Thursday, August 15, 2019

இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்குள்ள உரிமையை இல்லாதொழிக்க எவருக்கும் முடியாது! அம்ஹர் மெளலவி

'நாங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதற்குள்ள உரிமையை இல்லாதொழிக்க இந்நாட்டிலுள்ள எந்த ஒருவருக்கும் முடியாது' என முஸ்லிம் உலமாக்களால் அண்மையில் ஒன்றுகூட்டப்பட்ட சம்மேளனத்தில் மெளலவி அம்ஹர் ஹகம்தீன் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கு அனுமதி உள்ளது என்றும், அதனை பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் அரசின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், அந்தத் தடையை இல்லாமற் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ நிகாபை இல்லாதொழிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், இதுதொடர்பில் இருவரும் மென்மேலும் பந்து நகர்த்துவது இஸ்லாமியரின் எல்லையைத் தாண்டச் செய்வதாக இருக்கின்றது எனவும் அவர் அபாய எச்சரிக்கை விடுத்தார்.

அவ்வாறு தொடர்ந்தும் அவர்கள் செயற்பட்டால், பந்து நகர்த்துவதற்கு இடங்கொடுக்காமல் நாங்கள் மைதானத்தை மூடிவிடுவோம். அதற்கான ஆளுமை முஸ்லிம் மெளலவிகளிடமும் ஆலிம்களிடமும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

தாமரை மொட்டை கையிலெடுத்ததால் மஹிந்தரின் எதிர்கட்சி தலைமை பதவி கேள்விக்குள்ளாகின்றது.

மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றதனால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்க முடியுமா? என சபாநாயகர் பாராளுமன்றில் தெளிவுறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சென்ற ஞாயிற்றுக் கிழமை பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் எனவும், மகிந்த பாராளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தே வந்ததாகவும், முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

அவ்வாறான வேறொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட அவர், மேலும் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைமையை ஏற்பது ஏற்புடையதுதானா என்பது தொடர்பிலும் சபாநாயகர் பாராளுமன்றில் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

Read more...

Dr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல்! குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.

குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குருணாகலை போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கந்தன்கமுவ நேற்று (14) குருணாகலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என சிங்களச் செய்திப் பத்திரிகையான 'திவயின'வில் செய்தி பிரசுரமாயுள்ளது.

டொக்டர் ஷாபி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ. எஸ். திஸேராவின் குடும்ப விபரங்களைத் தெரிந்து கொண்டு, அது தொடர்பில் தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு திஸேராவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதுதொடர்பில் தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தனகு வீட்டுப் பக்கமாக சந்தேகத்திற்குரிய ஒருசிலர் நடமாடுவதாகவும், சந்தேகத்திற்கிடமான முறையில் சில மோட்டார் சைக்கிள்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும், பிரதிப் பணிப்பாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதனால் எந்தவித பாதிப்புக்களுமின்றி தனது கடமையைச் செவ்வனே செய்வதற்கு பாெலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுத் தருமாறும் குருணாகலை வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வைத்தியருடன் வழக்கறிஞர்களான இந்திரசிரி சேனாரத்ன, சமன் திசாநாயக்க, நிலுக்ஷி உயன்வத்த ஆகியோரும் முறைப்பாட்டுக்காக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

Read more...

Wednesday, August 14, 2019

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல்.

இதற்காக ஆஸ்திரேலியா 20 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய தடுப்பு முகாமிற்கு அகதிகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அதிகாரிகளின் உத்தரவு கடிதத்தை ட்வீட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அக்கடித்தத்தில், “நீங்கள் புதிய மையத்திற்கு(முகாம்) மாற்றப்படுவதால், உங்கள் அலைப்பேசியை ஒப்படைத்தாக வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், அறையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறையிலேயே உணவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் இம்மையம் சிறையை போன்றே செயல்படும் எனக் கருதப்படுகின்றது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்க ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்திருக்கிறார். “ஆஸ்திரேலிய அரசுக்கும் அதன் சேவை வழங்குனர்களுக்கும் இந்த நடவடிக்கையில் எந்த பங்கும் இல்லை,” என ஆஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இது புதியதொரு சிக்கலாக உருவெடுக்கும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக, 2016ல் இத்தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கும் அதிகமான அகதிகள் நிராகரிக்கப்பட்டனர். அவ்வாறு, நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்ந்து பப்பு நியூ கினியா மற்றும் நவுருவிலேயே வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மனம் திறந்த மடல்

அன்புள்ள திரு ராஜபக்சே அவர்களே,

காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு

அண்மையில் காஷ்மீரில் நடந்தவை, இலங்கையில் ஆட்சிப் பரம்பல் தொடர்பாகப் பொருத்தமானவை என்றும் ஆட்சிப் பரம்பலால் வரும் கேடுகளுக்கு எடுத்துக் காட்டு என்றும் நீங்கள் கூறியதாகக் கொழும்பு வீரகேசரியில் படித்தேன்

நடுவண் அரசில் ஆட்சி அதிகாரங்களைக் குவிப்பதோ மாநிலத்தில் ஏற்கனவே பகிர்ந்த ஆட்சி அதிகாரங்களைக் குறைப்பதோ பிரதமர் மோடியின் நோக்கமல்ல. அத்தகைய நோக்கத்தை அவர் கொண்டிருந்தார் என நீங்கள் கருதினால் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

வடக்கே திருக்கயிலாயம் திபெத் நாட்டில்

தெற்கே கதிர்காமம் இலங்கையில்

மேற்கே காந்தாரம் ஆப்கானிஸ்தானில்

கிழக்கே ஐராவதி மியன்மாரில்

இவ்வாறு நீண்டு அகன்று விரிந்த பழம்பெரும் பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகள் பல கோடி ஆண்டுகள் பழமையானவை. மீட்டும் மீட்டும் தேர்வாகி, பிழைகளைத் தவிர்த்து, தவறுகளை நீக்கி, பட்டறிவின் தளத்தில் உயர்ந்தவற்றைத் தேக்கி, சிறந்தவற்றைப் பேணிச் செதுக்கிச் செதுக்கிக் காப்பாற்றிக் கூர்மையாக்கிய நீண்ட நெடிய பரம்பரீயம் உடைய பண்பாட்டைப் பேணுவதே காஷ்மீரில் பிரதமர் எடுத்த நடவடிக்கையின் உயரிய நோக்கம்.

இலங்கையில் உள்ளவர்களுக்கும் இந்த உயரிய நோக்கத்தை எடுத்துக்காட்டியது பிரதமர் மோடியின் அளப்பரிய பங்களிப்பு ஆகும்.

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் காஷ்மீரில் அரசியல் ஆட்சி அதிகாரம் பெருகியது. காஷ்மீரிகள் தாம் இழந்த மண்ணை மீளப் பெறுகிறார்கள். காஷ்மீரிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தங்களுடைய பண்பாட்டை மீட்டும் நிலை நாட்டுவார்கள்.

கடந்த 1000 ஆண்டுகளூடாகக் கஜினியும் கோரியும் தைமூரும் பாபரும் நடத்திய ஆக்கிரமிப்பு வடுக்களை அகற்றுவதில் வெற்றி காண்பார்கள். சுமேரியா தொடக்கம் இந்துகுஷ் மலை வரை படர்ந்து உலகையே அதிர்விக்கும் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதலில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

துடைத்து எறிந்து, வழக்கிலிருந்து நீக்கிய காஷ்மீர மொழியை அதன் எழுத்து வடிவமான கிரந்தத்தைப் பெருமை மிக்க புகழ்மிக்க வரலாற்றுப் பயன்பாட்டுக்கு மீட்டமைப்பார்கள்.

காஷ்மீரின் மண்ணின் மகன் ஒவ்வொருவரும் பூமியின் புத்திரன் ஒவ்வொருவரும் தனது ஆளுமையைத் தனது முன்னோர் வழியில் வளர்த்துப் பூத்துக் காய்த்துப் பழமாக்கி உலகம் பயன்பெற வளர்த்து எடுப்பார்.

திபெத்துக்குத் தெற்கே புத்தர்களின் மரபு வழி வாழ்விடம் இலடாக். ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நாள் தொடக்கம் மனமோகன் எல்லைக் கோட்டைச் சார்ந்த இலடாக் நிலப் பகுதியையும் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி இலடாக் மக்கள் குரல் கொடுத்து வந்துள்ளார்.

