்கு எதிர்ப்பு காட்டியதாகவும் அறியமுடிகின்றது.

சஜித் பிறேமதாஸவை வேட்பாளராக நியமிக்கக்கூடாது என போர்க்கொடி தூக்கியிருந்தவர்களில் சரத் பொன்சேகாவும் ஒருவராவார். இருந்தபோதும் அண்மையில் சரத் பொன்சேகாவை தொலைபேசியில் அழைத்த சஜித் பிறேமதாஸ சரத் பொன்சேகாவின் உதவி தேர்தல் பிரச்சாரங்களின்போது அத்தியாவசியமானது எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

கோத்தாவை கைது செய்ய அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றது. சாடுகின்றார் டளஸ் அழகப்பெரும.

பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு குற்றஞ் சுமத்திய அவர், கோத்தபாய ராஜபக்ச தற்கொலைப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துக்கொண்டு தனது உயிரை துச்சமென மதித்து பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு வழிகாட்டுதல்களை மேற்கொண்டு கொண்டிருந்தபோது எவரும் அவருடைய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் பிரஜாவுரிமை தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருக்கவில்லை.

அனால் அன்றிருந்த பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து மக்களை விடுவித்து ஜனநாயகத்தை நிலையாட்டியமையால் இன்று அவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது. இவ்வாராத்திற்கான ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையைப் பாருங்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டாவது நிலை வகிக்கின்ற சொலிசிற்றர் ஜெனரல் அவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து கோத்தாவை போலிக்குற்றச்சாட்டுகளில் கைது செய்வதற்கு எவ்வாறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றார்கள் என்பதை அவர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்பு பிரிவின் தலைவியாக செயற்பட்ட டில்றுக்ஷி டயஸ் அவர்கள் தனக்கு மீது எவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது என தெரிவிக்கும் ஒலிப்பதிவுகளை கேளுங்கள். இவற்றினூடாக இந்த அரசாங்கம் எதிரிகளை பழிவாங்குவதற்கு நேரத்தை செலவிட்டுள்ளதேதவிர மக்களுக்கும் நாட்டுக்கும் எதுவும் செய்யவில்லை.

எனவே இரண்டு சீமெந்து பக்கெட்டுக்கள் வேண்டுமாக இருந்தால் சஜித் பிறேமதாஸவிற்கு வாக்களியுங்கள் சிறந்ததோர் நாடுவேண்டுமாக இருந்தால் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள் என்றும் வேண்டினார்.

Read more...

Sunday, September 29, 2019

ரயில்வே ஊழியர்கள் பகிஷ்கரிப்பு: ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவையில் இணைக்கத் தீர்மானம்

ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர, ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

20 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இதுவரை சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின், அவர்களை சேவையில் ஈடுபடுத்தி ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், இன்று முற்பகல் 5 ரயில்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

கண்டி, இறம்புக்கனை, சிலாபம், காலி மற்றும் அவிசாவளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி ரயில்கள் பயணித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வார இறுதி நாட்களில் பயணிக்கவிருந்த அனைத்து விசேட ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இடையில் நாளை (30) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

ரயில்வே ஊழியர்களால் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்களை சேர்ந்த ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக, ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களை பிரநிதித்துவப்படுத்தியே இன்று (29) முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டிலே ஜனாதிபதி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

Read more...

புதுக்குடியிருப்பில் புலிகளின் கிளைமோர் குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் சுதந்திரபுரம் பகுதியில் 8 கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (29) சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு காணி உரிமையாளரினால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிசார், குறித்த இடத்தில் காணப்பட் 8 கிளைமோர் குண்டுகளையும் சுமார் 60 டெட்டனேட்டர்களையும் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை செயலிழக்கச் செய்து அங்கிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்

Read more...

Saturday, September 28, 2019

ஸ்ரீ லங்காவில் 700 அமெரிக்கப் படையினர். கொண்டுவந்த வெடிமருந்துகளுக்கு என்ன நடந்தது?

அமெரிக்கப்படையினர் சுமார் 700 பேர்வரை இலங்கையில் தங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் சிறப்புரிமையுடனேயே இவர்கள் இவ்வாறு நாட்டினுள் புகுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இவர்களில் சில படையினர் அண்மையில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அவர்கள் எடுத்துச்சென்ற பொதிகளை ஹோட்டல் பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட முற்பட்டபோது அதனை சோதனையிட மறுப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்கப்படையினரின் மறுப்பை தொடர்ந்து ஹோட்டலினுள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் அங்கு விரைந்த அமெரிக்க தூதரக வாகனங்கள் அப்பொதிகளை எடுத்துச் சென்றுள்ளது.

