Monday, September 16, 2019

நிதியமைச்சினை என்வசம் தந்தால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன்! - தயா

நிதியமைச்சராகத் தன்னை நியமித்தால் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இல்லாதொழியும் என அமைச்சர் தயா கமகே குறிப்பிடுகின்றார்.

இன்று நிதியமைச்சின் செயற்பாடுகள் மிகவும் பயனற்ற முறையில் இருந்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், நிதியமைச்சைத் தன் பொறுப்பில் கையளித்தால் தன்னால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இயலும் எனவும் குறிப்பிட்டார்.

நிதி இல்லை எனக்கூறி ஒருபோதும் நிற்கவில்லை எனவும், முதலீட்டுவதிலுள்ள இடர்பாடுகள் என்ன என்பதை இனங்கண்டு, அதற்குத் தேவையான தீர்வினைப் பெற இயலும் எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீணாகப் பணத்தைச் செலவளிக்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read more...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எவருக்குமே 40% ஆதரவில்லை! - ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தங்களை இனங்காட்டிக் கொண்டு எந்த ஒருவருக்கும் 40% வாக்கு எல்லையை எட்ட முடியாயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அதனால் எந்தவொரு நபரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக வர இயலாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தற்போது துாதுவராலயத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திவருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு மேலும் பாராளுமன்றில் இருப்பது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்திற்கேற்ப எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Read more...

Sunday, September 15, 2019

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கிரியெல்லாவுக்கு.... ! கபீர் ஹாஷிம் எதிர்ப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை அமைச்சர் லட்சுமன் கிரியெல்லாவின் பொறுப்பில் வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு அளித்த பரிந்துரையை அமுல்படுத்த வேண்டாம் என அமைச்சர் கபீர் ஹாஷிம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் இப்போது அமைச்சர் கபீர் ஹாஷிமின் கீழ் சாலை மேம்பாடு மற்றும் பெட்ரோலிய வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி உட்பட நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் கோரியதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த கோரிக்கையை தாமதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் செயலாளராக இருக்கும் எஸ். லக்ஷ்மன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை லக்ஷ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்திருப்பது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

Read more...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத்துவத்தைத் இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுபெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ள டிலான் பெரேரா, எஸ்.பி. திசாநாயக்க, அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கின்ற லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரின் அங்கத்துவமே இவ்வாறு இரத்துச் செய்யப்படவுள்ளது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவருகின்ற விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம். பெளசி ஆகியோரின் கட்சி அங்கத்துவமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பிலா கடிதங்கள் எதிர்வரும் வாரத்திற்குள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவுள்ளன எனவும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிட்டார்.

Read more...

மாெட்டின் பிளவினைத் தீர்க்க மைத்திரி - மகிந்த சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தாமரை மொட்டின் இரண்டிற்கும் இடையே கட்டியெழுப்பப்படவுள்ள புதிய கூட்டணியின் இலச்சினை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

தற்போதைய அரசியல் பற்றி றதிந்த மனதுடன் பேசிவரும் சிரேஷ்ட அரசியலாளராக ஜனாதிபதி இருப்பதனால், தற்போதைய பிரச்சினைகளுக்கு இறுதித் திர்மானம் எடுக்கவுள்ளதாக மகிந்த மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு தாமரை மொட்டுமு் ஸ்ரீ.சு.க. யினிடையே கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றால், இரு தரப்புக்களுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குக் கையொப்பமிடுவது ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி, மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு தற்போது எல்லோரும் உடன்பட்டுள்ளனர். அதுதொடர்பில் கோத்தபாயவுடன் தனியாகப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு, ஜனாதிபதியினால் மகிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ.சு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... ! பொலிஸார்

உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அரச புலனாய்வுச் சேவையின் அம்பாறை அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கைதுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலை நடாத்தியதாகக் கூறப்படுகின்ற தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பினைச் சேர்ந்த பெரும்பாலானோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் இரகசியமாக மறைந்து வாழ்கின்ற ஜமாஅத் மில்லத் இப்ராஹீம் அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பொலன்னறுவை, கண்டி, மாவனல்லை, கம்பொல, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களில் இரகசியமாக மறைந்திருந்தோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒலுவில் பல்கலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் இருவரும் உள்ளனர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் மூலம், மிக முக்கியமான பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், அதற்கேற்ப மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

Saturday, September 14, 2019

பங்காளிக் கட்சிகளுடன் சஜித் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று தீர்மானமிகு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இன்றிரவு 8 மணிக்கு பின்னர் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்..

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இது ஒரு பகிரங்க கலந்துரையாடல் எனவும், தற்போதைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பது மிக முக்கிய பணியாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read more...

இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகளை ஒப்படைக்க நடவடிக்கை - ஆளுநர்

வடக்கில் இராணுவத்தார், பொலிஸாரால் கையகப்படுத்தி பயன்படுத்தப்பட்டு வரும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை உடனடியாக மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், முன்னர் வட மாகாண ஆளுநரால் யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளங்கண்டு அவற்றை உடனடியாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிமைக்கோரல் விண்ணப்பப் படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுவதாக ஆளுநரின் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி அடுத்த கட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர், பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரிமையாளர்கள் அறியத்தர வேண்டுமென்றும், மேலும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுள்ளவர்களும் தங்களது காணிகளுக்கான விசேட விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டுமெனவும் ஆளுநரின் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கள்ள மணல் ஏற்றியவர் மீது துப்பாக்கிச் சூடு இளைஞன் காயம்

கள்ள மணல் அள்ளிச் சென்ற டிரக்டர் மீது விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் இன்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கி. ரஜீவன் (வயது 20) என்ற இளைஞனே​ காயமடைந்துள்ளார்.அரியாலை பகுதியில் டிரக்டர் வாகனத்தில் கள்ள மணல் ஏற்றி சென்ற போது விசேட அதிரடிப் படையினர் குறித்த நபரை நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும் குறித்த நபர் டிரக்டர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதை அடுத்து, விசேட அதிரடிப் படையினர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதன்போது டிரக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரின் காலில் தோட்டா பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை வழங்கும் எண்ணம் பெரும்பான்மையினருக்கு இல்லை

பெரும்பான்மை சிங்களவர்களின் மனதைக் குடைந்த தனிநாடு, சமஷ்டி ஆட்சி ஆகியவற்றை வலியுறுத்திய ஆயுதப்போராட்டமோ அல்லது அந்தக் கோரிக்கையோ தற்போது இல்லை. அவ்வாறிருந்தும் கூட இன்னமும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் அல்லது சமத்துவமான நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு பெரும்பான்மையினத் தலைவர்களுக்கு வரவில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கை - இந்திய நட்பறவு ஒருமைப்பாட்டு சந்திப்பு ஒன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நேற்று  கொழும்பிலுள்ள ரமடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மனோகணேசன் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பல்வேறு விடயங்களில் ஒற்றுமை காணப்படுகின்றது. குறிப்பாக இருநாடுகளுமே பல்லின, பன்மொழி கலாசாரத்தைக் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த நாடுகளாகும்.

இலங்கையில் குறைந்தபட்சம் 19 இனங்கள் காணப்படுவதாக அண்மையில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு, அதுகுறித்த புத்தகம் ஒன்றையும் நாங்கள் வெளியிட்டிருந்தோம். எனினும் எமது நாட்டில் பிரதானமாக நான்கு பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கம் ஆகிய 4 மதங்கள் பின்பற்றப்படும் அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் மூன்று மொழிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இங்கு குறித்தவொரு மதம் மற்றும் மொழியே பிரதானமானது என்ற கருத்தோட்டம் உருவான போது சிக்கல்களும் தலைதூக்க ஆரம்பித்தன. அத்தகைய எண்ணம் மாற்றமடைந்து இது பல்லின, பன்மொழி நாடு என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சரியான தீர்வாக அமையும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Read more...

நாமலின் திருமணத்தில் கிளிநொச்சி அரசியல் கைதி

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதியும் அவரது மனைவியும் பங்கேற்றுயுள்ளார்கள்.

பிணையில் வெளியில் வந்துள்ள அரசியல் கைதியான கிளிநொச்சியில் உள்ள சவரிமுத்து லோகநாதன் என்பவரே இவ்வாறு திருமணத்தில் பங்கேற்றுயுள்ளார்.

அவர்களை திருமணத்திற்கு அழைத்து வருவதற்கு பிரத்தியேக வாகனம் ஒன்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறையில் இருந்த நேரத்தில் குறித்த அரசியல் கைதியின் நட்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த நாமல், குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன் அவரது குடும்பத்தினருக்கு தனி வீடு ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த அரசியல் கைதியின் குடும்பத்தினரை தனது திருமணத்திற்கு நாமல் அழைத்து விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வவுனியாவில் வறுமையால் பிள்ளைகளை தேரரிடம் ஒப்படைத்த தந்தை

வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் குடும்பத்தலைவியான தாயார் பொலிஸ் நிலையத்தில் தனது இரண்டு பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டபோது பௌத்த தேரரிடமிருந்து இரு பிள்ளைகளையும் அழைத்துவருமாறு தாய், தந்தை இருவருக்கும் பொலிசாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியாவில் வசித்து வரும் குடும்பம் ஒன்று வறுமை காரணமாக தமது பிள்ளைகளை வளர்த்து எடுப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில், குடும்பத்தலைவர் தனது 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு மனைவியிடம் உறவினர்கள் வீட்டிற்குச் செல்வதாக தெரிவித்துவிட்டு பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் தனது நிலைமைகளைத் தெரிவித்து தனது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வவுனியா சென்று நடந்த சம்பவத்தை தனது மனைவியிடம் நேற்று இரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கிராமத்திலுள்ள பெண் சமூக ஆர்வலர் ஒருவரிடம் சென்ற குறித்த தாயார் கணவனின் செயற்பாட்டினைத் தெரிவித்து தனது நிலைமைகளைத் தெரிவித்துள்ளதுடன் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளச் சென்போது மாமடுவ பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் தாயிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து தந்தையை அழைத்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் பௌத்த தேரருடன் தொடர்பினை ஏற்படுத்தி ஒப்படைக்கப்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளையும் தாய், தந்தை ஆகிய இருவரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதுடன் தாய் தந்தை இருவரும் அங்கு சென்று இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வருமாறு பொலிசாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Read more...

உளவு பார்க்கும் புறாக்கள்: அமெரிக்காவின் சிஐஏ வெளியிட்ட முக்கிய ஆவணங்கள். கோர்டன் கோரேரா

பனிப்போர் காலத்தில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்களின் பயணம் குறித்த ரகசிய தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

சோவியத் ரஷ்யாவின் முக்கியமான இடங்களை புகைப்படம் எடுக்கும் ரகசியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட புறாக்களுக்கு எவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டன என்பதை அந்த கோப்புகள் வெளிப்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, சோவியத் ரஷ்யாவின் திட்டங்களை ஒட்டு கேட்பதற்காக சிறிய சாதனங்களை வீசும் பணியில் காக்கைகளும், ஆழ்கடல் பயணங்களில் டால்பின்களும் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தங்களது ரகசிய திட்டங்களை செயற்படுத்துவதற்கு பறவைகள் மற்றும் விலங்குகள் மிகவும் பொருத்தமானவை என்று சிஐஏ கருதுகிறது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள சிஐஏவின் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதியில்லை. இருப்பினும், நான் நேர்காணல் ஒன்றிற்காக அங்கு சென்றிருந்தபோது, பல்வேறு விதமான உளவு கருவிகளை விட ஒரேயொரு விடயம்தான் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆம், அதுதான் கேமரா பொருத்தப்பட்ட புறா.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் உளவு புறாக்களை பயன்படுத்தியது தொடர்பாக நான் புத்தகம் ஒன்றை எழுதி வருவதால் எனக்கு அதை பார்த்ததும் ஆர்வம் அதிகரித்தது. இருப்பினும், தங்களது உளவுப் புறாக்களின் பயண விவரங்களை சிஐஏ இன்னமும் வெளியிடவில்லை என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், தற்போது அதுகுறித்த அனைத்து விடயங்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன.


1970களில் டக்கானா எனும் குறியீட்டு பெயரை கொண்ட திட்டத்தின் கீழ், புறாக்களின் உடலில் சிறியளவிலான கேமராக்களை பொருத்தி, அதன் மூலம் தானியங்கியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக சிஐஏவின் புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து வந்தாலும் தான் எங்கிருந்து பயணத்தை தொடங்கினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன்படைத்த புறாக்களை கொண்டு இந்த அசாத்தியமான முயற்சிகள் சிஐஏவால் முன்னெடுக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் தொடர்பாடலில் புறாக்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், முதலாம் உலகப்போரின்போதுதான் முதல் முறையாக புறாக்கள் உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

அதற்கும் முன்னதாக, 1960களில் காகங்களை பயன்படுத்தி அதிகபட்சம் 40 கிராம் எடை கொண்ட பொருட்களை எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி, எடுத்து வருவது குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.

அதாவது, பறவைகள் செல்ல வேண்டிய இலக்குகளை சிவப்பு நிற லேசர் ஒளியை பாய்ச்சி குறிப்பதுடன், அவை திரும்ப வருவதற்கு தனியே மற்றொரு ஒளி அடிப்படையிலான முறை பயன்படுத்தப்பட்டது. மேலும், பயணம் செய்துக் கொண்டே இருக்கும் பறவைகளை கொண்டு சோவியத் ரஷ்யாவின் ரசாயன ஆயுதங்கள் குறித்த விவரங்களை திரட்டுவதற்கும் சிஐஏ முயற்சித்தது.