அன்னிய மொழி அன்னிய வாழ்வுமுறை அன்னிய மதம் என்பன அண்மைக் காலங்களில் புகுந்து அவர்களின் மரபுகளை வாழ்வியல் முறைகளைப் பாழாக்கி வருவதைப் பலமுறை தில்லியிடம் கூறித் தமக்கு தனியான நிலப்பகுதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

காலம் கனிந்தது. உள்ளம் கனிந்த பிரதமர் மோடி அவர்களுக்கு தனியான நிலப்பகுதியை அமைத்தார். தில்லியில் நேரடி ஆட்சியிலேயே சிறிதுகாலம் இருக்கும் என அறிவித்தார்.

காஷ்மீர் சைவத்தின் வாழ்விடம். காஷ்மீர முனிவரே காஞ்சிபுரம் வந்த கச்சியப்ப முனிவர். கச்சி என்ற சொல் காஷ்மீரத்தைக் குறிக்கும். சைவத்தின் பண்டைய வாழ்விடம் காஷ்மீரம். இலங்கை வேந்தன் இராவணன் அந்த தீவின் இராஜலட்சுமியை நாகர்கள் புடைசூழ எடுத்துச் சென்று காஷ்மீரத்தில் கோயில் அமைத்தான். இன்றும் தால் ஏரியின் அருகே அந்தக் கோயில் இருக்கிறது.

உங்களின் முன்னோர், நீங்கள் அண்மையில் ஏவிய செயற்கை கோளின் பெயரைத் தாங்கிய பெருமகன், சைவ சமயத்தின் காவலன், இராவணன், காஷ்மீரத்தில் அமைத்த திருக்கோயிலைக் காப்பாற்றுவதற்குப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். நீங்கள் மகிழ வேண்டாமா?

அறிஞர், தத்துவார்த்தி, தமிழ் முனி இராமானுஜர் காஷ்மீரில் சாராத பீடம் சென்று தொல் சுவடிகளைக் கற்றுத் தேர்ந்தார். அவர் சென்ற சாராத பீடமும் ஆயிரக் கணக்கான சிவன் கோயில்களும் புத்த விகாரைகளும் இன்றைய பாகிஸ்கானின் பிடியில் உள்ள காஷ்மீரத்தில் அழிந்து வருவதை அறிவீர்களே. அவற்றை மீட்டகவே பிரதமர் மோடி இலக்கு வைத்துளார்.

மகாவமிசம் கூறிய முதலாவது இலங்கை மன்னன் நாகநாட்டு மகோதரன். பின்னர் கலிங்க விஜயன், கஜபாகு, மானவர்மன், செகராஜசேகரன், விஜயபாகு, பராக்கிரமபாகு, சங்கிலி எனத் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசர், கடைசிக் கண்டியரசன் இராஜசிங்கன் வரை எந்த இந்துக் கோயிலையாவது இடித்து இருக்கிறார்களா?

மாற்றாக நான் சொன்ன ஒவ்வொரு மன்னரும் இடையில் வந்த மன்னர்களும் இலங்கையில் உள்ள சைவக் கோயில்களுக்கு நிவந்தங்கள் மானியங்கள் கொடுத்துப் பூசைகளைப் பேணி வளர்த்திருக்கிறார்கள். இடிக்கவில்லை.

தென் முனையில் வரலாற்றுக்கு முற்பட்டதும் இராவணன், நரசிம்ம பல்லவன், பராக்கிரமபாகு போன்றோர் பேணியதுமான சிவன் கோயில் தென்னாவரத்தை இடித்து உலூசியா தேவாலயம் கட்டியவன் போர்த்துக்கேயர் தளபதி தோமையன்.

இராவணன் தொடக்கம் கயிலாய வன்னியன் வரை பூசித்த திருக்கேதீச்சரம், திருக்கோணச்சரம் இரண்டையும் அழித்தவன் போர்த்துக்கேயத் தளபதி கொன்ஸ்டாண்டினாசா.

அண்மையில் கிழக்கில் காளி கோவிலை இடித்து மசூதி கட்டியவர் அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லா.

ஏமாங்கதப் பாலைவனத்தில் பூத்த ஆபிராமிய அறங்களின் போர்வையில் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய்களாகப் பாரத கண்டத்தின் பராம்பரியத்தை அழிக்க முயன்றவர் இவர்கள்.

பிரதமர் மோடியின் இலக்குத் தோமையர்களும் கொண்ஸ்டாண்டினாசாக்களும் ஹிஸ்புல்லாக்களும் அன்றி வேறல்ல.

அகண்ட பாரத கண்டத்தின் ஆட்சி மரபுகளுக்கு அவ்வப்பொழுது ஆலோசனை வழங்கி நூல்களை எழுதி வைத்தவர்கள் சாணக்கியர் திருவள்ளுவர் போன்ற பெருமக்கள். காந்தாரம் தொடக்கம் உங்களின் போற்றுதலுக்குரிய நிலமான உரோகணம் வரையான அரசுகள் தொடர்ச்சியாக இத்தகைய அறிஞர்களிடமே ஆலோசனை கேட்டு ஆண்டு வந்தனர்.

அகண்ட பரத கண்டத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி அந்தப் புனித மரபைப் பேணும் ஆட்சி. கத்தியின்றி யுத்தமின்றிக் காஷ்மீரத்தில் அரசியலமைப்பு விதி மாற்றம் மூலம் அமைதியான அன்பளிப்பைக் காஷ்மீர மக்களுக்கு கொடுத்தவர் பிரதமர் மோடி. மேலை நாட்டு ஆட்சி அளவுகோல்களும் அரசியல் அளவுகோல்களும் கொண்டு பிரதமர் மோடியின் செயல்களை மதிப்பிடாதீர்கள்.

காஷ்மீரத்தில் இந்த நடவடிக்கைக்காக அவர் சிறு வயதில் இருந்தே மக்களிடம் பரப்புரை செய்து இருக்கிறார் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார் 60 ஆண்டுகள் அவர் நடத்திய அறப் போராட்டத்தின் விளைவாக அவரே ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.

தங்கத் தாம்பாளத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியின் அணுகுமுறைகளை உங்களுக்கு பரிசாகத் தருகிறேன். பரத கண்டத்தின் பண்பாடுகளை மீட்டெடுக்க உங்களுக்கும் அரிய வாய்ப்பு.

இலடாக்கில் புத்த சமயத்நவருக்குத் தனி நிலப்பகுதியை உரித்தாக்கியமை வரலாற்று நிகழ்வு. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் தமக்கான நிலப் பகுதியில் இந்து சமயத்தைப் பேணி வந்திருக்கிறார்கள்.

2570 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூச நாளில் முருகனுக்கு விழா. அந்நாள், புத்தர் மாணிக்கக் கங்கை ஆற்றோரம் வந்தார். பின்னர் யாழ்ப்பாணம் வந்தார் அதை அடுத்து களனிக்கு சென்றார்.

அகண்ட பாரதத்தின் சிந்தனையூற்றுச் செம்மல் புத்தர். இலங்கையின் சைவ சமயத்தவர் அவரை ஏற்றனர். பலர் அவருடைய கொள்கைகளை கொண்டனர். நீங்கள் அத்தகையோரின் வழி வந்தவர்களே.அண்மையில் யாழ்ப்பாண நாக விஹாரையின் வணக்கத்துக்குரிய புத்த பிக்கு அவர்கள் இந்தச் செய்தியை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். இந்துக்களின் வாழ்விடங்களில் அடாத்தாக அட்டூழியத்தில் ஈடுபடும் புத்த பிக்குகள் புத்தர்களே அல்லர் எனபது இத்தகைய மூத்த அறிவார்ந்த புத்தர்களின் நோக்கு.

இலங்கையில் இரு நிலப்பகுதிகள். ஆதி குடிகளான இந்துப் பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று. பின்வந்த புத்தர் சார்ந்த பெரும்பான்மையினரின் நிலப்பகுதி மற்றது. வேறு எவருக்கும் இலங்கையில் நில உரிமை கிடையாது.

இந்துப் பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று, புத்தர் பெரும்பான்மை நிலப்பகுதி மற்றது, என இலங்கையில் இரண்டு நிலப் பகுதியை அமையுங்கள். தர்ம நிலமும் தம்ம நிலமும் சத்+சித்+ஆனந்தமாய் நிர்வாணம் நோக்கிய தேசமாகும். பிரதமர் மோடி காட்டிய வழி அதுவே.