இவ்விடயமானது இலங்கையின் பாதுகாப்பு விவகாரத்தில் பாரிய அச்சுறுத்தலையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. குறித்த பொதிகளில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் நிச்சயமாக வெடிமருந்துகள் அல்லது யுத்த உபகரணங்களாகவே இருக்கவேண்டும் எனக்கருதப்படுவதுடன், இவை ஹோட்டலுக்கு எதற்காக கொண்டுவரப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

எடுத்துவரப்பட்ட அப்பொதிகளில் வெடிபொருட்கள் அல்லது யுத்த உபகரணங்கள் எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் அவை ஹோட்டலில் வைத்து ஏதோ ஒரு தரப்பிடம் கைமாற திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படும் அதேநேரம். அது யாரிடம் கைமாற உத்தேசமாகியிருக்கலாம் என்ற கேள்விகளுக்கும் பதில் தேடப்படுகின்றது.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில்கூட அமெரிக்காவின் சதி இருந்திருக்கின்றது என சந்தேகங்கள் நிலவிவந்தநிலையிலேயே இவ்விடயம் தற்போது இடம்பெற்றுள்ளது. அதாவது தாங்கள் நுழையவிரும்புகின்ற நாடுகளினுள் உள்நாட்டு நிலவரங்களை சீர்குலைத்து அதற்கு தீர்வு தேடுகின்ற சமாதான தேவதைகளாக தம்மை காட்டிக்கொள்ளும் மகா ராஜதந்திரத்தின் மறுமுகம் இன்று உலக அரங்கில் அம்பலமாகிவருகின்றது.

எது எவ்வாறாயினும் இலங்கையினுள் அமெரிக்க படைகளின் நுழைவு நாட்டுக்கு உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலையும் பின்னடைவையும் கொடுக்கப்போகின்றது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Read more...

வெடிபொருட்கள் மற்றும் போதைபொருட்களை கண்டறியக்கூடிய நவீன கருவிகளை சீன இலங்கைக்கு அன்பளிப்பு..

ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதுவர் செங் ஷியுவான் இந்தக் கருவிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

சிறிலங்கா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்தக் கருவிகளை சீனா கொடையாக வழங்கியுள்ளது.

இதுபோன்ற அதி நவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்கா பாதுகாப்புத் துறையினர் இதுவரை பயன்படுத்தியதில்லை.

கொடையாக வழங்கப்பட்ட கருவிகளில், 3 மீற்றர் சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கண்டறியக் கூடிய, மூன்று ரோபோக்களும் உள்ளடங்குகின்றன. இவை ஒவ்வொன்றினதும் பெறுமதி, 85.5 மில்லியன் ரூபாவாகும்.

தலா 90.5 மில்லியன் ரூபா பெறுமதியான, வெடிபொருட்களைக் கண்டறியும் மூன்று கருவிகளும் சீனாவினால் வழங்கப்பட்டுள்ளன. இவை, மனிதர்களில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை தன்னியக்க முறையில் கண்டறியக் கூடியவையாகும்.

அத்துடன் பொதிகளை சோதனையிடும், 50 எக்ஸ்ரே இயந்திரங்களையும், சீனா வழங்கியுள்ளது இவற்றின் மொத்தப் பெறுமதி 210.5 மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான, ஆயுதங்களைக் கண்டறிவதற்கான 50 பாதுகாப்புச் சோதனை கதவுகளையும், சீனா வழங்கியிருக்கிறது.

இவற்றுடன், வாகனங்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடிக்கக் கூடிய, 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான 25 வாகன சோதனை ஸ்கானர்களையும், தனிநபர்களைச் சோதனையிடுவதற்கான 500 உலோகங்களைக் கண்டறியும் கருவிகளையும், சீனா கொடையாக அளித்துள்ளது.

இந்த நிகழ்வில் சீன அதிகாரிகளும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும் கலந்து கொண்டனர்.

21/4 குண்டுத் தாக்குதல்களை அடுத்து சீனாவிடம் சிறிலங்கா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தக் கருவிகள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையுடனான ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் அனைத்து ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனத் தூதுவர் செங் ஷியுவான் கூறினார்.



Read more...