நாய்களின் மூளையை தூண்டும் வகையில் மின்சாரத்தை பயன்படுத்தியும், பூனைகளின் உடலுக்குள்ளே ஒட்டு கேட்பு கருவிகளை பொருத்தியும் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த மேலதிக தகவல்களை சிஐஏ வெளியிடவில்லை.

குறிப்பாக, டால்பின்களை பல வகையான உளவு வேலைகளில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. உதாரணமாக, எதிரி கப்பல்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னதாக, அவர்களின் கைவசம் உள்ள நீர்மூழ்கி கப்பலின் அமைப்பு, அதிலுள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அறிவதற்காக டால்பின்களின் உடலில் உணரிகள் (சென்சார்) பொருத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன.

மேலும், கப்பல்களில் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியிலும், பெற்று வரும் பணியிலும் டால்பின்கள் ஈடுபடுத்தப்பட்டன.

1967 வாக்கில் உளவுப் பணியில் டால்பின்களை ஈடுபடுத்தும் ஆக்ஸிகாஸ் திட்டம், பறவைகளுக்கான ஆக்ஸியோலைட் திட்டம் மற்றும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான கெச்செல் ஆகிய திட்டங்களுக்கு சிஐஏ ஆறு லட்சம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டது.

1970களின் மத்தியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளின் வாயிலாக கேமராக்கள் பொருத்தப்பட்ட பறவைகள் உளவுப் பார்ப்பதற்கு திறன்வாய்ந்த தெரிவு என்பது உறுதிசெய்யப்பட்டது.


குறிப்பாக, புறாக்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அக்காலத்தில் உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எடுத்த படங்களை விட தெளிவாக இருந்தததை வல்லுநர்கள் உறுதி செய்தனர்.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பல கட்ட சோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட சாத்தியக் கூறுகள் மட்டுமே. உண்மையிலேயே இவற்றை பயன்படுத்தி எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது? அதன் மூலம் தெரியவந்த விவரங்கள் என்னென்ன? என்பது குறித்து சிஐஏ இன்னமும் கூட ரகசியம் காக்கிறது.

பிபிசி தமிழிலிருந்து..

Read more...

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலுள்ள குர்திய அகதி பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளராக நியமனம்.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி இங்கிலாந்தின் முன்னணி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையின் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள பிர்க்பெக் சட்டப்பள்ளியில் இம்மாத இறுதி முதல் அவர் பணியைத் தொடங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.

பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தங்கியிருந்த அவர், ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். கிறிஸ்துமஸ் நோக்கிய ஆபத்தான பயணத்தையும் 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியாவில் சிறைப்பட்டிருப்பது குறித்தும் இந்நூலில் எழுதிய இவர், இதற்காக பல விருதுகளை வென்றிருக்கிறார்.

தற்போது, மனுஸ்தீவு முகாம் மூடப்பட்டு அங்கிருந்த பூச்சானி உள்பட பெரும்பான்மையான அகதிகள் பப்பு நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பேயில் உள்ள சிறை அருகே அமைக்கப்பட்டிருக்கும் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை ஆஸ்திரேலிய மக்களுக்கு சொல்வதையே தனது கல்வி முயற்சிகளின் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளதாக குர்து அகதி பூச்சானி தெரிவித்துள்ளார்.

“ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புரியும் வகையிலேயே எப்போதும் நான் எழுதுகிறேன், அது முக்கியமென கருதுகிறேன்,” என ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பூச்சானி.

பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளிக்கு தலைமை வகிக்கும் பேராசிரியர் ஸ்டீவார்ட் மோதா, பூச்சானி அவர்கள் எங்கள் கல்வி மையத்திற்கு பெரும் சொத்தாக இருப்பார் எனத் தெரிவித்திருக்கிறார்.

அகதியாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள பூச்சானி, பப்பு நியூ கினியா தீவிலிருந்து வெளியேற அனுமதி இல்லாத காரணத்தால் இணையவழியாக அவர் பேராசிரியர் பணிகளை செய்யவிருக்கிறார்.

இதேநேரம் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானியரை மிட்டாய் கடையில் அடிமையாக வைத்திருந்ததாக மெல்பேர்னில் உள்ள மருத்துவர் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2015- 2017 ஆண்டுகளில் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரை கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தி வர்த்தகம் செய்ததாக சய்யத் பார்ஷ்சி (46) மற்றூம் நகஹ்மே மோஸ்தாபே (45) என்ற தம்பதியனர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழுநாட்களும் 14 மணிநேரம் அவர்கள் வேலை வாங்கியதாக ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பெர்ஷிய புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பின் போதும், நீண்ட நேரம் வேலைவாங்கியாதாகவும் மூன்று நாட்கள் கடையிலேயே இருந்ததாகவும் கூறியுள்ளார் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர்.