அகண்ட பாரதத்தின் பழம்பெரும் பண்பாடுகளைப் பேணுவதற்கு இத்தகை ஆட்சி முறையே சிறந்த வழி என்பதைப் பிரதமர் மோடி உங்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அவர் வழியைப் பின்பற்றி இலங்கையைச் செழிப்பும் செல்வமும் அன்பும் அறமும் அருளும் நிறைந்த நாடாக மாற்றுங்கள்.

நன்றி

என்றும் உங்கள் அன்புடன்





அர்ஜுன் சம்பத்
தலைவர்
இந்து மக்கள் கட்சி
இந்தியா.

Read more...

அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை கூறுகின்றார்! - யோகராசா கனகரஞ்சினி

வருகின்ற ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேரம் பேசுகின்ற நிலையில்; ஒரு தரப்பாக நின்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாளர் திருமதி . யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இன்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை
தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

யுத்தம் முடிவுற்று பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு நாம் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இந்த போராட்டத்தின் மூலம் பன்னாட்டு தலைவர்கள், அதிகாரிகள் உட்பட்ட பலரைச் சந்தித்திருக்கின்றோம்.ஜனாதிபதியைக் கூட நாம் பல தடவைகள் சந்தித்து எமக்கான நீதியினைக் கேட்டிருந்தோம். இதுவரையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து வருடகால ஆட்சி முடிவுக்கு வருகின்ற இந்த தருவாயில், ஜனாதிபதித் தேர்தலிலே களமிறங்குவதற்கு தமிழ் மக்கள் மீது கொடூர யுத்தத்தை அரங்கேற்றியவர்கள் இறுதி யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம் என வெற்றிவிழாக் கொண்டாடியவர்கள் இன்று ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.
கடந்த கால மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியும் சரி, நல்லாட்சியும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எந்த அக்கறையும் செலுத்தவில்லை. காலங்கள் மட்டும் கடந்து செல்கிறது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் மாத்திரமே இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தலில் களமிறங்குவதற்கு முனைந்திருக்கின்றார். இறுதி யுத்தத்தக் காலத்தில் அவர்களிடம் எமது உறவுகளைக் கையளித்தோம். ஆனால், இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் தேர்தலுக்கு முன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. அவர்களை எங்கே மறைத்து வைத்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன தீர்வு போன்ற விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களிள் பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய வகையில் இந்த ஐனாதிபதி தேர்தலை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒரு தரப்பாக நின்று பேரம் பேச வேண்டும். என இந்த இடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றேன். எனத் தெரிவித்தார்.

Read more...

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராக அநுர... உத்தியோகபூர்வ அறிவிப்பு 18 இல்

மக்கள் விடுதலை முன்னணியின் 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவே களமிறங்கவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து 'தேசிய மக்கள் சக்தி' என்ற பாரிய கூட்டணியை மக்கள் விடுதலை முன்னணி உருவாக்கியுள்ளது . பல சிவில் அமைப்புகள் இக்கூட்டணியில் ஒன்றுசேர்ந்துள்ளன.

'தேசிய மக்கள் சக்தி கூட்டணி'யின் முதலாவது தேசிய கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு, அது நிறைவேற்றப்படவுள்ளது.

Read more...

பயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா

நாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயாராகவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

ஜனாதிபதியாகத் தான் தெரிவானால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும், மாளிகைகள் உருவாக்குவதற்கும் மனைவிமாரை உயர்த்துவதற்கும் தனக்குத் தேவையில்லை எனவும், பொறுப்புடன் கருமமாற்றுவதற்குத் தன்னால் இயலும் எனவும் பொன்சேக்கா தெரிவித்தார். நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது :

"ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் கைொடுக்கும் அளவுக்கு நான் கீழ்மட்டத்திற்குச் செல்லவில்லை. ராஜபக்ஷ கூட்டத்தார் பற்றி என் மனதில் உள்ள எண்ணப்பாட்டில் எந்தவித மாற்றமுமில்லை. அந்த எண்ணப்பாடு என்றும் இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் சரியான - மிகச் சரியான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும். அவருக்காக நான் கடின உழைப்புடன் செயற்படுவேன். பொருத்தமற்ற ஒருவரை நிறுத்தினால் மனச்சாட்சிக்கு எதிராக என்னால் செயற்பட முடியாது.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று நாட்டின் தலைவர் கூறுகின்றார். இன்றும் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு ஏற்ப, பயிற்சி பெற்றுள்ள தற்கொலைக் குண்டுதாரிகள், பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுள்ள பயங்கரவாதிகளில் நுாற்றுக்கு ஐம்பது வீதமானோர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஐம்பது வீதமானோர் வெளியே இருக்கிறார்கள். என்றாலும், நாங்கள் பயங்கரவாதிகளைக் கைது செய்துவிட்டோம். அவர்களின் பெரும்பகுதியினரை அழித்துவிட்டோம்... இனிப் பயங்கவாதத்திற்குப் பயப்படத் தேவையில்லை என்று நாட்டின் தலைவர் கூறுகின்றார்.

நாங்கள் விகடர்களாக மக்கள் மத்தியில் சென்றது பாேதும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனுபவம் வாய்ந்த ஒழுக்கநெறியின்றும் தவறாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி இதுதொடர்பாக சிந்தித்தால் என்னைப் பற்றியும் சிந்திக்கும்.

நாட்டின் பாதுகாப்புப் பற்றி நன்கு அறிந்தவர் கோத்தபாய ராஜபக்ஷ மட்டுந்தான் என்று நான் சொல்ல மாட்டேன். என்றாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரைச் சொல்லக் காரணம் நாட்டின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்ததனாலேயே.. இதுவும் நல்ல முடிவுதான்." எனவும் குறிப்பிட்டார்.

Read more...

Tuesday, August 13, 2019

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எதுவும் சொல்லமுடியாதாம்... கைவிரிக்கிறது அமெரிக்கத் துூதரகம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை உண்மையானதுதானா என இந்நாட்டு அரசியலாளர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் வினவிய வினாவுக்கு விடையளிப்பதற்கு அமெரிக்கத் துூதரகத்தின் பேச்சாளர் நென்சி மென்கொரின் மறுத்துள்ளார்.

ஒருவரின் தனிப்பட்ட விடயங்களை வெளியிடுவதற்குஅமெரிக்காவின் சட்ட திட்டங்களின் இடமில்லை எனக் குறிப்பிட்ட அவர், கேள்விக்கு விடையளிக்காமைக்கான முதலாவது காரணமே அதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரும், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளர் ஒருவரும் பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை வழங்கி, காேத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்து தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரியுள்ளனர்.

என்றாலும், அமெரிக்க துூதரகத்திலிருந்து இது தொடர்பில் தகவல் பெறுவதற்கும் விசாரிப்பதற்கும் தங்களுக்கு உரிமை இல்லை என பொலிஸ் மேலிடத்தைச் சேர்ந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Read more...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படல் வேண்டும் - கத்தோலிக்க ஆயர் பேரவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான சூழ்நிலை குறித்து ஆராயப்பட்டவை தொடர்பான இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை இன்று (13) வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின ஆயர்கள் கையொப்பபத்துடன் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் நீதி நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவதோடு, இதற்கு பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read more...

திலக் மாரப்பென- அலிஸ் வெல்ஸ் சந்திப்பு! சோபா கைச்சாத்திட ஏற்பாடா?

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமெரிக்க – சிறிலங்கா இருதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்தச் சந்திப்பின் போது, சோபா உடன்பாடு மற்றும் ஏனைய இருதரப்பு உடன்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதா என்று கூற வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

அதேவேளை, நேற்று சிறிலங்காவில் அமெரிக்காவின் முதலீடுகளை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து, அலிஸ் வெல்ஸ் வணிக சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறிலங்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றி வருவதாக அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார்.

Read more...

