Wednesday, September 11, 2019

ரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்துள்ளது.

அந்தப் பேச்சுவார்த்தையானது நேற்று இரவு (10) இரவு 9.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இப்பேச்சுவார்த்தை சென்ற ஞாயிறன்றே இடம்பெறவிருந்தது. என்றாலும், அது நேற்றைய தினத்திற்குப் பிற்போடப்பட்டது.

தனக்கும் பிரதமருக்கும் இடையே மிகவும் மிகச் சிறப்பாக இந்த உரையாடல் நடைபெற்றதாகவும், எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருக்கின்றது என அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்தார்.

Read more...

ஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு!

ஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

'தருகிறேன்... தருகிறேன்... பிரச்சினை ஏற்படுத்தாதீர்கள்' என தான் மிகவும் கஷ்டத்துடன் கூறி, அவ்விடத்தை விட்டும் நகர்ந்து வந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கெகிராவ வித்தியாலத்தில் இடம்பெற்ற ஆசிரிய நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 11 முஸ்லிம் பயங்கரவாத சந்தேக நபர்கள் ரிஐடி யிடம் ஒப்படைப்பு.

அம்பாறை மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் 11 உறுப்பினர்கள் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள மேற்படி இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மேற்படி நபர்கள் அரச புலனாய்வுத் பிரிவினர் வழங்கிய தகவல்களின் பிரகாரம் அம்பாறை விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபர்களின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தெளிவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக 11 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த மாதம் 3ம் திகதியிலிருந்து ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் அம்பாறை விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன் அதில் ஒருவர் அனுராதபுர மாவட்டத்திற்கான தலைவராக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Tuesday, September 10, 2019

தாமரை மொட்டுக் குறியீட்டை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம்...!

எக்காரணத்திற்காகவும் யார் என்ன சொன்னாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது தாமரை மொட்டுக் குறியீட்டை மாற்றமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.

இன்று (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் தாமரை மொட்டுக் குறியீட்டை மாற்ற மாட்டோம். அதற்கு உடன்படவும் மாட்டோம். தாமரை மொட்டென்பது இந்நாட்டு மக்களை வெற்றியின்பால் கொண்டு செல்லும் குறியீடாகும். அதனால் எவ்வாறான தலையீடுகள் வந்தாலும் எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் நாங்கள் தாமரை மொட்டுக் குறியீட்டை மாற்ற மாட்டோம்.

Read more...

ஆயுதபலத்தால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது -சஜித் பிரேமதாஸ

இராணுவபலம் மற்றும் ஆயுதங்களினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. ஆயுதபலம், இராணுவம் பலம், உளவுத் துறையினர் ஒரு நாட்டுக்கு முக்கிய தேவையாகவுள்ளது. இது தொடர்பில் எவ்வித தர்க்கங்களும் மாற்றுக் கருத்துக்களும் தேவையில்லை என வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் சிப்பிக்குளம் கிராமத்திலுள்ள ரஹூமானிய்யா அஹதிய்யா பாடசாலைக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

நாட்டின் சகல இனத்தினற்கும் மதத்திற்கும் ஒன்றாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி அவர்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போன்று வாழ்வதற்கான சூழலினை ஏற்படுத்த வேண்டும்.

இன்று நாட்டினுள் பாரியதொரு விவாதம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக நாம் மிகவும் முக்கியமான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இராணுவபலத்தினால், ஆயுதங்களினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. ஆயுதபலம், இராணுவம் பலம், உளவுத் துறையினர் தேவையாகவுள்ளது. இது தொடர்பாக எவ்வித தர்க்கங்களும் மாற்றுக் கருத்துக்களும் தேவையில்லை.நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுடனும் சகல சமயத்தவர்களுடனும் தொடர்புடையவர்கள் என்பது சகல பிரசைகளின் இதயத்திற்கும் விளங்க வேண்டும். இனத்தினால், மதத்தினால் நாம் இன்னல்களுக்கு ஆளாகவில்லை.

இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அறநெறிக் கல்வியினை தொடர்வதற்கு வசதியற்றிருந்த சிறார்களுக்காக இந்த கட்டிடத்தினை நிர்மாணித்து கொடுத்ததினூடாக தற்பொழுது அவர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி சமய கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது இதற்காக எனக்கு ஒத்துழைப்பினை வழங்கிய பிரதேச அரசியல் வாதிகள் உட்பட நன்கொடையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

சிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ

சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்று பழுத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கிறார்.

சமூக ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் அவரிடம் செய்தியாளர் சிங்கள பௌத்தர் ஒருவரினால் மாத்திரம் தான் ஜனாதிபதியாக வரமுடியுமா என்று கேட்டபோது அவர் சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டு வேட்பாளர் கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தாலேயே வெற்றி கிட்டும் என்று குறிப்பிட்டார்.

ஆனால், உடனடியாகவே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானதன் மூலமாக சாதி அமைப்புமுறையை தகர்த்ததையும் நினைவுபடுத்த வாசுதேவ தவறவில்லை.ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாசுதேவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவை ஆதரிக்கிறார்.

பிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள பௌத்த கொவிகம முக்கியஸ்தர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரேமதாச ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி நிலவிய காலத்து சூழ்நிலை அவசியப்படுத்திய தேவையின் காரணமாகவே ஜனாதிபதியாக வந்தார்.என்றாலும் கூட அன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த உயர்சாதி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள்.

தற்போது சிங்கள பௌத்த கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக வெற்றிபெற முடியும்.ஜனாதிபதியாக சிங்கள பௌத்த கொவிகம மாத்திரமே தெரிவுசெயயப்பட முடியும் என்ற மனநிலையே நாட்டில் நிலவுகிறது. ஜனாதிபதி பிரேமதாசவின் நியமனத்துடன் நாம் நிப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியே வந்தோம்.அதை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயவேண்டும் என்று வாசுதேவ கூறினார

கொழும்பில் சாதி முறைமை குறிப்பிட்ட அளவுக்கு தவிர்க்கப்பட்டுவிட்டது என்பதை ஒத்துக்கொண்ட நாணயக்கார, வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சாதிமுறைமை உறுதியானதாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இன்று சஜித் பிரேமதாச முகங்கொடுக்கின்ற பிரச்சினை போன்றே அன்று அவரின் தந்தையார் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சித்ததை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உயர்மட்டத்தவரும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுகின்றவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள் என்று கூறிய அவர், தேசிய உடையின் தாக்கத்தையும் மக்களின் வாக்குகளைக் கவருவதில் அந்த உடைக்கு இருக்கும் ஆற்றலையும் பற்றி குறிப்பிடுகையில், " அந்த உடை மக்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதால் தாக்கம் ஒன்றைக் கொணடிருக்கிறது.மக்கள் தனிப்பட்ட முறையில் தாங்கள் தேசிய உடையை அணிவதில் ஆர்வத்தைக் காட்டுவதில்லை என்ற போதிலும், தங்களது தலைவரின் ஊடாக தேசிய அடையாளம் வெளிக்காட்டப்படுவதை விரும்புகிறார்கள்" என்று விளக்கமளித்தார்.

சிங்கள பௌத்த தலைவர் ஒருவர்தான் நாட்டுக்கு தேவையா என்று நாணயக்காரவிடம் கேட்டபோது, " எமக்கு சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை, சகல இனங்களையும் சேர்ந்த மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இலங்கைத் தலைவரே தேவை.எவ்வாறெனினும், சிங்கள பௌத்தர்களே நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால், தேரர்தல் ஒனறில் சிங்கள பௌத்தர்களின் முன்னிபந்தனை இல்லாமல் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது கஷ்டமான காரியமேயாகும்.எனவே, சிங்கள பௌத்த சக்திகளின் செல்வாக்கு இல்லாமல், முழு நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் ஒருவரைக் கொண்டுவருவது கஷ்டமானதேயாகும் " என்று பதிலளித்தார்.

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடாது.ஆனால், பிரதானமாக அவர்களே பெரும்பான்மையினராக ஆதிக்கநிலையில் இருப்பதால் அவர்களின் கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கிறது.

சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக இருப்பதால், சிங்கள பௌத்தத்தின் மீது அதன் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதால் அந்த நியமங்களை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.ஆனால், அந்த காரணத்துக்காக இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குத்தான் சொந்தமானது என்று நாம் உரிமைகோரக்கூடாது என்றும் 80 வயதான நாணயக்கார கூறினார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய நியமிக்கப்படுவதை நாணயக்கார முன்னர் எதிர்த்துவந்தார். இப்போது அவரே வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அது குறித்து கேட்டபோது கோதாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் மீதான தனது கண்டனப்பார்வை மாறிவிட்டது என்று பதிலளித்தார்.

Read more...

தோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

நீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறந்த தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் உடலை குறித்த இடம் ஒன்றில் அடக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை அடக்க செய்வதாக கூறி தோட்ட நிர்வாகம் நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவையும் பெற்றிருந்த. இந்த நிலையில் பிரதி அமைச்சர் துணிந்து நின்று அதே இடத்தில் உடலை அடக்கம் செய்துள்ளார். இதனால் நீதி மன்ற உத்தரவை மீறி உடலை புதைத்த குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு எதிராக இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் பாலித தேவரப்பெரும உட்பட 6 பேருக்கு இவ்வாறு நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.

Read more...

மரணதண்டனைக்கு 94 வீதமான யாழப்பாணத்தவர்கள் ஆதரவு

இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு 94 வீதமான யாழப்பாண மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் என கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறுது.யாழ். கோட்டை முற்றவெளியில் தற்போது இடம்பெற்று வரும் என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா கண்காட்சியில், மரண தண்டனை தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 94 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.

இந்த கண்காட்சி இடம்பெறும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலக அலுவலக கூடத்தில் இக்கருத்துக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது.இதற்கான பதிலை விசேட தொடுதிரையை (Touch Screen) பயன்படுத்தி வழங்குவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 07 முதல் நான்கு நாட்களாக இடம்பெற்றுவரும் இக்கண்காட்சி இன்றுடன் (10) நிறைவுக்கு வருகின்றது.

10,000 தொழில் முதலீட்டாளர்கள் உருவாக்கும் நோக்கில் யாழ். மண்ணில் இடம்பெறும் இக்கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Read more...