2013ம் ஆண்டு மனைவி மற்றும் மகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக இந்த தஞ்சக்கோரிக்கையாளர், கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மெல்பேர்ன் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Read more...

Friday, September 13, 2019

இலங்கையின் வெற்றிக்களை அங்கீகரிக்க வேண்டும் - ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும் என இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 42 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது..

கடந்த 2015 ஆம் ஆண்டில் கட்டாயப்படுத்தப்படல் மற்றும் பலவந்தமாக காணாமல் போனமை தொடர்பில் ஆராயும் செயற்குழு அளித்த பரிந்துரைகள் குறித்தும் நான்கு வருட பின்னணி தொடர்பிலும் தயானி மென்டிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு கட்டாய காணாமல் போகும் செயலும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் முன்னேற்றகரமானது என அவர் கூறினார்.

அதேபோல் இலங்கை அரசும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கமைய எந்தவொரு தடுப்புக்காவலுக்கு செல்வதற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய மூன்று சுயாதீன அலுவலகங்களை அமைத்தல், மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கு நட்டஈட்டை வழங்க ஒரு அலுவலகத்தை நிறுவுதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை பிரஜைகளினது மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

ஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதை பொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றத்திற்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்தமை, அவற்றை சூட்சுமாக விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக சந்தேக நபர்களை பொலிஸ் போதைப் பொருள் பணியகம் கைது செய்தது.

6 பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டவர்கள் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே நீதிமன்றத்தால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 7 சந்தேக நபர்களும் 3 குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டதை அடுத்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28.08.2019 ஆம் திகதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

Read more...

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண இருதரப்புப் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை - இந்திய, மீனவர் நெருக்கடி பற்றி இந்தியப் பாராளுமன்ற குழுவினருக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்றது..

இந்த பேச்சுரவார்த்தையின் போதே இணக்கம் காணப்பட்டது.இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிரதிநிதியும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சார்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்

Read more...

திங்கள் தாமரை கோபுரம் மைதிரியால் திறந்து வைக்கப்பட்வுள்ளது

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர கோபுரமான தாமரைக் கோபுரம் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

36 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட காணியில் அமைக்கப்பட்டுள்ள 13 அடுக்குகளைக் கொண்ட இந்த தாமரைக் கோபுரம் 350 மீற்றர் உயரம்கொண்டது.

சீனாவின்எக்னிக் வங்கியின் நிதி உதவியில் 104.3 மில்லியன் டொலர்கள் செலவில் இத் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் தொலைத் தொடர்புகள், நூதனசாலை, உணவுச் சாலை, சுப்பர் மார்க்கட், விற்பனை தொகுதிகள், உணவுத் தொகுதிகள், 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், உல்லாச ஹோட்டல் அறைகள், ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட கேட்போர் கூடம் மற்றும் போல் ரூம் அரங்குடன் பார்வையாளர் கலரி ஆகியவை அமைந்துள்ளன.

Read more...

ரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெற புதிய வியூகம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு கட்சியின் தலைவரும் பிரதித்தலைவரும் இணைந்து பிரசாரங்களை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டர்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவ பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நகர்வுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

(ஆர்.யசி)

Read more...

எல்பிட்டியாவை வெல்வது எனக்கு ஒரு முக்கியமல்ல... ஜனாதிபதி வேட்பாளராவதே குறிக்கோள்! - சஜித்

தற்போது சவாலாக இருப்பது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதே என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

அவ்வாறன்றி, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி கொள்வது அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் தங்கள் திறமையை எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தும், எதிர்க்கட்சியிடமிருந்தும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடப்பட்டிருந்தது.

Read more...

Thursday, September 12, 2019

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்க காலக்கெடு – நீதவான் கட்டளை

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் தற்கொலை குண்டுதாரியான முகமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள் எதுவும் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டுள்ளார்.

குறித்த தற்கொலை குண்டு தாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) மட்டு. நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

இதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனை மட்டு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க முற்பட்டபோது அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறே கள்ளிங்காடு மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஊள்ளுராட்சி மன்றங்களில் இததை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரவேடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்ட நிலையில் இதற்கு பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கல்லடி பாலத்தில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீதி மறியல் போராட்டத்தால் வீதிபோக்குவரத்து செயலிழந் ததையடுத்து பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர் புகைக்கண்டு தடியடி பிரயோகம் செய்து ஆர்பாட்ட காரர்களை கலைத்ததுடன் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட 5 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர்.

