Saturday, June 8, 2019

சுயபரிசோதனை- பாகம்-3 ஜனநாயகமும் சிறுபான்மையின் அவலங்களும். வை எல் எஸ் ஹமீட்

உலகின் ஆட்சிமுறையை பிரதானமாக இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஜனநாயகம், அடுத்தது சர்வாதிகாரம். சர்வாதிகாரம் என்பது மன்னராட்சியாக, கம்யூனிசமாக, சோசலிசமாக எந்தவடிவத்தையும் எடுக்கலாம்.

இரண்டுவகை ஆட்சிக்குமான அடிப்படைவேறுபாடு

ஜனநாயகம் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிக்கும். சர்வாதிகாரம் அனுமதிக்காது. உதாரணமாக கம்யூனிச நாட்டில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஜனநாயகம் liberalism மற்றும் human rights ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் அரவணைத்துச் செல்லும். அதனால்தான் human rights promote democracy என்று கூறுவார்கள்.

Liberalism


இங்கு liberalism என்பது தனிநபர் சுதந்திரத்தைக் குறிப்பிடுகின்றது. இந்த சுதந்திரம் என்பதை தனது ஆட்சியாளரை தான் தீர்மானிப்பது, தனது வாழ்வுமுறையை தான் தீர்மானிப்பது போன்ற பலவிடயங்களை உள்ளடக்கும். தனது வாழ்வுமுறையைத் தீர்மானிப்பதில் ஆட்சியாளரின் தலையீட்டு எல்லை என்பதைப் பொறுத்து இந்த liberalism த்தின் எல்லை தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு liberalism, அதனைவிட விரிந்த neo liberalism என்கின்ற விடயங்கள் வருகின்றன. இந்த liberalism த்தைக் கட்டுப்படுத்துவதில் socialism இத்தின் பங்கு- அதாவது welfare state இன் பங்கு போன்றவை இருக்கின்றன.

வாக்குரிமை

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் எங்கோ ஓர் இடத்தில் சம உரிமையுடன் வாழுகின்ற தகுதி இருக்கின்றது. அத்தகுதி ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் இருக்க முடியாது.

இருவரில் இருந்து பெருகிய மனித இனம் உலகின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எங்கு அவன் சில தலைமுறைகளாக வாழ்கின்றானோ அது அவனது முழு உரிமையுடைய வாழ்விடமாகும்.

நாடுகள் என்ற கோட்பாடு மனித தொடக்கத்தில் உருவானதல்ல. பிற்காலத்தில் உருவானதாகும். காலப்போக்கில் நாட்டின் பிரஜை என்ற கோட்பாடு உருவாகியது. இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் அங்கு சம உரிமை இருக்கின்றது.

ஜனநாயகத்தில் ஒரு நாட்டுப்பிரஜைகள் தனது ஆட்சியாளரைத் தீர்மானிப்பதற்கு வழங்கப்படுகின்ற அந்த உரிமைதான் வாக்குரிமையாகும். எல்லாரும் சமம் என்பதனால்தான் எல்லோருக்கும் ஒரேவிதமான வாக்குரிமை வழங்கப்படுகிறது.

பெரும்பான்மை தத்துவம்

தனது ஆட்சியாளரைத் தீர்மானிக்கின்ற உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கின்றது. அதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு ஆட்சியாளன் இருக்கமுடியாது. இந்தக்குழப்பத்தைத் தவிர்க்க உருவான கோட்பாடுதான் பெரும்பான்மைத் தத்துவம் என்பதாகும்.

அதாவது 100 பேரில் 51 பேர் ஒரு முடிவையும் 49 பேர் மாற்றுமுடிவையும் எடுத்தால் 51 பேரின் முடிவு செல்லுபடியாகும். இங்கு 51 பேருக்கும் 49 பேருக்குமிடையில் ஓர் மறைமுக உடன்பாடு ஏற்படுகின்றது. அதாவது உங்கள் 51 பேரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்; அடுத்த தடவை நாங்கள் 51 பேராக மாறும்போது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; என்பதாகும். இதுதான் பெரும்பான்மைத் தத்துவத்தின் அடிப்படையாகும்.

ஜனநாயகம் செயற்படுவதென்பது இந்த பெரும்பான்மைக் கோட்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலமாகும். அதேநேரம் இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலவீனமுமாகும். இன்று ஜனநாயக உலகில் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணியே இப்பெரும்பான்மைவாதக் கோட்பாடே!

இந்தப்பெரும்பான்மை என்பது அரசியல் கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மையே தவிர இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை அல்ல. அதேநேரம் இந்த அரசியல் பெரும்பான்மை அரசியல் சிறுபான்மையை அடக்கியாள முற்படுவதை “ Tyranny of Majoritarianism என்பார்கள். அதனை ஒரு சில அடிப்படை விடயங்களிலாவது தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுதான் Doctrine of Constitutionalism. இது ஒரு சட்ட ஆய்வுக் கட்டுரை இல்லையென்பதனால் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

ஜனநாயகம் என்பதே ஒரு அரசியல் கோட்பாடாகும். இங்கு பேசப்படவேண்டியது அரசியல் பெரும்பான்மை, அரசியல் சிறுபான்மை என்பனவாகும். ஆனால் சிறுபான்மைகள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நாடுகளிலெல்லாம் அவை இன, மொழி, மத, சாதி போன்ற ரீதியான பிரச்சினைகளாகவே இருக்கின்றன.

இவற்றிற்கு காரணம் என்ன? இவற்றிற்கு தீர்வு என்ன? இவற்றை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான கருப்பொருளாகும்.

ஜனநாயகம் தவறாகப் பயன்படுத்தப்படல்

மேலே பார்த்ததுபோல் ஜனநாயகம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிப்பதாகும். எனவே இங்கு முடிவுகள் கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆட்சிக்காக போட்டியிடுபவர்களில் யார் சிறந்தவர் என பெரும்பான்மை நினைக்கிறதோ அவர் ஆட்சியாளராக வேண்டும்.

இங்கு கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மை, அதாவது அரசியல் பெரும்பான்மையே மையப்பொருளாகும். அப்பொழுதுதான் இன்று 49 பேராக இருப்பவர்கள் நாளை 51 ஆகவும் 51 பேராக இருப்பவர்கள் 49 ஆகவும் மாறமுடியும். ஆனால் அதிகமான பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடுகளில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்கு இடமே இல்லை; வெளியில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மையாக தோற்றியபோதும்.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது.

இங்கு கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்குப் பதிலாக இன, மொழி, மத என்று வேறுவகையான பெரும்பான்மையே இந்த “பெரும்பான்மை” என்ற சொல்லை தனதாக்கிக்கொள்கிறது. கருத்தினடிப்படையிலான “பெரும்பான்மைக்கு” அங்கு இடமில்லை.

இதனாலேயே ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இரண்டு வகையான நிரந்தர இனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆளும் இனம் ஆளப்படும் இனம் என இரு நிரந்தர இனம் இருக்குமாயின் அது அடிப்படை ஜனநாயக கோட்பாட்டிற்கு முரணானது. அது ஜனநாயகமாக இருக்க முடியாது.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது. ஆனால் அதனை யாரும் உணர்வதில்லை.

போலிப்பெரும்பான்மை ஜனநாயக் கோட்பாடு

பல்லின சமூகம் வாழுகின்ற பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் “ கருத்தியல் பெரும்பான்மை” என்பதில் உள்ள “ கருத்தியல் “ என்ற சொல் நீக்கப்பட்டு “ பெரும்பான்மை “ என்ற சொல் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

அதாவது, இன, மத, மொழி போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஒரு சமூகக்குழு அந்தப்பெரும்பான்மை என்ற சொல்லை தனது சமூகத்திற்குரியதாக வரித்துக்கொள்கிறது. இதனால் அந்த சமூகம் நிரந்தர ஆளும் சமூகமாக மாறுகிறது. கருத்தியல் பெரும்பான்மையை அந்த சமூகத்திற்குள் மட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த சமூகக்குழுவின் அடையாளங்களிலிருந்து மாறுபட்ட ஏனைய சிறுபான்மையோர் ஆளப்படும் நிரந்த வர்க்கமாக மாற்றப்படுகிறார்கள்.

உதாரணமாக, ஆளப்படும் இனத்தில் இருந்து ஆட்சிசெய்வதற்கு எல்லாவகையிலும் அதிசிறந்தவராக கருதப்படக்கூடிய ஒருவர் போட்டியிட்டாலும் அவர் ஆட்சியளராக தெரிவுசெய்யப்பட முடியாது; ஏனெனில் கருத்தியல் பெரும்பான்மைக்கு அங்கு இடமில்லை. மாறாக, அவரைவிட பலவகையில் தகைமை அல்லது ஏற்புடைமை குறைந்தவராக இருந்தாலும் அவர் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவர்தான் ஆட்சியாளராக வரமுடியும்.

பெரும்பான்மைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர் போட்டியிடும்போது அவர்களுக்குள் யார் ஆட்சியாளர் என்பதில்தான் கருத்தியல் பெரும்பான்மைக் கோட்பாடு வேலை செய்கின்றது.

எனவே, இந்த ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலயீனமே “ ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இருவகை இனங்களை உருவாக்குவதாகும். ஆனால் அதன் அடிப்படைத் தத்துவம் அதுவல்ல. அது நிரந்தர ஆளும் இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில் கருத்து நிரந்தரமானதல்ல.

மறுபுறம், ஒரு ஜனநாயக நாட்டில் சகலரும் சமம் என்றால் சமூகம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் எந்தவொரு பிரஜைக்கும் ஆட்சியாளராக வரும் உரிமை இருக்கவேண்டும். அவரின் தகமை, கொள்கை, ஏற்புடமை என்பனதான் அவரைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கவேண்டும். ஆனால் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவு தகைமையுடையவராக இருந்தாலும் அவர் சிறுபான்மை என்பதற்காக ஆட்சியாளராகும் தகுதியை இழக்கின்றார் சட்டத்தில் அத்தகுதியீனம் இல்லாதபோதும்கூட.

எல்லோரும் சமம் என்றால் எவ்வாறு நிரந்தரமான ஆளும் இனம், ஆளப்படும் இனமென இருவர்க்கங்கள் உருவாக முடியும். ஜனநாயகத்தின் இப்பலயீனம்தான் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படையாகின்றன. அறிஞர்கள் ஜனநாயகம்தான் சிறந்தமுறை என்று கூறவில்லை. இருப்பவற்றுள், குறிப்பாக சர்வாதிகாரத்துடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் சிறந்தது; என்றே கூறுகிறார்கள்.

எல்லோரினதும் சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு புதியமுறை ஒன்றை உருவாக்கமுடியுமா? என்பது எதிர்கால ஆராய்ச்சிகளில் தங்கியிருக்கின்றது. ஆனாலும் தற்போதைக்கு சில தீர்வுகளாகத்தான் மனித உரிமைக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் ஆட்சி, ஐ நா மனித உரிமை ஆணையம் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையும் மீறியதாகவே பெரும்பான்மை வாதத்தின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

சிறுபான்மை நிலைப்பாடு


ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்பது ஜனநாயகத்தின் பலயீனத்தில் இருந்து பிறக்கும் கோட்பாடானபோதிலும் சிறுபான்மைகள் பெரும்பான்மை இனத்தை ஆளும் இனமாக ஏற்றுக்கொள்வதில் ஒருபோதும் மறுப்புத் தெரிவிப்பதில்லை.

சிறுபான்மையைச் சேர்ந்தோர் ஒருபோதும் தாம் ஆட்சியாளராக வரவேண்டுமென்று கேட்பதில்லை. மாறாக பெரும்பான்மையை ஆளும் இனமாக தாராளமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கே ஆட்சியாளராக வர இவர்களும் இணைந்து சந்தர்ப்பம் வழங்குகிறார்கள்.

முரண்பாடு

மனிதன், பிரஜை என்ற அடிப்படையில் சம உரிமை இருந்தும் ஆளும் வர்க்கம் என்ற பெரும்பான்மையின் அந்தஸ்த்தை சிறுபான்மையும் ஏற்பதையே சகவாழ்வின் பெரும்பேறாக பெரும்பான்மை கருதவேண்டும். ஆனால் ஆளும் இனம் தன்னை முதல்தர பிரஜைகளாகவும் நாடு அவர்களுக்குரியதாகவும் கருத முற்படும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.

சிறுபான்மைகளை அரவணைக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளை சிறுபான்மைகள் அரவணைக்க முற்படும்போது அடுத்த பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மைகளின் தயவின்றி தனிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்காக பெரும்பான்மையிடம் சிறுபான்மைக்கெதிரான உணர்வுகளை ஊட்டுகின்றனர்.

தம் அடிமனதில் தாம் ஆளும் இனம், சிறுபான்மை ஆளப்படும் இரண்டாம்தர பிரஜை என நினைக்கும்போது சிறுபான்மைக்கெதிராக அடக்குமுறையை அட்டாகாசங்களைக் கட்டவிழ்ப்பது அவர்களுக்கு இலகுவாகின்றது.