கப்பம் பெற்றுக்கொண்டு மோசடிக் காணியில் கட்டடம் அமைக்க அனுமதி வழங்கிய தவிசாளர் வேழமாலிகிதன்

கிளிநொச்சி ஏ9 வீதியில் மோசடி செய்யப்பட்ட பெறுமதிமிக்க காணியில் இரண்டுமாடி கட்டடம் அமைக்க பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கிய ஆவணம் தற்போது வெளியில் கசிந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் வலது கையாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனே இம் மோசடியை மேற்கொண்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் ஜெயந்தன் ஆகியோரின் போலி இறப்பர் முத்திரை, ஒப்பத்துடன் ஏ9 வீதியில் மோசடி செய்யப்பட்ட காணியில் புதிய மாடி கட்டடம் அமைப்பதற்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதனால் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2018-12-31 திகதியிடப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதனின் கையொப்பத்துடன் புதிய கட்டடத்திற்கான அனுமதியினை மகிழ்ச்சியுடன் வழங்குவதாக தெரிவித்து விட்டு தற்போது தான் அவ்வாறு எதனையும் வழங்கவில்லை எனத் தெரிவித்து வருகின்றார்.

கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் மற்றும் கிளி நகர் கிராம அலுவலர் எஸ்.வி. ஜெயந்தன் ஆகியோரது பதவி நிலை இறப்பர் முத்திரை போலியாக தயாரிக்கப்பட்டு காணிக்குரிய கடிதம் எழுதப்பட்டு ஒப்பமிட்டு ஏ9 பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய பெறுமதிமிக்க காணி ஒன்று மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டியறியப்பட்டு கிளிநொச்சி பிராந்திய பொலீஸ் அத்தியட்சர் காரியாலத்தில் கிராம அலுவலரினால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் காணியில் தற்போது இரண்டு மாடி கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய கட்டடங்கள் அமைப்பதாயின் பிரதேச சபையின அனுமதி பெறப்படல் வேண்டும் . எனவே மோசடி செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய கட்டடத்திற்கு கரைச்சி பிரதேச சபை அனுமதி வழங்கியதா என பிரதேச சபையின் அமர்வின் போது உறுப்பினர்களால் கேள்வி எழுப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தான் அவ்வாறு ஒரு அனுமதியினை வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற கரைப்பி பிரதேச சபையின் 17 வது அமர்வின் போதே தவிசாளர் இதனை தெரிவித்திருந்தார்.( சபை கூட்ட அறிக்கயைின் 44 பக்கத்தில்)

ஆனால் புதிய கட்டடத்திற்கு கட்டட அனுமதியினை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் எழுத்து மூலம் வழங்கிய ஆவணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட காணியில் கட்டடம் அமைப்பதற்கான அனுமதியினை எழுத்து மூலம் வழங்கிவிட்டு தான் அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கவில்லை என உண்மைக்குப் புறம்பாக கூறிய தவிசாளரின ் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறித்த மோசடிக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரும் உடந்தையாக செயற்பட்டுள்ளாரா என்று சந்தேகத்தையும் மக்கள் எழுப்பியுள்ளனர்.


Read more...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தாவேதான்.... இது உறுதி என்கிறார் கம்மன்பில

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாயவேதான்... மகிந்த ராஜபக்ஷ சொன்னது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரே அல்ல. அடுத்த ஜனாதிபதியின் பெயரே.... கோத்தபாய பற்றிய எதிர்வுகூறலே அன்றி வேறில்லை.... என பிவிதுரு ஹெல உருமய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளாக எங்களது ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டியவர்கோத்தபாய ராஜபக்ஷவே. அதேபோல ஜனாதிபதி வேட்பாளரும் கோத்தபாய ராஜபக்ஷ என நாம் கூறினோம். என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக முடியாது என்று கூறின. அதற்காக நான்கு காரணங்களையும் முன்வைத்தன. அமெரிக்க குடியுரிமையிலிருந்து நீங்குவதற்கு அமெரிக்காவுக்கு இடம் கொடுப்பதில்லை என்றன. அமெரிக்க குடியுரிமையிலிருந்து அமெரிக்கா குடியுரிமையைப் பறிக்க முடியாது என்று நாங்கள் சட்டப் புத்தகத்தைப் புரட்டிக் காட்டினோம். அது இன்று உண்மையாகி உள்ளது. அதன்பின்னர், அமெரிக்காவிலும் இலங்கையிலும் அவருக்கு எதிராக வழக்கு நடைபெற்றுவருதனால் தேர்தலில் ஈடுபட முடியாது என்றனர். போலிக் குற்றச்சாட்டுக்களுடன் வழக்குப்போட்டு அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்த முடியாது என்று நாங்கள் சட்டப் புத்தகத்தைப் புரட்டிக் காட்டினோம். அதுவும் இன்று உண்மையாகியுள்ளது. அவருக்கு எதிராகப் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் காரண காரணமின்றியவை என உயர் நீதிமன்றங்கள் குறிப்பிட்டு, வழக்குகளை இடைநிறுத்தி வைத்துள்ளன.

கோத்தாபய ராஜபக்ஷ தற்போது நோயாளியாக இருக்கின்றார் என்றும் அதனால் அவர் தேர்தலில் ஈடுபட முடியாது என்றும் சாென்னார்கள். பை பாஸ் சிகிச்சையின் பின்னர் முன்னரை விட இளமையான தோற்றத்துடன் அவர் இருக்கின்றார் என நாங்கள் சொன்னோம். பார்த்தீர்களா நேற்று முன் தினம் கட்டழகுடன் இளைஞன் ஒருவனைப் போல மேடையேறி வந்தது... பிரதமர் ரணிலுக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் ஒரே வயது. இருவரும் மேடையேறினால் அப்பாவும் மகனும் போலத்தான் இருப்பார்கள். கடைசியாக, ராஜபக்ஷ குடும்பத்தாரிடையே மோதல் என்றும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு என்றும், பெரும்பான்மையினர் கோத்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என்றும் சொன்னார்கள். 'இல்லை நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு கோத்தபாய ராஜபக்ஷவுக்கே வாக்களிப்போம்... அவரே எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் என்று சொன்னோம். நீங்கள் எல்லோரும் அதனை நேற்றைய முன்தினம் கண்டுகொண்டீர்கள்தானே. அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் ஒன்றிணைந்து பொதுஜன முன்னணியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து, அதேபோல ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் எல்லாேரும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவை ஆசிர்வதித்தார்கள். ஆதரவளித்தார்கள்... அவரது சுபமுகூர்த்ததில் அவருடன் ஒன்றிணைந்தார்கள்.

இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து சொன்ன அனைத்தும் பொய்த்துவிட்டன. நாங்கள் சொன்னவை உண்மையாகி விட்டன. அதனால் நாங்கள் அடுத்த எதிர்வுகூறலையும் கூறுகின்றோம். நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷ மேடையில் சனத்திரளிடம் கூட்டணி எதிர்க்கட்சியினதும், பொதுஜன பெரமுனவினதும் ஜனாதிபதி வேட்பாளரை அல்ல அறிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாபதி வேட்பாளரையே அறிமுகம் செய்தார். கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாவதை யாராலும் நிறுத்த முடியாது....என்றார்.

Read more...

Monday, August 12, 2019

கோத்தபாய ஜனாதிபதியானால் தமிழர்களின் கதி அதோகதிதான்... எதிர்வுகூறுகிறார் குதிரை கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது உரையில்,

'கோத்தாபே ராஜபக்ஷ பதவி ஏற்பதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மிகப் பயங்கரமானது. அதேபோன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்பதும் மிகவும் பயங்கரமான ஆபத்தொன்றை எதிர்நோக்கப் போகின்றது. கோத்தபாய ராஜபக்ஷ ஓர் இன அழிப்புச் செய்தவர். ஒரு சர்வதேச நீதிமன்றிலே நிறுத்தப்பட்டு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டி ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் பதவிக்கு வந்தால் நிச்சயமாக அவர் எஞ்சியிருக்கின்ற தமிழர்களின் நிலங்களை முழுமையாக சிங்களமயமாக்குவார். பெளத்தமயமாக்குவார். அவர் தோற்கடிக்கப்பட வேண்டியவர்.

தமிழர்களுக்கு அவரால் ஏற்படக்கூடிய ஆபத்தை விட, சீனாவை அவர் உள்ளே அனுமதிப்பதனால் சீனாவால் இந்திய எதிர்நோக்கக் கூடிய ஆபத்து மிகப் பெரியது. அதனால் இந்தியா பல்லாயிரம் மடங்கு தீவிரமாகச் செயற்படும்.

இந்த இடத்திலே தமிழர்களுடைய வாக்குகளை வைத்துக்கொண்டு மட்டும்தான் இந்தியாவால் அவரைத் தோற்கடிக்க முடியும். இந்த இடத்தில் தமிழர்கள் தமிழ்த் தேசியம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் கருத்து முன்வைப்பதனுூடாக இந்தியா இந்திய நாடாளுமன்றிலே அந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற அந்த உறுதிப்பாட்டை எடுத்தால் இந்தியா கட்டாயம் செய்யும்.