பொலிஸார் இந்த உடற்பாகங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதால் மாவட்டத்தில் அசாதாரண நிலை தோன்றியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுர்த்தனர் இதனையடுத்து கடந்த மாதம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்களை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து மீண்டும் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தற்கொலை குண்டு தாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

இதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை 26 த் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்பு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

ஸீஎப்என்

Read more...

வேட்பாளரை தீர்மானிக்க தனியான குழு - நவீன் திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

தலைவர் மற்றும் பிரதித் தலைவருக்கிடையிலான சந்திப்பின் போது குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தலைவரின் பக்கத்தில் இருந்து தினேஷ் வீரக்கொடியும் ராஜித்த சேனாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதித் தலைவரின் பக்கத்தில் இருந்து மத்தும பண்டாரவும் கபீர் ஹாஷிமும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நவீன் திசாநாயக்க கூறினார்.

பல கணிப்பீடுகளை ஆராய்ந்து, சிங்கள பௌத்த வாக்கு வங்கி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் போன்ற விடயங்களை ஆராய்ந்து, அதிக வாக்குகளைப் பெற முடியுமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என நவீன் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Read more...

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது - சுதந்திர ஊடக அமைப்பு

நாட்டில் சிறந்ததொரு ஆட்சியை முன்னெடுப்பதாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்த மாட்டேன் என்றும் உறுதியளித்து ஆட்சிபீடமேறிய ஒரு ஜனாதிபதியினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது

எனவே அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்வதுடன், சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுதந்திர ஊடக அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read more...

கல்விக்கு அதிகூடிய நிதி ஒதுக்கிய பிரதமர் நானே - ரணில்

கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன். எதிர்காலத்திலும் இந்த கல்வித் துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை நான் ஒதுக்க தயாராக இருக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கட்டிட திறப்பு விழாவும் இன்று (12) காலை 10.30 மணி அளவில் பாடசாலையின் அதிபர் என்.எம். சாபி தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருத்தினராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கௌரவ விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டுடனர்.இதன் போது இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நூற்றுக்கும் அதிகமாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இந்த பிரதேசத்திலே இருக்கின்றார்கள். இந்த பாடசாலையில் ஜே.ஆர். என்கின்ற கட்டிடம் ஒன்று இருக்கின்றது.

அதனை மீண்டும் நிர்மானித்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன். இந்த பிரதேசத்தில் இருக்கின்ற சிறந்த கல்வி கண்ணாக, இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த பாடசாலையை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.மேலும், இப்பாடசாலையின் விளையாட்டு மைதான புனரமைப்பு உட்பட பாடசாலையின் அபிவிருத்திக்காக பலர் என்னிடம் வந்து உதவிகளை கேட்டிருந்தார்கள்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சருடனும் ஆலோசித்து குறித்த அபிவிருத்திப் பணிகளுக்காக நிதியை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன். கல்விக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கீடு செய்த பிரதமராகவே நான் இருக்கின்றேன்.
1978 இல் இருந்து பல்வேறு அபிவிருத்திகளை செய்து இந்த கல்வித் துறைக்கு வித்திட்டவனாக நான் இருக்கின்றேன். எதிர்காலத்திலும் இந்த கல்வித் துறைக்காக பல மில்லியன் ரூபாய் நிதிகளை நான் ஒதுக்க தயாராக இருக்கின்றேன்.13 வருட பாடசாலை வாழ்க்கையை மாணவர்களுக்கு வழங்கி நல்லதொரு அறிவியல் சமூகத்தை உருவாக்குவதற்காக எதிர்காலத்திலே நல்லதொரு திட்டங்களை முன்வைத்துள்ளேன்.

தகவல் தொழில்நுட்பத்தை விருத்தி செய்வதற்காக நல்ல விடயங்களை இந்த அரசாங்கம் எடுத்துள்ளது. பட்டதாரி கல்வியற் கல்வி பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்த மாணவர்களுடைய வகுப்பறைகளையும் வழங்கக்கூடாது என்கின்ற திட்டத்தை கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ளது.

அதற்கு நாங்கள் அனுமதிகளை வழங்கி இருக்கின்றோம். பாடசாலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கல்வி மயமாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும். ´அண்மையில் உள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை´ என்ற தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் அகிலவிராச் காரியவசம் அவர்கள் பாடசாலைக்கு உபகரணங்கள், கட்டிடங்கள் என்பவற்றை வழங்கி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னைடுக்கின்ற அமைச்சராக இருக்கின்றார்.