சட்டம் எல்லோருக்கும் சமம் என்றபோதிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது என்ற போதிலும் பெரும் ஊர்களையே அழித்தவர்களை சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்து இலகுவாக பிணையில் விடுவித்ததும் அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான சட்டங்களின்கீழ் சிறையில் வாடவைத்ததும் அதே மனோநிலைதான்.

பெரும்பான்மை வாதம்

இந்தப் பெரும்பான்மை வாதம் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மைகளின் தனித்துவ அடையாளங்களை, வாழ்வியல் அம்சங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து பெரும்பான்மையோரின் வாழ்வியல் முறைகளைத் திணிக்க ஏதுவாக இருக்கின்றது.

புதிய நாடுகள் உருவாதல்


இரண்டாம் உலகமகா யுத்தின்பின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அவ்வாறு சுதந்திரம் பெற்ற நாடுகளுக்குள் பல இன, மத, மொழி, காலாச்சார வேறுபாடுகளைக்கொண்ட பிரிவினர் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை அரசியல் ரீதியாக ஒரு தேசியமாக அடையாளம் கண்டார்கள். அந்நியரிடம் இருந்து சுதந்திரம்பெற்று ஒற்றுமையாக, ஒரு அரசிசயல் கருத்தின் அடிப்படையிலான தேசியமாக தம்மைத் தாமே ஆள முற்பட்டார்கள். அதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்ட சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

அதற்கு உடன்பாடில்லாதவர்கள் சுதந்திரத்தின்போதே பிரிந்து சென்றார்கள். உதாரணம் இந்தியா, பாகிஸ்தான். இவ்வாறு சுதந்திரம் பெற்றதன்பின் தம்மை ஒரு அரசியலடிப்படையிலான தேசியமாக கருதுவதற்குப் பதிலாக, கருத்தியல் பெரும்பான்மைக்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை இனக்குழுக்கள் ஜனநாயகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் ஆளப்படும் இனங்கள் மீது நேரடி, மறைமுக அடக்குமுறைகளை கையாண்டார்கள். இதன் விளைவாக புதிய தேசியக்கோட்பாடுகள், சுயநிர்ணய உரிமை போன்ற தத்துவங்கள் முன்னுரிமை பெற்றன. நாடுகள் பிரிந்தன.

இலங்கையின் அனுபவம்

சுதந்திர இலங்கையிலும் இதே நிலைதான் தோன்றியது. தனிச்சிங்கள சட்டம்; தமிழருக்கெதிராக தொடராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள்; இவ்வாறான நிகழ்வுகள்தான் தமிழர்கள் தங்களை ஒரு தேசியமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துள்ள ஒரு சமூகமாகவும் வலியுறுத்தும் நிலைக்குத்தள்ளி தனிநாட்டுப் போராட்டத்திற்கும் வித்திட்டது.

முஸ்லிம்கள்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கியபோதிலும் அவ்வாறான போராட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை. முடிந்தளவு பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்துசெல்லவே முற்பட்டார்கள். ஆனால் யுத்தவெற்றி பெரும்பான்மை வாதத்தின் பிரதான இரையாக முஸ்லிம்கள் மாற்றப்படுமளவுக்கு இட்டுச் சென்றது.

பெரும்பான்மை வாதம் முஸ்லிம்களின் ஹலால் உணவைக் கேள்விக்குறியாக்கியது.

முஸ்லிம்களின் ஆடையைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களது தனியார் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களது தனித்துவ கட்சிமுறையைக் கேள்விக்குட்படுத்தியது.

அவர்களது வர்த்தகத்தைக் கேள்விக்குட்படுத்தியது.

இவ்வாறு பட்டியல் நீளும்.

இவ்வளவும் நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்களைப்போல் தனிநாடு கோரவில்லை. கோரவும் முடியாது. காரணம் அவ்வாறான புவியியல் சூழல் அவர்களுக்கு இல்லை.

பெரும்பான்மையைப் பகைத்துக்கொண்டு வாழமுடியாது. காரணம் அவர்களது மார்க்கம் அமைதி, சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவதே “ உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்றுதான். மட்டுமல்ல, முஸ்லிம்கள் பெரும்பான்மைக்குள் சிதறிவாழுகின்ற சிறுபான்மை.

இந்நிலையில், ஜனநாயக் கோட்பாட்டின் பலம், பலயீனம் எவ்வாறானபோதிலும் பெரும்பான்மை சமூகத்தின் நிரந்தர ஆட்சியாளர் என்ற அந்தஸ்த்தை அங்கீகரித்து அழகுபார்ப்பதில் ஒருபோதும் எதுவித தயக்கமுமில்லாத ஒரு சிறுபான்மை சமூகத்தின் தனித்துவ அடயளங்கள் ஏன் மறுக்கப்படுகின்றன? அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வு ஏன் கேள்விக்குறியாக்கப்படுகின்றது?

இவைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது. சபாநாயகர் முஸ்லிம்களின் ஆடைவிடயத்தில் ‘ இலங்கைக் கலாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அராபிய கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும்; எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விடயங்களில் இவ்வாறு உயர்மட்டத் தலைவர்களுக்கு மத்தியிலேயே தவறான புரிதல் இருக்கின்றது.

இவ்வாறு பல விடயங்களில் முஸ்லிம்கள் தொடர்பாக தவறான புரிதல்கள் இருக்கின்றன. இவற்றைத் தெளிவுபடுத்த நாம் காத்திரமாக எதையாவது செய்திருக்கின்றோமா? அரசியல்ரீதியாக நமது கடமைகளைச் செய்திருக்கின்றோமா?

இன்று நமது அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு இருக்கின்றது. அது சில சாதக விளைவுகளைத் தரக்கூடிய சில அடையாளங்கள் தெரிகின்றன. எனவே, இவ்வாறான தவறான புரிதல்களை நிரந்தரமாக களைவதற்கு அரசியல், சமூக ரீதியாக நாம் எதிர்காலத்தில் செய்யப்போகும் பங்களிப்புக்கள் என்ன?

இவைகள் தொடர்பாக நாம் விரிவாக ஆராயவேண்டும்.

Read more...

அசாத்சாலிக்கு தூதுவர் பதவியாம்!

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி நாடு ஒன்றுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

ஈஸ்டர் தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் அசாத் சாலி உட்பட்ட சில அரசியல்வாதிகளுக்கும் நேரடியாக தொடர்பிருப்பதாகவும் அவர்களை பதவி விலக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் மேற்கொண்ட உண்ணா விரதத்தின் விளைவாக அசாத் சாலி பதவியை ராஜனாமா மேற்கொள்ள நேரிட்டது.

இந்நிலையில் இவருக்கான மாற்று பதவி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க முன்வந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானி இராஜனாமா!

தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்போது சாட்சியமளித்ததன் பின்னர் சிசிர மென்டிஸ் தனது பதவியை ராஜனாமா செய்து கொண்டுள்ளார்.

சிசிர மென்டிஸ் சாட்சியமளிக்கும்போது, குறித்த தாக்குதல் தொடர்பாக தமக்கு ஏப்ரல் 8ம் திகதி புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு தரப்பிற்கும் கட்டளையிடும் அதிகாரம் தனக்கு இருக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இருந்தபோதும், தனக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தான் உடனடியாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுவாக இருந்தாலும் நீண்டகால பொலிஸ் துறையில் அனுபவமுள்ள சிசிர மென்டிஸ் குறித்த பதவிக்கு தகுதி அற்றவர் என்பது அவர் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது தெளிவானது என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

Read more...

Friday, June 7, 2019

அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி சீறிப்பாய்ந்த மைத்திரியுடன் முரண்டு பிடித்தார் ரணில் விக்கிரமசிங்கே.

இன்று பிற்பகல் ஏழுமணிக்கு அவசரமாக அமைச்சரவையை கூட்டிய சிறிசேனா அங்கு மிகவும் சீறிப்பாய்ந்துள்ளார். விசேடமாக அமைச்சரவை சந்திப்புக்கு இன்று சபாநாயகருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தனது மிகுந்த எதிர்ப்பையும் விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு பலத்த பின்னடைவும் அபகீர்த்தியும் ஏற்பட்டுள்ளதாக கடிந்த அவர் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வேண்டியுள்ளார். இருந்தபோதும் அமைச்சரவையில் மைத்திரியை எதிர்த்து பல அமைச்சர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இனி வரமாட்டார்கள் என அறிவித்த மைத்திரி, பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனித் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டாம் எனத் தான் உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தெரிவுக்குழு விசாரணை வேண்டாம் என சபாநாயருக்குத் தான் முன்னரே அறிவித்திருந்த போதிலும் அவர் சபைக்கு அறிவிக்கவில்லை எனக் கடும் சீற்றத்துடன் தெரிவித்த ஜனாதிபதி, சேவையில் இருந்து விலக்கப்பட்ட அதிகாரிகளே தெரிவுக்குழு முன் சாட்சியமளித்தனர் எனவும், பதவியில் இருக்கும் எவரும் இனி சாட்சியமளிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிடுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு சாட்சியங்கள் மூலம் பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள், புலனாய்வுத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அதேசமயம் தவறுகளைத் தன் மீது சுமத்த சிலர் முயல்வதாகவும் ஜனாதிபதி சாடியுள்ளார்.

கூட்டத்தில் ஜனாதிபதியின் கருத்துக்களினால் ஆத்திரமடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்கள் பலரும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இடம்பெறும் தெரிவுக்குழு விசாரணையை இடைநிறுத்த முடியாது எனவும், தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய தெரிவுக்குழு விசாரணையே சிறந்தது எனவும் வாதிட்டுள்ளனர்.

Read more...

தெரிவுக்குழுவை முடக்க உச்சத்திற்கு செல்லும் மைத்திரி, சேவையிலுள்ள அதிகாரிகளை சாட்சியளிக்க விடமாட்டாராம்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரழைக்கப்பட்டு அரச புலனாய்வுத் தகவல்கள் ஊடகங்களின் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இதுவரையில் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளாவர். எனவே, தற்போது சேவையிலுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவரையும் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க நான் அனுப்பப் போவதில்லை. அவர்களது செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான மாதாந்தக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்திரி இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான 05 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவரும் பின்னணியில் தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரணை செய்தல் உயர்நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்டமா அதிபர் எனக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நான் அதனைச் சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

ஜனாதிபதி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய கடித ஆவணங்கள் நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே சம்பிரதாயபூர்வமாக சபாநாயகரினால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சபாநாயகர் இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாமை தொடர்பில் நான் வருத்தமடைகின்றேன்” – என்றார்.

பொலிஸ் திணைக்கள தலைமையகக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு ஜாவத்த பிரதேசத்திலுள்ள சலுசல தலைமை அலுவலகத்துக்குச் சொந்தமான காணியைப் பொலிஸ் திணைக்களத்துக்குக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார். அத்துடன், அரசுக்கு சுமையாகக் காணப்படுகின்ற, உரிய முறையில் இயங்காத சலுசல பணிப்பாளர் சபையைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.

பொலிஸ் அதிகாரிகளின் பதவியுயர்வுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அப்பதவியுயர்வுகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தற்போது சம்பள ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும், அவர்களது அனுமதியையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் வெகுவிரைவில் மூன்று பிரிவுகளின் கீழ் குறித்த பதவியுயர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குப் புதியதொரு படையணியொன்றை இணைத்துக்கொள்வதற்கான அனுமதியையும் ஆயுதங்களையும் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நச்சுத்தன்மையான போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.



Read more...

விமல் மற்றும் எஸ்பி க்கு எதிராக றிசார்ட் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு.

றிசார்ட் பதுயுத்தீன் பயங்கரவாதிகளுக்கு உதவியதாகவும் அமைச்சரக வாகனங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பா.உ விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். அத்துடன் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பலவற்றை எஸ்பி திஸாநாயக்கவும் முன்வைத்திருந்தார்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என றிசார்ட் பதுயுதீன் இன்று பொலிஸ் தலைமையகத்தில் மேற்படி இருவருக்கும் எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகவியாளர்களிடம் கருத்து தெரிவித்த றிசார்ட் பதுயுதீன்:

பயங்கரவாத இயக்கத்துடனும் சஹ்ரானுடனும் தன்னை தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வரும் இவ்விரு அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய் என தெரிவித்தார்

தனது அமைச்சுக்கு கீழான சதொச நிறுவனத்தின் வாகனங்கள் சஹ்ரானின் நாசகார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் பட்டதாகவும் அவரது பயங்கர செயற்பாடுகளுக்கு தான் உதவியதாகவும் விமல் வீரவன்ச முழுப்பொய்யை கூறியதுடன் கிளிப்பிள்ளை போன்று திரும்ப திரும்ப அதே பொய்யை பரப்புகின்றார். விமலுக்கு முதுகெலும்பு இருந்தால் இதனை சாட்சியங்களுடன் நிரூபிக்குமாறு சவால் விடுக்கின்றேன் என்றார்.

அதே போன்று 52 நாட்கள் அரசாங்கத்துக்கு எனது உதவியை கேட்டு, அது சாத்தியப்படாததால் விரக்தி அடைந்த எஸ் பி திசநாயக்கவும் ஊடகங்களில் வந்து தினம் தினம் பொய்களை கக்குகின்றார். இவ்விருவரும் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நப்பாசையிலலேயே இந்த பொய்யான கருத்துகளை கூறி வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட கடும்போக்கு தீவிரவாதிகளை உசுப்பேற்றியவர்கள் இவர்களே.