தமிழர்கள் வாக்களிக்கத் தவறினால் கோத்தபாய ராஜபக்ஷ வரக்கூடிய ஒரு ஆபத்து இருக்குமானால், இந்தியா பல நாடுகளாக சீனாவால் சிதறடிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே அந்த ஆபத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது.' என்றும் குறிப்பிட்டார்.

Read more...

பாவம் கோத்தபாய... நாங்கள் இலகுவில் தோற்கடிப்போம் என்கிறார் கிரிஎல்ல

கோத்தபாய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சவாலே அல்ல என அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மிக இலகுவில் தோற்கடிக்கத்த ஒருவராகவே கோத்தபாய ராஜபக்ஷ உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தல்களை விடவும், அதிகூடுதலான வாக்குகளால் இம்முறை கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிகொள்ளவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

11 பில்லியன் வஞ்சகம் செய்த கோத்தாவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக முடியாது....! - மங்கள

பாெதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என மகிந்த ராஜபக்ஷ நேற்று (11) அறிவித்தார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, தனது சகோதரன் ஜனாதிபதியாக வருவதையே முன்னாள் ஜனாதிபதி விரும்புகின்றார் எனவும், அவரது மற்றொரு சகோதரன் சபாநாயகராக வர விரும்புகின்றார் எனவும்,இன்னுமொரு சகோதரன் பொருளாதாரத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனவும் அவர் தனது முகப்புத்தகப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக தற்போது 11 பில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது வேறொரு ராஜபக்ஷவோ அல்ல என்றும், அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ளவர் இலங்கையில் பிறந்து, இலங்கையிலிருந்து பயந்தோடிய ஒருவரல்லர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனநாயக முறையில் தேர்வுசெய்யப்படவுள்ள ஒருவரே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன் - பதுளையில் சஜித்

நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன் அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமானது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதுளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றகையில் அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் தற்காலிகமாக ஒப்படைக்கும்போது, அதனை நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், “பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்குவேன் என்பதை இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன். அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமென்றால், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்முயற்சிகள் வலுப்படுத்தப்படவேண்டும். அவர்கள்தான் பொருளாதார முன்னேற்றத்தின் வலுவான இயந்திரங்கள். எமது நாட்டின் பொருளாதார எஞ்சின்களை வலுப்படுத்தி நாம் முன்னேறி செல்லவேண்டும். இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவோம்.

நாம் தேசிய பாதுகாப்பினை நிச்சயமாக உறுதிப்படுத்துவோம். தேசிய பாதுகாப்பு எனும்போது, பாதுகாப்பு படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 30 வருட யுத்தத்தை வெற்றிக்கொள்ள தம்மை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களின் அபிவிருத்திக்கு நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குவோம்.

பொருந்தோட்ட தொழிலாளர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் நிச்சயமாக மலையக மக்களை பாதுகாப்போம்.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை நாங்கள் முற்றாக ஒழிப்போம். சிங்கள - பௌத்த தலைவர்கள் என்ற ரீதியில் நாங்கள் புத்த பகவானின் போதனைகளுக்கு மதிப்பளித்து இன, மத, மொழி, பேதங்கள் பாராது நாட்டு மக்கள் அனைவரையும் சமமான விதத்தில் நடத்தவேண்டும்.

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ, சொத்துகளுக்கோ பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவிதமாக பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கையெழுத்திடவில்லை.

அரச சேவையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எமது பயணத்தில் அனைத்தையும் விட நாங்கள் மனிதத்துக்கு முதலிடம் வழங்குவோம்.

உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமான மதித்து காப்பாற்றுவேன். எனக்கு பயமில்லை. நான் அச்சப்படுபவன் கிடையாது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தாயர். எனக்கு 52 வயதாகிவிட்டது. நான் மரணத்தை கண்டு அச்சமடைபவன் கிடையாது. எனது, தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன்.” என்றார்.

Read more...

மாற்றுதிறனாளியின் நெல் வயலை களவாக அறுவடை செய்த பா. உ சிறிதரனின் ஊடகவியலாளர் கைது

கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அத்துமீறு மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் சென்று அறுவடை மேற்கொண்ட கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகவியலாளருமான சு.பாஸ்கரன் கிளிநொச்சி பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று(12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த ஊடகவியலாளர் தான் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செல்வாக்கும், மாவட்டத்தில் உள்ள பொலீஸ் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்குள்ளவர் என்றும் தனது கிராமமான முரசுமோட்டை ஊரியானில் கூறிக்கொண்டு பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இவரது சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கவனத்திற்கு பிரதேச கமக்கார அமைப்புகளால் எடுத்துக் கூறியும் அவர் அதனை கட்டுப்படுத்தாது அதற்கு மாறாக குறித்த தனது ஊடகவியலாளருக்கு சமாதான நீதவான் பதவி ஒன்றை வழங்க சிபார்சு செய்துள்ளார். இது அப்பிரதேச மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.


கடந்த வெள்ளிக்கிழமை முரசுமோட்டை மருதங்குளம் பிரதேசத்தில் ஒரு மாற்றுவலுள்ள இளைஞன் ஒருவர் தனது தந்தையாரை தொடர்ந்து ஒன்றரை ஏக்கர் வயல் காணியில் சுமார் முப்பது வருடங்களாக பயிர்ச்செய்து வருகின்றார். இக் காணிக்கு அருகில் உள்ள மூன்று ஏக்கர் காணியின் பெண் ஒருவர் மாற்றுவலுள்ள இளைஞனின் பராமரிப்பில் உள்ள காணியை அபகரிக்கும் நோக்கில் ஊடகவியலாளராக சு. பாஸ்கரனுடன் இணைந்து அவ் இளைஞனின் காணியை முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதோடு, கடந்த வெள்ளிக் கிழமை அவர்களின் காணிக்குள் அத்துமீறி சென்று அறுவடையிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனை குறித்த இளைஞன் கமக்கார அமைப்பின் உதவியுடன் சென்று தடுக்க முற்பட்ட போது அத்துமீறு அறுவடையில் ஈடுப்பட்ட பெண் அவர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன் போது இரண்டு தரப்பினர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலீஸார் சிறிதரனின் ஊடகவியலாளர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.

Read more...

ஐக்கிய தேசிய கட்சியுடன் சுடுகாடு வரை பயணிக்க நாம் தயாரில்லை - அமைச்சர் மனோகணேசன்

ரணில் விக்கிரமசிங்கவின் தலையில் துப்பாக்கியை வைத்து கூட்டணி உடன்பாட்டில் பலவந்தமாக கையெழுத்திட நாம் முயற்சிக்கவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி நாடு முழுக்க தனிவழி செல்ல தயார். ஐ.தே.கவுடன் சுடுகாடு வரை நாம் பயணிக்க தயாரில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாத்தறை தெணியாவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டாம். கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

உங்கள் கட்சி தலைமையகம் சிறிகொத்தைக்கு சென்று உங்கள் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையில் துப்பாக்கியை வைத்து நாம் இந்த கூட்டணி உடன்பாட்டில் பலவந்தமாக கையெழுத்திட முயற்சிக்கவில்லை.

ஆணும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். பெண்ணும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்போதே திருமணம் நடக்கும். இதுவும் அப்படிதான் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மாத்தறை தெணியாவையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,

கூட்டணி அமைப்பதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

உண்மையில் இங்கே பெரும் பிரச்சினையில்லை. குழப்பமடைய தேவையில்லை. இந்த முறை ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என நாம்தான் தீர்மானித்தோம். இந்த யோசனையை நானே முதலில் ஜனவரி மாதமே கட்சித்தலைவர் கூட்டத்தில் தெரிவித்தேன்.

ஏனெனில் கடந்த 2010ம் ஆண்டும், 2015ம் ஆண்டும் வெளியில் இருந்துதான் வேட்பாளர்கள் வந்தார்கள். 2010ம் ஆண்டு வந்த சரத் பொன்சேகா இப்போது ஐதேகவுக்கு உள்ளே இருந்தாலும், அப்போது வெளியில் இருந்தே வந்தார்.

இந்த முறை ஐதேகவின் உள்ளே இருந்து வேட்பாளரை தேர்வு செய்வதே நியாயமானது என நானே முதலில் சொன்னேன்.