மைத்திரி ஆரம்பித்தார் ஆட்டத்தை! ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ்.

சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தை, நேற்று நள்ளிரவில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வந்துள்ளார்.

முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று நள்ளிரவில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக, சிறிலங்கா அதிபர் நேற்றிரவு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் நியமனம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக, எழுந்த சர்ச்சைகளை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, எந்த நேரத்திலும் அதிபர் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

Monday, September 9, 2019

ருஹூணு பல்கலைக்கழத்தில் பகிடிவதையில் ஈடுப்பட்ட 19 மாணவர்களுக்கு விளக்கமறியல்

பகிடிவதை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ருஹூணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்கள் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதிபதி இசுறு நெத்திகுமார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.ருஹூணு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கொடூரமான முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவன் உட்பட இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் 19 மாணவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

சித்திரவதைக்கு முகம் கொடுத்த மாணவன் தான் எதிர்நோக்கிய அசம்பாவிதம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து விடயங்களை கூறியிருந்தார்.

அதன்படி, சந்தேகத்திற்கிடமான மாணவர்களை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பணிப்போருக்கு மத்தியில் நாளை ரணில் சஜித் சந்திப்பு

பணிப் போருக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நாளை (10) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெறவிருந்தது.

எனினும், இந்தக் கலந்துரையாடல் பிற்போடப்பட்டதால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்தினால், அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதனால் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை முன்நிறுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரும் அறிவிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ பெயரிடப்பட்டுள்ளார்.

இவர் இந்தக் கட்சியின் பிரசார செயலாளராக செயற்படுகின்றார்.முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சில இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் சார்பாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ களமிறங்கினார்.

2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராகவும் துமிந்த நாகமுவ செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதியாக வந்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு சஜித்தும் அறிவிப்பு

ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தெரிவித்துள்ளார்

காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாச முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச கண்காட்சியையும் பார்வையிட்டார். இதன் போது அங்கு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒருவரின் தாயார் சஜித் பிரேமதாசவுடன் பேசுவதற்காக அவரை நெருங்க முற்பட்டிருந்தார்.
இருந்த போதும் அவருடைய பாதுகாப்பு பிரிவினர் அந்த தாயாரை தடுத்து நிறுத்தி விட்டனர்.

இதன் போது அங்கு நின்ற யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிடம் உரையாடிய குறித்த தாய் தான் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சஜித் பிரேமதாசவிடம் ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் ஏற்பாட்டில் அந்த தாய் அங்கு வைத்தே சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.
இதன் போது அந்த தாயார் சஜித் பிரேமதாசாவை பார்த்து நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிகின்றோம்.
நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை தரவேண்டும்.

இதனை யாழ்.மாநகர முதல்வர் சஜித் பிரேமதாசவிற்கு சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச காணாமல் போனோர் விடயத்தில் நான் கரிசனையுடன் செயற்படுவேன். காணாமல் போனார் பற்றிய அலுவலகம் அதன் செய்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்

Read more...

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ரணிலை ஆஜராகுமாறு அழைப்பானை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்படவுள்ளது

கடந்த வருடங்களில் அரச நிறுவலனங்களில் இடம்பெற்ற மோசடி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி காலை 9.30 இற்கு ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானை பிரதமரின் செயலாளர் அலுவலகத்திற்கும் அலரி மாளிகைக்கும் தொலைநகல் மூலம் நாளை (10) அனுப்பி வைக்கப்பட்டும்

Read more...

புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் - கோத்தாவை ஆதரிக்கிறார் முரளி

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவர் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளிற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம்,

1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்ட அனைத்து அழிக்கப்பட்டன எனது தந்தை தாக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழவிரும்பினோம் நான் இலங்கையன்.

இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர்.

அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர்.

நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தோம், நான் பெலவத்தையில் வசித்தவேளை எந்நேரமும் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை, கொழும்பும் அச்சத்துடனேயே வாழ்ந்தது.

தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.

மக்களிற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான தலைவரிற்கே நான் வாக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புலனாய்வுத்துறை மீதான குற்றச்சாட்டுக்களை ஜேபிவி யின் மேடையில் நின்று நிராகரிக்கின்றார் முன்னாள் பிரதி பணிப்பாளர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து புலனாய்வுத் பிரிவினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக முன்னாள் புலனாய்வு பிரிவின் பதில் பணிப்பாளர் கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் இயக்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தேசிய பாதுகாப்புக் கொள்கை ஒன்று நடைமுறையில் இல்லைமையே பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, புலனாய்வு அதிகாரிகள் அசமந்தமாக செயற்பட்டிருந்தாலும் அதன் பின்னர் செயற்பட வேண்யவர்கள் தங்கள் பொறுப்பை புறக்கணித்துள்ளதாக கொலோன் கூறினார்.

உளவுத்துறையின் கவனயீனத்தால் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை தான் முற்றாக புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் உத்தரவுகளை நிறைவேற்ற உளவுத்துறையினர் கடமைபட்டுள்ளதாகவும் ஆனால் இந்த தாக்குதல் குறிப்பிட்ட ஒருவரின் தேவைக்காக நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு இல்லாவிடின் எந்தவொரு உளவுத்துறை அதிகாரிக்கும் இந்த தாக்குதலை நடத்த வேண்டிய அவசியமில்லை இருக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Read more...