நாட்டில் மீண்டும் ஒரு கலவரம் ஏற்படக்கூடாது என்ற உண்மையான எண்ணத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை தூக்கி எறிந்து, போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மீதான சுயாதீன விசாரணைக்கு வழி வகுத்துள்ளனர் எனவும் ரிஷாத் எம் பி மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, அப்துல்லா மஹ்ருப், இஷாக் ரகுமான், இஸ்மாயில், மேல் மாகண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோரும் மக்கள் காங்கிரஸ் தலைவருடன் வந்திருந்தனர்.

Read more...

குற்றமிழைத்தவர் இருப்பின் தம்மை சட்டத்திடம் ஒப்படைத்து, அப்பாவி மக்களை காப்பாற்றக் கோருகின்றார் பசீர் சேகுதாவூத்.

குற்றமிழைத்தவர் இருப்பின் தம்மை சட்டத்திடம் ஒப்படைத்து நாட்டையும், அப்பாவி மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமது சமூகத்தையும் காப்பாற்ற அவர்கள் முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

நாட்டில் நடைபெறும் கைதுகள், பொய் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடும் போது,

நிரூபியுங்கள் என்று கேட்பது தர்க்கமல்ல, ஏனெனில்; மற்றவர் அவரின் தேவைக்கேற்றவாறு நிரூபிக்கலாம்!

பொய்யை மெய்யெனவும் மெய்யை பொய்யெனவும் நிரூபித்த பல்லாயிரம் தருணங்களை உலக வரலாறெங்கணும் காண்கிறோம். இலங்கை இனப்பிரச்சினையின் உக்கிர விளைவான யுத்தம் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்தினுள்ளும் பல மெய்கள் பொய்களாகவும் மற்றும் பல பொய்கள் மெய்களாகவும் நிரூபிக்கப்பட்டதன் விளைவாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலம் சிறைவாசம் அனுபவித்தோரையும், இன்னும் அனுபவிப்போரையும் நாம் வாழுகிற நிகழ்காலத்திலேயே காணுகிறோம். இவ்வாறே; மேற்சொன்ன வடிவிலான நிரூபிப்புகளினால் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பியிருப்போரையும் கண்டிருக்கிறோம்.

மேலும், உண்மைகள் உண்மைகள்தான் எனவும், பொய்மைகள் பொய்மைகள்தான் எனவும் நிரூபிக்கப்பட்டமையையும் வரலாற்றில் பார்க்கிறோம்.

அதிகாரத்தை கையில் வைத்திருப்போர் பொய்யை மெய்யாகச் சோடித்தும், மெய்யைப் பொய்யாகச் சோடித்தும் நிரூபிப்பதில் வல்லவர்கள். ஆனால் அந்த நிரூபிப்பினால் தமது அதிகாரத்துக்கு சேதமா இல்லை இலாபமா என்று மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள்.

எந்தவொரு அரசியல் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வுகளை இலகுவில் கண்டடைந்தமையை எங்கணும் காணக்கிடைக்கவில்லை. தீர்வுகள் மேலும் பிரச்சினைகளை ஆழப்படுத்தியிருக்கும் வரலாற்றைப் பரவலாகக் பார்க்கக்கிடைக்கிறது.எமது இனப்பிரச்சினைக்கான முதலாவது தீர்வு முயற்சியான திம்பு பேச்சுவார்த்தை முதற்கொண்டு நடுவில் நடந்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் மற்றும் நோர்வே மத்தியத்தத்தில் நடந்த பேச்சுவார்த்தை உட்பட இறுதியில் யுத்தத்தில் இராணுவ வெற்றி ஈறாக இவை எவையும் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவில்லை. மாறாக; இவ்வகைத் தீர்வு முயற்சிகள் புதிய பிரச்சினைகளை தோற்றுவித்திருப்பதைக் கண்டதுதான் நமது அனுபவமாகும்.

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று செய்யப்பட்ட அப்பாவி மக்கள் மீதான குரூர தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதத்தின் தாக்குதல்தான். ஆனால்; இத்தாக்குதலை பிரச்சினையாகப் பார்த்தால் அது இலங்கையில் புதிய வடிவில் நிகழும் சர்வதேச அரசியல் பிரச்சினையின் தொடக்கமும்தான் என்பதை கவனத்தில் எடுக்கவேண்டும்.

பெரும் பிரச்சினை என்பது அரசியல் என்ற வரையறைக்குள் வந்துவிட்டால் அதுவும் இன அல்லது மதக்குரோதத்தை முன்னிறுத்திய அரசியல் என்று காட்டப்பட்டுவிட்டால்- நிரூபியுங்கள் என்று எதிரிகளைப் பார்த்தோ அல்லது விசாரணையாளர்களை நோக்கியோ சவால் விடுவது அல்லது வேண்டுவது ஆரோக்கியமானதல்ல. நாம் நிரபராதி என்று நிரூபிப்பதே பாதுகாப்பானது. ஆனால், தர்க்க ரீதியாக நம்மை நாமே நிரபராதி என்று நிரூபிப்பது எவ்வாறு என்பது இன்னொரு பெரிய பிரச்சினையாகும். இப்புதிய பிரச்சினை வேறொரு அரசியல் முகத்தை காட்சிப்படுத்தவும் கூடும். நிரூபிக்கவேண்டியுள்ளவர்கள் சிங்கள சிவில் புத்திஜீவி சமூகத்திடம் தம்மை ஆதாரங்களோடு நிரபராதி என்று நிரூபித்து அவர்களை சிங்களப் பொதுமக்களிடம் நிரூபணத்தைக் கொண்டு செல்லும் கடமையை ஒப்படைக்கவேண்டும்.

விடுதலை என்பது சில தனிநபர்களுக்கானதல்ல, அது இந்த நாட்டுக்குரியது என்பதை, எழுந்து தலைவிரித்து ஆடுகிற இந்தப் புதிய பிரச்சினைகளின் பரிமாணத்தையும் பரிணாமத்தையும் புரிந்துகொள்கிற வல்லமை சிங்கள புத்திஜீவி சமூகத்துக்கு உண்டு.எனவே இவர்கள் இதனைச் செய்ய முன்வருவார்கள்.

இலங்கை இயற்கையாகவே நடுக்கடலுக்குள் இருக்கும் நாடு. இதனைக் கடலால் சூழப்பட்ட நாடு என்று வேறு விதமாகவும், அழகாக இதனைத் தீவு என இன்னொரு விதமாகவும் அழைக்கின்றனர்.

கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் நாடு அமைந்திருக்கிறது என்பதனால் பூகோள அரசியல் மேலாதிக்கப் போட்டியில் இறங்கியிருக்கிற வல்லாதிக்க நாடுகளின் கூர்மையான பார்வையின் கீழ் இந்நாடு கண்காணிக்கப்படுகிறது என்பதை "இது எமக்கு மட்டும் சொந்தமான உலகிலுள்ள ஒரேயொரு சிங்கள பௌத்த நாடு" என்று ஆர்ப்பரிக்கிறவர்கள் புரிந்து கொள்வதோடு, நாடு நடுக்கடலில் இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.நாட்டைக் காப்பாற்றுவதற்கு நாலு தரப்பு மக்களின் கரங்களும் இணைந்த பலம் அவசியமாகும் என்பதை மறுப்பது, இந்நாடு கலவர பூமியாக இருப்பதை விரும்பும் சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாடாகும். இப்படியே போனால் இலங்கை தோல்வியடைந்த நாடாகிவிடும்.இவை போன்ற கருத்துக்களை எல்லாம் அறிந்தவர்களே மேற்சொன்ன பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளாகும். இவர்களால் சாதாரண மக்களின் மனங்களுக்குள் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியும்.

இட்டுக்கட்டி நிரூபித்துவிட்டால் பெரும்பான்மை மக்கள் நம்பிவிடுவார்களல்லவா? இதனால் முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுவிடுமல்லவா? என்றும் குறிப்பிட்டார்.

Read more...

புலி என்றால் புள்ளியை கேட்ட பொலிஸ் மா அதிபரின் அசட்டையால் 300 உயிர்கள் பலி!

உயிர்த்த ஞாயிறு தினமன்று நடைபெறவிருந்த தாக்குதல் தொடர்பாக அரச புலனாய்வுத் துறையின் பிரதானி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன பொலிஸ் மா அதிபருக்கு ஏப்பரல் 9 திகதி அறிவுறுத்தியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வாக்குமூலங்களிலிருந்து மேற்படி விடயம் தெளிவாகியுள்ளது.

நேற்று விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பொலிஸ் மா அதிபர் தனக்கு அரச புலனாய்வுத் துறையின் பிரதானியால் குறித்த விடயம் தொடர்பாக 9 ம் திகதி அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட அவர், எந்த தேவாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது சரியாக தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தெரிக்கப்படவில்லையாயின் கொழும்பிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் போதிய பாதுகாப்பினை வழங்கி அனர்த்தத்தை தவிர்த்திருக்க வேண்டிய கடமையை பொலிஸ் மா அதிபர் நிறைவேற்றவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

நேற்று அவர் அளித்த சாட்சியத்தின் முழுவடிவம் கீழே.


ஜயம்பதி விக்ரமரத்ன – ஜெயசுந்தர உங்களைப் பற்றி கூறுங்கள்?

நான் 1985இல், உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் இணைந்தேன். என்னுடன் மேலும் இருவர், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். பயிற்சிகளுக்குப் பின்னர், 1994இல், காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டேன். 1996இல், மூத்த காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2005இல், பிரதி காவல்துறை மா அதிபராகவும், பதவி உயர்த்தப்பட்டேன். 2016 ஏப்ரல், 20ஆம் நாள் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டேன்.

ஜயம்பதி விக்ரமரத்ன – உங்களிடம் நேரடியாக இருக்கக் கூடிய பிரிவுகள் உள்ளனவா?

ஆம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் எனக்குக் கீழ் தான் இருந்தார். தேவை எழுந்த போது, தீவிரவாத விசாரணைப்பிரிவை எனது கண்காணிப்பில் எடுத்துக் கொண்டேன். அப்போது, நாலக சில்வா அதற்குப் பொறுப்பாக இருந்தார். நாள் நினைவில் இல்லை, 2017 ஆக இருக்கலாம்.

ஜயம்பதி விக்ரமரத்ன – எங்களுக்கு ஒரு வரைபடம் அனுப்புங்கள்.

நீங்கள் கேட்டால், பதில் காவல்துறைமா அதிபர் அதனை செய்ய முடியும். இப்போது அதனைச் செய்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.

ஜயம்பதி விக்ரமரத்ன – அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் உங்களுக்கு அறிக்கையிடுவாரா?

இல்லை. முதலில் காவல்துறை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. தீவிரவாதத்தின் காரணமாக, முப்படைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்ததால் அதற்கான தேவை இருந்தது. பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் காவல்துறை கொண்டு வரப்பட்டது.

ஜயம்பதி விக்ரமரத்ன – காவல்துறை இன்னொரு அமைச்சின் கீழ் தான் இருக்க வேண்டும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கக் கூடாது என்பது விதிமுறையா?

ஆம். பின்னர், காவல்துறையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. அரச புலனாய்வுச் சேவையின் அதிகாரிகளை காவல்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இருக்கின்றனர்.

சரத் பொன்சேகா – அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் யாருக்கு அறிக்கைகளை சமர்ப்பிப்பார்?

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு.

சுமந்திரன் – அரச புலனாய்வுச் சேவை அதிகாரிகள் காவல்துறையை சேர்ந்தவர்களாக இருந்த போதும், இன்னொரு அமைச்சின் கீழ் இருந்ததாக கூறுகிறீர்கள்.

அது ஒரு வகையான அமைப்பாக இருந்தது.

சுமந்திரன் – அங்கு முறையான அமைப்பு இருந்ததா?

எனக்குத் தெரியாது.

சரத் பொன்சேகா- வேறு அமைச்சின் கீழ் இருந்தால் சரியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை கொண்டிருக்கும் எனக் கூறுகின்றீர்களா?

அப்படியே இருந்தது. எப்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஏதாவது முக்கியமான விடயம் இருந்தால் அதனைப் என்னுடன் பகிர்ந்து கொள்வார். தேவையான அவசியம் இருந்தால் மாத்திரமே அப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏதாவது தகவல்களை நாம் அவர்களுக்கு அனுப்ப முடியாது. ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விடயங்களை நிர்வாக ரீதியாக செய்துகொள்ள முடியும். எனினும் அங்குள்ள நிலைமைகளைக் கண்காணிக்க காவல்துறைமா அதிபருக்கு அதிகாரம் கிடையாது. நான் அதன் தலைமையகத்துக்குப் போனது கூடக் கிடையாது. அங்கு செல்வதற்கு முயற்சிகள் எடுத்த போதும் அவை பலனளித்திருக்கவில்லை.