ஆகவே இம்முறை நீங்களே தெரிவு செய்யுங்கள் என ஐதேகவிடம் இந்த பொறுப்பை நாம் ஒப்படைத்து விட்டோம்.

ஆகவே ஐதேகவில் உள்ள சேனநாயக்கவின், ஜயவர்தனவின், பிரேமதாசவின் புத்திரன்கள், பேரன்கள், கொள்ளுபேரன்கள் சிந்தித்து ஒழுங்கான முடிவை எடுங்கள்.

ஒருநாளில் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவையும், பாராளுமன்ற உறுப்பினர் குழுவையும் கூட்டுங்கள். தேநீர், கோப்பி வழங்குங்கள். கூட்டத்தில் எவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றது என்பதை கண்டறியுங்கள்.

உண்மையில் இந்த தாமதத்துக்கு நாம் காரணமில்லை என்பதை நாடு முழுக்க உள்ள அடிமட்ட ஐதேக தொண்டர்களுக்கு நான் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

உங்கள் கட்சிக்குள் இருந்து வேட்பாளரை தெரிவு செய்யுங்கள் என நாம் இந்த பொறுப்பை ஐதேக செயற்குழுவுக்கு ஒப்படைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே தாமதம் அங்கேதான்.

மக்கள் விரும்பும் வேட்பாளரை பெயரிடுவதை ஐதேகவின் உள்ளே இருந்து தடுத்து கொண்டு சிலர் இருக்கின்றனர். இவர்கள் எதிர்கட்சியுடன் இரகசிய உடன்பாடு கண்டுள்ளார்கள் எனவும் நான் சந்தேகிக்கின்றேன்.

இனிமேல் நாம் பொறுக்க மாட்டோம். எம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

உங்கள் வேட்பாளர் பெயரை எங்களுக்கு அறிவியுங்கள். நீங்கள் சொல்லும் வேட்பாளருடன் எமக்கு உடன்பாடு இருந்தால் நாம் உங்களுடன் வருகிறோம். இல்லாவிட்டால் வெளியேறுகிறோம். நீங்கள் உங்கள் வேட்பாளரை அழைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்லுங்கள்.

ஜனாதிபதி தேர்தலின் வென்றால் போதாது. அதன்பிறகு பாராளுமன்ற தேர்தலிலும் வெல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும்.

பாராளுமன்ற தேர்தலில் ஐதேகவுடன்தான் நாம் வர வேண்டும் என்று சொல்லி எம்மை பயமுறுத்த முயல வேண்டாம். தமிழ் முற்போக்கு கூட்டணி நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட தயார்.

எங்களுக்கு உடன்பாடு இல்லாத வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் கொண்டு வந்தாலோ, அதேபோல் தேவையில்லாமல் உட்கட்சி சண்டை போட்டுக்கொண்டு, உங்கள் கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவி நாறடித்தாலோ, நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.

எம்மை போலவே ஏனைய சிறு கட்சிகளும் வெளியேறும் என நான் நினைக்கிறேன்.

அப்புறம் ஐதேக தனியாக சுடுகாட்டுக்கு செல்லலாம். உங்களுடன் சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை.

இந்நாட்டின் மிகப்பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை அதற்குள்ளே இருக்கும் சிலர், இன்னமும் குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களுக்கு தலையெடுக்க விடாமல் அரசியல் புதைகுழியில் தள்ள முயற்சிக்கிறார்கள்.

கட்சிக்கு உள்ளே இருந்துக்கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அது நாம் அல்ல. அவர்கள் ஐதேகவின் உள்ளேதான் இருக்கிறார்கள்.

நான் சொல்வதில் உள்ள உண்மையை நாடு முழுக்க உள்ள இலட்சக்கணக்கான ஐதேகவின் அடிமட்ட உறுப்பினர்கள் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்

Read more...

Sunday, August 11, 2019

அச்சம், பயம் இன்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலொன்றை மீண்டும் கட்டியெழுப்புவேன் : கோத்தபாய !!

நான் இந்த நாட்டில் ஒரு போதும் அடிப்படைவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் இன்று (11) மாலை 3.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

எமது நாட்டில் பல்வேறு இனங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன. இங்கு பல்வேறு மதங்களை பின்பற்றுவோர் உள்ளனர். நாம் எப்போதும் மற்றவர்களுடைய சமயங்களுக்கு மதிப்பளித்து, ஒவ்வொருவருடைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்து சுமுகமாக வாழும் ஒர் இனம்.

எமது சக்தியும் இந்த ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. இந்த தாய் நாட்டில் பிறந்த எந்தவொருவருக்கும் அச்சம், பயம் இன்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலொன்றை மீண்டும் கட்டியெழுப்புவதாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

Read more...

'நான் சொல்வதை செய்பவன் செய்வதை சொல்பவன்' - தமிழில் பேசிய மகிந்த


யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், வடக்கு(தமிழ்) மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனங்களை களைய வேண்டும். தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சமஉரிமைகளோடு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழில் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைதான் சொல்வேன் – சொல்வதைத்தான் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின்னர் அனைத்து விடயங்களிலும் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இப்போது மீண்டும் நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் மீண்டும் பொறுப்பெடுக்கப்போவது 2015 நாம் அவர்களிடம் கொடுத்த நாட்டை அல்ல. 2005 ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்தபோது நாடு எப்படி இருந்ததோ அப்படித்தான் தற்போதும் நாடு இருக்கின்றது.

ஆம். எம்மால் முடியும். மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. ரயில்களில் சுதந்திரமாக கொழுப்புக்கு வரமுடியும் என்று வடக்கு மக்கள் யாரும் நினைக்கவேயில்லை. டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் வந்திருந்தார்.

கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் அத்தனையையும் எம்மால் செய்ய முடிந்தது. அதேபோன்று எதிர்காலத்திலும் எம்மால் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும்.

சிங்களவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் தங்களது வழிப்பாட்டுத் தலங்களில் அச்சமின்றி தங்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – ஏற்படுத்துவோம்.

மேலும் தமிழ் தலைமைகளுடன் இணைந்து இந்த நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்” என மேலும் தெரிவித்தார்.

C.F.N

Read more...

10 000 விகாரைகளுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கப்படவுள்ளன.... வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் ரிஸாம் அரூஸ்

சமூக வலைத்தளங்களின் ஊடாக பெளத்த மதகுருமார்களுக்கும், பெளத்தர்களுக்கும் எதிராக கடும் குரோத வார்த்தைகளைக் கக்கிய ரிஸாம் அரூஸ் என்பவர், நேற்று ஊடகச் சந்திப்பாென்றில் கலந்துகொண்டு தன்னால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக சில நாட்களுக்கு முன்னர் பெளத்த மதகுருமாரையும், பெளத்த மக்களையும் விளித்து பல குரோத வார்த்தைகளைக் கக்கியிருந்தார். அவரது அந்தக் கருத்துக்கள் வைரலாகப் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர், தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படைவாதக் காரியங்கள் பற்றி அங்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, சமூக வலைத்தளத்தில் தான் பேசி குற்றம் இழைத்ததாகவும், அதற்காக முழு பெளத்தர்களிடமும் மகா சங்கத்தினரிடமும் பகிரங்க மன்னிப்புக்கோருவதாகவும் இதற்குப் பின்னர் இவ்வாறான விடயங்கள் நடைபெற மாட்டாது எனவும் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தெளஹீத் ஜமாஅத் அமைப்பு மிக விரைவில் 10 000 விகாரைகளுக்கு குர்ஆன் பிரதிகள் பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.அதற்காக அவர்களில் ஒரு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

'விகாரைகளுக்குச் செல்கின்ற இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பெளத்த மதகுருமார்கள் அவர்களிடம் இருக்கின்றார்கள். அதுதொடர்பில் தன்னிடம் ஒலிநாடாக்கள் உள்ளன. இதனை உறுதியாக நான் சொல்கிறேன். அவர்கள் மூலமாக பன்சாலைகளுக்கு (விகாரைகளுக்கு) குர்ஆன் பிரதிகளைக் கொண்டு செல்ல முடியும். தற்போது அந்தக் குர்ஆன் பிரதிகளுக்காக அரைவாசிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் கல்கத்தாவிலிருந்து இலங்கைக்குக் குர்ஆன் பிரதிகள் வரவுள்ளன. இலங்கைக்கு வருவதற்குத் தடைவித்தக்கப்பட்டுள்ள நபரொருவர், அப்துல் ராசிக்கின் ஆசிரியர் மூலமாகத்தான் இந்தக் குர்ஆன் பிரதிகளை இங்கு வரச்செய்கின்றார். திரிபுபடுத்தப்பட்ட ஒரு விடயத்தைத்தான் சமூகமயப்படுத்த முனைகிறார்கள். அதன் மூலமாகப் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளின் ஒரே நோக்கம் தேர்தல் என்பதால் இந்த விடயங்களை மூடி மறைக்கின்றார்கள்'