அவருக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த வாரம் விசேட தேவையுடையவர்களுக்கான ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக விசேட தேவையுடையவர்களுக்கும் கல்வி போய் சேர வேண்டும். மேலும் 21 பல்கலைக்கழங்களில் 21 பல்கலைக்கழக பீடங்கள் அண்மையிலே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்படியான அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அமைச்சர் றிஷாட் பதியுதீன் முக்கியமாக இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். வீதி அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, பாடசாலைக்கு கட்டிடங்களை கொண்டு வந்து சேர்ப்பது, எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்தில் அதுவும் மன்னாரிலே சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார்.

Read more...

நாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

திலக் வீரசிங்க எனும் தொழிலதிபரின் மகளான லிமினி எனும் பெண்ணையே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.வீரகெட்டியவில் உள்ள கால்டன் இல்லத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது..

திருமண நிகழ்வுடன் தொடர்புடைய மத வழிபாடுகள் கொழும்பு கங்காராம விகாரையில் இன்று மாலை இடம்பெறவுள்ளன. மகிந்த ராஜபக்ஸவின் ஏனைய இரண்டு புதல்வர்களும் ஏற்கனவே திருமணம் செய்துள்ளனர்.

Read more...

கோத்தபாய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றினால் விடுதலை

எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு தொடர்பில் இந்த தீர்ப்பு, அச்சல வென்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாமினால் வழங்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, எவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழு தான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு சட்ட விரோதமானது என தெரிவித்து தன்னுடைய சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவை நிராகரித்து தொடர்ந்தும் வழக்கை நடத்திச் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பு சட்டவிரோதமானது என தெரிவித்து தான் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு ஒன்றை தாக்கல் செய்த போதும், குறித்த மனுவையும் நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக குறித்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மற்றும் குறித்த உத்தரவிற்கு எதிரான அடிப்படை மனுவை நிராகரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் ரத்துச் செய்தது.

இதேவேளை, போதிய அளவு சாட்சி இருந்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிய முறையில் வழக்கு தொடர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முடியும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு ஒன்றினை விடுத்து குறிப்பிட்டுள்ளது.

Read more...

காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வட மாகாணம், மற்றும் வட மத்திய மாகாணம் என்பன கடும் மழை மற்றும் மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் இவ்விடயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலானது, நாளை முற்பகல் 9.00 மணி வரை செல்லுபடியாகும் எனவும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி கீழ்வரும் விடயங்களிலும் அவதானம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்றத்தில் அல்லது மரங்களின் கீழே அமர்ந்திருக்க வேண்டாம்.

வயல், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டுத் திடல்கள், நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் நிற்க வேண்டாம்.

வயர்களுடன் கூடிய தொலைபேசிகள், மின் இணைப்புக்கள் என்பவற்றை உபயோகிக்க வேண்டாம்.

துவிச்சக்கரவண்டி, ட்ரக்டர்கள், படகுகள் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

கடும் மழை காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் என்பன சரிந்து விழலாம் என்பதனால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாக இருங்கள்.

அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.

Read more...

ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புவைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள வியாபாரியை, எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ரங்க திசாநாயக்க ஆணையிட்டார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் சட்டத்தின் பிரகாரம் 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று குறிப்பிட்ட நபரை நீதிமன்றத்தில் ஒப்படைத்த போதே, நீதவான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதற்கேற்ப, இவ்வாறு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் மட்டக்களப்பு - காத்தான்குடியைச் சேர்ந்த அஹமட் மொஹமட் அர்ஷாத் எனும் வியாபாரியாவார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஓட்டலில் இடம்பெற்ற தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஏற்பவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த சந்தேகநபரை நீமின்றில் ஆஜர்படுத்தினர்.

Read more...

கோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே...! சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு!

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியும் என, நாடளாவிய ரீதியல் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் சிசிர பின்னவல குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின்ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடும்போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால், அவர் மூன்றாவது இடத்தையே பெறுவார் என்றும் பேராசிரியர் பின்னவல குறிப்பிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சேர்ந்த குழுவொன்றினால், வாக்காளர்களை 08 வலயங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும், கோத்தபாயவுக்கு சரிநிகராக 07 வலயங்களில் மக்கள் ஆதரவு உள்ளது தெளிவாகியுள்ளதாகவும், சஜித் பிரேமதாசவுக்கு 04 வலயங்களில் மட்டுமே ஆதரவு உள்ளது தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கேற்ப கொழும்பு மாநகர சபை, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, மஹரகம, கோட்டை, உள்ளிட்ட தொழிற்பேட்டை, கண்டி, காலி, மாத்தறை, குருணாகலை உள்ளிட்ட நகர்ப் பிரதேசங்கள், தென் மற்றும் வட மேல் மாகாணம், வட மத்திய மாகாணம், கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட கிராமிய பெளத்த வலயங்கள், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வட மேல் மாகாணத்தின் வட பகுதி உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள பகுதிகள், வடக்கு கிழக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள், கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள், நாட்டின் உட்பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகள், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் என்பன இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ராஜகிரியில் அமைந்துள்ள நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் பிரதான அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பின்னவல அவ்வாறு தெரிவித்தார்.