ஜயம்பதி விக்ரமரத்ன – நீங்கள் இன்னொரு அமைச்சின் கீழ் இருந்த போதும், பாதுகாப்பு செயலருக்கு அறிக்கையிடும், காலம் எப்போது ஆரம்பமானது?

அது எனக்கு சரியாக நினைவில் இல்லை. எனது பணியின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவ்வாறு தான் இருந்தது.

சரத் பொன்சேகா –அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் எந்தவொரு தகவலைப் பெற்றாலும், பாதுகாப்புச் செயலருக்காக அறிக்கையிட வேண்டுமா?

ஆம்.

ஜயம்பதி விக்ரமரத்ன – நீங்கள் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரா?

ஆம்.

ஜயம்பதி விக்ரமரத்ன – தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு யார் அழைப்பை விடுப்பது?

காவல்துறை மா அதிபர் – பாதுகாப்புச் செயலர் தான், தெரியப்படுத்துவார்.

ஜயம்பதி விக்ரமரத்ன – நீங்கள் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் எல்லா பாதுகாப்புச் சபை கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறீர்களா?

2016 ஏப்ரல் 20ஆம்நாளுக்குப் பின்னர் நான் தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் பங்கெடுத்திருந்தேன். எனினும், 2018 ஒக்டோபர் 23ஆம் நாளுக்குப் பின்னர் எந்தவொரு பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. நான் அதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஜயம்பதி விக்ரமரத்ன – யார் அதனைக் கூறியது?

அப்போதிருந்த பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவே வாய்மொழியாகத் தான் அதனைக் கூறினார். 2018 ஒக்டோபர் 23ஆம் நாளுக்குப் பின்னர் ஒருநாள் பாதுகாப்புச் சபைக் கூட்டம் பற்றி அறிந்திருந்தேன். பிற்பகல் 4.30 மணியாகியும் எனக்கு அழைப்பு வரவில்லை. நான் பாதுகாப்புச் செயலரிடம் கேட்டேன்.

“உங்களை சங்கடப்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டும், சிறிலங்கா அதிபர் உங்களை அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்” என அவர் எனக்குப் பதில் வழங்கினார். அப்படியாயின் எனது சார்பில் யாரையாவது அனுப்பவா எனக் கேட்டேன், தேவையில்லை என்று பதிலளித்தார்.

ராஜித சேனாரத்ன – காவல்துறை மாஅதிபர், பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் அல்லவா?

ஆம்.

ராஜித சேனாரத்ன – அத்தகைய ஒரு முக்கியமான உறுப்பினர் எப்படி விலகி இருக்க முடியும், யாராவது உங்களிடம் கலந்து கொள்ளக்கூடாது என்று சொன்னால், நீங்கள் எப்படி ஒதுங்கியிருக்க முடியும்?


அதனைக் கூறியவர் யாரோ ஒருவர் அல்ல, எமது பாதுகாப்புச் செயலர். அவரிடம் நான் எப்படி காரணம் கேட்க முடியும்.

சரத் பொன்சேகா –அதன் பின்னர், பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் நீங்கள் பங்கேற்கவில்லையா?

குண்டுவெடிப்புகள் நடைபெற்ற பின்னர் ஏப்ரல் 23ஆம் நாள் அழைத்திருந்தார்கள்.

ஜயம்பதி விக்ரமரத்ன –உங்களை பாதுகாப்பு சபைக்கு அழைக்காமைக்கு காரணம் ஏதாவது இருப்பதாக நம்புகின்றீர்களா?

என் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆஷூ மாரசிங்க- ஒக்டோபர் 23ஆம் நாள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்பட்டன?

அன்று அதிகாரி ஒருவரின் இடமாற்றம் தொடர்பாக பேசுவதற்காக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டமையால் இறுதியில் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோது நான் கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

சுமந்திரன் – அந்த இடமாற்றம் தொடர்பான விவகாரத்தினால், நீங்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

எனக்குத் தெரியாது.

சுமந்திரன் – இடமாற்ற விவகாரம், காவல்துறை ஆய்வாளர் நிசாந்த சில்வாவுடன் தொடர்புடையதா?

ஆம். அவர் சிறந்த அனுபவம் உள்ள அதிகாரி. ஆட்கடத்தல்கள் தொடர்பான வழக்குகளை அவர் விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சம்பந்தப்பட்டிருப்பதால், குறித்த காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பின்னர் நானே அந்த இடமாற்றத்தையும் இரத்துச் செய்தேன்.

சுமந்திரன் – எங்கிருந்த அந்த அழுத்தம் வந்தது?


சிறிலங்கா அதிபரிடம் இருந்தே அழுத்தம் வந்தது. சிறிலங்கா அதிபர் கூறியதாக பாதுகாப்பு செயலர் கூறினார்.

ராஜித சேனாரத்ன – இதற்கு சிறிலங்கா அதிபர் காரணம் எதையும் கூறினார்?

இல்லை. விசாரணையின் போக்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

நளிந்த ஜயதிஸ்ஸ – தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்வதற்கு பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வா அறிக்கையிட்டிருந்தாரா?


ஆம். இது தொடர்பாக பல விடயங்கள் பகிரங்கமாகக் கூறப்பட வேண்டியுள்ளது. அனர்த்தம் இடம்பெற்ற பின்னர் காவல்துறை மா அதிபரின் தவறினால்தான் முழு சம்பவமும் இடம்பெற்றது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நான் எந்த விடயத்தையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் முதல் தடவையாக ஊடகங்களுடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டஅனைத்து கத்தோலிக்க குடும்பங்களுக்கும் கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏப்ரல் 9ஆம் நாள், தாக்குதல்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை நான் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தேன். ஏப்ரல் 4ஆம் நாள், புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது. புலனாய்வு விடயங்களை ஆராயும் வாராந்த கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அங்கு எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை.

ரவூப் ஹக்கீம் – இதற்கு வெளியில் எங்காவது இது பேசப்பட்டுள்ளதா?


எனக்கு அதுபற்றித் தெரியாது. ஏப்ரல் 9ஆம் நாள் எனக்கு தேசிய புலனாய்வுப் பணிப்பாளரிடமிருந்து முதலில் அறிக்கை ஒன்று வந்தது. அதில் இந்திய தூதரகம், கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்று அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளரிடமிருந்து அனுப்பப்பட்ட மற்றுமொரு அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பற்றியோ, இந்திய தூதரகம் பற்றியே எதுவும் குறிப்பிடப்படவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும், மிகவும் இரகசியமானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது பார்வைக்காக அனுப்பப்பட்ட அந்த அறிக்கைகள் குறித்து நான் காவல்துறை அதிகாரிகளை விழிப்புணர்வூட்டத் தீர்மானித்தேன். இதற்கமைய நான்கு அதிகாரிகளைத் தெரிவு செய்தேன். எனினும், இரண்டு பிரதான புலனாய்வு பிரிவுகளின் அறிக்கைகளிலும் முரண்பாடான விடயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

அதேநேரம், 2018ஆம் ஆண்டு அல்குவைடாவுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட போது அது பற்றி அரசாங்க புலனாய்வு சேவை மேற்கொள்வதால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகளை நிறுத்துமாறு எமக்குப் பணிக்கப்பட்டது. இதனால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. அடிப்படைவாத அமைப்புக்கள் பற்றிய விசாரணைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்திருக்கும்.

ஆஷு மாரசிங்க – புலனாய்வு குறித்து ஆராயும் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் உள்ளதா?

குறிப்பாக இந்தக் கூட்டத்துக்கு பாதுகாப்புச் செயலர் தலைமை தாங்குவார். அதில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் விளக்கமளிப்பார். ஏப்ரல் 9ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றி எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை.

ஏப்ரல் 9ஆம் நாள் அறிக்கையின் பின்னர், ஏப்ரல் 18ஆம் நாள் கிடைத்த கடிதத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்க புலனாய்வுப் பிரிவின் தலைவரினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் காத்தான்குடி பிரதேசத்தில் உந்துருளி வெடிக்கவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 19ஆம் நாள் அனுப்பப்பட்ட அறிக்கையில் சஹ்ரானுக்கு நெருக்கமான ஒருவரால் உந்துருளி வெடிக்க வைக்கப்பட்டது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நேரடியான எந்தத் தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. சஹ்ரானின் பெயர் இந்தக் கடிதத்தில் இருந்தாலும், ஏற்கனவே கூறப்பட்ட புலனாய்வுத் தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை.

ஏப்ரல் 20ஆம் நாள் அறிக்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இறுதியில் சஹ்ரான் உள்ளிட்ட வலையமைப்புத் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ஆம் நாள் தகவல் கிடைத்தும் 21ஆம் நாள் வரை புலனாய்வுப் பிரிவினர் எவ்வாறான திட்டத்தையும் வகுத்திருக்கவில்லை.

சுமந்திரன் – இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உங்களுக்கு அங்குள்ள காவல் நிலையத்திலிருந்து அறிக்கை கிடைக்கவில்லையா?

சாதாரணமாக ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்குப் பொறுப்பான இடத்துக்குள் ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றால் அது பற்றி அறிக்கையொன்றை எமக்கு அனுப்ப வேண்டும்.

நளிந்த ஜயதிஸ்ஸ – கடிதப் பரிமாற்றங்களுக்கு அப்பால் புலனாய்வுத் தகவல் எப்போது கிடைத்தது எனத் தெரியுமா?

எனக்குத் தெரியாது, எனினும், ஊடகங்களில் வெவ்வேறு தகவல்கள் உள்ளன.

நளிந்த ஜயதிஸ்ஸ – நீங்கள் அறிவித்தவர்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

ஆம். நான் ஏற்கனவே கூறியதைப் போன்று சிறப்பு அதிரடிப்படைக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லதீப் அதிபர் மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு மேலதிக பொறுப்பில் இருக்கின்றார்.

எனினும் எந்தவொரு நபருக்கும் நாம் கிடைக்கும் புலனாய்வுத் தகவல்களையும் தெரியப்படுத்துவதில்லை. பிரமுகர்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிக்கு அனுப்பும்போது குறித்த பிரமுகருக்கு அறிவிப்பதா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

காவல்துறை மா அதிபர் எந்தவொரு விடயத்தையும்சிறிலங்கா அதிபருக்கு நேரடியாக தெரியப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. புலனாய்வுத் தகவல்கள் அரசாங்க புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் ஊடாக சிறிலங்கா அதிபருக்கு நேரடியாக அனுப்பப்படும்.

ஏப்ரல் 20ஆம் நாள் மாலை எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. எனது ஞாபகத்துக்கு அமைய மாலை 6.30க்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரம்.

முதலில் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பில் இருந்தார். நாளை, ஆபத்து எதுவும் நடக்கலாம் எனக் கூறித் தொடர்பைத் துண்டித்தார்.

அதன் பின்னர் பாதுகாப்புச் செயலர் அழைப்பில் வந்து, நிலந்த ஜெயவீர அழைப்பை ஏற்படுத்தினாரா எனக் கேட்டார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரேயடியாக எப்படியான அச்சுறுத்தல் ஏற்பட்டது. அப்போது நான் வீட்டில் இருந்தேன்.

உடனடியாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கு, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு தகவலைத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன்.

மறுநாள் காலை 7.15 மணியளவில் மீண்டும் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பை ஏற்படுத்தி இன்று எதுவும் நடக்கலாம் எனக் கூறினார். என்னால் முடிந்தளவு, அனைத்து நடவடிக்கையையும் எடுத்திருந்தேன். எனினும் மேல் மட்டத்திலிருந்து எனக்கு எந்தக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. காவல்துறையினருக்கு மாத்திரம் பொறுப்பு அல்ல. சகலருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது.

சுமந்திரன் – உயர்மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்பது சரி. ஏப்ரல் 18, 19 மற்றும் 20ஆம் நாள்களில் தொடர்ச்சியாக இவ்விடயம் கவனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பற்றி பாதுகாப்புச் செயலருக்கு அறிவிக்கப்பட்டதா என அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளரிடம் நீங்கள் கேட்டீர்களா?

காவல்துறை மா அதிபர் – நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. நடைமுறையில் ஒருங்கிணைப்பது தேசிய புலனாய்வு பணியகத்துடன் தொடர்புபட்டிருப்பார் என்பதால் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனக்கு முடிந்ததைச் செய்தேன்.

ஆஷு மாரசிங்க – 2018 ஓகஸ்ட் 23ஆம் நாளுக்கு முன்னர் காவல்துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனான தொடர்புகள் எப்படி இருந்தன?

காவல்துறை மா அதிபர் – சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருக்கும்போது சில விடயங்களை செய்ய முடிந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நேரடியாகக் கதைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தது. எனினும், பின்னர் நிலைமைகள் மாறியதும் குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னர் செயற்பாடுகள் கடினமானது. அதன் பின்னர் பல விடயங்களில் காலம் தாழ்த்தும் நிலைமையே ஏற்பட்டது. கவலைக்குரிய விடயங்கள் இருக்கின்றன.

ரவூப் ஹக்கீம் – குற்றப் பலனாய்வுப் பிரிவினர் மாவனல்ல சம்பவத்தின் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறப்பட்டனவா?