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தத்தமது பதவிகளைப் பெற்றுக் கொண்டது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, ஏமாற்றினார்கள் என்றும் அவர்களுள் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு நல்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டார். பெயர் ரீதியாக தான் ஹிஸ்புல்லா பற்றிக் குறிப்பிட்டதாகவும், ரிஷாத் தொடர்பில் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியாமற் போனதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல இலங்கையில் தெளஹீத் ஜமாஅத்தினர் 6 இலட்சம் அளவில் இருக்கின்றார்கள் என்றும், அரசியல்வாதிகளுக்கு அவர்களின் வாக்குகளே குறியாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ, ரிஸாம் அரூஸ் என்பவரால் ஸஹ்ரானுக்கு 2006 ஆம் ஆண்டு ISIS பயங்காரவாத அமைப்பினால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஒன்றைத் தன்னிடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.அந்த சான்றிதழ் மூலம் ஸஹ்ரான் ISIS பயங்காரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்பதை உறுப்படுத்த முடியும் எனவும், ரிஸாம் அரூஸ் என்பவரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Read more...

ஃபீல்ட் மார்ஷல் பதவியைக் கைவிடுகிறார் பொன்சேக்கா

ஃபீல்ட் மார்ஷல் சரத் , தனது ஃபீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல்களுக்கு ஏற்ப, அண்மைய காரணமாக இருப்பது கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு அத்மிரால் ஒப் த ஃப்லிட் பதவியும், விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவுக்கு மார்ஷல் ஒப் த எயார் ஃபோஸ் ஆகிய உயர் பதவிகள் வழங்கப்பட்டமையாகும்.

அந்தப் பதவிகள் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட இராணுவத்தின் உயர் பதவியான ஃபீல்ட் மார்ஷல் பதவிக்குச் சமமான இரண்டு பதவிகளாகும். அந்தப் பதவிகள் வழங்கப்பட்டது தொடர்பில் தான் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, August 10, 2019

'எங்கள் வேட்பாளர் கோ....' எனும்போதே பட்டாசு கொளுத்த எல்லோரும் பார்த்திருக்கிறார்கள்!

எங்கள் வேட்பாளர் கோ....' எனும்போதே பட்டாசு கொளுத்துவதற்காக எல்லோரும் பார்த்தி்ருக்கிறார்கள். நாளைய நாள் ஆகும்வரை பெரும் எதிர்ப்பார்ப்புடன் பார்த்திருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கடுவலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு விழுந்த குழியிலிருந்துவெளியே வருவதற்காக எங்கள் முகாமின் அபேட்சகர் யார் என்பதைப் பார்ப்பதற்காக எல்லோரும் பெரும் எதிர்பார்க்கையுடன் இருக்கிறார்கள்.

நாளை 3 மணியின் பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பொதுஜன முன்னணியின் மாபெரும் வருடாந்த மாநாட்டின்போது, மகிந்த ராஜபக்ஷ பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோ.... என்று சொல்லும்போதே மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் மாநகர சபையின் குப்பைப் பிரச்சினையில் கோத்தாபய ராஜபக்ஷ எவ்வளவு சிறந்தவர் என்பது தெளிவாகின்றது என்றும், அவர் குப்பை அரசியல் செய்யவில்லை என்பதை கொழும்பு நகர சபை உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

நீதிமன்றை அவமதித்து தலைமறைவாகியுள்ள ஊத்தை சேது பாதிக்கப்பட்டோரிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றான்.

வட மாகாணத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரிடமிருந்து இணையம் ஊடாக கப்பம் பெற்றதாக கிளிநொச்சி நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடிவிறாந்தின் பிரகாரம் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நிதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஊத்தை சேது என அறியப்படும் நடராஜா சேதுறூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் நீதித்துறைக்கும் அதன் நீதிபதிகள் சிலருக்கும் அவமானம் ஏற்படுத்தும் வகையில் சேதுறூபன் இணையத்தளங்களில் செய்திகள் வெளியிட்டதாக , வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் பருத்திதுறை நீதிமன்றில் மேற்கொண்ட சமர்பணத்தை தொடர்ந்து மீண்டும் அவர் மீது திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறாது தடுக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிந்து கொண்டுள்ள நடராஜா சேதுறூபன் நீதிமன்ற உத்தரவை அவமதித்து நீதிமன்றிலோ அன்றில் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடையாது தலைமறைவாகியுள்ள நிலையில் „ என்னால் பாதிக்கப்பட்டதாக எவராவது கருதினால் நான் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்' என தெரிவித்துள்ளார்.

தன்மீது திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமையையும் தன்னை நாட்டை விட்டு வெளியேறவேண்டாம் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளமையையும் தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுள்ளதாக தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சேதுறூபன், நீதிமன்றினால் பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமையை அறிந்திருந்தும் நீதிமன்றை அவதித்து தலைமறைவாகியிருந்தவாறு ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாகவே மேற்படி பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளார்.

இலங்கையின் நீதித்துறைக்கு சவாலாகவும் , கண்ணியமற்ற உதாரணமாகவும் அமைந்துள்ள இச்செயற்பாடு தொடர்பில் சட்டத்தை மதித்து செயற்படுகின்ற பிரஜைகள் பெரிதும் விசனமடைந்துள்ளதுடன் பொலிஸார் சேதுறூபன் சார்பாக செயற்பட்டு வருவதாகவும் அவரை கைது செய்வதில் தயக்கம் காண்பித்து வருவதாகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

பொலிஸாரின் இச்செயற்பாடு மீதான மக்களின் அதிருப்தியை நீதிமன்றுக்கு தெரியப்படுத்துமாறு மக்கள் வட மாகாண சட்டத்தரணிகள் சங்கத்திடம் எதிர்பார்கின்றனர். பொலிஸார் இரு நாட்களினுள் கைது செய்யத் தவறும் பட்சத்தில் , சந்தேக நபரான நடராசா சேதுறூபனின் புகைப்படத்தினை „தேடப்படும் நபர்" என நாடுபூராகவும் சுவரொட்டிகளை பிரசுரிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்று உத்திரவிடவேண்டும் என்றும் சகல ஊடகங்களும் „இவரை கண்டுபிடிக்க உதவுமாறு" மக்களை கோரவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கையை விடுக்கபடவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவ்வாறு பிரசுரிக்கும்போது, நடராசா சேதுறூபன் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் என்பதை அறிந்து கொள்ளும் மக்கள் அவருக்கு அடைக்கலம் வழங்குவதை தவிர்ப்பதுடன் கைது செய்வதற்கு உதவியாக செயற்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Read more...

சித்தார்த்தன் கோத்தாவை ரகசியமாகவே சந்தித்தாராம்! விருப்பு வாக்குக்கு வழிசெய்கின்றார் சுமந்திரன்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவுள்ள கோத்தபாயவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தமை யாவரும் அறிந்தது.

இந்நிலையில், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இரகசியமாகவே சந்தித்தார். அது தொடர்பான தகவல்கள் வெளிவந்ததும் அதனை அவர் ஒப்புக்கொண்டார்.'

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அரசியல் சூட்சிகளின் அரங்கமாகும். ஒருவரை ஒருவர் இழுத்து வீழ்த்துவற்கும் மேலேறி மிதித்துச் செல்வதற்கும் பெயர்போன இடமாகும். சித்தார்த்தனின் சந்திப்பு இரகசியச் சந்திப்பு என்பதையும் ஊடகங்கள் அறிந்தபின்னர் அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

ஆனால் அந்த இரகசியச் சந்திப்பை பரகசியமாக்கியது யார்? விருப்பு வாக்குகளுக்காக தமக்குள்ளே முட்டிமோதிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஊடகங்களுக்கு தகவலை வழங்கியதாக இலங்கைநெட் அறிகின்றது.