Sunday, September 8, 2019

மொட்டை கைவிடவே மாட்டேன். சுதந்திரக் கட்சிக்கு கோட்டா ஒரே சொல்லில் பதில்!

மொட்டு சின்னத்தைக் கைவிட்டு, வேறோரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனையை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன்னதினம் கோத்தபாயவுடன் சி.சு.க முக்கியஸ்தர்கள் சந்தித்து பேசினர். இதன்போது “சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது மொட்டு சின்னத்தை மாற்றி, வேறொரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியிருக்கின்றார்.

இது கடினமான நிபந்தனை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சின்னம், இப்போது, அவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறது. அதனை கட்சி அடையாளம் கண்டுள்ளது.

மொட்டு சின்னத்துக்கு மாற்றுச் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்ட போது, முதலில் அதனை ஜி.எல்.பீரிசும், பசில் ராஜபக்சவும் நிராகரித்திருந்தனர்.

கடந்தவாரம் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விவகாரத்தை தயாசிறி ஜயசேகர மீண்டும் கையில் எடுத்தார்.

எனினும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச, சின்னத்தை மாற்றுகின்ற பேச்சுக்கே இடமில்லை என்று நிராகரித்து விட்டார்.

‘பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளாமலேயே அந்தக் கட்சி என்னை அதிபர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

மொட்டு சின்னம் நாடெங்கும் எமது சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்ற முடியாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

Read more...

Saturday, September 7, 2019

இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது சந்திரயான் – 2 விண்கலம்

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலவிற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நிலவில் அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தனர்..

இந்த விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளைக் கொண்டது. இந்த 3 பகுதிகளிலும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சுமந்து கொண்டு சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணுக்கு புறப்பட்டது.

கடந்த 2 ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அமைப்பு தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்தது. 2 தடவை விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப் பாதை குறைக்கப்பட்டு நிலவுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியானது.

இதனையடுத்து, விக்ரம் லேண்டர் 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போது தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

Read more...

வடக்கில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை தெற்கிலும் கொல்லப்பட்டனர் - சம்பிக்க ரணவக்க

இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மக்கள் தங்களின் நாட்டிலேயே ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ நடை முறை சாத்தியமான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பான மாநகர மண்டப கட்டிட நிர்மாணம் அரசியல் நோக்கம் கொண்டு செய்யப்படவில்லை.அதில் எவ்வித குறுகிய சிந்தனைகளும் இல்லை.நாம் ஆட்சிக்கு வந்தது முதல் அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.இந்த கட்டிடத்தை அமைக்க வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முன்னர் நான் இங்கு வந்திருந்தேன்.இங்குள்ள அதிகாரிகள் அனைவரையும் இணைத்து அவர்களின் கருத்துகள் அபிப்பிராயங்கள் எல்லாம் கேட்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எமது நாடு கடந்த காலங்களில் பல இன்னல்களை சந்தித்தது.நாட்டில் கிளர்ச்சி,உள்நாட்டு போர் காரணமாக பல பாதிப்புகளை சந்தித்தோம்.வடக்கில் மட்டும் மக்கள் கொன்றளிக்கப்படவில்லை.தெற்கிலும் 60 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கொன்றளிக்கப்பட்டனர்.இந்த பாதிப்புக்களினால் தமிழர்கள் அதிகமாக கனடாவிலும் சிங்களவர்கள் அதிகமாக அவுஸ்திரேலியாவிற்கும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.எனவே நாட்டில் உள்ளவர்கள் புலபெயர் நாடுகளுக்கு தப்பித்து செல்லாது இங்கு வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.என்றார்

Read more...

தேர்தல் காலத்திலயாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம்

தேர்தல் காலத்திலயாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன்.யாழ் மாநகர சபை மண்டபம் வெறுமனே சின்னமாக இருக்காது எமது அடிப்படை அரசியல் சிந்தனைகளை மாற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.யாழ்ப்பான மாநகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைத்தானத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.

நாம் பேச்சை குறைத்து கடினமாக உழைக்க வேண்டும்.யாழ்ப்பான மாநகர சபையின் வரலாற்றினை யாரும் மறக்க முடியாது.அது மறக்கக் கூடிய வரலாறு அல்ல.ஏனெனில் அது மக்களின் கண்ணீரிலும் இரத்தத்தினாலும் உறைந்துள்ளது.இப்போது அழிந்த மாநகர சபை மண்டபம் மீண்டும் கட்டியெழுப்படவுள்ளது.இது அபிவிருத்தியில் ஓர் வரலாற்றுத் திருப்பு முனை என்று கூறலாம்.

யாழ்ப்பான மாநகர சபை இலங்கை சுதந்திரம் அடைந்து ஒரு வார காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டது.அப்போதிலிருந்தே இயங்கி வந்தது.நாட்டில் இடம்பெற்ற வன்முறையான காலத்தில் மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துறையப்பாவும் படுகொலை செய்யப்பட்டார்.இவ்வாறாக பல வரலாறுகள் உள்ளது.எனவே இந்த கட்டிடம் அமையப்பெறுவது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திப் பயணத்தில் புதிய திருப்பு முனையாக அமைய வேண்டும்.