காவல்துறை மா அதிபர் – குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குத் தேவையாயின் உதவியைப் பொலிஸார் வழங்குவர். எனினும் அவர்கள் தமக்கே உரிய பாணியில் விசாரணைகளைத் தொடர்வார்கள்.

சுமந்திரன்- குண்டுத் தாக்குதல்களின் பின்னர் உங்களை பதவி விலகுமாறு யாராவது கோரினார்களா?


ஆம்

சுமந்திரன் – யார் பதவி விலகக் கோரியது?


சிறிலங்கா அதிபர். ஏப்ரல் 23ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு கூறினார். உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். நடந்த சம்பவத்துக்கு முழுமையான பொறுப்பு என்னுடையது, உரிய முறையில் தனக்குத் தெரியப்படுத்தவில்லை என்றார்.

காவல்துறை மா அதிபர் என்ற ரீதியில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையிலும் மௌனமாக இருந்தீர்கள். எனவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும். விசாரணைக் குழுவொன்றை அமைக்கப் போகின்றேன். அதில் தவறிழைத்தவர்கள் நீங்கள் என்றே தெரியவரும். ஓய்வூதியம் இன்றி வீடு செல்லப் போகின்றீர்களா? தவறை ஏற்றுக் கொண்டு பதவி விலகுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

தேசிய புலனாய்வுப் பிரிவு அறிக்கை தொடர்பில் நான் முன்னர் அனுப்பியிருந்த பதில் கடிதத்தை காண்பித்தேன். அதனைப் பார்த்து விட்டு எதுவும் பேசவில்லை. கடந்த 34, 35 வருடங்களாக காவல்துறை சேவையில் இருக்கின்றேன். எப்போதும் காவல்துறையைப் பற்றி சிந்திக்கும் ஒருவன். திருட்டு,பொய் செய்யவில்லை.

சிறுசிறு விமர்சனங்களைத் தவிர எந்த குற்றச்சாட்டுக்களும் என்மீது இல்லை. சேவையிலிருந்து செல்லும்போது ஓய்வூதியம் இன்றி சென்றால் பிள்ளைகளுக்கு என்ன கூறுவது? எனக்கு சொந்தமாக இருக்க ஒரு இடம்கூட இல்லை. ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். 8.45 மணியளவில் நான் சென்று விட்டேன்.

அதன் பின்னர், ஏப்ரல் 25ஆம் நாள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிறிலங்கா அதிபர், கேட்ட கடிதத்தை இன்னும் தரவில்லை என கூறியதுடன், ஏதோ கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை கடுமையாக ஏசினார்.

நான் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தேன். ஏப்ரல் 29ஆம் நாள் கட்டாய விடுமுறைக் கடிதம் வழங்கப்பட்டது.

சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகினால், எனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி தருவதாகக் கூறினார். எனினும் அவ்வாறான வரப்பிரசாதங்களை நான் எதிர்பார்ப்பவன் அல்ல. நான் அவ்வாறு செய்தால் காவல்துறையினரைக் காட்டிக்கொடுப்பதாக அமைந்துவிடும். தவறு செய்யாமல் தவறை ஏற்றுக்கொள்வதா?

பாதுகாப்பில் காணப்படும் ‘ பொறிமுறைத் தவறே’ இதற்குக் காரணம். அது மாத்திரமன்றி ‘பாதுகாப்புத் துறையில் காணப்படும் ‘நெறிமுறை ஒருங்கின்மை’யும் இதற்கான காரணமாகும்.

Read more...

மட்டக்களப்பிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்றக் கோருகின்றது மாநாகர சபை!

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று இடம்பெற்ற 20 வது பொது அமர்வின்போது மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாநகரசபை உறுப்பினர் தவராஜாவால் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மாநகரசபைக்குட்பட்ட பெயர் பலகைகளில் தமிழ்மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அரசகரும மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் அகற்றப்படல் வேண்டும் என்ற பிரேரணைகள் மாநகரசபை உறுப்பினர்களான வே.பூபாளராஜா, கு.காந்தராஜா ஆகியோரால் முன்வைக்கப்பட்டன.

இதன் பிரகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கில் அரச மொழியாக தமிழ் உபயோகிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் அரச அதிகாரிகளால் பின்பற்றப்படுவதில்லை என தவராஜா குறிப்பிட்டார். அத்துடன் இருப்பினும் மாநகரசபை ஊடாக எம்மால் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் தமிழ்மொழி அமுலாக்கலை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அதனடிப்படையில் வியாபார நிலையங்களில் பெயர் பலகைகளில் தமிழ் மொழி முன்னுரிமைப்படுத்தப்படாமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் அரச கரும மொழிகள் இல்லாத மொழிகள் பிரயோகிப்பது குறித்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச எல்லையில் காணப்படும் வரவேற்பு வளைவில் உள்ள அராபிய எழுத்துக்கள் அகற்றப்படல் வேண்டும் எனவும் வலியறுத்தப்பட்டது.

இதையடுத்து வியாபார நிலையங்களின் பதாதைகளில் தமிழ்மொழி பிரதானப்படுத்துவது தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அரச அலுவலகங்களின் பிரதானிகளுக்கும் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி மட்டக்களப்பு எல்லையில் அமைக்கப்பட்ட வரவேற்புத் வளைவில் உள்ள அரபு மொழி அகற்றப்படுவது குறித்து தமது அறிக்கையினை முன்வைப்பதுடன் பிரதமரின் சுற்றுநிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு காத்தான்குடி நகர சபைக்கு அறிக்கை அனுப்புவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரபு எழுத்துக்கள் தொடர்பில் அரச கருமமொழி மற்றும் வடகிழக்கில் தமிழ் முதல்மொழி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ள மாநகர சபை, அதே மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிபேசும் பாமர மக்களை சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ளும் அரச அதிகாரிகள் தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை இலங்கைநெட் முன்வைக்கின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகங்களிலுள்ள தமிழ் அதிகாரிகள் சிங்கள ஆங்கில மொழிகளில் பொதுமக்களை தொடர்பு கொண்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் மொழிபெயர்பினை கேட்டபோதும், அவ்வாறு வழங்கப்படாமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Read more...

மீனவரின் வலையில் கிளேமோர் குண்டு! மைத்திரி இலக்கு வைக்கப்பட்டாரா?

கடந்த 1 ம் திகதி பொலநறுவை மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்திப்புக்களை நாடாத்தியுள்ளதுடன் மாகாவலி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விடயங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

அவ்வாறு மெத்திரிகிரிய பிரேதேசத்தில் அவர் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றுக்கு அருகாமையிலுள்ள வாவி ஒன்றிலிருந்து அதிநவீன வெளிநாட்டுத்தயாரிப்பு கிளேமோர் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த குண்டு சிக்கியுள்ளது. வலையில் இப்பாரிய குண்டு சிக்கியதையடுத்து மீனவர் மெத்திரிகிரிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார். பொலிஸாரின் வேண்டுதலுக்கிணங்க அங்கு விரைந்த இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இக்குண்டானது கடந்த நாட்களில் பொலநறுவையில் நின்ற மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்திருந்ததா என்ற கோணத்தில் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

நாட்டின் பாதுகாப்பு அந்தரத்தில்! அடுத்த தேர்தலில் கூட்டு சேர்வது தொடர்பில் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில்.

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பாகவும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாகவும் நாட்டு மக்கள் பெருதும் அச்சமுற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில், எதிர்வரும் தேர்தல்களில் ஆசனங்களை எவ்வாறு கைப்பற்றுவது என்றும் அதற்கான கூட்டணிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்றும் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹந்த ராஜபக்சவின் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
அதன்படி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தமது கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் மறுபுறத்தில் வடகிழக்கினை தளமாக கொண்டுள்ள தமிழரசுக் கட்சியை பிரதானமாகக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது கூட்டணியினை பலப்படுத்துவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடாத்தி வருகின்றனர்.

மேலும் முஸ்லிம் வாக்குகளை இலக்குவைத்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒன்று தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிக இரகசியமாக இடம்பெற்று வந்தபோதும், அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் பலமாக எழுந்துள்ள நிலையில் தேசிய கட்சிகளுடன் இணைந்திருப்பதே முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு என்ற அடிப்படையில் அம்முயற்சி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

சட்டத்தில் திருத்தம். பொய்யான செய்திகளை வெளியிட்டால் 10 லட்சம் அபராதம். 5 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை.

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் குற்றவியல் சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு இத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் மற்றும் பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கேற்ற வகையில் குற்றவியல் சட்ட விதிகள் மற்றும் குற்றச் செயல் வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான குழு, சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்திருந்தது.

இதற்கமைய இத்தவறுகள் தொடர்பில் குற்றவாளியாகும் ஒருவரிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தின் பெறுமதியை பத்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிப்பது அல்லது ஐந்து வருட காலத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனையை விதிப்பது அல்லது இரண்டு தண்டனைகளையும் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏதுவாக குற்றவியல் சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதியில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பதில் நீதி அமைச்சர் என்ற ரீதியில் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இதேவேளை, வெறுக்கத்தக்க பேச்சுக்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டத்திருத்தத்துக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவ்வாறான பேச்சுக்களை வெ ளிப்படுத்தும் நபர்களுக்கான தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை என்பவற்றை தீர்மானிக்கும் வகையில் குற்றவியல் சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Read more...

மைத்திரிபால சிறிசேனதேசிய பாதுகாப்பு சபையை உரிய காலத்தில் கூட்டவில்லை! முன்னாள் பாதுகாப்பு செயலர் சாட்சியம்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு சபையை உரிய காலத்தில், உரிய வகையில் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குற்றஞ்சுமத்தினார்.

இலங்கை மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

தான் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி நியமிக்கப்பட்டதாக தெரிவித்த ஹேமசிறி பெர்ணான்டோ, தான் பதவி விலகும் வரை நான்கு தடவைகள் மாத்திரமே தேசிய பாதுகாப்பு சபையை ஜனாதிபதி கூட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு சபை வாராந்தம் கூடும் என நினைவூட்டிய அவர், தான் பதவிக்கு வந்ததன் பின்னர் அவ்வாறு இடம்பெறவில்லை எனவும் கூறினார்.

தேசிய பாதுகாப்பு சபையை கூட்டுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென தனக்கு அழைத்து உத்தரவிடுவதாகவும், குறுகிய காலத்திற்குள் பாதுகாப்பு சபையின் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு கூட்டப்படும் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டங்களுக்கு பிரதமர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டாம் என தனக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் பதவி வகித்த காலப் பகுதியில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க மற்றும் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ ஆகிய இருவரும் பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றுக்கு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்கட்சி உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, திலங்க சுமத்திபால மற்றும் லசந்த அலுவிஹார ஆகியோர் அழைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு எவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அழைக்கப்படுவது என வினவினார்.

ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமையவே அவர்கள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்குப்பற்றியதாக கூறிய அவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்குப்பற்றுவது தவறானது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எந்தவித சுயாதீன அதிகாரங்களையும் வழங்கவில்லை எனவும், ஜனாதிபதியை தான் சந்திப்பதற்கு கூட பல வார காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினால் சில சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த அமைப்பு குறித்து பாதுகாப்பு சபையில் ஆராயப்படுவதை விடுத்து, பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷ் குறித்தே தனது பதவி காலத்தில் நடந்த நான்கு கூட்டங்களின் போதும் ஆராயப்பட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் கூட, பாதுகாப்பு சபை கூட்டத்தில் சரியான ஆராயப்படவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தாக்குதலின் பின்னர் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் ராஜதந்திர பதவியொன்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியதாக, பூஜித் ஜயசுந்தரவை மேற்கோள்காட்டி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும், தனக்கு அவ்வாறு எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை என கூறிய அவர், தானே சுயட்சையாக பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படுவதாக கூறிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, அதனை தனியாக அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இரண்டு தடவைகள் நான் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விளக்கிக் கூற முயன்றேன். ஆனால், அரச புலனாய்வுப் பணிப்பாளர் தம்மிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டதாக ஜனாதிபதி என்னிடம் சொன்னார்.

நான் பதவியில் இருந்த ஐந்து மாத காலத்தில் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விபரிக்கும் நடைமுறை இருந்ததில்லை. அரச புலனாய்வுத்துறைப் பணிப்பாளருக்கும் ஜனாதிபதிக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. நான்கு வருட காலம் ஜனாதிபதிக்குப் புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.

பாதுகாப்புச் செயலாளரான நான் எனது அமைச்சரை சந்திக்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன். இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை கூடச் சந்திக்க கஷ்டமாக இருந்தது. அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. ஒரு கையொப்பம் பெறவே மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியேற்பட்டது.

இவ்வருட பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் மாக்கந்துர மதுஷ் பற்றித்தான் அதிக நேரம் பேசப்பட்டது.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதியில் இருந்தே தாக்குதல் அச்சுறுத்தல் இருந்ததால் வழமைபோல அந்தத் தகவலையும் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்குக் கூறியிருக்கும் என நான் ஊகித்தேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பிரதமர் என்னைச் சந்திக்க அழைத்திருந்தார். அவரைச் சந்திக்கச் செல்ல ஜனாதிபதி என்னை அனுமதிக்கவில்லை” – என்றார்.