இரணைமடு குள வௌ்ள அனர்த்த அறிக்கை வெளிவந்துள்ளது

இரணைமடு குள வௌ்ள அனர்த்தம் தொடர்பான வௌ்ள அனர்த்த ஆரம்ப புலனாய்வு அறிக்கையின் மும்மொழிப் பிரதி வடமாகாண ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இரணைமடு வௌ்ள அனர்த்தம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வட மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கையின் மூன்று மொழிகளிலுமான மொழிபெயர்ப்புப் பிரதிகளே ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த ஆரம்ப புலனாய்பு அறிக்கையின் பிரகாரம், இரணைமடு குளத்தின் வௌ்ள அனர்த்தத்தினால் 64.25 மில்லியன் ரூபா அரச சொத்துக்களுக்கும் 3342 .99 மில்லியன் ரூபா பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தொழில்நுட்ப உத்தியோகத்தர் 21.12.2018 அன்று இரவு சுழற்சி முறைத்திட்டத்திற்கு அமைவாக கடமைக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தும் அன்றைய தினம் எழுத்து மூலமான அனுமதி பெறாது விடுமுறையில் சென்றுள்ளதாக புலனாய்வுக் குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த மூன்று அதிகாரிகள் மீதும் நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இரணைமடு குளத்திற்கு அருகில் ஒரு உத்தியோகத்தருக்கான விடுதி காணப்படுகின்ற போதிலும் அதில் பொறியியலாளர் தங்கி நின்று கடமையாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் உரியவர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், அதற்கான முழுப்பொறுப்பினையும் நீர்ப்பாசன பணிப்பாளரும் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீர்ப்பாசன பொறியியலாளராக​ செயற்பட்டவர் பாரிய குளத்தினை முகாமை செய்த அனுபவத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர் தனது வாக்குமூலத்தின் பிரகாரம் தெரியப்படுத்தியுள்ளார்.

பருவப்பெயர்ச்சி மழை காலங்களில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடல் வேண்டும் என மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் நிலையியற்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கு அமைய, குளத்தின் நீர்மட்டம் வௌ்ள அனர்த்தம் ஏற்பட்ட 22 ஆம் திகதி காலை 36 அடி 3 அங்குலமாக உயர்வடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஒரு பராமரிப்பு ஊழியரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலையியற்கட்டளையின் பிரகாரம் நீர் மட்டத்தினை அளவீடு செய்வதற்கும் அது தொடர்பான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கும் ஒரு பராமரிப்பு ஊழியரின் வகிபாகம் என்பது பேதுமானதாகக் காணப்படவில்லை எனவும், பொருத்தமான
தொழில்நுட்ப உத்தியோகத்தரை பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இரணைமடு குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயர்த்தப்பட்டதுடன், குளத்தின் நீர் கொள்ளளவும் விஸ்தீரனமாக்கப்பட்டுள்ளது

Read more...

ஹபரணையில் இதுவரை 7 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு

ஹபரணை ஹிரிவடுன்ன வனப்பகுதியில் இருந்து இன்று (28) மதியம் மேலும் இரண்டு உயிரிழந்த காட்டு யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தற்போதைய நிலையில் 7 உயிரிழந்த யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் 4 உயிரிழந்த யானைகளின சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஒரு காட்டு யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சீகிரியா வனவிலங்கு அதிகாரிகள், இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த பகுதியில் மேலும் காட்டு யானைகளின் சடலங்கள் உள்ளனவா என தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதன்போது, வனப்பகுதியில் இருந்து மேலும் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், யானைகளின் பிரேத பரிசோதனைக்காக வனவிலங்கு கால்நடை வைத்தியர் வருகை தந்தருந்த போதும் உயிரிழந்த யானைகளின் குட்டிகள் அதற்கு இடமளிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர், குறித்த காட்டு யானைகளை காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முதல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 7 யானைகளும் பெண் யானைகள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த காட்டு யானைகளை பார்ப்பதற்காக பிரதேசவாசிகள் மற்றும் அநேகமான சுற்றுலாப்பயணிகளும் ஹபரணை வனப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த காட்டு யானைகள் கொலை செய்யப்படுவது தமக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை என்னால் மட்டுமே வழங்க முடியும் - மஹிந்த

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை என்னால் மட்டுமே வழங்க முடியும். எனவே தமிழ் மக்கள் எமது வெற்றிக்காக பணியாற்றுங்களென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (26) மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமாருடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

இது குறித்து சந்திரகுமார் நேற்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது ஜன பெரமுன கட்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்ற வகையில் எமது கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை வியாழக்கிழமை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எமது கட்சியின் அடுத்த கட்ட செயற்பாடு குறித்து பேசினேன்.

இதன் போது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் பேசினேன், இதன் போது எமது தலைவர் மஹிந்த ராஜக்ஷ மிக தெளிவாக கூறினார்.

தமிழ் மக்களை நான் இனி ஒருபோதும் மாற்றாந் தாய் மனநிலையில் பார்க்க மாட்டேன். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை என்னால் மட்டுமே வழங்க முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் சென்று தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது. எனவே தமிழ் மக்கள் எமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவார்களாக இருந்தால் நிச்சயமாக நாம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம்.

எனவே தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை வெற்றியடைய செய்யுங்கள் என தெரிவித்தார்.

Read more...