தேர்தல் காலத்திலயாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன்.வெறுமனே சின்னமாக இருக்காது எமது அடிப்படை அரசியல் சிந்தனைகளை மாற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும்.வெறுமனே இந்த கட்டிடத்தை கட்டி முடிப்பதுடன் மட்டுமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பான மக்களுக்கு ஜனாயகத்தை கட்டிஎளுப்பும் கேந்திர நிலையமாக யாழ் மாநகர சபை மண்டபம் அமைய வேண்டும்.என்றார்

Read more...

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் ​போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வாங்க போவதில்லை

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் வகையில் முன்னெடுக்கும் ​போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரைிவித்துள்ளார்பிரதமர், சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசிர்வாதத்துடனேயே தான் தேர்தலில் களமிறங்க முன்வருவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

நாட்டை முன்னேற்றும் செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் ஒன்று தன்னிடத்தில் உள்ளதெனவும், பொதுமக்கள் வயிற்றுப்பசி இல்லாமல் வாழ்க்கைச் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நாட்டின் வருமானம் ஒரு குடும்பத்துக்கு மாத்திரம் பயனளிப்பதாக இருக்க கூடாதெனவும், சாதாரண மக்கள் கைகளில் நாட்டின் வருமானம் சென்றடைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தன்னை பற்றி சிலர் தவறான் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவித்த அவர், ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் 10 முறை தன்னை பிரதமராக பதவியேற்று கொள்ளுமாறு கூறிய போதும், 52 நாள் அரசாங்கத்தில் 60 முறை அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தான் ஏற்கவில்லை எனவும், பின்கதவால் பதவியேற்கத் தான் ஒருபோதும் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

அதனால், மக்கள் ​ தோல்களின் மீது ​ஏறிதான் இலக்கை நோக்கி பயணிப்பேன் என்றும், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க வேண்டுமெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் சூழ்ச்சிகளால் அரசியல் செய்யப்போவதில்லை எனவும், சிலரால் தனது நேர்மையை பொறுத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுவாதாகவும், தான் பிறந்த நாள் முதல் தந்தையின் பழக்கம் தனக்கு தொற்றிக்கொண்டதெனவும் தெரிவித்தார்.

அதனால் செல்வந்தர்கள் தன்னை எதிர்த்தாலும் சாதாரண மக்கள் தன்னை ஏற்றுகொள்வர் எனத் தெரிவித்த அவர், பின்கதவால் பதவி வகிக்க விரும்பாத தான் வெற்றிபெற்ற பின்பும் அரச மாளிகைகளில் குடியிருக்க போவதில்லை எனவும், பொது மக்களுடன் வீதியிலேயே இருப்பேன் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் எந்த மோசடியும் இல்லாத தன்னை வேட்பாளராக களமிறக்க தயங்குவதன் நோக்கம் தனக்கு புரியவில்லை எனவும், 71 முறை தனது தலைவரை காப்பாற்றிய தனக்கு கட்சி மீது அந்த பற்று உள்ளதெனவும் தெரிவித்தார்.

அவ்வாறிருக்க தன்னை வேட்பாளராக அறிவிக்க எவ்வளவு தயங்கினாலும் ஒரு அடியேனும் பின்வாங்கபோவதில்லை எனவும் தெரிவித்தார்.

Read more...

யாழ் மாநகர மண்டபத்திற்கு அடிக் கல் நாட்டும் நிகழ்வுக்கு 2.7 மில்லியன் செலவு

2.7 மில்லியன் உபரசரனை மற்றும் நிகழ்வுக்கான செலவுகள் மேற்கொள்ளப்பட்டு 2350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) நாட்டி வைத்தார்.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா யாழ்.மாநகர முதல்வர் இ . ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வாறு அமையவுள்ள குறித்த மண்டபத்திற்காக 2019 ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த . சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Read more...

எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை: காலவரையின்றி ஆஸ்திரேலிய சிறையில் இருக்கும் நாடற்றவர்கள்.

ஆஸ்திரேலிய குடியுரிமை பெறாதவர் அல்லது அகதியாக அடையாளம் காணப்படாதவர் என அறியப்படும் நபரை நாடுகடத்தும் வரை சிறைப்படுத்தி வைக்க ஆஸ்திரலிய சட்டம் அனுமதிக்கின்றது. அந்த வகையில் 45 ஆண்கள், 5 பெண்கள் உள்பட நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