Read more...

சாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் சடலங்கள் தோண்டி எடுப்பு. பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று(7) தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை செய்துக் கொண்ட சந்தேகநபர்களின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நான்கு உடற் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சடலத்தின் உடற்பாகங்கள் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவின் முன்னிலையில் இந்த உடற்பாகங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வொலிவேரியன் 'சுனாமி கிராமத்தில்' உள்ள வீடு ஒன்றில் வைத்துஇ பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர்.

குறித்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும் 6 ஆண்களினதும் 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.

பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் தந்தை அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

குறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்கள் கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில் இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யய்பட்டது

மேலும் அம்பாறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக அம்பாறை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.















Read more...

Thursday, June 6, 2019

அவுஸ்திரேலியாவும் இலங்கையில் 20 புலனாய்வாளர்களை களமிறக்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து பல வல்லரசுகள் தமது புலனாய்வாளர்கள் இலங்கையில் களமிறக்கியுள்ளதுடன் இதன் ஆபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்கு என்ற போர்வையில் அவுஸ்ரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை இலங்கையில் களமிறக்கியுள்ளமை வெளிவந்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீற்றர் டட்டன் இத்தகவலை உறுதி செய்துள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிடடுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் :

'தீவிரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா புலனாய்வுக் குழுக்களுக்கு உதவுவதற்காக அவுஸ்ரேலியா 20 இற்கும் அதிகமான புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை இங்கு அனுப்பியுள்ளது.

அவர்கள் இப்போதும், சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தடயவியல் பக்கத்தில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருகின்றனர்.

மிகவிரைவாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த உதவியை வழங்கினோம். அவுஸ்ரேலிய காவல்துறையின் ஊடாக, கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகம் இதற்கான பணிகளை ஒருங்கிணைக்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கை வங்கி ஊழியர்களின் செயற்பாட்டினால் தனியார் வங்கிகளை நோக்கி நகரும் வாடிக்கையாளர்கள்!

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதாக பாதிக்கப்பட்ட வடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதுபற்றி வங்கி முகாமையாளருக்கு தெரியப்படுத்தியும் எவ்விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அந்த உத்தியோகத்தர் தொடர்ந்தும் அதோ தொனியில் வடிக்கையாளர்களிடம் கடிந்து கொண்டு நடந்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிருப்தியடைந்த இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் வியாபாரம் மற்றும் தனி வங்கிக் கணக்குகளை மூடிவிட்டு, இலங்கை வங்கியைத் தவிர்ந்து வேறு வங்கிகளில் தங்களின் வியாபாரம் மற்றும் தனியான கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இலங்கை வங்கியைத் தவிர, வேறு வங்கியில் கடமையாற்றுகின்ற உயர் அதிகாரிகள் மற்றும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எல்லோரும் மிக அன்பான முறையில் பணிவான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நடந்துகொள்வதாகவும் இந்த முறைமை இலங்கை வங்கியில் கடமைற்றுகின்றவர்களிடம் இல்லை எனவும் வங்கி வடிக்கையாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

எனவே, மக்களுக்காகத்தான் வங்கியுள்ளது, வங்கிக்காக மக்கள் இல்லை, என்பதையும் இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வாடிக்கையாளர்களின் வரி மற்றும் வட்டி பணத்திலேயே தான் அவர்களின் மாதாந்த ஊதியம் மற்றும் மேலதிகக் கொடுப்பணவு போன்றவற்றைப் பெற்று வருகின்றார்கள் என்பதையும் அவர்கள் ஞாபத்தில் வைத்துக்கொண்டு நடந்துகொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக, இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகள் குறித்த விடயங்களை கவனத்திற்கொண்டு அட்டாளைச்சேனை வங்கிக் கிளையில் கடமையாற்றும் அந்த உத்தியோகத்தருக்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கை வங்கி வடிக்கையாளர்களின் அதிருப்தியும், விசனமும் கூடிச்செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பைஷல் இஸ்மாயில்

Read more...

நீதிபதியை மாற்றலாமா? நான் மாற்றினேன்! உச்ச நீதிமன்றில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்!

இனவாத கருத்துக்களுக்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சுற்றுவட்டம் ஒன்றை உடைத்தல் மற்றும் ஈச்சமரம் ஒன்றை அகற்றுதல் தொடர்பான தீர்ப்பு ஒன்றுடன் உடன்படாத ஹிஸ்புல்லா அன்று தனது அமைச்சுப்பதவியை பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றிவிட்டு தனக்கு சாதகமாக தீர்ப்பு எழுதக்கூடிய நீதிபதி ஒருவரை கொண்டுவந்து „எழுதடா தீர்ப்பை எங்களுக்கு சாதமாக' என்று தெரிவித்த விடயம் தொடர்பாக அவருக்கு எதிராக இந்திரசிறி சேனாராத்தின என்ற மஹரகம பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் மக்களை மிகவும் பாதித்த குறித்த இனவாத கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கள்ள மௌனம் காத்துக்கொண்டு திரைமறைவில் ஹிஸ்புல்லாவுடன் உறவு கொண்டாடிவரும் நிலையில் இச்சம்பவத்துடன் எந்த தொடர்பும் அற்ற சட்டத்தரணி ஒருவர் இவ்வாறானதோர் வழக்கை பதிவு செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதி என்னை அனுமதிக்க வில்லை. தெரிவுக்குழு முன்னிலையில் அழுகின்றார் பூஜித.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் கட்டாயவிடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பாதுகாப்பு சபைக்கூட்டத்துக்கு தன்னை வரவேண்டாம் என ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலை தெரிவுக்குழு முன் ஆஜராகிய அவர்:

இடமாற்றம் தொடர்பான அலுவலொன்றுக்காக தான் ஒக்டோபர் 23 ஆம் திகதி பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் பங்கேற்றதாகவும், அதன்போது ஒக்டோபரிலிருந்து பாதுகாப்புச் சபை கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என தனக்கு வாய்மொழி மூல அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அன்றைய, பாதுகாப்பு செயலாளராக இருந்த கபில வைத்தியரத்ன இந்த வாய்மொழி மூல அறிவுறுத்தலை வழங்கியதாகவும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே தான் இந்த அறிவிப்பை வழங்குவதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கூறியதாக பூஜித ஜெயசுந்தர இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பவேண்டுமா என கோரியபோது அதற்கான தேவை ஒன்று இல்லை என பாதுகாப்பு செயலாளர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்:




Read more...

முஸ்லிம்கள் மீதான காடையர்களின் வெறியாட்டத்திற்கு நீதி இல்லையேல் வீதியில் இறங்கி போராடுவோம். மிரட்டுகிறார் ஹக்கீம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை, இந்தத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் மீது காடையர்கள் மேற்கொண்ட வெறியாட்டங்களுக்கும் நீதி வேண்டும். இல்லையேல், வீதியில் இறங்கி முஸ்லிம் மக்கள் போராடுவார்கள்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.

இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் என ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினர் மீதும் இனவாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இனக்கலவரங்களைத் தூண்டும் வகையில் அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நீதியான விசாரணைக்கு ஒத்துழைத்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவிகளைத் துறந்துள்ளனர்.

எனவே, விசாரணையின் பின்னர் உண்மைகளை அரசு வெளியிட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்து புத்தளம், குருணாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மீது காடையர்கள் மேற்கொண்ட வெறியாட்டங்களுக்கும் நீதி வேண்டும். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல், வீதியில் இறங்கி முஸ்லிம் மக்கள் போராடுவார்கள்” – என்றார்.

Read more...

சஹ்ரான் ஆபத்தை நோக்கி நகர்கின்றார் என்பதை உணர்ந்திருந்தேன். டிஐஜி நாலக் சாட்சியம்

சஹ்ரானின் முகப்புத்தகம், இணைய பக்கங்களை கண்காணித்ததில் ஆபத்தை நோக்கி நகர்கின்றது என்பதை தான் அறிந்துகொண்டதாகவும், சஹ்ரானின் வீடியோக்களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் சார்பாகவே இருந்ததாகவும், எனவே நிச்சயமாக அவருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பிற்கும் தொடர்புகள் இருப்பது தெரிந்ததாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் வாராந்தம் பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக தெரிவித்ததாகவும், வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கைதுசெய்த பின்னர் இது குறித்த விசாரணைகள் நின்றிருக்க வாய்ப்பில்லை என்றும் , எனினும் என்னவானது என்பது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், கடந்த ஏழு மாதங்களாக தனக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்புகள் இருக்கவில்லை எனவும் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை பாராளுமன்ற குழுவரை 3 இல் இடம்பெற்றது.

இவ் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் வரவழைக்கப்பட்டிருந்தார். சக்கர நாற்காலியில் அவர் வாக்குமூலமளிக்க வந்திருந் நிலையில், விசாரணையில் பல்வேறு விடயங்கள் ஊடகங்கள் முன்னிலையில் தன்னால் தெரிவிக்க முடியாது என அவர் ஆரம்பத்தில் தெரிவித்ததை அடுத்து குறித்த சில கேள்விகளுக்கு ஊடகங்கள் முன்னிலையில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவை வருமாறு,

நாலக்க டி சில்வா :-
"முதலில் ஒரு விடயத்தை நான் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க வேண்டும். ஒரு குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள நான் தற்போது பிணையில் வெளியில் உள்ளேன். ஆகவே எனது வழக்குகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது பிணை கோரிக்கைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த சாட்சியையும் நான் வழங்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்"

ஆணைக்குழு :- உங்களுக்கு எதிராக வழக்கொன்று இருக்கும் என்றால் அதில் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாத வகையில் சாட்சியங்களை முன்வைக்க முடியும். ஆகவே நீங்கள் உங்களுக்கு பாதகமான விடயமோ அல்லது தேசிய பாதுகாப்புக்கு பாதகமான விடயங்களையோ ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தாது இருக்கலாம்.

கேள்வி:- உங்களின் பொலிஸ் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?

பதில் :- 2012 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றேன். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில் என்னை அரச புலனாய்வு பிரிவின் பிரதி பணிப்பாளராகவும் அதன் பின்னர் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமித்தனர். அதில் இருந்து நான் பயங்கரவாத தடுப்பு குறித்து சேவையாற்றி வருகின்றேன்.

கேள்வி:- ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக அமைப்பொன்றின் பெயர் கூற்படுகின்றது. அது என்னவென்று தெரியுமா?


பதில்:- ஆம், தேசிய தவ்ஹித் ஜமா-அத். என்.டி.ஜே. ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமா-அத் என்றே அவர்கள் ஆரம்பித்தனர். பின்னர் அவர்களில் பிளவுகள் ஏற்பட்டு பல அமைப்புகளாக சிதைந்து இறுதியாக என்.டி.ஜே என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.

கேள்வி:- என்.டி.ஜே அவ்வமைப்பின் செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்?

பதில் :- எனது ஞாபகத்தில் உள்ளதற்கு அமைய நான் கூறுகின்றேன், 2013 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றிய நேரத்தில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பற்றி தகவல் கிடைத்தது. முதலில் இந்தியாவில் தான் இந்த அமைப்பு பிறந்தது எனலாம். தமிழ்நாடு தவ்ஹித் ஜமா-அத் என்று உருவாக்கப்பட்டது. அதுவே இலங்கையிலும் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமா-அத் என்று உருவாக்கப்பட்டிருந்தது. சஹாரான் குறித்தும் அப்போது தகவல் கிடைத்தது. அபோது அவர்கள் அடிப்படைவாத அமைப்பாக இருந்தார்களே தவிர இறுக்கமான அடிப்படைவாத அமைப்பாக இயங்கவில்லை.

கேள்வி:- இறுக்கமான வன்முறை அடிப்படைவாத அமைப்பாக எப்போது உருவெடுத்தது?

பதில்:- இவர்களின் வன்முறை அடிப்படைவாதம் என்பது பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடத்திய பின்னர் தானே அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் சிறு சிறு சம்பவங்கள் இருந்தது. அதுவும் அவர்களின் குழுக்கள் இடையில் தான் காணப்பட்டது. அவர்கள் வன்முறையாளர்கள் என்பது 21 ஆம் திகதி தாகுதலின் பின்னர் தானே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படைவாதம் அதுவே வன்முறை இறுதியாக பயங்கரவாதம் என்ற நிலைக்கு செல்லும் என்பதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் எமது பிரதான செயற்பாடாக இருக்க வேண்டும். எமது கடமையும் அதுவேயாகும். நாம் அதனைத்தான் செய்தோம். ஆரம்பத்தில் வன்முறை மற்றும் இனவாத செயற்பாடுகளை தடுப்பதற்கான செயற்பாடுகளையே நாம் முன்னெடுத்துவந்தோம் சமகாலத்தில் இன்டர்போல் உதவியையும் கோரியிருந்தோம், நான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து பயிற்சிகளை பெற்றுகொண்டுள்ளதால் இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் முன்னெடுப்பதே பொருத்தமானது என்றும் அறிந்திருந்தேன். நான் பதவியில் இருந்த காலத்தில் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றேன். என்னால் முடிந்த அளவு ஆழமாக இவற்றை ஆராய்ந்து செயற்பட்டேன். எனக்கு அதற்கான அனுமதியும் உயர் மட்டத்தில் கிடைத்தது. முதலில் இருந்த பயங்கரவாதம் அல்ல இன்று இருப்பது, இது சர்வதேச பயங்கரவாத நகர்வுகள். அதற்கான நகர்வுகளுக்கு எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனையே நான் செய்தேன்.