இதேநேரம் சுமந்திரன் கோத்தபாயவைச் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவரது சந்திப்பு சித்தார்த்தனது சந்திப்பிலும் முற்றிலும் வேறுபட்டது. அதாவது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உளவாளியாகவே கோத்தாவை சந்தித்துள்ளார். கோத்தபாய தரப்பினரின் தேர்தல் வியூகங்கள் மற்றும் தமிழ் மக்கள் விடயத்தில் அவர்கள் எத்தகைய முடிவினை கொண்டுள்ளனர் என்பதை அறிந்து அதனை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரிவித்து அதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் வியூகங்களுக்கு உதவுவதே அவரது நோக்கமாக அமைந்திருந்தது என்றும் இலங்கைநெட் அறிகின்றது.

Read more...

'சோபா' வந்தால் இராணுவத்தினரின் எதிர்ப்பும் தலைகாட்டும்! - பாராளுமன்றில் அபாய எச்சரிக்கை

வெளிநாடுகள் அல்லது வெளிநாட்டு அமைப்புக்களுடன் எமது நாடு மேற்கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு உடன்படாமல், அதனை கால நீடிப்புச் செய்வது தொடர்பான பிரேரணையொன்று நேற்று (09) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார். எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கை தொடர்பாகவும், அமெரிக்காவுடன் ஏற்படுத்தவுள்ள மிலேனியம் செலேன்ஞ் கோபரேஷன் உடன்படிக்கை தொடர்பாகவும் இங்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கப் படைகளுக்கு இலங்கையில், இலங்கையின் சட்டங்களுக்குப் புறம்பாக அவர்களின் சட்டத்திற்கு ஏற்றாற்போல நடாத்தப்படவுள்ள விடயங்களும் இந்த உடன்படிக்கைகளில் உள்ளடங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விவாதத்தில் பங்குபற்றி, அரச அதிகாரமும் இராணுவ அதிகாரத்தினுள் உள்ளடங்கியிருப்பதாகவும், மற்றுமொரு அரசாங்கத்தின் இராணுவத்தினர் இந்நாட்டுச் சட்டத்திற்கு உடன்படாமல் சுதந்திரமாக தங்களுக்கு ஏற்றாற்போல நடப்பதற்கு இடமளிப்பது பெரும் பிளவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Read more...

எப்போது எங்களுக்கு விடுதலை? ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி!

அகதிகளையும் தஞ்சக்கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து ஆஸ்திரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி ஆஸ்திரேலியர்களுக்கு கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்காக ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் இலக்கியதற்கான விக்டோரியா பரிசை வென்றிருக்கிறார்.

இவ்விருதை ஏற்றுக்கொண்டு மனுஸ்தீவிலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய அவர், “இலக்கியத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அலைப்பேசியில் எழுதிவைப்பது, காகிதத்தில் எழுதி வைப்பது பாதுகாப்பற்றது என்பதால் வாட்ஸ்அப் மூலம் இப்புத்தகத்தை எழுதியதாக கூறியுள்ளார் பெஹ்ரூஸ் பூச்சானி.

“அதிகாரிகள் எந்த நேரத்திலும் அறையை உடைத்து அலைப்பேசியை எடுத்துச்செல்லும் ஆபத்து அப்போது இருந்தது. ஏனெனில், அப்போது அலைபேசியை வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.”

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிக்கும் அகதிகளை கடல் கடந்த தடுப்பு முகாமில் வைத்திருக்கும் திட்டம், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு இன்றுவரை அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனக் கூறிவருகிறது ஆஸ்திரேலிய அரசு.

பப்பு நியூ கினியா அரசின் கோரிக்கைக்கு இணங்க அத்தடுப்பு முகாம் மூடப்பட்டுவிட்டதாக ஆஸ்திரேலியா அரசு சொல்லி வந்தாலும், 300க்கும் மேற்பட்ட அகதிகள் அத்தீவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

“எங்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதே எங்கள் அனைவரது எண்ணத்திலும் உள்ள கேள்வி,” என்னும் பூச்சானி இதனை திட்டமிடப்பட்ட சித்ரவதை என்கிறார்.

2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.

2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் இப்படி வர முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் பப்பு நியூ கினியா, நவுரு போன்ற தீவு நாடுகளில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இலங்கைத் தமிழ் அகதிகளும் சில இந்தியர்களும் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இராணுவம் கொன்றுவிட்டதாக கூறப்படும் 400 பேரளவில் கனடாவில். அதிர்ச்சித் தகவல்.

இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நானூறுபேரளவில் கனடாவின் ரொறன்டோ நகரில் வாழ்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இத்தகவலை இலங்கை பெண் செயற்பாட்டாளர் ஒருவர் நியூ ரொறண்டோ என்ற நாளிதலுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வவுனியா உயர் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பின் பிரதானி என அறியப்படும் சுதர்சன் என்பவனும் அவ்வாறே ரொறொன்டோவில் வசித்துவருவதாக அறியமுடிகின்றது.

சுதர்சனை நாட்டிலிந்து வெளியேற்றுமாறு இலங்கை அரசு கனடிய அரசிடம் விடுத்த வேண்டுதலை கனடா நிராகரித்துள்ளதாக அறிக்கிடைக்கின்றது.

Read more...

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு உதவியோருடன் கூட்டுச்சேர மாட்டோம். த.தே.கூ வும் வேண்டாம்! பசில் திட்டவட்டம்.

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள எவரையும் தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ள மாட்டோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்தை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அதனைதொடர்ந்து தமது கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த அறிவிக்கவுள்ளதாகவும் தெரியப்படுத்தும் ஊடகவியலளார் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் தாம் கூட்டு வைக்க எதிர்பார்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்வில் அவர் கூறுகையில் :

'கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் அவர்களைத் தவிர்ந்த பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சி அமைப்போம்.'


கொழும்பு – கிங்ஸ்பரி ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டுவதில் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்' எனவும் அவர் மேலும் கூறினார்.

Read more...

சஜித்துக்கு கம்பி நீட்டிவிட்டு டெல்மனில் படுத்துக்கிடக்கின்றார் விஜயகலா.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளர் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்ற சஜித் பிறேமதாஸ தற்போது யாழ் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ளார். பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை அங்குரார்ப்பனம் செய்து வைக்கவும் அது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளவும் அவர் யாழ் வந்துள்ளார்.

இந்நிலையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா டெல்மன் வைத்தியசாலையில் படுத்துக்கிடப்பதாக அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியினுள் முரண்பாடு வலுத்துள்ளது. சஜித் பிறேமதாஸவை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அக்கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பும் கட்சியினுள் நிலவுகின்றது.

உட்கட்சி மோதல்கள் வலுத்துள்ள நிலையில் சஜித் பிறேமதாஸவின் செயற்பாடுகளுக்கு கட்சியினுள் குழிபறிப்புக்கள் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இன்று யாழ் வந்துள்ள சஜித்தின் நிகழ்வுகளில் விஜயகலாவை கலந்து கொள்ள வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைத்து தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நிகழ்வுகளுக்கு வருமாறு சஜித்திடமிருந்தும் விஜயகலாவிற்கு அழைப்பு கிடைத்ததாக தெரிவிக்கும் யாழ் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் இருதரப்பையும் சமாளிக்கும் பொருட்டு விஜயகலா வைத்தியசாலையில் படுத்துக்கிடப்பதாக தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட இரண்டாம் கட்ட தலைமையே இன்றைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடாத்துவதாக இலங்கைநெற் அறிகின்றது:

Read more...

மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருபகுதி மஹிந்தருடன் மந்திராலோசனை.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருசிலர், நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளனர். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின்உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களிற் சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துவரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சந்திப்பில் ஈடுபட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Read more...

Friday, August 9, 2019

த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்தி - கோத்தபாய

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவருகின்றன. தான் ஒரு போதும் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லை என கூறவில்லை என்றும் இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான த. சித்தார்த்தனுக்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு போலியான தகவல்கள் வெளியாகின்றன.

அதனடிப்படையில், தமிழர்களின் ஆதரவு தனக்குத் தேவையில்லையென வெளியான செய்திகள் தவறானவையென்றும் அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் தமக்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள், சிங்களவர்களின் வாக்குகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு போலியான செய்திகள் வெளியாவதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, தன் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டுள்ள மக்களை திசைமாற்றிவிட முடியாதென்றும் கோத்தாபய ராஜபக்ஷவின் ஊகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com