சயித் இமாசி அதில் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, முறையான கடவுச்சீட்டு மற்றும் விசாயின்றி ஆஸ்திரேலியா சென்ற அவர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். எந்த நாட்டில் தான் பிறந்தேன் என்று அறியாத அவரை நாடுகடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1980 களின் பிற்பகுதியில் கேனரி தீவுகளில் பிறந்திருக்கலாம் என எண்ணும் அவர், ஸ்பெயினில் உள்ள ஓர் ஆதரவற்றோர் காப்பகத்திலிருந்ததையே முதல் நினைவாக குறிப்பிடுகிறார். 9 வயதாக இருந்த போது அங்கிருந்து தப்பியோடிய அவர், பாரிஸிலும் பிறகு பெல்ஜியத்திலும் இருந்ததாக கூறுகிறார். அங்கு ஒரு வீட்டில் அடிமையாக இருந்த சூழலில் நெதர்லாந்துக்கு தப்பியுள்ளார். அங்கு ஒரு சர்வதேச குற்றம் கும்பல் அவரை போதை மருந்து கடத்தவும் பணமோசடி செய்யவும் பயன்படுத்தியுள்ளது. அக்கும்பலிலிருந்து வெளியேற முயன்ற இமாசி போலியான நார்வே கடவுச்சீட்டு மூலம் ஆஸ்திரேலியா வந்து நியூசிலாந்தை படகு வழியாக அடைய முயன்றிருக்கிறார். அவர் 2010ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் போலியான ஆவணங்களில் வந்ததற்காக கைது செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இமாசி வழக்கை விசாரித்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அவரை விடுதலை செய்யக்கோரியது. ஆனால் அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இதே போன்று ஈராக்கிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த 16 வயது அகமது ஷலிகான் தொடர்ந்து தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஈராக்கில் வசித்த குர்து இனத்தைச் சேர்ந்த அவருக்கும் அவரது தாயாருக்கும் அதிகாரப்பூர்வமாக எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க இயலவில்லை. இந்த சூழலில், அவரது தாய்க்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டுள்ள போதிலும் அகமது ஷலிகான் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளார். அவர் தடுப்பில் இருந்த போது செய்த சிறிய தவறை பயன்படுத்தி குணநலன் அடிப்படையில் அவர் ஆஸ்திரேலிய சமூகத்தில் வாழ விசா மறுக்கப்பட்டுள்ளது.

50 பேர் நாடற்றவர்கள் என்பதற்காக அவர்களை ஆஸ்திரேலியா காலவரையின்றி தடுப்பில் வைத்திருப்பது ஏன் என எழுப்பப்படும் கேள்விக்கு ஆஸ்திரேலிய உள்துறை மற்றும் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தொடர்ந்து பதலளிக்க மறுப்பதாக 7நியூஸ் என்ற ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.



Read more...

ஸஹ்ரான் பற்றிய இரகசிய தகவல்கள் சர்வதேசத்திலிருந்து இலங்கைக்கு....!

உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட தகவலுடன் தொடர்புற்ற இரகசிய தகவல்கள் முப்பத்து மூன்றினை (33)யும், ஸஹ்ரான் கோஷ்டியினரின் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்த தகவல்கள் வெவ்வேறாகவும், தொலைபேசி இலக்கங்களும் இண்டர்போலினாலும், அமெரிக்க எµa. பீ. ஐ பொலிஸாரினாலும் அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் பிரிவினவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க எµa. பீ. ஐ. பொலிஸ் கைத்தொலைபேசி சிடிசன் ஆய்வு முறைமையின் கீழ், ஆய்வு நடாத்துகையில் தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஸஹ்ரான்தொடர்புபட்டிருந்தோர் பற்றிய தகவல்களும், கணினி உபகரணங்களில் அழித்துவிட்டிருந்த தகவல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தத் தொழிநுட்ப வசதிகள் இலங்கை பாதுகாப்புப் படையினரிடமோ பொலிஸாரிடமோ இல்லை.

அமெரிக்க எµa. பீ. ஐ. பொலிஸ் விசாரணைக் குழுவொன்றின் மூலம் கைதுசெய்யப்பட்டுள்ள அடிப்படைவாத ஜமாஅத் செயற்பாட்டாளர்களின் தகவல்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடாத்துவதற்கு முன்னர், தெளஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களிற் சிலரிடமிருந்த கைத்தொலைபேசிகளிலும் கணினிகளிலும் இருந்த தகவல்கள் கணினித் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரினால் அழிக்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தொழில்நுட்ப வல்லுநர் இதுவரை அகப்படவில்லை.

மேலும் சர்வதேச பொலிஸாரிடம், வெளிநாடுகளில் உள்ள 50000 பயங்கரவாதிகளின் தகவல்கள் உள்ளடங்கிய தகவல் களஞ்சியத்தினுள் பொலிஸார் உள்நுழைவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.

Read more...

Friday, September 6, 2019

கோத்தாவுடன் ஸ்ரீ ல சு க இருமணி நேரப் பேச்சு! நாம் பலமான கூட்டணி ஒன்றை அமைப்போம். டலஸ் உறுதி.

இன்று பிற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் பொதுஜன பெரமுனவிற்குமிடையே 8 வது சுற்றுப்பேச்சு இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போது முதல்தடவையாக பொது ஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். இதன்போது கூட்டணி அமைக்கப்படுவதானால் கோத்தாவிற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையேயான ஒப்பந்தம் தொடர்பில் இரு மணிநேரம் பேசப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு முடிவில் கருத்து தெரிவித்த கோத்தாவின் தேர்தல் விவகாரங்களுக்கான பேச்சாளர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடாது என்றும் தாம் ஒரு பலமான கூட்டணி அமைப்போம் என்றும் உறுதி உறுதியாக தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று தம்மிடயே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு முன்னால் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பது பிரதானமானது எனத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கவேண்டும் எனக் கருதுகின்ற யாவரும் தம்முடன் இணைய வேண்டும் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார்.

அதேநேரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இணைவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் ஆனாலும் நிறைய விடயங்களில் இணக்கங்கள் எற்படவேண்டியுள்ளதால் தொடர்ந்தும் பேசவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Read more...

"ஆரோக்கியமான முதுமை "எனும் தொனிப்பொருளில் வைத்திய முகாம்.

"ஆரோக்கியமான முதுமை "எனும் தொனிப்பொருளில் முதியோருக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பணிமனை இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் கல்முனை கடற்கரை வீதியில் உள்ள மீனவர் சங்க கட்டிடத்தில் இன்று 06.9.2019 இடம்பெற்றது.

இதில் சுமார் 60க்கு மேற்ப்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதில் குறிப்பாக இலவச சீனி பரிசீலனை, கொலஸ்திரோல் , உயர்குருதி அமுக்கம் , தொற்றாநோய், பல் வைத்தியம் போன்ற நோய்கான பரிசீலனை இடம்பெற்றது

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.எம். ரிஸ்பின் மற்றும் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.மதுசூதனன் மற்றும் சுகாதார வைத்திய பணிமனை பணியாளர்கள் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(எஸ்.அஷ்ரப்கான்).


Read more...

ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்திற்கு வேலை தருகின்றேன் என அழைத்து வேலை எடுப்பு! விஜயகலாவின் சகாவின கைவரிசை!

யாழ் ஐ.தே.கட்சி காரியாலயத்திற்கு அரசாங்க வேலைவாய்ப்பு பெற்றுத்தருகின்றேன் என அழைக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலாவின் சகாக்களில் ஒருவரின் காம இச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சித்தங்கேணிச் சந்தியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையில் வைத்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 9ம் பிரிவு உறுப்பினரான விஜி மருகன் என்பவரால் இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. குறித்த கிளைக்கு இரவு நேரங்களின் சந்தேகத்திற்கிடமான முறையில் இளம் பெண்கள் சென்றுவருதை அவதானித்த பிரதேச இளைஞர்கள் திடீரென காரியாலயத்தை சுற்றிவளைத்தபோது குறிந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்கு நுழைந்த இளைஞர்கள் அலங்கோல நிலையில் நின்ற மேற்படி அரசியல்வாதியின் கைங்கரியத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவமானது உள்ளுர் தொலைக்காட்சிகள் மற்றும் சில இணையத்தளங்களில் செய்தியாக வெளிவந்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோரின் வேண்டுதலின் பெயரில் சில இணையங்கள் வெளியிட்ட செய்தியை நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



இலங்கையின் பொருளாதார நிலையில் வேலைவாய்ப்பு என்பது அத்தியாவசியமாகின்றது. இந்நிலையில் வேலை தேடிச் செல்கின்றபோது அரச பலம்கொண்டோர் நலிவுற்ற , பலவீனமான மக்களை இவ்வாறு தமது இச்சைகளுக்கும் பிறதேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வது மிகக்கண்டனத்திற்குரியதாகும்.

வேலைவாய்புப்பு தருகின்றேன் என விஜயகலாவால் அழைக்கப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பகலில் விஜயகலா நேர்முகப்பரீட்சைக்கு என அழைத்து அவர்களிடம் விண்ணப்பப்படிவங்களை பெறுவதுடன் அடுத்த தேர்தலுக்கான பரப்புரைகளை மேற்கொள்கின்றார். இரவில் அவரது சகாக்கள் விண்ணப்பப்படிவங்களிலுள்ள தொலைபேசிக்கு அழைத்து தமது காரியத்தை மேற்கொள்கின்றனர்.



விஜயகலாவின் நோர்வே ஊடக ஆலோசகர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு தற்போது இலங்கையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியுள்ள „ஊத்தை" என செல்லமாக அழைக்கப்படும் ஒருவனாலும் இவ்வாறு பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.






Read more...

முன்னாள் புனர்வாழ்வு அமைச்சர் கஜதீர காலமானார்

மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருமான சந்திரசிறி கஜதீர இன்று (06) மாலை காலமாகியுள்ளார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

அவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் காலமானதை அடுத்த அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளது. எனவே, மாத்தறை மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இவருக்கு அடுத்தாக லக்ஷமன் யாபா அபேவர்தன இருப்பினும், அவர் தற்போது தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்தில் உள்ளார்.

இதனால் அவருக்கு அடுத்து உள்ள மனோஜ் சிறிசேனவிற்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கான வாய்ப்பு உள்ளதுடன் இது தொடர்பில் அவரது நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.

Read more...

ஐதேக-ஸ்ரீசுக பாராளுமன்ற உறுப்பினர்களிற் சிலர் தாமரை மொட்டுடன் கைேகார்க்கின்றனர்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிற் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ள உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் பெரும்பாலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் திருப்தியுடையனவாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கேற்ப, எதிர்வரும் சில நாட்களில் தங்களது முன்னணியுடன் அவர்கள் வந்து சேர்வார்கள் எனவும், இவ்வேளை மக்கள் ஆதரவுக்கேற்ப, தங்களின் கட்சியுடன் பலரும் வந்து சேர்ந்தவண்ணமே இருக்கிறார்கள் எனவம் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read more...