கேள்வி:- சஹ்ரான தொடர்பாக முன்னெடுத்த விசாரணைகள் என்னவானது?

பதில் - ஆரம்பத்தில் புலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உளவு அமைப்புக்கள் பற்றிய தேடுதல்களையே முன்னெடுத்து வந்தோம். இவை அனைத்துமே பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கு அமையவே செய்தோம். சஹாரான் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அவர் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள அவருடை முகநூல் மற்றும் இணைய பக்கங்களை நாளாந்தம் ஆராய்ந்து வந்தோம். அதற்கமையவே அவர் வன்முறை அடிப்படைவாத பக்கம் செல்கின்றார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. காத்தான்குடி சம்பவத்தையும் வைத்துக்கொண்டு நாம் அவரை தேட ஆரம்பித்தோம்.

கேள்வி:- காத்தான்குடி சம்பவம் என்ன?

பதில் - 2017 ஆம் ஆண்டில் சஹரானுக்கும் மற்றுமொரு குழுவுக்கும் இடையில் மோதல் ஒன்று உருவாகியது. இந்த மோதல் குறித்து பொலிசார் நடவடிக்கை எடுத்தனர், ஆனால் பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை செய்திருந்தனர். அந்த முறைப்பாடுகள் குறித்து ஆராய எனக்கு பொலிஸ்மா அதிபர் கூறியிருந்தார். அது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் விசாரணைகளை முன்னெடுத்ததோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரால் எனக்கும் பணிப்பு விடுக்கப்பட்டது. இது குறித்த தகவல்களை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். எப்போது என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சகல அறிக்கையும் நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தேன்.

கேள்வி:- உங்களுக்கு கிடைத்த தரவுகளை காத்தான்குடி பொலிசார் ஊடாகவா அனுப்புவீர்கள்?

பதில் - இல்லை, நானே நேரடியாகவே அறிக்கையை வழங்கினேன். அதன் பின்னர் சஹ்ரானை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைக்கொண்டு நாம் தேடினோம். ஆனால் நாம் தேடிய இடங்களில் அவர் இருக்கவில்லை. ஆகவே அவர் நாட்டை விட்டு தப்பித்திருக்க வேண்டும் என நாம் அனுமானித்தோம். ஆகவே திறந்த பிடியாணை ஒன்றினை பிறப்பித்து அவரை தேடும் நடவடிக்கைகளை கையாண்டோம். இன்டெர்போல் போன்ற நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் திறந்த பிடியாணை அவசியம். ஆகவே அதனை செய்தோம்.

கேள்வி:- சஹ்ரான் என்ற நபரின் பயணம் அவ்வளவாக நல்லதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்?

பதில்:- ஆம், அவரது முகப்புத்தகம், இணைய பக்கங்களை கண்காணித்ததில் அவரது நகர்வுகள் நல்லதல்ல என்பதை நான் அறிந்துகொண்டேன். இது குறித்து வாராந்தம் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை வழங்குவேன். என்னை தொடர்ந்து கையாள அவரும் பணித்தார். நாம் அதன் மூலமாக தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். நான் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தேன். எனது கடமையும் அதுவே. குறிப்பாக இந்த தகவல்கள் பொதுவாக பிரிக்கப்படும். எல்.ரி.ரி.ஈ, புலம்பெயர் அமைப்பு, அடிப்படைவாத இவ்வாறான அமைப்புகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என தனித்தனியாக நாம் வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்து வந்தேன். ஒரு வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களை நான் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பேன்.

கேள்வி:- நீங்கள் கூறியதை போல் குறித்த நபரின் முகப்புத்தகத்தையும் இணையத்தையும் கண்காணித்ததாக கூறினீர்கள், இவற்றில் பல காணொளிகள், புகைப்படங்கள், 9/11 தாக்குதலை குறித்த செய்திகள் , அவரது பிரசங்கம் எல்லாம் பதியப்பட்டது, ஆனால் இவை அனைத்துமே தமிழில் தான் பதிவேற்றப்பட்டது. இவற்றை எவ்வாறு கண்காணிக்க முடிந்தது.

பதில்:- ஆம், நான் எப்போது பயங்கரவாத தடுப்பு பிரிவை கையாள ஆரம்பித்தேனோ அப்போதே எனக்கு தேவையான வகையில் தனி அமைப்புகளை உருவாக்கிக்கொண்டேன். அதில் தமிழ் மொழிபெயர்ப்பு அதிகாரிகளும் உள்ளனர்.

கேள்வி:- ஆம் அதை பற்றி தெரிந்துகொள்ளவே கேட்டோம், குறிப்பாக அவர்களின் பிரசங்கங்களில் பெளத்த அடிப்படைவாதம் குறித்து அதிகம் பேசியுள்ளதுடன் முஸ்லிம் இளைஞர்களை அதற்கு எதிராக அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர். அதுவே கேட்டேன் எவ்வாறு மொழிபெயர்ப்பு உதவிகள் கிடைத்தது என்பது அறிந்துகொள்ள.


பதில்:- ஆம், அவற்றை நாம் கையாள எமக்கு அதிகாரிகள் இருந்தனர். நான் முன்வைத்த பி அறிக்கையில் முழுமையாக அனைத்தையும் கூறியுள்ளேன்.

கேள்வி:- நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திறந்த பிடியாணையை அடுத்து அவர் தேடியும் கிடைக்கவில்லையா ?


பதில் - ஆம், காத்தான்குடி, குளியாப்பிட்டிய, குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வந்திருந்தார். ஆகவே அங்கெல்லாம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆகவே திறந்த பிடியாணை விடுத்து இன்டர்போல் உதவியை பெற்றுக்கொள்ள நாம் தீர்மானம் எடுத்தோம். அவர் வெளிநாட்டுக்கு தப்பியிருக்கலாம் என நாம் சந்தேகப்பட்டோம், ஆனால் அவரது கடவுச்சீட்டை அவதானித்ததில் அவர் வெளிநாடு போனதாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது ஆனால் அதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் நாம் திறந்த பிடியாணையை பிறப்பித்து blue notice விடுத்திருந்தோம். சிவப்பு எச்சரிக்கை விட முன்னர் நீல எச்சரிக்கை விட வேண்டும். பத்து எச்சரிக்கைகள் உள்ளது. சிவப்பு எச்சரிக்கை தான் இறுதியானது. நீல எச்சரிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் தேடுவதாக அமையும்.

கேள்வி:- சஹ்ரான் என்பவர் குறித்து மாத்திரம்தான் தகவல்களை திரட்டினீர்களா?

பதில் - இல்லை, என்.டி.ஜே வை ஆராய்ந்த போது பலர் இருந்தனர். அவர்களின் பெயர்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ராசிக் என்பவர் பற்றியும் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தோம். எனினும் சஹ்ரான் வேறு திசையில் பயணிக்கிறார் என்பதை அறிந்தே அவரின் முகநூல் பதிவுகளை மேற்பார்வை செய்ய ஆரம்பித்தோம். அவர் குறித்து மட்டும் அதிகமான கண்காணிப்பு இருந்தது. ஆனால் பலபேர் இருந்தனர்.

கேள்வி:- இவரை தவிர வேறு யார் பற்றிய தகவல்களை திரட்டினீர்கள்?

பதில் - பலர் பற்றிய தகவல்கள் உள்ளன. என்னை கைது செய்த பின்னர் எனது பதவியில் அமர்த்தப்பட்ட ஜகத் நிஷாந்தவை தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தால் முழுமையான தகவல்களை அறிய முடியும். அவரிடம் நான் முழுமையாக விசாரணை அறிக்கையை கொடுத்தேன். அதன் பின்னர் எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது. நான் ஏழு மாதங்களாக சிறையில் இருந்தேன்.

கேள்வி:- சஹ்ரானின் முகநூல் எந்த காலப்பகுதியில் மேற்பார்வை செய்யப்பட்டது?

பதில் - 2016 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 24 மணித்தியாலங்களும் அவரின் முகநூல் பதிவுகள் கண்காணிக்கப்பட்டது. அப்போது தெரிந்தது அவர் வேறு ஒரு திசையில் பயணிக்கின்றார் என்பது.

கேள்வி:- இந்த முகநூல் பக்கத்தை தடைச் செய்ய நடவடிக்கை எடுத்தீர்களா?

பதில் - திறந்த பிடியாணை பெற்றுக்கொண்ட பின்னர், நீல எச்சரிக்கை , பொலிஸ் வர்த்தமானியில் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்ட பின்னர் இது குறித்து தொலைத்தொடர்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும். முகப்புத்தக நிறுவனத்திற்கும் அறிவிக்க வேண்டும். இந்த அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது. என்னை கைதுசெய்யும் வரையில் இது அனைத்தும் சரியாக செயற்பட்டது.

கேள்வி:- உங்களை எப்போது கைது செய்தனர்?

பதில்:- 2018 அக்டோபர் 25 ஆம் திகதி.

கேள்வு:- இன்டர்போல் நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் கிடைத்ததா?

பதில் :- எனக்கு அது நினைவில் இல்லை

கேள்வி:- தேடப்படும் நபர் சர்வதேச நாடுகளில் இருக்கின்றார் என்பதும் சரியாக கண்டறியப்படவில்லையா?

பதில் - இல்லை, அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது அதனை முழுமையாக நம்பிவிடவில்லை. சட்ட ரீதியாக எந்த ஆதராமும் இருக்கவில்லை. எனினும் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டது. அவருக்கு தெரியாதே அவை கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டது. திறந்த பிடியாணை ஒன்று இருப்பதை காட்டாது அவரை தேடினோம்.

கேள்வி:- காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் அவரை கைது செய்வதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது தானே?

பதில் - அந்த காலப்பகுதியில் தான் அவர் தலைமறைவாகியிருந்தார். அதனால் தொழில்நுட்ப உதவியுடனும் அவரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அது அவருக்கு தெரியாது கையாளப்பட்டது.

கேள்வி:- நீங்கள் கைதாகும் முன்னர் இந்த விசாரணைகளை நிறுத்துமாறு அழுத்தம் கிடைத்ததா?

பதில் - இல்லை அவ்வாறான அழுத்தங்கள் வரவில்லை குறிப்பாக பொலிஸ்மா அதிபரிடத்திலிருந்து வரவில்லை. அரசியல் அழுத்தங்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை கைது செய்ய எமது தனி குழுவொன்று இயங்கியது. எமக்கு அவரை கைதுசெய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அவர் குறித்த நேரடியான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால் அவரை கைதுசெய்து நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற நோக்கமே எமக்கு இருந்தது. அதற்கு எந்த தடையும் இருக்கவில்லை.

கேள்வி:- ஆனால் அப்போதைய காலத்தில் மேற்படி விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரால் உங்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதே?

பதில் - எனக்கு நினைவில் உள்ள காரணிகளுக்கு அமைய பொலிஸ்மா அதிபரிடம் இருந்து அவ்வாறான கடிதம் எதுவும் வரவில்லை. அவ்வாறு நிறுத்த கூறவும் முடியாதே.

கேள்வி:- எனினும் பொலிஸ்மா அதிபர் 2018 ஏப்ரல் மாதம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். (குறித்த கடிதம் நாலக டி சில்லாவின் பார்வைக்கும் கொடுக்கப்பட்டது) செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு பிரதியை உங்களுக்கும் அனுப்பியுள்ளார். புலனாய்வு செயற்பாடுகளுக்கு தடை என்பதால் இவற்றை நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.

பதில்:- அப்படியா, ( ஆவணத்தை முழுமையாக வாசித்த அவர்) இல்லை இது அதற்கான ஆவணம் அல்ல, இதில் கூறப்படும் நபர் அவரல்ல. இந்த நபர் அல் கைதா இயக்கத்துடன் தொடர்பில் உள்ளார் என்றும் அல் கைதா அமைப்பின் பயிற்சிகளை பெற்றார் என்றும் கூறப்பட்டது. எனது நினைவில் இருக்கும் தகவல்களுக்கு அமைய இவர் விமானநிலையத்திற்கு வருவதற்கு இருந்தார். ஆகவே நாம் இவருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். அப்போதுதான் இந்த கடிதம் எமக்கு அனுப்பப்பட்டது. அவரை கொண்டுவர வேண்டாம் அவர் உளவுத்துறை செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்று கூறப்பட்டது. இவர் சஹ்ரான் அல்ல. இது குறித்த சில விடயங்களை தனிப்பட்ட முறையில் என்னால் கூற முடியும்.

கேள்வி:- இவர்களின் பின்னணியில் அரசியல் தொடர்புகள் காணப்பட்டதா? இவ்வாறான நபர்களுக்கு அரசியல்வாதிகளின் கட்டளைகள் இருந்ததா?