மைத்திரியின் கழுத்தில் இன்று கத்தி வைக்கின்றனர் ராஜபக்சர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இத்தேர்தலில் இலகுவாக கோட்டபாய ராஜபக்ச வென்றுவிடுவார் என்ற கருத்து நிலவியிருந்தாலும் அது அவ்வளவு இலகுவாக முடிந்துவிடும் என கருத முடியாத நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிறேமதாஸ நியமிக்கப்பட்டமை காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் ராஜதந்திர வியூகங்கள் தொடர்பில் நன்கு அறிந்திருந்த மஹிந்த ராஜபக்ச தரப்பினர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் சஜித் பிறேமதாஸவிற்கு வேட்பாளர் சந்தர்ப்பத்தை வழங்கமாட்டார் என்றே கணிப்பிட்டிருந்தனர். அதை வலுப்படுத்தும் பொருட்டு சஜித்தை தமது ஆட்கள் ஊடாக உந்துதல் கொடுத்து வேட்பாளர் கோரிக்கைக்கான போராட்டத்தை ஆரம்பிக்க வைத்து ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக உடைத்து வெற்றியை இலகுபடுத்திக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க என்ற அரசியல் நரி யாவற்றையும் கணிப்பிட்டு இறுதி முடிவை எடுத்துள்ளது. ஆனால் ரணில் சஜித்தை வெல்ல விடுவாரா என்பது பிரத்தியேகமாக பேசப்படவேண்டிய விடயம்.

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிரிந்து தேர்தலில் குதித்தால் மல்லிகை மொட்டின் வெற்றி உறுதி என்றிருந்த நிலையில், தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக போட்டியிட தயாராகி வருகின்றமை மஹிந்த தரப்பின் கணிப்பீட்டை தப்பாக்கியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதுடன் இதன் பின்னணியில் சந்திரிகா அம்மையார் செயற்பட்டுவருவதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால் கோத்தாவின் வெற்றி கேள்விக்குள்ளாகும் என்ற நிலையில் மீண்டும் மொட்டு இறங்கிச் செல்வதாக உள்ளக தகவல் தெரிவிக்கின்றன. நேற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இன்று முக்கியமான ராஜபக்சர்கள் மஹிந்து பசில் கோத்தா ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவை தனியாக சந்தித்து பேசவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனைகள் தொடர்பிலும் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பிலும் பேசப்படும் என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

என்றும் புத்தகத்தையே விரும்பும் ரணில் விக்கிரமசிங்க புத்தகக்கண்காட்சியில்..

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஒரு புத்தகப்பிரியர் என்று அறியப்பட்டவர். அவர் தற்போது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் புத்தகக்கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை கொள்வனவு செய்து வருகின்றார்.

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற ஒன்றுகூடல் நேரங்களில்கூட ஓய்வு நேரம் கிடைக்குமாயின் புத்தகம் வாசிப்பதிலேயே நேரத்தை போக்குவார் என்பதும் புத்தகவாசிப்பு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் ஒருமுறை மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஒன்றின்போது, உங்கள் வாழ்கையில் நீங்கள் வாசித்த சிறந்த புத்தகம் அல்லது உங்களுக்கு பிடித்த புத்தகம் எது என்று கேட்கப்பட்டபோது, 'தம்மபதம்' என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தைத் தோற்கடிக்க ரணில், நவீன், சம்பிக்க சூழ்ச்சி!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவைத் தோற்கடிப்பதற்கு ரணில், ரவி, நவீன், சம்பிக்க ஆகியோர் சூழ்ச்சி செய்துகொண்டிருப்பதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார். நேற்று (27) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையிலிருந்து சில கருத்துக்கள்...

நாங்களும் ஏன் சஜித் வேட்பாளராவதற்கு விரும்பினோம்?

கடந்த மூன்று மாதங்களாக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளராக நியமிக்கும்படி நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுத்தோம். சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் ஏன் அவரை நாங்கள் வேட்பாளராக நியமிக்கக் குரல் கொடுத்தோம் என்பதைத் தெளிவுறுத்தியாக வேண்டும்.

நாங்கள் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரியதற்கான காரணம், அவரை எங்களால் இலகுவாகத் தோற்கடிக்க முடியும் என்பதனாலேயே. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே இருமுறை நாமல் ராபஜபக்ஷவினால் அவர் தோற்கடிக்கப்பட்டார். திஸ்ஸமகாராம தேர்தல் பிரிவில் டீ.வி. சானக்கவினால் தோற்கடிக்கப்பட்டவர். அவர் வசித்துவருகின்ற லுணுகம்வெகர பிரதேச சபையில், அப்பிரதேச சபையின் தலைவராக இருந்த ரஸிக்க தினேஷினால் தோற்கடிக்கப்பட்டவர். அதனால் சஜித் பிரேமதாசவைத் தோற்கடிக்கச்செய்ய எங்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அவசியமில்லை, லுணுகம்வெகர பிரதேச சபையின் ரஸிக்க தினேஷினால் அதனைச் சாதிக்க இயலும்.

சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையின் தலைவராகி 2001 ஆம் ஆண்டு போட்டியிடும்போது ஐதேக 40% வாக்குகளையே பெற்றுக் கொண்டது. அவரது தலைமையின் கீழ் ஐதேக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக பின்னடைவையே சந்தித்தது. 2001 ஆம் ஆண்டு 40% வாக்குகள் 2010 ஆம் ஆண்டாகும்போது 30% வீதமாக வீழ்ச்சியடைந்தது. சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் நாடு தழுவிய ரீதியில் ஐதேக ஹம்பாந்தோட்டையில் தழுவிய வீழ்ச்சியைப் போன்ற வீழ்ச்சியையே சந்திக்கும்.

சஜித்தின் ஆளுமையை மட்டிட நாங்கள் புதிதாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரவி கருணாநாயக்க சொல்வதைப் போல, க.பொ.த (சா.த) பரீட்சையில் கூட சித்தியடைய முடியாத - தனது தேர்தல் பிரிவில் வெற்றியீட்ட முடியாத ஒரு வேட்பாளரே சஜித். சரத் பொன்சேக்கா சொல்வதைப் போல, பெட்டி வீடுகளைக் கட்டுவதைப் போல நாட்டை ஆட்சி செய்யலாம் என நினைப்பவர். பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுவதைப் போல குடும்பத்தையே கருதுகோளாய்க் கொண்ட வேட்பாளர். லக்ஷ்மன் கிரியல்ல சொல்வதைப் போல சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறவியலாத வேட்பாளர். துாரநோக்கு இன்றிய கையாலாகாத வார்த்தை ஜாலங்களைக் கக்குகின்ற ஒருவராகவே நாங்கள் காண்கின்றோம்.

சஜித்தைத் தோற்கடிக்கும் சூழ்ச்சியில் ரணில், ரவி, ரணவக்க

சஜித் பிரேமதாசவைத் தோற்கடிப்பதற்காக நாங்கள் புதிதாகக் கஷ்டப்படத் தேவையில்லை. அதனை ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க, பா.ச. ரணவக்க, நவின் திசாநாயக்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மிகவும் கச்சிதமாக நிறைவேற்றுவார்கள். சஜித்தை ஜனாதிபதியாக்குவதென்பது ரணில் விக்கிரமசிங்கவை அரசியலிலிருந்து ஓரங்கட்டச் செய்யும் செயலாகும். அதேபோன்று தங்களை விட வயதில் குறைந்த சஜித் ஜனாதிபதியாவதென்பது ரவி கருணாநாயக்க, நவின் திசாநாயக்க, பா.ச. ரணவக்க போன்றோரின் ஜனாதிபதி அபிலாசையை இல்லாதொழிப்பதாகும். சஜித் தோற்றால் 2024 இல் மீண்டும் ஒரு சிறந்த வேட்பாளர் தேவைப்படுவார். அப்போது ஜனாதிபதியாவதற்கு கனவு காண்பவர்களுக்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும். அதனால் இவர்கள் தற்போது சஜித்தைக் காலால் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதியில் நடப்பது என்னவென்றால், ஜனாதிபதியாவது எப்படிப் போனாலும் பிரதித் தலைவர் என்ற நிலையும் இல்லாமலாவதே.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டது அவரது கெட்ட காலத்திற்கே. சஜித் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் தற்போது இருக்கின்ற கட்சியின் பிரதித்தலைவர் என்ற நிலையும் இல்லாமலாகும். நவம்பமர் மாதம் 17 ஆம் திகதி சஜித் பிரேமதாசவை ரணில் விக்கிரமசிங்க அழைத்து என்ன சொல்வார் தெரியுமா?

"நான் தோல்வியைத் தழுவினால் இராஜினாமாச் செய்யவே இருந்தேன். ஆயினும் நீங்கள் தோற்றதனால் நான் இராஜினாமாச் செய்ய வேண்டியதில்லையே. அதனால் கட்சியில் தலைமைப் பொறுப்பில் என்றும் நானே இருப்பேன். நீங்கள் அவசரமாக பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள். மீண்டும் 2024 இலும் கோத்தபாயவே ஜனாதிபதியாவார். ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற உங்களை மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவியலாது. அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரை நாங்கள் தெரிவுசெய்து அவருக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அவருக்கு நாங்கள் பிரதித் தலைவர் பதவியை வழங்க வேண்டும். அதனால் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்"

முடியுமானால் ஐந்தையும் செய்யாதிருங்கள்... சஜித்திற்குச் சவால்!