தமிழ் முஸ்லீம் சமூகம் கோத்தபாயவிற்கு ஆதரவளிப்பார்கள்! அடித்துக் கூறுகின்றார் புர்கான்.

2010ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் தேர்தலில் பொது ஜனபெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சீ பிரீட்ஸ் தனியார் விடுதியில் வியாழக்கிழமை(5) இரவு 9.30 மணியளவில் கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டு குழு தெரிவு இடம்பெற்ற பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :

கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு இருந்த மக்கள் ஆதரவைக்காட்டிலும் தற்போதைய மகிந்த சார்பு அணியினரை எதிர்வரும் சனாதிபதி தேர்தலிலே வெற்றியடைய செய்ய வேண்டுமென்பதில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். குறிப்பாக அதிகாரத்திலுள்ள அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகள் உரிமைகளை நிறைவேற்றக் தவறியுள்ளது. அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் இன்னும் பின்னோக்கியே செல்கின்றது.

இந்தக்காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்து தீர்க்கக்கூடிய தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். 30 வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து மாபெரும் வரலாறு காணாத அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தும் இன்றைய சூழலில் சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகள் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்ததாக பல வகையான குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக்ச தரப்பிடம் பலரும் முன்வைத்துள்ளார்கள். ஆனால் அதற்கான சான்றுகள் இல்லாமலே குற்றச்சாட்டுக்களை அரசியல் ரீதியாக அவர்கள் முன்வைக்கின்றனர். வடகிழக்கு மாகாண மக்கள் கடந்த கால ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய இராணுவ தளபதியை ஆதரித்தார்கள்.

அதே போன்று எமது ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஸவினையும் வடகிழக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுகருத்து இல்லை. இதில் முஸ்லீம் கட்சிகள் அரசியல் ரீதியாக எமது வேட்பாளர் மீது முன்வைக்கும் போலியான குற்றச்சாட்டுக்களை முஸ்லீம் மக்கள் நம்ப வேண்டாம். இந்த காலம் நவீன ஊடக காலமாகையினால் எவரும் யாரையும் எமாற்ற முடியாது. தற்போது தமிழ் பேசும் மக்கள் நடப்பு அரசாங்கம் மீது அதிருப்தியில் உள்ளனர். முஸ்லீம் கட்சிகள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எல்லா முஸ்லீம் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறான கட்சிகள் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது முன்வைக்கின்ற குற்றச்சாட்டிற்கு எதுவித ஆதாரங்களும் இல்லை. எனவே எமது முஸ்லீம் தமிழ் மக்கள் முன்னரை விட அரசியலில் தெளிவாக உள்ளதை தெரிவிக்க விரும்புகின்றேன் என கூறினார்.

Read more...

உண்மையை கூறியமைக்காக வரதராஜப்பெருமாளுக்கு விளக்குமாற்றால் அடி! ஒரிசாவுக்கு ஓடட்டாம்!

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

வவுனியாவில் கடந்த 930ஆவது நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் எனக் கூறிக்கொள்வோரின் உறவுகளே ,இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, வரதராஜப்பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட புகைப்படத்துக்கு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வெளியேறு வெளியேறு வரதரே ஒரிசாவுக்கு சென்றுவிடு என்றும் கோசங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் தமிழர் இரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.

Read more...

ரணிலை இலக்கு வைத்து ஆவணங்களில் ஒப்பமிட்டார் மைதிரி

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (06) கையெழுத்திட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரினால் 21 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வழங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியால் இன்று சோதிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சினால் கூடிய விரைவில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Read more...

இலங்கைக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எந்த எல்லைக்கும் சென்று உதவத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்த பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஷஹீட் அஹ்மட் ஹஸ்மத், இது இலங்கைக்கு மாத்திரம் நாம் காட்டுகின்ற விசேட அக்கறையல்ல. மாறாக அது எமது தார்மீகப் பொறுப்பாகும் என்றும் கூறுனார்.


கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டல் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாக்கிஸ்தானின் பாதுகாப்புதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இலங்கை மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான நட்பறவு என்பது மிகவும் உறுதியானதாகும். அது மிகவும் பெருமைக்கும் உரிய விடயமாகும். அதேபோன்று இலங்கையின் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிப்போர் குறித்தும் நாம் பெருமையடைகின்றோம். மேலும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்ற போது நாம் உதவியதைப் போன்று தற்போதும் இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எந்த எல்லைக்கும் சென்று உதவத் தயாராக இருக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அனைத்து விதங்களிலும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோம். பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், புலனாய்வு அடிப்படையிலும், மேலதிக விசாரணைகள் தொடர்பிலும், எதிர்கால நகர்வுகளிலும் நாம் இலங்கைக்கான எமது பங்களிப்பையும், ஒன்றிணைவையும் உறுதிப்படுத்தியிருக்கிறோம்.

அதேபோன்று அனைத்துத்துறை சார்ந்த உயர்கல்வி நடவடிக்கைகளுக்கும் இலங்கை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இலங்கைக்காக எமது மனங்களும், எண்ணங்களும், நிறுவனங்களும் எப்போதும் திறந்தேயிருக்கின்றன என்றும் கூறினார்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com