பதில் - ம்ம்ம், அவ்வாறு இருக்கவில்லை. அரசியல் தொடர்புகள் இருந்ததாக எமக்கு தெரியவில்லை. அதேபோல் அவர்கள் குறித்து ஆராய எமக்கு முக்கியத்துவம் இருக்கவில்லை. சந்தேக நபரை பிடிப்பதிலேயே முழு அவதானம் செலுத்தப்பட்டது. அதுகுறித்து மட்டுமே செயற்பட்டோம்.

கேள்வி:- சஹ்ரானுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைத்திருந்தாக அறிந்தீரா?

பதில்:- அவ்வாறு இருந்தது. ஆனால் அவரின் வங்கித் கணக்கு தரவுகளுக்கு அமைய அவ்வாறு சந்தேகிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கவில்லை. அதனாலேயே அவரை எமது விசாரணைக்கு நேரடியாக கொண்டுவர வேண்டும். அப்போதுதான் உண்மைகளை கண்டறிய முடியும் என நினைத்தோம். குறிப்பாக பண மோசடிகளுடன் பயங்கரவாத தொடர்புகள் இருக்கின்றதா என்பது குறித்தும் ஆராய வேண்டும். விசாரணைகளில் பொதுவாக இதனை செய்வோம்.

கேள்வி:- சஹ்ரான் போன்று இன்னொருவர் “ஆர்மி மொய்தீன்” என்பவர் பற்றி அறிந்திருந்தீர்களா? காத்தான்குடி பிரதேசத்தை செய்தன்வர்தான் இவரும்.

பதில் - அவ்வாறு ஒருவர் குறித்து நினைவில் இல்லை. இந்தப் பெயரை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நினைவில் இல்லை.

கேள்வி:- நீங்கள் எப்போதாவது பாதுகாப்பு சபையில் கலந்துகொண்டுள்ளீர்களா?


பதில் - இல்லை, பாதுகாப்பு கூட்டங்களில் நான் கலந்துகொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை கூடும் புலனாய்வு மீளாய்வு கூட்டங்களில் தான் கலந்துகொள்வேன். பாதுகாப்பு கூட்டங்களுக்கு எனது மேல் அதிகாரிகளே செல்வார்கள்.

கேள்வி:- புலனாய்வு கூட்டங்களில் சஹ்ரான் பற்றி அறிவித்தீர்களா?


பதில் - பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் ஊடாக இதுகுறித்த தகவல்களை அறிவித்திருந்தேன். எப்படியும் நாம் இதனை அறிவிக்க வேண்டும். நான் கலந்துகொண்ட நேரங்களில் சஹாரான் குறித்து அறிவித்திருந்தேன். இவரி கண்காணிக்கப்படுகின்றார் என்று அறிவித்திருந்தோம்.

கேள்வி:- பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தீர்களா?

பதில் - ஆம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் என்னிடத்தில் நடைமுறைச் செயற்பாடுகள் பற்றிய அறிக்கை கோருவார் அப்போது இது குறித்த தரவுகளையும் சமர்பித்துள்ளேன்.

கேள்வி:- மொஹமட் மில்ஹான் என்பவரின் முகநூல் விவரங்களை ஆராய்ந்தீர்களா?


பதில் - எனக்கு நினைவில் இல்லை. 7 மாதங்களாக இந்த செயற்பாடுகள் குறித்து ஆராயமல் இருந்தால் பெயர்கள் நினைவில் இல்லை. சஹ்ரன் குறித்து தெரியும்.

கேள்வி:- சஹ்ரன் போன்று வேறு நபர்கள் ஐ. எஸ்உடன் தொடர்புடைய இருந்ததாக அறிந்திருந்தீர்களா?


பதில்:- பலர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முதலில் ஐ. எஸ்இல் இருந்த இலங்கையர் ஒருவர் அவரது பெயர் நினைவில் இல்லை. அங்கு இறந்தவர், அவரது குடும்பம் பின்னர் இலங்கைக்கு வந்ததே. அவர்கள் குறித்து ஆராய்ந்து கண்காணித்து வந்தோம்.

கேள்வி:- இந்த செயற்பாடுகளில் உங்களுக்கும் ஏனைய புலனான்வு பிரிவுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததா?

பதில்:- அவ்வாறு இருக்கவில்லை, எனது பக்கத்தில் அவ்வாறு ஒன்றும் இருக்கவில்லை, அவர்களின் பக்கம் இருந்ததா என்பது எனக்கு தெரியாது.

கேள்வி:- நீங்கள் கைதாகிய பின்னர் பயங்கரவாத விசாரணை பிரிவு சஹ்ரான் குறித்த விசாரணைகளை சரியாக முன்னெடுத்ததா?

பதில் - விசாரணைகள் நின்றிருக்க வாய்ப்பில்லை. எனது வழிநடத்தல் இல்லாமல் போனது குறைபாடாவே இருந்திருக்கும். எனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் புலிகள் பற்றியே தேடுதல்களை முன்னெடுத்து வந்தனர். இவ்வாறான சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி அறிந்திருக்கவில்லை. நானே இவர்களை வழிநடத்தி சர்வதேச பயங்கரவாத கண்காணிப்பின் பக்கம் கொண்டுவந்தேன். அவர்களை நான் வெளிநாடுகளுக்கு அனுப்பியும் அறிவுருத்தல்களை வழங்கியும் பயிற்றுவித்துள்ளேன். சர்வதேச புலனாய்வு தரப்புடன் தொடர்புகளை கொண்டு எமது அதிகாரிகளை திறமையான நபர்களாக மாற்ற நடவடிக்கை எடுத்தேன். இதற்கு தலைமைதாங்கியது நான். இவ்வாறு செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி:- இந்த விடயத்தை கையாள உங்களிடம் தனிப்பட்ட உபாய மார்க்கங்கள் இருந்திருக்க வேண்டுமே?

பதில் - ஆம், என்னிடம் தனிப்பட்ட உபாயமார்க்கம் ஒன்று இருந்தது. சஹ்ரான் என்பவர் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்குரியவராக உருவெடுப்பார் என்று எனக்கு தெரிந்தது. இது குறித்து எனது அதிகாரிகளை அறிவுருத்தியிருந்தேன். இவரது செயற்பாடுகளை கண்காணிக்கையில் இவர் முஸ்லிம் இளைஞர்களை வேறு ஒரு மோசமான திசைக்கு திருப்புகின்றார் என்று தெரிந்தது. என்.டி.ஜே என்ற அமைப்பை தடைசெய்ய வேண்டும் என 2018 இல் நான் தெரிவித்தேன்.

கேள்வி:- யாருக்கு தெரிவித்தீர்கள்?


பதில்:- யாருக்கு என்று சரியாக ..... இப்போதுள்ள அதிகாரியை கேளுங்கள் அதில் எனது அறிக்கையில் அவை இருக்கும். எனக்கு நினைவில் இல்லை.

கேள்வி:- சஹ்ரான் என்பவருக்கு இந்த இஸ்லாமிய அமைப்புகள் என கூறும் அமைப்புகளின் உதவிகள் கிடைத்துள்ளதா ?

பதில் - ஆம், சஹ்ரானின் வீடியோக்களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் பக்கமே செல்கின்றது. ஆகவே நிச்சயமாக இவருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பிற்கும் தொடர்புகள் இருப்பது தெரிந்தது. ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி இவர் காணொளிகளை பதிவேற்றுவார். அதேபோல் ஐ. எஸ். ஐ. எஸ் இணையதளங்களில் உள்ள விடயங்களை அவரது முகப்புத்தக கணக்கு, இணைய பக்கத்தில் பதிவேற்றுவார். அப்படி பார்கையில் இவர் அந்தபக்கம் போய்விட்டார் என்பது உறுதியாகின்றதே. இவை அனைத்தையும் வைத்து பார்த்தே ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம்.

கேள்வி :- இவ்வாறு சர்வதேச அமைப்புகளுடன் நேரடி தொடர்பை பேணியதை அறிய முடிந்ததா?

பதில் - இல்லை அவ்வாறான நேரடி ஆதாரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

கேள்வி:- சஹ்ரானின் முகநூல் பக்கத்தில் அவரது பதிவுகளில் சர்வதேச நாடுகளின் நபர்களின் லைக், ஷேர் இருக்கும் தானே. அவற்றை வைத்து அவரது சர்வதேச தொடர்புகள் எவ்வராஉ என்பது கண்டறிய முடியவில்லையா?

பதில் - ஆம், ஆம்.. அவ்வாறு இருந்தது, லைக் இவ்வளவு ஷேர் . லைக் உள்ளது என்று தனியாக அறிகையிடுவோம். எப்பிடியும் இவர்களில் அனைவருமே உண்மையான பெயரில் இருப்பதிலையே. அவற்றை கண்டறிய சற்று கடினமான விடயம் தான். ஆனால் அவ்வாறு அறிந்துகொண்டதன் பின்னர் அவரின் நண்பர்கள் தொடர்பிலும் தகவல் தேடினோம்.

கேள்வி:- சஹ்ரானின் உண்மையான பேரில் இல்லாது வேறு பொய்யான பெயர்களின் முகநூல், இணைய கணக்குகள் இருந்ததா?


பதில்:- எனது நினைவின் படி, சஹ்ரானிடம் இரண்டு முகநூல் கணக்குகள் இருந்தது. இணைய தளப்பதிவும் ஒன்றோ இரண்டோ இருந்தது என நினைகின்றேன்.

கேள்வி:- நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமூக வலைப்பதிவு தளங்கள் பாதிப்பா? அல்லது இருக்கவேண்டுமா?

பதில்;- சமூக வலைப்பதிவு தளங்கள் இருக்க வேண்டும். ஆனால் குழப்பும் செயற்பாடுகள் இருந்தால் அவற்றை கண்காணிக்க ஒரு வேலைத்திட்டம் அவசியம். முகப்புத்தக கலக்குகளில் அவ்வாறு உள்ளது. பயங்கரவாத அல்லது அடிப்படைவாத செயட்படுகளில் ஈடுபடும் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குல முடக்கப்படும் என உள்ளது. ஏனையவற்றிலும் அவற்றை கையாள வேண்டும். குறிப்பாக நாம் முறைப்பாடுகளை இவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் அதனை பர்கின்றர்களா என்பது கேள்வியே. ஆகவே இதற்கு மாற்று நடவடிக்கை ஒன்றினை நாம் கையாள வேண்டும். அவையும் உள்ளது.

Read more...

Monday, June 3, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒருமித்து தமது பதவிகளை ராஜனாமா செய்து கொண்டனர்.

பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஆளுனர்களான ஹிஸ்புல்லா , அஸாத் சாலியை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும், அந்தப் பதவிகளை இன்று மாலை கூட்டாக இராஜிநாமா செய்துள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று மாலை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் இந்தத் தகவலை அறிவித்தனர்.

இதற்கமைய நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் என 9 முஸ்லிம் அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசீம், எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோரும், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தமது பதவிகளைத் துறந்துள்ளனர்.

புதவியை துறந்த அவர்கள் „அரசைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம் என்றம் நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாகச் செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம்.' என்றும் தெரிவித்துள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'முஸ்லிம் அரசியல்வாதிகளை மையப்படுத்தி நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இரத்தக்களரியை உருவாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, நாட்டின் நலன், அமைதி உட்பட மேலும் பல காரணங்களைக் கருத்தில்கொண்டே நாம் அமைச்சுப் பதவிகளைத் துறக்கும் முடிவை எடுத்தோம். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றோம்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பிரதமருடனும், அமைச்சர்களுடனும் கலந்துரையாடினோம்.

பிரதமருடன் பேசியதன் பின்னர் பதவிகளைக் கூட்டாக இராஜிநாமா செய்யும் முடிவை அறிவித்துள்ளோம்..

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.

புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அப்பாவி முஸ்லிம் மக்களைக் கைதுசெய்ய வேண்டாம் எனவும், அவர்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்

அதேவேளை, தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களும் வதைக்கப்படுகின்றனர். இவை நிறுத்தப்படவேண்டும். அனைத்துவித நடவடிக்கைகளும் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும். அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

தீவிரவாதத்துக்கு உதவியவர்கள் யாராவது இருப்பின் அவர்களுக்குரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதற்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்' – என்றார்.

இங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், 'நியாயமான விசாரணைகளுக்கு இடமளித்து அமைச்சுப் பதவிகளைத் துறக்கின்றோம்' – என்றார்.

இதேநேரம் இன்று மதியம் இரு ஆளுனர்களும் பதவி துறக்கின்றார்கள் என்ற செய்தி மத்திய மாகாண ஆளுனர் ஊடாக உண்ணாவிரம் இருந்து வந்த ரத்ன தேரருக்க தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ரத்தன தேரரை பார்வையிட சென்றது தவறாம். போப் ஆண்டவரிடம் முறையிடுகின்றார் மங்கள

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலியே ரத்ன தேரரை நலம் விசாரிப்பதற்காக கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சென்றமை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, காவி அணிந்த பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரை நலம் விசாரிக்க அவ்விடத்திற்கு சென்றது, இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்து எத்தனிப்பதாக தெரிகின்றது.

போப் ஆண்டவர் மற்றும் வத்திகான் செய்திச் சேவைக்கு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இந்த செயலை அவதானிக்குமாறும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com