கட்சி வேட்பாளராவதற்காக சஜித் ஆற்றிய உரைகளால் முழு நாடுமே வயிறு குலுங்கச் சிரித்தது. நானே ஜனாதிபதியாவதற்குப் பொறுத்தமானவன், 21 மணி நேரம் பணிபுரிவேன், பிச்சைக்காரனைப் போல நடுத்தெருவில் யாசகம் கேட்டுச் சீவிப்பதைப் போல சுவையான கதைகள் பல அவர் சொன்னார். அது எங்களுக்கு சுவையான கதைகளாக இருந்தபோதும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவராக நின்று உரையாற்றும் ஒரு மடையன் கூறும் கதையாகவே அவை இருந்தன. அதனால் நான் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு சவால் விடுகிறேன். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக 50 நாட்களே இருக்கின்றன. முடியுமானால் 50 நாட்களுக்குள் எருமை மாட்டுக் கதைகள் ஐந்து சொல்லாமலிருங்கள். நாங்கள், நீங்கள் ஆற்றிய எருமை மாட்டுக் கதைகளைக் கணக்கிட்டு, 'சஜித்தின் சுவைமிகு கதைகள்" எனும் தலைப்பிட்டு புத்தகமொன்று வெளியிடுவோம். அதேபாேல கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் 'அரச மாளிகை விகடகவி"ப் பதவியையும் உங்களுக்கு நாங்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

-"கலைமகன் பைரூஸ்"

Read more...

SLFP யின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய இறுதித்தீர்மானம் திங்கட்கிழமை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையிலேயே அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Friday, September 27, 2019

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாவுக்கு ஆதரவளிக்க 19 கட்சிகள் கைகோர்க்கின்றனவாம்.!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக, அரசியல் கட்சிகள் 19 கூட்டுச்சேரவுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் 05 ஆம் திகதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இவ்வனைத்துக் கட்சிகளும் கோத்தபாய ராஜபக்ஷ 'தாமரை மொட்டு'ச் சின்னத்தில் தேர்தலில் களம் குதிப்பதற்கு ஆதரவளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

மாத்தறை - கிரிந்தையில் இரு குழுக்களுக்கிடையே கைகலப்பு... படையினர் ஸ்தலத்திற்கு விரைவு!

மாத்தறை - கிரிந்த பிரதேசத்தில் முஸ்லிம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று சிங்கள முஸ்லிம் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

நேற்று இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறு கைகலப்பாக மாறி பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் தலையீட்டில் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

எனினும் இன்று முஸ்லிம் நபர் ஒருவர் இன்னொருவருக்கு வீசி எறிந்த போத்தல் விகாரை வளாகத்தில் விழுந்ததை அடுத்தே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை வேளையில் அப்பிரதேசத்தில் உள்ள சில முஸ்லிம் வீடுகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அங்கு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைத்த நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

தேர்தல் சட்டதிட்டங்களை மீறி செயற்படுவதாகக் கூறி சஜித் - ராஜித்த - அகிலவுக்கு எதிராக முறைப்பாடு!

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதால் அதனையொட்டிய சரத்துக்களுக்கு எதிராக வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சு,சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு, கல்வியமைச்சு போன்ற அமைச்சுக்களினால் தேர்தல் சட்டங்கள் தகர்த்தெறியப்பட்டு தொழில்வாய்ப்புக்கள் வழங்க ஆவன செய்யப்படுவதாகக் கூறி சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வந்துள்ளதாக, அவ்வாணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதிலிருந்து 'SLFP' பின்வாங்குகிறது!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்கி நிற்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை இல்லாதொழிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டபாேதும், பாராளுமன்றம் அது தொடர்பில் கருத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதனால் ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒதுங்குவதாகவும், அதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு ஆதரவளிப்பதில்லை என்று குற்றம் சுமத்தக் கூடாது எனவும் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திசாநாயக்க தெரிவித்தார்.

Read more...

சஜித்துக்கு இலங்கைப் பொருளாதாரம் பற்றிய எந்தவொரு நோக்கும் இல்லை... 'தொவில்'தான் ஆட வேண்டும்!மகிந்த

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு பொருளாதாரம் பற்றியோ வடக்கு கிழக்கு பிரச்சினைகள் பற்றியோ எதுவுமே பேசவில்லை என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நேற்று (26) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் நடாத்தப்பட்ட சம்மேளனமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"இப்போது சஜித் பிரேமதாசதான் 'தொவில்'ஆட வேண்டும். இவ்வளவு காலமும் வீடுகள் பற்றித்தான் பேசினாரே தவிர, நாட்டின் பொருளாதரம் பற்றியோ வடக்கு - கிழக்குப் பிரச்சினைகள் பற்றியோ இதுவரை ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.

நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அவருக்கு எந்தவொரு அக்கறையும் இல்லை. அவர் அதிக காலம் யால வனாந்தரத்தில்தான் காலம் கழித்தார்.

சென்ற முறை அன்னத்தில் போட்டியிட்டு நடந்தது என்னவென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்முறை அன்னத்திற்குக் கொடுத்தாலும் அதே கதிதான். நாட்டைப் பாதுகாப்தற்கே நாங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

திவிநெகும வழக்கு: நீதிபதியை மாற்றக் கோரும் பசில் ராஜபக்ஸவின் மனு நிராகரிப்பு

திவிநெகும வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஷிரான் குணவர்தன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பசில் ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவில் எவ்வித சட்டப்பூர்வ தன்மையும் இல்லை என அறிவித்த நீதிபதிகள் அதனை நிராகரித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 இலட்சம் ரூபா நிதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்காது, வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு பசில் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை தொடர்ந்தும் நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

Read more...

சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடல் காத்தான்குடியில் புதைப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட நசார் மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டன..

குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதனையடுத்து இதனை மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானத்தில் புதைப்பதற்கு முயற்சித்தபோது அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனையடுத்து பல்வேறு இடங்களில் புதைக்கப்படவுள்ளதாக அந்தந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சில ஊள்ளுராட்சி மன்றங்கள் மாநகரசபைகள் இதனை தமது பிரதேசத்தில் புதைப்பதற்கு எதிராக தீர்மானங்களையும் எடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த மாதம் 26ம் திகதி இரவேடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடியதுடன் கல்லடி பாலத்தில் வீதியைமறித்து போராடடம் நடாத்தினர்.

கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை நீதிமன்ற உத்தரவுக்கமைய மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமைக்கு முன்னர் இதனை பொருத்தமான இடத்தில் அரசாங்க அதிபர் ஊடாக புதைக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டார்.

இதற்கமைய குறித்த உடற்பாகங்களை இன்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி 3ம் குறிச்சியிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்டதையடுத்து வைத்தியசாலை பிரேத அறையில் இருந்த உடற்பாகங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பெறுப்பேற்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் குறித்த மையவாடியில் புதைக்கப்பட்டது

இதனை புதைக்கும் போது இஸ்லாமிய மார்க்க கடமைகள் எதுவும் இடம் பெறவில்லை. இதன் போது பெருமளவிளான பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Read more...

முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர கைது

முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர்
பொலிஸ் நிதி மோசடி விசாரணைபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக பணிப்பாளர் கைது செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கிணங்க அவர்களை உடனடியாக கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும், முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன பதுளை வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்ப்ட்டிருந்த நிலையிலேயே, அங்கு சென்ற எப்.சி.ஐ.டி.யின் இருவேறு சிறப்புக் குழுக்கள் அவர்களைக் கைது செய்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந் நிலையில் சி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி.க்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. மற்றும் எப்.சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.டி.பிரியந்த ஆகியோரின் மேற்பார்வையில் எப்.சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சர் அனுர பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய விசாரணை அறை இலக்கம் 8 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் ஊடாக குறித்த இருவரிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களது கைது மற்றும் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாளை எப்.சி.ஐ.டி. அதிகாரிகள் கோட்டை நீதிவானுக்கு விஷேட அறிக்கையை சமர்ப்பித்து அவ் விருவர் குறித்தும் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மனைக்க உள்ளதாக எப்.சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

Read more...

இலங்கையில் மேற்குல நாடுகளின் தலையீட்டுக்கு அனுமதியில்லை - கோட்டாபய

இலங்கையின் இறையாண்மையில் சர்வதேச மேற்குலக நாடுகள் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இராணுவத்தினரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்பதுடன், யுத்தத்தில் ஈடுபட்ட படையினரை பாதுகாப்பேன் எனவும் கூறினார்..

இராணுவத்தினரின் குடும்பங்கள் மத்தியில் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்

படையினரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று, மனித உரிமை மீறல்களை புரிந்ததாக குற்றம்சாட்ட முயற்சிகள் நடக்கின்றன. அவ்வாறு நடப்பதற்கு பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டைப் பிளவுபடுத்த எவரையும் அனுமதிக்கமாட்டேன்.

Read more...