காெழும்பு மாநகர எல்லைப் பிரதேசம், நாட்டில் அபிவிருத்தியடைந்துவரும் பிரதேசங்கள், தோட்டங்கள், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழ்ப் பிரதேசங்கள், தெற்கில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசங்கள் என்பவற்றில் கரு ஜயசூரிய வெற்றிபெற முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

Read more...

Wednesday, September 11, 2019

தாயின் சடலத்துடன் மகன் மாயம். பொலிஸார் பொதுமக்கள் வலைவிரித்து தேடுகின்றனர்.

வட்டவலை பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டம் ஒன்றில் மரணமடைந்த தனது தாயின் சடலத்துடன் அவரது மகன் மாயமாகியுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேகம் அடைந்துள்ள மக்கள் பொலிஸாரிடம் முறையிட்டு தலைமறைவான நபரை தேடி வலை விரித்துள்ளனர்.

70 வயதுடைய ராகை என்ற பெண்மணி தோட்டத்தில் இறந்ததை தொடர்ந்து அவரது சடலத்துடன் மகன் முச்சக்கர வண்ணி ஒன்றில் மாயமானதாக தோட்டத்தை சேர்ந்த மக்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண்மணி கொலை செய்யப்;பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடும் மக்கள் சந்தேக நபரை தேடி வலைவிரித்துள்ளனர்.

Read more...

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைக்கு விரைவில் தடை - நீதி அமைச்சர்

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைக்கு விரைவில் தடை செய்யப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமையபாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்வதற்கு தேவையான சட்டமுறைகள் விரைவில் கொண்டுவரப்படும் எனவும், நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளாமை காரணமாக சமூகமானது பாரிய பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இரணைமடு விடயம் வடக்கு ஆளுநர் எந்த நடவடிக்கையும் இல்லை -கணேஸ்வரன் வேலாயுதம்

இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தினால் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20.08.2019 திகதியிடப்பட்ட கடிதத்திற்கமைய இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டு மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

கடந்த டிசம்பர் மாதம் இரணைமடுக்குள வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநரால் விசாரணை குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மூன்று கட்ட விசாரணை அறிக்கையும் 29.06.2019 இல் தமக்கு கிடைக்க பெற்றதாக வடமாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்

விசாரணை அறிக்கைக்கு அமைய தவறுகள் ஊழல்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கான தண்டனைகள் சட்டரீதியான ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படாமலே இருந்து வருகிறது.
எனவே விசாரணை அறிக்கையினை வெளியிட்டு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி 23.07.2019 திகதியில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதனை தொடர்ந்து 20.08.2019இல் வடமாகாண ஆளுநருக்கு இரணைமடுக்குள விசாரணை அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக்குள புனரமைப்பிற்கு பின்னரும் கிளிநொச்சியில் இன்றும் தண்ணீர்ப்பிரச்சனை தொடர்ந்த வண்ணமுள்ளது. 35000 மக்கள் தொடர்ந்தும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சியை பொறுத்த வரை இரணைமடுக்குள நீர் முகாமைத்துவம் பொருத்தமான கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவில்லை.

இதனால் எதிர்காலத்திலும் மக்கள் வறட்சியினால் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். பல மில்லியன் ரூபா செலவில் குளம் புனரமைக்கப்பட்டும் அது மக்களுக்கு பயனற்றதாகவே காணப்படுகிறது.எனவே இது தொடர்பில் பொருத்தமான நீர் முகாமைத்துவம் ஒன்றினை அமைத்து செயற்படுத்துமாறும் தயவுடன் வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சவேந்திர சில்வா நியமனம் இலங்கையின் இறையான்மைக்குட்ப்பட்ட விடயம் - ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர்

இலங்கை இராணுவத்தளபதியின் நியமனத்தைப் பொறுத்தவரை, அது நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட வகையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானமாகும்.

அத்தீர்மானம் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் வெளியகத் தரப்புக்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தேவையற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும் ஆகும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வுப் பேச்சுக்களை முற்றாகத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் முயற்சிகளை எடுத்துவரும் அதேவேளை, அது இனமத அடிப்படையில் சில சமூகத்தவரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் மத ரீதியான அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உறுதிபூண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான தூதுவர் ஏ.எல்.ஏ.அஸீஸ் இன்றைய அமர்வில் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com