இலங்கையில் மதுவால் வருடம் 18 ஆயிரம் பேர் மரணம்

மது பாவனையால் வருடாந்தம் 18 ஆயிரம் பேர் நாட்டில் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் அனுலா விஜேசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை, மதுபானம், மற்றும் புகையிலை வர்த்தகம் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 143 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் எனினும், புகையிலை மதுபான பாவனையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 209 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவித்த அவர், இதற்கிணங்க புகையிலை மற்றும் மதுபான வர்த்தகத்தினால் அரசாங்கத்திற்கு எந்த வித வருமானமும் கிடைப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன விபத்துக்களால் வருடாந்தம் மூவாயிரம் பேர் மரணமடைவதுடன் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கவீனமாகின்றனர். இதற்கிணங்க மதுபாவனையே வீதிவிபத்துக்களுக்குக் காரணமாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் மதுபாவனையைப் பொறுத்தவரை ஒருவர் 3.5லீட்டர் மதுபானத்தை அருந்துவதாகவும், அதனால் ஏற்படும் சிரோசிஸ் நோயினாலேயே நாட்டின் அதிகளவு மரணங்கள் பதிவானதாகவும் உலகில் இது இரண்டாவது இடத்தை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

இந்த நாட்டை உடைய ஒருபோதும் அனுமதியேன். வழகிழக்குக்கு தீர்வென்றால் ஒருமித்த நாட்டிலேயே. சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிறேமதாஸ “பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன். அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வரும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் அதிக கவனம் செலுத்துவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நேற்று மாலை ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதித் தேர்தல். இதில் ஜனாதிபதி ஆசனத்தைப் பிடிக்கவே நாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம். இதில் கொள்கை உள்ளதே தவிர உடன்படிக்கை இல்லை. 2015ஆம் ஆண்டு எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று இம்முறையும் எமக்கு ஆதரவு கிடைக்கும் என்றே நினைக்கின்றன்.

ஜனநாயக ரீதியில் பயணிக்கும் அனைவரையும் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கின்றேன். பொதுக் கொள்கையின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம். ஆனால், இதில் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ள நான் தயாரில்லை. சர்வதேச உடன்படிக்கைக்கோ அல்லது உள்நாட்டு உடன்படிக்கைக்கோ நான் அடிபணியவும் மாட்டேன்.

வடக்கு, கிழக்கு மக்கள் 30 வருடங்களாகப் போரினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். அதேபோல் இந்த நாட்டில் கஷ்டப்படும் சகலருக்கும் நியாயமான வாழ்கையை உருவாக்கிக் கொடுப்பதிலும் நான் கவனம் செலுத்துவேன்.

நாட்டைக் கட்டியெழுப்பும் எமது பயணத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பேதங்கள் பாராது ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மனிதத்துவத்துக்கு முதலிடம் கொடுக்கும் யுகமொன்றை உருவாக்க நான் எதிர்பார்த்துள்ளேன்” – என்றார்.

Read more...

Thursday, September 26, 2019

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது: சட்ட மா அதிபர்

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எவ்வித மன்னிப்பையும் வழங்க முடியாது என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் பாரதூரத்தன்மையை பொருட்படுத்தாது செயற்பட்டதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொடுக்கப்பட்டதாகவும் அதிகளவிலானவர்கள் நிரந்தர அங்கவீனர்களாகியதாகவும் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரின் வழிகாட்டலின் பேரில், புலனாய்வு அதிகாரிகள் உயிரை பணையம் வைத்து சேகரித்த தகவல்களை ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் உதாசீனம் செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

90,000-இற்கும் மேற்பட்டவர்களுக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரைப் போன்ற அதிகாரிகள் தபாற்காரராக மாறாது நடைமுறை ரீதியில் செயற்பட வேண்டும் என சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், மக்களின் துரதிர்ஷ்டம் காரணமாக அது அவ்வாறு நிகழவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த குறித்த இரண்டு அதிகாரிகளும் இழைத்த குற்றம் மிகவும் பாரதூரமானது என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உறுதியான புலனாய்வுத் தகவல் கிடைத்ததன் பின்னரும் அது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அல்லது அமைச்சரவையின் எந்தவொரு அமைச்சருக்கும் அறிவிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அல்லது பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

அமெரிக்க பிரஜையாக இலங்கையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கோட்டாபயவிற்கு எதிராக விசாரணை

200 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோருக்கு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ஸ, சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து மஹிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையை முன்னெடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் முன்னெடுத்த விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு விடுத்த வேண்டுகோளை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ 2005 ஆம் ஆண்டு இரட்டை பிராஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா விநியோகப்பிரிவின் உத்தியோகத்தர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் வினவிய போது, அது தொடர்பான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

Read more...

ரயில்வே தொழிற்சங்கம் நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில்

ரயில்வே தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. சம்பள முரண்பாடு பிரச்சினைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டது.

நள்ளிரவு முதல் தபால் ரயில்களும் இயக்கப்படாது என சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அறிவித்தார். இப் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதரவளித்துள்ளனர்.

அரச சேவையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com